Skip to content
Home » மதுரை நாயக்கர்கள் #3 – அரசின் தோற்றம் (தொடர்ச்சி)

மதுரை நாயக்கர்கள் #3 – அரசின் தோற்றம் (தொடர்ச்சி)

விஜயநகரப் பேரரசின் அரசப் பிரதிநிதிகளாக தமிழகத்தை ஆட்சி செய்துகொண்டிருந்தவர்கள் எப்போது நாயக்கத்தானம் பெற்று அமர நாயக்கர்களாகப் பதவி உயர்வு அடைந்தனர் என்பது பற்றி வரலாற்று அறிஞர்களிடையே பல்வேறு கருத்துகள் உலவுகின்றன. ஆங்கிலேயர் ஆட்சியின் போது மதுரையில் பணிபுரிந்தவரும் ‘The Madura Country’ என்ற புத்தகத்தில் மதுரை வரலாற்றின் பல பகுதிகளை ஆவணப்படுத்தியவருமான நெல்சன், பொயு 1559ல் தான் மதுரை நாயக்கராக விஸ்வநாத நாயக்கர் பொறுப்பேற்றதாகக் குறிப்பிடுகிறார். பாண்டியர் வரலாற்றுக் குறிப்புகளிலிருந்தும் ம்ருத்யுஞ்சய ஓலைச்சுவடிகளில் உள்ள குறிப்புகளின் அடிப்படையிலும் இந்த முடிவுக்கு அவர் வந்ததாகவும் நெல்சன் தெரிவிக்கிறார்.

வி. ரங்காச்சாரி என்ற ஆய்வாளரும் நெல்சனின் இந்தக் கருத்தை ஏற்றுக்கொண்டு பொயு 1559ம் ஆண்டே மதுரை நாயக்கர் வம்சம் தோன்றிய ஆண்டு என்று கூறுகிறார். ஆனால் இதற்கான ஆதாரமாக அவர் நாகமர் கிருஷ்ணதேவராயருக்கு எதிராக நடத்திய கிளர்ச்சியை அவர் எடுத்துக்கொள்கிறார். அதாவது நாகம நாயக்கர் பொயு 1557ல் விஜயநகர அரசை எதிர்த்துப் புரட்சி செய்திருக்க வேண்டும் என்றும் அவரது மகனான விஸ்வநாத நாயக்கர் பொயு 1558ல் அவரைத் தோற்கடித்து அதற்கு அடுத்த ஆண்டு மதுரையின் அரசராகப் பொறுப்பேற்றிருக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிடுகிறார். ஆனால் பொயு 1557ல் கிருஷ்ணதேவராயர் மட்டுமல்ல அதற்கு அடுத்தப் பதவிக்கு வந்த அச்சுத தேவராயரும் மறைந்து சதாசிவ ராயரின் ஆட்சியே விஜயநகரில் இருந்தது என்பது வரலாறு நமக்குச் சொல்லும் செய்தி. தவிர, இந்தக் கதைக்கான வரலாற்று ஆதாரங்கள் ஏதுமில்லை என்பதையும் நாம் ஏற்கனவே பார்த்தோம். ஆகவே இந்த வாதமும் அடிபட்டுப் போகிறது.

தென் தமிழக வரலாற்றை ஆய்வு செய்த கால்டுவெல்லோ பொயு 1520ம் ஆண்டிலேயே மதுரை நாயக்கர்கள் ஆட்சி செய்யத் தொடங்கியதாகக் குறிப்பிடுகிறார். ஆனால் பொயு 1532ம் ஆண்டு அழகர் கோவில் கல்வெட்டில் விஸ்வநாத நாயக்கர் தன்னை ஊழியம் என்று குறிப்பிட்டுக்கொள்வதைப் பார்த்தோம். ஆகவே அந்த ஆண்டுக் கணக்கும் அர்த்தமற்றதாக ஆகிவிடுகிறது.

ஆட்சியின் தொடக்கத்தைப் பற்றி இப்படி மாறுபட்ட கருத்துகள் இருந்தாலும், தமிழகத்தின் மூன்று நாயக்கர் அரசுகளும் கிட்டத்தட்ட ஒரே காலகட்டத்தில் தோன்றின என்பதை மறுக்க முடியாது. அதற்கான உந்துதல் என்ன என்பதை அறிய அப்போது நிகழ்ந்த வரலாற்று நிகழ்வுகளை ஆராய வேண்டும்.

பொயு 1529ல் கிருஷ்ணதேவராயர் மறைந்ததை அடுத்து விஜயநகர அரசில் பெரும் குழப்பம் நிலவியது. தனக்கு அடுத்தபடியாக தன் சகோதரரான அச்சுதராயர்தான் பதவி ஏற்க வேண்டும் என்று கிருஷ்ணதேவராயர் தெரிவித்திருந்தார். ஆனால் அவருடைய மாப்பிள்ளையான ராமராயர், கிருஷ்ணதேவராயரின் ஒன்றுவிட்ட சகோதரரான ரங்கதேவராயரின் மகனும் சிறுவனுமான சதாசிவராயரை அரியணையில் அமர்த்திவிட்டு அவருக்குப் பொறுப்பாளராக தான் ஆட்சி செய்ய முயன்றார். அந்த சமயத்தில் அச்சுதராயர் சந்திரகிரிக் கோட்டையில் ஆட்சி செய்துகொண்டிருந்தார். அவர் விஜயநகரம் வருவதற்குள் சதாசிவராயருக்கு முடிசூட்ட ராமராயர் முயன்றார். ஆனால் அச்சுதராயருடைய மைத்துனர்களான சலக்கராஜு சகோதரர்கள் இந்தச் சதியை முறியடித்தனர். தஞ்சையின் அரசப் பிரதிநிதியாக இருந்த செல்லப்பா ஒரு படையோடு சென்று அச்சுதராயர் அரியணையில் அமர பேருதவி செய்தார்.

காஞ்சிபுரம் ஏகாம்பர நாதர் கோவிலில் தேவகன்மியாக (அர்ச்சகராக) பணிபுரிந்த தழுவக் குழைந்தான் பட்டர் என்பவரின் மகன்தான் இந்தச் செல்லப்பா. தந்தையைப் போல கோவில் அர்ச்சகராக சிறிது காலம் பணி புரிந்தாலும், சந்திரகிரியின் ஆட்சிப் பொறுப்பை வகித்த அச்சுதராயருக்கு நெருங்கிய நண்பரானார். அதன் காரணமாக கிருஷ்ணதேவராயரின் ஆட்சியின் போது பொயு 1510ல் விஜயநகரத்தின் அலுவலர் பணியிலும் அமர்ந்தார். தனது பதவியில் மேலும் மேலும் உயர்ந்து காலப்போக்கில் சாளுவச் செல்லப்ப நாயக்கர் என்ற சிறப்புப் பெயரோடு தஞ்சையின் மகாமண்டலேஸ்வரராகவும் பணிபுரியலானார். ஒரு சிறிய படையை வைத்துக்கொள்ளவும் அவருக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.

ராமராயர் ஆட்சியைக் கைப்பற்றச் செய்த சதிவேலையை முறியடித்து அச்சுதராயர் விஜயநகரத்தின் அரசராகப் பொறுப்பேற்ற பின்னர், அவரோடு சிறிது காலம் தங்கியிருந்தார் செல்லப்பா. ஆனால் அரசில் அச்சுதராயரின் மைத்துனர்களான சலக்கராஜு சகோதரர்களின் கை ஓங்கத் தொடங்கியது. தான் மெள்ள மெள்ள ஒதுக்கப்படுவதைப் புரிந்து கொண்ட செல்லப்பா, மனவருத்தத்தோடு தஞ்சை திரும்பினார். அத்தோடு அந்தப் பகுதியைத் தன்னாட்சி பெற்ற இடமாக அறிவித்து பேரரசுக்கு எதிராகப் புரட்சிக் கொடியையும் தூக்கினார். அவருக்கு உதவியாக பரமக்குடியின் தலைவராக இருந்த தும்பிச்சி நாயக்கர் என்பவர் இருந்தார். ஆனால் மதுரையின் விஸ்வநாத நாயக்கரும் செஞ்சியின் வையப்ப நாயக்கரும் இந்தப் புரட்சியில் கலந்துகொள்ள மறுத்துவிட்டனர்.

இது ஒருபுறம் இருக்க, திருவடி தேசம் என்று அழைக்கப்பட்ட திருவிதாங்கூரின் அரசனாக இருந்த உதயமார்த்தாண்டவர்மன் என்பவன் தென்காசியின் மீது படையெடுத்து அங்கே அரசாண்டு கொண்டிருந்த ஶ்ரீவல்லபப் பாண்டியனைத் தோற்கடித்தான். அம்பாசமுத்திரம், களக்காடு, வேப்பங்குளம் ஆகிய பகுதிகளைக் கைப்பற்றிக் கொண்டு அதுவரை செலுத்திக்கொண்டிருந்த திறையை விஜயநகர அரசுக்குச் செலுத்த மறுத்தும் விட்டான். நாட்டை இழந்த தென்காசிப் பாண்டியரான ஶ்ரீவல்லபர், விஜயநகர அரசிடம் உதயமார்த்தாண்ட வர்மன் செய்த இந்த அடாத செயலைப் பற்றி புகார் செய்தார்.

தமிழகத்தில் ஏற்பட்ட இந்தக் கலகங்களை அடக்குவதற்காக தன் மைத்துனரான சலக்கரஜு சின்ன திருமலையோடு ஒரு படையை நடத்திக்கொண்டு அச்சுதராயர் விஜயநகரத்திலிருந்து கிளம்பினார். காஞ்சி, ஶ்ரீரங்கம் ஆகிய தலங்களைத் தரிசித்துவிட்டு ஶ்ரீரங்கத்திலேயே அவர் தங்கிவிட்டார். இதற்கிடையில் விஜயநகரப் படை வரும் செய்தியைக் கேட்ட செல்லப்பா, தும்பிச்சி நாயக்கருடன் சேர்ந்து கொண்டு கேரள நாட்டை நோக்கி ஓடிவிட்டார். சின்ன திருமலை விஜயநகரப் படைகளோடு தென் தமிழகத்தை நோக்கிச் சென்றார். அவருக்கு உதவியாக விஸ்வநாத நாயக்கரும் ஒரு படையோடு கலகம் செய்தவர்களை அடக்கக் கிளம்பினார். பொயு1532ம் ஆண்டு ஆரல்வாய்மொழிக் கணவாயில் இருதரப்புக்கும் கடுமையான போர் மூண்டது.

திருவிதாங்கூர்ப் படையோடு சேர்ந்து கொண்டு செல்லப்பாவும் தும்பிச்சி நாயக்கரும் விஜயநகரப் படைகளை எதிர்த்துப் போர் செய்தனர். முடிவில் பெருவெற்றி அடைந்த விஜயநகரப் படைகள், கலகம் செய்த மூவரையும் சிறைப் பிடித்தன. உதயமார்த்தாண்டவர்மன் மன்னிப்புக் கேட்டுக்கொண்டு, தான் கைப்பற்றிய பகுதிகளை தென்காசிப் பாண்டியரிடம் திரும்ப அளிப்பதாக உறுதியளித்தான். மீண்டும் திறை செலுத்துவதாகவும் ஒப்புக்கொண்டான். போலவே செல்லப்பாவும் தும்பிச்சி நாயக்கரும் சரணடைந்ததை அடுத்து அவர்களும் மன்னிக்கப்பட்டனர். ஶ்ரீவல்லபப் பாண்டியர் தன் மகளை அச்சுதராயருக்குத் திருமணம் செய்துகொடுத்தார். இந்த விவரங்கள் எல்லாம் அச்சுதராய அப்யூதம் என்ற நூலிலும் காஞ்சியிலும் ஶ்ரீரங்கத்திலும் உள்ள கல்வெட்டுகளிலும் காணப்படுகின்றன.

விஸ்வநாத நாயக்கர் திருவடி தேசத்திற்கான இந்தப் போர்களில் பங்குபெற்றது பின்னாளில் விஜயநகர அரசராக வந்த வீர வேங்கடப்ப நாயக்கரின் வேலங்குடிச் செப்பேடுகளிலும் குமார கிருஷ்ணப்ப நாயக்கரின் செப்பேடுகளிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆகவே அக்காலத்திலிருந்தே பெரும் செல்வாக்குப் பெற்றவராக விஸ்வநாதர் இருந்தது இதன் மூலம் தெளிவாகிறது.

