Skip to content
Home » மகாராஜாவின் பயணங்கள் #17 – நாரா, கெய்ஷா நடனம், ஒசாகா ஒசாகா நாணயச் சாலை, கோபே

மகாராஜாவின் பயணங்கள் #17 – நாரா, கெய்ஷா நடனம், ஒசாகா ஒசாகா நாணயச் சாலை, கோபே

டிசம்பர் 9 அன்று நாராவுக்குச் சென்றேன். ரயில்வே ஸ்டேஷனில் ஆளுநரும் காவல்துறை அதிகாரிகளும் வழக்கமான வரவேற்பை அளித்தனர். அரை ஜப்பானிய விடுதியொன்றில் மதிய உணவு. அதன்பின், அந்தப் பழமையான நகரத்தைச் சுற்றிப் பார்க்கச் சென்றேன். நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு ஜப்பானின் தலைநகராக இருந்திருக்கிறது. முதலில் புகழ்பெற்ற கலை அருங்காட்சியகத்தைப் பார்வையிட்டேன். பின்னர் ஓர் அழகான பூங்கா வழியாகப் பயணித்தேன். அடர்த்தியான, நல்ல நிழல் தரும் மரங்கள் நிறைந்திருந்தன; நூற்றுக்கணக்கான மான்கள் இயல்பாக சுற்றித் திரிந்தன.

பார்வையாளர்கள் அந்த இடத்தை நெருங்கியபோது, ஏராளமான மான்கள் ஏதாவது உணவு கிடைக்குமா என்று அவர்களை நோக்கி நெருங்கி வருகின்றன. கண்பார்வையில் வியாபாரிகள் ரொட்டி விற்கின்றனர். அவற்றை வாங்கி அந்த விலங்குகளுக்கு ஒருவர் உணவளிக்கலாம். அவற்றை நோக்கி வீசியவுடன், அந்த ரொட்டியை உண்பதற்காக ஆர்வத்துடன் தமக்குள் சண்டையிடத் தொடங்குகின்றன.

பார்வையாளர்களை மான்களிடமிருந்து பாதுகாக்க அவற்றின் கொம்புகளை வெட்டுவது அவசியமானது. இந்த நடைமுறை தொடர்ந்து மேற்கொள்ளப்படுகிறது. பூங்கா பெரும் இயற்கை அழகுடன் விளங்கியது. உண்மையில், இத்தகைய அழகான பூங்காவை இதுவரையிலும் பார்த்ததில்லை. அழகான, நன்கு பராமரிக்கப்பட்ட சாலைகள் அதன் வழியாகச் செல்கின்றன. ஆலயம் ஒன்றைப் பார்க்க முடிந்தது.

நாரா நகரின் மற்றொரு பகுதியில் அமைந்திருந்த ஒரு கோவிலுக்குச் சென்றேன். புத்தரின் மிகப் பெரிய சிலை அங்கிருந்தது; ஜப்பானிலேயே மிகவும் பெரியது. ஐம்பத்து மூன்றரை அடி உயரம் கொண்டது. முற்றிலும் வெண்கலத்தால் செய்யப்பட்டது. சிலையின் முகம் மட்டுமே பதினாறு அடி உயரமும் ஒன்பது அடி அகலமும் இருக்கும்.

கால்களை குறுக்காக மடித்தபடி புத்தர் உட்கார்ந்த நிலையில் இருந்தார். கீழைத் தேசத்தில் நாம் பொதுவாக பார்க்கமுடிகிற இதைப் போன்ற உருவங்களின் ஆழ்ந்த தியானத் தோற்றம் சிறப்பாகக் கவனிக்கத்தக்கது. கி.பி.749ம் ஆண்டில் இந்தச் சிலை வார்க்கப்பட்டதாகக் கூறுகிறார்கள்.

டோடாய்-ஜி கோவில், நாரா

எனக்கு அன்றைய நாள் மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது. எனினும் மிகவும் சோர்வாக உணர்ந்தேன். சிறப்பானதொரு இரவு உணவைச் சாப்பிடும் சரியான நேரத்தில் கியோட்டோவை அடைந்ததில் மகிழ்ச்சியடைந்தேன்.

கியோட்டோவிலிருந்து சில மைல்கள் தூரத்திலிருந்த மற்றொரு இம்பீரியல் தோட்டத்தைப் பார்ப்பதில் 10ஆம் தேதி மதியம் முழுவதும் போயிற்று. அரசக் குடும்பம் அந்த இடத்தைப் பார்வையிட வரும்போது அவர்கள் பயன்படுத்த அமைக்கப்பட்ட மூன்று சிறிய தேநீர் இல்லங்களைப் பார்த்தோம். தோட்டம், அழகான இடத்தில் நன்கு அமைக்கப்பட்டிருந்தது. இதைப் போன்ற நிலப்பரப்பு தோட்டக் கலை விஷயங்களில் ஜப்பானியர்கள் எவ்விதமான முன்னேற்றத்தை அடைந்திருக்கிறார்கள் என்பதற்கான சிறந்த எடுத்துக்காட்டாக அந்தத் தோட்டம் இருந்தது.

0

கெய்ஷா பள்ளி பார்க்க வேண்டிய ஒன்று. மற்றவரை மகிழ்விக்கும் புத்திசாலித்தனமான, கலையான, கவர்ச்சிகரமான கெய்ஷா நடனம் அங்கு சொல்லித் தரப்படுகிறது. அதற்குத் துணையாக அமைகின்ற நேர்த்தியான விஷயங்களான பாடுதல், நடனம் ஆடுதல் போன்றவையும அத்துடன் மலர் அலங்காரமும் கற்பிக்கப்படுகின்றன. கெய்ஷா பாடங்களில் வளரும் நிலையில் உள்ளவர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய முதன்மையான பாடம், மகிழ்வூட்டும் விதத்தில் பழகுவது. அதுவும் குறிப்பாக எதிர் பாலினத்தவர்களுடன் பழகுவதில் இருக்கிறது.

பள்ளியில் பல அறைகள் இருக்கின்றன. ஒவ்வொன்றிலும் வெவ்வேறு பாடங்கள் சொல்லித் தரப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, ஓர் அறையில் சின்னஞ்சிறு குழந்தைகள் நடனம் கற்றுக் கொண்டிருப்பதைப் பார்த்தோம்; மற்றொன்றில் வாத்தியங்களில் இசைப் பாடங்கள் கற்றுக்கொண்டிருந்தனர்.

இந்தக் குழந்தைகளின் கல்வி மிகவும் சிறு வயதிலேயே தொடங்குகிறது. அத்துடன் பாடங்கள் எப்போதும் வயது முதிர்ந்த பெண்களால் நடத்தப்படுகின்றன. அனைத்து வயதிலும் மாணவர்கள் இருந்தனர்: சிறியவர்கள் முதல் முழுமையாக வளர்ந்த இளம் பெண்கள் வரையிலும்.

கியோட்டோவின் சிறந்த விஷயங்களில் ஒன்றாக அல்லது ஒட்டுமொத்த ஜப்பானுக்கும் உரியதாக  ‘மையாகோ-ஓ-டோரி’ என்று அழைக்கப்படும் நடனம் உள்ளது. பொதுவாக இந்த நடனம், குளிர்காலத்திற்குப் பின் இயற்கை புத்துயிர் பெறும் வசந்த காலத்தில் நிகழ்த்தப்படுகிறது. ஓர் உயிர்த்தெழுதலின் அடையாளமாக இந்த நடனம் இருக்க முடியும். ஏனெனில், குளிர்காலம் முடிந்து இலைகள் மீண்டும் துளிர்க்கத் தொடங்கும் பருவத்தில் மட்டுமே இந்த நடனம் நடத்தப்படுகிறது. இலையுதிர் காலத்தில் ஜப்பானுக்குப் பயணம் மேற்கொண்டிருப்பதில் எனக்குப் பெரும் ஏமாற்றமே; நாட்டின் சிறந்த நிகழ்வுகளில் ஒன்றைப் பார்க்கும் இன்பத்தை இழந்திருந்தேன்.

அதுமட்டுமின்றி, அந்த நடனம் குறித்து நான் கேட்கமுடிந்த பல விவரங்கள் என் கற்பனையை மேலும் விசிறிவிட்டன. இறுதியில், அதைக் காணவேண்டும் என்ற ஆசை என்னுள் மிக வலுவாக ஊன்றிவிட்டது. செல்வாக்கு மிக்கவர்களின் உதவியுடன் பருவம் தவறி நிகழ்த்தக்கூடாது என்றிருந்த பழமைவாத ஜப்பானிய நண்பர்களின் தவறான கருத்தை வென்றுவிட முடியுமா என்று முயன்றேன்.

இறுதியில் அந்த விஷயத்தைத் திருப்திகரமாக ஏற்பாடு செய்ய முடிந்தது. இருப்பினும், மிகுந்த சிரமத்திற்குப் பின்னரே அது நடந்தது.

அந்த இடத்தில் அமைந்திருந்த சிறந்த தேநீர் இல்லம் ஒன்றில் நடன நிகழ்வு பெரும் பகட்டுடனும் ஆரவாரத்துடனும் நடைபெற்றது. சிறந்த, மிகவும் வசீகரமான கெய்ஷாக்களின் நடனம் சிறப்புடன் தேர்வு செய்யப்பட்டு நடந்தது.

அந்த இடம் அழகிய வண்ணக் கொடிகளாலும் பல்வேறு வடிவங்களில் ஏராளமான லாந்தர் விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது. சிந்தனையோட்டம் மிக்க எவரோ லாந்தர்களுக்கு அலங்காரப் பொருளாக, எனது ‘கோட்-ஆஃப் ஆர்ம்ஸை’1 பயன்படுத்தும் அளவுக்குச் சென்றிருந்தார்.

நடன அறையின் ஒரு ஓரமாக சொகுசான மெத்தைகள் தரையில் போடப்பட்டிருந்தன. நானும் எனது குழுவினரும் அங்கு அமர்ந்த பிறகு நடனம் தொடங்கியது.

முதலாவதாக, முக்கிய நிகழ்விற்கு முன் நடைபெறும் நடனமாக கார்ப்ஸ் டி பாலேவின்2 உருப்படி இருந்தது. நடனக் கலைஞர்கள் வழக்கமான நளினமான சபை வணக்கம் ஒன்றை நிகழ்த்தினர். அதன்பின், அமர்ந்திருந்த இசைக்கலைஞர்கள் பக்கம், பின்பக்கமாகவே நகர்ந்து ஒதுங்கி நின்றனர். அவர்கள் அதே பாலினத்தைச் சேர்ந்தவர்கள், ஆனால், வயதில் முதிர்ந்தவர்கள்.

நடன நிலைகளாலும் சைகைகளாலும் நடனம் தன்னை உருவாக்கிக் கொண்டது. அனைத்தும் மிகவும் நளினமான அசைவுகளின் உச்சம். கண்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக விருந்தாக இருந்தது. நிச்சயமாக நாங்கள் பார்த்துக் கொண்டிருந்த நடனம் என்று அழைக்கப்பட்ட அந்த நிகழ்வு எம் மனத்தில் பெரும் வசீகரத்தை ஏற்படுத்தியது.

கெய்ஷா நடனம்

‘மையாகோ-ஓ-டோரி’ – கெய்ஷா நடனம்

இந்த வசீகரம்தான் மேற்கு நாடுகளின் நடனத்திற்கும் இதற்குமிருக்கும் மொத்த வித்தியாசம். மேல்திசை நாடுகளில் ஆண்களும் பெண்களும் கால்களால் நடனமாடுகிறார்கள். ஆனால், ஜப்பானில் நடனம் பெரும்பாலான கீழ்த்திசை நாடுகளைப்போல் கைகள், தோள்பட்டை மற்றும் உடல்களின் பல்விதமான அசைவுகளைக் கொண்டிருக்கும்.

உண்மையில், இந்த நடனத்தில் பாதங்களின் இயக்கத்திற்கு மிகக் குறைவான முக்கியத்துவமே இருக்கின்றன. நடனத்தின் ஊடாக பல சிக்கலான உருவாக்கங்கள், மேம்படுத்தல்கள் இருந்தன. அவை ஒவ்வொன்றும் வசந்த காலத்தில் வாழ்க்கையின் சில காலகட்டங்களைக் குறிக்கின்றன. ஒவ்வொரு நடன நிகழ்விற்குப் பிறகும் கெய்ஷாக்கள் சுமார் பத்து நிமிடங்கள் ஓய்வு எடுத்தனர். அந்த நேரத்தில் மற்றவர்கள் எங்களருகில் வந்து சிற்றுண்டி வழங்கினர்.

கெய்ஷாக்கள் அணிந்திருக்கும் ஆடைகள் கவனிக்கத் தகுந்தன. பலவிதமான, பிரகாசமான வண்ணங்களில் ஆடைகள் இருந்தன. நடனமாடுபவர்கள் முன்னும் பின்னும் அசைந்து ஆடும்போது, அவை அணிந்திருந்தவர்களுக்கு எழில் மிக்க சிறிய வண்ணத்துப் பூச்சிகளின் தோற்றத்தை அளித்தன. அந்த மாபெரும் இறுதி நிகழ்வு நடன வடிவத்தில் இருந்தது.

ஒவ்வொரு பெண்ணும் வெவ்வேறு தேசத்தின் கொடியைப் பிடித்திருந்தனர். எனது கபுர்தலா ராஜ்ஜியத்தின் கொடியும் மறக்கப்படாமல் இடம்பெற்றிருந்தது. நிகழ்ச்சி முடிவடையும்போது ’இந்தோ-பன்சாய்’ என்ற கூக்குரல் உரத்து எழுப்பப்பட்டது. இவ்வாறு மிகவும் மகிழ்வளித்த ஒரு மாலைப் பொழுது முடிவுக்கு வந்தது. அதன் ஊடாக முற்றிலும் புதுமையான மற்றும் தனித்துவமான மகிழ்ச்சியின் வடிவத்தைக் கண்டேன்.

0

டிசம்பர் 11 ஆம் தேதி இரண்டு மணி நேரப் பயண தூரத்தில் இருந்த பிவா ஏரிக்கு உல்லாசப் பயணம் மேற்கொண்டோம். இந்த ஏரி மிகவும் பெரியது; தாழ்வான மலைகளால் சூழப்பட்டுள்ளது. அருகில் பல அழகிய கிராமங்கள் காணப்பட்டன. மிக அழகிய பரந்த நிலப்பரப்புக் காட்சியாக என் கண்ணுக்குத் தோன்றியது. அங்கு வந்தது ஒரு பயன்மிக்க வருகை என்ற எண்ணத்தை ஏற்படுத்தியது. பிவா ஏரி அந்தப் பெயரை மெய்யான ஒன்றிலிருந்து அல்லது கிட்டார் வாத்தியத்தின் வடிவத்தை ஒத்திருக்கிறது என்பதிலிருந்து பெறுகிறது. தோராயமாக, ஜெனீவா ஏரியின் அளவுக்குப் பெரிதாக உள்ளது. இந்த ஏரி கடல் மட்டத்திலிருந்து சுமார் 350 அடி உயரத்தில் உள்ளது. அதற்குள் சிறிய தீவுகள் உள்ளன. பல நூற்றாண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட பூகம்பத்தால் அவை தோன்றின என்று கூறப்படுகிறது.

திரும்பும்போது எங்கள் பயணம் படகுகளில் மூலம் மேற்கொள்ளப்பட்டது, கால்வாய் ஒன்றின் வழியாக படகுகள் எங்களை அழைத்துச் சென்றன. மலைகளின் வழியாக மிகச் சிரமமான உழைப்பில் சுரங்கப்பாதை ஒன்று உருவாக்கப்பட்டு இந்தக் கால்வாய் செல்கிறது.

வளர்ந்து வரும் ஓட்சு என்ற செழிப்பான நகரம் ஏரியின் தென் கரையில் உள்ளது. அங்கு சிறப்பான கலைநயம் மிக்க, அழகான மட்பாண்டங்கள் செய்யப்படுகின்றன. இங்கு நான் குறிப்பிடும் சுரங்கப்பாதை கணிசமான நீளம் கொண்டது; பயணத்தின் ஒரு பகுதி முழுமையான இருளில் இருந்தது. அவ்வப்போது நாங்கள் பகலின் வெளிச்சத்தில் வெளிப்படுவோம். அந்த நேரத்தில் எல்லாம் கற்பனையில் காண்பது போன்ற மிக அழகிய இயற்கைக் காட்சிகளால் நாங்கள் சூழப்பட்டிருப்பதைக் கண்டோம்.

கால்வாயின் நீளம் சுமார் பதினைந்து மைல்கள் இருக்கும். அதன் அகலம் தோராயமாக ஐம்பது அடி இருக்கலாம். அது முற்றிலும் அசாதாரணமானதொரு பொறியியல் சாதனை. சரக்கு மற்றும் பயணிகளின் போக்குவரத்திற்கான நீர்வழியாக மட்டும் இது செயல்படவில்லை. இது ஒரு நீர்ப்பாசனத் திட்டத்தின் பகுதியாகும். இதன் மூலமாக அருகிலிருந்த பிரதேசத்தின் ஒரு பகுதிக்கு நீர் கிடைக்கிறது.

பாரசீகத்தின் முன்னாள் பிரதமர் மிர்சா அலி அஸ்கர் அடாபெக்-ஐ-ஆஸம், சில அரசியல் காரணங்களுக்காக, சமீபத்தில் அந்த நாட்டை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம். அவர் உலகப் பயணத்தில் இருந்தார். செல்லும் வழியில் அங்கு தங்கியிருந்தார். அன்று இரவு விருந்திற்கு, அவரும் அவரது மகனும், நண்பர் ஒருவரும் எனது விருந்தினராக இருந்தனர். அழகான பாரசீக மொழியைப் பேசும் வாய்ப்பை, மறந்திருந்த எனது மொழியறிவைப் புதுப்பிக்கும் வாய்ப்பை அன்று முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டேன்.

எனது இந்தியச் சமையற்காரர் பல சுவையான பதார்த்தங்கள் செய்து அவர்களுக்கு அளித்தார். எனது விருந்தினர்கள் அதிகம் அவற்றை மெச்சி ருசித்து உண்டனர். பாரசீகத்தை விட்டு அவர்கள் புறப்பட்டதிலிருந்து இதைப் போன்று உணவை அனுபவித்து உண்ணும் வாய்ப்பு அதிகம் கிடைக்கவில்லை என்று கூறினர். அவர்கள் நாட்டுச் சமையலை மிகவும் ஒத்ததாக இவை இருந்தன என்று அனுபவித்துக் கூறினார்கள்.

0

நாங்கள் 12ஆம் தேதி காலை கியோட்டோவிலிருந்து ஒசாகாவுக்குப் புறப்பட்டோம், அந்த இடத்தை நாங்கள் ஒரு மணி நேரத்தில் அடைந்தோம். ஜப்பானின் பர்மிங்ஹாம் என ஒசாகா சிறப்புடன் அழைக்கப்படுகிறது. ஒப்புயர்வற்ற அதன் உற்பத்தித் தொழிலால் அவ்வாறு பேசப்படுகிறது. கடந்த ஆண்டு இங்கு மாபெரும் தொழில்துறை கண்காட்சி ஒன்று நடைபெற்றுள்ளது. அதற்கு வருகை தந்தப் பார்வையாளர்கள் தங்குவதற்கு பிரத்தியேகமாகக் கட்டப்பட்ட வசதியான ஹோட்டலில் மதிய உணவுண்டோம்; அதன் பிறகு, சுற்றுலாவைத் தொடங்கினோம்.

ஜப்பானியத் துருப்புகளுக்கான பெரிய முகாமொன்று இங்கு உள்ளது. ஓரளவுக்கு ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த இடமாகக் கருதப்படுகிறது. முதலாவது, இம்பீரியல் நாணயச்சாலை. ஆரம்பத்தில் இதை ஆங்கிலேயர்கள் தொடங்கியுள்ளனர். இப்போது முற்றிலும் ஜப்பானியர்களுக்கு இயங்குகிறது. இந்தியாவில் நாம் பார்க்க முடிகிற இதைப்போன்ற எந்த இடத்தைக் காட்டிலும் பெரிது. அதன் இயக்குநர் அந்த இடத்தை எனக்குச் சுற்றிக் காட்டினார்.

இயந்திரங்களும் வேலை செய்யும் முறையும் மிகவும் நவீனமானவை. அத்துடன் தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்களை உருவாக்கும் செயல்முறை மிகவும் சுவாரஸ்யமானது. ஆண்டுக்கு 40,000,000 யென் வெள்ளி நாணயங்கள், 10,000,000 யென் தங்கம் நாணயங்கள் என்ற விகிதத்தில் இங்கு தயாரிக்கப்படுகின்றன. தேச நலன் சார்ந்து அதன் திடீர் அவசரநிலையை எதிர்கொள்வதற்காக, பல மில்லியன் யென் மதிப்பின் அளவுக்கு தேசிய சேமக்காப்பு நிதி அங்கு வைக்கப்பட்டுள்ளதை அறிந்து வியந்தேன்.

நாணயச் சாலையிலிருந்து ஜப்பானின் மிக முக்கியமான ராணுவ ஆயுதங்கள் தயாரிக்கும் இடத்திற்குச் சென்றோம். தலைமை இயக்குநர் வரவேற்பறையில் எனக்காகக் காத்திருந்தார். தொழிற்சாலையின் பல்வேறு துறைகளுக்குப் பொறுப்பான அதிகாரிகள் பலரும் அங்கு எனக்கு அறிமுகம் செய்துவைக்கப்பட்டனர்.

அங்கிருந்து ஓர் அதிகாரி தொழிற்சாலையைச் சுற்றிக் காட்டினார். அவர் பிரான்சில் இரண்டு ஆண்டுகள் வசித்தபோது கற்றுக்கொண்ட பிரெஞ்சு மொழியைச் சிறப்பாகப் பேசினார். மேலோட்டமான ஆய்வுதான் என்றாலும் இரண்டு மணி நேரத்திற்கும் மேல் எடுத்துக் கொண்டது. எனினும், நேரம் அனுமதித்திருந்தால் ஒரு நாள் முழுவதையும் அங்கு எளிதாகப் போக்கியிருக்கலாம். துப்பாக்கிகள், வெடிமருந்துகள், ஃபீல்டு-துப்பாக்கிகள், சீய்ஜ்-துப்பாக்கிகள், டார்பிடோக்கள், குண்டுகள் முதலியன அங்கு தயாரிக்கப்படுகின்றன.

இந்தச் செயல்முறைகள் மிகவும் சிக்கலானவை. அவற்றைச் சரியான முறையில் விவரிக்க நிபுணத்துவமும் சிறப்பு அறிவும் தேவை. அத்தகைய அறிவு எனக்கு இல்லை. இந்த அற்புதமான இடத்தின் தொழில்நுட்பப் பகுதியை எடுத்துரைத்து நியாயம் செய்ய என்னால் இயலவில்லை. என்றாலும், ஜப்பானியர்களால் வெளிப்படையாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் அற்புதமான இயந்திரவியல் விஷயங்களைப் பார்த்து என்னால் வியக்காமலும் பாராட்டாமலும் இருக்க முடியவில்லை!

முப்பது முதல் நாற்பது அடி நீளம் கொண்ட £ 15,000 முதல் £ 20,000 மதிப்புள்ள பெரிய துப்பாக்கிகள் தயாரிக்கப்படுவதைக் கண்டேன். அத்தகைய துப்பாக்கியைப் பயன்படுத்துகையில் ஒவ்வொரு முறை சுடும்போதும் சுமார் £100 செலவாகும் என்று கூறினார்கள். நான் பார்த்த, பயங்கரமான விளைவுகளை ஏற்படுத்தும் இந்தத் துப்பாக்கிகள் அநேகமாக இப்போது மஞ்சூரியாவில் ரஷ்யர்களுக்கு எதிராகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

ஆயுதத் தொழிற்சாலையில் சுமார் நான்காயிரம் பணியாளர்கள் பணிபுரிகின்றனர். நான் அங்கு சென்றிருந்த நேரத்தில் அவர்களது வேலை நேரம் காலை ஆறு மணி முதல் இரவு பத்து மணி வரையிலும் இருந்தது. நீண்ட நேர வேலையும், அதிக அழுத்தமும் வரக்கூடும் என்று எதிர்நோக்கும் நிகழ்வுகள் குறித்த ஒரு முன்னுணர்வுடன் ஜப்பானிய அரசாங்கம் செயல்படுவதைச் சுட்டிக்காட்டுவதாக இருந்தன.

உபகரணங்கள், இயந்திரங்கள், சாதனங்கள், கருவிகள் என்ற அளவில் ஜப்பானிய ஆயுதத் தொழிற்சாலை சிறிய அளவில்தான் தயாரிக்கப்படுகின்றன. எனினும் இவற்றை ஐரோப்பாவிலுள்ள ஆம்ஸ்ட்ராங், க்ரூப், க்ரூசோட் போன்ற நிறுவனங்களின் தயாரிப்புக்கு இணையாகவே உள்ளன. சில ஆண்டுகளுக்கு முன்பு வரை ஜப்பான் தனது துப்பாக்கிகளுக்கும், கப்பல்களுக்கும், போர்த் தளவாடங்களுக்கும் ஐரோப்பாவிற்குச் சென்றது. ஆனால், இப்போது இந்த விஷயத்தில், பெரிய அளவிலான கப்பல்கள் தவிர்த்து, ஏனையவை அனைத்தையும் ஜப்பான் சுயமாகவே தயாரித்து அளிக்கிறது.

கப்பல் கட்டுமானத்திலும் அந்நாட்டின் கட்டுமானப் பொறியாளர்கள் பெரும் முன்னேற்றங்களைக் கண்டுள்ளனர். ஏற்கெனவே பலவற்றில் சாதித்திருப்பதைப் போல், இந்த விஷயத்திலும் ஜப்பான் கூடிய விரைவில் முழுமையாக, சுதந்திரமாக தயாரிக்கும் நிலையை எட்டும். மேற்கூறியவை தவிர்த்து, ஜப்பானிடம் ஒரு பெரிய கடற்படை ஆயுதத் தளமும் கப்பல் கட்டும் தளங்களையும் பெற்றுள்ளது.

0

ஒசாகாவிலிருந்து மாலை ரயிலில் புறப்பட்ட நாங்கள், இரவு உணவு நேரத்திற்கு கோபே என்ற இடத்தை அடைந்தோம். இது ஜப்பானில் எனது கடைசி இரவு.

அடுத்த நாள் டிசம்பர் 13, கோபேயின் அழகிய தெருக்களில் சுற்றித் திரிந்தேன். கடைகளில் ஏறி இறங்கினேன். அருவி ஒன்றையும் பார்த்தேன். அந்த இடத்தின் ஈர்ப்புகளில் ஒன்றாக இருந்தது. அருகிலிருந்த சிறிய தேநீர் இல்லத்தில் தேநீர் அருந்தினேன்.

அன்றிரவு எஸ்.எஸ்.கோனிக் ஆல்பெர்ட் என்ற ஸ்டீமரில் பயணம் மேற்கொண்டோம். ‘Norddeutscher Lloyd’ நிறுவனத்தைச் சார்ந்த கப்பல்.

கோனிக் ஆல்பர்ட், கீழ்த்திசை கடல் பரப்பில் இயங்கிக் கொண்டிருக்கும் மிகப்பெரிய, சிறந்த ஸ்டீமர்களில் ஒன்று. 11,000 டன்களுக்கு மேல் எடையுள்ள கப்பல். டைனிங் ஹால், பெண்களுக்கான சலூன், மியூசிக் ரூம் ஆகியன அனைத்தும் மிகுந்த வசதியுடனும் விரிவான முறையிலும் அமைந்திருந்தன. ஜெர்மனியின் சில பழைய அரண்மனைகளின் சிறந்த தைல வண்ண ஓவியங்கள் டைனிங் ஹாலில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.

கப்பலில் எனது பயன்பாட்டிற்காக ஒதுக்கப்பட்டிருந்த இடம் சிறப்பாக இருந்தது. சிறிய வரவேற்பறையை உள்ளடக்கியது போல் படுக்கையறை. அருகில் குளியலறை. வசதிகள் எனக்கு நிறைவாக இருந்தன. என்னைச் சுற்றிக் காணப்பட்ட சொகுசும் ஆடம்பரமும் நான் பயணித்திருக்கும், சில நேரங்களில் வேறு வழியின்றி ஏற்றுக்கொள்ள வேண்டியிருந்த தன்னிச்சையாக நடந்துகொள்ளும் P&O (The Peninsular and Oriental Steam Navigation Company) நிறுவனம் வழங்கும் வசதிகளுடன் மனத்தளவில் ஒப்பிட்டு பார்க்க வைத்தன.

‘ஜெர்மனியில் தயாரிக்கப்பட்ட’ ஒரு கப்பலில் எனக்கு அளிக்கப்பட்ட வசிப்பிடம் மற்றும் வசதிகள் குறித்த மேற்கூறிய விளக்கமும், P&O கப்பலுடனான இந்த ஒப்பீடும் முகஸ்துதிக்காகக் கூறப்படவில்லை. வழங்கப்பட்ட உணவு தரத்தில் சிறப்பாக இருந்தது. இருப்பினும், பிரெஞ்சுக் படகுகளில் பொதுவாகக் காணப்படும் சமையல் பக்குவத்தில் செய்யப்படும் ஒரு சிறிய தரமேம்பாட்டை ஒருவர் தவறவிடக்கூடும். தந்தி வாத்தியங்கள் நிறைந்த பேண்டு இசைக்குழு இரவு உணவின்போது அந்தச் சூழலுக்கு உயிரூட்டி உற்சாகப்படுத்தியது.

உயர்வான தங்குமிடத்துடன் இந்த ஸ்டீமர் பெரிதாக இருந்தபோதிலும், பயணிகளின் எண்ணிக்கை (பெருமளவில் அமெரிக்கர்களும் ஜெர்மானியர்களும் பயணித்தனர்) குறைவாக இருந்தது. கீழ்த்திசை நாடுகளை நோக்கிச் செல்லும் இந்த நீராவிக் கப்பல் எப்போதாவதுதான் முழுமையான அளவில் பயணிகளையும் ஏற்றிச் செல்லும் என்று கூறினார்கள்.

கேப்டன் பொலாசெக், ஆறு அடி நான்கு அங்குல உயரம் கொண்ட ஜாலியான ராட்சத மனிதர். அவரது நட்புணர்விற்கும் அவர் கூறிய வேடிக்கையான கதைகளுக்கும் முடிவேயில்லை. மற்ற அதிகாரிகளும் மரியாதையாக நடந்து கொண்டனர். எனினும், கடமைகளை செய்வதில் மிகவும் கண்டிப்பாக இருந்தனர். அவர்களை மேல் தளத்திலோ அல்லது பயணிகளுடன் சகோதர உணர்வுடன் பேசிக்கொண்டு நிற்பதையோ அரிதாகவே பார்க்கமுடிந்தது. கப்பலின் உலாவும் தளம் வழக்கத்திற்கு மாறாக மிகவும் விசாலமானதாக இருந்தது. அத்துடன் உடற்பயிற்சிக்கான சிறந்த இடமாகவும் அமைந்தது.

நாங்கள் புறப்பட்ட அந்த நாளில், ஜப்பானின் அற்புதமான, அழகிய உள்நாட்டுக் கடலைக் கடந்து சென்றோம். நிஜத்தில் தீவுக்குள் ஒரு கடல் உருவாகியுள்ளது. ஜப்பான், ஒரு கடலுக்குள் உள்ளது எனலாம். உள்நாட்டு கடல் முழுவதும் ஏராளமான தீவுகள் ஆங்காங்கே காணப்படுகின்றன. அத்துடன் அவற்றுக்கிடையிலான நீர்வழி சில நேரங்களில் மிகவும் குறுகியதாக இருக்கும்; இரண்டு கப்பல்கள் ஒன்றையொன்று கடக்க முடியாது. கப்பல் செலுத்துவதை கடினமானதாக ஆபத்தானதாக இது ஆக்குகிறது.

எரிமலை வெடிப்புகள் உருவாக்கிய பல ஆயிரம் தீவுகள் உள்நாட்டுக் கடலில் இருப்பதாக ஜப்பானியர்கள் அறிவிக்கிறார்கள். மேலும் அவற்றில் ஏராளமான கிராமங்களும் இருக்கின்றனவாம். பொருட்களை விற்கும் வர்த்தகப் படகுகளும் தீவுகளுக்கிடையில் சென்று வருகின்றன. மக்களுக்கு அவை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. மாலை நேரம், இந்த அற்புதமான கடலின் முடிவுக்கு எங்களைக் கொண்டு சேர்த்தது. நிலப்பகுதி நெருங்கியது. நாங்கள் ஷிமோனோசெகியை அணுகினோம். கண்ணுற்ற இயற்கைக்காட்சி அதிக அளவில் அழகுணர்ச்சியைத் தூண்டுவதாக, மிகவும் பிரும்மாண்டமாகத் தோன்றியது.

டிசம்பர் 15 அதிகாலையில் பலத்த மழையில் நாகசாகியை அடைந்தோம் . கரையை அடைந்தபின் நாகசாகி ஹோட்டலில் லேயர்டு இணையர்களுடன் மதிய உணவு சாப்பிட்டேன். திரு.லேயர்டு பிரிட்டிஷ் தூதர்.

பிற்பகலில் நாங்கள் மீண்டும் கப்பலேறினோம். அற்புதமான விஷயங்களாக நான் பார்த்த, அதிகமாக வியந்து நோக்கிய அந்த நிலப்பரப்பை வருத்தத்துடன் நீண்ட நேரம், இறுதியாகப் பார்த்து நின்றேன். இந்த இடத்திற்கு எனது பயணம் மிகக் குறுகிய காலமே. காலமும் சூழ்நிலைகளும் எதிர்காலத்தில் என்மீது கருணை காட்டினால், மிகக் குறுகிய காலத்தில் எனது நேசத்திற்குரிய இடமாகிவிட்ட இந்தத் தேசத்திற்கு மீண்டும் ஒரு முறை வருகை தருவேன்.

நாகசாகி துறைமுகத்தின் பாதுகாப்பு ஆழ்ந்த யோசனையுடன் திட்டமிட்டு செயல்படுத்தப்பட்டிருப்பது வெளிப்படையாய் தெரிந்தது. ஒரு ரஷ்ய சக பயணி, சுற்றியுள்ள மலைகளில் தெரிந்த பலத்த கோட்டை மதிற்சுவர்களை என்னிடம் சுட்டிக்காட்டினார். அத்துடன் துறைமுகத்தைச் சுற்றி பெருமளவிற்குக் கன்னி வெடிகள் புதைக்கப்பட்டிருக்கலாம் என்று நம்புவதற்குக் காரணம் இருப்பதாகவும் கூறினார்.

நான் உரையாடிக் கொண்டிருந்த ரஷ்யர், ஜப்பான் முழுவதும் தங்கு தடையின்றிப் பயணம் செய்ததாக உறுதியாகச் சொன்னார். ஆனால், தன்னை எந்நேரமும் யாரோ பின் தொடர்ந்தார்கள் என்றும், அவரது இயக்கங்கள் அனைத்தும் ஜப்பானிய அதிகாரிகளால் கவனிக்கப்பட்டன என்று சந்தேகப்படுவதாகவும் கூறினார்.

 

1. அரசச் சின்னங்களுடன் கூடிய மேலங்கி
2. கார்ப்ஸ் டி பாலே என்பது பிரதான கலைஞர்களும் சோலோ கலைஞர்களும் தவிர மற்றவர்களை உள்ளடக்கிய குழு. இவர்கள் நிரந்தரமாக பாலே நடன நிறுவனத்தோடு பிணைந்திருப்பவர்கள். பிரதான கலைஞர்களின் பின்னணியில் நிறைந்திருப்பார்கள்

(தொடரும்)

___________
ஜகத்ஜித் சிங் எழுதிய “My Travels in China, Japan and Java, 1903” நூலின்  தமிழாக்கம்

பகிர:
nv-author-image

அக்களூர் இரவி

சொந்த ஊர் மாயவரம். தொலைத் தொடர்புத் துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். 'இந்தியா என்கிற கருத்தாக்கம்', ‘காந்தியும் பகத் சிங்கும்’, ‘அரசியல் சிந்தனையாளர் புத்தர்’ உள்ளிட்ட நூல்களை மொழிபெயர்த்திருக்கிறார். திசையெட்டும் மொழியாக்க விருது பெற்றவர். தொடர்புக்கு : thendralaham@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *