நான் அடுத்து சென்ற இடம் உயர்நீதிமன்றம். நான் அங்கு சென்று சேர்ந்தபோது, சர் கிளாட் மெக்டொனால்ட் என்னைச் சந்தித்தார், அவரும் சில ஜப்பானிய அதிகாரிகளும் என்னை நீதிமன்றக் கட்டடத்திற்குள் அழைத்துச் சென்றனர். பார்ப்பதற்கு நன்றாகவும், பாராட்டத்தக்கதாகவும் அந்தக் கட்டடம் இருந்தது. எனினும், ஐரோப்பாவில் பார்க்க முடிகிற இதுபோன்ற இடங்களைப்போல் அலங்காரமாகத் தோன்றவில்லை.
நீதிமன்றத்தின் பெரிய வரவேற்பறையில், நீதிபதிகள் அனைவரும் கூடியிருந்தனர். முறைப்படியான வரவேற்பை எனக்கு அளித்தனர். வழக்கமான குனிந்து வணங்குதல்கள், புன்னகைகள். எங்கள் இருக்கைகளில் அமர்ந்தோம். தேநீர் வழங்கப்பட்டது. பணிவு நிறைந்த மிகுந்த நாகரிகமான உபசாரம். விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், அந்தச் சம்பிரதாயத்தில் நாம் பங்கேற்கத்தான் வேண்டும்.
தேநீர் முடிந்தது. வெவ்வேறு நீதிமன்றங்களுக்கு என்னை அழைத்துச் சென்றார்கள். சற்றுமுன் என்னை வரவேற்று உபசரித்த நீதிபதிகள் வழக்குகளை விசாரிப்பதற்காக ஏற்கெனவே அவர்களது இருக்கைகளில் அமர்ந்திருந்தனர். அனைவரும் கவுனும் வித்தியாசமாக ஒரு தொப்பியும் அணிந்திருந்தனர். ஒவ்வொரு வழக்கு மன்றத்திலும், நீதிபதிகளில் அமரும் வரிசையில் ஒரு கௌரவ இருக்கை எனக்கு வழங்கப்பட்டது.
நடைமுறைகளைக் கவனித்துக் கொண்டிருந்தேன். ஆனால், அனைத்தும் ஜப்பானிய மொழியில். எனக்கு அந்த மொழி தெரியாததால் எதையும் புரிந்துகொள்ள முடியவில்லை. வழக்குகள் விசாரிக்கப்பட்டன, தீர்ப்புகளும் எழுதப்பட்டன; பதிவேடுகள் எழுதப்பட்டன; அனைத்தும் ஜப்பானிய மொழியில்தான்.
0
அதன்பின் நகரத்தைச் சுற்றிப் பார்ப்பதில் ஒரு காலை நேரத்தை லாபகரமாகவும் சுவாரஸ்யமாகவும் கழித்தேன். ஜப்பானிய உணவகம் ஒன்றில் காலை உணவு. அந்த ரெஸ்டாரண்ட்டிலிருந்து ஓர் உயரமான இடத்திலிருந்து பார்ப்பதுபோல் டோக்கியோ நகரின் சிறந்த தோற்றத்தைப் பார்க்க முடிந்தது.
சாப்பிட்டு முடிந்ததும், நகரத்திற்கு வெளியே ஏழு மைல் தொலைவில் உள்ள ஒரு பெரிய சிறைச்சாலையைப் பார்க்கச் சென்றேன். சிறைச்சாலை வாயிலில் நின்றிருந்த தலைமை வார்டர் என்னை வரவேற்றார். எனக்கு அவர் தேநீர் அளித்து உபசரித்த பின்னர் வார்டுகள் வரிசையாக அமைந்திருந்த பெரும் கட்டடங்களின் வழியாக என்னை அழைத்துச் சென்றார்.
சரியான ஏற்பாடுகள், நல்ல நிர்வாகம். உலகின் எந்த நாட்டிலும் இருக்கும் இதுபோன்ற சிறந்த சிறை வளாகங்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கத் தோன்றும் அளவிற்கு ஒவ்வொரு அம்சமும் நன்றாக இருந்தது. நான் சென்றிருந்த சமயம், சிறைகளில் சுமார் இரண்டாயிரம் பேர் அடைக்கப்பட்டிருக்கலாம். அவர்கள் அனைவரும் பல்வேறு தொழில்களில் மும்முரமாக ஈடுபட்டிருந்ததைப் பார்த்தேன். கூடை பின்னுவது, துடைப்பம் மற்றும் பாய்கள் தயாரிப்பது ஆகியன முக்கிய வேலைகளாகத் தோன்றின. கைதிகள் இதில் கைதேர்ந்தவர்களாக இருந்தனர்.
அவர்கள் மஞ்சள் நிறத்தில் ஒரு தனித்துவமான உடையை அணிந்திருந்தனர். ஆண்களைப் பாதுகாப்பில் வைத்திருக்க சங்கிலி கொண்டு பிணைக்கும் முறையை அவர்கள் பயன்படுத்தவில்லை என்பது கவனிக்கத்தக்கது. நாங்கள் வெவ்வேறு வார்டுகளுக்குள் நுழைந்து பார்த்தோம். உள்ளே நுழைந்ததும், வார்டர் ஆணையிட்டதும் செய்யும் வேலையை அவர்கள் அப்படியே நிறுத்தினர். அடுத்த ஆணைக்கு எழுந்து நின்று அனைவரும் ஒரேநேரத்தில் குனிந்து வணங்கினர். இறுதி கட்டளையை அவர் முழங்கியதும், அனைவரும் தம் வேலைகளுக்குத் திரும்பினர், தொடர்ந்தனர்.
கைதிகளைப் பொறுத்தவரையில் எனது கவனத்தை ஓர் அம்சம் மிகவும் ஈர்த்தது. அது அவர்களின் தோற்றம்; சிறைச்சாலைகளில் தன்னிச்சையாக நம் கண்கள் மனிதக் குலத்தின் மிகக் கீழ்த்தரமான, வில்லனை போன்ற தோற்றத்துடன் ஒருவரைத் தேடுவதுண்டு. உண்மையில் ஐரோப்பாவில் ’இப்படிக் குறிப்பிடப்படுகிற’ கிரிமினல் வகை மனிதர்கள் அனைவரும் அறிந்தவர்களாக, பார்த்தவுடன் தெரிந்துகொள்ள முடிகிறவர்களாக இருப்பார்கள்; ஆனால் இந்த ஜப்பானியக் கைதிகள் அப்படித் தோன்றவில்லை; உடல் மொழியிலோ தோற்றத்திலோ அப்படித் தெரியவில்லை. குறிப்பிட்டுச் சொல்லவும் ஏதுமில்லை. அவர்கள் அமைதியான, சட்டத்தை மதிக்கும் குடிமக்கள் போல் தான் இருந்தனர்.
பல வார்டுகளையும் சுற்றிப் பார்த்தேன். அந்தக் கைதிகள் கட்டுப்பாட்டுடன் அடைக்கப்பட்டிருப்பவர்கள் என்று நினைத்துப் பார்ப்பது கடினமாக இருந்தது; அவர்கள் அனைவரும் நல்ல சிந்தையுடன் வேலைசெய்து கொண்டிருந்தது வெளிப்படையாகத் தெரிந்தது; வெளித்தோற்றத்தை வைத்து ஒருவர் தீர்மானிக்க முடியும் என்றால், கிடைத்திருப்பதில் அவர்கள் திருப்தியுடன் இருப்பதுபோல் தோன்றியது; எல்லாவற்றிற்கும் மேலாக, அந்தச் சிறைப் பறவைகள் தங்கள் தேசத்தின் பணிவை இழக்கவில்லை. யாராவது ஒருவர் அவர்களைக் கடந்து செல்லும் போதெல்லாம் ஒரு கணம் மரியாதை நிமித்தம் குனிந்து வணங்கும் அவர்களது செயலில் அது வெளிப்பட்டது.
நான் விசாரித்தவகையில் மரண தண்டனை அரிதாகவே விதிக்கப்படுகிறது. அத்துடன் கொலைக் குற்றம் ஒப்பீட்டளவில் மிகவும் அரிதானது என்று கூறினார்கள். கொலை என்றால் மரண தண்டனை என்பது இங்கு கிடையாது. குறிப்பிட்ட சில குற்றங்களுக்கு மட்டுமே இந்தக் கடுமையான தண்டனை விதிக்கப்படுகிறது. தலை துண்டித்தல் மூலம் அது செயல்படுத்தப்படுகிறது.
கைதிகளின் வசிப்பிடங்கள் அற்புதமான ஏற்பாடுகளாலும், அவற்றின் வடிவமைப்பின் சிறப்பாலும் என்னை மிகவும் கவர்ந்தன. மூன்று ஆண்கள் ஓர் அறையில் தூங்குகின்றனர். அறையில் வழக்கமான நவீனச் சுகாதார வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. ஒட்டுமொத்த இடமும் ஒரு சிறை அமைப்பு எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான ‘மாதிரி’ என்ற சிந்தனையைத்தான் அளித்தது.
கைதிகளுக்கு விசாலமான குளியலறைகள்-தொட்டி வசதிகளுடன் இருக்கின்றன. வாரத்திற்கு மூன்று முறை அவர்கள் அதை நன்கு பயன்படுத்திக் கொள்ளலாம். ஜப்பானில் தூய்மை மிகவும் மதிக்கப்படுகிறது. கூலிவேலை செய்பவர்களும் அங்கு தினமும் குளிக்கிறார்கள்! கைதிகளுக்கு முழுமையான உணவு ஒரு நாளைக்கு இரண்டு முறை வழங்கப்படுகிறது. அதில் அரிசியும், மீனும் இருக்கும். அவ்வப்போது இறைச்சியும் கொடுக்கப்படுகிறது.
பார்க்லே தம்பதியருடன் உணவருந்தியதுடன் அன்றைய நாள் சென்றது. திரு. பார்க்லே பிரிட்டிஷ் தூதரகத்தின் முதல் செயலர். அவரது மனைவி அழகான அமெரிக்கர். இவர்கள் எனக்கு நீண்ட நாட்களுக்கு முன்பு அறிமுகமானவர்கள்; ஐரோப்பாவுக்கு எனது முதல் பயணத்தின் போது நான் அவர்களை ரோம் நகரில் சந்தித்தேன். அப்போது அவர் பிரிட்டிஷ் தூதரகத்தில் பணிபுரிந்தார். தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்கள் என்னைச் சந்திக்க அங்கு அழைக்கப்பட்டிருந்தனர். அதில் விஸ்கவுன்ட் அயோகியும் ஒருவர். முதன்மையான ஜப்பானிய ராஜதந்திரிகளில் ஒருவர். ஜெர்மன் பெண்மணியை அவர் மணந்திருந்தார்.
0
இருபத்தொன்றாம் தேதி, ஜப்பானில் வசிக்கும் பிரபல ஜெர்மானிய மருத்துவர் பேயல்ஸ் என்பவருடன் யூனோ பூங்காவின் ஜப்பானிய உணவகத்தில் உணவருந்தினேன். ஜப்பானின் பழைய குடிமகன். பேரரசரிலிருந்து விவசாயி வரையிலும் தேசத்தில் பலரையும் நன்கு அறிந்தவர். தனிப்பட்ட முறையில் அவர் மருத்துவத் தொழிலைச் செய்துவருகிறார். எனினும், டாக்டர் பேயல்ஸ், இம்பீரியல் குடும்பத்திலிருந்து தாராளமாக ஒரு தொகையைச் சம்பளமாக பெற்றுவருகிறார். அரசக் குடும்பத்திற்கு இவர்தான் மருத்துவம் பார்க்கிறார்.
மருத்துவர் ஒரு சுவாரஸ்யமான மனிதராகத் தென்பட்டார். தேசம் குறித்தும் மக்களைப் பற்றியும் அவருக்கு நல்ல நெருக்கமான அறிவு இருக்கிறது. தனது அபிப்பிராயங்களை மிகவும் சுதந்திரமாக தெரிவிக்கிறார்; அவரது அனுபவங்களையும் பகிர்ந்துகொள்கிறார். அவருடன் உரையாடியதில் பல விஷயங்களைத் தெரிந்து கொள்ள முடிந்தது. குறுகிய காலத்தில், அந்தத் தேசத்தில் எனது ஒட்டுமொத்தப் பயணத்திலும் அந்த மக்களிடமிருந்து நான் பெற்றிருக்கக் கூடியதை காட்டிலும் அதிகமான தகவல்கள் அவரிடமிருந்து நான் பெற்றேன்.
ஜப்பானியர்கள் தகவல் அளிக்கத் தயங்குகிறார்கள். அல்லது வெளிநாட்டவர்களின் விசாரிப்புகளை அவர்கள் அலட்சியமாக எடுத்துக் கொள்கிறார்கள். யாரேனும் ஒருவர் ஒரு கேள்வி கேட்டால், பொதுவாக குனிந்து வணங்கியோ அல்லது புன்னகைத்தோ அதற்குப் பதிலளிக்கிறார்கள். விதிவிலக்கான ஒருவரைத் தவிர்த்து, தன்னார்வத்துடன் தகவல் அளித்த அல்லது ஆர்வம் தரும் ஒரு விஷயத்தை ஒட்டிக் கேட்ட கேள்விகளுக்குப் பதிலளித்த ஒரு ஜப்பானியரையும் என்னால் நினைவுகூர முடியவில்லை.
பேரரசருடன் மருத்துவர் பேயல்ஸ்க்கு மிக நெருக்கமான தொடர்பு இருக்கிறது. பட்டத்து இளவரசரின் உடல்நிலையைப் பராமரிக்கும் பொறுப்பை அவரிடம் ஒப்படைத்து, மருத்துவர் மீதான நம்பிக்கையைப் பேரரசர் வெளிப்படுத்தினார். இளவரசர் இதற்குமுன் மிகவும் சிக்கலான உணர்வுநிலையில் இருந்திருக்கிறார். அவர் உடல்நிலை மேம்பட அக்கறை மிகுந்த கவனிப்பும் திறனும் தேவைப்பட்டது; இதனால் டாக்டர் பேயல்ஸ் இவரையே கவனிக்க வேண்டிய நிலைக்கு ஆளானார். எனினும், பட்டத்து இளவரசரின் உடல்நிலையை மோசமான நிலையிலிருந்து, ஒப்பீட்டு அளவில் வலிமையான நிலைக்கு முழுமையாக அவர் மீட்டெடுத்தார்.
அவருக்குத் திருமணம் செய்துவைக்க வேண்டிய நேரம் வந்தபோது, இந்த நுட்பமான மற்றும் முக்கியமான விஷயத்தில் மருத்துவர் பேயல்ஸ் கலந்தாலோசிக்கப்பட்டார். பட்டத்து இளவரசரின் உடல்நிலை அந்த நேரத்தில் மிகவும் மோசமாக இருந்தது. சில நேரங்களில் ஜப்பானிய அரியணைக்கு நேரடி ஆண் வாரிசு இல்லாமல் போய்விடுமோ என்ற அச்சமும் நிலவியிருக்கிறது. மகிழ்ச்சியுடன் இந்த நிலைமை தவிர்க்கப்பட்டது. இப்போது அந்த இளம் இளவரசர் மூன்று மகன்களுக்குப் பெருமைப்படத்தக்க தந்தையாக இருக்கிறார்.
யூனோ பூங்காவின் வளாகத்தில் ஓர் இம்பீரியல் மியூசியம் உள்ளது. காலை உணவுக்குப் பிறகு மருத்துவர் பேயல்ஸ் என்னை அங்கு வழிநடத்திச் சென்றார். அந்தக் கட்டடம் ஓரளவுக்கு இந்திய பாணியில் அமைந்திருந்தது. இந்தியாவில் பயணித்திருக்கும் ஒவ்வொரு பயணியும் அறிந்திருக்கக்கூடிய கோபுர அமைப்புடன் விளங்கியது. வெளிப்புறத் தோற்றத்தின் அழகைக்கூட்டும் முக்கிய அம்சங்களில் ஒன்றாக அது இருந்தது. ஜப்பானிய பழம் பொருட்களின் நல்லதொரு சேகரிப்பு அங்கு இருந்தது.
அசாதாரணமான அமைப்புடன் ‘செடன்’ நாற்காலிகள் பல காட்சிப்படுத்தப்பட்டிருந்தன; காளைகள் இழுக்கும் பழைய பாணியிலான வண்டிகளும் காணப்பட்டன. பழங்காலத்தில் அரச குடும்பத்தினரும் மற்றும் பிரபுக்களும் இவற்றைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். ஜப்பானில் அகழ்ந்தெடுக்கப்பட்ட சில கருங்கல் உருவங்களும் சிலைகளும் என்னை வியப்படைய வைத்தன. மிகவும் பழமையான அந்த உருவங்கள் ஒவ்வொன்றிலும் சம்ஸ்கிருத எழுத்துக்கள் பொறிக்கப்பட்டிருந்தன.
மேலும் அந்தச் சிலைகளை நெருங்கி ஆராய்ந்து பார்த்ததில் அவை இந்தியாவிலிருந்து அனுப்பப்பட்டிருக்கலாம்; அல்லது அங்கிருந்து வந்த பயணிகள் கொடுத்த விவரங்களைப் பின்பற்றி இங்கு அவை வடிக்கப்பட்டிருக்கலாம் என்பது தெளிவாகத் தெரிந்தது. எனினும், அவற்றின் தோற்றம் எதுவாக இருப்பினும், சிலைகள் மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்தின.
எனது கவனம் அடுத்ததாக ஜப்பானிய ஓவியங்கள் மற்றும் கைவினைப்பொருட்களின் காட்சியால் ஈர்க்கப்பட்டது. அனைத்து விதமான கலைப்பொருட்களும் அங்கு வைக்கப்பட்டிருந்தன. ஆனால், அடிப்படையில் அவை அனைத்தும் ஜப்பானியப் பாணியில் இருந்தன. சிலவற்றை வாங்கியதன்மூலம் எனக்கிருக்கும் கலை ரசனையில் என்னை ஈடுபடுத்திக்கொண்டேன். மிகவும் இனிமையாகவும் விரைவாகவும் நேரம் கடந்துசென்றது. மிகுந்த வருத்தத்துடன் புனித நகரான நிக்கோவிற்கு எனது பயணத்தைத் தொடங்கினேன். இரவு 9 மணிக்கு நாங்கள் அந்த இடத்தை அடைந்தோம்.
(தொடரும்)
___________
ஜகத்ஜித் சிங் எழுதிய “My Travels in China, Japan and Java, 1903” நூலின் தமிழாக்கம்