இப்படித் தமிழகத்தில் தோன்றிய கலகங்களை அடக்கினாலும், அங்கே தனக்கு விசுவாசமான அரசர்கள் இல்லையென்றால் சிக்கல்கள் தீவிரமாகும் என்பதை உணர்ந்த அச்சுதராயர் அதற்கான முயற்சிகளில் இறங்கினார். துரோகம் செய்த செல்லப்பாவைப் பதவியிலிருந்து நீக்கி அவருக்குப் பதிலாக தன் மனைவியின் சகோதரியான மூர்த்திமாம்பாவின் கணவரும் தமிழ்நாட்டின் நெடுங்குன்றம் என்ற பகுதியைச் சேர்ந்தவருமான செவ்வப்ப நாயக்கரை தஞ்சையின் அமரநாயக்கராக, நாயக்கத் தானம் அளித்து அமரவைத்தார் அச்சுதராயர். மூன்று முக்கியமான இடங்களில் ஒருவருக்கு மட்டும், அதுவும் தன் உறவினருக்குப் பதவியை அளிப்பது பிரச்சனைகளை உருவாக்கும் என்று நினைத்ததாலோ என்னவோ, மற்ற இரண்டு நாயக்கர்களின் பதவியையும் உயர்த்தினார் அச்சுதராயர். தனக்கு விசுவாசமாக இருந்த விஸ்வநாத நாயக்கரையும் வையப்பநாயக்கரையும் மதுரை, செஞ்சிப் பகுதிகளின் அமரநாயக்கர்களாக முறையே அமர்த்தினார் அச்சுதர்.

இதற்கான ஆதாரங்கள் என்ன? பொயு 1536ம் ஆண்டில் குடவாசல் ஶ்ரீகோணேஸ்வரர் கோவிலில் உள்ள கல்வெட்டு ஒன்று அச்சுதராயர் காலத்தைச் சேர்ந்தது. இதில் செவ்வப்ப நாயக்கர் மற்றும் வையப்ப நாயக்கர் ஆகியோரின் தாய் தந்தையருக்குப் புண்ணியமாக ஒரு கட்டளை ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதே கோவிலில் காணப்படும் இன்னொரு கல்வெட்டும் செவ்வப்ப நாயக்கரைப் பற்றிக் குறிப்பிடுகிறது. இந்தக் கல்வெட்டுகளைக் கண்டறிந்த வரலாற்று ஆய்வாளர் குடவாயில் பாலசுப்பிரமணியன் இவற்றை வைத்து செவ்வப்ப நாயக்கரின் ஆட்சி தஞ்சைப் பகுதியில் ஏற்பட்டதை உறுதிசெய்கிறார்*. போலவே, சித்தூர் மாவட்டத்தின் கலவகுண்டா என்ற இடத்தில் காணப்படும் பொயு 1535ம் ஆண்டுக் கல்வெட்டு வையப்ப நாயக்கரை அச்சுதநாயக்கரின் ‘மகாநாயன்கார’ என்று குறிப்பிடுகிறது.

தற்போதைய சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூரில் உள்ள ஒரு கல்வெட்டு பொயு 1535ம் ஆண்டில், அச்சுதராயர் சில கிராமங்களை விஸ்வநாத நாயக்கருக்கு நாயக்கத்தானமாக வழங்கியதைப் பேசுகிறது. இந்தக் கல்வெட்டு ஆதாரங்களை வைத்துப் பார்க்கும்போது பொயு 1535ம் ஆண்டில் தொண்டை மண்டலம், சோழ மண்டலம், பாண்டி மண்டலம் ஆகிய பகுதிகளில் அதுவரை அரசப் பிரதிநிதிகளாக இருந்தவர்கள் நாயக்கர்களாகப் பதவி உயர்வு பெற்றதை அறிய முடிகிறது. பொயு 1529ம் ஆண்டு வாக்கில் மதுரைக்கு வந்த விஸ்வநாத நாயக்கர், பொயு 1535ல் அமரநாயக்கராக உயர்ந்து மதுரை நாயக்கர் வம்சத்தைத் தோற்றுவித்தார் என்பது இந்த ஆதாரங்களால் உறுதி செய்யப்படுகிறது.

இனி விஸ்வநாத நாயக்கரைப் பற்றிய செய்திகளைக் கொஞ்சம் விரிவாகக் காணலாம்

(தொடரும்)

* தஞ்சை நாயக்கர் வரலாறு – குடவாயில் பாலசுப்பிரமணியன்.

பகிர:
எஸ். கிருஷ்ணன்

எஸ். கிருஷ்ணன்

மொழிபெயர்ப்பாளர், எழுத்தாளர், வரலாற்று ஆர்வலர். தமிழர் நாகரிகம், மரபு, கல்வெட்டு ஆராய்ச்சி போன்ற துறைகளில் தொடர்ந்து எழுதி வருபவர். 'அர்த்தசாஸ்திரம்', 'கிழக்கிந்தியக் கம்பெனி', 'பழந்தமிழ் வணிகர்கள்' போன்ற நூல்களை மொழிபெயர்த்துள்ளார். சமீபத்திய நூல், 'சேரர் சோழர் பாண்டியர்: மூவேந்தர் வரலாறு'. தொடர்புக்கு : kirishts@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *