Skip to content
Home » மகாராஜாவின் பயணங்கள் #16 – கவர்ந்து இழுக்கும் ஜப்பான்

மகாராஜாவின் பயணங்கள் #16 – கவர்ந்து இழுக்கும் ஜப்பான்

கியோட்டோ

டோக்கியோவில் எனது பயணம் இப்போது முடிவுக்கு வந்துவிட்டது. சர் சி.மெக்டொனால்ட், அவரது மனைவி இருவரிடமும் விடைபெற வேண்டும். அவர்கள் என்னிடம் காட்டிய பரிவிற்கு மனதார நன்றி தெரிவிக்க வேண்டியது மீதமிருக்கிறது. அவர்கள் செய்த உதவி, டோக்கியோவில் எனது இருப்பை இனிமையாக்கியது; பல விஷயங்களைக் கற்றுக்கொள்ள உதவியது.

ஜப்பானில் நான் சென்ற இடமெல்லாம் சாதாரண உடையில் துப்பறியும் நபர்கள் இருவர் நிழலாகப் பின்தொடர்ந்தனர். முதலில் நான் பெரிதும் ஆத்திரம் கொண்டேன். விடாமல் அவர்கள் என்னைத் தொடர்வது தேவையற்றது என்று கூறினேன். எனினும், மதிப்பிற்குரியவர் எவராவது பார்வையாளராக நாட்டிற்கு வந்தால், அவர் செல்லும் இடங்களுக்கு எல்லாம் அவருடன் எந்நேரமும் இரண்டு துப்பறியும் நபர்களை அனுப்புவது மாற்ற முடியாத விதி என்று என்னிடம் விளக்கினார்கள்.

ஆனால், சில சந்தர்ப்பங்களில், இந்த மனிதர்கள் எனக்குப் பெரும் உதவியாக இருந்தனர்; குறிப்பாக நெரிசலான சாலைகள் மற்றும் ரயில் நிலையங்களில் சலசலப்பு ஏதுமின்றி, கூட்டத்தை விலக்கி அவர்கள் எனக்கு வழி ஏற்படுத்தி தந்தனர்.

நவம்பர் 29 அன்று டோக்கியோவிலிருந்து மதிய நேர ரயில் ஒன்றில் புறப்பட்டேன். மூன்று மணிக்கு நாங்கள் நோசா என்ற இடத்தை அடைந்தோம்; ரயிலிலிருந்து இறங்கியதும் மின்சார டிராம் ஒன்றில் பயணித்தோம்.

சுமார் ஒரு மணி நேரப் பயணம். டிராம் சென்ற பாதையின் பெரும் பகுதி, இருபுறமும் கணிசமான எண்ணிக்கையில் கிராமங்களைக் கடந்து சென்றோம். எப்போதாவதுதான் நாங்கள் சமவெளியைப் பார்க்க முடிந்தது. படிப்படியாக நாட்டின் மலைப்பாங்கான பகுதிக்குள் நாங்கள் நுழைவதைக் கவனித்தோம்.

அந்த மலைப்பிரதேசம் மிகவும் வளமானதாக தோன்றியது; குன்றுகளை, அதிக அளவில் மரங்கள் மூடியிருந்தன. மரங்களில் பார்க்க முடிந்த இலையுதிர்காலத்தின் அழகிய வண்ணங்களை ரசிக்காமல் இருக்க முடியவில்லை. வேகமாக பாய்ந்தோடிய நீரோடை ஒன்று நதியாக உருமாறியது அந்தக் காட்சிக்கு மேலும் அழகு சேர்த்தது.

எலெக்ட்ரிக் டிராமில் ஒரு மணி நேரப் பயணத்திற்குப்பின் ஓரிடத்தில் இறங்கி, மியானோஷிதா என்ற இடம் செல்ல ரிக்ஷாவில் பயணத்தைத் தொடங்கினோம். மலைமேல் செல்வதற்கான மேல்நோக்கிய பயணத்தைத் தொடங்கியபோது இருட்டாகிவிட்டது. சாலை செங்குத்தாக இருந்தாலும், நல்ல நிலையில் இருந்தது. செல்ல வேண்டிய இடத்தை நாங்கள் ஒரு மணி நேரத்தில் அடைந்தோம்.

அங்கு உயர்தரமான, நன்கு பராமரிக்கப்படும் ‘ஃபூஜ்ஜியா’ என்று அழைக்கப்படும் ஹோட்டலில் தங்கினோம். உரிமையாளரின் அழகான மகள் மேட்மொய்செல் யாமா குட்சி நாங்கள் தங்கவிருந்த வசதியான குடியிருப்புகளைக் காட்டினாள். வழக்கமான, ஐரோப்பிய மயமாகிவிட்ட ஜப்பானிய இளம் பெண் அவள். அவள் பேசிய பிரெஞ்சு மொழி அற்புதமாக இருந்தது.

மியானோஷிதா
மியானோஷிதா

அடுத்த நாள் எழுந்ததும் மலர்ச்சியான, சுறுசுறுப்பூட்டும் வானிலையைக் கண்டோம். எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சி. மியானோஷிதா அனைவரும் விரும்பும் ஜப்பானின் மற்றொரு மலைவாசத் தலங்களில் ஒன்று; பருவத்தின் உச்சத்தில் (கோடையில்) நாங்கள் அங்கு செல்லவில்லை; எனினும், ஐரோப்பாவிலிருந்தும் அமெரிக்காவிலிருந்தும் வந்திருந்த விருந்தினர்களால் ஹோட்டல் நிரம்பியிருந்தது.

அற்புதமாக இருந்த காலநிலை, ஹகோன் ஏரிக்குப் பயணம் மேற்கொள்ள எங்களைத் தூண்டியது; சுமார் இரண்டரை மணி நேரப் பயணம்; கடினமான பாதையில் சிரமமான ஏற்றம். வழியில் அழகிய பள்ளத்தாக்குகளைக் கடந்துசென்றோம். கனிமங்கள் நிறைந்த சூடான நீரூற்றுகள் பலவற்றைப் பார்க்க ஆர்வமாக இருந்தோம். பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் நிவாரணம் பெற இங்கு இந்த நீரூற்றுகளுக்கு வருகிறார்கள்.

ஜப்பானிய விடுதியின் ஜன்னலிலிருந்து பார்க்கையில் விடுதியின் அடிவாரம் வரை ஏரி பரவியிருப்பது தெரிந்தது. ஏரியைச் சுற்றி எல்லாப் பக்கங்களிலும் உயர்ந்த மலைகள்; ஆனால், அவை அனைத்திலும் மிக அற்புதமானது ஃபூஜ்ஜியா மலை. 13,000 அடி உயரத்திற்குத் தனது அற்புதமான தலை உயர்த்தி நின்றிருந்தது. சுற்றியிருந்த அனைத்திற்கும் மேலாக உயர்ந்து தெரிந்தது. அதன் வடிவம் கிட்டத்தட்ட சமச்சீரான அமைப்புடன், ஒரு கூம்பு அல்லது பிரமிடின் தோற்றத்தைக் கொண்டிருந்தது.

ஏரியின் அமைதியான நீரில் தெரிந்த மலையின் பிரதிபலிப்பு இயற்கைக் காட்சிக்கு மேலும் அழகு சேர்த்தது. அதன் உச்சியிலிருந்து கீழ்நோக்கி சுமார் 6,000 அடி வரை எப்போதும் பளபளக்கும் பனியால் மூடப்பட்டிருக்குமாம். அதிலிருந்து வெளிப்படும் சூரியக் கதிர்களின் பிரதிபலிப்பு கிட்டத்தட்ட ஒருவரைத் திகைக்க வைக்கக்கூடியது.

மதிய உணவு சாப்பிட்டபின் மேலும் சிறிது நேரம் அந்தக் காட்சியை ரசித்தபடி அமர்ந்திருந்தோம். பின் அருகிலிருந்த ஒரு சிறிய குன்றின் மீது ஏறிச் சென்றோம். அங்கு ஒரு கோடைக்கால அரண்மனை அமைந்துள்ளது. வெப்பம் மிகுந்த காலநிலையில் இம்பீரியல் குடும்பத்தினரின் உல்லாசத் தலமாக இது செயல்படுவதாக என்னிடம் கூறினார்கள். எனினும், குடும்பம் அடிக்கடி வந்தாலும், பேரரசர் அந்த இடத்திற்கு இதுவரை ஒரு முறை தான் வந்திருப்பதாக அறியப்படுகிறது.

அரண்மனை இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது; ஒரு பகுதி ஜப்பானியக் கலையம்சங்களுடளும் மற்றொரு பகுதி ஐரோப்பியப் பாணியிலும் அமைந்துள்ளது. பிந்தையது, பிரான்சின் கடலோரப்பிரதேசத்தில் அமைந்திருக்கும் பிரபலமான ஓர் அரண்மனை ‘சாலட்டை’ (உல்லாச குடில்) ஒத்திருந்தது.

ஜன்னல்களின் வழியே நாம் பார்க்கமுடிந்த காட்சிகள் தென் ஐரோப்பாவில் காண முடிந்தவை எவற்றிற்கும் இணையானதாக அல்லது அவற்றை விஞ்சியதாக இருக்கக்கூடும். இம்பீரியல் குடும்பம் வசிக்கும் ஜப்பானியப் பகுதி வழக்கம்போல் அறைகலன்கள் இல்லாமல் இருந்தது. அந்தக் கண்கவர் சூழலிலிருந்து வலுக்கட்டாயமாக, முகத்தைத் திருப்பிக்கொண்டு வருத்தத்துடன் அறை திரும்பினோம். அந்தி சாயும் நேரத்தில் மியானோஷிதாவை அடைந்தோம்.

மியானோஷிதாவில் நாங்கள் தங்கிய இரண்டாம் நாள் வானிலை மோசமாக இருந்ததைக் குறிப்பிட வேண்டும். பலத்த மழை. மேலும் எனக்கு உடல்நிலை சரியில்லாமல் போயிற்று. ஆகவே, நாள் முழுவதும் அறைக்குள்ளேயே இருக்க முடிவு செய்தேன். மறுநாள் பதினோரு மணி ரயிலில் நகோயாவுக்குச் சென்றோம், செல்லும் வழியில் அந்தப் புகழ்பெற்ற ஃபூஜ்ஜியா மலையின் மிகச் சிறந்த காட்சியை ரயிலிலிருந்தும் பார்க்க முடிந்தது. அலுப்பான பயணத்திற்குப் பின் இரவு 09.30 மணியளவில் நகோயாவை அடைந்தோம். ஒரு சிறிய ஹோட்டலில் தங்கினோம்.

