அடுத்து, அமெரிக்க க்ருய்சர்களில் ஒன்றான ’ஒரேகான்’ என்ற போர்க்கப்பலைப் பார்க்கச் சென்றேன். கப்பல் அதிகாரிகள் என்னிடம் நாகரிகமாக நடந்துகொண்டனர். பார்க்கத் தகுதியான அனைத்தையும் சுற்றிக்காட்டினர். அந்தக் கடலோடிகளில் அதிக எண்ணிக்கையில் கட்டுமஸ்தான நீக்ரோக்களைப் பார்க்க முடிந்தது. அவர்கள் எவ்வளவு திறமையானவர்களாக இருந்தாலும், கமிஷண்டு ஆபிஸர் பதவி உயர்வு அவர்களுக்குக் கிடைக்காது என்று கூறினார்கள். ‘மனித சமத்துவம்’ என்பதை அவர்களது அரசியலமைப்பின் அடிப்படைக் கொள்கையாக வைத்திருப்பதாகச் சொல்லப்படும் ஒரு தேசத்தில் இத்தகைய நிலைமைகள், ஒருவருக்கு எதிர்காலம் குறித்த அச்சத்தை ஏற்படுத்துகின்றன. வாக்குக் கேட்கப்படும்போது மட்டும் வெள்ளை மனிதரும் அவரும் சமம் என்று கூறப்படுவதை அந்தக் கறுப்பினத்தவர் சகித்து கொள்வாரா? அல்லது தகுதியுடையவராக இருந்தும் நியமனம் செய்யப்படாமல், கடவுள் அவரைக் கறுப்பாகப் படைத்துவிட்டார் என்பதற்காகக் காலம் முழுவதும் காத்திருக்க வேண்டுமா?
அதன் பிறகு, துறைமுகத்தைச் சுற்றி சிறிய கடல் உலா ஒன்றை மேற்கொண்டேன். அப்போது இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, ஆஸ்திரியா, இத்தாலி நாடுகளின் போர்க்கப்பல்களைப் பார்க்கமுடிந்தது. பெருமளவுக்கு இவை ஆர்வம் ஏற்படுத்தின.
அடுத்த நாள் எனக்கு உடல்நிலை சரியில்லை; அதனால் வெளியில் செல்லும் சாகசத்தை நான் மேற்கொள்ளவில்லை. ஆனால், என்னைப் பார்க்க பதில் விஜயம் மேற்கொண்ட பிரிட்டிஷ் தூதுவரை வரவேற்கும் சந்தோஷம் எனக்குக் கிடைத்தது.
பத்தாம் தேதி, பந்தய மைதானத்தில் பெரும் சந்திப்பாக அமைந்தது. பந்தய மைதானத்தில் வைத்தே பிரெஞ்சுத் தூதுவரும் பெரிக்னி கோமகனுமான மொன்சியே ஹர்மண்ட் மற்றும் வேறு சில பிரெஞ்சுக்காரர்களையும் சந்தித்தேன்; அவர்களுடன் மதிய உணவும் சாப்பிட்டேன். பந்தய மைதானம் மிக அழகான இடத்தில் அமைந்திருந்தது. அங்கிருந்து டோக்கியோ விரிகுடாவையும் சூழந்திருந்த குன்றுகளின் அழகிய காட்சியையும் காண முடிந்தது. ஐரோப்பியர்களாலும், ஜப்பானிய சமூகத்தின் மேல் தட்டு மனிதர்களாலும் ‘கிராண்ட் ஸ்டாண்ட்’ நிரம்பி வழிந்தது.
குதிரைப் பந்தயம் பார்க்க ஓரளவுக்கு நன்றாக இருந்தது. எனினும் லக்னோவிலோ கல்கத்தாவிலோ பார்க்கக் கூடிய பந்தயங்களைப் போல் இல்லை. பரிசு, ’எம்பரர் கோப்பை’. பெரிக்னி கோமகன் மற்றும் மொன்சியே ரூனென் இருவரும் இணைந்து வென்றதாக அறிவிக்கப்பட்டது. பிரெஞ்சுக்காரர்களான அவர்கள் இருவரும் வெற்றிபெற்ற குதிரைக்குச் சொந்தக்காரர்கள். வழக்கமான பலத்த ’பன்ஸாய்’ குரலொலிகளுக்கு மத்தியில் பேரரசரின் சார்பில் பரோன் சன்னோமியா பரிசை வழங்கினார். ’பன்ஸாய்’ என்பது ஆங்கிலத்தில் ‘ஹுர்ரே’ என்று கூறப்படுவதற்கு இணையானது. திரும்பிவருகையில், யுனைட்டடு கிளப் வளாகத்துக்குச் சென்று பார்த்தேன். அழகான, நல்ல வசதிகளுடன் அமைந்த க்ளப்; ஒருவேளை, கீழ்த்திசையில் மிகச் சிறந்த ஒன்றாக இருக்கக்கூடும். யோகோஹாமாவில் தங்கியிருந்தபோது, அந்த நாட்களுக்கு மட்டும் என்னைக் கிளப்பின் உறுப்பினராக ஆக்கினர்.
பதினொன்றாம் தேதி, காமகுரா1 என்ற இடத்துக்கு ரயில் மூலம் சுற்றுலா மேற்கொண்டோம். அழகிய இயற்கைக் காட்சிகளைப் பார்க்க முடிந்த, ஒரு மணி நேர மகிழ்ச்சியான பயணத்துக்குப் பின் அங்கு போய்ச் சேர்ந்தோம். இலையுதிர் காலம் மரங்களில் வண்ணம் பூசத்தொடங்கியிருந்தது; பசுந் துளிர்கள் அழகாகத் தோன்றின. ரிக்ஷாவில் அரை மணி நேரப் பயணத்தில் ஒரு பெரிய மடாலயத்துக்கு வந்து சேர்ந்தோம். வெட்ட வெளியில் மிகப் பிரும்மாண்டமான தாய்புட்ஸு அல்லது புத்தரின் சிலை. ஏணி ஒன்றின் வழியாக மேலே ஏறி, சிலைக்குள் நுழைந்தோம்; அதற்குள் ஒரு சன்னதி இருந்தது. கால்களை மடித்துத் தியான நிலையில் அமர்ந்திருந்த வெங்கலத்திலான உருவம், ஜப்பானின் மிகச் சிறந்த கலைப்படைப்புகளில் ஒன்று எனக் கூறப்படுகிறது.
அதன்பின் மற்றொரு மடாலயத்தைப் பார்க்கச் சென்றோம். அது ஒரு சிறிய கோவில். அங்கிருந்து ரிக்ஷாக்களில் இனோஷிமா என்ற இடத்துக்குச் சென்றோம். அது ஒரு புகழ்பெற்ற கோடை உல்லாசத் தலம். அந்த இடம் உண்மையில் ஒரு தீவு; மிக நீண்ட மரப்பாலம் ஒன்று ‘மெயின் லாண்டு’டன் தீவை இணைக்கிறது. கருங்கல் பாவிய நடைபாதை ஒன்றில் ஏறி நடந்தோம். ஒரு குறுகலான தெரு வழியே பாதை சென்றது. பாதையின் இருபுறமும் இருந்த கடைகளில் விலையுயர்ந்த கற்களும் விதவிதமாக வடிவமைக்கப்பட்ட கிளிஞ்சல்களும், குறைந்த விலைகளில் விற்பனைக்குக் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.
குன்று ஒன்றின் மேல், அமர்ந்திருப்பதுபோல் காணப்பட்ட ஒரு ‘தேநீர் இல்லம்’ எங்களைக் கவர்ந்தது. ஆகவே, தேநீர் அருந்த அங்கு சென்றோம். உள்ளே நுழைகையில், அந்தத் தேசத்துக்கே உரிய பாணியில் பெண் பணியாளர்கள் எங்களை வரவேற்றனர். அதாவது, மண்டியிட்டு அவர்களது நெற்றி தரையைத் தொடுமாறு வணங்கினர். அவர்களது உற்சாகமான நடத்தையும், இனிய புன்னகையும், சூழலின் அழகும், அமைதியும் நாங்கள் யோகோஹாமாவுக்குப் புறப்படுவதைத் தள்ளிப்போட எங்களைத் தயங்க வைத்தன. இறுதியில் யோகோஹாமாவுக்குப் பாதி தூரம் மின்சார காரிலும், பாதி தூரம் ரயிலிலும் பயணித்தோம்.
பன்னிரண்டாம் நாளின் ஒரு பகுதியை என்னைக் கவர்ந்திழுத்த அந்தக் கடைகளுக்குத் திரும்பவும் செல்வதில் செலவழித்தேன். அந்த உணர்வை மட்டும் என்னால் கட்டுப்படுத்தவே இயலவில்லை.
அன்றிரவு அந்த ஹோட்டலில் நடந்த ’பால்’ நடனம் ஒன்றைப் பார்க்க சென்றேன். நடனம் கண்களுக்கு விருந்தாக இருந்தது. துறைமுகத்தில் நின்றிருந்த, பிரெஞ்சு போர்க்கப்பலின் பேண்டு இசைக் குழுவினர் அந்த நடன நிகழ்வுக்கு வாசித்தனர். நிச்சயமாக ஒரு ஐந்நூறு பேர் அங்கு கூடியிருப்பார்கள்; அனைத்து ஐரோப்பிய, அமெரிக்க நாட்டவர்களும் கலந்து கொண்டிருந்தனர் எனலாம்.
அடுத்த நாள், பேரரசியின் செவ்வந்தித் தோட்ட விருந்து. ஆண்டுதோறும் பேரரசி இரண்டு பெரும் தோட்ட விருந்துகள் அளிப்பார். அதில் ஒன்று இது. மற்றொன்று வசந்த பருவத்தில் நடப்பது. இந்த விருந்துக்கான அழைப்பு எனக்கு உரியநேரத்தில் வந்துசேர்ந்தது. ஜப்பானிய மொழியில் எழுதப்பட்ட அழைப்பு எனக்கு ஆர்வமூட்டியது. ஆங்கில மொழிபெயர்ப்பும் அழைப்பிதழில் இருந்தது. குறிக்கப்பட்ட தேதியில் ஒருவேளை மழை பெய்தால், இந்தப் பொழுதுபோக்கு நிகழ்வு மறுநாள் நடக்கும். மறுநாளும் மழை தொடர்ந்தால் விருந்து ரத்து செய்யப்படும் என்ற குறிப்பு இருந்தது. அழைப்பிதழில் பேரரசின் முத்திரை இருந்தது; பதினாறு இதழ்கள் கொண்ட செவ்வந்தி. மிக எளிய வடிவமைப்பு.
விருந்து நாள் காலையில் வானம் மேக மூட்டமாக இருந்தது; ஆனால் நல்வாய்ப்பாக மதியம் வானம் தெளிந்துவிட்டது. சர் கிளாட் மற்றும் லேடி மெக்டொனால்ட் ஆகியோருடன் மதிய உணவுக்கு உரிய நேரத்தில் டோக்கியோ சென்று சேர்ந்துவிட்டோம். உணவுக்குப்பின், அவர்களுடன் ’அஸகுஸா’ என்ற பூங்காவுக்குப் புறப்பட்டோம். நுழைவு வாயிலில், போலிஸ்காரர்களும் ராணுவ பாதுகாப்பு வீரர்களும் நின்றிருந்தனர். வரிசையாக வண்டிகளும், ரிக்ஷாக்களும் வெளியில் நின்றிருந்தன. ஓவர் கோட்டுகளை வாயிலருகில் விட்டுச் செல்லும்படி மிகுந்த பணிவுடன் கேட்டுக் கொண்டனர். சரளைக்கற்கள் பாவிய பாதை ஒன்றில் பத்து நிமிட நேரம் நடந்தபின், ஒரு சதுரமான இடத்துக்கு வந்து சேர்ந்தோம். பல நிறங்களில், திகைக்க வைக்கும் வகைகளில் செவ்வந்திப் பூக்களால் அந்த நிலப்பரப்பு நிரம்பியிருந்தது. ஜப்பானிய அமைச்சர்களையும், வெளிநாட்டுப் பிரதிநிதிகளையும், பல நாடுகளின் ராணுவம் மற்றும் கடற்படை அதிகாரிகளையும், அவர்களது தூதரகங்களிலிருந்து அறிமுகக் கடிதங்களுடன் வந்திருந்த உலகம் சுற்றிகளையும், அறிவியல் மற்றும் இலக்கியத் துறை அறிஞர்களையும் அங்கே பார்க்க முடிந்தது.
அந்தப் பூங்கா ஒரு விரிந்து பரந்த இடம்; பெரும் மரங்களால் நிறைந்திருந்தது. பெரிய ஏரிகளும் காணப்பட்டன. அவற்றின் நடுவே சிறிய அழகிய தீவுகள்; அவற்றில் சிறு மண்டபங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இந்தத் தீவுகள் பூங்காவின் பகுதிகளுடன், வேறு கவனம் ஈர்க்கும் அம்சங்களுடனும் சிறிய மரப் பாலங்களால் இணைக்கப்பட்டிருந்தன. ஆழ்ந்த சிவப்பு, மஞ்சள் மற்றும் வேறு வண்ணங்களில் இலைகளும் பூக்களுமாக நின்றிருந்த மேப்புள் மரங்கள் மனதுக்கினிய காட்சியாக இருந்தன. இந்த அழகிய காட்சிகளை எல்லாம் பார்ப்பதற்கு எங்களுக்கு நேரமில்லை; ஏனெனில் கூட்டத்தைத் திடீரென்று பற்றிக்கொண்ட பரபரப்பு, பேரரசியின் வருகையைத் தெரிவிக்கும் அறிகுறியாக அமைந்தது. ராணுவத்தின் பேண்டு ஜப்பானின் தேசிய கீதம் என்று சொல்லப்படும் சற்றே சோகமான பாடலை இசைத்தது. தொப்பி அணிந்தவர்கள் உடனடியாக அவற்றைத் தலையிலிருந்து அகற்றினர். அத்தகைய ஒரு மரியாதையை அளிக்க முடியாமல் எங்களது டர்பன்கள் எங்களைத் தடுத்துவிட்டன.
விருந்தினர்கள், அவர்களாகவே வரிசைகளை அமைத்துக்கொண்டனர். மாஸ்டர் ஆஃப் செரிமனிஸே இங்கும் விருந்து ஒருங்கிணைப்பாளர். எல்லோரையும், நின்றிருந்த இடத்திலேயே நிற்கும்படி கேட்டுக்கொண்டார்.
பேரரசி வந்துகொண்டிருந்த பாதையை நோக்கி எங்கள் அனைவரது கண்களும் திரும்பின. விரைவில் பரிவாரம் கண்ணில் பட்டது. அதன் தலைப்பகுதியில் அரசவைப் பணியாளர்கள் அரண்மனைச் சீருடையில் வந்தனர். அவை ஐரோப்பிய வடிவமைப்பில் தென்பட்டன. பணியாளர்கள் கடந்து சென்றதும், பேரரசியின் சேடிகள், இரண்டிரண்டாக வந்தனர். இவர்களுக்குப் பின்னால், பேரரசி தனியாக நடந்துவந்தார்.
மாட்சிமை பொருந்திய பேரரசி, ஐந்தடிக்கு மேல் இருக்கமாட்டார். ஐரோப்பாவில் தைக்கப்பட்ட பச்சை வண்ண வெல்வெட் ஆடையை அணிந்திருந்தார். மிகக் கம்பீரமாக நடந்து வந்த அவரது முகத்தில் முற்றிலும் எந்த உணர்வையும் பார்க்க முடியவில்லை. பெண்மணிகள் அளித்த மரியாதையையும், அமைச்சர்களும் ஏனைய விருந்தினர்களும் மிகவும் குனிந்து பணிவுடன் அளித்த வணக்கத்தையும் அவர் எந்திரத்தனமாக, முகத்தில் எவ்வித சிரிப்புமின்றி தான் அங்கீகரித்தார். பேரரசிக்குப் பின்னால் ராஜ குடும்பத்தின் இளவரசிகள் நடந்து வந்தனர்; அனைவரும் பிரகாசமான ஐரோப்பியப் பாணி ஆடைகளை அணிந்திருந்தனர்.
அனைத்து விருந்தினர்களும் பேரரசியைப் பின்தொடர்ந்தாற்போல் மெதுவாகச் சென்ற அந்த அணிவகுப்பு, வரவேற்பு-விருந்து ஏற்பாட்டுக்காக அமைக்கப்பட்டிருந்த கூடாரத்தில் முடிந்தது. கூடாரத்தின் ஒரு முனையில் பேரரசி தன் இருக்கையில் அமர்ந்தார். அவரது இடதுபுறம் இளவரசிகள் வரிசையாக நின்றனர். அவர்களுக்குப் பின்னால் சேடிகள் நின்றிருந்தனர். எங்களுக்கு இடம் முதல் வரிசையில் ஒதுக்கப்பட்டிருந்தது. தூதுவர்களுடன் நாங்கள் நின்றிருந்தோம். பெல்ஜியம் தூதுவர் பரோன் டிஅனேதன் மற்றும் அவரது மனைவியும் முதலில் அறிமுகப்படுத்தப்பட இருந்தனர். ஏனெனில், அவர்தான் ‘டோயென்’ அல்லது தூதுவர்களில் மூத்தவர். அவருக்கு அடுத்ததாக சர் க்ளாட் மெக்டொனால்டை மாஸ்டர் ஆஃப் செரிமனிஸ் அறிமுகப்படுத்தி வைத்தார். அதன்பின், சர் மெக்டொனால்ட் என்னை அறிமுகப்படுத்தினார்.
பேரரசி, என்னிடம் கைகுலுக்கிய பின், மொழிபெயர்ப்புப் பணி செய்த அவரது சேடிகளில் ஒருத்தி பேரரசியின் சார்பில் எனக்கு ஜப்பான் பிடித்திருக்கிறதா என்று கேட்டாள். இந்தியாவில் பெரும் வெப்பத்தைச் சந்தித்திருக்கும் எனக்கு இங்கே இந்தக் குளிரைப் பொறுத்துக் கொள்ள முடிகிறதா, அதிகமாக இருக்கிறதா என்று விசாரித்தாள். இந்தியாவின் சில பகுதிகளில், சில பருவங்களில், ஜப்பான் தேசத்தைப் போலவே கடுங்குளிர் நிலவும் என்று நான் சொன்னதும் பேரரசிக்குத் திகைப்பு. ஏறத்தாழ சரியாகப் புரிந்துகொள்ள முடியாத மெல்லிய குரலில் பேரரசி பேசினார். பின்னர் நான் இளவரசிகளுக்கு அறிமுகப்படுத்தப்பட்டேன். அவர்களில் ஒருத்தியான, இளவரசி நஷிமோடோ, ஜப்பானின் அரச வம்சத்திலேயே மிகவும் அழகிய பெண் என்று கருதப்படுகிறார்.
ரஷ்யத் தூதுவர் அறிமுகப்படுத்தப்பட்ட போது, பலரும் பெரும் ஆர்வத்தை வெளிப்படுத்தினர். வெளிநாட்டுத் தூதுவர்களில் பரோன் ரோஸென் மிகத் திறமையானவரென கூறப்படுகிறார். அவர் நாட்டுக்கும் ஜப்பானுக்கும் இடையிலான உறவுநிலை பாதிக்கப்பட்டிருக்கும் சூழலில், அவரது செயல்பாடுகள் எந்நேரமும் மிகுந்த அக்கறையுடன் மற்றவர்களால் கவனிக்கப்படுகின்றன. அடுத்தது, சீனத் தூதுவர். அவரைத் தொடர்ந்து பல பணியாளர்கள், சீன அரசவை சீருடையில் வந்தனர். அவர்கள் மட்டுமே ஐரோப்பிய ஆடையணியாமல் விருந்தில் கலந்துகொண்டவர்கள். வெளிநாட்டுக் கடற்படை மற்றும் ராணுவ அதிகாரிகளுக்கு அடுத்ததாக ஜப்பானிய அமைச்சர்கள் அறிமுகப்படுத்திக் கொண்டனர். மிகுந்த பணிவுடன் கைகளை முழந்தாள்களில் வைத்தபடி மரியாதையுடன் குனிந்து வணங்கினர். ஆனால். பேரரசி அவர்களுடன் கைகுலுக்கவில்லை. இவர்களுடன் அறிமுகப்படலம் முடிவுக்கு வந்தது.
அதன் பின் பெரும் விருந்து தொடங்கியது. வேறெங்கும் ஒருவர் கலந்துகொள்ளும் ஒரு மாலைநேர தேநீர் விருந்துபோலத்தான் இருந்தது; சிறப்பாகச் சொல்வதற்கில்லை; ஆனால் பலவிதமான உணவு வகைகள் கொண்ட வழக்கமான விருந்து என்று சொல்லலாம். சூப், மீன், எலும்புடன் கூடிய பெரிய இறைச்சித்துண்டு, ஐஸ்க்ரீம், ஷாம்பெய்னும் வேறு ஒயின் வகைகளும் பரிமாறப்பட்டன. உணவு மேஜையின் தலைப்பகுதியில் பேரரசி அமர்ந்தார்; அவரருகில் இளவரசர் ஹிகாஷி ஃபூஷிமி, அடுத்தாற்போல் இளவரசிகளும் அமர்ந்தனர். அவர்களுக்கு முன் பரிமாறப்பட்ட பதார்த்தம் எதையும் விருந்தளித்த அரண்மனையினர் தொடவில்லை என்பதைக் கவனித்தேன். ஆனால், விருந்தினர்கள் பரிமாறப்பட்ட சுவையான உணவுகளுக்கு போதுமான நியாயம் வழங்கினர் என்று சொல்லலாம்.
பேரரசிக்கு எதிரில் நான் அமர்ந்திருந்த இடத்திலிருந்து மொத்த நடவடிக்கைகளையும் என்னால் நன்கு பார்க்க முடிந்தது. தூதரக அதிகாரிகள், மேலும் சில முக்கிய பிரபலங்கள் தவிர்த்து மற்றவர்களுக்குத் தனி மேஜைகளில் உணவு பரிமாறப்படவில்லை. நீண்ட மேஜைகளில் அவை வைக்கப்பட்டிருந்தன; மேஜைக்கு அருகில் நின்றபடி, ‘பஃபே’ போல், சிற்றுண்டியையும் மற்றவற்றையும் அவர்களே எடுத்து வைத்துக்கொண்டு சாப்பிட்டனர். அரண்மனையைச் சேர்ந்த ஜப்பானிய வெயிட்டர்கள் தாம் மேஜைகளில் உணவு பரிமாறும் சேவையைச் செய்தனர். ஐரோப்பாவின் குற்றேவல் செய்யும் பணியாளர்போல் அவர்கள் உடையணிந்து இருந்தனர். ஒரு அரை மணி நேரம் உணவு மேஜை முன் அமர்ந்திருந்த பேரரசி, விருந்து முடிந்தது என்பதற்கு அடையாளமாய் இருக்கையை விட்டு எழுந்தார்.
நாங்கள் உணவை ரசித்துச் சாப்பிட்டுக் கொண்டிருந்த போது ஜப்பானிய ராணுவ பேண்டு சிறப்பாகத் தெரிவு செய்து வாசித்த ஐரோப்பிய இசை குறித்து நிச்சயம் குறிப்பிடாமல் இருக்கமுடியாது. பிரெஞ்சு பாணியில் சீருடைகள் அணிந்திருந்த அவர்கள் மிக அற்புதமாக வாசித்தனர்.
அணிவகுப்பு மீண்டும் உருவானது. ஆனால், அந்த இடத்தைவிட்டு புறப்படும் முன் பிரபலமான முக்கிய விருந்தினர்களுடன் பேரரசி கைகுலுக்கினார். ஜப்பானில் எனது சில நாட்கள் வாசம் இனிமையாக இருக்கவும் பத்திரமாக நாடு திரும்பவும் அவரது வாழ்த்துகளை கூறினார்.
இப்படியாக அந்த ஆண்டின் செவ்வந்தித் தோட்ட விருந்து முடிவுற்றது. விருந்து ஏற்பாடுகள், சிறந்த முறையில் மிக நுணுக்கமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. நிச்சயமாக லண்டன் பக்கிங்ஹாம் அரண்மனையிலோ பாரீஸின் எலிஸியிலோ இவ்வளவு சிறப்பாக இதைச் செய்திருக்க மாட்டார்கள்.
நான் விவரித்த இந்த விருந்தும், பொழுதுபோக்கு நிகழ்வும், நவீன ஜப்பானில் நிகழ்ந்து கொண்டிருக்கும் முன்னேற்றத்தைப் பறைசாற்றும் பல சான்றுகளில் ஒன்று. அத்துடன், முற்றிலும் வெளியார் உதவியேதுமின்றி அனைத்து ஏற்பாடுகளும் மிகச் சிறப்பாகச் செய்யப்பட்டிருந்தன. மற்ற நாட்டு மக்களின் பழக்க வழக்கங்களை ஏற்றுத் தழுவிக் கொள்வதிலும், நவீன உலகின் மாறியிருக்கும் நிலைமைகளுக்கு ஏற்ப தங்களை மாற்றிக்கொள்வதிலும் அம்மக்களுக்கு இருக்கும் திறமை குறித்து ஏராளம் பேசலாம். இருபது ஆண்டுகளுக்கு முன், இத்தகைய ஓர் அமைப்பில், இவ்வளவு பெரிய வீச்சுடன் இதுபோன்ற பொழுதுபோக்கு நிகழ்வை ஏற்பாடு செய்வது ஜப்பானியர்களின் திறனுக்கு அப்பாற்பட்டதாக இருந்திருக்கலாம். ஆனால், நிலைமை இப்போது அப்படியில்லை.
இலையுதிர் பருவத்துப் பிரச்சனைகளைச் சமாளிப்பதில் பேரரசர் தீவிரமாக ஈடுபட்டிருந்ததால் செவ்வந்தி தோட்ட விருந்தில் அவரால் கலந்து கொள்ள முடியவில்லை. ஒரு நாள் பயணத்தொலைவுக்கு அப்பால் முப்பதினாயிரம் துருப்புகள் கொண்ட படைமுகாமில் ஆய்வு செய்யும் பணியில் இருந்தார்.
பூங்காவை விட்டு பேரரசி புறப்பட்டவுடன், அனைவரும் தங்கள் பயணத்துக்கு வண்டிகளை ஏற்பாடு செய்ய விரைந்தனர்; அந்த இடம் பரபரப்புக்கு ஆளானது. எங்களுக்கு வண்டியொன்று சீக்கிரமாகவே கிடைத்தது. யோகோஹாமாவுக்குத் திரும்பிச் செல்வதற்கு விரைந்து சென்று விரைவு ரயிலைப் பிடிக்கவேண்டியதாயிற்று. கிளப்பில் வருடாந்திர ‘பால்’ நடனம் நடக்கவிருந்தது. அதனால் நான் சிறிதும் தாமதிக்க முடியாது. டின்னர் முடிந்ததும் கிளப்புக்கு சென்றேன். மிகுந்த மகிழ்ச்சியுடன் நடன நிகழ்ச்சியை அனுபவித்தேன். இதயம் குளிருமளவுக்கு நானும் நடனமாடினேன். சுவையான இரவு உணவு பரிமாறப்பட்டது. களிப்புடன் ஆடித் திளைத்த, பல நாடுகளையும் சேர்ந்த இளைஞர் கூட்டத்துடன் காலை ஒரு மணி வரையிலும் இருந்தேன்.
இந்த ‘பால்’ நடன நிகழ்வின் கவனத்துக்குரிய அம்சம் என்னவென்றால், யோகோஹாமாவின் கவர்னரும் அவரது மனைவியும் தவிர்த்து ஜப்பானிய ஆண்கள் பெண்கள் எவரையும் அந்த இடத்தில் பார்க்க முடியவில்லை. அத்துடன் ஜப்பானியர்கள் எவ்வளவுதான் முன்னேறிய மனிதர்களாக தென்பட்டாலும், அவர்களுக்கும் ஐரோப்பியர்களுக்கும் இடையில் சமூக உறவுகள் மிகவும் குறைவாக இருந்தது என்பதையும் கவனித்தேன். சடங்கு சார்ந்தும், அதிகாரப் பூர்வமான சந்திப்புகளில் மட்டுமே அவர்கள் ஒன்றாகக் கூடுகிறார்கள்.
ஜப்பானியர்களால் வெளிநாட்டுச் சமூகத்தினர் மத்தியில் இயல்பாகப் பழக இயலவில்லை என்பதே இதற்குக் காரணம். ஐரோப்பியர்கள், ஜப்பானில் தாம் பிரத்தியேகமாகத் தனித்து இருக்கவேண்டும் என்ற மனநிலையில் இருப்பதாக நான் பார்க்கவில்லை.
___________
1. காமகுரா, டோக்கியோவிற்கு முன், ஜப்பானின் தலைநகராக இருந்த நகரம்.↩
(தொடரும்)
___________
ஜகத்ஜித் சிங் எழுதிய “My Travels in China, Japan and Java, 1903” நூலின் தமிழாக்கம்