மகாராஜா ஜகத்ஜித் சிங்
இந்தியா பிரிட்டனின் ஆளுகைக்கு உட்பட்டிருந்த காலத்தில் கபுர்தலா எனும் சமஸ்தானத்தின் இறுதி மகாராஜாவாக இருந்தவர் ஜகத்ஜித் சிங் சாகிப் பகதூர் (1872-1949). 16 அக்டோபர் 1877 அன்று ஐந்து வயது குழந்தையாக அரியணை ஏறினார். முழுமையாக ஆட்சி செய்யும் அதிகாரம் நவம்பர் 1890இல் வாய்த்தது. இறக்கும்வரை பதவியில் தொடர்ந்தார்.
மாளிகைகள் கட்டுவது, அழகிய தோட்டங்களை உருவாக்குவது என்று பிற மன்னர்களிடம் தென்பட்ட ஆர்வங்களை இவரிடமும் காணமுடிகிறது. ஆனால் மற்ற சமஸ்தானத்து மன்னர்களிடமிருந்து ஜகத்ஜித் சிங்கைத் திட்டவட்டமாக வேறுபடுத்திக் காட்டும் ஓர் அம்சம் அவருடைய தீராத பயணக் காதல். ஆறு மாதம் ஆட்சிக்கு, ஆறு மாதம் ஊர் சுற்றுவதற்கு என்று தன் நேரத்தைப் பிரித்து வைத்துக்கொள்ளும் அளவுக்கு தீவிரம் பெற்றிருந்தது அவருடைய பயண ஆர்வம். முதல் உலகப் போர் நடைபெற்றுக்கொண்டிருந்த காலத்தில்கூட அவருடைய பயணம் தடைபடவில்லை. மொத்தம் மூன்று முறை உலகை வலம் வந்திருக்கிறார்.
ஜகத்ஜித் சிங்குக்குப் பிடித்த இடமாக ஐரோப்பா இருந்திருக்கிறது. ஐரோப்பா கடந்தும் நிறைய இடங்களைப் பார்த்திருக்கிறார். ‘நான்கு கண்டங்களைச் சுற்றி வந்திருக்கிறேன்’ என்று பெருமிதத்தோடும் மகிழ்ச்சியோடும் குறிப்பிட்டிருக்கிறார். ஆங்கிலம், பிரெஞ்சு, பாரசீகம், இத்தாலி, உருது, சமஸ்கிருதம் என்று தொடங்கி பல மொழிகள் கற்றுக்கொண்டவர். இவற்றுள் அவரை அதிகம் ஈர்த்த மொழி என்றால் அது பிரெஞ்சு. தனது நாட்குறிப்புகளை அம்மொழியில்தான் எழுதி வைத்திருக்கிறார். பிரெஞ்சு மக்களின் வாழ்க்கை முறை, பண்பாடு, கலை போன்றவற்றிலும் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார்.
சுயமாகத் தேடியலைந்தவர், சுயமாகக் கற்றுக்கொண்டவர். நவீன கபுர்தலாவை (பஞ்சாப்) உருவாக்கியவர் என்று ஜகத்ஜித் சிங் இன்று வரலாற்றில் நினைவுரப்படுகிறார். வண்ணமயமான அனுபவங்களை மட்டுமல்ல, பரந்துபட்ட அறிவையும் தன் பயணங்களின்மூலம் திரட்டிக்கொண்டவர். சர்வதேச அமைப்புகளில் பொறுப்புகள் வகித்திருக்கிறார்.
ஒரு மன்னராக, ஒரு சுற்றுலாப் பயணியாக, ஒரு எழுத்தாளராக, (தன்னை அவ்வாறு கருதவேண்டாம் என்று அவர் அடக்கமாகக் கேட்டுக்கொண்டிருக்கிறார்) ஜகத்ஜித் சிங்கை நெருங்கிச் சென்று அறிந்துகொள்ள நமக்குக் கிடைத்திருக்கும் ஒரு முக்கியமான பதிவு அவருடைய ‘My Travels in China, Japan and Java, 1903’ எனும் பயண நூலாகும். லண்டனிலுள்ள ஹட்சின்ஸன் அண்ட் கோ 1905ஆம் ஆண்டு இந்நூலை வெளியிட்டது. அதன் தமிழாக்கம்தான் இது.
ஆங்கிலப் பதிப்பில் மொத்தம் ஐந்து அத்தியாயங்கள் இடம்பெற்றிருக்கின்றன. ஒவ்வொன்றிலும் பல உப தலைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதே முறைதான் இங்கும் பின்பற்றப்படுகிறது. மற்றபடி, தொடராக வெளிவருவதால் பொருத்தம் கருதி, ஒவ்வொரு அத்தியாயத்துக்கும் ஒரு புதிய தலைப்பு சூட்டப்படும்.
***
முன்னுரை
தூரக் கிழக்கு நாடுகளில் நான் மேற்கொண்ட சுருக்கமான சுற்றுப்பயணம் குறித்தது இந்நூல். ஒரு பதிவாக இருக்கட்டும் என்றும் நண்பர்களுக்குக் கொடுக்கலாம் என்றும் இதை எழுதினேன். இலக்கிய நயம் எதையும் எதிர்பார்க்கவேண்டாம். தகவல்களையும், சந்தித்த மனிதர்கள், பார்த்த இடங்கள் குறித்த எனது தனிப்பட்ட கருத்துகளையும் பதிவு செய்ய மட்டுமே இது உருவாக்கப்பட்டது. என்னை ஒரு எழுத்தாளனாகப் பார்க்கவேண்டும் என்று நான் கேட்கவில்லை.
ரஷ்யாவுக்கும் ஜப்பானுக்கும் இடையில் இப்போது நடக்கும் (1903) யுத்தத்தின் போக்கைப் பின்பற்றுபவர்களுக்கு இந்நூல் ஆர்வமூட்டலாம் என்று நம்புகிறேன். ஏனெனில் ஜப்பான் தேசம் குறித்த சில விஷயங்களை இந்நூல் ஓரளவுக்கு விவரிக்கிறது; மஞ்சூரியாவின் ஆர்வமூட்டும் சில பிரதேசங்கள் மற்றும் வேறு பிரதேசங்கள் பற்றியும் சிறு குறிப்பொன்றை இது கொண்டுள்ளது. யுத்தத்தின் காரணமாகப் பொதுமக்களின் அக்கறை அவற்றின்மீது குவிந்திருக்கிறது. போர்ச் சூழலையொட்டி அமைந்த எனது சுற்றுப் பயணங்கள் அந்தப் பயணத்தை சற்று அசந்தர்ப்பமானதாக ஆக்கியிருந்தது. அதோடு அந்தத் தேசத்து மக்கள் பற்றிய ஆய்வுகளை மிகுந்த சுவாரசியத்துக்கு உரியதாகவும் ஆக்கியிருந்தது.
ஒரு சுற்றுலா பயணியின் பார்வையில், ஜப்பான் உலகிலேயே மிகவும் சுவாரசியமான தேசங்களில் ஒன்று. மகிழ்ச்சியளிக்கும் பலதிறப்பட்ட இயற்கைக்காட்சிகள் நிறைந்ததாக அந்தத் தேசம் இருக்கிறது. அந்த மக்கள் வசீகரமான தோற்றம் கொண்டவர்கள். வேறெங்கும் இதுபோன்ற மனிதர்களைச் சந்திக்க முடியாது.
சீனாவின் சில பகுதிகளுக்கும் ஜாவாவுக்கும் சென்று வந்தேன்; அந்தத் தேசத்து மனிதர்களைப் புகழ்ந்து சொல்ல ஒன்றுமில்லை. உலகில் நடந்து கொண்டிருக்கும் நிகழ்வுகளுக்குச் சம்பந்தமில்லாதவர்கள் போலவே சீனர்கள் தோன்றுகிறார்கள். தேசியம் சார்ந்த சிறந்த கொள்கைகள் ஏதும் அவர்களுக்கு இருப்பதாக தெரியவில்லை; தனிப்பட்ட முறையில் அவர்களிடம் வெளிப்படையாகத் தெரியும் சுயநலத்தைக் கண்டு அதிகம் அதிர்ந்துபோனேன். அவர்களிடம் நாட்டுப்பற்றோ, சமூக உணர்வோ துளியும் இல்லை. ஜாவானியர்கள், முற்றிலும் ஆர்வமோ உற்சாகமோ அற்றவர்கள். அவர்களிடம் சுறுசுறுப்பைப் பார்க்கமுடியாது. எனினும், இரண்டு தேசங்களுமே சுவாரசியமானவை, சென்று பார்ப்பதற்குத் தகுதியானவையே.
இந்தப் பயணத்தை ஒட்டி எனக்கிருந்த ஒரே வருத்தம், சுற்றிப்பார்க்க எனக்குக் குறைவான நாட்களே இருந்தன என்பதுதான். நான் சந்திக்க நேர்ந்த பல்வேறு மனிதர்களின் பழக்க வழக்கங்களையும் சிந்தனைகளையும் அவதானிக்கக் குறைவான நேரமே ஒதுக்கவேண்டிய கட்டாயம்; நாட்கள் போதவில்லை. இதற்காகவே ஓர் ஆண்டு முழுவதையும் மிக எளிதாகச் செலவிடலாம்.
எனது பயணத்தின்போது அனைவரும் என்னிடம் காட்டிய மாறாத கனிவையும் விருந்தோம்பலையும் உபசரிப்பையும் அங்கீகரித்து இங்கு நான் பதிவு செய்கிறேன். நான் சென்று வந்த பல இடங்கள் குறித்த தகவல்களையும் விவரங்களையும் தேடிச் சேகரிக்க எனக்கு உதவி செய்த அனைவருக்கும் நன்றி.
ஜகத்ஜித் சிங்
கபுர்தலா, டிசம்பர் 1, 1904
***
தூரக் கிழக்கு நாடுகளுக்கு ஒரு பயணம் – 1903
கொழும்பு
முஸோரியிலிருந்து அக்டோபர் 10ஆம் தேதி புறப்பட்டோம். இறுதிக்கட்ட ஏற்பாடுகள் சிலவற்றைச் செய்ய வேண்டியிருந்தன. அதனால் கபுர்தலாவில் மூன்று நாட்கள் தங்கினோம். 11ஆம் தேதி பம்பாயை அடைந்தோம். ‘ஓஷனியன்’ என்ற மெஸாகரிஸ் மேரிடைம் நீராவிக் கப்பலில் 18ஆம் தேதி அங்கிருந்து புறப்பட்டோம்.
அதன்பின் கொழும்புவுக்கு நான்கு நாட்கள் பயணம். அது நடுத்தரமான கப்பல்தான்; ஆனால், கப்பல் கேப்டனும் அதிகாரிகளும் மிக்க மரியாதையுடன் நடந்துகொண்டனர். உதவிகரமாக இருந்தனர். அதனால் பயணம் வசதியாக இருந்தது. ஏறத்தாழ பயணத்தில் குறிப்பிடும்படியாக அசம்பாவிதம் ஏதும் நடக்கவில்லை. ஆனால், முதல் இரண்டு நாட்கள் அலை வேகம் அதிகமாக இருந்ததுபோல் தோன்றியது. அதனால் என் உணர்வுகள் வழக்கத்துக்கு மாறாக உற்சாகக் குறைவுடன் இருந்தன. படுக்கைபோன்ற சாய்வு நாற்காலியில் அமைதியாக, ஓய்வாகப் பயணித்தது எனக்குக் கடல் நோய் ஏதும் வராமல் தடுத்தது.
கொழும்புவை அடைந்தபோது கடுங்காற்று வீசியது; மழையும் அதிகமாகப் பெய்தது. அதனால் விரைந்து கரையை அடைந்து, பாதுகாப்பான இடத்தில் தங்கியது மகிழ்ச்சியளித்தது. தாற்காலிகமாக ‘காலி ஃபேஸ்’ ஹோட்டலில் தங்கினோம். எனக்கு ஏற்கெனவே பரிச்சயமான தங்குமிடம். சென்ற மார்ச்சில் கொழும்பு வந்தபோது இங்கு தங்கியிருந்தேன். மிகவும் ஆடம்பரமான இடம். அதன் இரு புறங்களிலிருந்தும் கடலின் அழகிய காட்சியைக் காணமுடியும். பெய்த மழை வானிலையை மிகவும் இனிமை நிறைந்ததாக, குளிர்ச்சியானதாக ஆக்கியது. ‘கிழக்கின் மரகதத் தீவு’ என்று அழைக்கப்படும் இத்தீவில் நாங்கள் மேற்கொண்ட சிற்றுலாக்களும் வழக்கத்தைக் காட்டிலும் இன்பமளித்தன.
23ஆம் தேதி ஏர்னஸ்ட் சைமன் என்ற கப்பலில் சிங்கப்பூர் புறப்பட்டோம். இந்தக் கப்பல் 6000 டன் எடை கொண்டது. பம்பாயிலிருந்து நாங்கள் பயணித்த கப்பலைக் காட்டிலும் மிகவும் பெரியது. மேலான வசதிகள் கொண்டது. அனைத்து வகுப்புப் பயணிகளும் மன நிறைவுடன் பயணிக்கும் வசதிகள் இந்தக் கப்பலில் இருந்தன. எனக்கு முதன்மை மேல் தளத்தில் டீலக்ஸ் கேபின் ஒன்று ஒதுக்கப்பட்டிருந்தது. இத்தகைய கேபின்கள் மிக உயர்வான வசதிகள் கொண்டவை, வசதியானவை. இந்த வசதிகள்தான் P&O (The Peninsular and Oriental Steam Navigation Company) கப்பலை நிராகரித்து மெஸாகரிஸ் நிறுவன கப்பலில் பயணிக்க என்னைத் தூண்டின.
P&O கம்பெனி கப்பல்கள் சிறந்தவைதான். ஆனால், அதன் நிர்வாகம் பயணத்தின்போது வழக்கமான சாதாரண வசதிகளைத்தான் தருகிறது. மெஸாகரிஸ் நிறுவனம்போல், கொஞ்சம் அதிகமான வசதிகளை அளிக்க என்றைக்கும் அவர்கள் விரும்பியதில்லை. ஆகவேதான் என் முன்னுரிமை பிரெஞ்சுக் கப்பலாக இருந்தது. இந்தக் கப்பல் எனக்கு புதியதல்ல. 1898ல் ஐரோப்பா சென்றபோது இதில் ஒருமுறை பயணம் செய்துள்ளேன்.
முதல் வகுப்புப் பயணிகளில் பிரெஞ்சு அதிகாரிகள் அதிகம் இருந்தனர். அவர்கள் பிரெஞ்சு இந்தோ-சீனாவுக்கு (தென்கிழக்கு ஆசியாவிலிருந்த பிரெஞ்சுக் காலனிகள்) சென்று கொண்டிருந்தனர். இரண்டாம் வகுப்பில் அதே இடம் நோக்கி நாடகக்குழு ஒன்று சென்றது. இதுபோல் இரண்டு அல்லது மூன்று குழுக்கள் ஒவ்வொரு ஆண்டும் பிரெஞ்சு ஆளுகையில் இருக்கும் கிழக்காசியப் பிரதேசங்களுக்குச் சென்றுவருகின்றன. அவர்கள் வருவதற்கும் திரும்பச் செல்வதற்குமான செலவை அங்கிருக்கும் மக்கள் அளிக்கின்றனர். அரசாங்கமும் போதுமான அளவு மானியம் அளிக்கிறது. இந்தியாவிலும் இதைப்போன்ற ஒரு ஏற்பாடு செய்தால் நன்றாக இருக்கும்; பெயர் பெற்ற நாடகக்குழுக்களின் நிகழ்ச்சிகளைப் பார்க்கும் மகிழ்ச்சி அவ்வப்போது நமக்கும் கிடைக்கும்.
கொழும்பிலிருந்து புறப்பட்டபின், முதல் இரண்டு நாட்கள் அவ்வப்போது வீசும் வேகமான காற்றும் மழையுமாக வானிலை இருந்தது. ஆனால், அந்த நேரத்தில் பயணமும் கடல் வானிலையும் எனக்குப் பழகிவிட்டது. நான் சிறிதும் கவலைப்படவில்லை. பயணத்தின் மீதி நாட்களில் சிறந்த வானிலையே நிலவியது. கடல் சலனமற்ற குளம்போல் இருந்தது.
சில தீவுகளைக் கடந்து 27ஆம் தேதி மலாக்கா ஜலசந்திக்குள் நுழைந்தோம். ஒருபுறம் டச்சு சுமத்ரா, அதற்கு மறுபுறம் பிரிட்டிஷ் மலாயா. 28ஆம் தேதி சிங்கப்பூரை அடைந்தோம். நேரத்தை வீணடிக்காமல் கரையிறங்கிச் சுற்றிப்பார்க்கப் புறப்பட்டோம். மிகவும் சுவாரஸ்யமான இடம் அது. கீழ்த்திசையில் வணிகத்தில் ஈடுபட்டிருக்கும் அனைத்து நீராவிக் கப்பல்களும் இந்தத் துறைமுகத்தை தொட்டுவிட்டுத்தான் செல்கின்றன.
கரையிறங்கியதும், நாங்கள் கண்ட காட்சி வியப்பைத் தந்தது. பல இனத்தவர்களும் இணைந்து வாழும் அசாதாரண கலவை. ஐரோப்பியர்களும், அமெரிக்கர்களும், மலேசியர்களும், ஜாவா தேசத்தவர்களும், தமிழர்களும் நல்ல எண்ணிக்கையில் சீக்கியர்களும் அங்கு வசித்தனர். ஆனால், நிச்சயம் சீனர்கள் பெரும் எண்ணிக்கையில் இருந்தனர். சிங்கப்பூரில் அந்த இனத்தவரின் மக்கள் தொகை ஒரு லட்சத்துக்கும் மேல்.
மக்கள் அனைவரும் மகிழ்ச்சியாக வசித்தனர். இந்தியாவில் மில்லியன் கணக்கிலான மக்களைப் பாதுகாத்துவரும் அந்தக் கொடியின் கீழ், அதன் பாதுகாப்பில் நிறைவுடன் இருந்தனர். ஐரோப்பியர் வாழும் பகுதியில் அற்புத அழகு கொண்ட சில கட்டடங்களைப் பார்த்தோம். மதிய உணவுக்குப் பின், தங்கியிருந்த ராஃபேல்ஸ் ஹோட்டலில் சிறிது ஓய்வெடுத்தோம். அதன்பின் ‘வாட்டர் ஒர்க்ஸ்’ நிலையத்தைப் பார்க்கச் சென்றோம்.
அந்த இடம் நல்ல உயரத்தில் அமைந்திருக்கிறது. அங்கிருந்து பார்க்கையில் நகரமும், துறைமுகமும் மிக அழகாகத் தோன்றுகின்றன. அதன்பின் அரசு இல்லம் (கவர்ன்மெண்ட் ஹவுஸ்) சென்றோம். அழகு மிக்க அந்த மாளிகை ஓர் அழகிய பூங்காவில் அமைந்திருந்தது. நாங்கள் இரண்டு மணிக்கு கப்பலில் இருக்க வேண்டும். அதன்பின் சிறிது நேரத்தில் பயணத்தைத் தொடங்க வேண்டும்.
துறைமுகத்தில் கப்பல்களின் வருகையும் புறப்பாடும் ஆர்வத்தைத் தூண்டியது. உலகின் அனைத்து நாடுகளின் கப்பல்களும் அங்கு நங்கூரமிட்டிருந்தன. நிலவிய வெப்பம் சோர்வைத் தந்தது. அதில் வியப்படைய ஒன்றுமில்லை. ஏனெனில் பூமத்திய ரேகைக்கு ஒரு டிகிரி மேல் இந்நகரம் அமைந்துள்ளது. அத்துடன், வானிலை ஆண்டு முழுவதும் ஏறத்தாழ ஒரே மாதிரியாக இருக்குமாம். வானிலை, ஈரப்பதம் மிகுந்த காணப்படும். அதனால் வெப்பத்தைத் தாங்கிக் கொள்வது மிகவும் கடினமாகிறது.
(தொடரும்)
___________
ஜகத்ஜித் சிங் எழுதிய “My Travels in China, Japan and Java, 1903” நூலின் தமிழாக்கம்

சொந்த ஊர் மாயவரம். தொலைத் தொடர்புத் துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். ‘இந்தியா என்கிற கருத்தாக்கம்’, ‘காந்தியும் பகத் சிங்கும்’, ‘அரசியல் சிந்தனையாளர் புத்தர்’ உள்ளிட்ட நூல்களை மொழிபெயர்த்திருக்கிறார். திசையெட்டும் மொழியாக்க விருது பெற்றவர். தொடர்புக்கு : thendralaham@gmail.com
Super starting ravi. Expecting next week
I am doubting , whether its translation or direct writing .Good work .Such a wonderful article for travelogue lovers like me….
Kilakku team , expecting this complete articles as complete book in 2023 chennai fair….
All the Best