நகோயா ஜப்பானின் முக்கிய மாகாண நகரங்களில் ஒன்று. உற்பத்தித் தொழிற்சாலைகள் பல இங்கு இருக்கின்றன. ஜப்பானின் செழுமை குறித்து கற்பனை செய்ய இந்த இடம் நமக்கு வாய்ப்பளிக்கிறது. நகரம், பெரிய நிரந்தரமான காவற்படையைக் கொண்டிருக்கிறது. ஆனால், என் வசம் சில மணிநேரங்கள் மட்டுமே இருந்தன. எனவே, அங்கிருந்த பழைய கோட்டையைப் பார்ப்பதுடன் எனது ஆசையை மட்டுப்படுத்திக் கொண்டேன். அந்தத் தேசத்தின் மிகப்பழமையான நிலபிரபுத்துவக் கோட்டையின் மிகச்சிறந்த மாதிரி என்று கூறினார்கள்.

அந்த இடத்தைப் பொது மக்களால் பார்வையிட முடியாது. அத்துடன் இதைப் பார்க்க, வெளிநாட்டுப் பிரதிநிதிகள் அல்லது தூதரகங்கள் ஒன்றின் கடிதம் அவசியம். முன்பு இரண்டு அகழிகள் இருந்தனவாம்; இப்போது அவை இரண்டும் வறண்டுபோய்விட்டன. அந்த இடத்தைக் காவற்படைக்கான விரிவான தங்குமிடங்களாகப் பயன்படுத்துகிறார்கள்.

நகோயா கோட்டை
நகோயா கோட்டை

கோட்டைக்குள் இருந்த இரண்டு அடுக்குமாடிக் குடியிருப்புகள் பார்க்கத் தகுதியுடையன. அவற்றின் அலங்கரிப்புகள் ஜப்பானியக் கலையின் ஆக உயர்ந்த நிலையை வெளிப்படுத்தின. பெரிய அறைகளுக்கும் அவற்றிற்கு உள்ளே அமைந்திருக்கும் சிறு அறைகளுக்கு ’ஸ்லைடிங்’ கதவுகள் அமைக்கப்பட்டுள்ளன.

பூக்கள், புலிகள், பறவைகள், செர்ரி-மலர் ஆகியவற்றின் சித்திரங்களால் கதவுகள் அலங்கரிக்கப்பட்டிருந்தன. இவை அனைத்தும் அந்த நாட்டின் மிகப் பிரபலமான கலைஞர்கள் சிலரால் வரையப்பட்டவை.

சுவாரஸ்யம் ஏற்படுத்தும் கிணறு ஒன்று அங்கே இருக்கிறது. கிணற்றின் நீரை ‘தங்க நீர்’ என்று அழைக்கிறார்கள். ஏனெனில், அந்த நீரின் தரத்தை மேம்படுத்தும் நோக்கில் கிணற்றில் தங்கம் சேர்க்கப்பட்டுள்ளதாம். கட்டடங்கள் ஐந்து மாடிகளைக் கொண்டிருந்தன. அவற்றில் ஒன்றின் உச்சியிலிருந்து நகரம், கடல், சில மலைகளின் அழகான, விரிவான காட்சிகளைப் பார்க்க முடிந்தது.

மாலை நகோயாவிலிருந்து புறப்பட்டோம். அன்றிரவே கியோட்டோ மாநகரத்தை அடைந்தோம். சிறிய மலை ஒன்றின் உச்சியில் அமைந்திருந்த மையாகோ ஹோட்டலில் தங்கினோம். இந்த ஹோட்டல் முழுவதும் மரத்தால் கட்டப்பட்டுள்ளது; பாசாங்கற்ற கட்டடக்கலை அழகுடன் இருந்தது. தங்குவதற்கு மிகவும் வசதியாக இருந்தது; எங்களுக்கு உணவும் நன்றாகவே இருந்தது. எங்கள் தேவைகளை நிறைவேற்ற நிர்வாகம் எடுத்துக் கொண்ட கவனமும் வெளிப்படுத்திய மரியாதையும் வேறெங்கும் பார்க்க முடியாதது.

இரவில் கடுமையான பனிப்பொழிவு. காலையில் எழுந்து பார்த்தால் அனைத்தும் வெள்ளை நிற அழகிய போர்வையால் மூடப்பட்டது போல் இருந்தது. ஹோட்டலிலிருந்து நகரத்தின் ஒரு பகுதியைப் பார்க்க முடிந்தது. கண் பார்வையில் அருகிலிருந்த சில மலைகளும் தெரிந்தன. இதுவரையிலும் இந்த இடத்திற்கு, மேற்கத்திய நாகரிகத்தின் தாக்கங்கள் வந்துசேரவில்லை. அதன் விளைவாக முற்றிலும் ஜப்பானியத் தன்மையுடன் இருந்தது. ஆகையால், கடந்த பல ஆண்டுகளாகவே மேற்குலகின் தொடர்ச்சியான செல்வாக்கிற்கு ஆட்பட்டிருக்கும் டோக்கியோ மற்றும் ஏனைய நகரங்களைக் காட்டிலும் மிகவும் ஆர்வமூட்டுவதாக இந்த நகரம் வெளிநாடுகளிலிருந்து சுற்றிப்பார்க்க வருபவர்களுக்கு இருக்கிறது.

கியோட்டோ
கியோட்டோ

முன்னதாக கியோட்டோ ஜப்பானியப் பேரரசின் முக்கிய நகரமாக இருந்தது. ஒவ்வொரு ஆண்டும் சில மாதங்கள் பேரரசர் இங்கு வசிக்கிறார் என்றாலும் அதையும் மீறி இந்த நகரின் முக்கியத்துவம் குறைந்துபோனது என்பதுடன் இப்போது டோக்கியோவுக்கு அடுத்து, இரண்டாவது முக்கிய நகரமாகிவிட்டது. இருப்பினும், வணிக ரீதியாகவும் தொழில் ரீதியாகவும், கியோட்டோ இன்னும் முதன்மையான இடத்தில்தான் இருக்கிறது. ஏனெனில், இங்குதான் ஜப்பானின் சிறந்த, தரமான பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. விற்கப்படுகின்றன.

கெடுவாய்ப்பாக எனக்கு நேரம் குறைவாகவே இருந்தது. ஆனால், இருக்கும் நேரத்தைச் சிறப்பாகப் பயன்படுத்தத் தீர்மானித்தேன். அதனால், காலை உணவுக்குப் பின் உடனடியாக இரண்டு இம்பீரியல் அரண்மனைகளைப் பார்க்கப் புறப்பட்டுவிட்டேன். இரண்டு அரண்மனைகளும் முற்றிலும் ஜப்பானிய பாணியில், அலங்கரிப்பில் இருந்தன; இந்த விஷயங்களில் டோக்கியோவில் பார்த்த அரண்மனைகளுடன் அழுத்தமாக மாறுபட்டிருந்தன. நுழைவாயிலில் பார்வையாளர் புத்தகம் ஒன்று வைக்கப்பட்டிருந்தது; எனது பெயரைப் பதிவு செய்யும் வாய்ப்பை அது அளித்தது.

கூடத்தில் பெரிய அறிவிப்புகள்: புகைபிடிப்பது தடைசெய்யப்பட்டுள்ளது; ஓவர் கோட்டுகளையும் குடைகளையும் எடுத்துச் செல்ல வேண்டாமென்றும் கூறின. நுழைவாயில் அருகே காலணிகளையும் அகற்ற வேண்டியிருந்தது, ஆனால் எனக்குச் சிறப்பு அனுமதி அளிக்கப்பட்டது; என்னுடையதை அகற்றாமல், அதன்மேல் போடும்படியாக பெரியதாக ஒரு ஜோடி ஸ்லிப்பர்கள் எனக்குக் கொடுக்கப்பட்டன.

கியோட்டோ இம்பீரியல் அரண்மனை
கியோட்டோ இம்பீரியல் அரண்மனை

அரண்மனைகள் இருந்த வளாகம் சுமார் 26 ஏக்கர் நிலப்பரப்பை உள்ளடக்கியிருந்தது. உள்நுழைய ஆறு வாயில்கள் அமைந்திருந்தன. அரண்மனைகளுக்கு வெளியில் பல சிறிய கட்டடங்கள் முன்பு இருந்துள்ளன. ஆனால், அவை வெளிப்புற மதில்களுக்குள் இருந்தன; இந்தக் கட்டடங்களில் பிரபுக்கள் வசித்திருக்கின்றனர்.

அரண்மனைகளின் சில பகுதிகள் அரசக் குடும்பத்தினரின் பிரத்தியேகப் பயன்பாட்டில் இருந்துள்ளன. இப்போது அவை ஷின்டோ திருவிழாக்கள் நடத்தப் பயன்படுகின்றன. ‘ஸ்லைடிங்’ கதவுகள், காகிதத்தால் செய்யப்பட்டவை போல் தோன்றுகின்றன; சிறந்த கலைஞர்கள் சிலரால் வரையப்பட்ட அழகிய ஓவியங்கள் அவற்றை அலங்கரித்தன. இங்கும், பேரரசரின் சிம்மாசனம் ஒன்று இருப்பதைப் பார்த்தோம்: அதற்கு மேல், பல வண்ணங்களில் மெல்லிய பட்டுத்துணியால் அமைந்த ஒரு விதானம்.

அடுத்து நாங்கள் செரியோடன் என்று அழைக்கப்பட்ட இடத்தைப் பார்த்தோம். இந்த இடத்தில் பல ஓவியங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. சில அசல் ஓவியங்கள்; பல நூற்றாண்டுகளுக்கு முந்தயவை. தாழ்வாரம் ஒன்று கோ-கோஷோ1 என்று அழைக்கப்படும் அரண்மனைப் பகுதிக்கு இட்டுச் சென்றது. அதன் மூன்று அறைகள் மட்டும் ஒப்பீட்டளவில் நவீனமாக இருந்தன. பிரகாசமான வண்ணங்களில் அலங்கரிக்கப்பட்டிருந்தன.

அந்த இடம் சம்பிரதாய நிகழ்வுகளுக்கும். அதிகம் முக்கியத்துவம் இல்லாத கூட்டங்கள் நடத்தவும் பயன்பட்டது. அரண்மனைகளைச் சுற்றிப்பார்க்க எனக்கு மூன்று மணிநேரம் மட்டுமே இருந்தது. அந்த இடத்தை முழுமையாகச் சுற்றிப்பார்க்க குறைந்தது ஒரு நாள் முழுவதும் தேவை.

அரண்மனைப் பகுதிகளைப் பார்த்தபின் ஜப்பானிய வாட்பயிற்சி (ஃபென்சிங்) பள்ளி ஒன்றைப் பார்த்தோம். ஆண்களும் பெண்களும் சிறுவர் சிறுமிகளும் இந்த அழகான, ஆரோக்கியமான உடற்பயிற்சிக்கு வருகின்றனர். ஏனைய விஷயங்களைப் போல், ஜப்பானின் அந்தத் ‘தற்காப்பு’ வகுப்பு முறையும் வேறு எந்த நாட்டிலுமிருந்து முற்றிலும் வேறுபட்டது. பயன்படுத்தும் பயிற்சி கம்புகள் நீளமானவை; அத்துடன் அவற்றை அவ்வளவு எளிதாக சுழற்றமுடியாதவை. மற்றவரை விஞ்சும்போதோ, அல்லது எதிரியைத் திடீரென முன்னேறித் தாக்கிவிட்டாலோ ஆர்வத்தை வெளிப்படுத்தும் வகையில் சிறு கூச்சலிடுகின்றனர்.

ராணுவ அறிவியல், ஆயுதங்கள் போன்றவற்றில் ஜப்பான் உலகளவில் மற்றவர்க்கு இணையாக இருக்கிறது. எனினும், அதன் மக்கள்’ஃபென்சிங்’, மல்யுத்தம், தடகள விளையாட்டுகள் போன்ற பழைய விஷயங்களை இன்றும் பின்பற்றிவருகின்றனர்; சிறந்த உடற்பயிற்சி என்ற முறையில் மட்டுமின்றி தமது பழமையான பழக்க வழக்கங்களுடன் இருக்கும் தொடர்பை முற்றிலும் இழந்துவிடாமல் இருக்கவும் தொடர்ந்து பயிற்சி செய்கின்றனர்.

ஐந்தாம் தேதி கியோட்டோவின் மிகப் பெரிய யமி ஹோட்டலில் காலை உணவுக்குப் பின் நாங்கள் கட்சுரா-ரிக்யூ என்றழைக்கப்படும் ஓர் இம்பீரியல் தோட்டத்தைப் பார்க்கச் சென்றோம். ஜப்பானிய நிலப்பரப்பு-தோட்டக் கலைக்கு எடுத்துக்காட்டு என்று சொல்லமுடிகிற சிறந்த ‘மாதிரி’. தோட்டம் மிகவும் தாக்கத்தை ஏற்படுத்துவதாக இருந்தது; செயற்கையாக அமைக்கப்பட்ட குளங்களும், சிறு பாலங்களும், நீர்ப்பகுதியைத் தாண்ட ஆங்காங்கே அமைக்கப்பட்டிருக்கும் கற்களும் ஒழுங்காக வெட்டப்பட்டு, அற்புதமான வடிவங்களில் வளர்க்கப்படும் மரங்களும், மேலும் பல விஷயங்களும் இணையாக ஆர்வமூட்டுவதாகவும் தாக்கத்தை ஏற்படுத்தவும் செய்தன. அந்தத் தோட்டம் நன்கு பராமரிக்கப்படுவது தெரிந்தது. ஆனால் அங்கிருந்த கட்டடங்கள் பற்றிச் சொல்ல ஏதுமில்லை. அவற்றில் பெரும்பாலானவை ஏறத்தாழ இடிந்து விழும் நிலையில் இருந்தன.

திரும்பும் வழியில் நிஷிஹோங்வான்ஜி என்ற பெரும் கோவிலுக்குச் சென்றோம். புதியதொரு கோவில் வளாகம் அது. இதற்கும் இதுபோன்ற மற்ற இடங்களுக்கும் இடையிலான வேறுபாடாக, புதியதாகவே தோன்றும் அதன் தோற்றம், நிலை இருக்கிறது; காலம் அதன் புதுமையை இன்னமும் சிதைத்துவிடவில்லை. அந்த இடத்தை எனக்குச் சுற்றிக் காட்டியது ஓர் இளம் தலைமை மதகுரு. அவர் ஆக்ஸ்போர்டில் மூன்றாண்டுகள் கல்வி பெற்றவர் என்பது வியப்பான தகவலாக இருந்தது. சில காலம் தான் இந்தியாவிலும் இருந்திருப்பதாகவும், டெல்லியில் கடந்த ஆண்டு நடந்த அந்த மாபெரும் தர்பார்2  நேரத்தில் அங்கு இருந்தார் என்ற கூடுதல் தகவலையும் என்னிடம் அவர் தெரிவித்தார்.

நிஷிஹோங்வான்ஜி கோவில்
நிஷிஹோங்வான்ஜி கோவில்

மலைப்பகுதியில் கட்சுரா கவா நதி வேகமாக இறங்கும் நீரோடையைப் பார்ப்பதற்கு உல்லாசப் பயணம் செல்வதில் 6ஆம் தேதி முழுமையையும் செலவிட்டோம். பயணத்தின் முதல் பகுதியாக ரயிலில் மூன்று மணி நேரத்திற்கும் குறையாமல் சென்றோம் . அழகான மலைக் காட்சிகள் வழியாக இந்த ரயில் பாதை எங்களை அழைத்துச் சென்றது. அந்தக் காட்டு நீரோடை, ரயில் பாதையை வளைத்ததுபோல், பெரும் கற்பாறைகளின், கற்கள் ஊடாக அந்த ஓடை விரைந்தோடியது.

இந்தப் பகுதியில் அந்த ரயில் பாதையை நிர்மாணிப்பதில் பெரும் பொறியியல் சிரமங்களை நிச்சயம் சந்திக்க நேர்ந்திருக்கும். நிலப்பகுதியின் இயற்கைச் சூழல் சுரங்கப் பாதைகள் பலவற்றையும் அமைக்கவேண்டிய அவசியத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. ரயில் பயணத்தின் முடிவில் இறங்கி நாங்கள், அதன் பின் ஒரு படகில் ஏறி அந்தக் காட்டாற்றின் வேகத்தை எதிர்த்துச் சென்றோம்.

நீரோடையின் படுக்கை அதிகம் பாறையாக இருந்தது; படகின் இயக்கத்துடன் மேலும் கீழும் வேகமாக அசைந்தபடி பயணித்த அனுபவம் மிகவும் கிளர்ச்சியாக இருந்தது. செங்குத்தான மலைகளுக்கு இடையில் மிக அழகான இயற்கைக்காட்சிகளின் ஊடாக சுமார் பதின்மூன்று மைல் அந்த நீரோடை செல்கிறது.

கடும் புயல் காற்றால் தூக்கிவீசப்படுவது போன்ற இரண்டு மணி நேரப் பயணத்திற்குப் பின் ராஷியாமாவை (இன்றைய அராஷியாமா- மூங்கில் வனம்?) அடைந்தோம். பலரும் விரும்பும் கோடை வாசஸ்தலம் இது. வழக்கமான தேநீர் இல்லங்களும் விடுதிகளும் நிறைந்திருந்தன. செர்ரி-மரங்கள் முழுமையாகப் பூத்துக் குலுங்கும் பருவத்தில் இங்கு வந்திருந்தால், கண்கொள்ளாக் காட்சியாக இருந்திருக்கும்.

சரியான பருவ காலத்தில் பல ஆயிரம் மக்கள் அங்கு வருகை தருவார்கள்; வேறு எதற்குமல்ல, அனைத்து மரங்களும் பூத்துக் குலுங்கும் அற்புத காட்சியைக் கண்டு ரசிக்கத்தான். உலகில் வேறு எந்த நாட்டிலும் இத்தகைய காட்சியைக் காணமுடியாது. கியோட்டோவின் பௌத்த மதத்தின் ஆர்ச் பிஷப்பின் இல்லத்தில் தேநீர் அருந்தினோம். அவர் வீட்டைச் சுற்றியிருந்த சூழல் கவர்ந்து ஈர்த்தது. ஜப்பானியத் தேசத்தின் நாட்டுப்புறத்தில் மட்டுமே பார்க்க முடிகிற வீட்டிற்கு முற்றிலும் சிறந்த ‘மாதிரி’யாக அவர் வீடு இருக்கக்கூடும்.

திரும்பி வருகையில் அது ஒரு வண்டிப் பயணமாக அமைந்தது; வழியில் இரண்டு நாடக அரங்குகளை பார்த்தோம். அவற்றில் தனித்துவமான, ஆனால், எங்களுக்கு புரியாத நிகழ்ச்சிகள் முழு வீச்சில் நடைபெற்றுக் கொண்டிருந்தன. மற்ற விஷயங்களில் காட்டுவதைப் போலவே ஜப்பானியர்கள் நடிப்பிலும் அதிக அக்கறை காட்டுகிறார்கள்; இங்கும் அதைப் பார்க்க முடிந்தது. நடித்துக்கொண்டு இருந்தவர்கள், அவர்கள் உயிர்வாழ்வது சிறப்பாக நடித்து காட்டுவதில்தான் என்பதுபோல் நடித்ததை எளிதாக புரிந்துகொள்ள முடிந்தது.

கியோட்டோவின் இரவு நேரத்து தெரு வாழ்க்கை அதன் சிறந்த அம்சங்களில் ஒன்றாகும்: வண்ணக் காகிதங்கள் மூடியிருக்கும் விளக்குகளால் சாலைகள் ஒளிர்ந்தன. சுறுசுறுப்பாக இயங்கும் கடைகள்; புன்னகையும், மகிழ்ச்சியுமாக இயங்கிய மக்கள் கூட்டம். இதற்கு இணை எங்குமில்லை என்பதுபோன்ற காட்சியை உண்டாக்கின; தனித்துவமான அதன் அம்சங்களால் மறக்க முடியாததாக மாறிவிட்டது.

டிசம்பர் 7ஆம் தேதி முழுவதும் ‘ஷாப்பிங்’ செய்ய அர்ப்பணித்தேன்; பெரிய எம்போரியங்கள் அனைத்திற்கும் சென்றேன். ஜப்பான் தேசத் தயாரிப்பு என்று சொல்லமுடிகிற பல்வகை பொருட்கள் அதிக அளவில் காணப்படுகின்றன. அந்த இடத்தில் நாட்டிலேயே சிறந்த வகைப் பொருட்களைப் பார்க்க முடியும். மேலும் ஒவ்வொரு கடையிலும் பட்டுத் துணிகள், ஜரிகை வேலைப்பாடுகள் நிறைந்த பட்டுத் துணிகள், வெங்கலத்தால் பலவிதமான பொருட்கள் வரிசை வரிசையாய் வைக்கப்பட்டிருந்ததைப் பார்த்துத் திகைத்தேன்.

இந்தப் பொருட்கள் பலவற்றையும் வேறு பொருட்களையும் பெருமளவில் வாங்கினேன். மகிழ்ச்சியூட்டிய இந்தக் கடைகளை விட்டு வெளியில் வந்தபோது உலகின் விலையுயர்ந்த பொருட்களை வைத்திருக்கும் பணக்காரனாக உணர்ந்தேன். ஆனால் சட்டைப்பை மிகவும் மெலிந்துவிட்டது. எனினும், இந்தப் பரிமாற்றம் எனக்கு வருத்தம் தரவில்லை; ஏனென்றால் எனக்கு என்றென்றும் பெருமை தரக்கூடிய மகிழ்ச்சியை அளிக்கும் சில பொருட்களை வாங்குவதில் வெற்றியடைந்தேன்.

ஷாப்பிங் முடிந்தது. அன்று மாலை, ஓர் அமெரிக்க நண்பர், டாக்டர் ரோபியின் என்பவரின் விருந்தினராகச் சென்றேன். நான் அறிந்து கொள்ள வேண்டும் என்று எனக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஜப்பானியக் கேளிக்கை நிகழ்வுக்கு என்னை அழைத்துச் சென்றார். டாக்டர் ரோபி, திரு.மோர்கனுடன் (இவர், புகழ்பெற்ற திரு.பீர்பான்ட் மோர்கனின் உறவினர்) இணைந்து அடிக்கடி இங்கு வந்து வசிக்கிறார்.

அந்தச் சந்தர்ப்பங்களில் அவர்கள் முற்றிலும் ஜப்பானில் நிலவும் வாழ்க்கை முறையைப் பின்பற்றுவார்கள். இதைப்போன்ற மனிதர்களை ஈர்க்கும் அளவிற்கு ஜப்பானும் அதன் பழக்க வழக்கங்களும் நுட்பமான வசீகரங்கள் சிலவற்றைக் கொண்டிருக்க வேண்டும். சிறிது காலம் என்றாலும், சிறந்ததாக நினைக்கும் ஒரு வாழ்க்கை முறையை அவர்கள் பின்பற்றுகிறார்கள்.

அதுமட்டுமல்ல திரு.மோர்கன் ஜப்பானியப் பெண்ணொருத்தியைத் திருமணம் செய்துகொள்ளும் அளவுக்கு ஜப்பானை விரும்பியிருக்கிறார். அந்தப் பெண்மணியும் இவருடன் அமெரிக்காவுக்குச் சென்றுவிட்டார்.

8ஆம் தேதி, கியோட்டோவின் பெரும் பௌத்த ஆலயத்தின் ஆர்ச் பிஷப் என்னைச் சந்திக்க வந்தார். வந்தவர், அந்த மதத்தின் முழு நியமனங்களையும் பின்பற்றியதுபோல் இருந்தார். தோற்றம் மிகவும் வசீகரிப்பதாக இருந்தது. எனது மரியாதைக்குரிய விருந்தினரிடம் அவரது புதிரான மதம் சார்ந்து, அவருக்குள் இருப்பதுபோல் தோன்றும் சுமையை மொழிபெயர்ப்பாளர் ஒருவரின் உதவியுடன் இறக்கி வைக்க துணிச்சலான முயற்சியை மேற்கொண்டேன்.

இந்த ஜப்பான் மதத்திற்கும் இந்தியாவில் இந்துக்கள் பின்பற்றும் மதத்திற்கும் உள்ள வித்தியாசத்தையும் அல்லது ஒற்றுமையைக் கண்டறிவதற்கும் உண்மையில் விரும்பினேன். இந்தத் திசையில் எனது முயற்சியில் நான் பெற்ற வெற்றியெல்லாம் வழக்கமான கண்ணியமான குனிந்து வணங்கலும் இணக்கமான புன்னகையும் மட்டுமே.

அவரது கருணை என்னையறியாமல் எனக்கு வேடிக்கையைத் தந்தது; எடுத்துக்காட்டாக, மிகவும் சம்பிரதாயமாக நடந்த எங்களுக்கு இடையேயான உரையாடலின்போது ஐரோப்பாவில் கல்வி கற்கும் மகன் ஒருவன் அவருக்கு இருப்பது தெரியவந்தது. ஆனால் அவரது பையன் படிக்கும் பள்ளியின் பெயரையோ அல்லது அவன் எந்த ஊரில் அல்லது நாட்டில் படிக்கிறான் என்பதையோ அவரால் நினைவுகூர முடியவில்லை.

அப்பகுதியின் பெரும் மதகுரு, அவரது இதயத்திற்கு மிக அருகில் ஆன்மாவில் வைத்திருக்க வேண்டிய மத விஷயத்தில் அவரிடம் வெளிப்படையாக பார்க்கமுடிந்த அலட்சியம் என்னை வியப்பில் ஆழ்த்தியது. எனினும், இந்த விஷயத்தில், அவர் தனித்து நிற்கவில்லை. ஏனெனில், ஆக உயர்ந்தவர் முதல் கீழ் நிலையில் இருப்பவர் வரை ஜப்பானில் அனைத்து வகுப்பாரிடமும் இதே மாதிரியான ஆர்வமின்மையைக் கவனித்தேன்.

அவர்களில் எவருக்கும் உறுதியான நம்பிக்கைகள் இருப்பதாகத் தெரியவில்லை. புறத்தோற்றத்தில் அவர்கள் தம் மதத்தைக் காட்டிக்கொள்ளும் வழியாக, மடாலயத்திற்குச் செல்வதும், வணங்கும் தெய்வத்திற்குப் பொதுவிடத்தில் பூக்களை சமர்ப்பிப்பதுடன் முடிந்துவிடுகிறது.

பகலில் மற்ற கோயில்களுக்கு சென்றேன்; அவற்றில் ஒன்றில் உச்சரிக்க முடியாத பெயருடன் ஒரு கடவுளைப் பார்த்தேன். ஆனால் குவானன் கோவிலில் இருந்த கருணை தேவிக்கு 33,333 வடிவங்களை வைத்திருப்பதிலிருந்து இது வேறுபட்டிருந்தது.

கியோட்டோவின் பெரிய அருங்காட்சியகம் ஒன்றையும் பார்வையிட்டேன், பிரெஞ்சுப் பாணியில் அமைந்த கட்டடம். அதற்குள் வைக்கப்பட்டிருக்கும் பொருட்கள் நிச்சயமாக டோக்கியோவின் புகழ்பெற்ற அருங்காட்சியகத்தைக் காட்டிலும் மிகவும் உயர்ந்தவை.

இந்த அருங்காட்சியகம் அந்த நாட்டில் உருவான அனைத்து வகைப் பொருட்களின் மிகவும் வித்தியாசமான சேகரிப்புகளைக் கொண்டிருந்தது.

பழைய பல்லக்கு, காளை மாடுகள் இழுத்துச் செல்லும் வண்டி
பழைய பல்லக்கு, காளை மாடுகள் இழுத்துச் செல்லும் வண்டி

குறிப்பாக ஒரு விஷயம் என் ஆர்வத்தை மிகவும் தூண்டியது. அதுவும் அந்தப் பொருளின் இன்றைய வடிவமைப்பில் பார்க்க முடிகிற ஒற்றுமையின்மையின் காரணத்தால். அது, ஆண்கள் சுமந்து செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்த பழைய பல்லக்கு. அத்துடன் காளை மாடுகள் இழுத்துச் செல்லும் சில பழைய வண்டிகளையும் அங்கு பார்த்தேன். பழங்காலத்தில் பேரரசர் அதில் பயணம் மேற்கொள்வார் என்றார்கள். இப்போதெல்லாம் அவர் விரைவு ரயில்களில் பயணிக்கிறார். நவீனக் கண்டுபிடிப்புகள் வடிவமைத்த அனைத்து சொகுசு வசதிகளாலும் அவர் சூழப்பட்டிருக்கிறார்.

அடுத்து நாரா மாநகரத்திற்குப் பயணம்…

 

1. Ko-gosho- Palace for ceremonies and Imperial Audiences.
2. * டில்லி தர்பார் 1903 – வைஸ்ராய், லார்ட் கர்ஸான் பிரபு

(தொடரும்)

___________
ஜகத்ஜித் சிங் எழுதிய “My Travels in China, Japan and Java, 1903” நூலின்  தமிழாக்கம்

பகிர:
அக்களூர் இரவி

அக்களூர் இரவி

சொந்த ஊர் மாயவரம். தொலைத் தொடர்புத் துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். 'இந்தியா என்கிற கருத்தாக்கம்', ‘காந்தியும் பகத் சிங்கும்’, ‘அரசியல் சிந்தனையாளர் புத்தர்’ உள்ளிட்ட நூல்களை மொழிபெயர்த்திருக்கிறார். திசையெட்டும் மொழியாக்க விருது பெற்றவர். தொடர்புக்கு : thendralaham@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *