மறுநாள் பீரஸஸ் (Peeresses) என்ற பள்ளிக்கூடத்திற்குச் சென்றேன். அரச வம்சத்தினர் மற்றும் பிரபுக்களுடைய மகள்கள் கல்வி பயிலும் நிறுவனம். அனைத்து வகையான பாடங்களும் இங்கு சொல்லித் தரப்படுகின்றன. அளிக்கப்படும் பயிற்சி விரிவானதாகவும் முழுமையான தன்மை கொண்டதாகவும் தோன்றியது.
ஆங்கிலேய மற்றும் ஜப்பானியச் சமூகத்தைச் சேர்ந்த பெண் கண்காணிப்பாளர்கள் பணிபுரிகின்றனர். அவர்கள் என்னைப் வெவ்வேறு துறைகளுக்கும் அழைத்து சென்று சுற்றிக் காட்டினர். கல்வி கற்றுத் தரும் பணியை அவர்கள் எப்படி மேற்கொள்கிறார்கள் என்று அந்த முறையை விளக்கினர்.
ஓவிய வகுப்பு மிகவும் தகுதி மிக்கதாகக் கருதப்படுகிறது. அந்தப் பணிக்குப் புதிய விஷயங்களை அறிந்திருப்பதும் உயர் திறனும் தேவை. அந்த மாணவியரின் திறமை வெளிப்பட்ட இரண்டு ஓவியங்களை எனக்கு அவர்கள் வழங்கினர்; மிகுந்த நன்றியுடன் மகிழ்ச்சியோடு பெற்றுக்கொண்டேன். காலத்திற்கேற்ப தம்மை மேம்படுத்திக் கொண்டிருக்கும் இந்த ஜப்பானிய இளம் பெண்கள் மேற்கத்திய பாணியிலும் நடனமாடக் கற்றுக்கொள்கின்றனர்!
மேற்கத்திய நடனத்திற்கும் இந்த ஜப்பானியப் பெண்கள் வழக்கமாகப் பயிற்சி செய்யும் நடனத்திற்கும் இடையிலான வித்தியாசம் மிகவும் சுவாரஸ்யமானது. ஜப்பானிய நடனமும் இங்கு கற்பிக்கப்படுகிறது; ஆனால், நிச்சயமாக, மற்றதைக் கட்டிலும் மிகவும் சிக்கலானது.
பாட்டு கற்றுத் தரும் வகுப்பும் மிகந்த ஆர்வத்தை ஏற்படுத்தியது. மாணவிகள் தம் திறமையை அதிக அளவு வெளிப்படுத்தினர். இந்தப் பள்ளியில் சொல்லித் தரப்படும் இசை வகையை, பாடும் முறையை விவரிப்பது மிகவும் கடினம். ஆனால், அந்த நாட்டின் இசை மாற்மடைந்துகொண்டிருந்தது என்று என்னால் தெளிவாகக் கூறமுடியும். அத்துடன் வெளிநாட்டு அல்லது மேற்கத்திய இசை முறையும் பொருத்தமாக அறிமுகம் செய்யப்பட்டது. ஜப்பானிய இசையின் அசல் தன்மையை அழிக்காமல் அதன் இருப்பை அவதானிக்க முடிகிற அளவு மட்டுமே மேற்கத்திய இசையின் பயன்பாடு இருக்கிறது.
சனிக்கிழமை 12 மணியளவில் நான் பள்ளிக்குச் சென்றிருந்தேன். அன்று அரை நாள் விடுமுறை. அந்த நேரத்தில் உயிர்ப்பு மிக்க காட்சியை என்னால் பார்க்க முடிந்தது. ஐந்து வயது வண்ணத்துப் பூச்சிகளும் நன்கு வளர்ந்த பதினேழு வயது மாணவிகளும் என அனைத்து வயதிலும் மாணவிகள் பள்ளி முடிந்து வீடுகளுக்குத் திரும்பிய மிக உற்சாகமான அற்புதக் காட்சி அது.
நேர்த்தியான பல வண்ணங்களில் ஆடைகள்; தோற்றத்திலும், அவர்களது சிரிப்பிலும் இருந்த உற்சாகமும், வண்ணமும் அவர்களது உயிரோட்டமுள்ள இயக்கங்களும் அழகிய சித்திரத்தை, காட்சிப் படிமத்தை உருவாக்கின.
சில பெண்கள் தங்களுடன் காலை உணவோ மதிய உணவோ எடுத்து வந்திருக்கலாம். ஒரு சாதாரண சாக்லேட் பெட்டியின் அளவுக்கு இருக்கும் சிறிய டப்பாக்களில் அவற்றை எடுத்து வருகின்றனர்; ஒவ்வொரு பெட்டியிலும் தவிர்க்க முடியாத ’சாப்-ஸ்டிக்ஸ்’ இருக்கின்றன. அத்துடன் சமமான அளவிற்கு முக்கியமான அரிசி பதார்த்தமும் மீனும் இருக்கும். நல்ல பசியுடன் இருக்கும் அந்தப் பெண்கள் அந்த இடத்திலேயே உணவைச் சாப்பிட்டு விடுகின்றனர்.
0
இம்பீரியல் காவல் படையின் படைவீடுகள் குறித்து அதிகம் கேள்விப்பட்டிருந்தேன். பீரஸஸ் பள்ளியில் பார்க்க வேண்டிய அனைத்தையும் பார்த்த பின், ஜப்பானிய உயர்நிலை சிறப்புப் படைப் பிரிவினர் வசிக்கும் முகாமிற்குச் சென்றேன்.
கர்னல் ஹியூம் எனக்குத் துணையாக வந்தார். முகாமிற்குச் சென்றவுடன் உயர் அதிகாரிகள் சிலர் என்னை எதிர்கொண்டு வரவேற்றனர்; அவர்களது உணவு வழங்குமிடத்தில் (மெஸ்), வழக்கப்படி, தேநீரும் கேக்கும் அளித்தனர். தனித்தன்மை கொண்டதாக, பகட்டாகத் தோன்றாவிட்டாலும், வெளிப்படையாகப் பார்க்கையில் நன்கு அமையப் பெற்ற நிறுவனமாக இருந்தது. ஜப்பானில் எங்கும் பார்க்க முடிவதுபோல் அந்த இடமும் சுத்தமாகவும் நன்கு பராமரிக்கப்பட்டும் இருந்தது. எல்லா இடங்களிலும் முழுமையான தூய்மையைப் பார்க்க முடிந்தது.
ஐரோப்பியப் பாணியைப் பின்பற்றி, இந்த இடத்திலும் சில படைப்பிரிவுகளுக்கு ’மெஸ்’ ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அறிந்தேன். கத்தியும் முட்கரண்டிகளும் அதிக அளவு பயன்பாட்டில் இருந்தாலும் படையதிகாரிகளுக்கு மிகவும் பிடித்த சாப்-ஸ்டிக்ஸ் இதுவரையிலும் விலக்கி வைக்கப்படவில்லை.
பயிற்சிகள் நடக்கும் ஒரு பெரிய நாற்கோண மைதானத்தைச் சுற்றி, பல மூன்று மாடி கட்டடங்கள் இருந்தன. வீரர்களின் வசிப்பிடங்கள் இவை. ஐரோப்பாவில் பர்க்க முடிகிற இதையொத்த இடங்களிலிருந்து இந்தப் ‘பாரக்ஸ்’ வேறுபட்டிருக்கவில்லை. வீரர்களின் படுக்கைகள் அறையோரமாக வரிசையாக அமைந்திருந்தன. சுவரில் பொருத்தப்பட்டிருந்த வசதியான அலமாரிகளில் அவர்களது ஆயுதங்களும் சாதனங்களும் நேர்த்தியாக வைக்கப்பட்டிருந்தன. மாற்று ஆடைகள் போன்றவை இருப்பு வைக்கப்பட்டிருந்த பண்டகச் சாலைக்கும் சென்று பார்த்தேன். அனைத்துப் பொருட்களும் அற்புதமான ஒழுங்குடன் வைக்கப்பட்டிருந்தன.
எனது வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட கமாண்டிங் ஆபீஸர் இரண்டு அணிகளை அந்த மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட வைத்தார். இந்த வீரர்கள் உடல் சார்ந்த பயிற்சிகளில் அவ்வளவு திறமையுடன் இல்லை. எனினும் துப்பாக்கிகளைக் கொண்டு சுடுவதில், பிற பயிற்சிகளில் வேகத்திலும் துல்லியத்திலும் மின்னல் போல் செயல்பட்டனர்.
தரவரிசையில் உலகில் வேறு எந்த ராணுவத்திற்கும் இணையாக ஜப்பானிய ராணுவம் இருக்கிறது. எனினும், பெரும்பாலும் சிக்கனமான வழிகளில்தான் இயங்குகிறது என்பதை இங்கே குறிப்பிட வேண்டும். அதிகாரிகளின், வீரர்களின் சிக்கனமான வாழ்க்கை முறை இதைச் சாத்தியமாக்குகிறது. எனினும், உயர்வான செயல்திறன் பராமரிக்கப்படுகிறது.
ஜப்பானிய ராணுவத்தில் அதிகாரிகளுக்கும் வீரர்களுக்கும் வழங்கப்படும் ஊதியம், பின்வருமாறு: (ஓர் ஆண்டுக்கு; அப்போதைய கணக்கின்படி 1 யென்= ரூ.1/8/0).
ஜெனரல்: 7500 யென்
லெப்டினன்ட் ஜெனரல்; 6000 யென்
மேஜர் ஜெனரல்: 5700 யென்
கர்னல்: 3600 யென்
லெப்டினன்ட் கர்னல்: 2700 யென்
மேஜர்: 1950 யென்
கேப்டன்: 1350 யென்
லெப்டினன்ட் : 900 யென்
2வது லெப்டினன்ட் : 630 யென்
வாரண்ட் ஆஃபிஸர்: 36.66 யென் ஒரு மாதத்திற்கு
சார்ஜென்ட் – மேஜர் : 18 யென்
கர்னல் சார்ஜென்ட்: 12 யென்
சார்ஜென்ட்: 9 யென்
கார்பொரல் : 3 யென் மாதத்திற்கு
முதல் தனிச் செயலர்: 2.8 யென் மாதத்திற்கு
2வது தனிச் செயலர் : 2 யென் மாதத்திற்கு
மதிய உணவுக்குப் பின் ஐந்து மைல் தொலைவிலிருந்த யூனோ பூங்காவில் ஓர் இசைக் கச்சேரிக்குச் சென்றேன். அங்கு நவ நாகரிகமான மனிதர்கள் கூடியிருந்தனர். நிகழ்ச்சியின் முதல் பகுதி ஐரோப்பிய இசைக் கருவிகள் பயன்படுத்தப்பட்டது. ஆஸ்திரிய செஃப் டி ஆர்கெஸ்ட்ராவின் இசைக்கோலத்தின் வழியில் ஜப்பானியக் கலைஞர்கள் அதை வழங்கினர். மிகவும் உயர்தரமான இசை நிகழ்வு; பார்வையாளர்களால் நன்கு மதிக்கத்தக்கதாக இருந்தது. பேரரசரின் தனிப்பட்ட நிர்வாகத்தின்கீழ் இந்த இசைக்குழு இருக்கிறது. அதனால், இம்பீரியல் ஆர்கெஸ்ட்ரா என்று அழைக்கப்படுகிறது. திறமை மிகுந்த அமெச்சூர்கள் பலரும் இந்த இசை நிகழ்வில் பங்கேற்றனர்.
இரண்டாம் பகுதி முழுக்க முழுக்க ஜப்பானியப் பாடல்களாலும் ஜப்பானிய இசைக் கருவிகளின் இசையாலும் நிரம்பியிருந்தது. கலைஞர்கள் பாடல்களைப் பாடிய முறையை விவரிப்பது கடினம்: ஆனால், பெரும்பாலும் கீச்சொலிகள் (trill) நிரம்பியதாக இருந்தது என்று கூறலாம். ‘மைனர் கீ’ அளவில் நிகழ்த்தப்பட்டது போல் தோன்றியது.
கலைஞர்களின் முகத்தில் அதிக அளவில் முகபாவனைகள் மாறிக்கொண்டேயிருந்தன. நான் விவரிக்க மிகவும் சிரமப்படும் இந்த நிகழ்வு செவ்வியல் தன்மை கொண்டது எனக் கூறினார்கள். அந்த இசை மேலும் மேலும் செவ்வியல் தன்மை கொண்டதாக மாற, கேட்டுக்கொண்டிருந்த ஐரோப்பியர்களால் சிரிப்பை அடக்கிக்கொள்வது மேலும் மேலும் சிரமமானதாக இருந்ததைக் காண முடிந்தது!
டோக்கியோவில் எனது சுற்றுப்பயணம் தற்போதைக்கு முடிவுக்கு வந்துள்ளது. சர்.சி.மெக்டொனால்டு மற்றும் அவரது மனைவியிடம் விடைபெறுவதும் நன்றி தெரிவிப்பதும் மட்டுமே எஞ்சியிருந்தது.
(தொடரும்)
___________
ஜகத்ஜித் சிங் எழுதிய “My Travels in China, Japan and Java, 1903” நூலின் தமிழாக்கம்