Skip to content
Home » கட்டடம் சொல்லும் கதை #43 – கபாலீஸ்வரர் கோயில்

கட்டடம் சொல்லும் கதை #43 – கபாலீஸ்வரர் கோயில்

அறுபத்து மூன்று  நாயன்மார்களில் ஒருவரான வாயிலார் நாயனார் மயிலாப்பூரில் பிறந்து விவசாயியாக வாழ்ந்தவர். அறுபத்து மூன்று  நாயன்மார்களின் சரிதத்தைச் சொல்லும் பெரியபுராணம், வாயிலார் நாயனார் அத்தியாயத்தில் ஒரு பணக்கார நகரத்தையும் அதன் துறைமுகத்தையும் குறித்து விவரிக்கின்றது.

பல தேசங்களிலிருந்து வரும் வணிகர்களின் கப்பல்களில் இருந்து இறக்கப்படும் யானைகள் மயிலாப்பூரில் உள்ள எருமைக் கன்றுகளை விட ஒப்பீட்டளவில் சிறியதாக இருக்கும் என்று பெரியபுராணம் மயிலையின் வளத்தைப் புகழ்கின்றது.

மயிலையில் இன்று துறைமுகம் இல்லை. ஆனால் ஒரு காலத்தில் கோட்டைகளுக்கும் போர்க்களங்களுக்கும் பெயர்போனது இவ்வூர்.

முகலாயப் பேரரசர் ஔரங்கசீப் தனது காசுகளை இங்கு அச்சிட்டார். தனது பெயரை நாணயத்தில் கொண்ட மெட்ராஸின் உட்பகுதிகள் மிக அரிது. அதில் மயிலையும் ஒன்று.

கச்சேரி என்ற கோல்கொண்டா நீதிமன்றம் / காவல் நிலையம் இங்கு இருந்தது.

ஆனால் மயிலாப்பூரின் இந்த இடத்துக்கு ஆணிவேராகத் திகழ்வது கோயில்கள்.

கோபம் கொண்ட சிவபெருமானை அம்மன் மயிலாக வழிபட்டதால் மயிலாப்பூர் என்று பெயர் வந்தது. இதே போன்ற புராணம் கொண்ட மற்றொரு கோயில் மாயவரம். ஆரம்பக்கால வரலாற்றின் ஒரு கட்டத்தில் சிவனை அவரது மூர்க்கமான வடிவில் வழிபடும் காபாலிகர்களால் இந்த ஆலயம் ஆதரிக்கப்பட்டிருக்கலாம். இக்கோயிலின் தாய் தெய்வம் கற்பகாம்பாள். கற்பகம் மரம் அனைத்து விருப்பங்களையும் வழங்கும் மரம் என்று நம்பப்படுகிறது.

அருணகிரிநாதர் இங்குள்ள சிங்கார வேலன் மீது 10க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார். அவர் குறிப்பிடுகிற மாந்தோப்பு, பலாத்தோப்பு போன்ற சில இடங்கள் மயிலாப்பூரில் இன்னும் உள்ளன.

1300 வருடங்களுக்கு முன் திருஞானசம்பந்தர் சிறுவனாக இங்கு வந்தார். பத்து பாடல் கொண்ட பதிகம் ஒன்றைப் பாடி, பாம்பு தீண்டி இறந்த செட்டிப் பெண் பூம்பாவையின் அஸ்தியில் இருந்து அவளை உயிர்த்தெழ வைத்தார்.

மானிடப் பெண்ணான பூம்பாவையின் பெயரைப் பத்து முறை பதிகத்தில் உச்சரித்திருப்பார். தேவாரத்தில் அது வேறு எந்த மானிடருக்கும் கிடைக்காத பெருமை. ஒரு மயிலாப்பூர் பெண்ணுக்குக் கிட்டியது.

மேலும் ஒவ்வொரு பாடலிலும் கோயிலில் கொண்டாடப்படும் மாதாந்திரத் திருவிழா ஒன்றைச் சொல்லி அதைக் கொண்டாட வெளி வர மாட்டாயா பூம்பாவை என்று மன்றாடுவார். 1300 ஆண்டுகளுக்குப் பின்னும் திருஞானசம்பந்தர்  தனது பதிகத்தில் குறிப்பிட்டிருக்கும் அந்த விழாக்கள் இன்றளவிலும் கோயிலில் நடக்கின்றன.

ஆனால் தொடர்ந்து 1300 ஆண்டுகளாக இப்படி நடந்ததா என்பது சந்தேகம்தான். மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலானது வரலாற்றின் அனைத்து அம்சங்களையும் கண்டுள்ளது. அதைச் சுற்றி நடந்துள்ள போர்கள் மற்றும் அறங்காவலர்களின் தவறான நிர்வாகத்தால் கோயில் அடிக்கடி மூடப்பட்டது. அதன் சொத்துக்களை வெளியாட்கள் ஆக்கிரமித்ததால் அதன் அன்றாட நடவடிக்கைகள் முடங்கிக் கிடந்த காலங்கள் உண்டு.

ஜார்ஜ் கோட்டையிலிருந்து மயிலாப்பூர் விவசாய மற்றும் ஜவுளி நெசவுக் கிராமமாக மட்டுமே காணப்பட்டது. கோட்டைக்கு அத்தியாவசியப் பொருள்களை வழங்குவது அதன் கடமையாக இருந்தது. அடையாற்றைத் தாண்டியவுடன் கண்ட வளமையைப் பற்றிப் பல யாத்திரிகர்கள் சொல்லியுள்ளனர்.

கோயிலைச் சுற்றி 4 மாட வீதிகள் உள்ளன. அவை இப்போது வணிகத் தளங்களாக மாறிவிட்டாலும், ஒரு காலத்தில், சாலையில் போக்குவரத்து பெருகும் முன், தறி அமைத்து வேஷ்டி மற்றும் சிவப்புத் துண்டுகளை நெய்தனர். இவர்களது விநாயகர் கோயில் தெற்கு மாட வீதியில் தற்போதுள்ள உள்ள வெள்ளீஸ்வரர் கோயிலாக மாறியுள்ளது.

ஆங்கிலேயர்கள் மயிலாப்பூர் கிராமத்தைக் கைப்பற்றியபோது அதன் வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயம் கிடைத்தது. குறிப்பாகக் கபாலீஸ்வரர் கோயில் மேம்படுத்தப்பட்டது. சமயத்தில் இது ஒரு மதிப்புமிக்க கோயிலாக இருந்ததால், கறுப்பர் நகரில் இந்தியர்களிடையே மிகவும் முக்கியமான பதவியை வகித்த கிழக்கிந்திய நிறுவனத்தின் தலைமை வணிகர், கோயிலின் தர்மகர்த்தாவாகப் பொறுப்பேற்றார். அவர்களின் அரசியல் செல்வாக்கு கோயிலுக்கு உதவியது. மாடவீதிகளைக் குறுக்கி வைத்திருந்த ஆக்கிரமிப்பாளர்கள் அகற்றப்பட்டனர். புதிய ஆலயங்கள் உள்ளே கட்டப்பட்டன. அம்மன் கோயில், திருப்பணி செய்யப்பட்டது. இந்தக் கோயிலின் தற்போதைய வடிவத்திற்கும் செழுமைக்கும் அந்த முதலில் வந்த வரிசையில் முத்தையப்ப முதலியார் தான் பொறுப்பு.

தர்மகர்த்தாக்கள் நியமிக்கப்பட்டதிலிருந்து கோயில் முதலியார்களின் கட்டுப்பாட்டில் இருந்தது.  தர்மகர்த்தாக்கள் காலத்தில் தான் ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்கள் மீட்கப்பட்டன. கோயில் சீர் செய்யப்பட்டது. திருவிழாவுக்கு வாகனங்கள் செய்யப்பட்டன. மீண்டும் திருவிழாக்கள் தொடங்கின. குளம் முறையாகத் தோண்டப்பட்டு படிகள் அமைக்கப்பட்டது.

100 அடி உயரமுள்ள கோயிலின் ராஜகோபுரம் மதராஸின் அடையாளமாக மாறியுள்ளது. ஆனால் இது மிகச் சமீபத்தில் 1900 இல் மட்டுமே முடிக்கப்பட்டது. நன்கொடையாளரின் பெயர் தெளிவற்றதாக உள்ளது, ஆனால் பம்மல் சம்பந்த முதலியாரின் பதிவில் ட்ரிப்ளிகேன் செட்டியார் அல்லது கோபுரம் செட்டியார் என்று அழைக்கப்படுகிறார்.

பின்னாளில் தர்மகர்த்தா பொறுப்பு, நாடக மேதை சம்பந்த முதலியார் கடைசி அறங்காவலராக இருந்த பம்மல் குடும்பத்திற்குச் சென்றது. அவர் நீதிபதியாக நியமிக்கப்பட்ட பிறகு, அவர் தார்மீக அடிப்படையில் ராஜினாமா செய்தார். அத்துடன் அறங்காவலர் பதவி நீக்கப்பட்டு கோயிலை அரசாங்கம் கைப்பற்றியது.

ஆதி காலத்தில் கடலோரம் இருந்ததா கோயில் என்று பல சர்ச்சைகள் எழுந்துள்ளன. அது இருந்த இடத்தில் இன்று சாந்தோம் தேவாலயம் இருக்கிறதா என்றும் சிலர் கேட்கிறார்கள். போர்த்துக்கீசிய அராஜகத்தால் அப்படி நிகழ்ந்ததோ என்றும் கேள்விகள் உள்ளன.

1300இல் மார்கோ போலோ சாந்தோம் தேவாலயத்தைப் பார்க்க மயிலை வருகிறார். அவரது எழுத்துகளில் தேவாலயம் பற்றிப் பல குறிப்புகளைக் காண்கிறோம். அதுவும் போர்த்துக்கீசிய வரவுக்கு 200 ஆண்டுகளுக்கு முன்பாகவே! ஊரெங்கும் மயில்கள் உலாவுகின்றன என்றும் கூடுதலாகச் சொல்கிறார்.

1700களில் கோயில் இப்போது இருக்கும் இடத்தில்தான் இருந்தது,. ஆனால் படையெடுக்கும் கொல்கொண்டா சேனையைத் தடுத்து நிறுத்த பிரெஞ்சு வீரர்கள் கோயிலை ஆக்கிரமிக்கிறார்கள். மாட வீதிகளில் கடும் சண்டை நிகழ்கிறது..

ஆற்காடு நவாப் தனது ராஜ்ஜியத்தின் கட்டுப்பாட்டை இழந்த பிறகு, சென்னைக்குச் செல்ல விரும்பினார். சேப்பாக்கத்தில் உள்ள அவரது அரண்மனை கட்டி முடிக்கப்படும்போது அவர் முதலில் மயிலாப்பூரில்தான் வந்து குடியேறினார். அப்போது கோயிலுக்கு அருகில் இருந்த குளத்தை இந்துக்களிடம் ஒப்படைத்தார். இந்தக் குளம் இன்று மாம்பலமாய் இருக்கும் பெரிய ஏரியில் இருந்து ஓடும் நீரோடையால் நிரம்பி வழிந்தது. சிறிய குளத்தைச் சுற்றி சில முஸ்லீம் ஃபக்கீர்கள் தங்கியிருந்தனர். பல்லாவரம் தர்காவில் நடந்த திருவிழாவிற்கு அவர்கள் செல்ல நவாப் நிதியுதவி செய்தார். அவர்கள் திரும்பி வருவதற்குள் கோயில் குளம் அமைக்கப்பட்டிருந்தது. மெட்ராஸ் முஸ்லிம்கள் தங்கள் முஹூர்ரம் பண்டிகையின் போது குளத்தில் குளிப்பதற்கு உரிமை உண்டு.

இந்தக் கோயில் 7ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது, ஆனால் மீண்டும் மீண்டும் மாற்றியமைக்கப்பட்டது.

இந்தக் கோயிலில் காலை 5:30 மணி முதல் இரவு 10 மணி வரை பல்வேறு நேரங்களில் ஆறு தினசரி பூஜைகள் மற்றும் நான்கு வருடாந்திரத் திருவிழாக்கள் நடைபெறுகின்றன.

கோயிலுக்கு மேற்கே பெரிய தெப்பக்குளம் உள்ளது. அதில் ஆண்டு முழுவதும் தண்ணீர் இருக்கும் என்று சொல்ல முடியாது. மெட்ராஸில் தண்ணீர் வறட்சிக்கு அடையாளமாகக் காய்ந்தும் போய்விடும். 16 தூண்கள் கொண்ட கல் மண்டபம் குளத்தின் மையத்தில் இருக்கிறது.

ஆண்டுக்கு ஒரு முறை கபாலீஸ்வரர் மற்றும் பிற தெய்வங்களின் சிலைகள் தெப்பத்தில் குளத்தில் மிதந்தபடி சுற்றிக் கொண்டு செல்லும். பின் நீராழி மண்டபத்தில் வைக்கப்படும். இந்தக் கோயிலில் அறுபத்துமூவர் திருவிழா மிக முக்கியமான நிகழ்வு.

இந்தக் கோயிலில் ஓர் ஆச்சரியமான சிலை உள்ளது. சுதந்திரப் போராட்டத்தின் போது ஒரு புதுப்பித்தல் நடந்தபோது, ஓர் அநாமதேயச் சிற்பி ஒரு தூணில் பாரதமாதாவின் சிலையைச் செதுக்கினார். கோயில் அரசின் கட்டுப்பாட்டில் இருந்ததால் அதிகாரிகளுக்குத் தெரியாமல் இது நடந்திருக்க வேண்டும், இல்லையென்றால் இது பெரும் கோபத்தை ஏற்படுத்தியிருக்கும். இந்தச் சிலையானது, அன்னை இந்தியக் கொடியைப் பிடித்திருப்பதைக் காட்டுகிறது, பின்னணியில் யானை மற்றும் சிங்கம் உள்ளது.

கோயிலைப் புதுப்பிக்கும் போது கல் தட்டுப்பாடு ஏற்பட்டதால், 2 போர்த்துக்கீசிய கல்லறைக் கற்கள் தரையில் பயன்படுத்தப்பட்டன. அவற்றில் ஒன்று இன்றும் சிங்காரவேலன் கோயிலில் உள்ளது.

தேவாரப் பாடல்களால் புனிதப்படுத்தப்பட்ட 276 சிவாலயங்கள் இந்தியா முழுவதும் உள்ளன. 6 கோயில்கள் மெட்ராஸில் உள்ளன. யாத்ரீகர்களுடன் உள்ளே வருவதற்குச் சுற்றுலாப் பயணிகளுடன் போட்டியிடும் சில கோயில்களில் கபாலி கோயிலும் ஒன்று. இந்தக் கோயிலில் நடக்கும் தேர் தெப்பம் மற்றும் அறுபத்து மூவர் திருவிழாக்கள் லட்சக்கணக்கான மக்கள் கூடும் மெகா நிகழ்வுகள் ஆகும். கபாலீஸ்வரர் கோயில் தினமும் கூட்டம் நிறைந்த ஸ்தலம்.

திருவிழாக்கள் மற்றும் தினசரி பூசைகள் தவிர அன்னதானம், நடனம் மற்றும் பாடல் போன்ற கலாச்சார நடவடிக்கைகள், வேதம் ஓதுதல், பசுக்களைப் பராமரித்தல் போன்ற நடவடிக்கைகளுடன் நாட்டில் மிகச் சிறப்பாக நடத்தப்படும் கோயில்களில் கபாலி கோயிலும் ஒன்று.

0

பகிர:
வெங்கடேஷ் ராமகிருஷ்ணன்

வெங்கடேஷ் ராமகிருஷ்ணன்

சென்னையின் சரித்திரத்தின் மேல் ஆர்வம் கொண்டவர். கூவம் ஆறு, சென்னையில் உலக யுத்தம், சென்னையில் 1940-1950 நடந்த விசேஷ நிகழ்வுகள், சென்னையில் சுதந்திரப் போராட்டம் போன்றவற்றை ஆராய்ந்து வருபவர். அனுஷா வெங்கடேஷ் எனும் பெயரில் சரித்திரப் புதினங்கள் எழுதியிருக்கிறார். பொன்னியின் செல்வனின் தொடர்ச்சியை காவிரி மைந்தன் என்ற பெயரில் எழுதினார் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்புக்கு : abhivencat1965@gmail.comView Author posts

1 thought on “கட்டடம் சொல்லும் கதை #43 – கபாலீஸ்வரர் கோயில்”

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *