சைகோன்
28ம் தேதி அதிகாலையிலேயே செயிண்ட் ஜாக்யூஸ் முனை கண்ணில் தென்பட்டுவிட்து. அதன்பின் விரைவாகவே நதிக்குள் நுழைந்துவிட்டோம். நதி 200 அடிக்குமேல் அகலம் கொண்டதாக இருக்காது. நதியின் இருபுறமும் நெற்பயிர் சாகுபடி. அங்கு அதுதான் பிரதான பயிர். பத்து மணிக்கு நங்கூரம் பாய்ச்சினோம். அதன்பின் உடனடியாக சைகோன் (இன்று ஹோசிமின் சிட்டி) நகருக்குள் நுழைந்தோம்.
நான் பார்க்கும் முதல் பிரெஞ்சுக் காலனி இதுதான். விஷயங்களைத் தெரிந்து கொள்வதில் எனக்கிருக்கும் ஆர்வம் உச்சத்துக்குச் சென்றது. ஆங்கிலேயர் மற்றும் பிரெஞ்சு நிர்வாக முறைகளை ஒப்பிட்டுப் பார்க்க மிகவும் விரும்பினேன். ஜின் ரிக்ஷாக்கள் என்ற மனிதர்கள் இழுக்கும் ரிக்ஷாக்களும், பார்க்கப் பரிதாபமாகத் தோன்றும் சிறிய வண்டிகளும் அங்கு தென்பட்டன; பயணிகளை அவர்கள் விரும்பும் இடத்துக்கு அவை அழைத்துச் செல்கின்றன.
நாங்கள் சிறிய வண்டிகளைத் தேர்ந்தெடுத்தோம். ஒரு சிறிய மட்டக்குதிரை அதை இழுத்தது. அதில் ஹோட்டல் காண்டினெண்டலுக்குச் சென்று இறங்கினோம். உள்ளே நுழைந்தவுடன் சாப்பிட எதுவும் இல்லை என்ற தகவல் அறிந்து திகிலடைந்தேன். குளிர்ச்சியான இறைச்சி மட்டுமே இருக்கிறதாம். காரணம் இதுதான். கடைகளும், வியாபாரத் தலங்களும், சந்தையும் காலை பத்து மணியிலிருந்து மதியம் இரண்டு மணி வரை மூடப்படும். அதன்பின் இரவு எட்டு மணிவரை அவை திறந்திருக்கும்.
பெரும் சிரமத்துக்குப்பின், சிறிது வற்புறுத்தலுக்குப்பின் அந்தப் பிரெஞ்சு மேலாளர் மதிய நேரத்தில் ஓரளவுக்கு நல்ல காலை உணவை ஏற்பாடு செய்து தந்தார். உணவு கிடைப்பது மட்டும் அங்கு பிரச்னையாக இருக்கவில்லை. அறைகள் மிகவும் அசுத்தமாக இருந்தன; படுக்கைகள் விரும்பக்கூடியதாக, சுத்தமாக இல்லை. அதனால், வேறு ஹோட்டல் பார்ப்பது கட்டாயமாகிவிட்டது. இறுதியில் ஹோட்டல் ஒலிவியரில் ஓரளவுக்கு நல்ல அறைகள் கிடைத்தன; எங்கள் முயற்சிக்கு வெற்றி கிடைத்தது.
சைகோனின் ஒரே பெரிய வீதி, ரூ டி கேடினட். பிரான்ஸில், மாகாணங்களில் இருக்கும் ஒரு நகரத்தின் வீதி போன்று தோன்றியது. வீதியின் இரு பக்கங்களிலும் மரங்கள் நன்கு வளர்ந்திருந்தன. நியாயமான விலைகளில் பிரெஞ்சுப் பொருட்களை விற்கும் கடைகள் சில அங்கு இருந்தன. கடைகள் நிச்சயமாக பிரெஞ்சுத் தோற்றத்துடன் இருந்தன; ஆனால், வேலை பார்ப்பவர்கள் சீனர்களும் அன்னாமியர்களும் (1945 வரை வியட்நாம் அன்னாம் என்று அழைக்கப்பட்டது). அவர்கள் ‘பிட்ஜின்’ பிரெஞ்சில் உரையாடியது ஆர்வமூட்டியது. கொஞ்சம் சிரமத்துடன் என்னால் அந்த மொழியைப் புரிந்துகொள்ள முடிந்தது.
சுற்றிப்பார்க்கப் புறப்படும்முன் டிரைவரிடம் எங்கு போகவேண்டும் போன்ற விவரங்களைக் கூறவிடவேண்டும். மிக அழகாகப் போடப்பட்டிருந்த மரங்கள் அடர்ந்த சாலைகளும், நன்கு பராமரிக்கப்பட்டிருந்த சாலைகளும் சதுக்கங்களும் வியப்பையளித்தன. அந்தப் பகுதியில் பிரெஞ்சுக்காரர்கள் அதிகம் வசித்தனர். பெரும்பாலோர் அரசாங்க ஊழியர்கள் போன்றோர். அவர்கள் அதிக எண்ணிக்கையில் இருந்தனர். அரசு இல்லம், அஞ்சலகம், கதீட்ரல் போன்ற பொதுக் கட்டடங்கள் அனைத்தும் பிரெஞ்சுக் கட்டடக் கலைக்குச் சிறந்த எடுத்துக்காட்டுகளாகத் தோன்றின. பெரும்பாலும் அவை சிலைகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. இவையும் வசதியான வகுப்பினர் வசிக்கும் வில்லாக்களும் மிகுந்த கலைநயமிக்க தோற்றத்துடன் இருந்தன.
அதிக எண்ணிக்கையில் கஃபேக்களும் ரெஸ்டாரண்ட்களும் இருந்தன. அவற்றில் மிகவும் பிரபலமானது, கஃபே டி லா மியூசிக். காலையிலும் மாலையிலும் அங்கு அதிக அளவில் கூடும் வாடிக்கையாளர்கள் சிறப்பாக உபசரிக்கப்படுகின்றனர். குறிப்பிட்ட நேரங்களில் ‘ஜிப்ஸி பேண்டு’ குழுவினர் இசை நிகழ்ச்சி நடத்தி சூழலை ரம்யமாக்குகிறார்கள். இவையனைத்தும் இந்தியாவில் நாம் பார்த்துப் பழகிய அத்தனை விஷயங்களிலிருந்தும் பெருமளவுக்கு மாறுபட்டிருந்தன.
அருகிலேயே ஒரு தியேட்டர். மிக அழகிய கட்டடம் அது. ஒரு மில்லியன் ஃப்ராங்க் பெறுமானமுள்ளது என்கிறார்கள். பிரான்ஸிலிருந்து வரும் நாடகக் கம்பெனி ஒன்று ஆண்டில் ஆறு மாதத்துக்கு இந்தத் தியேட்டரில் ஆபரா (இசை நாடகம்) நிகழ்ச்சிகளை நடத்துகிறதாம். அந்தப் பகுதியில் வசிப்பவர்கள் இவற்றை வெகுவாக ரசித்துப் பாராட்டுவார்கள் என்பதைச் சொல்லத் தேவையில்லை.
கவர்னர் ஜெனரல் தொடங்கி பிரெஞ்சுக்காரர்கள் அனைவரும் வெள்ளை வண்ண ‘டக்’ (கான்வாஸ் போன்ற வெள்ளை நிறத் துணி, மென்மையானது, எடை அதிகமின்றி, அணிய லகுவானது) துணியால் தைக்கப்பட்ட ஆடையை அணிகிறார்கள். பகல் முழுவதும், மாலையிலும் அணிகிறார்கள். பெண்களைக் குறைவான எண்ணிக்கையில்தான் காணமுடிந்தது; ஆனால், அந்த நாட்டுப் பெண்களைப் பாரிஸில் பார்த்திருக்கிறேன்; இங்கு அவர்களின் தோற்றம் ஏமாற்றமளிப்பதாகவே இருந்தது. மென்மையான கடல் காற்று, அந்த மாலை நேரத்தை குளிர்ச்சியாக்கி, மகிழ்வூட்டியது.
அடுத்த நாள், எங்கள் விஜயம் விலங்கியல் பூங்காவுக்கு. அழகாக உருவாக்கப்பட்டிருந்த பூங்காவில் கணிசமான அளவுக்கு விலங்குகளையும் பல்வேறு வகை பறவைகளையும் பார்த்தோம். இந்தப் பூங்காவுக்குச் செல்லும் வழியில் பிரெஞ்சுத் துருப்புகளின் படைமுகாமைப் பார்க்க முடிந்தது; கப்பற்படை வீரர்களும் அங்கு தங்கியிருந்தனர். தாராளமான இடவசதி கொண்ட மூன்று மாடிக் கட்டடங்கள்தான் படைமுகாம்கள். அவை கட்டப்பட்டிருந்த நோக்கத்தை நிறைவேற்றும் வகையிலிருந்தன.
அங்கு அன்னாமிய வீரர்கள் பலரும் தங்கியிருந்தனர். ஆனால், அவர்கள் குறிப்பிட்டுச் சொல்லும்படியான எண்ணிக்கையில் இல்லை; அதனால் நமது இந்தியத் துருப்புகளுடன் அவர்களை ஒப்பிட முடியாது. பிரெஞ்சு இந்தோ- சீனாவிலிருக்கும் பிரெஞ்சு ஐரோப்பிய துருப்புகளின் எண்ணிக்கை சுமார் 15,000. இந்தப் பகுதியின் மருத்துவமனை அசாதாரண இட வசதி கொண்டதாக இருந்தது. ஏறத்தாழ அந்த மருத்துவமனை எப்போதும் நோயாளிகளால் நிறைந்திருக்குமாம். ஏனெனில் இங்கு வசிக்கும் ஐரோப்பியர்களுக்கு இந்த வானிலை அடிக்கடி சுகாதாரக் குறைவை ஏற்படுத்துகிறது.
மதியத்துக்கு மேல், சீனர்கள் வசிக்கும் பகுதிக்குப் பயணம் மேற்கொண்டோம். தங்கியிருந்த இடத்திலிருந்து நான்கு மைல்கள் தொலைவு. சீனர்கள் அந்த இடத்தை மொய்த்துக் கொண்டிருந்தார்கள் என்றுதான் சொல்லவேண்டும். அவர்கள் நல்ல வியாபாரிகள்; செய்யும் வணிகத்தின் அளவும் மிகவும் பெரியது. நல்ல வசதியான சீனரது வீட்டின் உட்புறம் எப்படி இருக்கும், எப்படி அமைக்கப்பட்டிருக்கும் என்று பார்க்க ஆசைப்பட்டேன். ஆகவே ஒரு இல்லத்துக்குச் சென்றோம். மிக்க அன்புடன் எங்களை வரவேற்றார்கள். நான் எதிர்பார்த்ததற்கு மாறாக வீட்டின் உட்புறம் இருந்தது. வீடு நல்ல பராமரிப்பில் இருந்தது; அவர்களுக்கே உரிய, தனித்த பாணியில், வசதியுடன் அமைந்திருந்தது.
அதன்பின் அன்னாமிய பிரபு ஒருவரின் வீட்டுக்கும் நாங்கள் விஜயம் செய்தோம். அவரும் மிகவும் மரியாதையுடன் எங்களை வரவேற்றார். வீட்டைச் சுற்றிக்காட்டத் தனது மகளையே பணித்தார். மகள், எழில் மிக்கவள். அழகிய பொம்மை போன்று தோன்றினாள். பிரெஞ்சு மொழியை எளிதாகப் பேசினாள். வீட்டுக்குள் ஆர்வமூட்டும் அழகிய கலைப்பொருட்களின் சேகரிப்பு! சீனாவிலிருந்தும், அன்னாமிலிருந்தும், ஜப்பானிலிருந்தும் பெறப்பட்டிருக்கும் அந்த பலவகைக் கலைப்பொருட்களின் வேலைப்பாட்டை பிரெஞ்சு மொழியில் அந்தப் பெண் விவரித்தாள். அவளது சகோதரர்கள் பிரான்ஸில் கல்வி கற்றிருக்கிறார்கள். ஒரு சகோதரன் ஃபிரான்ஸின் மிகப்பெருமை மிக்க செயிண்ட் சிர் (St. Cyr) ராணுவப் பள்ளியில் பயின்று தேர்ச்சி பெற்றுள்ளான். இப்போது கவர்னர் ஜெனரலின் தனிப்பட்ட உதவியாளர் பதவியில் இருக்கிறான்.
சைகோனில் தங்கியிருந்த நாட்களில் அவரைப் பார்க்கவும், அவருடன் உணவருந்தவும் கவர்னர் ஜெனரல் மொன்ஸியர் ப்யூ, (M.Beau) என்னை அழைத்திருந்தார். ஆனால், பணி நிமித்தம் செயிண்ட் ஜாக்யூஸ் முனைக்குச் சென்றிருந்தவர் திரும்பி வரும்போது வீசிய சூறாவளிக் காற்றால் அவரது பயணம் தடைப்பட்டு, தாமதமாகிவிட்டது. உரிய நேரத்தில் அவர் திரும்பமுடியவில்லை என்பதால் என்னை அவரால் சந்திக்க இயலவில்லை.
எனது பணியாளர் ஒருவர் உடன்வர அரசு இல்லத்தில் நான் விருந்துண்ண வேண்டிய நிலை. கவர்னர் ஜெனரல் அங்கு இல்லாத சூழல். ஆனால், உதவி கவர்னர் ஜெனரலும் அவரது ஊழியர்களும் என்னை வரவேற்று உபசரித்தனர். மிகவும் அழகியதொரு மாளிகை அது. வரவேற்பு அறையும் விருந்து உபசரிப்பு ஹாலும் கம்பீரமான அவற்றின் தோற்றத்தால் மனத்தைக் கவர்ந்தன. இரவு உணவு சாப்பிட்டு முடித்ததும், உரையாடல் நிர்வாகம் பக்கம் திரும்பியது. எங்கள் உரையாடலிலிருந்து அந்தச் சுவையான விஷயம் குறித்து, ஏராளமான தகவல்களை என்னால் சேகரிக்க முடிந்தது.
காலனிய ஆட்சி அதிகாரத்துக்கும் அதன் அண்டை ராஜ்ஜியங்களான அன்னாமுக்கும் கம்போடியாவுக்கும் இடையிலான உறவுகள் பற்றி நாங்கள் விவாதித்தோம். தாம் சுயாட்சி அமைப்புகள் இல்லை என்று அவை ஒப்புக்கொண்டுள்ளன, கம்போடிய ஆட்சியாளர்கள் பாரம்பரியமாக இருந்துவரும் பட்டங்களை வைத்துக்கொள்ளலாம் என்பதுடன் பொருத்தமான மானியங்களையும் அந்த ராஜ்ஜியம் பெறுகிறது. அதேநேரத்தில் முழு நிர்வாகமும் வரவு செலவுத் திட்டங்களும் முற்றிலும் அங்கு வசிக்கும் பிரெஞ்சுக்காரர்களின் கைகளில் உள்ளன.
பிரிட்டிஷாரின் ஆட்சியில் இந்தியாவில் இளவரசர்களும் மன்னர்களும் அனுபவிக்கும் சலுகைகள் குறித்து எனக்கு விருந்தோம்பல் செய்தவர்களிடம் கூறினேன். பிரெஞ்சுக்காரர்களின் கீழ் பெயரளவில் மன்னர்களாக இருப்பவர்களுக்கு அவர்களது தேசத்து அரசாங்கங்களில் ஏன் பங்கு அளிக்கப்படுவதில்லை என்று கேட்டேன். எனக்குக் கிடைத்த பதில்: ‘இதைப் போன்ற ஒரு சிந்தனையைப் பிரெஞ்சுக்காரர்களால் ஏற்க முடியாது’.
அடுத்த நாள் காலை, சைகோனின் பெரிய கல்லூரி ஒன்றைப் பார்வையிடச் சென்றேன். கவர்னரின் அன்னாமிய தனி உதவியாளர் என்னை வரவேற்றார். சிரமம் எடுத்துக்கொண்டு வகுப்புகளைச் சுற்றிக் காட்டினார்; அங்கு பார்க்க வேண்டிய அனைத்தையும் காட்டி, விளக்கினார். நாற்கோண வடிவில் அமைந்திருந்த கட்டடத்தின் ஒரு பகுதி பிரெஞ்சு மற்றும் யூரேசிய மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. மற்றொரு பகுதி அந்த நாட்டு மாணவர்களுக்கு.
ஆசிரியர்கள் அனைவரும் பிரெஞ்சுக்காரர்கள். நான் அங்கு கழித்த குறுகிய நேரத்தில் அவதானித்த வகையில், அந்தத் தேசத்து மாணவர்கள் பெருமளவுக்கு நல்ல திறமை அடைந்தவர்களாகத் தோன்றினர். பள்ளிக்கூடத்தில் அந்தத் தேசத்து மாணவர்களுக்கு எழுத்தர்களுக்குத் தேவையான பாடங்களே சொல்லித்தரப்படுகின்றன. கீழ்நிலைப் பணிகளில் மட்டுமே அவர்கள் வேலைவாய்ப்புப் பெறமுடியும். உயர் கல்வி பெறவேண்டுமானால், அவர்கள் பிரான்ஸ் நகருக்குத்தான் செல்லவேண்டும்.
ஸ்டீமருக்குச் செல்லும் வழியில் கவர்னர் ஜெனரலைச் சிறிது நேரம் சந்திக்கும் நல்ல வாய்ப்பு கிடைத்தது. அவர் அப்போதுதான் திரும்பியிருந்தார். மொன்ஸியர் ப்யூ மிகச் சிறந்த பிரெஞ்சு நிர்வாகிகளில் ஒருவர் என்று சொல்லப்படுகிறது. ஆனால் பிரெஞ்சுக்காரர்களோடு ஒப்பிட்டால் மிகவும் மாறுபட்ட வகையில் உள்ளொடுங்கியவர்.
பிரெஞ்சு இந்தோ-சீனாவில் கவர்னர் ஜெனரலின் பதவிக்காலம் எவ்வளவு என்று நிர்ணயிக்கப்படவில்லை. எப்போது வேண்டுமானாலும் பிரான்ஸுக்கு அவர் திருப்பி அழைக்கப்படலாம்; தேவையும் சூழ்நிலையும்தான் அதை முடிவுசெய்கின்றன.
எங்கள் ஸ்டீமர் காலை பத்து மணிக்குத் துறைமுகத்திலிருந்து புறப்பட்டது. பல விஷயங்களை கற்றுத் தந்த இனிமையான குறுகிய கால தங்கல், சைகோனில் இவ்வாறு முடிவுக்கு வந்தது.
ஹாங்காங்
மூன்று நாள் கப்பல் பயணத்துக்குப்பின், முக்கியமான இடமான ஹாங்காங்குக்கு அக்டோபர் 5ஆம் தேதி வந்து சேர்ந்தோம். துறைமுகத்தில் நுழையும்போது நாங்கள் பார்த்த காட்சி கண்ணைக் கவர்ந்தது. இந்த நகரம் உலகின் மிகச் சிறந்த இடங்களில் ஒன்று என்று சரியாகத்தான் கூறியிருக்கிறார்கள். மூன்று பக்கங்களிலும் சூழ்ந்திருக்கும் உயரமான குன்றுகள், அரைவட்ட வடிவிலமைந்த நல்லதொரு திறந்தவெளி அரங்கத்தின் தோற்றத்தைத் துறைமுகத்துக்குத் தந்தன. அந்தக் குன்றுகள் கப்பல் போக்குவரத்துக்கும் பாதுகாப்பாக இருந்தன; மட்டுமின்றி கற்பனையில் மட்டுமே காணமுடிகிற அழகிய பின்னணியையும் தந்தன.
நங்கூரம் பாய்ச்சியவுடன், கரையிறங்கி, தங்குவதற்கு அறைகள் தேடினோம்; கிங் எட்வர்ட் ஹோட்டலுக்குச் சென்றோம். அந்த இடத்துக்குச் சொந்தக்காரர் பார்ஸி இனத்தவர். நல்ல முறையிலான பராமரிப்பு என்று நிச்சயம் சொல்லவேண்டும். காலை உணவு முடிந்ததும், அந்த இடத்தின் முக்கிய வணிகப்பகுதியான குயின்ஸ் வீதியின் வழியாகப் பயணித்தோம். அதன்பின் அங்கிருந்து ‘ஹேப்பி வாலி’ என்ற இடம். அங்கு குதிரைப் பந்தயங்கள் நடக்கின்றன. போலோ விளையாட்டுக்கான மைதானமும் இருக்கிறது. இதைப் போன்ற விஷயங்களுக்கு மிகவும் உகந்த இடம். சுற்றியிருக்கும் பகுதியும் அதற்குப் பொருத்தமாக நேர்த்தியாக இருந்தது.
இந்தியாவிலிருந்து இவ்வளவு தொலைவில் ஏராளமான இந்தியர்களைப் பார்ப்பது திகைப்பைத் தந்தது. பார்த்த போலிஸ்காரர்கள் அனைவரும் சீக்கியர்களாக இருந்தனர்; அந்த ஊரின் திருடர்களுக்கு இவர்களைக் கண்டால் மிகுந்த பயம் என்றார்கள். சீன இனத்தவர் பத்து நபர்களுக்கு ஒரு சீக்கியர் சமமாக இருப்பார்.
காவல் படையில் மூன்று ஆங்கில ரெஜிமெண்டுகளும் மூன்று இந்திய ரெஜிமெண்டுகளும் இருக்கின்றன. வேறு காரணங்களுடன், பிரதான சீனா அருகில் இருப்பது அவ்வளவு பெரிய காவல் படையின் தேவைக்குக் காரணமாக இருக்கிறது.
ஹாங்காங் மக்கள் தொகையில் பெரும்பான்மை சீனர்களே. சீன ‘மெயின் லேண்டில்’ இருக்கும் அவர்களது இனத்தவர்களைக் காட்டிலும் கணிசமான அளவுக்கு இந்தச் சீனர்கள் நல்ல நிலைமையில் இருக்கிறார்கள் என்பது முற்றிலும் வெளிப்படை. சீனர்கள் நல்ல உழைப்பாளிகள்; எனினும் கற்பனை செய்யமுடியாத அளவுக்கு அவர்கள் முட்டாள்கள் என்று சொல்ல விழைகிறேன்.
நமக்கு என்ன வேண்டும் என்பதை அவர்களுக்கு புரியவைப்பது நிச்சயம் சாத்தியமற்ற ஒன்று எனத் தோன்றுகிறது. நகரைச் சுற்றும்போது ஓரிடத்தில் ராணி விக்டோரியாவின் சிலையைக் கடந்துசென்றோம்; எங்களது கோச் வண்டியை ஓட்டியவரின் அறிவு எந்த அளவுக்கு இருக்கிறது என்று சோதிக்க நினைத்தேன். அந்தச் சிலை யாருடையது என்று அவரிடம் விசாரித்தேன். அவர் கூறிய பதில் எனக்கு வேடிக்கையாகவும் திகைப்பாகவும் இருந்தது: ’ஆங்கிலேயர்!’
வேறொரு சமயம், ஹோட்டல் ஒன்றில் டின்னருக்காக மெனு கார்டைப் பார்த்து சில பதார்த்தங்களைத் தேர்வு செய்தேன். எனக்கு என்ன தேவை என்பதைத் தலைமை வெயிட்டருக்குப் புரிய வைப்பதற்குள் பெரும் சிரமப்பட்டுவிட்டேன். நாங்கள் அங்குதான் சாப்பிடப்போகிறோமா என்ற அவரது கேள்வியில் விஷயம் முடிவுக்கு வந்தது.
எங்கள் ஸ்டீமர் அங்கிருந்து ஐந்து மணிக்குப் புறப்படுவதற்குப் பதிவாகியிருந்தது. ஆனால், சூறாவளி ஒன்று இருநூறு மைல்களுக்கு அப்பாலிருந்து வேகமாக கரைநோக்கி வந்துகொண்டிருப்பதால், அன்றைக்கு புறப்பட இயலாது என்று தகவல் கிடைத்தது. இந்தச் செய்தி வருத்தத்தைத் தரவில்லை. ஏனெனில் ஹாங்காங்கை இன்னும் முழுமையாக நாங்கள் பார்த்து முடிக்கவில்லை; ஆர்வமூட்டும் வேறு சில இடங்களைப் பார்க்கும் வாய்ப்பை எங்களுக்கு இது அளித்தது.
ஸ்டீம் ட்ராம்வே ஒன்றில் ஏறி ஒரு குன்றின் உச்சிக்குச் சென்றோம். நிச்சயம் அது 2000 அடி உயரம் இருக்கும். உச்சியை அடைந்ததும் ஹோட்டல் ஒன்றைப் பார்த்தோம். அதன் பெயர் ‘பீக்’. நல்ல இடத்தில் அமைந்திருந்த அந்த ஹோட்டலிலிருந்து துறைமுகமும் கப்பல்களின் இயக்கமும் அழகிய காட்சிபோல் விரிந்தது. இருள் அதிகரிக்க, எங்கள் கால்களின் கீழ் என்பதுபோல், தெரிந்த காட்சி மேலும் மேலும் மனத்தை மயக்குவதாக இருந்தது. நூற்றுக்கணக்கான விளக்குகள், கற்பனையில் தோன்றும் விளக்குகளாய் புள்ளி வைத்ததுபோல் தோன்றின. அந்தி வேளையில் பளிச்சென்று மின்னிய அவை துறைமுகத்தில் நின்றிருந்த கப்பல்களின் விளக்குகள். அந்தக் காட்சி மிகவும் வசீகரமாக இருந்தது; நிச்சயம் எந்நாளும் ஒருவரால் மறக்கமுடியாதது.
நாங்கள் பார்த்த பீக் ஹோட்டலும் (நான்கு மாடிக் கட்டடம்) மிகவும் வசதியாக இருந்தது. அந்தக் குன்றில் சில தனிப்பட்ட நபர்களின் வீடுகளும் இருந்தன. கவர்னருக்கும் மாளிகை ஒன்று இருந்தது. உடல் நலனுக்கு உகந்த வானிலை அங்கு நிலவுவது ஒரு காரணமாக இருக்கலாம். பீக் ஹோட்டலில் உணவருந்தியபின் அங்கிருந்து உடனடியாகப் புறப்பட்டோம்.
நாங்கள் ஸ்டீமரில் ஏறவேண்டிய வருத்தமான சூழல். அனைவரும் ஏறியவுடன் சிறிது நேரத்தில் ஸ்டீமர் புறப்பட்டுவிட்டது. துறைமுகத்தை விட்டு வெளியில் வந்தபிறகு, எங்களுக்குக் கூறப்பட்டதுபோல் சூறாவளியின் எந்த அறிகுறியையும் நாங்கள் சந்திக்கவில்லை. உண்மையில் கடல் ஒரு ஏரியைப்போல் அமைதியாக இருந்தது. அடுத்த இரு நாட்களும் அந்த வானிலைதான் நிலவியது. சீனக் கடற்கரையிலிருந்து விலகித்தான் எங்கள் ஸ்டீமர் பயணித்தது. அவ்வப்போது கரையைப் பார்க்கமுடிந்தது. எங்களைக் கடந்து சென்ற சில ஸ்டீமர்களையும் பார்த்தோம்.
(தொடரும்)
___________
ஜகத்ஜித் சிங் எழுதிய “My Travels in China, Japan and Java, 1903” நூலின் தமிழாக்கம்
இந்த வாரம் தொடர் மிக விறுவிருப்பாக உள்ளது . சீனர்களை பற்றிய ஆசிரியரின் மதிப்பீடு ஆச்சர்யமாக உள்ளது . அக்களுர் ரவியின் தமிழாக்கம் அருமை