Skip to content
Home » மதுரை நாயக்கர்கள் #8 – கிருஷ்ணப்ப நாயக்கர் – கண்டிப் படையெடுப்பு

மதுரை நாயக்கர்கள் #8 – கிருஷ்ணப்ப நாயக்கர் – கண்டிப் படையெடுப்பு

தலைக்கோட்டைப் போரில் விஜயநகரப் பேரரசுக்கு உதவியாக அரியநாதரோடு ஒரு படையை கிருஷ்ணப்ப நாயக்கர் அனுப்பி வைத்த சமயத்தில் உள்நாட்டில் சில பிரச்சனைகள் எழுந்தன. திருவடி தேசத்தைத் சேர்ந்த அரசன் மீண்டும் தென்காசிப் பாண்டியரோடு போரிட்டு சில பகுதிகளைக் கைப்பற்றிக் கொண்டான். அதன் காரணமாக கிருஷ்ணப்ப நாயக்கர், தென்காசிப் பாண்டியருக்கு உதவியாக போரில் இறங்கவேண்டியதாயிற்று. சதாசிவ ராயரின் 1567ம் ஆண்டு கிருஷ்ணாபுரம் செப்பேடுகள், “காஞ்சிபுரத்தின் தலைவரும் தென்பெருங்கடலுக்குத் தலைவருமான கிருஷ்ணப்பர் தன் வீரத்தால் திருவடி ராஜ்ஜியத்தின் அரசனைத் தோற்கடித்து அந்த அரசின் ஏழு பகுதிகளையும் கைப்பற்றிக் கொண்டார்” என்று குறிப்பிட்டு கிருஷ்ணப்பரை பாண்டியகுலஸ்தாபனாச்சார்யா என்று புகழ்கிறது.

கிருஷ்ணாபுரம் செப்பேடுகள்*
கிருஷ்ணாபுரம் செப்பேடுகள் (Epigraphia Indica Vol IX)

இதிலிருந்து தென்காசிப் பாண்டியருக்குச் சொந்தமான பகுதிகளை மீட்டெடுத்தவர் கிருஷ்ணப்பர் என்று தெரிந்துகொள்ளலாம். சில ஆய்வாளர்கள், இது அச்சுதராயரின் காலத்தில் விஸ்வநாதர் நடத்திய போரில் கிருஷ்ணப்பர் பங்கேற்றதைக் குறிப்பிடுகிறது என்று கூறுகின்றனர். ஆனால் 1530ம் ஆண்டில், விஸ்வநாத நாயக்கரே இளையவராக இருக்கும்போது நடந்த போரில் கிருஷ்ணப்பரின் பங்கு அதிகமாக இருந்தது என்பதும் அதன் காரணமாக அவருக்குப் பாண்டிய குல ஸ்தாபனாச்சாரியார் என்ற பெயரும் வந்தது என்பதும் சரியாகப் பொருந்தவில்லை. இது கிருஷ்ணப்பரின் ஆட்சிக்காலத்தில் நடந்த போராகவே இருக்கவேண்டும்.

இந்தச் செப்பேடு கிருஷ்ணப்ப நாயக்கரை தென்பெருங்கடலுக்குத் தலைவர் என்று அழைப்பதுவும் குறிப்பிடத்தக்க ஒன்று. இரண்டாம் தேவராயர் இலங்கை மீது படையெடுத்து அங்குள்ள அரசனை வென்று விஜயநகர அரசுக்குக் கப்பம் கட்ட வைத்ததிலிருந்து விஜயநகர அரசர்கள் ‘தென்பெருங்கடலுக்குத் தலைவர்’ என்று தங்களை அழைத்துக்கொண்டனர். அது அவர்களின் பிரதிநிதிகளாக இருந்த நாயக்கர்கள் காலத்திலும் தொடர்ந்து, விஸ்வநாதருக்கும் கிருஷ்னப்பருக்கும் அந்தப் பட்டம் கிடைத்தது. ஆனால் அதற்கும் ஒரு ஆபத்து கிருஷ்ணப்பர் காலத்தில் வந்தது. கண்டியை ஆட்சி செய்த அரசன் கிருஷ்ணப்பரால் கொல்லப்பட்ட தும்பிச்சி நாயக்கருக்கு நண்பன். தன் நண்பனைக் கொலை செய்ததால், கிருஷ்ணப்பரை அவன் இழிவாகப் பேசினான் என்று கூறும் ‘சிங்களத் த்வீப கதா’ என்ற நூல், அதனால் வெகுண்ட கிருஷ்ணப்ப நாயக்கர் கண்டியின் மீது படையெடுத்ததாகக் கூறுகிறது. அந்தப் படையெப்பின் விவரங்களை விரிவாக அளித்திருக்கிறது இந்தப் புத்தகம்.

கண்டி மீது படையெடுக்க முடிவுசெய்த கிருஷ்ணப்ப நாயக்கர், படையோடு வருமாறு 52 பாளையக்காரர்களுக்கும் ஓலை அனுப்பினார். அவர்கள் மதுரைக்கு தங்கள் படைகளோடு வந்தபின்னர், தன்னுடைய படைத்தலைவரான சின்ன கேசவப்பரோடு புறப்பட்ட கிருஷ்ணப்ப நாயக்கர் தேவிப்பட்டணம் சென்று அங்கு நவபாஷாணச் சிலைகளுக்கு வழிபாடுகள் செய்தார். அங்கிருந்து படகுகளில் தலை மன்னாரை அடைந்த நாயக்கர்களின் படை, அவதூறு செய்ததற்காக மன்னிப்பையும் கட்ட வேண்டிய கப்பத் தொகையையும் கோரி கண்டி அரசுக்கு ஓலை அனுப்பியது.

ஆனால் அதை நிராகரித்த கண்டி அரசன், நான்கு மந்திரிகள் மற்றும் எட்டு தேசநாயகர்களின் தலைமையில் 40000 பேர் கொண்ட படையை அனுப்பினான். இரு தரப்புப் படைகளும் புத்தளம் என்ற இடத்தில் மோதின. சின்ன கேசவப்பரின் தலைமையிலான 20000 வீரர்கள் கொண்ட படை அளவில் பெரிய கண்டிப் படையைச் சிதறடித்தது. இரண்டு மந்திரிகளும் ஐந்து படைத்தலைவர்களும் நாயக்கர்களின் படையால் சிறைப்பிடிக்கப்பட்டனர். அவர்களை கிருஷ்ணப்ப நாயக்கர் மரியாதையுடன் நடத்தி, ஏற்கனவே விதிக்கப்பட்ட நிபந்தனைகளுக்கு சம்மதித்தால் அவர்களை விடுவிப்பதாகவும் போரை நிறுத்திவிடுவதாகவும் தூது அனுப்பினார்.

கண்டி அரசனின் அமைச்சர்களும் அரசனிடம் போரை நிறுத்துமாறு அறிவுரை கூறினார். ஆனால் அதை ஏற்க மறுத்த கண்டி அரசன், 60000 பேர் கொண்ட படையைத் திரட்டியது மட்டுமல்லாமல், அப்போது அங்கே வணிகம் செய்வதற்கு வந்திருந்த போர்ச்சுக்கீசியரிடமும் உதவி கோரினான். அவர்களும் 10,000 பேர் கொண்ட படையை உதவிக்கு அனுப்பி வைத்தனர். இந்த வலிமையான படையோடு போர்க்களத்திற்கு வந்த கண்டி மன்னன், நாயக்கர்களின் படையோடு மோதினான்.

இந்தப் போரில் 8000 போர்ச்சுகீசியர்களும் ஆயிரக்கணக்கான இலங்கை வீரர்களும் கொல்லப்பட்டனர். அத்தோடு கண்டி மன்னனும் போரில் இறந்துபட்டான். அவனுடைய உடலை மரியாதைகளோடு அடக்கம் செய்த கிருஷ்ணப்ப நாயக்கர், மன்னனின் குடும்பத்தாரை இலங்கையின் புராதனத் தலைநகருக்கு அனுப்பி வைத்தான். தன்னுடைய மைத்துனனான விஜய கோபால நாயக்கரை அங்கே பிரதிநிதியாக நியமித்துவிட்டு, மூன்று நாட்கள் அங்கேயே தங்கி நிலைமையைச் சீரமைத்துவிட்டு மதுரை திரும்பினார் கிருஷ்ணப்ப நாயக்கர்.

சிங்களத் த்வீப கதா சொல்லும் இந்தச் செய்திகளைப் பற்றி ஆய்வாளர்கள் வேறுபடுகின்றனர். வெறும் அவதூறுக்காக இத்தனை பெரிய போர் நடக்குமா என்று சிலர் எழுப்பும் சந்தேகம் நியாமான ஒன்று. என்ன காரணத்தாலோ கப்பம் கட்டுவதை இலங்கை அரசன் நிறுத்தியிருக்கவேண்டும். அதன் காரணமாகவே இந்தப் போர் நடந்திருக்கவேண்டும். அது மட்டுமின்றி இந்தப் போரே நடந்ததா என்று கூட சிலர் கேள்வி எழுப்புகின்றனர். டெய்லர் என்ற ஆய்வாளர் இது ஏதோ கற்பனைக் கதை போன்று தோன்றுகிறது என்கிறார். ஆனால் மதுரையின் வரலாற்றைத் தெளிவாகப் பதிவுசெய்த நெல்சன் இந்தப் போர் நடந்தது ஏற்றுக்கொள்ளக் கூடியதுதான் என்று கூறுகிறார். மிகத் தெளிவாக நிகழ்வுகளை சிங்களத் த்வீப கதா பதிவு செய்திருப்பதால், அது கற்பனையாக இருக்கச் சாத்தியமில்லை என்கிறார் அவர்.

கிருஷ்ணப்பருடைய வரலாற்றில் இந்தப் படையெடுப்பு ஒரு முக்கியமான நிகழ்வு என்பதில் சந்தேகமே இல்லை. மிகக் குறைவான அளவு படையை வைத்துக்கொண்டு நாடு விட்டு நாடு போய் அங்கே உள்ள வலிமையான அரசனைத் தோற்கடிப்பது என்பது சாதாரண விஷயமல்ல. கிருஷ்ணப்பரின் வீரத்திற்கு இந்தப் படையெடுப்பு ஒரு சிறந்த உதாரணம்.

கண்டிப் படையெடுப்புக்குப் பிறகு மதுரை திரும்பிய கிருஷ்ணப்ப நாயக்கரின் ஆட்சிக்காலம் அதன்பின் அமைதியாகவே கழிந்தது. அரியநாதரும் திரும்பி வந்துவிடவே, கோவில் திருப்பணிகளில் இருவரும் கவனம் செலுத்தினர்.

பாளையங்கோட்டைக்கு அருகில் கிருஷ்ணாபுரம் என்ற ஊரையும் திருநெல்வேலிக்கு மேற்கே கடையம் கிருஷ்ணாபுரம் என்ற மற்றொரு ஊரையும் தன்னுடைய பெயரால் கிருஷ்ணப்பர் உருவாக்கினார். இதில் பாளையங்கோட்டைக்கு அருகில் உள்ள கிருஷ்ணாபுரத்தில் வெங்கடாசலபதிக்கு ஒரு கோவிலைக் கிருஷ்ணப்ப நாயக்கர் கட்டினார். நாயக்கர் கட்டடக் கலைக்கு எடுத்துக்காட்டாக உள்ள இந்தக் கோவில் சிற்பங்களுக்கு மிகவும் புகழ்பெற்றதாகும். கோவிலுக்காக கிருஷ்ணப்ப நாயக்கர் சில கிராமங்களைத் தானமாக அளித்தார். ஆனால் அப்போது விஜயநகர அரசராக சதாசிவ ராயர் இருந்ததால், அவருடைய அனுமதி பெற்றே இந்தத் தானங்கள் வழங்கப்பட்டன. இதை ஆவணப்படுத்தியதுதான் கிருஷ்ணாபுரம் செப்பேடுகள்.

ஐந்து தகடுகளைக் கொண்ட இந்தச் செப்பேடுகள் நந்திநகரி எழுத்துகளில் சமஸ்கிருத மொழியில் பொறிக்கப்பட்டதாகும். விஜயநகர அரசர்களின் வம்சாவளியோடு மதுரை நாயக்கர்களின் வம்சாவளியும் இதில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. கிருஷ்ணபூபதி என்று அழைக்கப்பட்ட கிருஷ்ணப்ப நாயக்கரின் கோரிக்கையை ஏற்று சில கிராமங்களை திருவேங்கடாசலபதி கோவிலுக்கு நிவந்தமாக அளிக்க சதாசிவராயர் ஒப்புதல் அளித்ததை செப்பேடு ஆவணப்படுத்துகிறது. ஶ்ரீரங்கத்திற்கு ரங்கநாதரை தரிசனம் செய்ய வந்த சதாசிவ ராயர், அங்கேயே இந்த தானத்திற்கு ஒப்புதல் அளித்திருக்கிறார்.

கோவிலுக்கு புத்தநேரி, அரியகுளம், கொடிக்குளம், குத்துக்கல், முத்தூர், இடம்பாட்டு, சிரியாலங்குளம் போன்ற தாமிரபரணிக் கரையோரம் உள்ள அசில கிராமங்கள் நன்கொடையாக அளிக்கப்பட்டிருக்கின்றன. சர்வமான்யமாக விடப்பட்ட நிலங்களின் எல்லைகளும் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. கோவிலைப் பற்றிய விவரங்களாக, கிருஷ்ணப்ப நாயக்கர் ஐந்தடுக்கு ராஜகோபுரத்தைக் கட்டியதையும் பெரிய ரங்க மண்டபம் ஒன்றை அழகான தூண்களையும் சிற்பங்களையும் கொண்டதாக அமைத்ததையும் மந்தார மலையைப் போல ரதம் ஒன்றை உருவாக்கி அது ஓடுவதற்காக அகலமான வீதிகளை ஏற்படுத்தியதையும் இந்தச் செப்பேடுகள் குறிப்பிடுகின்றன. கன்னட மொழியில் விஜயநகர அரசர்களின் கையொப்பமான ‘ஶ்ரீ விருபாக்ஷ’ என்ற வார்த்தைகளுடன் செப்பேடு நிறைவடைகிறது.

திருவேங்கடநாதனுக்கு இப்படி அருமையான கோவிலைக் கட்டியதோடு நின்றுவிடாமல், அதே ஊரில் ஒரு சிவன் கோவிலையும் கட்டினார் கிருஷ்ணப்ப நாயக்கர். அந்தக் கோவிலுக்கு தெப்பக்குளம் ஒன்றையும் அமைத்தார். அதோடு அதைச் சுற்றி அக்ரஹாரங்களையும் ஏற்படுத்தியதாகக் கல்வெட்டு ஒன்று தெரிவிக்கிறது.

இவற்றோடு, மதுரைக் கோவிலில் தன் தந்தை செய்த திருப்பணிகளைத் தொடர்ந்தார் கிருஷ்ணப்ப நாயக்கர். மீனாட்சி அம்மன் கோவிலில் அவர் செய்த திருப்பணிகளைக் கூறும் திருப்பணி மாலை

முத்தமிழ்க் கூடற் பதிசொக்க நாதர்க்கு முத்தளக்குஞ்
சித்திரக் கோபுரம் செங்கற் படையைச் சிறக்கச்செய்தான்
மத்தகப் போர்விச்வ நாதன் குமாரன் மனுமுறைமைக்
கொத்துறப் பார்புரக் குங்க்ருஷ்ண பூப குணக்கொண்டலே

விதிக்கும் முகுந்தற்கும் எட்டாத சொக்கர்க்கு மேதினியோர்
துதிக்குங் கொடிக்கம்ப மண்டபம் ஒன்று துலங்கச்செய்தான்
கதிக்கும் பரமன்னர் பொன்னார் முடிகளைக் காலிவெற்ற
மிதிக்குங் கடாசலத் தான்கச்சி வாழ்க்ருஷ்ண வீரப்பனே

ஐயர்சிங் காரச் செழுநீர்ப் புனல்வெள்ளி அம்பலமும்
செய்ய வடக்குத் திருக்கோ புரமும்செவ் வீச்சுரமும்
துய்ய திருமடைப் பள்ளியும் அன்புடன் தோன்றச்செய்தான்
தையலர் மோகன வேள்க்ருஷ்ண வீர சயதுங்கனே.

வாரிப் புவிபுகழ் ஆயிரக் கால்மணி மண்டபமும்
ஏருற்ற மூர்த்தியம் மன்மண் டபமும் இரண்டாம்பிரா
காரத் திருச்சுற்று மண்டப மும்கொடிக் கம்பத்துமுன்
வீரப்ப மண்டப மும்செய் தனன்க்ருஷ்ண வீரப்பனே.

அல்லொத்த பூங்குழல் அங்கயற் கண்ணம்மை ஆலயத்துள்
மல்லப்பன் நாட்டுபொற் கம்பம் பழகிய வாறுகண்டே
நல்லிட்ட மாகப்பொன் பூசுவித் தான்அண்ண லாருக்கொரு
வில்லிட்டுப் போரை விலக்கிட் டருள்க்ருஷ்ண வீரப்பனே

சொக்கநாதப் பெருமானுக்கு சித்திரக் கோபுரத்தைக் கட்டினார், கொடிக்கம்ப மண்டபத்தை அமைத்தார், கால் மாறி ஆடிய நடராஜர் உள்ள வெள்ளியம்பலத்தைப் புனர்நிர்மாணம் செய்தார், வடக்குக் கோபுரத்தைக் கட்டினார், திருமடைப்பள்ளியையும் மூர்த்தி மண்டபத்தையும் இரண்டாம் பிரகாரத் திருச்சுற்று மண்டபத்தையும் கொடிக்கம்பத்திற்கு அருகே வீரப்ப மண்டபத்தையும் கட்டினார். மீனாட்சியம்மனுக்குப் பொன்னால் கவசம் செய்தார், அம்மன் ஆலய மண்டபங்களுக்குப் பொன்னால் தகடுகள் வேய்ந்தார் என்று மதுரைக் கோவிலில் கிருஷ்ணப்பர் செய்த பல திருப்பணிகளை திருப்பணி மாலை பட்டியலிடுகிறது. இதைத் தவிர அறுபத்து மூவர் மண்டபத்தையும் கிருஷ்ணப்ப நாயக்கரே கட்டியதாக கோவில் ஆவணங்கள் தெரிவிக்கின்றன.

தன் தந்தையைப் போலவே வீரமும் நிதான குணமும் நிறைந்தவராக கிருஷ்ணப்பர் இருந்தார். அவரது ஆட்சியின் ஆரம்பக் காலத்தில் சிறு சலசலப்புகள் தோன்றினாலும் அவற்றை விரைவாக அடக்கி பெரும் பிரச்சனைகள் தோன்றாதவாறு பார்த்துக்கொண்டார். விஜயநகரப் பேரரசு அடியோடு நிலைகுலைந்து பெனுகொண்டாவில் சிறிய அரசாகத் தொடர்ந்த போதிலும் மத்திய அரசுடன் நட்பு பாராட்டி அவர்களுக்கு விசுவாசமாகவே இருந்தார் கிருஷ்ணப்ப நாயக்கர். பகைவர்களுக்கும் அன்பு காட்டி மிகச் சிறந்த பண்புள்ளவராக இருந்தவர் கிருஷ்ணப்பர் என்பதை பல்வேறு சாசனங்கள் எடுத்துக் கூறுகின்றன.

மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி பெரிது என்பதற்கேற்ப, எட்டே ஆண்டுகள் ஆட்சி செய்து செயற்கரிய பல செயல்களை நிறைவேற்றிய கிருஷ்ணப்ப நாயக்கர் 1572ம் ஆண்டு டிசம்பர் 3ம் தேதி (கார்த்திகை 19ம் தேதி) இவ்வுலகிலிருந்து மறைந்தார். அவருக்குப் பிறகு அவருடைய மகனான வீரப்ப நாயக்கர் ஆட்சிக்கு வந்தார்.

(தொடரும்)

பகிர:
எஸ். கிருஷ்ணன்

எஸ். கிருஷ்ணன்

மொழிபெயர்ப்பாளர், எழுத்தாளர், வரலாற்று ஆர்வலர். தமிழர் நாகரிகம், மரபு, கல்வெட்டு ஆராய்ச்சி போன்ற துறைகளில் தொடர்ந்து எழுதி வருபவர். 'அர்த்தசாஸ்திரம்', 'கிழக்கிந்தியக் கம்பெனி', 'பழந்தமிழ் வணிகர்கள்' போன்ற நூல்களை மொழிபெயர்த்துள்ளார். சமீபத்திய நூல், 'சேரர் சோழர் பாண்டியர்: மூவேந்தர் வரலாறு'. தொடர்புக்கு : kirishts@gmail.comView Author posts

1 thought on “மதுரை நாயக்கர்கள் #8 – கிருஷ்ணப்ப நாயக்கர் – கண்டிப் படையெடுப்பு”

  1. இந்த பகுதியில் தென்பெருங்கடலுக்குத் தலைவர் ,பாண்டிய குல ஸ்தாபனாச்சாரியார் போன்ற விஷயங்கள் நான் புதிதாக படிக்கிறேன் . சமீபத்தில் நான் படித்த மன்மத பாண்டியன் – ஸ்ரீவேணுகோபாலன் அவர்கள் எழுதிய நாவல் தென்காசி பாண்டியர்கள் – திருவடி தேசம் பற்றியது தான் . தாங்கள் முயற்சி வெகுஜன மக்களை சென்றடைய வேண்டும் .

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *