நிக்கோ மலைப்பகுதியில் இருக்கிறது. இங்கு வருவதற்கு முன் பார்த்திருந்த உயரமான இடங்களைக் காட்டிலும் சற்றே உயரத்தில் இருந்தது. ரயில் நிலையத்திலிருந்து அந்த மலைப்பகுதியிலிருந்த கனயா ஹோட்டலுக்கு ரிக்ஷாவில்தான் சென்றோம். பயணத்தில் குளிர் கடுமையாக இருந்தது.
ஹோட்டலில் எங்களை நன்கு வரவேற்றார்கள், நன்றாக உபசரித்தார்கள். அறிந்திராத, அரிதான இரவு உணவு பற்றிய விவாதம் பயணத்தின்போது கடுங்குளிரால் அனுபவித்த அசௌகரியம் விரைந்து நீக்கியது. நன்கு சமைக்கப்பட்ட அந்த உணவை அழகான ஜப்பானியப் பணிப்பெண்கள் பரிமாறினர். ஜப்பானியப் பணிப் பெண்களின் கவனிப்பும், பரிமாறி உபசரித்த பாணியும் ஒரு புதுமையான அனுபவம் ஒருபோதும் மனத்திலிருந்து மறைந்துவிடாது.
சப்தமின்றி அவர்கள் நடப்பது ஏதோ சறுக்கிச் செல்வதுபோல் இருக்கிறது. அவர்களது பணிவு தனித்துவமானது. அதுவும் அவர்கள் அணிந்திருக்கும் தேசிய உடை, நம்மால் விவரிக்க முடியாத சித்திரம் போன்ற அழகை அவர்களுக்கு கொடுக்கிறது. ஹோட்டல் முற்றிலும் ஜப்பானியர்களால் நிர்வகிக்கப்படுகிறது. அதன் தூய்மையும் வசதியும் அனைவரும் மிகவும் விரும்பத்தக்கவை.
நவம்பர் 22ம் தேதி. ஜப்பானின் சிம்லா – சுசென்ஜிக்கு (Chuzenji) மேற்கொண்ட உல்லாசப் பயணம் அந்த நாளை முற்றிலும் எடுத்துக்கொண்டது. நாங்கள் அங்கு ரிக்ஷாவில்தான் சென்றோம். மூன்று மணி நேரப் பயணம். ஓரளவு நன்றாக இருந்த சாலையில், அழகான மலைப்பிரதேசத்தின் காட்சிகளைப் பார்த்தபடி சென்றோம். வழியில் சில அழகான அருவிகளையும் பார்க்க முடிந்தது. இமயமலை அல்லது ஆல்ப்ஸின் திகைக்கவைக்கும் பிரும்மாண்டத்தை இங்கு பார்க்கமுடியவில்லை. எனினும், இந்த இயற்கைக்காட்சி ஒருவிதத் தனி அழகுடன் இருந்தது.
ரிக்ஷாவை இழுத்து வந்தவர்கள் அற்புதமான உடல்வலிமை கொண்டவர்கள்; பெரும்பான்மை தூரத்திற்கு, ஒருவர் மட்டுமே ரிக்ஷாவை இழுத்து வந்தார். சாலை மிகவும் செங்குத்தாக இருக்கும் இடங்களில் மட்டுமே மற்றொருவரின் உதவி அவருக்குத் தேவைப்பட்டது. நல்ல வேகத்தில், இருபது மைல்கள் இப்படிப்பட்ட பயணம் அவர்களுக்கு இயல்பான ஒன்றுதான். ஒரு தனி மனிதனாக, அவரது உழைப்பு எனக்கு மிகவும் வியப்பை அளித்தது.
பயணம் முடியப்போகிற நிலையில், சாலை படிப்படியாக செங்குத்தாக உயர்ந்து சென்றது. குன்றின் உட்புறமாகவும் வெளிப்புறமாகவும் சாலை வளைந்து வளைந்து சென்றது. வழியில் பல தேநீர் இல்லங்களையும் பார்த்தோம். ரிக்ஷா இழுத்து வந்தவர்கள், அந்த இடங்களில் சற்று நேரம் நின்று தங்களைப் புதுப்பித்துக் கொண்டனர், சிறிது நேர நிறுத்தத்தை நாங்களும் பயன்படுத்திக் கொண்டோம். இயற்கைக் காட்சிகளை ரசித்தோம். மேப்பிள் மரங்களில் உதிராமல் மிச்சமிருந்த இலையுதிர்காலத்து வண்ணங்களைப் பார்த்து மகிழ்ந்தோம்.
மூன்று வாரங்களுக்கு முன்பு நாங்கள் இங்கு வர முடிந்திருந்தால், இலையுதிர்காலத்தின் வண்ணக்காட்சிகளை அவற்றின் நிறைவான, பரிபூரண வடிவில் பார்த்திருக்கலாம். மலைச்சாலையின் விளிம்பில் நின்று பார்த்தோம். கண்ணுக்கு எட்டிய தூரத்திற்கு, பல மைல்களுக்கு இலைகளை உதிர்த்த நல்ல உயரமான மரங்கள் நின்றிருந்தன. ஆனாலும், பழைய மிச்சங்கள் கொஞ்சம் எஞ்சியிருந்தன; அவற்றை வைத்துப் பார்க்கையில், அவற்றின் இலையுதிர்கால வண்ணங்களின் முழுமையான நிலையில் மரங்கள் எப்படி இருந்திருக்கக்கூடும் என்பதையும், அந்த மிகச் சிறந்த காட்சியையும் கற்பனை செய்து பார்ப்பது கடினமாக இல்லை. இந்தக் காட்சியைப் பார்ப்பதற்காக மட்டுமே, ஏராளமான மக்கள் இந்த இடத்திற்கு வருகிறார்கள். வேறு எதற்காகவும் இல்லையென்றாலும், இந்த ஒரு காரணத்திற்காகவே இங்கு வருவது மிகவும் பயன்மிக்க ஒன்று.
கடினமான ஓர் ஏற்றத்திற்குப்பின் நாங்கள் சுசென்ஜியை அடைந்தோம். அங்கு லேக்சைடு என்ற பெயருள்ள மரத்தால் கட்டப்பட்ட ஒரு சிறிய ஹோட்டலில் நாங்கள் தங்கினோம். மதிய உணவை உண்டு புத்துணர்வு அடைந்தோம்; வழக்கம்போல், உற்சாகமான ஜப்பானியப் பணிப்பெண்கள் பரிமாறினர். உயரத்தாலும் (சுமார் நான்காயிரம் அடி) குளிர்காலம் என்பதாலும் குளிர் மிகக் கடுமையாக இருந்தது. வெளிநாடுகளைச் சேர்ந்த தூதர்களுக்கும் தூதரக அதிகாரிகளுக்கும் கோடையின் மூன்று மாதங்களும் சுசென்ஜி விருப்பமான உல்லாச இடம். அந்த நேரத்தில் வானிலை மிகவும் இனிமையாக இருக்கும்; சில நேரங்களில் ஈரப்பதத்துடனும் இருக்க வாய்ப்புண்டு.
மரங்களடர்ந்த கரைகளுடன் ஓர் ஏரி அந்த இடத்தின் மிகவும் கவனமீர்க்கும் அம்சம். வனத்திற்குள் மிக அழகான தோற்றத்துடன் சிறு இல்லங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஐரோப்பாவிலிருந்து வந்திருக்கும் சுற்றுலாப் பயணிகள் அதில் தங்கியிருக்கின்றனர். அச்சுறுத்திய வானிலை காரணமாக சுற்றிப்பார்க்கும் நேரத்தைக் குறைத்துக்கொள்ள வேண்டியதாகிவிட்டது; எனினும், புறப்படுவதற்குமுன், பார்க்க வேண்டிய அனைத்தையும் பார்த்துவிட்டோம். மூன்று மணிநேரத்தில் கீழே இறங்கிவிட்டோம். அன்றைய நாளின் மிகுதியை அமைதியாக கழித்தேன்.
அடுத்த நாள் (நவம்பர் 23) நிக்கோவில் சில இடங்களைச் சுற்றிப்பார்ப்பதில் போயிற்று. நிக்கோ இயற்கை அழகும் மற்றும் கலை சார்ந்த விஷயங்களும் என்று இரண்டு விதமாகவும் பிரபலமான நகரம் என்று கூறுவேன். மலைகள், அருவிகள், மிகப்பெரிய அற்புதமான மரங்கள் என்று பார்ப்பதற்குப் பல இருக்கின்றன. இரண்டாயிரம் அடி உயரத்தில் அமைந்திருப்பதும், அதனுடைய அழகிய இயற்கைச் சூழலும் சேர்ந்து, நிகரற்ற இயற்கைக் காட்சிகள் நிறைந்த இடமாக அதை மாற்றுகின்றன.
புத்த கோயில்களுக்கும் இந்த இடம் பிரபலமானது. அந்தக் குன்றுகளில் மரங்களின் ஊடாக ஓய்வாக நடந்து செல்லும்போது – வானிலையும், காட்சிகளும் – அதைவிட அழகியதான ஒன்றை நம்மால் நிச்சயம் கற்பனை செய்ய முடியாது. மிக அற்புதமான கிரிப்டோமேரியா மரங்கள் செறிந்து நிற்கும் அழகிய காட்சி அற்புதமானது. ஆரோக்கியத்திற்கு உதவும் வாசத்தலம் என்ற உயர்ந்த நற்பெயர் இந்த இடத்திற்கு இருக்கிறது. ஆனால் ஓரளவு ஈரப்பதம் நிறைந்த காலநிலை என்ற குறைபாடு அதற்கு இடையூறாக அமைந்துவிடுகிறது.
பகல் நேரத்தில் மூன்று முக்கியமான கோயில்களுக்குச் சென்றேன். அந்தக் கோவில்களில் ஒன்றின் முதன்மைத் துறவி, அந்தக் கோவிலின் மிகவும் உட்பகுதிக்கு, மிகப் புனிதமான பகுதிக்கு என்னை அழைத்துச் சென்றார். சில வெளிநாட்டவர்கள் மட்டுமே அங்கு அனுமதிக்கப்படுவார்கள். முதன்மைத் துறவி எங்களுக்குப் பல விஷயங்களை விளக்கிக் கூறினார். புனித நீரை அருந்துவதற்குக் கொடுத்தார். நிக்கோவிலிருக்கும் கோவில்கள் (இவை ஜப்பானின் மிகச் சிறந்த கோவில்கள்) ஏறத்தாழ அனைத்தும் பௌத்த மதத்தைச் சேர்ந்தவை. சில ஷின்டோ கோவில்களும் உள்ளன.
ஜூன் மாதத்தில், கோவில்களில் பெரிய திருவிழாக்கள் நடக்கின்றன; மிக அழகிய ஊர்வலங்களை மக்கள் நடத்துகிறார்கள். தற்போதைக்கு அவர்கள் மகிழ்ச்சியாக இருப்பதற்கும் உல்லாசத்திற்கும் தங்களை முழுவதும் அர்ப்பணித்துக் கொண்டுள்ளனர். இம்பீரியல் குடும்பத்தைச் சேர்ந்த சிலர் கோடை மாதங்களில் நிக்கோவிற்கு ஓய்வு எடுக்க வருவார்களாம்.
மறுநாள் காலை எழுந்ததும், வானிலையில் மாற்றம் ஏற்பட்டிருந்ததை உணர்ந்தேன். உற்சாகம் தரும் அடக்கமான குளிர், சுறுசுறுப்பூட்டிய வானிலை என்ற இரண்டாலும் மயங்கிப் போனேன். கடந்த சில நாட்கள் நிலவிய மந்தமான சூழலுக்குப் பின் பிரகாசமான வானம் வரவேற்க வேண்டிய ஒன்றில்லையா? வெப்பமான வானிலை வீழ்ந்து உறைநிலையை அடைந்துவிட்டது. குன்றுகளில் அனைத்தின் மீதும் அடர்த்தியான வெண்பனி பூச்சு காணப்பட்ட நிலைக்கு இதுவே காரணம் – உண்மையில் மிக அழகான காட்சி. நகரத்தின் அழகான சில இடங்கள் வழியாக ஒரு விறுவிறுப்பான நடை, எனது மதிய உணவிற்கான பசியை நன்கு கிளறிவிட்டது.
உணவிற்குப்பின் டோக்கியோவுக்குப் புறப்பட்டேன். மாலை ஏழு மணிக்கு அந்த நகரத்தை அடைந்தேன். நவம்பர் 25. இன்று எனது பிறந்த நாள். இதே நாளில்தான் ஜப்பான் பேரரசரை நான் சந்திப்பதற்கான நேரமும் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. நான் இம்பீரியல் அரண்மனைக்குச் சென்று சேர்ந்ததும், அங்கு சர் கிளாட் மெக்டொனால்ட் என்னைச் சந்தித்தார். பேரரசரிடம் நான் அறிமுகம் செய்துவைக்கப்பட்டபோது பரிவுடன் என்னருகில் அவர் இருந்தார்.
இம்பீரியல் அரண்மனை மிகப் பரந்த நிலப்பரப்பில் அமைந்துள்ளது. அதைச் சுற்றி பெரிய, ஆழமான அகழியும் இருக்கிறது. அரண்மனையின் ஒவ்வொரு நுழைவாயிலிலும் பாலங்கள் உள்ளன. அடுத்திருக்கும் மிகப் பிரும்மாண்டமான இரும்புக் கதவுகள் கொண்ட வாயில்களுக்கு அழைத்துச் செல்கின்றன. வாயில்கள் அனைத்திலும் காவலர்கள் பாதுகாப்பிற்கு நிற்கின்றனர். கட்டடங்கள் மற்றும் சுற்றுப்புறங்கள் அனைத்தும் ஜப்பானியப் பாணியில் உள்ளன. மொத்தம் மூன்று பெரிய வளாகங்கள் உள்ளன; அவற்றில் முதலாவதில் மட்டுமே பொதுமக்கள் அனுமதிக்கப்படுகிறார்கள்.
அரண்மனையை அடைந்ததும், அரண்மனை அதிகாரிகளில் ஒருவர் என்னைச் சந்தித்தார். நீண்ட தாழ்வாரங்களின் வழியாக பெரிய அறைகளுக்கு அவர் என்னை அழைத்துச் சென்றார். அவை மிக உயர்வான பரிமாணங்களில் அமைந்திருந்தன. இதைப் போன்ற வரவேற்பு வைபவங்களுக்காக அவை ஒதுக்கப்பட்டிருக்கலாம். அதில் ஒன்றில் நான் நுழைந்தவுடன், பேரோன் சன்னோமியா அறைக்குள் வந்தார். என்னை எதிர்கொள்ளப் பேரரசர் தயாராக இருப்பதாக என்னிடம் தெரிவித்தார்.
பேரோனைப் பின்தொடர்ந்து அடுத்திருந்த பெரும் வரவேற்பறைக்குச் சென்றோம். எனது வருகையை அறிந்த பேரரசர் என்னைச் சந்திக்க கதவருகில் வந்தார்.
பேரோன் சன்னோமியா என்னை அறிமுகப்படுத்தியதும், பேரரசர் என்னுடன் கைகுலுக்கினார். அறைக்குள் என்னைச் சில அடிகள் வழிநடத்தி அழைத்துச் சென்றார். சந்திப்பு முழுவதும் அங்கிருந்த பேரரசின் அரியணையின் முன்னால் நின்றபடியே பேரரசர் பேசினார். அரியணைக்குப் பின்னால் மேலும் பல அதிகாரிகள் நின்று கொண்டிருந்தனர்.
பேரரசருக்கு ஐரோப்பிய மொழி எதுவும் தெரியாது, எனவே பேரோன் சன்னோமியா மொழிபெயர்ப்பாளராகச் செயல்பட்டார்; அதனால், உரையாடல் இயல்பானதாக அமையவில்லை… இருந்தபோதிலும் மாட்சிமை பொருந்திய பேரரசர் என்னிடம் ஜப்பான் பயணம் பற்றி கேள்விகள் கேட்டார். பயணத்தை ரசித்தேனா, அந்தத் தேசம் பிடித்திருக்கிறதா, சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற வாத்து வேட்டையில் ஏதேனும் வாத்து பிடித்தேனா என்று வினவினார்.
எனது பதில்கள் அவரிடம் மொழிபெயர்த்துக் கூறப்பட்டதும் பேரரசர் ‘ஹா ஹா ஹம் ஹம்’ என்று சத்தமாகச் சிரித்தார். இந்த ‘ஹா ஹா’ போன்ற சிரிப்பு, ஒருவரின் பதிலால் திருப்தி அடைந்ததை அல்லது ஏற்றுக்கொள்வதை மட்டுமே குறிப்பது. ஜப்பானியர்களிடம் பொதுவாகக் காணப்படும் பண்பு இது. இன்னும் சில பொதுவான விஷயங்கள் நாங்கள் பேசினோம். சந்திப்பு முடிவுக்கு வந்தது. அதற்கு முன், என்னுடன் எனது அதிகாரிகள் இருவர் வந்திருப்பதுபோல் நின்றிருந்த சர் சி.மெக்டொனால்டு அறிமுகப்படுத்தப்பட்டு அவருடன் கைகுலுக்கினார்.
பேரரசர் மத்திய வயதுடன் மற்றும் நடுத்தரமான உடல்வாகுடன் தோன்றினார்; எனது சந்திப்பின் போது அலங்காரங்கள் ஏதுமற்ற எளிமையான கருநிற ராணுவச் சீருடையில் இருந்தார். அவரது சீருடை, அதன் பரிமாணங்களைப் பொறுத்தவரை ஒரு யூகத்தின் அடிப்படையில் தைக்கப்பட்டதாகத் தோன்றியது. பேரரசர் என்ற நபருக்கு அளிக்கப்படும் புனிதத்தன்மையின் காரணமாக, அவரது குடிமக்கள் யாரும் அவரைத் தொடுவதற்கு அனுமதிக்கப்படுவதில்லை.
நான் அங்கிருந்து புறப்படும்போது, மாட்சிமை பொருந்திய பேரரசர் அந்தப் பெரும் அறையின் கதவு வரை என்னுடன் நடந்து வந்தார். பின், என்னுடன் கைகுலுக்கி எனக்கு விடையளித்தார். அதேநேரத்தில் ஜப்பானிய முறையில் பலமுறை குனிந்து வணங்கினார். பேரரசர் நடந்துகொண்ட முறையும் என்னை நடத்திய முறையும் வழக்கத்திற்கு மாறானது; ஒரு நல்லுறவை குறிக்கிறது. சர் கிளாட் மெக்டொனால்டுக்கு இருந்த மதிப்பின் காரணமாகத்தான் விதிவிலக்கான அக்கறையுடனும் மரியாதையுடனும் நான் நடத்தப்பட்டேன் என்று சொல்லலாம்.
மன்னர்களின் ‘தெய்வீக உரிமை’ என்ற கோட்பாடு ஜப்பானில் முழு அளவில் நடைமுறையில் இருப்பதைப் பார்க்கமுடிகிறது. அங்கு பேரரசர் என்ற மனிதர் புனிதமானவராகக் கருதப்படுகிறார், யாரும் அவரது புகைப்படத்தை விற்கக் கூடாது. சமூகத்தின் அனைத்து வகுப்பினரும், உயர்ந்தவர் முதல் தாழ்ந்தவர்கள் வரை, நடைமுறையில் தங்கள் அரசரை வழிபடுகிறார்கள் எனலாம். புனிதமானவராக, துறவி போன்றவராக அவர்களது மதம் சார்ந்த, சமூக மதிப்பீடுகள் அனைத்திலும் அவர் உள்ளடங்கி இருக்கிறார்.
ஜப்பான் தற்போது அடைந்திருக்கும் வளமான மற்றும் அறிவார்ந்த நிலை எந்த அளவிற்குப் பேரரசரின் தனிப்பட்ட ஆளுமையின் காரணமாக ஏற்பட்டது என்பதை அறிவது நிச்சயம் இயலாது. மேலும், அவர் ஆளுகின்ற தேசத்தின் தலைவிதியை நிர்ணயிக்கும் விஷயங்களில் தலையிட்டு எந்த அளவிற்குத் தனிப்பட்ட முறையில் அவர் வழிநடத்துகிறார் என்பதைக் கண்டறிவதும் கடினமானது.
இருப்பினும், அவருக்குத் தெரியாமலோ, அவரது அனுமதியின்றியோ எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை, முக்கியமானது என்று கருதப்படும் எதுவும் செயல்படுத்தப்படுவதும் இல்லை என்பதை அறியமுடிகிறது. திறமையான, அனுபவம் மிகுந்த அமைச்சர்கள் பேரரசருக்கு நன்கு ஆதரவாகவும் உதவியாகவும் இருக்கிறார்கள். முக்கியமான விஷயங்கள் விவாதிக்கப்படும்போது, ‘மூத்த ஸ்டேட்ஸ்மேன்’ என்று அழைக்கப்படும் இவர்களின் ஆலோசனை எப்போதும் பெறப்படுகிறது. உலக நாடுகளிடையே ஜப்பானின் தற்போதைய நிலைக்கு பெரும்பாலும் காரணமாக இருக்கும் மிகப் புகழ்பெற்ற சீர்திருத்தவாதிகள் சிலரும் இந்த ‘மூத்த ஸ்டேட்ஸ்மேன்’ குழுவில் இருக்கிறார்கள் என்று நிச்சயம் கூறலாம்.
(தொடரும்)
___________
ஜகத்ஜித் சிங் எழுதிய “My Travels in China, Japan and Java, 1903” நூலின் தமிழாக்கம்