எக்மோர் எனப்படும் எழும்பூர் பகுதி மெட்ராஸின் மிகப் பழைய பகுதிகளில் ஒன்று.
எழும்பூரைப் பற்றிய குறிப்புகள் சோழ மன்னன் குலோத்துங்கனின் கல்வெட்டுகளில் காணப்படுகின்றன. சோழப் பேரரசின் கீழ், எழும்பூர் புழல் கோட்டத்தில் உள்ள எலும்பூர் நாடு என்ற நிர்வாகப் பிரிவின் தலைமையகமாக இருந்தது. கூவம் எழும்பூரில் வடக்குத் திருப்பத்தை எடுத்து, ‘உத்தர வாஹினி’ (வடக்கு பாயும்) நதியாக மாறுவது மங்களகரமானதாகக் கருதப்படுகிறது.
பிரிட்டிஷ் மக்கள் கோட்டையை விட்டு வெளியேறியபோது, எழும்பூர் அவர்களுக்கு மிகவும் விருப்பமான இடமாக இருந்தது.
லண்டனின் ஆசியாடிக் சொசைட்டியின் துணை நிறுவனமான மெட்ராஸ் லிட்டரரி சொசைட்டி, பொருளாதார புவியியல் அருங்காட்சியகம் ஒன்றை எக்மோரில் தொடங்க கோரிக்கை விடுத்தது. அதற்காக கவர்னர், லண்டனில் உள்ள கிழக்கிந்தியக் கம்பெனியின் இயக்குனர்களின் அனுமதியைப் பெற்றார்.
நுங்கம்பாக்கம் கல்லூரி சாலையில் இருந்த செயின்ட் ஜார்ஜ் கோட்டை கல்லூரியில் உள்ள ஒரு கட்டடத்தின் முதல் தளத்தில் அருங்காட்சியகம் தொடங்கப்பட்டது. சென்னை மத்திய அருங்காட்சியகத்தின் கெளரவ அதிகாரியாக அறுவை சிகிச்சை நிபுணர் எட்வர்ட் கிரீன் பால்ஃபோர் நியமிக்கப்பட்டார்.
மெட்ராஸில் மருத்துவம் அல்லாத பல வரலாற்று நிகழ்வுகளை மருத்துவ நிபுணர்கள் செதுக்கியிருக்கிறார்கள். அவர்களில் முதன்மையானவர் எட்வர்ட் பால்ஃபோர். காங்கிரஸை நிறுவிய ஹியூமின் அத்தை மகன். அவர் மருத்துவக் கல்வியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவர். உலகின் பிற பகுதிகளை விடவும் முன்பாகவே பெண்கள் மெட்ராஸ் மருத்துவப் பள்ளிகளில் சேர்க்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.
பால்ஃபோர், அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்துவதற்குப் போதுமான பொருள்கள் அல்லது புத்தகங்கள் என அவர்கள் கருதும் பொருள்களை நன்கொடையாக வழங்குமாறு குடிமக்களிடம் பொது வேண்டுகோள் விடுத்தார். (‘நாங்கள் அனைத்தையும் ஏற்றுக்கொள்கிறோம்!’, என்றார்). மக்களிடமிருந்து எதிர்பாராத விதமாக பொருள்கள் மற்றும் புத்தகங்களின் வெள்ளம் வந்தது. திடீரென வளர்ச்சியடைந்த அருங்காட்சியகத்தால் முதல் தளம் இடிந்து விழும் தறுவாயிலும் கட்டடமே ஆபத்தான நிலைக்கும் வந்துவிட்டது. அருங்காட்சியகத்தின் கண்காணிப்பாளர் பொருத்தமான வளாகத்தை வேறு கட்டடத்திற்கு மாற்ற வாதிட்டார்.
அந்தச் சாலைக்கே பெயர் கொடுத்த பாந்தியன் கேளிக்கைகள் நடத்துவதற்கான அசெம்பிளி அறைகள் மற்றும் திறந்த வெளிகள் கொண்டிருந்தது. கோட்டை வாசிகளின் இரவு விருந்துகள் இங்கு நடந்தன, ஆனால் கோட்டைக்கு அருகில் விருந்து மண்டபம் (இன்றைய ராஜாஜி மண்டபம்) கட்டப்பட்டதால் இது விரைவில் பயன்படுத்தப்படாமல் போனது.
மெட்ராஸில் உள்ள ஆங்கிலேயர்களின் முக்கிய பொழுதுபோக்கு இடமாக இருந்த பாந்தியனில் அருங்காட்சியகத்துக்கு 1854 இல் வழங்கப்பட்டது.
அதன்பிறகு, அருங்காட்சியகம் வளர்ந்தது, ராபர்ட் சிஷோல்மின் வடிவமைப்புகளின்படி வாசிப்பு அறை போன்ற கட்டமைப்புகள் அதில் சேர்க்கப்பட்டன. 1890 களின் பிற்பகுதியில், மியூசியம் தியேட்டர் என்ற வட்ட வடிவ அரங்கம் மற்றும் பொது நூலகம் என்று கூடுதலாக பெரிய விரிவாக்கங்கள் நடந்தன. இவை அனைத்தும் அப்போதைய சென்னை அரசாங்கத்தின் ஆலோசனைக் கட்டடக் கலைஞராக இருந்த ஹென்றி இர்வின் என்பவரால் வடிவமைக்கப்பட்டது. இந்த வடிவமைப்பின்படி அருங்காட்சியகத்தின் மேல் 200 அடி உயரம் கொண்ட ஒரு கோபுரமும் கட்டி முடிக்கப்பட்டதும், நகரத்தின் மிக உயரமானதாக இருந்தது. ஆனால் அது நிலையற்றதாக இருந்ததால் விரைவில் வீழ்த்தப்பட்டது.
நுழைவு இலவசமாக இருந்தபோதிலும் பார்வையாளர்கள் வருகை குறைவாக இருப்பதைக் கவனித்த பால்ஃபோர் மேலும் சில கண்காட்சிப் பொருள்களைச் சேர்க்க முடிவு செய்தார்.
அச்சமயத்தில் சமீபமாக ஒரு வேட்டைக்காரன் பிடித்திருந்த ஒரு புலிக்குட்டி மற்றும் சிறுத்தையைக் கூண்டுக்குள் இயற்கை வரலாற்றுப் பிரிவில் வைத்திருந்தபோது பார்வையாளர்களின் வருகையானது எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பை எட்டியதை பால்ஃபோர் கவனித்தார். இது அவரை ஒரு விலங்கியல் பூங்காவை முன்மொழிய வழிவகுத்தது,.
ஆர்காட் நவாப்பிடம் அவரிடம் உள்ள காட்டு விலங்குகளை அருங்காட்சியகத்திற்கு அனுப்புமாறு பால்ஃபோர் கேட்டுக் கொண்டார். பின்பு விலங்கியல் பூங்காவிற்கு விலங்குகளைப் பரிசாக வழங்குமாறு ஓர் அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன் விளைவு விரைவில் சென்னை அருங்காட்சியகத்தில் 360 விலங்குகள் கொண்ட விலங்கியல் பூங்கா இருந்தது. அருங்காட்சியகமும் உயிரியல் பூங்காவும் இணைந்திருந்ததால், ‘உயிர் காலேஜ்’ ‘செத்த காலேஜ்’ என்ற சொற்கள் பயன்பாட்டில் வந்தன.
பின்னர், விலங்குகளின் சப்தம் மற்றும் நாற்றத்தால் எழும்பூர் அருகாமை வீடுகளின் புகார்களைத் தொடர்ந்து, நகராட்சி விலங்குகள் பூங்கா நகருக்கு மாற்றப்பட்டன. அங்கே மிருகக்காட்சி சாலை மேலும் சற்றுப் பெரிய பரப்பளவில் அமைந்தது.
மெட்ராஸில் கட்டடக்கலையின் அதிகபட்ச பாணிகளைக் கொண்ட ஒரு வளாகம் இன்று பாந்தியன் மட்டுமே. கிரேக்கம், இந்தோ சாராசெனிக், கோதிக், நியோ-பைசண்டைன், ராஜ்புத், முகலாயர் மற்றும் திராவிடத்தையும் கொண்டுள்ளது.
அதுபோலவே, பிராந்தியத்தின் இவ்வளவு வரலாற்றின் பிரதிநிதித்துவங்கள் வேறு எங்கும் இல்லை. குகைவாசிகளின் இரண்டு மில்லியன் ஆண்டுகளுக்கும் மேலான பழமையான கோடாரிகளில் தொடங்கி சோழர்களின் திருவாலங்காடு செப்புத் தகடுகள் வரை, அமராவதியிலிருந்து ஒரு முழு பௌத்த ஸ்தூபியிலிருந்து, கூவம் ஆற்றின் கடைசி முதலைவரை இங்கு பார்வைக்கு இருக்கின்றன.
1941-1946 காலம் அருங்காட்சியகத்திற்கு மோசமான ஆண்டுகள். ஜப்பானியத் தாக்குதலை எதிர்பார்த்து நகரில் பல இடங்களை ராணுவம் கையகப்படுத்திக்கொண்டது.
விமானத் தாக்குதல் கண்காணிப்பு அமைப்பு (air raid patrol) களஞ்சியத்திற்காக அருங்காட்சியகக் கட்டடங்கள் மற்றும் மைதானங்களின் பெரும்பகுதி ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட வேண்டியிருந்தது.
எனவே காட்சிப் பெட்டிகள் அகற்றப்பட்டன. காட்சிப் பொருள்களில் மிகவும் மதிப்புமிக்கதான வெண்கலங்கள், செப்புத் தகடுகள், தேர்ந்தெடுக்கப்பட்ட நாணயங்கள், பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பப்பட்டன. அமராவதி சிற்பங்கள் மிகவும் கனமாகவும், கொண்டு செல்வதற்குச் சிரமமாகவும் இருந்ததால், அவற்றைக் காட்சியகத்திலேயே பாதுகாக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டது.
அந்த சமயத்தில் பெரும் இழப்பு மீன்வளக் கண்காட்சிக்குத்தான்.
1905-1906 ஆம் ஆண்டில், அப்போதைய அருங்காட்சியகத்தின் கண்காணிப்பாளராக இருந்த டாக்டர் தர்ஸ்டனால், மெட்ராஸ் அக்வாரியத்திற்கான திட்டங்கள் வரையப்பட்டன.
1909 இல் பொதுமக்களுக்காக திறக்கப்பட்ட மீன்வளக் காட்சியகம் மிகவும் பிரபலமானது. மெட்ராஸ் மீதான ஜப்பானிய தாக்குதலின் அச்சுறுத்தல் காரணமாக, மீன்களைப் பாதுகாப்பது கஷ்டம் என்று மீன்கள் எல்லாம் சாக்கடையில் திறந்து விடப்பட்டன.
சென்னை அரசு அருங்காட்சியகத்தின் நூற்றாண்டு விழா இந்தியப் பிரதமர் ஜவஹர்லால் நேரு அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. அதே விழாவின் ஒரு பகுதியாக, தேசிய கலைக்கூடத்தையும் பிரதமர் திறந்து வைத்தார்.
அந்தக் கட்டடம் பழமையானது. விக்டோரியா மகாராணியின் பொன்விழா கொண்டாட்டத்தின் போது ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள சத்யவேடுவில் இருந்து சிவப்புக் கற்கள் கொண்டுவரப்பட்டு இந்தோ-சரசெனிக் கட்டடக்கலையில் கட்டப்பட்டது. பொன் விழாவின் போது, அதில் தஞ்சை, ராஜஸ்தான், காங்க்ரா மற்றும் டெக்கான் பகுதிகளில் உள்ள ஓவியங்கள் மற்றும் சந்தன மரச் சிற்பங்கள் வைக்கப்பட்டன. இன்று சுமார் 400 ஓவியங்களின் தொகுப்பைப் பெற்றுள்ள கேலரியில் ராஜா ரவி வர்மாவின் அரிய படைப்புகள் உள்ளன.
1971 ஆம் ஆண்டில், ஒரு மனிதன் மற்றொரு மனிதனை இழுப்பது இழிவானது எனக் கூறி கை ரிக்ஷா தடைசெய்யப்பட்டபோது, ரிக்ஷாவின் மாதிரி (அது கடந்த கால விஷயமென) அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டது.
0