கிழந்தியக் கம்பெனியிடமிருந்து ஆங்கிலேய அரசக் குடும்பம் இந்தியாவைப் பிடுங்கிக் கொண்ட பிறகு, விக்டோரியன் அறநெறி தரநிலைகள் (Victorian Morality) என்ற பார்வையைக் கொண்டு இந்தியப் பழக்க வழக்கங்கள் சமுதாயத்தால் மறு ஆய்வு செய்யப்பட்டன.
அப்படித்தான் 1930களில் நடனமாடும் தேவதாசிகளின் வாழ்க்கைமுறை தீவிர ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது.
தென்னிந்திய நடனம் தேவதாசிகளின் குலத்தொழிலாக இருந்து வந்தது. அவர்களுக்கு எதிரான போர்க்கொடிகளைக் கண்டால் தேவதாசி முறையே மூடப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று பலரும் உணர்ந்தார்கள். ஆனால், அதனால் நாட்டிய உலகில் ஏற்படப்போகும் வெற்றிடத்தை நிரப்புவது எப்படி என்று பலரும் கவலைகொண்டனர்.
ஒரு சிலர் அதற்குத் தயாராகவும் இருந்தார்கள். ஆனால், அதே சதிர் பாணியிலான அம்சத்துடன் அல்ல; தாமே ஒரு புதுப் பாணியை உருவாக்கும் எண்ணம் அவர்களுக்கு இருந்தது. அவர்களுள் ஒருவர் ருக்மணி தேவி அருண்டேல்.
நடனம் ஆடுபவர்கள் குறைவாக இருந்ததால், இந்த வகை நடனத்தைப் பிரபலப்படுத்த வழியில்லை என்பதும் ருக்மணி தேவிக்குப் புரிந்தது. மேடையில் ஏறுவதற்கு முன் அபிநயம் எல்லாம் கற்றுக்கொண்டிருந்தால், நடனக் கலைஞர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருக்கும் என்று அவர் புரிந்துகொண்டார்.
சதிர் நாட்டியம் நடந்து கொண்டிருந்த விதத்தில் தொடர்ந்தால் பெரிய சபைகளில் அது எடுபடாது என்று முடிவெடுத்த ருக்மணி தேவி அருண்டேல் நடனத்தில் பல புது நுணுக்கங்களை அறிமுகப்படுத்தினார்.
மேலும் அவர் நடனக்கலையின் கற்றல் முறையை எளிதாக்க வேண்டும் என்று முடிவெடுத்தார். அரை வாழ்நாள் பயிற்சிக்குப் பின்தான் ஒரு புதிய நடனக் கலைஞரை உருவாக்க முடியும் என்று கருதப்பட்ட காலத்தில், மூன்று வருடங்கள் மட்டுமே பந்தநல்லூர் பாணியில் நடனம் பயின்ற ருக்மணி தேவி அருண்டேல் நாட்டியத்தில் ஒரு புதிய பாணியை உருவாக்க முடியும் என்று நம்பிக்கை கொண்டார்.
சமூகத்தில் சதிரின் கெட்ட பெயர் தன் பாணியிலும் தொடராமல் இருப்பதை உறுதிசெய்ய, சதிரின் சில அம்சங்களை காமரசம் என வகைப்படுத்தப்பட்ட அசைவுகளை விலக்கினார்.
சதிர் நடனத்திலிருந்து சாதாரணப் பார்வையாளர்களுக்கு ஆட்சேபணைக்குரிய பல அம்சங்களை அவர் நீக்கினார். பின் அவர் பரதநாட்டியத்தை ஒரு தெய்வீக நடனமாகச் சித்தரித்தார். கடவுள்கள் ஆடினார்கள், ரிஷிகள் இதை சாஸ்திரமாக எழுதி வைத்தனர் என்றெல்லாம் பிரபலப்படுத்தினார்.
ருக்மணி தேவி அருண்டேல் தாம் உருவாக்கிய பாணியைச் சொல்லி தர முதல் நடன பள்ளியை, ஜனவரி 1936 இல் அவரது கணவர் ஜார்ஜ் அருண்டேல் ஆகியோருடன் இணைந்து அடையாறு ஆற்றங்கரையில் நிறுவினார்.
சில காலத்தில் தேவதாஸிகளும் சதிரும் எல்லோருக்கும் மறந்தே போனது. தாசிகள் சாலையில் நடனம் ஆட வந்தபோது, வீட்டு ஜன்னல்களை படார் என்று இழுத்து மூடிய குடும்பப் பெண்கள், இப்போது தங்கள் மகள்களை நடன வகுப்புகளுக்குத் தர தர என்று இழுத்துச் செல்கின்றனர்.
அடுத்த அரை நூற்றாண்டில் ஒரு தொழிற்சாலையில் ஒரு அசெம்பிளி லைன் போல் நடனக் கலைஞர்கள் ருக்மணி தேவியின் கலாக்ஷேத்ராவால் உற்பத்தி செய்யப்பட்டனர்.
32 வயதான ஒரு பெண்ணால் எப்படி இப்படி ஒரு சாதனை சாத்தியமானது?
புதுக்கோட்டையைச் சேர்ந்த நீலகண்டன் சாஸ்திரி என்ற ஒரு பொறியாளர், அங்கு ராஜாவின் அரண்மனையைக் கட்டியவர், சென்னைக்குக் குடிபெயர்ந்தார். அன்னி பெசன்ட் எழுத்துகளால் ஈர்க்கப்பட்ட அவர் தனது குடும்பத்துடன் மெட்ராஸில் உள்ள தியோசோபிகல் சொசைட்டி வளாகத்திற்கு வெளியே குடியேறினார். அடுத்த ஒரு நூற்றாண்டில் இந்தக் குடும்பம் சொசைட்டியை அதிக காலமாக 63 ஆண்டுகள் கட்டுப்படுத்தும் நிலை வரும் என்று அப்போது யாரும் யோசிக்கவில்லை. அவரது மாப்பிள்ளை, மகன், பேத்தி என்று மூவரும் தலைவர்கள் ஆனார்கள். ருக்மிணி ஒரு முறை தலைவர் பதவிக்குப் போட்டியிட்டுத் தோற்றுப் போனார்.
நீலகண்டனின் 16 வயதுப் பெண் 42 வயதான ஐரோப்பியரை மணந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அவர்களது திருமணம் நீண்ட காலமாக ஊரின் பேசுபொருளாக இருந்தது. அவளது காதலன் தியோசோபிகல் சங்கத்தின் அடுத்த தலைவனாக அன்னி பெசன்டால் தயார் செய்யப்பட்டிருந்தார்.
புதுமணத் தம்பதிகள் ஓரு கடல் பயணத்தில் ரஷ்ய நடன கலைஞர் அன்னா பாவ்லோவாவைச் சந்தித்தனர். கப்பல் கரையை எட்டும் முன் , ருக்மணி நடனம் தனது வாழ்க்கையில் துருவ நட்சத்திரமாக இருக்கும் என்று முடிவு செய்துவிட்டார்.
அருண்டேல் தியோசாபிகல் சொசைட்டியின் தலைவரானாவுடன் ருக்மணி மெட்ராஸின் மிக முக்கியப் புள்ளிகளில் ஒருவரானார். ருக்மணி மயிலாப்பூர் கோயிலில் கௌரி அம்மா என்கிற ஒரு தேவதாசியிடம் நடனம் கற்றுக்கொண்டார், அந்த நாட்களில் உயர் சாதியினரால் நினைத்துப் பார்க்க முடியாத விஷயமாக பார்வையாளர்கள் முன் நடனமாடினார், கற்பிக்கவும் தொடங்கினார்.
இதற்குச் சர்ச்சைகள் இல்லாமல் இல்லை. தேவதாசிகளின் பரம்பரை நடனத்தை ருக்மணி கைப்பற்றியதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. ‘கலை வடிவம் மறு கண்டுபிடிப்புக்காக தாகம் கொண்டிருந்தது’ என்று ருக்மணி தேவி பதில் அளித்தார்.
தியோசபிகல் சொசைட்டி உறுப்பினர்கள் பலர் சங்கத்தின் பணம் எந்தத் தொடர்பும் இல்லாத விஷயங்களுக்கு வீணடிக்கப்படுவதாக எதிர்த்தனர். ஆனால் ருக்மனியின் கணவர் சக்திவாய்ந்த தலைவராக இருந்ததால், ருக்மணி தேவியால் தாக்குப் பிடிக்க முடிந்தது.
அருண்டேல் தம்பதியினர் தாங்களாகவே ஓர் அறக்கட்டளையைத் தொடங்கி, சொஸைடிக்கு வரவேண்டிய நன்கொடைகளை அபகரித்ததாக, சொசைட்டி நிர்வாகிகள் கோபமடைந்தனர். (ஜோசபின் சேம்பர்ஸ் என்ற ஆங்கிலேயப் பெண்மணி, டாக்டர் ஜார்ஜ் அருண்டேலிடம், கொடுத்த நன்கொடை அவளது வாரிசுகளால் ஆட்சேபிக்கப்பட்டது. இந்த வழக்கு, 61 ஆண்டுகளுக்குப் பிறகு நீதிமன்றத்திற்கு வெளியே சமரசம் செய்து தீர்க்கப்பட்டது. ருக்மணிக்குக் கிடைத்த தொகை 1,80,000 பவுண்டுகள்.
ருக்மணி தேவிக்கு பல எதிரிகள் உருவாகினர், அருண்டேல் இறந்தபோது, புதிய தலைவர் பரதநாட்டியம் கற்கவோ அல்லது பார்க்கவோ தியோசபிகல் சொசைட்டிக்குள் வருவதற்கு வெளியாட்களுக்கு அனுமதி மறுத்துவிட்டார். ருக்மணி சொசைட்டியை விட்டு வெளியே செல்ல வேண்டிய நேரம் இது என்று முடிவு செய்தார். திருவான்மியூரில் உள்ள 99 ஏக்கர் கடற்கரை நிலத்தை வாங்கினார்.
பக்கத்து வளாகத்தில் முருக பக்தர் பாம்பன் சுவாமிகளின் கல்லறை இருக்கவே, கலாக்ஷேத்ரா கட்டடங்கள் கட்டி முடியும் வரை மாணவிகள் அவரது சமாதிக்கு முன் நடனமாடினர்.
பாலைவனம் போன்ற கடற்கரையானது, அதுநாள்வரை ருக்மணி வாழ்ந்த ஆற்றங்கரைக் காட்டில் இருந்து மிகவும் வித்தியாசமாயிருந்தது.
அவர் தியோசாபிகல் சொசைட்டியிலிருந்து ஒரு ஆலமரக் கன்றைக் கொண்டுவந்து 1951 புத்தாண்டு தினத்தன்று, புதிய வளாகத்தில் ஒரு சடங்குக்காக நடவு செய்தார்.
உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்தவர்கள் தங்கள் சொந்த நாடுகளில் இருந்து மண் கொண்டு வந்தனர். விடாமுயற்சியால், மணல்மேடுகளை பசுமையான காடாக மாற்றினர். செழித்து வளரும் நூற்றுக்கணக்கான தாவரங்கள் மற்றும் விலங்கினங்களை கலாக்ஷேத்ரா இன்று கொண்டுள்ளது.
ஆரம்பத்தில் நான்கு அறைகள் கொண்ட குடிசையில்தான் நடனப்பயிற்சியெல்லாம். கலாக்ஷேத்ரா விரைவில் பரதநாட்டிய நடனத்தில் முன்னணியில் இருந்தது மற்றும் சென்னையின் கலாச்சார உலகில் முக்கிய அடையாளமாக இன்றும் வளர்ந்து வருகிறது.
ருக்மணி ஆர்வமுள்ள மானவர்களை மட்டுமல்ல சிறந்த ஆசிரியர்களையும் அழைத்து வந்தார். கௌரி அம்மா போன்ற பாரம்பரிய நடனக் கலைஞர்களும், பாபநாசம் சிவன் போன்ற கவிஞர்களும் இங்கு மாணவர்களுக்குக் கற்றுக் கொடுத்தனர். கௌரி அம்மா மயிலையின் கடைசி தேவதாசி. சதிர் நாட்டியத்தின் நுணுக்கங்களை நன்கறிந்தவர். அவரே சதிருக்கும் பரத நாட்டியத்துக்கும் பாலமாக அமைந்தார். சிவனோ ருக்மணி தேவி கேட்டது போல நாட்டிய நாடகங்கள் மற்றும் நடனத்துக்கு ஏற்றார் போல் பாடல்களை எழுதித் தள்ளினார்.
1944ஆம் ஆண்டில், மெட்ராஸ் பல்கலைக்கழகம் இசை, நடனம் மற்றும் ஓவியம் – கைவினைப் பாடங்களில் டிப்ளமோ படிப்புகளை நடத்துவதற்கான அதன் அங்கீகாரத்தை வழங்கியது.
ருக்மணி தன் பள்ளிக்கு ‘கலாக்ஷேத்ரா’ – என்று பெயர் சூட்டியபோது, தாகூர், ‘இந்தப் பெயரை முதலில் நினைத்திருந்தால், சாந்தி நிகேதனுக்கு நானே பெயரிட்டிருப்பேன்’ என்று கூறினாராம்.
ருக்மணிக்கு மரியாதைகள் பலவும் வந்தன. 1977இல் மொரார்ஜி தேசாய் அரசியல் சார்பற்ற ஜனாதிபதி வேண்டும் என்று எண்ணி அவருக்கு அந்தப் பதவியை கொடுப்பதாகச் சொன்னார் என்று ஓர் ஆதாரமற்ற செய்தி பரவலாகப் பேசப்பட்டது.
ருக்மணியின் வாழ்க்கைக்குப் பிறகு, கலாக்ஷேத்திரம் அரசியலிலும் அரசாங்கத்தின் தலையீட்டிலும் மிகவும் கஷ்டப்பட்டது.
கலாக்ஷேத்ரா இப்போது இந்தியாவில் ‘தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனமாக’ அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ஆனால் அரசுக் கட்டுப்பாட்டில் செயல்படுகிறது.
0