நவம்பர் 2 ஜப்பான் நிலப்பரப்பு கண்ணில் தெரிந்தது. அழகிய துறைமுகம் நாகசாகியில் மதியம் நங்கூரமிட்டோம். ஜப்பான் குறித்து எனக்கிருந்த அபிப்பிராயங்கள் சாதகமாகத்தான் இருந்தன. நான் பார்த்த துறைமுகங்களில் இது மிகவும் அழகியது. மூன்று புறங்களிலும் குன்றுகள்; அவற்றில் அடர்த்தியாக வளர்ந்திருந்த மரங்கள், பசுமையாக, கண்ணுக்குக் குளிர்ச்சியாகத் தென்பட்டன.
வானிலை மகிழ்ச்சியளிப்பதாக இருந்தது; நவம்பரில் பஞ்சாபில் நிலவும் சூழலை நினைவூட்டியது. பல நாடுகளின் கப்பல்களைத் துறைமுகத்தில் பார்க்க முடிந்தது. கடந்த சில வாரங்கள் வடக்கு சீனாவிலிருந்த நாங்கள் பார்த்து, பழகியிருந்த காட்சிகளிலிருந்து இங்கு நாங்கள் கண்ட ஒட்டுமொத்த காட்சிகளும் சுற்றுப்புறச் சூழலும், வானிலையும் முற்றிலும் தெளிவாக மாறுபட்டிருந்தன. ஆனால், இந்த மாற்றம் மிகவும் ஏற்கத்தக்கதாக இருந்தது.
மருத்துவப் பரிசோதனை சம்பிரதாயங்கள் முடிந்தன. விரைவாகக் கரையை அடைந்து நாகசாகி என்ற ஹோட்டலில் தங்கினோம். தங்குவதற்கு அனைத்து விதத்திலும் ஏற்றதாக, மிகவும் விரும்பக்தக்க அந்த இடம் இருந்தது. நாங்கள் அங்கு சென்று சேர்ந்த மறுநாள் ஜப்பானியப் பேரரசரின் பிறந்தநாள். அதைக் கௌரவிக்கும் விதமாகத் துறைமுகத்தில் நின்றிருந்த அனைத்துக் கப்பல்களும் கொடிகளாலும் வேறு வகையிலும் அழகாக அலங்கரிக்கப்பட்டிருந்தன; போர்க்கப்பல்கள் அனைத்தும் பீரங்கிக் குண்டுகளை வெடித்து அவருக்கு மரியாதை செலுத்தின. கவர்னரின் அதிகாரப்பூர்வ இருப்பிடத்துக்குச் சென்று அவரைச் சந்தித்தேன். பேரரசரின் பிறந்த நாளையொட்டி எனது நல்வாழ்த்துகளை அவரிடம் தெரிவித்தேன்.
அந்த அதிகாரி என்னை எந்த முறையில் வரவேற்பது என்று தெரியாமல் மிகவும் குழம்பிப் போனார்; நான் தங்கியிருக்கும் இடத்துக்கே வந்து முதலில் என்னைச் சந்திக்காததற்கு தனது ஆழ்ந்த வருத்தங்களைத் தெரிவித்தார். பேரரசரின் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் தொடர்பான ஏற்பாடுகளால் அவருக்கு இந்தத் தடங்கல் ஏற்பட்டதாம். ஆனால், இதைப்போன்ற சந்தர்ப்பங்களில் கடைப்பிடிக்க வேண்டிய வழக்கமான சம்பிரதாயம் கட்டாயம் அனுசரிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். ஒரு புதுமையான முறையில், சிரமமான அந்தக் காரியத்தை அவர் செயல்படுத்தி முடித்தார்.
அதன்படி, கவர்னரின் செயலர் அவரது அறைகளில் ஒன்றில் என்னை அமரச் சொன்னார்; அதை என்னுடைய இருப்பிடமாகக் கருதிக்கொள்ளக் கூறினார்; சம்பிரதாயப்படி என்னை ’எனது இருப்பிடத்தில்’ கவர்னர் சந்திப்பார். ஆக, அவர் கூறியபடியே அந்த விஷயம் திருப்திகரமாக முடிந்தது.
அறைக்கு வந்த கவர்னர் பகட்டான சீருடையில் இருந்தார். சீருடையின் மார்புப் பகுதி பதக்கங்கள் போன்றவற்றால் நன்கு அலங்கரிக்கப்பட்டிருந்தது. அவர் பதற்றமாக இருப்பது வெளிப்படையாகத் தெரிந்தது. சாதாரணமாக நன்கு ஆங்கிலம் பேசக்கூடிய அவரால் அந்த மொழி மறந்துபோனதுபோல் சரியாகப் பேச முடியவில்லை. ஆகவே அருகிலிருந்து பிரிட்டிஷ் கான்சலை துவிபாஷியாக இருக்கும்படி வேண்டிக்கொண்டார். சம்பிரதாயமாக முகமன் கூறுதலும் பாராட்டுச் சொற்களும் பரிமாறிக் கொள்ளப்பட்டதும் சந்திப்பு முடிந்தது; கவர்னர் விடைபெற்றார்.
கவர்னர் என்னை வந்து ’சந்தித்த’ அந்த நிகழ்வில் பேரரசரின் பிறந்தநாள் குறித்து எதுவும் உரையாட வேண்டாம் என்று பிரிட்டிஷ் கான்சல் என்னை எச்சரித்திருந்தார். மீண்டும் சில நிமிடங்கள் கழித்து கவர்னரை நான் சந்திக்கச் செல்லும்போது அதைப்பற்றிப் பேசுவதற்கு, அந்தக் குறிப்பையோ சொற்களையோ பத்திரப்படுத்திக்கொள்ளச் சொன்னார். அவரது ஆலோசனையை நான் சரியாகப் பின்பற்றினேன். சிறிது நேரம் சென்றபின், பேரரசரின் நலனுக்காக நாங்கள் அனைவரும் மேலதிக இனிப்புடன் ஷாம்பெய்ன் அருந்தினோம்.
ஹோட்டலில் மதிய உணவு முடிந்தது. உடனடியாக ரயில் பயணமாக, ஷிமோனோசேகி வழியாக, கோபே மற்றும் யோகோஹாமா நோக்கிப் புறப்பட்டோம். கவர்னரும் வேறு சில அதிகாரிகளும் வழியனுப்புவதற்காக நிலையத்துக்கு வந்திருந்தனர். நாங்கள் பயணித்தது குறுகிய ரயில் தடம் (நேரோ கேஜ்). ஜப்பானின் அனைத்து ரயில் பாதைகளும் இப்படித்தான் இருக்கின்றன. பெட்டிகளில் இருக்கைகள், அந்தப் பெட்டியின் முழு நீளத்துக்கும் இணையாக அமைக்கப்பட்டுள்ளன; ரயில் போதுமான வசதியுடன் இருந்தது. ஜப்பான் பற்றி அதிகம் கேள்விப்பட்டிருந்தேன்; அதனால், பார்த்த அனைத்தும் இயல்பாகவே ஆர்வமூட்டுவதாக இருந்தன. நேரம் முழுவதையும் அந்த விவரங்களை மனத்தில் குறித்துக் கொள்வதிலும், ஒப்பீடு செய்வதிலும் ஈடுபட்டிருந்தேன்.
பயணத்தில் கடந்த அந்த நாட்டின் நிலப்பரப்பு இத்தாலியிலும் பிரான்ஸிலும் நான் பார்த்திருந்ததை ஓரளவுக்கு ஒத்திருந்தன. அவ்வப்போது, சிறிது நேரம் எங்கள் ரயில் கடற்கரையோரம் பயணிக்கும்; திரும்பவும் கிராமங்கள், வீடுகள். கிராமங்கள் அனைத்தும் ஓவியம் போன்று மிகவும் அழகாகக் காட்சியளித்தன. இடையில் இடைவெளியே இல்லை என்பதுபோல் நெருக்கமாக அமைந்திருந்தன. தேசத்தின் மக்கட்தொகை அடர்த்தியாக இருப்பதை அவை எடுத்துக்காட்டின.
கிராமத்தின் அனைத்து வீடுகளும் ரயில் நிலையக் கட்டடங்களும் மரங்களால் கட்டப்பட்டிருந்ததைக் கவனித்தேன். பெரிய நிலையங்களில்தான் அந்த ரயில் நின்று சென்றது. மக்கள் வந்து போகும் அழகை வேடிக்கை பார்ப்பதே ஆர்வம் தருவதாக இருந்தது. அவர்கள் அணியும் காலணிகளின் அடிப்பகுதி மரத்தால் ஆனது. அதையணிந்து மக்கள் கூட்டம் நடக்கையில் எழும் வித்தியாசமான சப்தம் மிகவும் சுவாரஸ்யமான அனுபவத்தைத் தந்தது. ரயில்வே அதிகாரிகளையும் தனிமனிதர்கள் சிலரையும் தவிர்த்து, அனைவரும் ஜப்பானிய ஆடைகளையே அணிகின்றனர். அதனுடன் ஐரோப்பியப் பாணி தலைத்தொப்பி.
இரவு பத்து மணிக்கு மெய்ஜி என்ற நிலையத்தை அடைந்தோம். பிரிட்டிஷ் கான்சலும் அந்த நகரத்தின் மேயரும் சில போலிஸ் அதிகாரிகளும் எங்களை நிலையத்தில் சந்தித்தனர். தென் பகுதித் தீவிலிருக்கும் அந்த ரயில் பாதையின் இறுதி முனையத்தை அடைந்துவிட்டோம்.
மெய்ஜி, நன்கு பராமரிக்கப்படும் ஒரு சிறிய மாகாண நகரம் என்பதைத் தவிர்த்து ஆர்வமூட்டக்கூடியது என்று சொல்வதற்கு ஏதுமில்லை. படகு ஒன்றில் ஏறி ஜலசந்தியைக் கடந்தால் ஷிமோனோசேகி. அன்று இரவை ரயில்வே ஹோட்டலில் கழித்தோம். அங்கு தங்கியது எங்களுக்கு மிகவும் திருப்திகரமாக இருந்தது. ஹோட்டலை ஜப்பானியர்கள்தான் நிர்வகிக்கிறார்கள். ஹோட்டலில் கிடைத்த வசதியும் சுத்தமும் நல்ல சேவையும் வேறு எங்கும் பார்க்க முடியாதவை.
மறுநாள் நகரத்தின் ஒரு பகுதியைப் பார்த்துவிட்டு, ரயிலில் எங்கள் பயணத்தைத் தொடர்ந்தோம். அந்தப் பயணத்தின் போதுதான் ஜப்பானின் பிரசித்தி பெற்ற உள்நாட்டுக் கடல் (Inland Sea)1 எனும் அற்புதமான காட்சியைப் பார்க்க முடிந்தது. அந்த இயற்கை அமைப்பைப்பற்றி நான் அதிகம் கேள்விப்பட்டிருந்தேன். இயற்கை முதலில் ஜப்பான் தீவுகளை உருவாக்கியிருக்க வேண்டும்; அதன்பின் உள்நாட்டுக் கடலை உண்டாக்கி, அதற்குப்பிறகு அங்கொன்றும் இங்கொன்றுமாக ஆயிரக்கணக்கான தீவுகளை ஏற்படுத்தியிருக்க வேண்டும். இந்தச் சிந்தனை விநோதமாகத் தோன்றியது. ஆனால், இயற்கை உலகத்தின் எப்பகுதியிலும் செய்யாததை ஜப்பானில் உருவாக்கியிருக்கிறது என்றுதான் சொல்லவேண்டும்.
காட்சிகள் மிக அழகிய ஓவியங்களாய் எங்களைத் தொடர்ந்து கொண்டிருந்தன; அழகான சமவெளிகளின் ஊடாக ரயில் எங்களை அழைத்துச் சென்றது; அவ்வப்போது இந்த மனதைக் கொள்ளைக் கொள்ளும் கடலின் காட்சியையும் காட்டியது. இருள் கவிந்ததற்குப்பின் அந்தக் காட்சி மேலும் கவர்ச்சிகரமாக இருந்தது; வீசிக்கொண்டிருந்த நிலாவொளி அந்த ஒட்டுமொத்த சூழலுக்கும் முழுமையான உணர்வுவயப்படுத்தும் தன்மையை அளித்தது.
எனக்கு ஒதுக்கப்பட்டிருந்த சிறப்புப் பெட்டியில் உணவருந்தினேன்; உறங்கினேன். வசதியான பயணம். அடுத்த நாள் காலை எட்டு மணி அளவில் கோபே நிலையத்தை அடைந்தோம். ஜப்பானிலிருக்கும் மிகப் பெரிய ஒப்பந்த துறைமுகங்களில் அதுவும் ஒன்று. வளர்ந்து வரக்கூடிய, செல்வம் கொழிக்கும் நகரம் போல் தோன்றியது. அழகான இடத்தில் அமைந்திருந்த அந்த நகரத்தைச் சூழ்ந்தாற்போல் குன்றுகள். ஐரோப்பியர் வாழும் பகுதி, அழகிய வீதிகளும் நவீன வணிக வளாகங்களும் ஹோட்டல்களும் கொண்டதாக இருந்தது.
கோபேயிலிருந்து மதியம் ஒரு மணிக்குப் புறப்பட்டோம். ஒஸாகாவை அடையும் வரை, மீண்டும் அழகிய இயற்கை காட்சிகள் நிறைந்த பிரதேசத்தின் ஊடாக ரயில் பயணம். உண்மையான ஜப்பான் தேசம் குறித்த நல்லதொரு பார்வை எங்களுக்குக் கிடைத்தது. இந்த நகரம் ‘ஜப்பானின் மான்செஸ்டர்’ என்று அழைக்கப்படுகிறது. ஏராளமான உற்பத்திச்சாலைகள் அங்கிருப்பதால் அந்தப் பெயரால் அது அழைக்கப்படலாம். அதிக எண்ணிக்கையிலான புகைபோக்கிகள் கண்ணில்பட்டன; அடிப்படையில் இது பொருள் உற்பத்தி நகரம் என்பதற்கான சாட்சிகளாக அவை நின்றன. ரயில் தடத்தை அணைத்தாற்போல் இருந்த நிலப்பரப்பில் அற்புதமான வடிவமைப்புகளுடன் ஆர்வத்தைத் தூண்டும் விளம்பரப் பலகைகள். அவை சுவாரஸ்யத்தைக் கூட்டின. விளம்பர உத்திகள் நன்கு செழித்துக்கொண்டிருக்கும் அமெரிக்காவிலிருந்து இந்த விதமான பாணி இறக்குமதி செய்யப்பட்டிருக்கக்கூடும்.
புராதன தலைநகரான கியோட்டோ எங்களது அடுத்த நிறுத்தம். ஆனால். எனது திரும்பும் பயணத்தின் போதுதான் இந்த இடத்தைச் சுற்றிப்பார்த்தேன். அப்போது எனக்கு அதிக நேரம் ஒதுக்க முடிந்தது; ஆகவே, இந்த நகரம் குறித்த விவரிப்புகளை இப்போது தவிர்க்கிறேன். முக்கியமான நிலையங்கள் அனைத்திலும் கவர்னரோ அவரது முதல் செயலரோ போலிஸ் இன்ஸ்பெக்டருடன் நிலையத்தின் நடைமேடையில் என்னை வரவேற்கக் காத்துக்கொண்டு இருந்தது எனக்கு மகிழ்ச்சியளித்தது; வியப்பாகவும் இருந்தது.
ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அவர்கள் தம் ‘விசிட்டிங் கார்டை’ என்னிடம் கொடுத்தனர். அதில் அவர்கள் பெயர் ஜப்பானில் எழுதப்பட்டிருந்தது; சிலவற்றில் ஆங்கிலம் அல்லது பிரெஞ்சு மொழியிலும் எழுதப்பட்டிருந்தது. மிகவும் மரியாதையுடன் அவர்கள் நடந்துகொண்டனர்; அவர்கள் தலைகுனிந்து வணங்கிய முறை மிகவும் உளப்பூர்வமானதாக இருந்தது. நான் பயணித்த ரயில், நிலையத்தைவிட்டு நன்கு வெளியில் வரும்வரை, அனைத்து சந்தர்ப்பங்களிலும், இருந்த இடத்தைவிட்டு அசையாமல், என் பார்வையில் படும்படி நின்றிருந்தனர். பணிவில் ஜப்பானியர்கள், பிரெஞ்சுக்காரர்களையும் விஞ்சியவர்களாக இருந்தனர்.
ரயில் நிலையங்கள் முழுமையான அமைதியுடன் குழப்பமற்றும் இருந்தன என்பது மிகவும் கவனிக்கவேண்டிய அம்சம். இவற்றை இந்தியாவில் நமக்குப் பழக்கமானவையுடன் ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ளலாம். பயணிகளுக்கு உணவையும் சிற்றுண்டிகளையும் அளிப்பதற்கான ஏற்பாடுகளும் அற்புதம். நடைபாதை வியாபாரிகள் நடைமேடைகளில் அரிசிச் சோறு, மீன், முட்டை, ரொட்டி போன்றவற்றை விற்றுக்கொண்டிருந்தனர். சுத்தமான, மெல்லிய, மரத்தால் செய்த பெட்டிகளில் அவற்றை அளித்தனர். அந்தத் தேசத்தின் சாராயமான ‘சேக்’ (Sake), மற்றும் பியர் போன்றவையும் விற்கப்பட்டன. உண்மையில், ஒரு முழு உணவையும் மிகக் குறைந்த விலையில் நீங்கள் வாங்கி உண்ண முடியும்.
மற்றுமொரு இரவு ரயிலில் கழிந்தது; மறுநாள் யோகோஹாமாவை அடைந்தோம். அங்கு பிரிட்டிஷ் கான்சல் என்னை சந்தித்தார். அவருடன் சமீபத்தில் புனரமைக்கப்பட்ட ஓரியண்டல் பேலஸ் ஹோட்டலுக்குச் சென்றேன். அந்த ஹோட்டல் தனது பெயரை பொய்யாக்கிவிடவில்லை. ஓர் அரண்மனை போலவே இருந்தது. நிச்சயமாக, மிகுந்த சொகுசு வசதிகளுடன் கூடிய ஒரு ‘கேரவன்செராய்’ (Caravanserai-நெடுவழி பயணச் சத்திரம்). சூயஸ் கால்வாய்க்குக் கிழக்கிலுள்ள பிரதேசங்களில் இதைப்போன்ற ஒன்றில் இதுவரை நான் தங்கியதில்லை.
அனுபவம் மிக்க ஒரு பிரெஞ்சுக்காரர் அந்த ஹோட்டலின் மேனேஜர். உலகின் இந்தப் பகுதியில் அவர்கள் நீண்ட காலமாக வசிக்கிறார்கள்; ஆகவே ஒரு வெற்றிகரமான வியாபாரத்துக்கு அடிப்படையான நிலைமைகளுக்கு ஏற்ப தம்மைத் தகவமைத்துக் கொள்கிறார்கள். குற்றம் காண நமக்கு ஏதும் அதில் இல்லை. உணவு, கலப்படமற்ற பாரிஸ் பாணி. எங்கள் அறைகளிலிருந்து துறைமுகத்தின் அழகிய காட்சியைக் காண முடிந்தது. நங்கூரமிட்டிருந்த பல நாடுகளின் கப்பல்களும் அசைந்தாடிக்கொண்டிருந்தன.
இத்தகைய மகிழ்ச்சி தரும், ஜப்பானல்லாத சூழலில் உற்சாகமாக ஒன்பது நாட்களைக் கடத்தினோம். சர் கிளாட் மெக்டொனால்டு அவர்களைச் சந்திக்க வேண்டும் என்பதற்காக, நவம்பர் 7ம் தேதி டோக்கியோவுக்கு ஒரு நாள் மட்டும் சென்று வந்தேன். ஒரு மணிக்கும் குறைவான நேரத்தில் நாங்கள் அங்கு போய்ச் சேர்ந்துவிட்டோம். சென்று சேர்ந்த உடனேயே பிரிட்டிஷ் அமைச்சர் சர் கிளாட் மெக்டொனால்டைச் சந்திக்கச் சென்றேன். மரியாதையும் வசீகரமும் நிறைந்த அவரது பண்பு நான் இயல்பான நிலையிலிருக்க உதவியது. எங்கள் சந்திப்பின் போது இறுக்கம் நிலவுமோ என்ற சந்தேகத்தை அது போக்கியது.
1900களில் பிரிட்டிஷார் பிகிங்கை முற்றுகையிட்ட பெரும் நிகழ்வில் மேன்மைக்குரிய அவர்தான் நாயகன். இக்கட்டான மற்றும் அந்த ஆபத்தான காலகட்டத்தில், வெளிநாட்டு அமைச்சர்களும், அங்கு வசித்த வெளிநாட்டவர்களும், பிரிட்டிஷ் தூதரக வளாகத்தில்தான் தஞ்சம் புகுந்தனர். நான் ஜப்பானில் தங்கியிருந்த நேரத்தில் அவர் செய்த கனிவான உதவிகளுக்கும் ஆலோசனைக்கும் சர் கிளாட் அவர்களுக்கு மிகவும் நன்றிக்கடன்பட்டுள்ளேன்.
இங்கிருக்கும் பிரிட்டிஷ் தூதரகம் விஸ்தாரமான இரண்டு மாடிக் கட்டடம். பேரரசரின் அரண்மனை மற்றும் வளாகத்துக்கும் எதிரில் அமைந்திருக்கிறது. கிங் எட்வர்டின் பிறந்த நாளை சர் கிளாடும் லேடி மெக்டொனால்டும் கொண்டாடினர்; அதையொட்டி, அன்று மதியத்துக்கு மேல் தோட்டத்தின் புல்வெளியில் விருந்து ஒன்றை அளித்தனர். யோகோஹாமா மற்றும் டோக்கியோவின் மேல்தட்டு மனிதர்கள் அழைக்கப்பட்டிருந்தனர். ஐரோப்பிய மற்றும் ஜப்பானியச் சமூகத்தினர் பெருமளவுக்குக் கலந்துகொண்டிருந்தனர்.
முதல் முறையாக, முதல் நிலை வெளிநாட்டு அமைச்சர்களையும் ஜப்பானிய மந்திரிகளையும் சந்தித்தேன். அதுபோலவே அதிக எண்ணிக்கையில் கப்பற்படையின் ராணுவத்தின் அதிகாரிகளையும் சந்தித்தேன். ஜப்பானிய அமைச்சர்கள் அனைவரும் ஐரோப்பியப் பாணி ஃப்ராக்-கோட்டும் தலையில் தொப்பியும் அணிந்திருந்தனர். பார்க்கையில், அதிக அளவு அசௌகரியமாகத் தோன்றினர்; ஆகப் பணிவுடன் நடந்துகொண்டிருந்த அந்த அமைச்சர்கள், அணிந்திருந்த மேற்கத்திய உடைகளால் வெளிப்படையாகவே மிகப் பரிதாபமாகத் தோன்றினர்.
இத்தகைய பிரதிநிதிகளுடன் நன்கு பழகுவதற்கு ஒருவரது மொழி வளம் அடிப்படையில் மிகவும் உயர்வாக இருக்கவேண்டும். அவர்களில் சிலர் மட்டுமே, ஜப்பானியத் தாய்மொழி தவிர்த்து பிரெஞ்சு மொழி பேசுகின்றனர். சிலர் ஆங்கிலம் மட்டும் பேசுகின்றனர். சிலரோ, ஜெர்மன் மட்டும் பேசுகின்றனர். இதற்கான காரணம் மிகவும் எளிமையானது. ஒரு நாட்டுக்குக் கல்விக்காகவும் பயிற்சிக்காகவும் செல்லும் ஒருவர் அந்த நாட்டின் மொழியைக் கற்றுக் கொள்கிறார்.
ஒரு திட்டத்தை ஜப்பானியர்கள் நீண்ட நாட்களாகப் பின்பற்றுகின்றனர். குறிப்பிட்ட ஒரு நாடு, எந்த விஷயத்தில் திறன் மிக்கதாக, பிரசித்தி பெற்றதாக இருக்கிறதோ அந்த நாட்டுக்குத் தம் மனிதர்களை ஜப்பான் அனுப்புகிறது. இவ்வாறு ஜப்பானியர்கள் பல்வேறு நாடுகளுக்குச் செல்ல வேண்டிய தேவை எழுகிறது. அவ்வகையில்தான் அந்தப் புல்வெளி விருந்தில் பல்வேறு மொழிகளைக் கேட்க முடிந்தது, உண்மையில் எல்லா இடத்திலும் வெளிநாட்டில் படித்த ஒரு ஜப்பானியரைச் சந்திக்க முடிந்தது.
முக்கிய ஆளுமைகளான பிரதம அமைச்சர் கவுண்ட் கட்சுரா; அயல் துறை மந்திரி பரோன் கோமுரா; அரண்மனை பணிகள் துறை அமைச்சர் விஸ்கவுண்ட் தனாக்கா; அட்மிரல் டோகோ, டில்லி தர்பாரில் கலந்து கொண்டிருந்த ஜெனரல் ஒக்கு ஆகியோரை அந்தத் தருணத்தில் சந்தித்து உரையாட முடிந்தது. இறுதியாக, ஆனால் மற்ற எவரையும் காட்டிலும் இவர் குறைந்தவரல்ல, அரண்மனையின் ‘கிராண்ட் மாஸ்டர் ஆஃப் செரிமனிஸ்’ (அரண்மனை நிகழ்ச்சிகளை ஒருங்கிணைப்பவர்); அவை சிறப்பாக நடப்பதில் முதன்மைப் பாத்திரம் வகிப்பவர்; அவர் பெயர் பரோன் சன்னோமியா; குறிப்பாக, அதிக அக்கறையுடனும் மரியாதையுடனும் என்னைக் கவனித்துக் கொண்டார்; எனக்குத் தேவைப்பட்ட சாத்தியமான உதவி அனைத்தையும் உடனடியாகச் செய்து தர தயாராக இருந்தார். கடந்த காலத்தில், அரண்மனை நடைமுறைகளில் அந்த பரோன் ஒரு மாஸ்டர். சடங்குகளின் அனுசரிப்புகள் வாழ்க்கையின் முக்கிய அங்கமாக இருக்கும் நாட்டில், இது ஒரு பெரிய விஷயமாகும்.
அந்த விருந்தின்போது ஜப்பானியப் பெண்மணிகள் சிலரைச் சந்திக்கும் நல்வாய்ப்பும் எனக்குக் கிடைத்தது. அவர்களில் பலர் ஐரோப்பிய பாணி உடை அணிந்திருந்தனர். மற்றவர்கள் தமது தேசத்துப் பாணியில் உடையணிந்திருந்தினர். அவர்களது அந்த ‘தனித்த’ அழகுக்கு அந்த பாரம்பரிய உடை, மிகச் சமீபத்திய ‘ஒர்த் அல்லது பாக்வின்’ (Worth or Paquin) வடிவமைத்த ஆடைகளைக் காட்டிலும், மிக அழகாகப் பொருந்தியிருந்தது என்பதை ஒப்புக்கொள்ளத்தான்வேண்டும். ஐரோப்பிய ஆடைகளை அணியும் பெண்கள் அதற்கேற்ற ஒருவிதமான உடல்வாகுடன் இருக்கவேண்டும்; உடலை நன்கு நிமிர்த்தியபடி, அவர்கள் நடக்கும் விதமும் மிகவும் முக்கியம். அப்போதுதான் அந்த உடையின் சிறப்பை நாம் பார்க்க முடியும். ஆனால், இவை ஜப்பானியப் பெண்களிடம் காணக்கிடக்கவில்லை. சில பெண்மணிகள் ஐரோப்பியப் பாணி காலணிகளும் அணிந்திருந்தனர். ஆனால், அவர்கள் மிகவும் சிரமப்பட்டே நடந்தனர். ஜப்பானியப் பெண்கள் தங்களது கால்விரல்களை உட்பக்கமாகத் திருப்பி நடக்கும் இயல்புடையவர்களாதலால் அவர்களது நடை சற்று நளினக்குறைவாகவே இருந்தது. ஜப்பானிய பெண்கள் மிகவும் கூச்ச சுபாவம் கொண்டவர்களாக இருக்கிறார்கள். மற்றவர்களிடம் அதிகம் பேசுவதில்லை. கேட்கும் கேள்விகளுக்கு அவர்களது பதில் பொதுவாக ஒற்றைச் சொல்லாகத்தான் இருக்கிறது: மிகவும் மென்மையான குரலில் உதிர்க்கப்படும் ‘ஒயி’ அல்லது ‘யெஸ்’ என்ற சொல்லுடன் ஒரு புன்சிரிப்பு, அத்துடன் ஒரு தலைகுனிந்து வணங்குதல் இருக்கும்.
அவர்களுக்குள்ளாகவே பரிச்சயமற்றவர்கள்போல் நடந்துகொள்கிறார்கள். நெருக்கமற்றவர்களாகவும் தங்கள் அணுகுமுறையில் மிகவும் சடங்கு சார்ந்த அனுசரிப்புகள் கொண்டவர்களாகவும் தென்படுகிறார்கள். அவர்களது நாட்டைச் சேர்ந்த ஒருவர் வணக்கம் தெரிவிக்கும் போதும், வழக்கமான முறையில் முழந்தாள்களைத் தொட்டு தலைகுனிந்து வணங்கும் சடங்கு பரிமாறிக்கொள்ளப்படுகிறது. உரையாடலின்போது ஏதாவது சிறப்புக் குறிப்பு தெரிவிக்கப்பட்டாலோ பாராட்டுரைகளின் போதோ குனிந்து வணங்கும் சடங்கைத் திரும்ப திரும்பச் செய்வார்கள். ஜப்பானியர்கள் மத்தியில் கைகுலுக்கும் பழக்கம் ஏனோ புழக்கத்தில் இல்லை. விருந்துக்கு இடையில் முறையாக அறிவிக்கப்படாத ஒரு நடன நிகழ்ச்சி. அனைத்தும் நின்றுபோயின.
இரண்டு மணி நேரம் கழித்து ஆர்வத்துடனும் புதுமையான அனுபவங்களுடனும் அங்கிருந்து புறப்பட்டோம். விருந்துபசாரம் செய்தவரிடமும் அவரது மனைவியிடமும் விடைபெற்றுக் கொண்டோம். ஷின்பாஷியிலிருந்து ஐந்து மணி ரயிலில் ஏறினோம். நல்ல கூட்டம். புல்வெளி விருந்தில் கலந்துகொண்டவர்கள் பலரும் ரயிலில் இருந்தனர். வானிலை மிகவும் குளிராக இருந்தது. ஓவர் கோட் அணிவது மிகவும் அவசியமாக இருந்தது.
ஷாப்பிங் செய்வது எனது பொழுதுபோக்கு. அது ஏற்படுத்திய தூண்டுதல் உணர்வை என்னால் தவிர்க்க முடியவில்லை. உள்ளூரில் தயாரிக்கப்பட்ட கவர்ச்சிகரமான பொருட்களால் கடைகள் நிரம்பி வழிந்ததும் அதற்கொரு காரணமாக இருந்தது; தந்தத்தில் செதுக்கு வேலைப்பாடுகள் நிறைந்த பொருட்கள், அரக்கு வேலைப்பாடுகள், தங்கம், வெள்ளி, தாமிரத்தில் மெருகேற்றப்பட்ட பொருட்கள்; முத்துகளின் தாய் என்று சொல்லப்படும் இறகு வடிவ சிப்பி பதிக்கப்பட்ட பொருட்கள், பட்டுத்துணியில் எம்ப்ராய்டரி வேலைகள் நிறைந்த ஆடைகள், பீங்கான் பாத்திரங்கள் என்று சொல்லிக்கொண்டே போகலாம்.
இப்படிப்பட்ட மேலும் சிறந்த பொருட்களை கியோட்டோவில் வாங்கலாம் என்று என்னிடம் சொன்னார்கள்; அதனால், இங்கு அதிக பொருட்களை வாங்கும் ஆர்வத்தைத் அப்போதுக்குக் குறைத்துக் கொண்டேன். கொஞ்சமாக சில பொருட்களை மட்டுமே வாங்கினேன்.
___________
1. ஜப்பானின் பிரதான நான்கு தீவுகளில் மூன்றான ஹோன்ஷு, ஷிகோகு, க்யூஷூ ஆகிய தீவுகளை இந்த உள் நாட்டுக் கடல் பிரிக்கிறது. ஜப்பானியக் கடலை பசிஃபிக் பெருங்கடலுடன் இணைக்கிறது.↩
(தொடரும்)
___________
ஜகத்ஜித் சிங் எழுதிய “My Travels in China, Japan and Java, 1903” நூலின் தமிழாக்கம்