விஜயநகரப் பேரரசின் இளவரசரான குமார கம்பண்ணர் மதுரையின் மீது படையெடுத்து அங்கே ஆட்சி செய்துகொண்டிருந்த சுல்தான்களைத் தோற்கடித்து விரட்டிய பிறகு, அவரும் அவருடைய மகனும் சிறிது காலம் விஜயநகர அரசின் பிரதிநிதியாக இருந்து ஆட்சி செய்துகொண்டிருந்தனர் என்று பார்த்தோம். ஆனால் விஜயநகரத்தின் மீது தொடர்ந்து போர் தொடுத்துக்கொண்டிருந்த பாமினி சுல்தான்களின் தொல்லையால் கம்பண்ணரும் எம்பண்ணரும் அவர்களைத் தொடர்ந்து அரசப் பிரதிநிதியாக இருந்த லக்கண்ணா போன்றவர்களும் விரைவிலேயே மதுரையை விட்டுச் செல்லவேண்டியிருந்தது என்பதையும் பார்த்தோம். வாணாதிராயர்களிடம் வந்த மதுரையின் ஆட்சி, விஜயநகரத்தின் பிடி தளர்ந்தது காரணமாக தன்னாட்சி பெற முயன்றது. அது மட்டுமல்லாமல், தெற்கே தென்காசிப் பாண்டியர்களும் போர்க்கொடி தூக்கியதால், விஜயநகரத் தளபதியான நரச நாயக்கர் தமிழகத்தின் மீது படையெடுத்து ஶ்ரீரங்கம், மதுரை, தென்காசி ஆகிய இடங்களில் தலைதூக்கிய புரட்சிகளை அடக்கி அப்பகுதிகளை மீண்டும் விஜயநகரின் கீழ்க் கொண்டுவந்தார். ஆயினும், நேரடிப் பிரதிநிதி இல்லாமல் இன்னொருவரிடம் ஆட்சியை ஒப்படைப்பது குழப்பத்திற்கே வழிவகுக்கும் என்பதை விஜயநகரத்தின் ஆட்சியாளர்கள் உணர்ந்தனர். வடக்கிலிருந்து விஜயநகரப் பேரரசுக்குத் தொடர்ந்து பிரச்சனைகளை ஏற்படுத்திக்கொண்டிருந்த வலுவான பாமினி சுல்தான்களைச் சமாளிக்க வேண்டிய நிலையில் தெற்கிலும் தொடர்ந்து சிக்கல்கள் வந்தால் அது அரசை நிலைகுலையச் செய்துவிடும் என்பதை அறிந்த நரச நாயக்கர், மதுரையில் வாணாதிராயர்களுடன் சேர்ந்து ஆட்சி செய்ய விஜயநகரப் பிரதிநிதிகளை நியமிக்கலானார்.
தமிழகத்தின் மீது நரச நாயக்கரின் படையெடுப்பு பொயு 1497ல் நடந்தது. அந்த ஆண்டைச் சேர்ந்த கல்வெட்டு ஒன்று நரச நாயக்கருடன் இம்மடி காசப்ப நாயக்கர், சேதுபந்த ராமேஸ்வரம் சென்றதாகவும் அங்கே வழிபாடுகள் நடத்தியதாகவும் குறிப்பிடுகிறது. 1498ம் ஆண்டுக் கல்வெட்டு ஒன்று மதுரை கொண்ட ராயரின் பெயரால் வரி வசூலிக்கப்பட்டதைக் குறிக்கிறது. அதைத் தொடர்ந்து சாளுவ வம்சத்தைச் சேர்ந்த அரசரான இம்மடி நரசிம்மரின் பெயரால் மதுரைப் பகுதியில் கிடைக்கும் கல்வெட்டுகள் விஜயநகரின் நேரடிக் கண்காணிப்பில் இந்தப் பகுதி வந்ததை உணர்த்துகிறது. மதுரைத் தலவரலாறும் அக்காலகட்டத்திலிருந்து தொடர்ந்து மதுரையின் பிரதிநிதிகளாக ஆட்சி செய்த விஜயநகரத்தின் அதிகாரிகளின் பெயர்களைக் குறிப்பிடுகிறது. அவர்களில் சிலர்
• தென்ன நாயக்கர் (1500 – 1512).
• நாச்சியப்ப பிள்ளை (1513 – 1517)
• ராயவாசல் திம்மப்ப நாயக்கர் (1517 – 1521)
• கட்டியம் காமைய்ய நாயக்கர் (1521 – 1523)
• சின்னப்ப நாயக்கர் (1524 – 1527)
இவர்களில் ராயவாசல் திம்மப்ப நாயக்கர் காலத்துக் கல்வெட்டுகள் அவரை மதுரையின் நிர்வாகி என்றே குறிப்பிடுகின்றன. திருவேடகத்தில் கிடைத்த 1526ம் ஆண்டைச் சேர்ந்த சின்னப்ப நாயக்கரின் கல்வெட்டு ஒன்று அவரை அரசரின் வாசல் காரியம் என்று குறிக்கிறது. இந்தக் குறிப்புகளிலிருந்து தொடர்ந்து விஜயநகரப் பிரதிநிதிகள் மதுரையின் ஆட்சிப் பொறுப்பைக் கவனித்து வந்தனர் என்பது தெளிவாகிறது.
இதற்கிடையில், பதினாறாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் விஜயநகரத்தின் ஆட்சி சாளுவ வம்சத்திலிருந்து துளு வம்சத்தின் கைக்கு மாறியது. அதைத் தோற்றுவித்த வீர நரசிம்மர் நான்கு ஆண்டுகளிலேயே இறந்து படவே, அவரது தம்பியான கிருஷ்ண தேவராயர் ஆட்சிக்கு வந்தார். பெரும் வீரரும் அறிவாளியுமான கிருஷ்ண தேவராயரின் ஆட்சிக்காலத்தை விஜயநகரப் பேரரசின் பொற்காலம் என்று சொல்லலாம். அவர் சென்ற இடமெல்லாம் அவருக்கு வெற்றி கிட்டியது. ஆட்சியிலும் அமைதி நிலவி செல்வச் செழிப்பு மிகுந்தது. விஜயநகரப் பேரரசின் நிலையும் உன்னதத்தை எட்டியது. ஒரு பெரும் பேரரசை வெல்வது சுலபம் ஆனால் அதைக் கட்டிக்காப்பது கடினம் என்பதை அறிந்தவர் கிருஷ்ணதேவராயர். தமிழகத்திற்குப் பலமுறை வந்த அவர், தமிழகத்தின் மீதான தங்களது ஆட்சியதிகாரத்தை மேலும் கட்டுக்கோப்பாக ஆக்கவேண்டியதன் அவசியத்தை உணர்ந்தார். அதன் காரணமாக, தமிழகப் பகுதிகளை மூன்றாகப் பிரித்து செஞ்சியைத் தலைநகராகக் கொண்டு வட பகுதியையும், மத்தியத் தமிழகத்திற்குத் தஞ்சாவூரையும் தென் தமிழகத்திற்கு மதுரையையும் தலைநகர்களாக உருவாக்கி அங்கே வலிமையான அரசப் பிரதிநிதிகளை அனுப்பினார்.
அதன்படி கிருஷ்ணதேவராயரின் அடைப்பமாக* ஆரம்பகாலகட்டத்தில் இருந்த வையப்ப நாயக்கர் செஞ்சியின் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டார். தஞ்சையில் செல்லப்பா என்ற சாளுவ நாயக்கர் மகாமண்டலேஸ்வரராகப் பதவியேற்றார். தமிழகத்தினுடைய நாயக்க வம்ச வரலாற்றில் முக்கியமான திருப்பத்தை ஏற்படுத்திய இவரைப் பற்றிப் பின்னால் பார்ப்போம். மதுரையில் தனக்கு மிக நெருக்கமானவரும் அடைப்பக்காரராக இருந்தவருமான விஸ்வநாத நாயக்கரைப் பிரதிநிதியாக நியமித்தார் கிருஷ்ணதேவராயர். பொயு 1529ம் ஆண்டிலிருந்து மதுரையின் விஜயநகர அரசின் பிரதிநிதியாக ஆளத் தொடங்கினார் விஸ்வநாதர்.
இனி, விஸ்வநாதர் மதுரைக்கு வந்தது பற்றி ஒரு பிரபலமான கதை உலவுகிறது. ‘தஞ்சாவூரி ஆந்திரராஜுலு சரித்தரமு’ என்ற நூலில் குறிப்பிடப்பட்டிருக்கும் இந்தக் கதை, சரித்திரப் புனைவுகள், திரைப்படங்கள் என்று பிரபலமாகி அதுவே வரலாறு என்று இப்போது சொல்லப்படுகிறது. அது என்ன என்பதைப் பார்ப்போம்.
கிருஷ்ண தேவராயரின் ஆட்சிக்காலத்தில் மதுரையில் சந்திரசேகர பாண்டியர் என்பவர் ஆட்சி செய்துகொண்டிருந்தார். அப்போது சோழநாட்டை ஆட்சி செய்துகொண்டிருந்த வீர சோழன் என்பவன் மதுரையின் மீது படையெடுத்து வந்து சந்திரசேகர பாண்டியரைத் தோற்கடித்து ஆட்சியைக் கவர்ந்து கொண்டான். அவனைச் சமாளிக்க முடியாத சந்திரசேகர பாண்டியர், விஜயநகரம் சென்று கிருஷ்ணதேவராயரிடம் முறையிட்டார். அவருடைய நியாயமான கோரிக்கையை ஏற்ற கிருஷ்ண தேவராயர், தன்னுடைய படைத்தலைவர்களில் சிறந்தவரான நாகம நாயக்கர் என்பவரின் தலைமையில் ஒரு படையை அனுப்பினார்.
நாகம நாயக்கர் ஒரு சிறந்த வீரர். அவருடைய தாக்குதலை வீரசோழனால் தாக்குப் பிடிக்க முடியாமல் மதுரையை விட்டு ஓடிவிட்டான். ஆனால் அதற்குப் பிறகும் மதுரையின் ஆட்சியை சந்திரசேகர பாண்டியரிடம் கொடுக்காமல் நாகம நாயக்கர் காலம் தாழ்த்தினார். இதனால் வெகுண்ட சந்திரசேகர பாண்டியர், மீண்டும் கிருஷ்ணதேவராயரிடம் சென்று முறையிட்டார். அறமற்ற இந்தச் செயலைச் செய்த நாகம நாயக்கரிடம் சினமடைந்த கிருஷ்ண தேவராயர், இன்னும் ஒரு படையை அனுப்பி நாகமரைப் பிடித்து வர முடிவு செய்தார். அதற்குத் தலைமை ஏற்க யார் செல்கிறீர்கள் என்று தன்னுடைய மற்ற படைத்தலைவர்களிடம் கேட்டார். அவர்களுக்கு நாகம நாயக்கரின் வீரத்தைப் பற்றித் தெரியும். ஆனானப்பட்ட பாமினி சுல்தான்களுக்கே தண்ணீர் காட்டிய நாகம நாயக்கரைத் தோற்கடிப்பது முடியாத விஷயம் என்பதால் அவர்கள் தயங்கினர்.
கிருஷ்ணதேவராயரின் சினம் எல்லை மீறியது. அப்போது படைக்குத் தலைமை தாங்க ஒருவர் ஒப்புக்கொண்டார். அவர் வேறு யாருமல்ல. நாகமநாயக்கரின் மகனான விஸ்வநாத நாயக்கர்தான். முதலில் கிருஷ்ணதேவராயர் விஸ்வநாதரை நம்பவில்லை. ஆனால் விஸ்வநாதர் இந்தச் செயலை கட்டாயம் நிறைவேற்றுவதாக சத்தியம் செய்து கொடுத்த பிறகு அவரை ஒரு படையோடு மதுரை அனுப்பினார் கிருஷ்ணதேவராயர். மதுரை சென்ற விஸ்வநாதர், தன் தந்தை என்றும் பாராமல் நாகமரைத் தோற்கடித்து, சிறைப்படுத்தி மதுரை அரசை மீண்டும் சந்திரசேகர பாண்டியரிடம் ஒப்படைத்துவிட்டு விஜயநகரம் திரும்பினார். விஸ்வநாதரின் விஸ்வாசத்தைக் கண்டு பெருமகிழ்ச்சி அடைந்த கிருஷ்ணதேவராயர், அவரையே மதுரைக்கு தன் பிரதிநிதியாக அனுப்பி வைத்தார். சிறிது காலம் கழித்து சந்திரசேகர பாண்டியர் வாரிசு இல்லாமல் மறையவே, விஸ்வநாதரே அரசின் பொறுப்பை ஏற்று அன்றுமுதல் மதுரையின் அரசராகத் தொடர்ந்தார்.
இப்படிச் செல்லும் இந்தக் கதைக்கு எந்தவிதமான சரித்திர ஆதாரங்களும் இல்லை என்பதை நினைவில் கொள்ளவேண்டும். உலூக்கானின் படையெடுப்பிற்குப் பிறகு தென்பகுதிக்குச் சென்ற பாண்டியர்கள் மீண்டும் மதுரையை ஆட்சி செய்ததற்கான ஆதாரம் எதுவும் இல்லை. போலவே சோழன் ஒருவன் சோழநாட்டை அக்காலகட்டத்தில் ஆட்சி செய்தான் என்பதற்கும் தரவு ஏதும் இல்லை. மதுரையின் வரலாற்றைப் பற்றிக் குறிப்பிடும் எல்லா நூல்களும் வாணாதிராயர்களும் விஜயநகரப் பிரதிநிதிகளும் மதுரையை ஆட்சி செய்ததாகக் குறிக்கின்றனவே தவிர சந்திரசேகர பாண்டியர் என்பவரைப் பற்றி அவற்றில் தகவல் ஏதும் இல்லை. ஆகவே, மேலே குறிப்பிட்ட நிகழ்வுகள் புனைவாகவே இருக்கக்கூடும் என்ற முடிவுக்கு வரவேண்டியிருக்கிறது.
அப்படியானால் உண்மை வரலாறு என்ன? மேற்குறிப்பிட்டபடி தமிழகத்தின் மூன்று பகுதிகளிலும் பிரதிநிதிகளை கிருஷ்ணதேவராயர் நியமித்து ஆட்சி செய்யும்படி 1520களில் பணித்திருக்கிறார். அப்படி மதுரையை ஆட்சி செய்ய வந்தவர்தான் விஸ்வநாத நாயக்கர். மதுரை ஸ்தானிகர் வரலாறு என்ற நூலில், மதுரையில் கலகங்கள் தோன்றியதால் நாகம நாயக்கரும் அவரது மகன் விஸ்வநாத நாயக்கரும் மதுரைக்கு 13000 குதிரைகளோடு வந்து அந்தக் கலகத்தை அடக்கியதாக ஒரு குறிப்பு உள்ளது. இந்தக் கலகம் வாணாதிராயர்களால் ஏற்பட்டிருக்கச் சாத்தியங்கள் உள்ளன. எப்படியிருந்தாலும் கிருஷ்ணதேவராயருடைய இறுதிக்காலத்தில் மேற்குறிப்பிட்ட மூவரும் அரசப் பிரதிநிதிகளாக ஆட்சி செய்திருக்கின்றனர் என்பது கல்வெட்டுகளின் மூலம் தெரியவருகிறது.
ஆனால் அக்காலகட்டத்திலேயே இவர்கள் அனைவருக்கும் ‘நாயக்கர்’ என்ற பதவி வழங்கப்பட்டுவிட்டது என்று சிலர் குறிப்பிடுகின்றனர். இது தவறான செய்தி என்பதைச் சில வரலாற்று ஆதாரங்கள் மூலம் பார்க்கலாம்.
அமர நாயக்கர்கள்
நாயக என்ற பெயர் பொதுவாக படைத்தலைவர்களுக்கு விஜயநகரப் பேரரசின் காலத்தில் வழங்கப்பட்டிருந்தாலும், நாயன்கரா அல்லது அமர நாயக்கர் என்ற சிறப்புப் பகுதி சிலருக்குத்தான் வழங்கப்பட்டிருந்தது. இது காகதீய அரசில் பிரதாப ருத்திரன் என்ற அரசன் கொண்டுவந்த முறையாகும். இம்முறையைச் சிறிது திருத்தி விஜயநகர அரசர்கள் தங்களது ஆட்சியில் அமல்படுத்தினர். இந்த முறையில் நாயக்கர் தானத்தை அளித்து ஒரு குறிப்பிட்ட பகுதியை ஒருவரிடம் அரசர் ஒப்படைத்து விடுவார். அப்பகுதியில் உள்ள நிலங்கள் அனைத்தும் அவருக்கே சொந்தமாகிவிடும். இப்படி அரசிடம் இருந்து பெற்ற நிலங்கள் ‘அமரம்’ என்ற அழைக்கப்பட்டன. அந்த நிலத்தில் உழவு செய்யும் உழவர்கள், அதிலிருந்து கிடைக்கும் வருமானத்தில் குறிப்பிட்ட பகுதியை இந்த நாயக்கர்களிடம் கொடுத்துவிடவேண்டும். அந்த வருமானத்தில் கிட்டத்தட்ட சரிபாதியை நாயக்கர்கள் அரசருக்கு அளிக்கவேண்டும். இதைத் தவிர நாயக்கர்களுக்கு ஒரு குறிப்பிட்ட அளவு படைகளை வைத்துக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டிருந்தது. அரசுக்கு வெளிநாடுகளிலிருந்து போர் அபாயம் நேரும்போது, நாயக்கர்கள் தங்கள் படைகளைக் கொடுத்து உதவ வேண்டும். ஒவ்வொருவரின் தகுதிக்கு ஏற்ப இந்த நிலங்களின் அளவு மாறுபடும். இப்படிக் கொடுக்கப்பட்ட நிலங்களை கூட்டவும் குறைக்கவும் மாற்றியமைக்கவும் அரசருக்கு அதிகாரம் இருந்தது. வரலாற்று ஆசிரியரான நூனிஸ், விஜயநகரப் பேரரசில் நாயக்கத் தானம் பெற்ற இருநூறுபேர் இருந்ததாகவும் அவர்களிடம் ஆறு லட்சம் காலாட்படைகளும் 24000 குதிரைப் படைகளும் இருந்ததாகக் கூறுகிறார்.
தங்களது ஆட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நீதி வழங்கும் அதிகாரம் இந்த நாயக்கர்களிடம் இருந்தது. அங்கேயெல்லாம் நீர்ப்பாசன வசதியைப் பெருக்கி நிலங்களை வளப்படுத்தும் கடமையும் அவர்களுக்கு இருந்தது. சிலருக்கு கோட்டை கட்டிக்கொள்ளும் உரிமையை அரசர் அளித்திருந்தார். கடமையிலிருந்து தவறும் நாயக்கர்களுக்கு கடும் தண்டனை விதிக்கப்பட்டு அவர்களின் பதவியும் பறிக்கப்பட்டது.
கிருஷ்ணதேவராயரால் நியமிக்கப்பட்ட பிரதிநிதிகள் அரசரின் ஆணைப்படி ஆட்சி செய்தனரே தவிர அவர்களுக்கு நாயக்கத்தானம் வழங்கப்படவில்லை என்பதைக் கல்வெட்டுகள் தெளிவுபடுத்துகின்றன. உதாரணமாக திருமலையில் உள்ள கல்வெட்டு ஒன்று அடைப்பம் வையப்ப நாயக்கர், கிருஷ்ணதேவராயர் நலம் பெற வேண்டி திருமலை வேங்கடப்பனுக்கு அளித்த அறக்கொடை ஒன்றைப் பற்றிக் குறிப்பிடுகிறது. அதில் வையப்பர், நாயக்கர் பதவியடைந்ததைப் பற்றிய குறிப்புகள் ஏதுமில்லை. தென் ஆற்காடு ஜம்பையில் உள்ள வையப்பரின் 1530ம் ஆண்டுக் கல்வெட்டு காசிப கோத்திரத்து திம்மப்ப நாயக்கரின் மகனான ‘அடைப்பம்’ வையப்ப நாயக்கர் அவ்வூர்க் கோவிலுக்கு அறக்கொடை அளித்த செய்தி உள்ளது. இப்படி தொடர்ந்து அடைப்பம் என்ற பெயரிலேயே வையப்ப நாயக்கர் 1532ல் கிடைத்த பல கல்வெட்டுகளில் குறிப்பிடப்படுகிறார். இவற்றிலிருந்து அவர் அதுவரை நாயக்கத்தானத்தைப் பெறவில்லை என்பது தெளிவு.
போலவே, விஸ்வநாத நாயக்கரின் பொயு 1532ம் ஆண்டைச் சேர்ந்த அழகர்கோவில் கல்வெட்டு அவரை அச்சுதராயரின் ஊழியம் என்றே குறிக்கிறது.
அழகர் கோவில் கல்வெட்டுகள் – தமிழகத் தொல்லியல் துறை வெளியீடு
ஊழியம் என்பதற்கு அதிகாரி என்பதே பொருள். ஆகவே அதுவரை விஸ்வநாத நாயக்கரும் மதுரையின் நாயன்காரராகப் பொறுப்பேற்கவில்லை என்பது தெரிகிறது. இந்த இடங்கள் நாயக்கத்தானம் பெற்றது எப்போது என்பதைத் தெரிந்து கொள்ள சற்றுப் பின்னால் செல்லவேண்டும்.
(தொடரும்)
* ‘அடைப்பம்’ என்பது அரசருக்குத் தாம்பூலம் தயாரித்துக் கொடுக்கவேண்டிய பதவி. ஏதோ வெற்றிலை மடித்துக்கொடுக்கும் பதவிதானே என்று நினைத்து விடவேண்டாம். அரசருக்கு மிக நம்பிக்கையானவர்களே இந்தப் பதவியில் நியமிக்கப்பட்டனர். எப்போது அரசருக்கு அருகிலேயே இருப்பதால் அவருக்கு ஆலோசனை சொல்லக்கூடிய அறிவும் தகுதியும் படைத்தவர்தான் இந்தப் பதவிக்கு வர முடியும். விஜயநகர அரசின் செல்வாக்கு மிக்க பதவிகளில் ஒன்று இது.