Skip to content
Home » கட்டடம் சொல்லும் கதை #41 – குதிரை ஓட்ட மைதானம்

கட்டடம் சொல்லும் கதை #41 – குதிரை ஓட்ட மைதானம்

Guindy Race Course

5000 ஆண்டுகளுக்கு முன்பு கஜகிஸ்தானில் குதிரைகள் மனிதனால் அடக்கப்பட்டன. முக்கியமாக அவை போரில் உபயோகப்படும் என்பதால்தான் இந்த முயற்சி.

ஆனால் மனிதக்குலம் எப்போது குதிரைகளால் ஈர்க்கப்பட்டதோ, அப்போதே குதிரைகளை ஒன்றோடொன்று பந்தயத்தில் ஓடவிட்டு அவற்றின் பிடரி ரோமங்கள் காற்றில் பறக்கும் காட்சியைக்கண்டு மனிதர்கள் பரவசத்தில் ஆழ்ந்தனர்.

குதிரைப் பந்தயம் அனைத்து விளையாட்டுகளிலும் மிகவும் பழமையான ஒன்றாகும். 2500 ஆண்டுகளுக்கு முன்பு கிரேக்க ஒலிம்பிக்கில் குதிரைப் பந்தயம் இருந்ததற்குச் சான்றுகள் உள்ளன. பண்டைய காலங்களிலிருந்து உலகம் முழுவதும் உள்ள நாகரிகங்களிலும் நடைமுறையில் இருந்தது. அதன் அடிப்படை விதிகளும் குறைந்தபட்சம் தொடக்கக் காலத்திலிருந்தே பெரும்பாலும் மாறாமல் உள்ளது. ஆனால் முக்கியமாகப் பழங்காலத்திலிருந்தே இது சூதாட்டத்தை ஊக்குவிப்பதாகக் குற்றம் சாட்டப்பட்டது.

1777ஆம் ஆண்டு ஜார்ஜ் வாஷிங்டன் அமெரிக்காவின் சுதந்திரத்தை நிறுவுவதற்காகச் சண்டையிட்ட காலம். அப்போது தில்லியில் முகலாயர்கள் ஆண்டனர். அப்போதுதான் துணைக்கண்டத்தில் வேறு எங்கும் இல்லாத வகையில், மெட்ராஸில் மக்களின் மகிழ்ச்சிக்காகக் குதிரைகள் ஓடத் தொடங்கின.

பெரும்பாலான ஆங்கிலேயர்கள் குதிரை ஓட்ட விளையாட்டை ஊக்கப்படுத்தினர். எதிரிகளின் அச்சுறுத்தல் இருந்தபோது கோட்டைக்கு அடுத்ததாகத் தீவில் பந்தயங்கள் நடத்தப்பட்டன. எதிரி தென்படுகிறான் என்று எச்சரிக்கை வந்தால், மனிதர்களும் குதிரைகளும் மூட்டை முடிச்சைக் கட்டிக் கொண்டு கோட்டைச் சுவர்களின் பாதுகாப்பிற்குள் விரைந்து செல்லவே இந்த ஏற்பாடு.

பின்பு குதிரைப் பந்தயம் செயின்ட் தாமஸ் மலைக்கு அருகில் நடந்தது. இன்று அவ்விடமோ ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் போலோ மைதானம்.

நெரிசலான சென்னை நகரம் இன்னும் உலகின் மிகப்பெரிய நகர்ப்புறக் குதிரைப் பந்தய மைதானங்களில் ஒன்றைக் கொண்டிருப்பதால் மக்கள் ஆச்சரியப்படலாம். ஆனால் அது உருவானபோது ரேஸ்கோர்ஸ் பகுதி நெல் வயல்களாலும் போர்க்களங்களாலும் சூழப்பட்டிருந்தது. அதிர்ஷ்டவசமாக, இன்றும் கூட, மெட்ராஸ் நகரத்தின் மிகப்பெரிய திறந்தவெளிகளில் ஒன்றாக இந்தக் குதிரைப் பந்தய மைதானம் உள்ளது.

