மதுரை நாயக்கர்களின் ஆட்சியைத் தோற்றுவித்து அதை உறுதியாக விஸ்வநாதர் நிலை நிறுத்தினார் என்றால் அதற்கு உறுதுணையாக அவருடைய அதிகாரிகள் இருந்தனர். அவர்களில் முக்கியமானவர்களாக அரியநாதரையும் ராமபத்திர நாயக்கரையும் குறிப்பிடலாம். இவர்களில் ராமபத்திர நாயக்கர் விஸ்வநாதரின் தந்தையான நாகம நாயக்கரின் காலத்திலிருந்தே அவருடன் பணிபுரிந்தவர். அவருடைய மகனின் காலத்திலும் தன் சேவையைத் தொடர்ந்து கூடலூர் போன்ற போர்களில் விஸ்வநாதருக்கு வெற்றி தேடித்தந்தவர். அரியநாதரோ பாளையங்களைச் சீரமைப்பதில் உறுதுணையாக இருந்தது மட்டுமன்றி, பல்வேறு கோவில் திருப்பணிகளிலும் விஸ்வநாத நாயக்கருக்கு உதவி புரிந்தார். மதுரைக் கோவிலில் உள்ள பெரும் புகழ் பெற்ற ஆயிரங்கால் மண்டபத்தைக் கட்டியவர் அவரே
அருமா தவஞ்செ யறுத்து மூவ ரவர்மண்டப
மருவாருஞ் சொல்லை மறச்சாலை மண்டபம் வன்னியடி
முருகேசன் சொக்கற்கு வெள்ளிசிங் காதன முற்றுஞ் செய்தான்
கொற்றவ ராகி முடிசூடுஞ் சொக்கற்பொற் கோயிலுள்வாழ்
கற்றவர் போற்றுந்துர்க் காதேவி மண்டபங் கட்டினான்
என்று அவர் செய்த திருப்பணிகளைப் பட்டியலிடுகிறது திருப்பணி மாலை. சுவாமிகோவில் இரண்டாம் பிரகாரத்தில் உள்ள அறுபத்து மூவர் மண்டபம், அறச்சாலை மண்டபம், காளத்தீஸ்வரர் கோவில், கீழமாசிவீதியில் உள்ள அம்மன் தேர்மண்டபம் ஆகியவற்றைக் கட்டியது அரியநாதர் தான். இவர்களைத் தவிர கேசவப்பர் என்ற விஸ்வநாதரின் நண்பரும் அவருடைய படையெடுப்புகளில் பங்கேற்று பல வெற்றிகளுக்குக் காரணமாக இருந்தார்.
நாணயங்கள்
விஜயநகரின் அரசப் பிரதிநிதியாக மதுரைக்கு வந்து அதன்பின் மதுரையின் ஆட்சியை ஏற்ற விஸ்வநாதர் ஒரு காலகட்டத்தில் இந்த மண்ணின் மைந்தராகவே ஆகிவிட்டார் என்பதற்கு அவர் வெளியிட்ட நாணயங்கள் சாட்சி கூறுகின்றன. அவருடைய நாணயம் ஒன்றில் ஒருபுறம் ‘விஸ்வநாதன்’ என்று தமிழில் எழுதப்பட்டுள்ளது. மறுபுறம் பாண்டியன் என்று எழுதப்பட்டு பாண்டியர்களின் முத்திரையான இரட்டைக் கயல் காணப்படுகிறது.
பாண்டியநாட்டில் ஆட்சி செய்ததால் தன்னையும் பாண்டியராகவே விஸ்வநாதர் கருதத்தொடங்கிவிட்டார் என்பதற்குச் சான்று இது. அவர் வெளியிட்ட இன்னொரு நாணயத்தில் ஒரு புறம் மனிதர் ஒருவருடைய உருவமும் இன்னொருபுறம் இரட்டைக் கயல் சின்னமும் உள்ளது. அதே பக்கத்தில் விஸ்வநாதன் என்று நாணய விளிம்பைச் சுற்றி எழுதப்பட்டுள்ளது.
விஸ்வநாதர் பெரும் வீரமும் அறிவாளியாகவும் இருந்தாலும் அவருடைய எல்லைகள் என்ன என்பதைத் தெளிவாக அறிந்திருந்தார். கிருஷ்ணதேவராயர், அச்சுதராயர், சதாசிவராயர் என்று மூன்று மன்னர்களையும் அவர்கள் ஆட்சியேற்கும் போது நிகழ்ந்த குழப்பங்களையும் சந்தித்திருந்தாலும் மூன்று மன்னர்களுக்கும் விசுவாசமானவராகவே அவர் இருந்தார். அவர் நினைத்திருந்தால் அரியநாதரைப் போன்ற வீரரைப் பக்கத்தில் வைத்துக்கொண்டு தன்னாட்சி, சுதந்திரம் என்றெல்லாம் புரட்சி செய்திருக்கலாம். ஆனால் அப்படி எதுவும் அகலக்கால் வைக்காமல் தனக்குக் கிடைத்த நாட்டின் நிர்வாகத்தைச் சீரமைத்து ஒழுங்குபடுத்துவதில் அவர் கவனம் செலுத்தினார். மதுரை நாயக்கராக சர்வ வல்லமை பொருந்தியவராக அவர் இருந்தபோதிலும், விஜயநகர அரசர்கள் அவருக்கு மேலாக நிர்வாகிகளை நியமித்த போது, முகத்தைச் சுளிக்காமல் அவர்களைத் தலைவர்களாக ஏற்றுக்கொண்டு தன் அரசை கவனித்தார் விஸ்வநாதர். விட்டலராயர் மகாமண்டலேஸ்வரராக இருந்தபோது விஸ்வநாதரின் ஆட்சிப்பகுதிகளில் மும்முறை போரில் ஈடுபட்டார். மூன்று தடவையும் அவரது ஆளுமையை ஏற்றுக்கொண்டு வித்தியாசம் பாராட்டாமல் அந்தப் போர்களில் உதவியவர் விஸ்வநாதர் என்பது குறிப்பிடத்தக்கது.
அவருடைய வீரத்திற்கான சான்றுகள் ரெய்ச்சூர் போர் தொடங்கி பல இருந்தாலும், எல்லா இடங்களிலும் வீரத்தை மட்டுமே முன்னிருத்தாமல், விவேகமாக நடந்து கொண்டு பேச்சுவார்த்தைகளின் மூலம் பல பிரச்சனைகளை முடிவுக்குக் கொண்டுவந்தவர் விஸ்வநாதர் என்பது ஆய்வாளர்களின் கருத்து. குழப்பமான நிலைமைகளிலும் கூட, நிதானமாகவும் பொறுமையாகவும் பிரச்சனைகளைக் கையாளும் திறமை ஒரு பெரிய அரசை உருவாக்க அவருக்கு உதவி புரிந்திருக்கிறது. பாளையப்பட்டு முறையைப் புகுத்துவதில் கூட அவர் அவசரம் காட்டாமல், தன்னுடைய வலிமையைப் பயன்படுத்தி அதைச் செயல்படுத்தாமல், பல ஆண்டுகள் கழிந்தாலும் அந்தந்தப் பாளையக்காரர்களின் சம்மதத்துடனேயே அந்த முறையைச் செயல்படுத்தினார் என்பது அவருடைய நிர்வாகத் திறமைக்கு சாட்சியாக உள்ளது. ஒருபுறம் விஜயநகர அரசுக்கு ‘ஊழியமாக’ இருந்துகொண்டே மறுபுறம் தன் ஆட்சிக்கு உட்பட்ட பகுதிகளின் தனது வல்லமையைக் காட்டி அங்கே உள்ள ஆட்சியாளர்கள் அனைவரையும் தன்னுடைய கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவருவது என்பது சாதாரணமான விஷயமல்ல. அதைச் சாதித்தவர் விஸ்வநாத நாயக்கர்
பொயு 1529ல் தன்னுடைய ஆட்சியை மதுரையில் தொடங்கிய விஸ்வநாத நாயக்கர் எந்த ஆண்டில் மறைந்தார் என்பது பற்றிச் சில குழப்பங்கள் உள்ளன. ம்ருத்திஞ்சய ஓலைச்சுவடிகள் அவரது மகனான கிருஷ்ணப்ப நாயக்கர் தை 11, ருத்ரோத்காரி வருடம் ஆட்சியில் அமர்ந்தார் என்று குறிப்பிடுகின்றன. அதாவது ஜனவரி 1564ம் ஆண்டு. ஆனால் ரங்காச்சாரி, 1562ல் கிருஷ்ணப்ப நாயக்கர் ஆட்சியில் அமர்ந்ததாகவும் 1563 விஸ்வநாதர் மறைந்ததாகவும் கூறுகிறார். சத்தியநாத ஐயர், விஸ்வநாத நாயக்கர் 1563ம் ஆண்டின் இறுதியில் மறைந்ததாகவும் கிருஷ்ணப்ப நாயக்கர் 1564ம் ஆண்டின் முற்பகுதியில் பதவியில் முறைப்படி அமர்ந்ததாகவும் குறிப்பிடுகிறார். ஆவணங்களோடு ஒப்பு நோக்கையில், இதுவே சரியெனத் தோன்றுகிறது.
கிருஷ்ணப்ப நாயக்கர்
குமார கிருஷ்ணப்பர் என்று அழைக்கப்பட்ட கிருஷ்ணப்ப நாயக்கர் தன் தந்தையான விஸ்வநாத நாயக்கரின் காலத்தில் அவரோடு நிர்வாகத்தில் பங்கேற்றார் என்பதைப் பல கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. விஸ்வநாதரைப் போலவே வீரமும் திறமையும் நிரம்பியவர் கிருஷ்ணப்பர். அவருக்குத் துணையாக அரியநாதர் தளவாயாகத் தொடர்ந்தது கிருஷ்ணப்பருக்குப் பெரும் பலமாக இருந்தது. ஆனால் அவருடைய ஆட்சியின் தொடக்க காலத்திலேயே அவர் சில சிக்கல்களைச் சந்திக்க நேரிட்டது. விஸ்வநாத நாயக்கர் போன்ற ஆளுமை மறைந்ததும் துணிச்சல் பெற்ற பல பாளையக்காரர்கள் தன்னாட்சி வேண்டிக் கலகம் செய்ய ஆரம்பித்தனர். அவர்களுக்குத் தும்பிச்சி நாயக்கர் தலைமை வகித்தார். இவர் அச்சுதராயரின் காலத்திலிருந்தே இருந்து வருபவர் என்பதை ஏற்கனவே பார்த்திருக்கிறோம். கீழக்கரையில் உள்ள ஒரு கல்வெட்டு இவரை அச்சுதராயரோடு சேர்த்துக் குறிப்பிடுகிறது. இவர் தொட்டிய நாயக்கர்களின் தலைவராக இருந்தார் என்று ஏசு சபைக் குறிப்புகள் தெரிவிக்கின்றன. ஆகவே தும்பிச்சி நாயக்கருக்கும் ஒரு வலிமையான பின்னணி இருந்தது என்று தெரிகிறது.
கிருஷ்ணப்பரின் தலைமையை ஏற்க விரும்பாமல் போர்க்கொடி தூக்கிய தும்பிச்சி நாயக்கர், தனக்குத் துணையாக சில பாளையக்காரர்களைச் சேர்த்துக்கொண்டு பரமக்குடிக் கோட்டையைக் கைப்பற்றினார். இந்தக் கலகத்தில் அவருக்கு உதவி புரிந்தவர்கள், விஸ்வநாதரின் காலத்தில் பாளையங்கள் பிரிக்கப்பட்ட போது அதனால் திருப்தி அடையாதவர்களாக இருக்கவேண்டும்.
பரமக்குடையைக் கைப்பற்றிய தும்பிச்சி நாயக்கர் அதன் சுற்றுப்புறங்களைச் சூறையாடிவிட்டு அடுத்ததாக மதுரையைத் தாக்கத் திட்டம் தீட்டினார். இதைக் கண்டு வெகுண்ட கிருஷ்ணப்பர், விஸ்வநாதரின் நண்பரும் தளபதிகளில் ஒருவருமான பெத்த (பெரிய) கேசவப்பரின் தலைமையில் ஒரு படையை பரமக்குடிக்கு அனுப்பினார். இரு தரப்புக்கும் நடந்த கடுமையான போரில் பெரிய கேசவப்பர் கொல்லப்பட்டார். இதைக் கேள்விப்பட்ட கிருஷ்ணப்பர், பெரிய கேசப்பவரின் புதல்வரான சின்ன கேசவப்பரை படைத்தலைவராக நியமித்து 18000 வீரர்கள் கொண்ட படையை அவரோடு பரமக்குடிக்கு அனுப்பினார். பரமக்குடியை முற்றுகையிட்டு தும்பிச்சி நாயக்கரின் படைகளைத் தாக்கியது மதுரைப் படை. மதுரைக்கு ஆதரவாக பல பாளையங்களும் இந்தப் போரில் இணைந்து கொண்டன.
இம்முறை சின்ன கேசவப்பருக்கு வெற்றி கிடைத்தது. போரில் தோல்வியுற்ற தும்பிச்சி நாயக்கரின் தலையை வெட்டி மற்ற பாளையக்காரர்களுக்கு எச்சரிக்கையாக அனுப்பினார் சின்ன கேசவப்பர். பரமக்குடி வெற்றியை அடுத்து தும்பிச்சி நாயக்கரோடு போரிட்ட மற்ற பாளையக்காரர்களைத் தாக்கியது மதுரைப் படை. அவர்கள் போரிட விரும்பாமல் சரணடைந்து மதுரையின் தலைமையை ஏற்றுக்கொண்டனர்.
தும்பிச்சி நாயக்கரின் இரு மகன்களும் மதுரை சென்று கிருஷ்ணப்பரின் மன்னிப்பைக் கோரினர். அதை ஏற்றுக்கொண்ட கிருஷ்ணப்ப நாயக்கர் அவர்கள் இருவருக்கும் பரமக்குடி, பறம்பூர் என்ற இரு பாளையங்களை வழங்கி, அவர்களை ஆட்சி செய்துவரச் செய்தார். விஸ்வநாதர் இருந்த வரை அமைதியாகச் செயல்பட்ட பாளையங்கள் கிருஷ்ணப்பரின் ஆட்சியின் ஆரம்பத்திலேயே இப்படி ஒரு சலசலப்பை ஏற்படுத்தினாலும், அதன்பின் மதுரை அரசுக்கு அடங்கி கப்பம் கட்டி வந்தனர்.
தலைக்கோட்டைப் போர்
உள்நாட்டில் தோன்றிய இந்தக் கலகத்தை அடக்குவதற்குள், தலைமை அரசான விஜயநகரில் பெரும் சிக்கல் ஒன்று எழுந்தது. சதாசிவராயரை அரியணையில் அமர்த்தி ஆட்சிப்பொறுப்பு முழுவதையும் தானே கவனித்துக்கொண்டு வந்த கிருஷ்ணதேவராயரின் மாப்பிள்ளையான ராமராயர், பாமினி சுல்தானிகளின் விவகாரங்களில் தொடர்ந்து தலையிட்டு வந்தார். அவர்களுக்கு இடையே சண்டை மூட்டி விடுவது, பாமினி சுல்தான்களுக்கு இடையே நடைபெறும் போர்களில் ஏதாவது ஒரு பக்கம் இருந்து போரிடுவது போன்ற நடவடிக்கைகளில் அவர் ஈடுபட்டு வந்தார்.
ஒரு கட்டத்தில் ராமராயரின் தொடர்ந்த தலையீட்டினால் எரிச்சலடைந்த பாமினி சுல்தான்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து படைதிரட்டினர். தலைகோட்டைக்கு அருகில் ராக்ஷசி-தங்கடி ஆகிய கிராமங்களுக்கு இடையில் இந்தப் படைகள் ஒன்று கூடி விஜயநகரின் மீது தாக்குதல் ஒன்றை நடத்தத் திட்டமிட்டன. அவர்களை எதிர்க்க தங்கள் படைகளை அனுப்புமாறு ராமராயர் எல்லா அமரநாயக்கர்களுக்கும் ஓலை அனுப்பினார். மதுரைக்கும் அப்படி ஒரு ஓலை வந்து சேர்ந்தது. பேரரசுக்கு வந்த ஆபத்தைக் கவனித்த கிருஷ்ணப்பர், மிகுந்த அனுபவசாலியான அரியநாதரின் தலைமையில் ஒரு பெரும் படையை விஜயநகருக்கு அனுப்பி வைத்தார்.
முதலில் வெற்றி முகம் கண்ட விஜயநகரப் படை, ராமராயரின் தவறான யூகங்களால் பின்னடைவைச் சந்தித்தது. அத்தோடு விஜயநகரின் பக்கம் இருந்த இரு இஸ்லாமியத் தளபதிகள் தங்கள் படைகளோடு பாமினி சுல்தான்களிடம் சேர்ந்து கொண்டனர். உச்சக்கட்டப் போரில் எதிரிகளிடம் தன்னந்தனியாக மாட்டிக்கொண்ட ராமராயர் படுகொலை செய்யப்பட்டார். இதனால் விஜயநகரப் படைகள் சிதறி ஓடின. அவர்களைத் துரத்தின் வந்த பாமினி சுல்தான்களின் படை, விஜயநகரத்தை (தற்போதைய ஹம்பி) அடியோடு அழித்தன. ராமராயரின் சகோதரரும் படைத்தலைவருமான திருமலை ராயர், அப்போது பெயரளவுக்கு அரசராக இருந்த சதாசிவ ராயரோடு சேர்ந்து கிடைத்த பொருட்களை எடுத்துக்கொண்டு பெனு கொண்டாவுக்குத் தப்பி ஓடினார். அதை விஜயநகர அரசின் தலைநகராக அறிவித்து விட்டு சதாசிவ ராயரையும் பதவியிலிருந்து அகற்றி விட்டு அங்கிருந்து ஆட்சி செய்யலானார்.
போரில் தோல்வியுற்று கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அரியநாதர் மதுரை திரும்பினார். அதன்பின் அரசுக்கு ஆலோசனை செய்யும் பதவியில் அமர்ந்த அவர் கிருஷ்ணப்பரின் ஆட்சிக்கு உறுதுணையாக இருந்தார். ம்ருத்யுஞ்சய ஓலைச்சுவடிகள் அவர் தளவாய் / பிரதானி பொறுப்பில் தொடர்ந்தார் என்று தெரிவிக்கின்றன. அதைத் தவிர கோவில் திருப்பணிகளில் தன் நேரத்தைச் செலவிடலானார் அரியநாதர். தன்னுடைய உறவினர்கள் பலரை தொண்டை மண்டலத்திலிருந்து சோழவந்தான் பகுதிக்குக் கொண்டுவந்து அங்குள்ள பல கிராமங்களில் குடியேற்றினார். அங்கே கோவில் ஒன்றைக் கட்டி அவர்கள் வாழ பல வசதிகளையும் அரியநாதர் செய்துகொடுத்தார். அவர்களுடைய சந்ததிகள் இன்னும் அங்கே வசிக்கின்றனர்.
(தொடரும்)