இரண்டு நூற்றாண்டுகளுக்கும் மேலாக மெட்ராஸ் கல்வி மையமாக இருந்து வருகிறது. இந்த ஊரில்தான் எத்தனையெத்தனை விதமான கல்வி கற்பிக்கப்படுகிறது என்பது ஆச்சரியமாக இருக்கிறது.
இந்த நகரத்தில் சினிமா முதல் போர்க்கலை வரை, கால்நடை முதல் கர்னாடக இசை வரை அனைத்தையும் கற்பிக்கத் தனித்தனிக் கல்லூரிகள் உள்ளன. கலையை ஒரு பாடமாகச் சொல்லிக்கொடுப்பது என்று முடிவெடுத்த நகரம் மெச்சத்தக்கது தான். கலையே ஒரு நாட்டின் பிரதிபலிப்பு. அடிமை நாட்டுக்கு எதற்கு இதெல்லாம் என்று வெள்ளையர் நினைக்கவில்லை. அவர்கள் தொடங்கிய அரசு கலை மற்றும் கைவினைக் கல்லூரி, எழும்பூரில் அமைந்தது. இது நாட்டிலேயே கலை கற்பிக்கும் ஆரம்ப நிறுவனங்களில் ஒன்றாகும்.
ஆரம்பகால மெட்ராஸில் தங்கியிருந்த மருத்துவர்கள் பலர் மருத்துவம் அல்லாத இதர துறைகளில் ஆர்வமுள்ள பன்முக வல்லுநர்கள். அப்படித்தான் அலெக்சாண்டர் ஹண்டர் என்ற ஒரு மருத்துவர் திறமையான ஓவியர். ஹண்டர் புகைப்படம் எடுத்தல் என்ற அப்போதைய காலத்தில் தோன்றிய புதிய கலையில்கூட ஆழ்ந்த ஆர்வம் கொண்டு மெட்ராஸ் போட்டோகிராஃபிக் சொசைட்டியை நிறுவினார்.
ஹண்டர் மண்பாண்டங்கள் மற்றும் பலவிதமான கைவினைப்பொருள்களில் ஆர்வம் கொண்டு உள்ளூர் தொழில்துறையை ஊக்குவிப்பதில் ஆசைகொண்டார். தென்னிந்தியா முழுவதும் பயணம் செய்து, கலைப் பொருள்களை உருவாக்க மரம், துணி, மூங்கில் மற்றும் களிமண் உள்ளிட்ட பல்வேறு பொருள்களை ஆய்வு செய்தார்.
தான் கற்றதையெல்லாம் மற்றவருக்குப் பயில்விக்க ஆர்வம் கொண்டு அலெக்சாண்டர் ஹண்டர், 1850ஆம் ஆண்டில் கலைக் கல்லூரியை ஒரு தனியார் பள்ளியாக நிறுவி அவரது மருத்துவர் சம்பளத்தையும், அவரது ஓவியங்களை விற்றும் அதற்கு நிதியளித்தார்.
கல்லூரியின் குறிக்கோளாக, ‘… இந்தியர்களின் அன்றாடப் பயன்பாட்டில் உள்ள பொருள்களுடைய ரஸனையை மேம்படுத்துவது’ என்பதுதான். ஆங்கிலேய அரசாங்கம் மேலும் கலைப் பள்ளிகளைத் தொடங்க வேண்டும் என்ற கருத்தையும் ஹண்டர் ஊக்குவித்தார். இந்தியர்களின் திறன்களைக் கலை நயம் கொண்ட படிப்புகளில் வழிநடத்தும் தார்மீகக் கடமையை ஆங்கிலேயர்களுக்கு உண்டு என்றும் குறிப்பிடுகின்றார்.
ஆரம்ப காலத்தில் கருப்பர் நகரில் பிராட்வேயில் பள்ளி அமைந்திருந்தது. ‘பயனுள்ள கலைகளுக்கான’ தொழில்துறைப் பிரிவு 1851இல் தொடங்கப்பட்டது. 1852ஆம் ஆண்டில், பூந்தமல்லி உயர் சாலையில் உள்ள நான்கு ஏக்கர் வளாகத்திற்கு மாற்றப்பட்டது.
1850களில் லண்டன் கண்காட்சி 19ஆம் நூற்றாண்டின் மிகவும் வெற்றிகரமான, மறக்கமுடியாத மற்றும் செல்வாக்குமிக்க கலாச்சார நிகழ்வாக இருந்தது. லண்டனில் உள்ள ஹைட் பார்க், ‘அனைத்து நாடுகளின் தொழில்துறைப் படைப்புகளின் சிறந்த கண்காட்சி’யைக் காணப் பார்வையாளர்கள் படையெடுத்தனர். ஹண்டர் பள்ளியிலிருந்து பல பொருள்கள் காட்சிக்கு வைக்கப்பட்டு விற்கப்பட்டன. லண்டனில் நடந்த கண்காட்சிக்குப் பிறகு, மெட்ராஸ் ஸ்கூல் ஆஃப் ஆர்ட்ஸ் வணிக நோக்கத்தையும் கொண்டிருந்தது (கலைப் பொருள்களை விற்பனை செய்வதில் கவனம் செலுத்தியது). அதன் பின் இங்குத் தயாரிக்கப்பட்ட கலைப் பொருள்கள் ஐரோப்பா முழுவதும் உள்ள சிறந்த அரண்மனைகளின் வரவேற்பு அறைகளில் இடம் பெற்றன.
இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சியின்போது, மெட்ராஸ் பல கலைகளில் திறமையான மக்களைக் கொண்டிருந்ததை அரசாங்கம் கண்டறிந்தது. எனவே ஹண்டரின் ஆலோசனையை ஏற்று அவர்கள் நிறுவனத்தை மேம்படுத்தினர். லண்டனில் உள்ள அரச குடும்பத்தின் கலை எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யும் நோக்கம்தான் அவர்களுக்கு.. அவர்கள் எண்ணியதுபோல மரச்சாமான்கள், உலோக வேலைப்பாடுகள் மற்றும் கைவினைப்பொருள்களைத் தயாரிக்கக் கலைஞர்கள் பணியமர்த்தப்பட்டு அவர்கள் உருவாக்கிய பொருள்கள் லண்டன் அரண்மனைகளுக்கு அனுப்பப்பட்டது.
இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு பள்ளி அரசாங்கத்தால் கையகப்படுத்தப்பட்டது. ஆனால் அதை மறுசீரமைக்க ஹண்டரின் உதவியே கோரப்பட்டது. ஓவியம், போன்ற கலைத்துறைக்கும் மற்றும் கட்டடப் பொருள்கள் மற்றும் அலங்காரங்களில் கவனம் செலுத்தும் ஒரு தொழில்துறையையும் ஹண்டர் கூடுதலாக உருவாக்கினார்.
மெட்ராஸ் ஸ்கூல் ஆஃப் ஆர்ட் அண்ட் இன்டஸ்ட்ரி என மறுபெயரிடப்பட்டது (இப்போது அது அரசு நுண்கலை கல்லூரி என்று அழைக்கப்படுகிறது). 1850 மற்றும் 1858க்கு இடையில் ஆண்டுக்கு 150 முதல் 180 மாணவர்கள் வரை படித்தனர்.
பிற்காலத்தில் தலைவராகப் பதவியேற்ற ஹேவெல், கல்லூரிக்கு ஒரு மகத்துவக் காலத்தை உருவாக்கினார். ஹேவெல் குருகுல முறையின் பாரம்பரியக் குருகுல பயிற்றுவிப்பு முறையை நம்பியதால் மெட்ராஸ் மாகாணத்தில் பிற பகுதிகளில் இருந்து பல கைவினைஞர்களைக் கல்லூரிக்கு வந்து கற்பிக்க வைத்தார். பிரபல மெட்ராஸ் கட்டடக் கலைஞரான ராபர்ட் சிஷோல்ம் மற்றும் பிரபலப் புகைப்படக் கலைஞரான கேப்டன் லின்னேயஸ் ட்ரிப் ஆகியோரும் கல்லூரியில் கற்பித்தார்கள்.
ஹண்டர் 1868 இல் ஓய்வு பெற்ற பிறகு, அவருக்குப் பிறகு சிஷோல்ம் பதவியேற்றார் – மெட்ராஸ் கட்டடக்கலையை தனது இந்தோ சாராசெனிக் கட்டடக்கலை பாணியில் மாற்றியவர். சிஷோல்ம், கட்டடக்கலையைப் போலவே ஓவியத்திலும் ஆர்வமாக இருந்தார். கலை மற்றும் கலைப்பொருள்களுக்குப் பள்ளியின் பங்களிப்பை ஊக்குவித்தார். அவர் உலோக வேலைத் துறையைத் தொடங்கி இந்தியாவில் அலுமினியத்தில் வேலை செய்வதை அறிமுகப்படுத்தினார். மாணவர்கள் எலிஃபண்டா, அஜந்தா மற்றும் எல்லோரா குகைகளையும், கஜுராஹோவையும் பார்க்கப் பயணம் செய்தனர். அடிக்கடி மாமல்லபுரத்திற்குச் சைக்கிள் மூலம் மேற்கொண்ட பயணங்கள் மிகவும் பிரபலமானவை.
ஆனால் மெல்லக் கல்லூரி உருமாறிக்கொண்டிருந்தது. போகப் போக ஏற்றுமதிக்கான கைவினைப் பொருள்களை உற்பத்தி செய்யும் இடமாக, அல்லது அடுப்படி அலுமினியம் பாத்திரங்கள் உருவாக்கும் கூடமாக கல்லூரி மாறியிருக்கும்.
டெபி பிரசாத் ராய் சௌத்ரி அதன் துணை முதல்வராகச் சேர்ந்த பிறகு ஒரு மாற்றம் ஏற்பட்டது. 1929 இல், 30 வயதில் அவர் அதன் முதல் இந்திய தலைவராகி 1957 வரை தொடர்ந்தார். அவரது பதவிக் காலத்தில் அவர் நாடு முழுவதிலுமிருந்து திறமைகளை ஈர்த்ததால் கல்லூரி கிட்டத்தட்ட ஒரு தேசிய நிறுவனமாக மாறி, அடுத்த ஆண்டுகளில் இந்தியாவின் சிறந்த கலைஞர்கள் சிலரை உருவாக்கியது. மெரினாவில் அவரது ‘உழைப்பின் வெற்றி’ மற்றும் காந்தியின் சிலைகளுக்காக சௌத்ரி எப்போதும் மெட்ராஸில் நினைவுகூரப்படுவார்.
சௌத்ரிக்கு பிறகு கே.சி.எஸ். பணிக்கர் முதல்வராக வந்து, நாட்டின் முதல் கலைஞர்களின் கூட்டுறவு நிறுவனமான சோழமண்டலக் கலைஞர் கிராமத்தை உருவாக்கினார். சர்வதேச அளவில் ‘மெட்ராஸ் ஸ்கூல் கலைபாணி’ உலகம் முழுவதும் அங்கீகரிக்கப்பட்ட நவீனக் கலை இயக்கமாக மாறியது.
இன்றும் கல்லூரியில் தமிழகத்தின் ஆரம்பகாலப் புகைப்படங்களின் தொகுப்புகள் உள்ளன. சென்னை, மகாபலிபுரம், சிதம்பரம், நீலகிரி, திருப்பதி, காஞ்சிபுரம், மதுரை மற்றும் தஞ்சாவூர் ஆகிய இடங்களின் 1850இல் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் குறிப்பிடத்தக்கவை. அவை இந்த நகரங்களில் அழகைக் காட்சி படுத்தி சரித்திர ஆதாரங்களாகத் திகழ்கின்றன.
இங்குப் படித்த பல மாணவர்கள் ஓவியர்களாகச் சிற்பிகளாக இருந்தாலும், பலரும் திரைப்படத் துறையிலும் விளம்பர உலகிலும் மிளிர்கின்றனர்.
இக்கல்லூரி தற்போது மாநிலச் சுற்றுலா அமைச்சகத்தின் கீழ் உள்ளது. உலகம் முழுவதும் கலைகள் மீதான ஆர்வம் அதிகரித்து வருவதால், ஓவியப் பயிற்சி அதிக முக்கியத்துவம் பெற்றுள்ளது. இன்றைய உலகில், கலை மீதான அணுகுமுறையின் மாற்றம் அதன் அழகியல் மதிப்பிற்காக மட்டுமல்ல, அதன் வணிக நம்பகத்தன்மைக்காகவும் உள்ளது. கலை மெதுவாக ஒரு முதலீடாக மாறுகிறது.
இக்கல்லூரி, நாட்டின் மிகச்சிறந்த ஓவியர்களை உருவாக்கியுள்ளது என்று சொல்வதை விட இந்தியாவின் தலைசிறந்த கலைஞர்களின் கனவுகள் மற்றும் ஏக்கங்களுக்கு உயிர் கொடுத்த நிறுவனம் என்று சொல்வதே சரி.
0
Shri Venkatesh Ramakrishnan’s lecture as well as his write-ups has its own style – simple smooth flow yet loaded with facts and figures, probably backed up by a meticulous research. It’s a pleasure hear and read his creative work.