கிண்டி என்பது 1777ஆம் ஆண்டிலேயே குதிரைப் பந்தயத்திற்காக ஒதுக்கப்பட்ட பகுதியாகும். 22 ஜூன் 1825 தேதியிட்ட செங்கல்பட்டின் அப்போதைய ஆட்சியர் எழுதிய கடிதத்தின்படி.

பந்தய மைதானம் அமைப்பதற்காக வேளச்சேரி மற்றும் வெங்கடாபுரம் கிராமங்களில் இருந்து 81 காணி நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன. ரேஸ் கோர்ஸ், அடையாறு ஆறு மற்றும் கிண்டி காடு ஆகிய இரண்டுக்கும் நடுவே அமைக்கப்பெற்றது.

ஆரம்பத்தில் வெள்ளைக்காரர்கள் மட்டும் கலந்து கொள்ளலாம் என்ற விதிமுறை இருந்தது. ஆரம்ப ஆண்டுகளில் பந்தயம் காலை ஆறு மணிக்குத் தொடங்கி பத்து மணிக்கு முடிவடைந்தது, இதனால் மக்கள் வேலைக்குச் செல்லவும் சாத்தியமாக இருந்தது.

பிரெஞ்சு மற்றும் மைசூர் (திப்புசுல்தான்) படையெடுப்பு அச்சுறுத்தல் எப்போதும் இருந்ததால் எதிரிகளை அடக்கிய பின்னரே குடும்பங்கள் ரேஸ் கோர்ஸுக்கு வர அனுமதிக்கப்பட்டன. ஏறக்குறைய 1790 முதல், பந்தய மைதானத்தில் மக்கள் கூடியிருந்த அசெம்பிளி அறைகள் நகரத்தின் முக்கிய பொழுதுபோக்கு இடமாக இருந்தது.

வெயில் காலத்தைத் தவிர்த்துக் குளிர்ந்த பருவத்தில், கோட்டையில் வசிக்கும் பெண்கள் கலந்துகொண்டு பந்தயங்கள் நடந்தன. மாலை நேரங்கள் நடனம் மற்றும் பாடல்கள் நிறைந்ததாக இருந்தது.

ரயிலின் சத்தம் குதிரைகளைப் பயமுறுத்தக்கூடும் என்பதால், ரேஸ் கோர்ஸ் அருகே ரயில் பாதைக்கான ஆரம்பத் திட்டம் ஆங்கிலேயர்களால் கைவிடப்பட்டது. பிற்காலத்தில் எதிர்ப்புகளை மீறி ரயில் தடங்கள் வந்தன.

மெட்ராஸில் முதல் சினிமா நிகழ்ச்சி ஸ்டீவென்சன் நடத்திய குறும்படக்காட்சிதான். விக்டோரியா அரங்கில் நடந்த இந்தக் காட்சியில் கிண்டியில் ஓடும் குதிரைகள் காட்டப்பட்டன. கிண்டியே மெட்ராஸில் படமாக்கப்பட்ட முதல் இடமாக அமைந்தது .

காலங்கள் செல்லச் செல்ல இந்தியர்களுள் உயர் அடுக்கைச் சேர்ந்தவர்கள் குதிரைப் பந்தய மைதானத்துக்குள் அனுமதிக்கப்பட்டார்கள். விரைவில் அந்த ரேஸ்கிளப்பே அவர்களுக்கு இரண்டாவது வீடு போலானது. மகாராஜாக்கள் மற்றும் ஜமீன்தார்கள் பந்தயத்தை ஆதரித்தனர். பரோடா போன்ற தொலைதூர மாநிலங்களின் மன்னர்கள் தங்கள் குதிரைகளைப் பந்தயங்களில் போட்டியிட வைப்பார்கள்.

1920ஆம் ஆண்டில், பந்தய மைதானத்தின் உள்கட்டமைப்பு வளர்ச்சிக்கு ஜமீன்தார்களின் பங்களிப்பு கணிசமானது. போபில்லி மற்றும் வெங்கடகிரி ஜமீன்தார்களால் இரண்டு பார்வையாளர் அரங்குகள் கட்டப்பட்டன.

ஒவ்வொரு பந்தய சீசனிலும், அனைத்து முக்கிய நபர்கள் கிண்டி ரேஸ்கோர்ஸில் கூடுவார்கள். ராஜாக்கள், ராணிகள், ஜமீன்தார்கள் மற்றும் தொழிலதிபர்கள் சிலர் தங்கள் சொந்தக் குதிரைகளைப் பந்தயங்களில் ஓட்டுவார்கள். பலரும் சூதாடுவார்கள். ஆனால் பெரும்பாலானோர் நண்பர்களைச் சந்திப்பதற்காக வந்து மகிழ்ந்தனர். பந்தயங்களைப் பார்க்கவில்லை என்றாலும், அவர்கள் வியாபாரம் பேச வந்தார்கள்.

சில சமயங்களில் அரச திருமணங்களும் இங்கு நிச்சயிக்கப்பட்டன. இந்தியாவின் பணக்கார மன்னன் பரோடாவின் கெய்க்வாட் தனது குதிரைகளைக் கிண்டியில் ஓட விடுவதற்காக வருடா வருடம் வருவார். அப்படி அவர் வந்தபோதுதான் வுய்யூரின் ஜமீந்தார் மனைவியான சீதாதேவியைச் சந்தித்தார். அவள் மூன்று குழந்தைகளுக்குத் தாய் என்பது ஓர் அழகை ரசிக்கும் அரசருக்குப் பொருட்டல்ல. பரோடாவிலும் சரி மெட்ராஸ் மாகாணத்திலும் சரி, இரண்டாவது திருமணம் செய்து கொள்வது தடைப்பட்டிருந்தது என்பதும் கவலை கொடுக்கவில்லை. ஒரு சர்ச்சைக்குரிய செயலில் அவர்கள் காதலித்துத் திருமணம் செய்து கொண்டனர்.

1875ஆம் ஆண்டு வேல்ஸ் இளவரசர், விக்டோரியா ராணியின் மகனான ஏழாம் எட்வர்ட், இங்கு விஜயம் செய்து குதிரைகள் ஓடுவதைப் பார்வையிட்டார்.

குதிரைப் பந்தயத்துக்கு முதல் எதிரி போர்தான்.

மெட்ராஸுக்கு எதிரி அச்சுறுத்தல் இருந்தபோது குதிரைப் பந்தயம் நடக்கவில்லை. மைசூர் போர்களின் போதும், முதல் உலகப் போரின் போதும் இந்த விளையாட்டு பின்னடைவைச் சந்தித்தது.

இன்றும் தமிழகத்தில் சூதாட்டம் சட்டப்பூர்வமாக அனுமதிக்கப்படும் ஒரே விளையாட்டு குதிரைப் பந்தயம்தான்.

ரேஸ்கோர்ஸ்தான் உலகில் ஜனநாயகம் நிலைபெற்றிருக்கும் இடம். நுழைவதற்கு எந்தத் தடையும் இல்லாமல், சமுதாயத்தின் அனைத்து அடுக்குகளிலிருந்து சூதாட்ட உள்ளுணர்வு கொண்ட எவரும் நேராகக் கிண்டி நோக்கிச் செல்லலாம். பந்தய நாட்களில் நகரமே காலியாகி மைதானத்தில் கூடிய பிரமையை ஏற்படுத்திய காலமும் உண்டு.

கிண்டி என்பது நகரத்தில் சம்பாதித்த அல்லது கடன் வாங்கிய அனைத்துச் செல்வங்களும் ஒரு தடயமும் இல்லாமல் மூழ்கிவிடும் ஆழம் தெரியாத குழி என்று அதன் எதிர்ப்பாளர்கள் சொல்லிய காலமுண்டு.

பார்வையாளர்களின் கைகளிலிருந்து எவ்வளவு பணம் பந்தயத்தில் செல்கிறது என்பது உண்மையில் அதிர்ச்சியளிக்கக் கூடியது..

குதிரை ஓடுவதை விட வேகமாகப் பணத்தை இழந்த சாமானியர்களின் துயரத்தைக் கண்டு கருணாநிதி அரசு குதிரைப் பந்தயத்திற்குத் தடை விதித்தது. அந்தத் தைரியமான காரியத்தின் நினைவுச் சின்னமாகத்தான் அண்ணா மேம்பாலம் அருகே மவுண்ட்ரோட்டில் இரண்டு சிலைகளை வைத்தனர். குதிக்கும் குதிரையைத் தடுத்து நிறுத்திய ஒரு மனிதனின் சிலை அது. ஆனால் ஓராண்டுக்குக்குள் தடைக்குத் தடை விதித்து மெட்ராஸில் எஞ்சியிருக்கும் பழமையான நிறுவனங்களில் ஒன்றை நீதிமன்றங்கள் காப்பாற்றின. ஆனால் சிலைகள் எப்படியும் நிறுவப்பட்டது, பட்டதுதான்.

1980களில் மற்றொரு சட்டமன்றத் தலையீட்டின் ஒரு குறுகிய காலத்தைத் தவிர, குதிரைப் பந்தயம் தொடர்ந்து நடந்தது. இடையிடையே குறுக்கீடுகள் மற்றும் பின்னடைவுகள் இருந்தபோதிலும் சுமார் 240 ஆண்டுகளாகக் குதிரைப் பந்தயங்கள் நடத்துகிறது.

வெள்ளையரின் ஆதிக்கம் குறைந்தவுடன், ஒரு வணிகரின் குடும்பம் இந்தக் குதிரைப் பந்தய நடவடிக்கைகளில் ஆதிக்கம் செலுத்தியது. அது இன்று வரை தொடர்கிறது.

அண்ணாமலை செட்டியாரின் குடும்பம் குதிரை வைத்திருப்பதிலும் பந்தயத்திலும் மிகுந்த ஆர்வம் காட்டினர். அவர்களின் ஆதரவுடன்தான் ரேஸ் கிளப் பெரிய உயரத்தை எட்டியது.

இன்று ரேஸ் கோர்ஸ் மெட்ராஸின் வேகமாக வளர்ந்து வரும் பகுதியின் நடுவே ஒரு பெரிய பசுமையான இடம். குதிரைகள் மைதானத்தின் விளிம்பில் உள்ள தடங்களில் ஓடுகின்றன. கோல்ஃப் வீரர்கள் நடுவில் உள்ள புல்வெளியைப் பயன்படுத்துகின்றனர். ரேஸ் கோர்ஸின் பசுமையான காட்சியை அனுபவிக்க இப்போது எல்லாப் பக்கங்களிலும் உயரமான கட்டடங்கள் உள்ளன.

0

பகிர:
வெங்கடேஷ் ராமகிருஷ்ணன்

வெங்கடேஷ் ராமகிருஷ்ணன்

சென்னையின் சரித்திரத்தின் மேல் ஆர்வம் கொண்டவர். கூவம் ஆறு, சென்னையில் உலக யுத்தம், சென்னையில் 1940-1950 நடந்த விசேஷ நிகழ்வுகள், சென்னையில் சுதந்திரப் போராட்டம் போன்றவற்றை ஆராய்ந்து வருபவர். அனுஷா வெங்கடேஷ் எனும் பெயரில் சரித்திரப் புதினங்கள் எழுதியிருக்கிறார். பொன்னியின் செல்வனின் தொடர்ச்சியை காவிரி மைந்தன் என்ற பெயரில் எழுதினார் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்புக்கு : abhivencat1965@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *