Skip to content
Home » மகாராஜாவின் பயணங்கள் #14 – இம்பீரியல் அரண்மனை

மகாராஜாவின் பயணங்கள் #14 – இம்பீரியல் அரண்மனை

இம்பீரியல் அரண்மனை

தற்போதைய பேரரசர் நாற்பது ஆண்டுகளுக்கு முன் அரியணை ஏறினார்; அப்போது ஜப்பானும் அதன் நிறுவனங்களும் நிலப்பிரபுத்துவ அமைப்பால் நிர்வகிக்கப்பட்டன; பெயரளவிற்குத்தான் அவர் பேரரசர். நடைமுறையில் அவர் ஒரு கைதி. நிர்வாகத்தின் அனைத்து அதிகாரங்களும் ஷோகன்களிடம் (Shogun) இருந்தது. அவர்கள் வெவ்வேறு மாகாணங்களின் ஆட்சியாளர்கள் அல்லது நிலப்பிரபுக்கள்.

ஜப்பானியர்கள் விழித்துக்கொண்டு சீர்திருத்தத்தின் அவசியத்தை உணர்ந்தபோது இரண்டு மாற்று யோசனைகள் அவர்கள் முன் இருந்தன. ஒன்று, அப்போது நடைமுறையிலிருந்த அமைப்பைத் தொடர்வது; இரண்டாவது, பேரரசரிடம் அதிகாரம் முழுமையையும் ஒன்றுகுவித்து அதன்வழி ஒரு வலிமையான தேசமாக ஒன்றிணைவது. இந்த முக்கியமான விஷயத்தில் மக்களிடையே கருத்து வேறுபாடு நிலவியது. அதன் காரணமாக, குருதி சிந்திய புரட்சி ஒன்று ஏற்பட்டது, இதன் விளைவாக பேரரசர் அவரது அதிகாரங்களுடன், செயல்பாடுகளுடன் அவருக்கு உரிய இடத்தை மீண்டும் அடைய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

இது நடந்தவுடன், ஷோகன்கள் அவர்கள் எடுத்துக்கொண்ட உரிமைகளையும் கொடூரமான அணுகுமுறையையும் கைவிட்டனர். ஷோகன்களில் சிலர் இப்போதும் அந்த நாட்டு அரசாங்கத்தில் முக்கியப் பதவிகளை வகிக்கின்றனர்; அவர்கள் பேரரசருக்கு முற்றிலும் விசுவாசமாக, கீழ்ப்படிந்து நடந்து கொள்கின்றனர். அரசியல், சமூக மற்றும் பொருளாதாரப் பார்வையில், மாற்றத்தால் ஏற்பட்ட மகிழ்ச்சியான முடிவுகள் உலகம் முழுமைக்கும் இப்போது தெளிவாகத் தெரிகின்றன.

ஜப்பானின் இந்த அரச வம்சம் மிகவும் பழமையானது. கடந்த 2500 ஆண்டுகளுக்கு அதனுடைய நேரடி வம்சாவளியை நாம் தடம் காண முடியும். எனது அடுத்த நகர்வு அரண்மனையைச் சுற்றிப் பார்ப்பது. இதை விட்டால் அந்த வாய்ப்பு இனி ஒருபோதும் ஏற்பட வாய்ப்பில்லை.

விருந்து மண்டபம், வரவேற்பு அறைகள், அரியணை மண்டபம் வழியாகச் சென்று சுற்றிப் பார்த்தேன். அனைத்தும் பெரிய அளவில் கட்டப்பட்டிருந்தன; ரசனையுடன், மிகவும் ஆடம்பரமான முறையில் அலங்கரிக்கப்பட்டிருந்தன. கண்ணாடிக் கதவுகள், அந்தச் சூழலுக்கு ஒருவிதமான படிக விளைவை தந்தது. அதன் வழியில் முழுமையான தாக்கத்தை ஏற்படுத்தியதாக தோன்றியது. அறைகலன்கள் அனைத்தும் பெரிதாக இருந்தன; அவை ஜெர்மனியிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டவையாம்.

இறக்குமதி செய்யப்பட்ட எதைக் காட்டிலும், முழுமையான ஜப்பானியத் தயாரிப்புகளின் அலங்காரங்கள் உயர்வானவையாக எனக்குக் காட்சியளித்தன. உதாரணமாக, விருந்து மண்டபம். ஐந்நூறு சதுர கெஜம் பரப்பளவில் இருந்த அந்தக் கூடம், பல்வேறு வண்ணங்களுடன் கலைநயமிக்க முறையில் தங்கமும் கொண்டு அலங்கரிக்கப்பட்ட கூரையைக் கொண்டிருந்தது. அதன் சுவர்கள் விலையுயர்ந்த பட்டுத் துணிகளால் மூடப்பட்டிருந்தன. வரவேற்பு அறை ஒன்றில், நாற்பது அடிக்கும் மேல் நீளமான பெரும் திரைச் சீலை ஒன்றைப் பார்த்தேன். கியோட்டோவின் நெசவாளர் ஒருவரால் ஒற்றைத் துணியால் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.

பெரும்பாலும் அலங்கார வேலைகளில் மரத்தின் பயன்பாடு அதிகம் இருந்தது; அரக்கைப் பயன்படுத்தி மிகச்சிறப்பான முறையில் புத்திசாலித்தனமாக வேலைப்பாடு. எவராலும் பின்பற்ற முடியாத பாணி. ’பேனல்கள்’ தனித்துவமான வடிவமைப்பால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தன; புடைப்புருவ வடிவிலோ அல்லது வண்ணம் பூசப்பட்டோ இருந்தன. பெரும்பாலும் அறைகளின் சுவர்கள், பிரதானமாக ஜரிகை வேலைப்பாடமைந்த பட்டுத் துணியால் மூடப்பட்டிருந்தன.

அதே நேரத்தில் நடைபாதை சுவர்கள், ஜப்பானுக்கே உரியப் பாணியில் காகிதப் புடைப்புருவ வடிவங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. இத்தகைய காகிதத்தைச் செய்வது பெரிய அளவிலான, பெருகிவரும் முக்கியமான தொழில்துறையாக உருவாகி வருகிறது என்று நம்புகிறேன். அனைத்து அறைகளிலும் லாவெண்டர் நறுமணம் வீசியது. கதகதப்பாகவும் வைக்கப்பட்டிருந்தன.

காலை உணவுக்காக ஹோட்டலுக்குத் திரும்பினேன்; அதன்பின் அசகோசா பூங்காவிற்குச் சென்றேன். லண்டனின் கிரிஸ்டல் பேலஸ் போல், ஜப்பானுக்கு இந்தப் பூங்கா. வெவ்வேறு திசைகளில் செல்லும் தெருக்கள் பூங்காவை வெட்டிச்செல்கின்றன. இவற்றில் அமைந்திருக்கும் பெட்டிக்கடைகளில் பொம்மைகள், விசிறிகள் போன்ற அனைத்து வகை அலங்காரப் பொருட்களும் ஏனைய பொருட்களும் விற்கப்படுகின்றன. பொதுமக்களுக்கு முன்பாகவே மிட்டாய் தயாரித்து, அந்த இடத்திலேயே அவர்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது. மிட்டாய்க்காரர்கள் சுற்றுப்புறத்தை துப்புரவாகவும் தூய்மையாகவும் வைத்திருப்பது வாங்கி சாப்பிடலாம் என்ற ஆசையை ஏற்படுத்துகிறது. இல்லையெனில் அந்த ஆசை நமக்கு எழாது.

ஓரமாக, சாலையின் ஓரமாக நடந்துகொண்டிருந்த காட்சிகள் மிகவும் ஏராளம். கண்காட்சி ஒன்றில் நாம் பார்க்கக்கூடிய வழக்கமான அம்சங்கள் அனைத்தும் இருந்தன. பொருட்களைக் காற்றில் வீசி புத்திசாலித்தனமாக பிடித்து வித்தைக் காட்டுவோர், ஓரிடத்தில் நிற்காமல் சுற்றிக் கொண்டே இருக்கும் கலைஞர்கள், மல்யுத்த வீரர்கள், நடிகர்கள் போன்ற ஏராளமானோர். நாடக நிகழ்வுகள் மக்களின் நல்லாதரவுடன் முழு வீச்சில் நடந்துகொண்டிருந்தன.

பெரும் எண்ணிக்கையிலான மக்கள், விடுமுறையைக் கொண்டாடுவதில் முனைந்திருந்தனர். இந்த இடத்தில் கூடியிருக்கும் மக்களுக்கும் பாரிஸிலோ லண்டனிலோ அல்லது ஐரோப்பாவில் வேறு எங்குமோ இவ்வாறு கூடியிருப்போர்களுக்கும் இடையில் உள்ள வேறுபாடு மிகவும் குறிப்பிடத்தக்க ஒன்று. இவர்கள் நிச்சயம் உற்சாகமாக அனைத்தையும் அனுபவிக்கிறார்கள் என்றாலும், இந்த மக்கள் நல்லமுறையில் நடந்து கொள்கிறார்கள். மது அருந்தி ஆடுகின்ற மனிதர்களை, ரவுடித்தனத்தை இங்கு பார்க்க முடியவில்லை என்பது நிகழ்ச்சியின் மகிழ்வான அம்சமாக இருந்தது.

இந்தப் பிரபலமான உல்லாசத் தளத்திற்கு அருகில் குவான்னான் என்ற புகழ்பெற்ற கோவில் உள்ளது. ‘கருணையின் இறைவி’. இந்தக் கோவிலிலும் ஜப்பானின் மற்ற கோவில்களிலும் நாம் பார்க்க முடிகிற ஆர்வமூட்டும் அம்சம் ஒன்று உள்ளது. அதாவது வழிபாடு தவிர மற்ற நோக்கங்களுக்காகவும் மக்கள் இவற்றை இலவசமாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

நாங்கள் அங்கு இருந்தபோது ஒட்டுமொத்த கோவிலும் ஆர்வமூட்டும் கலவையான இடமாகத் தோன்றியது. பறவைகள் உள்ளேயும் வெளியேயும் பறந்து கொண்டிருந்தன. ஆண்கள் அதிர்ச்சியளித்தனர், சிலர் படுத்திருந்தனர் அல்லது உறங்கிக் கொண்டிருந்தனர். வியாபாரிகள் பேரம் பேசிக் கொண்டிருந்தனர். அதே நேரம் மக்களில் சிலர் வழிபட்டுக் கொண்டிருந்தனர். அந்தக் காட்சி வியப்பாக இருந்தது. நாம் புரிந்துகொண்டு இருப்பதுபோல் கோவில்கள் வழிபாட்டிற்கு என்பதுடன் அவற்றிற்கு வேறு பயன்களும் இருப்பதை ஒருவருக்கு உணர்த்தியது.

எனது பிறந்தநாளை நல்ல முறையில் கொண்டாட ஆசைப்பட்டேன். ஹோட்டலில் என்னுடன் உணவருந்தச் சிலரை அழைத்தேன். மற்ற விருந்தினர்களுடன் எனக்கு நெருக்கமான சர் க்ளாட் மற்றும் லேடி மெக்டொனால்ட், வெளியுறவு அமைச்சர் பேரோன் கொமுரா, பேரோன் சன்னோமியா மற்றும் பேரோனஸ் (இவர் ஓர் ஆங்கிலேயப் பெண்மணி; டோக்கியோ சமூகத்தில் மிகவும் விரும்பப்படுபவர்), ஜெர்மன் தூதரகத்தின் பேரோன் வான் எர்கெர்ட் ஆகியோரை அழைத்திருந்தேன்.

பல்வேறு நாடுகளைச் சேர்ந்த நண்பர்கள் பலரும் வந்திருந்தனர். முதலிடம் யாருக்கு என்பதை முடிவுசெய்வது சிரமம் நிறைந்ததாக இருந்தது. ஆகவே, இந்த விஷயம் அரண்மனை உள் விவகாரங்களைக் கையாளும் அமைச்சரிடம் கொண்டு செல்லப்பட்டது. சமூகப் பழக்க வழக்கம் தொடர்பான அனைத்து விஷயங்களையும் தீர்மானிக்கும் உரிமை கொண்டவர் அவர்தான்.

மொத்தம், நாற்பது விருந்தினர்கள் இருந்தனர். பேரோனஸ் சன்னோமியாவை உணவு மேஜைக்கு அழைத்துச் செல்லும் பெருமை எனக்குக் கிடைத்தது. விருந்தில் அனைவரும் ரசித்து உண்ட, தவிர்க்க முடியாத உணவாக புலவு இருந்தது; என்னுடன் இந்தியாவிலிருந்து நான் அழைத்துச் சென்றிருந்த எனது சமையல்காரர் செய்த பதார்த்தம். அவர் சமைத்த உணவுகளுக்காக அங்கிருந்த அனைவராலும், குறிப்பாக ஜப்பானிய விருந்தினர்களால் மிகவும் பாராட்டப்பட்டார்.

சரியானதொரு தருணத்தில் ஜப்பானியப் பேரரசரின் ஆரோக்கியத்தை முன்மொழிந்து ஒரு சிற்றுரை ஆற்றினேன். அதற்கு எதிர்வினையாக பேரோன் கொமுரா எமது பேரரசரின் (பிரிட்டிஷ் பேரரசர்) ஆரோக்கியத்தை முன்மொழிந்து பேசினார். பேண்டு இசைக்குழுவினர் அந்தந்த நாட்டின் தேசிய கீதங்களை இசைத்தனர். இரண்டு ‘டோஸ்டு’களுக்கும் அங்கிருந்த அனைவரும் மிகவும் அன்புடன் எதிர்வினையாற்றினர்.

அதன்பின் பேரோன் சன்னோமியா எனது ஆரோக்கியத்தை முன்மொழிந்து, அதே நேரத்தில் ஒரு நேர்த்தியான சொற்பொழிவும் ஆற்றினார். அதற்கு வழக்கம் போல் நான் நன்றி தெரிவித்தேன். ஜப்பானிய ராணுவ பேண்டு இசைக்குழுவினர் இரவு உணவின் போதும் அதன் பின்னரும் நல்ல இசையை வழங்கினர்.

மறுநாள் ஜப்பானிய போலோ விளையாட்டு ஒன்றைப் பார்ப்பதற்குச் சென்றிருந்தோம்; நாங்கள் பார்க்க வேண்டும் என்பதற்காகவே அந்த விளையாட்டு, பேரரசரின் உத்தரவின் பேரில் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஜப்பானில் போலோ விளையாட்டு நிலப்பிரபுத்துவ காலத்தின் எச்சமாகும். பொதுவாக அங்கு அது பிரபுக்களால் விளையாடப்படுகிறது. முக்கியமான விருந்தினர்கள் பொழுதுபோக்காக பார்த்து மகிழும் நோக்கில், இப்போது இதற்குப் புத்துயிர் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த நோக்கத்தின் அடிப்படையில் போலோ அணிகள் அரண்மனையின் செலவில் பராமரிக்கப்படுகின்றன.

கடற்கரைக்கு அருகில் நாற்புறமும் அடைக்கப்பட்டிருந்த ஓரிடத்தில், இம்பீரியல் பூங்கா ஒன்றில் இந்த விளையாட்டுப் போட்டி நடந்தது. பார்வையாளர்கள் அந்த விளையாட்டைச் சிறந்த முறையில் பார்க்கும் வகையில் போலோ மைதானம் அமைக்கப்பட்டு இருந்தது. பேரரசர் சார்பாக சம்பிரதாயமாக என்னை வரவேற்பதை மாஸ்டர் ஆஃப் செரிமனிஸும், குதிரைகளின் மாஸ்டரும் செய்தனர்; அதன்பின் விளையாட்டு முறையாகத் தொடங்கியது.

ஆங்கிலேயர்கள் விளையாடும் போலோவிலிருந்து இந்த விளையாட்டு முற்றிலும் வேறுபட்டிருந்தது. இரு அணி வீரர்களும் வெவ்வேறு வண்ணங்களில் ஆடைகளை அணிந்திருந்தனர். நிலப்பிரபுத்துவக் காலத்தில் நிலவிய பாணியில் அவை இருந்தன. ஒவ்வொரு வீரரும் தம் கையில் ஒருவிதமான மட்டையை ஏந்தியிருந்தனர். அதனைப் பயன்படுத்தி, தொடர்ச்சியாக அமைந்திருக்கும் துளைகள் ஒன்றில் பந்தைச் செலுத்துவதற்கு முயற்சி செய்கிறார்கள்.

அந்தத் துளையுடன் இலக்கு போன்ற ஓர் அமைப்பு பொருத்தப்பட்டிருக்கிறது. பந்தைப் போடவிடாமல் எதிரணி தடுக்க முயல்கிறது. மேலும் பந்தை வேறு திசையிலும் திருப்ப முயல்கிறது. ஒரு துளையில் பந்தை அனுப்புவதில் வீரர் ஒருவர் வெற்றிபெறும் போது, அவரது அணிக்கு ஒரு கோல் அளிக்கப்படுகிறது. இதை ஒரு வகை தோல்வியாக ஏற்றுக்கொண்டு, எதிரணி குதிரையை விட்டு இறங்கி மைதானத்தைவிட்டு நடந்து வெளியேற வேண்டும்.

ஒவ்வொரு சுற்றும் சுமார் பத்து நிமிடங்கள் நீடித்தது. அதன் பிறகு சிறிது ஓய்வு. ஒரு கோல் அடித்துவிட்டால் பொது ஓய்வுக்கு வெளியேறும் சமிக்ஞையாக எடுத்துக் கொள்ளப்படுகிறது. குதிரைகளை மாற்றிக் கொள்ளும் வாய்ப்பும் அப்போது வழங்கப்படுகிறது. குதிரைகள் மிகநேர்த்தியான முறையில் சேனங்கள், அணிமணிகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன.

போலோ வீரர்களின் பொதுவான தோற்றம் ஸ்பானிஷ் காளை வீரர்களை எனக்கு நினைவூட்டியது. மொத்தம் இரண்டு மணி நேரம் ஆட்டம் நீடித்தது. புதுமையான அந்த விளையாட்டை மிகவும் ரசித்தேன். அதன்பின் நான் முடிவு செய்திருந்த டோக்கியோ கிளப்பிற்குச் சென்றேன்.

அங்கு ரஷ்யத் தூரதர் பேரோன் ரோசனுடன் பில்லியர்ட்ஸ் விளையாடி மகிழ்ந்தேன். அவரை விளையாட்டிலிருந்து வெளியேற்றுவதில் எனக்கு அதிகச் சிரமம் இல்லை. ஆனால், பிரிட்டிஷ் தூதரகத்தில் இணைந்திருக்கும் கப்பற்படை அதிகாரி கேப்டன் ட்ரோபிரிட்ஜ் பழிக்குப்பழி வாங்க எனக்காகக் காத்திருந்தார். அவருடையது அற்புதமான விளையாட்டு.

டோக்கியோ கிளப் பெரும்பாலும் ஐரோப்பியத் தூதர்களாலும் ஜப்பானிய அதிகாரிகள் சிலராலும் ஆதரிக்கப்படுகிறது. முற்றிலும் ஜப்பானிய உயர்குடி மனிதர்களுக்கான கிளப் ’Nobles’ Club’ என்று அழைக்கப்படுகிறது. வெளிநாட்டவர்கள் அதற்குத் தேர்ந்தெடுக்கப்படுவதில்லை, உறுப்பினராக அனுமதிக்கப்படுவதில்லை. இரவு உணவிற்குப் பின் ஷிபா பார்க் கிளப்பிற்கு சென்றேன். அங்கு சில சுவாரஸ்யமான கெய்ஷா நடனங்களைப் பார்த்தேன். அந்த வகை நடனங்களில் அவை மிக உயர்ந்தவை என்று கூறப்பட்டது.

நவம்பர் 27 அன்று அதிகாலையில், கர்னல் ஹியூம் உடன் இம்பீரியல் நிர்வாகத்தால் பராமரிக்கப்படும் வனப்பகுதி ஒன்றுக்கு பெருஞ்செம்போத்து பறவை சுடுவதற்குச் சென்றேன். நான்கு மணி நேரப் பயணம் மிகவும் கடினமானதாக இருந்தது. வண்டி, ரிக்‌ஷா மற்றும் ரயில் மூலம் செல்லவேண்டியதாயிற்று. மிக மோசமான குளிர் நிறைந்த நாள். பறவை வேட்டைக்கு முற்றிலும் சாதகமான நாள் இல்லை. இந்தப் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் வேட்டையாடுவதற்கான அனுமதி சில நேரங்களில் முக்கியமான விருந்தினர்களுக்குப் பேரரசர் வழங்குகிறார். ஆனால் எப்போதும் இல்லை.

நான் அந்த இடத்திற்குச் சென்று சேர்ந்ததும் இம்பீரியல் வேட்டை நிகழ்வின் மாஸ்டர் கோமகன் டோடா வும் அவரது சில உதவியாளர்களும் என்னைச் சந்தித்தனர், நேரத்தை வீணடிக்காமல் வேட்டையில் இறங்கினோம். பல ‘beat’ கள் (அந்தத் தடங்களில் சென்று பறவைகளை வேட்டையாடுவது) ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

ஆனால், அன்று அதிர்ஷ்டம் என் பக்கம் இருக்கவில்லை. துப்பாக்கியால் ஒரு பறவையையும் சுடும் வாய்ப்பு எனக்குக் கிடைக்கவில்லை. பறவைகள் மிகவும் குறைவாக இருந்தன. கர்னல் ஹியூம் மட்டுமே ஒன்றிரண்டைக் கொன்றார். அவருடைய பையில் இரண்டு செம்போத்துகளும் ஓர் உள்ளானும் இருந்தன.

மதிய உணவு முடிந்தது (உபசரித்தவர்கள், அப்போது என்னுடைய விருந்தினர்களாக இருந்தனர்). நாங்கள் மீண்டும் எங்களது நல்வாய்ப்பை முயன்று பார்த்தோம். எந்தப் பறவையும் சிக்கவில்லை. விஷயங்கள் மிகவும் ஏமாற்றத்தை தந்தன. திடீரென்று மழை பெய்யத் தொடங்கியது. ஆகவே, மேலும் வேட்டையைத் தொடர்வதைக் கைவிட்டோம்.

எனது கெடுவாய்ப்பு அன்று என்னை விட்டுப் போகவில்லை. திரும்பும் பயணத்தின்போது எனது ரிக்‌ஷா கவிழ்ந்து சேறு நிறைந்திருந்த சாலையில் விழுந்தேன். முடிந்தவரை சேற்றைத் துடைத்துக் கொண்டு எழுந்தேன். சேறு பூசிய உடையுடன் பயணத்தைத் தொடர்ந்தேன். அன்று இரவு ஹோட்டலுக்கு மிகவும் தாமதமாகச் சென்று சேர்ந்தோம். ஜப்பானில் நான் கழித்த மிகவும் ஏமாற்றம் தந்த நாள் அது

(தொடரும்)

___________
ஜகத்ஜித் சிங் எழுதிய “My Travels in China, Japan and Java, 1903” நூலின்  தமிழாக்கம்

பகிர:
அக்களூர் இரவி

அக்களூர் இரவி

சொந்த ஊர் மாயவரம். தொலைத் தொடர்புத் துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். 'இந்தியா என்கிற கருத்தாக்கம்', ‘காந்தியும் பகத் சிங்கும்’, ‘அரசியல் சிந்தனையாளர் புத்தர்’ உள்ளிட்ட நூல்களை மொழிபெயர்த்திருக்கிறார். திசையெட்டும் மொழியாக்க விருது பெற்றவர். தொடர்புக்கு : thendralaham@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *