Skip to content
Home » மகாராஜாவின் பயணங்கள் #6 – சீனப் பெருஞ்சுவரும் ருஷ்யர்களும்

மகாராஜாவின் பயணங்கள் #6 – சீனப் பெருஞ்சுவரும் ருஷ்யர்களும்

சீனப் பெருஞ்சுவரும் ருஷ்யர்களும்

பத்து மணிக்கு டீன்–ட்ஸின் நகரைவிட்டுப் புறப்பட்டோம். கடுங்குளிரான வானிலை. ஓரளவு மாறும் போலத்தான் இருந்தது. சாதாரணமாக, சிறிது நேரம் மழை பெய்தாலும், அதைத் தொடர்ந்து வானிலை திடீரென்று மாறுவது நிச்சயமானதாக இருக்கிறது. அதற்குக் காரணம் சைபீரியாவிலிருந்து வீசும் குளிர்காற்று.

மாலையில் ஷான்ஹாய்க்வான் நகரை அடைந்தோம். கண்ணியமான ஹோட்டலின் வடிவில் இன்ப அதிர்ச்சி எங்களுக்காகக் காத்திருந்தது. அந்த ஹோட்டலை ஓர் ஆங்கிலேயர் நடத்துகிறார், அருமையான உணவுடன் மற்ற வசதிகளும் செய்து தந்தார்.

அடுத்த நாள் காலையும் கடுங்குளிரான வானிலை தொடர்ந்தது. சுற்றிப்பார்ப்பது முற்றிலும் சாத்தியமாக இருக்கவில்லை. அதனால் வெளியில் செல்லும் சாகசத்தை நிகழ்த்த நான் தயாராகவில்லை.

ஷான்ஹாய்க்வானிலும் சில வெளிநாட்டவர்களின் படை முகாம்கள் இருந்தன: ஜெர்மனி, பிரான்ஸ், ஜப்பான், ருஷ்யா ஆகிய நாடுகள் தலா இரண்டு படைப் பிரிவுகளைப் பராமரித்துக் கொண்டிருந்தன. இந்தியாவிலிருந்து வந்திருந்த பஞ்சாப் காலாட்படையின் முப்பதாவது அணியும் கண்ணில் பட்டது. இந்த ரெஜிமெண்டின் இந்திய அதிகாரிகள் சிலர் என்னைப் பார்க்க வந்திருந்தனர். அதில் ஓர் அதிகாரி எனது ராஜ்ஜியத்தின் குடிமகன். தில்வான் என்ற கிராமத்தை சேர்ந்தவராம்.

அவர்களுக்கு அருகில் முகாமிட்டிருக்கும் பிற நாட்டுத் துருப்புகளின் திறமை குறித்து இந்தியர்கள் கூறியவை மிகவும் மகிழ்ச்சி அளித்தன. சீனாவின் வெவ்வேறு பகுதிகளிலும் பார்க்க முடிகிற வெளிநாட்டுப் படைகளின் எண்ணிக்கையும் வலிமையும் இந்திய அதிகாரிகளுக்கு திகைப்பாக இருக்கிறதாம். விஷயம் என்னவென்றால் அவர்கள் இங்கு வந்துசேர்ந்த அந்த நேரம் வரையிலும், பெரிய நாடுகளின் படைகள் சீனாவில் இருப்பது குறித்து அவர்களுக்கு எதுவும் தெரியாது. இந்திய அதிகாரிகளுக்கு ருஷ்யர்கள் குறித்துத் தாழ்வான அபிப்பிராயமே இருக்கிறது. ஆனால், ஜப்பானியர்களைப் பற்றி அவர்கள் உயர்வாகப் பேசுகிறார்கள். அவர்களுடன் இவர்களுக்கு நல்லுறவு இருப்பதாகத் தோன்றுகிறது.

அந்த நாளின் பிற்பகுதியில் ரஷ்ய அதிகாரி ஒருவர் என்னைப் பார்க்க வந்திருந்தார். புத்திசாலியான மனிதர்; ஏறத்தாழ ஐரோப்பிய மொழிகள் அனைத்தையும், ஏன் பாரசீக மொழியையும் சரளமாகப் பேசினார். அவர் உடன் வர, அப்பகுதியிலிருந்த சீனப் பெருஞ்சுவரின் ஒரு பகுதியைப் பார்க்கச் சென்றேன். இரண்டாயிரம் ஆண்டுகளுக்குமுன் தார்த்தாரிய ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து பாதுகாத்துக்கொள்ள இந்தச் சுவர் கட்டப்பட்டதாம். இரண்டாயிரம் மைல் நீளம் என்கிறார்கள். ஐம்பது அடி உயரம் இருக்கும்போல் தோன்றுகிறது. சுவரின் மேற்புறம் சில இடங்களில் வண்டி ஒன்று செல்லுமளவுக்கு மிகவும் அகலமாக இருக்கிறது.

சீனாவில் முகமதியர்கள் அதிகம் வசிக்கிறார்கள். அவர்களது மசூதி ஒன்றைப் பார்க்க ஆவலாக இருந்தது. பெருஞ்சுவரைப் பார்த்துவிட்டுத் திரும்பியதும், அப்படி ஒரு மசூதியைப் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது. ஆனால், அது ஒரு சாதாரண சீனரின் வீடு போலத்தான் இருந்தது; நான் பெரிதும் ஏமாற்றம் அடைந்தேன்.

மசூதியின் உள்பக்கச் சுவர்களில் சில அரேபிய வாசகங்கள் எழுதப்பட்டிருந்தன. மசூதியின் பொறுப்பாளராக இருந்த முல்லாவிடம் குரானிலிருந்து சில பத்திகளைப் படித்துக் காட்டும்படி வேண்டினேன். ஆனால், அவரால் படிக்க முடியவில்லை. அங்கே பார்க்க முடிந்த பொதுவான முகமதியர்கள் போலத்தான் அவரும் இருந்தார். அவர்களிடமிருந்து முல்லாவை வேறுபடுத்திக் காட்டும் தனித்த அம்சம் எதுவும் தென்படவில்லை. பேரரசின் அரசாங்கம் அளித்திருக்கும் ‘பர்மிட்’ ஒன்றை முல்லா என்னிடம் காட்டினார். அந்த அனுமதிச் சீட்டு வைத்திருக்கும் முகமதியர்கள்தான் அவர்கள் பாணியில் வழிபாடு செய்ய முடியும்.

ஏனைய சீனர்களைப்போல் சீனாவின் முகமதியர்களும் ஏன் நீண்ட ஜடை வைத்துக் கொள்கிறீர்கள் என்று கேட்டேன். அரசாங்கத்தின் மதத்துக்கும், தேசத்தின் மக்களது பழக்கத்துக்கும் மரியாதை கொடுக்கும் விதமாக அவர்கள் அப்படிச் செய்கிறார்களாம்.

மசூதியிலிருந்து புறப்பட்டு ஒரு கோட்டைக்குச் சென்றோம். கொசாக் இனத்தவர் சிலர் அதை ஆக்கிரமித்திருந்தனர். அங்கிருந்த ருஷ்ய அதிகாரிகள் என்னை நன்கு வரவேற்றனர். இந்த நற்பண்புக்கு ருஷ்யர்கள் மிகவும் பெயர்பெற்றவர்கள். சில மாதங்களுக்கு இருங்கள் என்று சொல்லித்தான் முதலில் அவர்கள் அந்த இடத்துக்கு அனுப்பப்பட்டார்களாம். இங்கு வந்து சேர்ந்து மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டன; ஆனால், அவர்கள் திரும்பிச் செல்வதற்கான மாற்று ஏற்பாடுகள் ஏதும் இதுவரை நடக்கவில்லை.

அடுத்த நாள் அதிகாலையில் ஷான்ஹாய்க்வானிலிருந்து புறப்பட்டோம். ரயிலில் தனியாக உணவுக்கென்று கோச் ஏதும் இல்லை; அதனால் எனக்கென்று ஒதுக்கப்பட்ட சிறப்பு கோச்சிலேயே, கிடைத்த பொருட்களைக் கொண்டு காலைச் சிற்றுண்டிக்குப் பதிலாக, துரித உணவைத் தயாரித்து, சமாளித்துக் கொண்டோம். தூரத்தில் தெரிந்த சில குன்றுகளைத் தவிர்த்து ரயிலில் நாங்கள் கடந்துசென்ற நிலப்பரப்பு முற்றிலும் சமதள நிலப்பரப்பாகவே இருந்தது. அந்தப் பிரதேசத்தில் மக்கட் தொகை அடர்த்தியாக இருப்பதுபோல் தோன்றியது; கிராமங்கள் ஒன்றையொன்று தொடுவதுபோல் நெருக்கமாகக் காணப்பட்டன. வீடுகள், பெரும்பாலும் கருங்கற்கள் அல்லது செங்கற்கள் கொண்டு கட்டப்பட்டிருந்தன. ஆனால், சில ஏழைகளின் வீடுகள் மண்ணால் கட்டப்பட்டிருந்தன.

தென்பகுதி சீனர்களைக் காட்டிலும் இந்தப் பிரதேசத்து விவசாயிகளின் உடற்கட்டு நன்றாக இருந்தது. நல்ல உடை உடுத்தியிருந்தனர். நல்ல உணவு சாப்பிடுபவர்கள் போல் தெரிந்தனர். வண்டிகளைக் கழுதைகள் இழுக்கின்றன. சில இடங்களில் ஏர் உழுவதற்கும் அவை பயன்படுகின்றன. அங்கு வசிப்பவர்களின் பிரதானமான இறைச்சி உணவு பன்றி இறைச்சிதான். ஆனாலும், நோயாலோ வேறு காரணங்களாலோ காளை ஒன்று இறந்துவிட்டால் அவர்கள் அதைச் சாப்பிடுவதற்கு எடுத்துக் கொள்கின்றனர். மற்றபடி சீனர்கள் வழக்கமாக மாட்டிறைச்சி சாப்பிடுவதில்லை. ஏனெனில், உணவுக்காக அந்த விலங்கை வெட்டி, சாப்பிடுவதைக் காட்டிலும் மதிப்பு மிக்கதாக அதை அவர்கள் பார்க்கிறார்கள்.

நியூச்வாங் – மஞ்சூரியா

மாலை ஏழு மணிக்கு நியூச்வாங்1 நகரை அடைந்தோம். ரயிலிலிருந்து இறங்கியதும் ஆறொன்றைக் கடந்து அக்கரை செல்வதற்கு ஸ்டீமர் ஒன்றில் ஏறினோம். இதற்கு இருபது நிமிடங்கள் ஆயிற்று. தங்குவதற்கு வித்தியாசமான ஹோட்டல் ஒன்று கிடைத்தது. அந்தப் பிரதேசத்துச் சீனர்கள், மஞ்சு இனத்தவர் என்று அறியப்படுகின்றனர். இந்த இனத்திலிருந்துதான் தற்போதைய இம்பீரியல் வம்சம் தோன்றியிருக்கிறது.

மஞ்சூரியா என்ற இந்தப் பிரதேசம், ருஷ்யர்களின் ஆக்கிரமிப்பில் உள்ளது. வலிமை மிக்க சில ஐரோப்பிய நாடுகளின் தீவிர கவனத்தையும் கூடவே ஜப்பானின் கவனத்தையும் இது ஈர்த்துள்ளது. அதற்கொரு காரணம் உள்ளது. அந்தப் பிரதேசத்திலிருந்து வெளியேறி விடுவதாக ருஷ்யர்கள் அவ்வப்போது எண்ணற்ற உறுதிமொழி அளித்திருக்கிறார்கள்; ஆனால், ஏதோவொரு காரணத்தைச் சொல்லி, வாக்குறுதியை நிறைவேற்றாமலே, ருஷ்யா ஆக்கிரமிப்பைத் தொடர்கிறது.

ருஷ்யர்கள் முதலில் ‘பாக்ஸர்’ கிளர்ச்சியை அடக்க வேண்டும் என்பதற்காகத் தம் துருப்புகளை உள்ளே கொண்டுவந்தனர்; அதன்பின் அவர்கள் உருவாக்கி நிர்வகித்துவரும் மஞ்சூரியன் ரயில்வேயைப் பாதுகாக்கும் காரணத்தை சொல்லித் தங்கினார்கள்; அதன்பின், மேலும் எதிர்ப்புகள் வலுத்தபின், ஆக்கிரமிப்பைத் தொடர்வதற்கு வேறு காரணங்களை முன்வைத்தார்கள். சுய விருப்பத்துடன் ருஷ்யர்கள் மஞ்சூரியாவை விட்டு வெளியேற மாட்டார்கள் என்றுதான் தோன்றுகிறது; சீனாவின் மீது அவர்களுக்கு பெரும் ஆர்வமிருக்கிறது. அத்துடன் பெரும் பொருட்செலவைத் தாங்கிக் கொண்டுதான் ருஷ்யா அந்த ரயில் போக்குவரத்தையும் கட்டமைத்துள்ளது. லட்சம் பேர் கொண்ட படையை ருஷ்யா அப்போது வைத்திருந்தது; பின்னர், அதனுடன் அவ்வப்போது துருப்புகளைச் சேர்ந்துகொண்டுதான் இருக்கிறதாம்.

அந்தப் பிரதேசத்தின் அரசாங்கம் பொதுவாக சீன வைஸ்ராயின் கைகளில் இருக்கிறது. ஆனால் நடைமுறையில், ஜாரின் கட்டுப்பாட்டிலும் அவரது வைஸ்ராய் அலெக்ஸீவின் கட்டைவிரல் அசைவிலும்தான் அந்த வைஸ்ராய் இருக்கிறார்: அலெக்ஸீவ் இரும்புத் தடிகொண்டு ஆட்சி செய்கிறார் என்கிறார்கள். சமீபத்திய வதந்தி ஒன்றை அதற்கு ஆதாரமாகச் சொல்கிறார்கள். மஞ்சூரிய தலைநகர் முக்தெனில் இருக்கும் ருஷ்ய ஜெனரலின் விருப்பத்துக்கு மாறாக சீன வைஸ்ராய் துணிந்து ஒரு காரியத்தைச் செய்தார் என்பதற்காக ஜெனரல் அவரை சிறையில் அடைத்தாராம்!

மஞ்சூரியா கனிம வளங்கள் நிறைந்த பிரதேசம்; தங்கச் சுரங்கங்களும், வேறு சில கனிமச் சுரங்கங்களும் அங்கு இருக்கின்றன. சீனாவின் வளங்கொழிக்கும் பிரதேசங்களில் ஒன்று. ருஷ்யா அல்லது ஜப்பானியரின் கைகளில் இருந்தால், சந்தேகமின்றி பெருமளவுக்கு முன்னேற்றமடையும்.

நியூச்வாங் நகரைவிட்டு மதியம் புறப்பட்டோம். லாஞ்ச் ஒன்றில் மீண்டும் ஆற்றைக் கடந்தோம். முதன் முறையாக ருஷ்ய-கிழக்குச் சீன ரயில்வேயில் பயணம். ஒரு மணி நேரப் பயணத்துக்குப்பின் ரயிலை விட்டு இறங்கினோம். சுவாரஸ்யமான அனுபவம் ஒன்றும் எங்களுக்குக் கிடைத்தது.

அந்த நேரத்தில் ஐரோப்பாவிலிருந்து வந்த ட்ரான்ஸ்-சைபீரியா ரயில், நிலையத்துக்குள் நுழைந்தது. இந்த ரயில்பாதை முழுமையும் பயன்பாட்டுக்குத் திறக்கப்பட்டிருந்தது. ஐரோப்பாவில் இந்தப் பாதை, மாஸ்கோவின் பழைய பாதைகள் மூலமாக, அந்த நகரை பாரிஸ், பெர்லின், வியன்னா மற்றும் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நிலையங்களுடன் இணைக்கிறது. உலகத்திலேயே நீளமான ரயில் பாதை என்று சொல்லப்படுகிறது. முற்றிலும் ருஷ்ய மூலதனத்தாலும் உழைப்பாலும் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. அற்புதமான, செயலூக்கம் மிக்கவர்களின் படைப்பு. ருஷ்யர்கள் பெருமிதம் கொள்ளத்தக்க உருவாக்கம்.

இந்த ரயில் பாதை ருஷ்யர்களின் கௌரவத்தையும் வலிமையையும் கீழ்த்திசைப் பிரதேசங்களில் அதிகரிக்கச் செய்கிறது. இதனைப் பயன்படுத்தி மிகக் குறைந்தகால அவகாசத்தில் பெரும் எண்ணிக்கையில் துருப்புகளை அதனால் குவித்துக்கொள்ள முடியும். இதற்குமுன் லண்டன் அல்லது பாரீஸிலிருந்து சீனா அல்லது ஜப்பானுக்குச் செல்ல ஸ்டீமர் மூலமாக முப்பத்தைந்திலிருந்து நாற்பது நாட்கள் ஆகும். இப்போது இந்த அற்புதமான ரயில் பாதையின் வழியாகப் பயணிகளும் தபால்களும் பதினெட்டிலிருந்து இருபது நாட்களில் வந்து சேர்கின்றன. போர்த் தந்திர அடிப்படையிலும், பொருளாதார அடிப்படையிலும் பயணிகளையும் சரக்குகளையும், தபால்களையும் கொண்டுசேர்ப்பதில் ருஷ்யாவுக்கு இந்த ரயில் பாதை பிரும்மாண்டமான மதிப்பைப் பெற்றுத் தருகிறது என்பதை இந்த ஒப்பிடு மிகத் தெளிவாக விளக்குகிறது.

கற்பனையில் பார்க்கக்கூடிய அருமையான சொகுசு வசதிகளுடன் ரயில்பெட்டி இருந்தது. ஏன், பியானோ கருவி ஒன்றும் அதில் இருந்தது. வசதியாகத் தூங்கியபடி செல்வதற்காக நன்கு அமைக்கப்பட்ட பெட்டிகள்; உணவு வசதிகள் நிறைந்த பெட்டி ஒன்றும் இணைக்கப்பட்டிருந்தது. இவை மட்டுமின்றி, பரிமாறப்பட்ட இரவு உணவு, ஐரோப்பாவில் ஒரு முதல்தர உணவகத்தில் கிடைக்கக்கூடிய உணவை எனக்கு நினைவூட்டியது.

டால்னி – போர்ட் ஆர்தர்

அடுத்த நாள் அதிகாலையில் நாங்கள் டால்னி2 நிலையத்திலிருந்தோம். இந்த மாபெரும் ரயில் பாதையின் ஒருபக்க முனையம். இதோ, இப்போது நாங்கள் இறுதியாக ருஷ்ய ஆக்கிரமிப்பு சீனாவிலிருந்தோம். டால்னி ஆளுநரின் செயலர் ரயில் நிலையத்துக்கே வந்திருந்து என்னை வரவேற்றார்.

ருஷ்யாவில் பயன்பாட்டிலிருக்கும் ‘ட்ரோஷ்கி’ என்ற உயரம் குறைவான நான்கு சக்கர வண்டியில் ஹோட்டலுக்குச் சென்றோம். டால்னியில், ட்ரோஷ்கிகள் அதிகம் பொதுப் பயன்பாட்டில் உள்ளன. அந்தக் ’கோச்மேன்கள்’ அனைவரும் ருஷ்யர்களாக இருக்கின்றனர். மோசமான அல்லது கரடுமுரடான சாலைகளிலும் அல்லது முறையாக அமைக்கப்படாத பாதையிலும் ட்ரோஷ்கியின் மூலம் எளிதாகப் பயணிக்க முடியும். அதன் திறனை அனுபவத்தின் மூலமாகத்தான் நாம் மெச்ச முடியும்.

எங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஹோட்டல் போதுமான அளவு நன்றாகவே இருந்தது. பரிமாறப்பட்ட உணவு, அடிப்படையில் ருஷ்ய உணவாக இருந்தாலும் மோசமானதாக இல்லை. ஆனால், ருஷ்யாவின் ஆக்கிரமிப்பில் இருக்கும் அனைத்துப் பிரதேசங்களையும்போல், இங்கும் சாதாரண நீருக்கு மதிப்பு மிகவும் அதிகம். குளிப்பது என்றால் என்ன என்று அவர்களால் தெளிவாகப் புரிந்துகொள்ள முடியவில்லை. அங்கு நான் தங்கிய மூன்று நாட்களில் பெரும் சிரமத்துக்குப்பின் என்னால் ஒருமுறை மட்டுமே குளிக்க முடிந்தது. ’ஜக்’ போன்ற ஒரு பாத்திரத்தில் தரப்படும் சுடுநீர் ஒரு சொகுசு வசதியாகத்தான் பார்க்கப்படுகிறது; அதற்கு பில்லில் விலை தனியாகப் போடப்படுகிறது.

நாங்கள் இருந்த பிரதேசத்தை மூன்று ஆண்டுகளுக்கு முன்னர்தான் சீனாவிடம் இருந்து ருஷ்யர்கள் பெற்றிருக்கிறார்கள். இந்த மூன்று ஆண்டுகளில் அங்கு நடந்திருக்கும் முன்னேற்றம் உண்மையில் அபரிமிதமானது, அற்புதமானது. எங்கு பார்த்தாலும் பிரம்மாண்டமாக பணிகள் நடந்துகொண்டிருந்தன. அழகான கற்கட்டடங்கள் நிறைந்த வீதிகள் வரிசையாகத் தோன்றியிருந்தன. அந்த இடத்தைச் சுற்றிலும் மைல் கணக்கில் சாலைகள் போடப்பட்டுக் கொண்டிருந்தன; பொதுக் கட்டங்களும் எழும்பிக் கொண்டிருந்தன. அரசு பணியாளர்களின் வீடுகள் பெரிதாகவும், வில்லாக்கள் போல் பார்ப்பதற்கு அழகாகவும் தோன்றின; ஆங்கிலோ-இந்திய அதிகாரிகளின் பயன்பாட்டுக்கு இந்தியாவில் அளிக்கப்பட்டிருக்கும் வீடுகளைக் காட்டிலும் குறிப்பிட்டுச் சொல்லும்படியான வேறுபாடுகளுடன் இருந்தன.

ஆளுநர் சக்கரோவ் என்னைப் பார்க்க வந்திருந்தார். ஒரு மணி மதிய உணவுக்கோ அல்லது டின்னருக்கோ தன்னுடன் உணவருந்த வரும்படி என்னை அழைத்தார். அங்கு பிரபலமாக இருக்கும் ருஷ்ய சாராயமான வோட்காவை ருசித்துப் பார்த்து ஆபத்தில் இறங்க நான் தயாராக இல்லை. ஆனால், எனக்கு முன் பரிமாறப்பட்ட ருஷ்ய பாணியில் சமைக்கப்பட்ட பதார்த்தங்கள் அனைத்தையும் ஆனந்தமாகச் சாப்பிட்டேன். நல்லவேளையாக ஆளுநர் பிரெஞ்சு மொழியை நன்கு பேசினார். அதனால் நாங்கள் நன்கு பேசிக்கொள்ள முடிந்தது. கண்ணியமானவராகவும் உபசரிப்பில் சிறந்தவராகவும் தோன்றினார். உண்மையில் நான் சந்திக்க முடிந்த ருஷ்யர்கள் அனைவரும் அப்படித்தான் நடந்துகொண்டனர். எனினும், எனக்கு வேறொரு தகவல் கிடைத்தது; அவர்களிடம் அதிகாரப்பூர்வ விஷயம் குறித்த பரிவர்த்தனைகளில் ஈடுபடும்போது, இவ்வளவு இனிமையாக நடந்து கொள்வார்களா என்பது சந்தேகமாம்.

ஆளுநரின் மாளிகை புதிது. சமீபத்தில் கட்டப்பட்டது. உயர்தரமான பொருட்களால் நிரம்பியிருந்தது. மதிய உணவுக்குப்பின், சுற்றிக் காட்டுவதற்காக என்னை வெளியில் அழைத்துச்செல்லும் அளவுக்கு நல்ல மனநிலையில் அவர் இருந்தார். கரையிலிருந்து சில மைல் தூரத்தில் நின்றிருந்த ருஷ்ய போர்க்கப்பல்களை எனக்குக் காட்டினார். (உலகத்திலேயே பெரிய கப்பல்களில் சில). அவற்றுடன், மிக விரைவாகச் செல்லும் ’க்ரூய்சர்’களும் சேர்த்து இருபது இருக்கலாம்.

இவை தவிர்த்து அதிக எண்ணிக்கையில் சிறிய கப்பல்களும் டார்பிடோ படகுகளும் வேறு சில கலங்களும் நின்றிருந்தன. இந்தக் கப்பல்களுடன் இரண்டு லட்சம் வீரர்களும் அட்மிரல் அலெக்ஸீவ் கட்டுப்பாட்டில் இருக்கின்றனர். தூரக்கிழக்கின் வைஸ்ராயாக சமீபத்தில் ஜார் மன்னர் அவரை நியமித்தார். ருஷ்யாவின் முதன்மையான ராஜதந்திரி இவர் என்று சொல்கிறார்கள். நான் அங்கு சென்றிருந்தபோது கடற்படையின் போர்ப்பயிற்சிகளுக்கு வழிகாட்டி, மேற்பார்வையிட்டு கொண்டிருந்தார்; அதனால் அவரைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை.

இந்தப் போர்க்கப்பல்களும், துருப்புகளும் நிச்சயமாக ஜப்பானிடம் யுத்தம் செய்யத்தான் குவிக்கப்பட்டுள்ளன என்பது மிகவும் தெளிவு. தூரக்கிழக்கில் ஆதிக்கம் செய்யப்போவது ஜப்பானா அல்லது ருஷ்யாவா என்பதை அந்த யுத்தம் முடிவு செய்யக்கூடும்.

அக்டோபர் 28ந் தேதி ஜப்பானுக்குப் புறப்படுவது என்பது என் திட்டம்; ஆனால், ஸ்டீமர் என்றைக்குப் புறப்படப்போகிறது என்பதில் பெருங்குழப்பம். உறுதியான தகவலைப் பெறமுடியவில்லை. எனினும், இறுதியில் அந்த ஸ்டீமர் சனிக்கிழமைகளில் மட்டும்தான் புறப்படுகிறது என்பதைத் தெரிந்துகொண்டேன். இதனால் எனக்குப் பெரும் ஏமாற்றமே. ஜப்பான் பேரரசரின் பிறந்த நாள் கொண்டாட்டங்களின் போது நான் அங்கிருப்பதை இந்தத் தாமதம் கெடுத்துவிடலாம் என்று பயந்தேன். டோக்கியோவில் நவம்பர் 3ந் தேதி கொண்டாட்டத்தை நான் மிகவும் ஆவலுடன் எதிர்நோக்கியிருந்தேன். சீனாவில் எந்த விஷயம் குறித்தும் நம்பத்தகுந்த, உறுதியான தகவலை எப்போதும் பெறமுடியாது என்பது ஒரு விநோதம் தான்.

எனக்கு மேலும் இரண்டு நாட்கள் கையிலிருந்தன; இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி போர்ட் ஆர்தரைப்3 பார்க்கச் சென்றிருந்தேன். ஆளுநரின் முகாம் உதவியாளர் எனக்குத் துணையாக வந்தார். அந்த இடத்தை நாங்கள் மூன்று மணி நேரத்தில் அடைந்தோம். நாங்கள் அங்கு சென்றபோது, புதிதாக கட்டப்பட்டுக் கொண்டிருந்த ஹோட்டல் முடிவடையாமல் இருந்தது. ஆனால், போலிஸ் கமிஷனர் தனது இல்லத்தை எங்களது குறுகியகாலத் தங்கலுக்கு ஒதுக்கிக் கொடுத்தார். போலிஸ் அதிகாரிகளும் போலிஸ்காரர்களும். உத்தரவுக்காகக் காத்திருந்தனர்; எங்களுக்கு எந்தக் குறையும் இல்லை.

போர்ட் ஆர்தரில் ராணுவ சம்பந்தமான அம்சங்களே முதன்மையாக இருந்தன. நேர்த்தியான சீருடையில் அதிகாரிகளைப் பார்க்க முடிந்தது. அவர்கள் எல்லா சந்தர்ப்பங்களிலும் அதை அணிகிறார்கள்; கொசாக் வீரர்கள், அஸ்ட்ராக்கான் தொப்பிகளை அணிந்திருந்தனர்; துருப்புகள் அணிவகுத்துச் சென்று கொண்டிருந்தனர். குதிரைப்படையினர் துள்ளல் நடையில் சென்றனர்; கோட்டை சந்தடிகளாலும், ராணுவ நடவடிக்கைகளாலும் நிரம்பி இருந்தது.

கோட்டையின் படைமுகாமில் சுமார் 50,000 வீரர்கள் இருந்தனர்; வலிமையும், திறனும் மிக்கவர்களாகத் தோன்றினர்; எனினும், அவர்கள் சுத்தமாக இல்லை. கரையிறங்கும் பயிற்சிகளிலும், போலியான கப்பல் படை தாக்குதல்கள், அவற்றை எதிர்த்து நிற்பது போன்ற பயிற்சிகளிலும் அவர்கள் தொடர்ச்சியாக ஈடுபட்டிருந்தனர்.

நாங்கள் இங்கு வருவதற்கு பதினைந்து நாட்களுக்கு முன்புதான், பெரும் போலித் தாக்குதல் பயிற்சி ஒன்று நடைபெற்றதாம். 75,000 வீரர்களும் அனைத்து போர்க் கப்பல்களும் அதில் கலந்துகொண்டனவாம்.

அந்த இடத்தைச் சூழ்ந்திருந்த அனைத்துக் குன்றுகளும் வலிமையாகப் பலப்படுத்தப்பட்டிருந்தன. பலமான பீரங்கிகளும், நீண்ட தூரம் சுடக்கூடிய, நவீன பாணி துப்பாக்கிகளும் சரியான நிலைகளில் நிலைநிறுத்தப்பட்டிருந்தன. அந்நியர்கள், நெருங்கிச் சென்று அந்தப் பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆராயமுடியாது. என்னுடன் வந்த ருஷ்ய அதிகாரி குன்றின் மேல் என்னை அழைத்துச்சென்றார். அதனால், பாதுகாப்பு ஏற்பாடுகள் எப்படிச் செய்திருக்கிறார்கள் என்று நன்கு தெரிந்துகொள்ள முடிந்தது.

இவையனைத்தும் ருஷ்யர்கள் 99 ஆண்டுகளுக்குக் குத்தகை எடுத்திருந்த நீளமான அந்தச் சிறிய நிலப்பகுதியில் நடந்துகொண்டிருந்தன; அவர்களது கப்பல்களை நிறுத்த சிறிய இடமும், எரிபொருளான கரியை நிரப்ப ஒரு இடமும் வேண்டும் என்பதற்காக இந்த இடத்தை வாங்கியுள்ளனர்! கோட்டைச் சுவர்களுக்கு அருகில் அதிக நேரம் நிற்க வேண்டாம் என்று என்னிடம் கூறினார்கள்; அதுபோல், நான் பார்க்கும் எதையும் புகைப்படங்களும் எடுக்க வேண்டாம் என்றும் கூறினர்.

வைஸ்ராய் மாளிகையின் வெளிப்புறத்தைப் பார்க்க வாய்ப்புக் கிடைத்தது. மாளிகைக்கு அடுத்தாற் போலிருந்த பூங்காவுக்கும் சென்றேன். அங்கு மிலிட்டரி பேண்டு குழுவினர் இசைத்துக் கொண்டிருந்தார்கள். சிறிது நேரம் அதைக் கேட்டுக்கொண்டு இருந்தேன். போர்ட் ஆர்தரின் நாகரிகமும் அழகும் நிறைந்த பெண்மணிகள் அந்தப் பூங்காவில் பரபரப்பின்றி உலவிக்கொண்டு இருந்தனர். ருஷ்ய உணவகம் ஒன்றில் அற்புதமான டின்னர். அதன்பின் ருஷ்யக் குழுவினரின் சர்க்கஸ் நிகழ்ச்சி ஒன்று. இந்தியாவில் நான் பார்த்திருக்கும் இதைப் போன்ற நிகழ்ச்சிகளைக் காட்டிலும் இந்த சர்க்கஸ் சிறந்ததாக எனக்குத் தோன்றியது.

அடுத்ததாக நான் சென்றது கஃபே சாந்தனி. முழுமையான சீருடையில், இடையில் வாட்களுடன் ருஷ்ய அதிகாரிகள் அங்கு குழுமியிருந்தனர். ஐரோப்பிய-ருஷ்யாவிலிருந்தே அவர்களுடன் வந்திருந்த, குறிப்பிட்ட வகுப்பைச் சேர்ந்த பெண்கள் ஏறத்தாழ அனைத்து அதிகாரிகளுடனும் இருந்தனர். சீருடை அணிந்த ஓர் ஆங்கிலேய அதிகாரி இதுபோல் பெண் துணையுடன் பொது இடத்தில் பார்க்கப்பட்டால் அவர் உடனடியாகப் பதவிநீக்கம் செய்யப்படுவார். எனினும், பொது இடத்தில் ருஷ்யர்களுக்கான விதிகள் வித்தியாசமாகத்தான் இருக்கின்றன!

அனைத்து ருஷ்ய நகரங்களைப் போல் போர்ட் ஆர்தரிலும் பின்னிரவு கொண்டாட்டங்கள் புது நாகரிகமாகக் களைகட்டின. அனைவரும் இரவு முழுவதும் கண்விழித்து உற்சாகமாகவும் இன்பமாகவும் பொழுதைக் கழிக்கின்றனர். அதற்கு ஏற்றாற்போல் மறுநாள் தாமதமாகவே கண்விழிக்கின்றனர். அதனால் அடுத்த நாள் மதியத்துக்குமுன் பணிகள் எதுவும் அங்கு முடியாது; எவரையும் சந்திக்கவும் முடியாது. நான் டால்னிக்குத் திரும்பிய மறுநாள், அந்த நாள் முழுவதும் வெளியில் செல்லவே இல்லை. போர்ட் ஆர்தர் என்னை அயர்ச்சியடையச் செய்துவிட்டது.

சந்தித்த மொழிப்பிரச்னை நிஜமானது. நாங்கள் என்ன சொல்கிறோம் என்பதைப் புரியவைக்க முடியவில்லை; அதுவும் குறிப்பாக வேலைக்காரர்களிடம் நாங்கள் மிகவும் சிரமப்பட்டோம். சில அதிகாரிகள் மட்டுமே அதுவும் உயர் பொறுப்புகளில் உள்ளவர்கள் மட்டுமே எப்போதாவது பிரெஞ்சு, ஜெர்மன் அல்லது ஆங்கிலம் பேசினர்.

அக்டோபர் 31 அன்று மதியம் எஸ்.எஸ். அர்ஜயான் என்ற ருஷ்யக் கப்பலில் ஏறினோம். இரண்டாயிரம் டன் எடையுள்ள இந்தக் கலம் வசதியாக இருந்தது; உயர்தரமான பொருட்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. உணவருந்தும் பகுதியும், புகை பிடிப்போருக்கான தனியிடமும் பெரிதாகவும் வசதியாகவும் இருந்தன. அதிகாரிகள் அனைவரும் ருஷ்யர்கள் தான். ஆனால், பயணிகள் பல தேசத்தையும் சேர்ந்தவர்களாக தோன்றினர். நல்வாய்ப்பாக இதமான, ரசிக்கும்படியான வானிலை நிலவியது. இரண்டு நாள் பயணத்தில் கொரியாவுக்குச் சொந்தமான, பாறைகள் நிறைந்த தாழ்வான நிலப்பரப்பு கொண்ட தீவுகளைப் பார்த்தோம்.

நவம்பர் 2. ஜப்பானின் நிலப்பரப்பு கண்ணில் தெரிந்தது.

___________

1. நியூச்வாங் – இன்று, யிங்கோவ் (Yingkou)

2. டால்னி (Dalny- ருஷ்ய மொழி உச்சரிப்பு)

3. போர்ட் ஆர்தர்: லூஷன் போர்ட் என்று முன்பு அழைக்கப்பட்ட துறைமுக நகரம், இந்நாள் டாலியன் (Dalian).

(தொடரும்)

___________
ஜகத்ஜித் சிங் எழுதிய “My Travels in China, Japan and Java, 1903” நூலின்  தமிழாக்கம்

பகிர:
அக்களூர் இரவி

அக்களூர் இரவி

சொந்த ஊர் மாயவரம். தொலைத் தொடர்புத் துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். 'இந்தியா என்கிற கருத்தாக்கம்', ‘காந்தியும் பகத் சிங்கும்’, ‘அரசியல் சிந்தனையாளர் புத்தர்’ உள்ளிட்ட நூல்களை மொழிபெயர்த்திருக்கிறார். திசையெட்டும் மொழியாக்க விருது பெற்றவர். தொடர்புக்கு : thendralaham@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *