Skip to content
Home » மகாராஜாவின் பயணங்கள் #18 – ஹாங்காங் மற்றும் ஜோஹோர் சிற்றரசு

மகாராஜாவின் பயணங்கள் #18 – ஹாங்காங் மற்றும் ஜோஹோர் சிற்றரசு

வூசங்

அடுத்த நாள் பலத்த எதிர்க்காற்று வீசியது. கொந்தளித்த அலைகளில் கப்பல் உருண்டோடியது, அதிகமாகத் தாவிக் குதித்தது. அதன் விளைவாக எனது அறைக்குள்ளே நான் அடைபட்டிருந்தேன். கொந்தளிப்பான கடல் பயணத்திற்குப் பின் 17ஆம் தேதி ஷாங்காய் கரையை அடைந்தோம்.

கப்பல் இரண்டு நாட்கள் அங்கு இருக்கும் என்றார்கள். ஆகவே, கரைக்குச் சென்று ஆஸ்டர் ஹவுஸ் ஹோட்டலில் தங்கினேன். அன்று மாலை ஷாங்காய் அமெச்சூர்கள் ’One Summer Day’ என்ற முக்கியமான மேடை நிகழ்ச்சியை அளித்தனர். மிகவும் ரசிக்க முடிந்த நிகழ்வு.

18ஆம் தேதி, நீதிமன்றத்தில் கலவையான தீர்ப்பாயம் ஒன்றைப் பார்வையிட்டேன். அதன்பின் நீதிமன்றத்தை ஒட்டியிருந்த சிறையைப் பார்க்கச் சென்றேன். சிறை வளாகம் வெளிநாட்டவர் குடியேற்றப் பகுதியில் இருந்தாலும், சிறையின் நிலையும், அதிலிருந்த கைதிகளின் நிலையும் சிறப்பானது இல்லை என்றாலும் மோசமாக இல்லை எனலாம். சமீபத்தில் ஜப்பானில் நான் பார்த்திருந்த சிறை வளாகத்துடன் அந்த இடத்தை ஒப்பிட முடியாது. இந்தக் கருத்து சிறையின் நிலைக்கும் நிர்வாகத்திற்கும் பொருந்தும்.

பெரும் இடப் பற்றாக்குறை அங்கு நிலவியதாகத் தோன்றியது; அவலமான நிலையில் இருந்த சிறைவாசிகள் அவர்களது தேவைக்கு போதாத மிகச்சிறிய இடத்தில் அடைக்கப்பட்டிருந்தனர். ஷாங்காயில் சிறைச் சித்திரவதையும் காட்டுமிராண்டித்தனங்களும் நடைபெறாமல் வெளிநாட்டு அரசாங்கங்கள் நிச்சயமாகப் பார்த்துக் கொள்கின்றன. ஆனால், சீனாவின் சிறைகளில் மிகப் பயங்கரமான கொடுமைகள் இன்னமும் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன என்று என்னிடம் கூறப்பட்டது.

மதிய உணவுக்குப்பின், சீனாவிலிருக்கும் பிரிட்டிஷ் படைப்பிரிவின் அட்மிரல் சர் சைப்ரியன் பிரிட்ஜை, கடற்படையின் முதன்மைக் கப்பல் அலாக்ரிட்டியில் சந்தித்தேன். அட்மிரல் என்னை மிகவும் மரியாதையுடன், முழுமையான கடற்படை மரியாதையுடன் வரவேற்றார்.

ஒரு சீனப் போர் வீரனைப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் எனக்கு இருந்தது. எனது விருப்பத்தை சர் சைப்ரியனிடம் தெரிவித்தேன். உடனே அவர் அந்தக் கப்பலின் லெப்டினன்ட்டை என்னுடன் வருவதற்குப் பணித்தார். ஸ்டீம் படகு ஒன்றையும் எனது பயன்பாட்டுக்குக் கொடுத்தார்.

சில மைல்களுக்கு அப்பால், சுமார் நான்காயிரம் முதல் ஐந்தாயிரம் டன்கள் எடை கொண்ட சீனக் கப்பல் ஒன்று நங்கூரமிட்டு நின்றிருந்தது. அந்தக் கப்பலுக்குச் சென்றோம். கமோடோர் அந்தஸ்தில் சீன அதிகாரி ஒருவர் அந்தக் கப்பலின் தலைமைப் பொறுப்பில் இருந்தார். இங்கிலாந்து சென்று பயிற்சி மேற்கொண்டவராம். அவர் என்னை நன்கு கவனித்துக் கொண்டார். அழைத்துச் சென்று கப்பல் முழுவதும் சுற்றிக் காட்டினார்.

எனது எதிர்பார்ப்புக்கு மாறாக, வியக்கத்தக்க தூய்மையுடனும் செயல்திறனுடன் கப்பல் இருந்தது. ஒரேயொரு வெளிநாட்டவர் மட்டும் கப்பலில் இருந்தார். ஓர் ஆங்கிலேயர்; பீரங்கிச் சுடும் பயிற்சி அளிப்பவர்.

கப்பலுக்குச் சென்றபோதும் புறப்படும் போதும் எனக்கு மரியாதை அளித்த சீனக் கடற்படையினர் மாற்றியமைக்கப்பட்ட நீல நிறச் சீருடை ஒன்றை அணிந்திருந்தனர். அவர்களது நீண்ட ஜடை நேர்த்தியாகச் சுருட்டப்பட்டு தலை உச்சியில் ஒரு சிறிய கருப்புத் தலைப்பாகை கொண்டு மூடப்பட்டிருந்தது. ஜப்பானியர்களுடன் நடந்த போரினால் சீனக் கடற்படை நலிவடைந்து இருந்தது. அந்த இழப்பிலிருந்து அவர்கள் மீண்டதாகத் தெரியவில்லை.

அந்த அடிப்படையில் அவர்களிடம் அப்போது நடுத்தர அளவிலான கப்பல்கள் இப்போது நான் பார்த்துக் கொண்டிருந்தது போல் சில இருந்தன. புறப்படுகையில் கமோடோர் என்னைக் கௌரவிக்கும் விதமாக பீரங்கிக் குண்டு வெடித்து மரியாதை செலுத்த ஏற்பாடு செய்தார். இது ஓர் அசாதாரண நடவடிக்கை. தலைமை கடற்படை அதிகாரியோ, ராணுவ அதிகாரியோ அல்லது முக்கியமான சிவில் உயரதிகாரிகளோ, அதிகபட்சம் மூன்று குண்டுகள்தாம் சுடப்படும். ஆனால், எனது மரியாதைக்கு அதைக்காட்டிலும் அதிக எண்ணிக்கையில் குண்டுகள் வெடிக்கப்பட்டன.

நான் ‘La Chinoise’ எனும் இடத்தில் சாப்பிடுவதைப் புறக்கணித்திருந்தால் எனது அனுபவம் முழுமையடையாமல் இருந்திருக்கும். வாய்ப்பு இரண்டு அமெரிக்க நண்பர்களிடமிருந்து சீன இரவு விருந்திற்கான அழைப்பின் வடிவில் வந்தது. இரண்டு அமெரிக்கர்கள் தவிர்த்து, மதிப்புமிக்க சீனர்கள் சிலரும் எங்களுடன் விருந்துக்கு வந்திருந்தனர். அந்த விருந்துக்கான உணவு முழுவதும் ஒரே நேரத்தில் மேஜை மீது வைக்கப்பட்டது; அவற்றைப் பார்த்தவுடன் அந்த உணவின் மீது முதலில் எனக்கு ஒருவிதமான வெறுப்பே ஏற்பட்டது, சாப்பிடத் தொடங்கிய உடனேயே அந்த எண்ணம் மறைந்துவிட்டது.

‘பறவை கூடு சூப்’ என்ற ஒன்றும் சமைக்கப்பட்ட வாத்தும் ரொட்டியும் மிகவும் நன்றாக இருந்தன. கத்திகளும் முட்கரண்டிகளுக்கும் பதிலாக சாப்ஸ்டிக்குகள் பயன்படுத்தப்பட்டன. முதலில் அவற்றைப் பயன்படுத்திச் சாப்பிட முயன்றோம். சிரமமாக இருந்தது. எங்களது விகாரமான முயற்சிகளில் வெற்றி பெற்ற பிறகு அவற்றைப் பயன்படுத்துவது எதிர்பார்த்தது போல் அவ்வளவு மோசமானதாக இருக்கவில்லை.

இந்த வகை இரவு விருந்துகளில் இரண்டு விருந்தினர்களுக்கும் இடையில் பெண் ஒருத்தி இருப்பாள். அவர்கள் பாடல்கள் பாடுவார்கள். அந்தப் பாடும்-பெண்கள் நாகரிகமாகவும் இருக்கவேண்டும் என்பது விதி. பெண்கள் அனைவரும் சரியான நேரத்தில் ஒரு பாடல் பாடினர். பஞ்சாபின் மலை மாவட்டங்களில் பாடப்படும் பாடல்களின் தன்மையை வலுக்கட்டாயமாக எனக்கு நினைவூட்டியது. இரண்டுக்கும் இடையில் தனித்துவமான ஒற்றுமை இருந்தது.

வெவ்வேறு நாடுகளில் பழக்கவழக்கங்கள் வெவ்வேறாக இருக்கின்றன. இரவு விருந்து ஒன்றில் விருந்தினர்களுக்கு இடையில் இசைக் கலைஞர்கள் பலர் சீரான முறையில் அமர வைக்கப்படுவதால் உண்டாகும் தாக்கத்தை இதைப் படிப்பவர்களால் கற்பனைசெய்து பார்க்கமுடியும். ஒவ்வொரு பாடகியும் தனக்குப் பிடித்தமான பாடல் வரிகளைப் பாடினாள். பாடிய – பெண்கள் தீவிரமான கடமை உணர்வுடன் இருந்தார்கள். அத்துடன், உணவு போன்ற வடிவங்களில் வழங்கப்படும் எதையும் அவர்கள் மறுத்துவிட்டார்கள்.

சீன பெண்கள்
சீன பெண்கள்

இருப்பினும், விருந்தினர்களுக்கு தேவைப்படும் எதற்கும் உதவ அவர்கள் தயாராக இருந்தனர். பெண்கள் அனைவரும் சிவப்பு நிறத்துடன், கருநிற முடியுடன் இருந்தனர். அவர்கள் இனத்தைச் சார்ந்தவர்களில் தனித்த நல்ல தோற்றத்துடன் இருந்தனர். நேர்த்தியான விலையுயர்ந்த ஆடைகளை அணிந்திருந்தனர். அழகாகத் தோன்றினாலும், ஜப்பானிய இளம் பெண்களிடம் பார்க்க முடிகிற, மறுக்க முடியாத பண்பான, வசீகரம் இவர்களிடம் முற்றிலும் இல்லை.

சூயஸுக்குக் கிழக்கில், என் கருத்துப்படி ஷாங்காய் பெருமளவுக்கு மிகச்சிறந்த நவீன நகரம். அற்புதமான கட்டடங்களும் சிறந்த, நன்கு பராமரிக்கப்பட்ட சாலைகளும், நவீனச் சாதனங்களும், வசதிகளும் இன்னும் பிறவும் நிறைந்த நகரம். இந்தியாவிலிருக்கும் எந்த நகரத்தைக் காட்டிலும் மிகவும் நவீனமானதாக இருந்தது.

வானிலை, மிகக் கடுமையான குளிராக மாறியது, தவிர்க்க முடியாத பனிப்பொழிவு. காலநிலை விஷயத்தைப் பொறுத்தவரை, பஞ்சாபின் சில பகுதிகளுக்கு இணையான அட்சரேகையில் ஷாங்காய் இருந்தாலும், இந்த இடத்தின் வானிலை பஞ்சாபைக் காட்டிலும் முடிவற்ற குளிராக உள்ளது. சைபீரிய ஸ்டெப்பி வெளிகளிலிருந்து வீசும், பனிப்பாறைகளை உரசிவரும் காற்று ஷாங்காய் மீது வீசுவதால் வானிலையில் இந்த வித்தியாசத்தைப் பார்க்க முடிகிறது. வெப்பநிலை மிகவும் குறைந்து போகிறது.

நாங்கள் 19ஆம் தேதி காலை வூசங் என்ற இடத்திற்குப் புறப்பட்டோம். அங்கு எங்கள் ஸ்டீமர் நங்கூரமிட்டு நின்றது. இறுதியாக சுமார் பத்து மணியளவில் புறப்பட்டோம். மேலும் சில பயணிகள் அங்கு எங்களுடன் ஏறிக்கொண்டனர்.

நாங்கள் ஹாங்காங்கை நெருங்கிய போது வானிலை மிகவும் இனிமையானதாக மாறியது, மிகச் சமீபத்தில் நாங்கள் அனுபவித்த ஆர்டிக் நிலைமைகளிலிருந்து மிகவும் ஏற்கத்தக்க மாற்றம். பரந்த இயற்கைக் காட்சிகளைப் பார்த்துக் கொண்டே ஹாங்காங் துறைமுகத்தில் நுழைகிறோம். துறைமுகம், மூன்று புறத்திலும் மலைகளால் சூழப்பட்டுள்ளது. உலகின் மிகச்சிறந்த துறைமுகங்களில் ஒன்றாக கூறப்படுவதற்கு இதுவும் ஒரு காரணம்.

கிழக்கின் சிறந்த இயற்கைத் துறைமுகங்களில் ஒன்றைக் கைப்பற்றிய, பிரிட்டிஷ் அரசியல்வாதிகளின் போற்றத்தக்க தொலைநோக்குப் பார்வை அங்கு வெளிப்படுகிறது. இந்தத் துறைமுகம் போர்க்காலத்தில், நிலக்கரி எரிபொருள் நிரப்பும் இடமாகவும், கடற்படைத் தளமாகவும் அவர்களால் பயன்படுத்தப்பட்டது.

அதுமட்டுமின்றி, ஏனைய நாடுகளின் மதிப்பீட்டில் அந்த இடம் முக்கியத்துவம் இல்லாத ஒன்றாகக் கருதப்பட்ட நேரத்தில் இதை அவர்கள் கைப்பற்றினர். விஷயங்கள் இப்போது நாம் பார்க்க முடிவதுபோல், (அவர்களது தொலைநோக்குப் பார்வையின் காரணமாக) பிரிட்டானியர்கள் சூயஸ் முதல் ஹாங்காங் வரையில் கடற்படைத் தளங்களின் முழுமையான சங்கிலி ஒன்றைப் பெற்றுள்ளனர். போரின் போது அவற்றின் மதிப்பைக் குறைத்து மதிப்பிட முடியாது. மதியம் நான்கு மணிக்கு கோவ்லாங் (இன்றைய கோவ்லூன்) துறைமுகத்தில் நங்கூரமிட்டோம், அதிக தாமதத்திற்குப் பின், கரைக்குச் சென்று அங்கிருந்து ‘ஃபுனிகுலர்’ (சிறிய ரயில்வழி) மூலம் பீக் ஹோட்டலை அடைந்தோம்.

பீக் ஹோட்டல்
பீக் ஹோட்டல்

டிசம்பர் 22 அன்று பீக் ஹோட்டலிலிருந்து கீழிறங்கிய நான், அல்பியன் என்ற முதன்மைக் கப்பலில் இருந்த ரியர் அட்மிரல் கர்சன் ஹோவைச் சந்திக்கச் சென்றேன். முழுமையான கடற்படை மரியாதையுடன் வரவேற்கப்பட்டேன். வார்டுரூமில் (போர்க்கப்பலின் கமிஷண்டு ஆபிஸர்ஸ் மெஸ்) அட்மிரல் மற்றும் அதிகாரிகளுடன் மதிய உணவு. அதன்பின் அந்த மிகச்சிறந்த கப்பலை எனக்குச் சுற்றிக்காட்டினர். பிரிட்டிஷ்-சீன கடற்படையில் சமீபத்தில் சேர்க்கப்பட்ட மிகவும் சக்திவாய்ந்த கப்பல்.

எல்லா எதிர்பாரா நிகழ்வுகளுக்கும் எல்லா நேரங்களிலும் தயார் நிலையில் இந்தக் கடற்பகுதியில் பிரிட்டானியர்கள் வலுவான கடற்படை ஒன்றைப் பராமரிக்கிறார்கள். இந்தக் கீழைப் பிரதேசத்தில் ஏதேனும் நடக்கும் என்றால், இந்தக் கலங்கள் எந்தத் தருணத்திலும் புறப்படக்கூடிய திறனுடனும் தயார்த்தன்மையுடன் பராமரிக்கப்படுகின்றன. இந்தக் கப்பல்களில் சாதனங்களோ அல்லது பணியாளர் எண்ணிக்கையிலோ எதுவும் குறைவில்லை என்பதை ஓர் ஆய்வின் மூலம் அறிந்துகொள்ள முடியும். எந்த நேரத்திலும் அவற்றிற்கு ஒதுக்கப்பட்டுள்ள பணியைச் செய்வதற்கு அவை முழுத் தகுதியுடன் இருக்கின்றன.

நான் ஹாங்காங் திரும்பியதும், அரசாங்க மாளிகையில் ஆளுநர் திரு.மே அவர்களைச் சந்தித்தேன். அதன்பின் முக்கியத் தெருக்களில் ஓர் உலா மேற்கொண்டேன். தெருக்கள் சிலவற்றில் சிறந்த ஐரோப்பிய மற்றும் சீனக் கடைகளைப் பார்த்தேன். அங்கு பல்வேறு வகையான பொருட்கள் விற்பனைக்கு இருந்தன.

ஹாங்காங் கடைவீதி
ஹாங்காங் கடைவீதி

கீழ்த்திசை நகரங்களில் மிகச் சிறந்த ஒன்றாக ஹாங்காங் உள்ளது; அழகான பொதுக் கட்டடங்கள், வங்கிகள், பொழுதுபோக்கு இடங்கள் போன்றவை உள்ளன. சாலைகள் உயர்ந்து செங்குத்தாகச் செல்வதால் வண்டிப்பயணம் சிரமமாக இருக்கிறது. அதன் விளைவாக, பெரும்பாலான போக்குவரத்து ‘ரிக்ஷாக்கள் மற்றும் சீன ஜம்பான்கள்’ மூலம் நடைபெறுகிறது.

நகரம் குன்றின்மீது கட்டப்பட்டதுபோல் தெரிகிறது. கடற்கரையிலிருந்து கூர்மையாக உயர்ந்து செல்கி்றது. இதனால் வண்டி போக்குவரத்து கடினமாகிறது. நாங்கள் ஆளுநருடனும் அவரது மனைவியுடனும் உணவருந்தினோம், அதன்பின் சிட்டி ஹாலில் நடனம் ஒன்றுக்குச் சென்றோம். அந்த நிகழ்வில் நகரத்தின் முக்கியக் குடிமக்களும், துறைமுகத்துப் போர் வீரர்களின் அதிகாரிகளும் ஏராளமாக கலந்துகொண்டனர். அந்தக் கட்டடம் பெரியது. நடனத்திற்கும் அல்லது பொதுப் பொழுதுபோக்கிற்கும் ஏற்ற வகையில் மாற்றப்பட்டிருந்தது.

டிசம்பர் 23 அன்று, அட்மிரல் கர்சன்-ஹோவ் தனது நீராவிப்படகை எனக்குக் கொடுத்து உதவினார். அதில் பயணித்து கோவ்லாங்கில் எங்கள் கப்பலை அடைந்தோம்.

கிறிஸ்துமஸ் தினம் முழு மரியாதையுடன் கப்பலில் கொண்டாடப்பட்டது. நன்கு அலங்கரிக்கப்பட்டு, ஒளியூட்டப்பட்ட ஓர் அழகான மரம், டைனிங்-சலூனில் அமைக்கப்பட்டது, மாலை நேரத்தில் ஜெர்மன் பாணியில் பழங்காலத்து முறையில் உண்மையான மகிழ்ச்சி கொண்டாட்டம் நடந்தது. இசைக்குழு கவனமாக தேர்ந்தெடுக்கப்பட்ட பொருத்தமான சங்கீதங்களை வாசித்தது. அங்கு கூடியிருந்த அனைவரும் மிகவும் ரசித்து மகிழ்ந்தனர்.

0

27ஆம் தேதி அதிகாலையில் நிலம் தென்பட்டது. சிங்கப்பூரை மத்தியானம் அடைந்தோம். காலநிலையில் ஏற்பட்டிருந்த வேறுபாடு மிகவும் தெளிவாகத் தெரிந்தது. முற்றிலும் வெப்பமண்டல வானிலை மிகுந்த ஈரப்பதத்துடன் இருந்தது. வெளிப்படையாகத் தெரிந்த மண் வளமும், சுற்றியிருந்த பிரதேசத்தின் பசுமையும் சிலோனை வலுக்கட்டாயமாக நினைவூட்டின.

அங்கு ராஃபிள்ஸ் ஹோட்டலில் தங்கியிருந்தேன். பெரிய ஹோட்டல், வசதியாகவும் இருந்தது. மதியத்திற்குப் பின் தாவரவியல் பூங்காவைப் பார்க்கச் சென்றேன். மண்ணின் வளம், ஈரமான, கதகதப்பான வளிமண்டல சூழ்நிலை ஆகியன, அனைத்து வகைத் தாவரங்களும் மிகச் சிறப்பாக வளரும் வகையில் பயனுள்ளதாக அமைந்திருந்தன. மனத்திற்கு உகந்த முறையில் அந்த இடம் அமைந்து, நன்கு பராமரிக்கப்பட்டதாக இருந்தது.

ஜாவாவுக்கு நீராவிக் கப்பல் ஒன்றைப் பிடிக்கும் நோக்கம்தான் இந்த இடத்திற்கு நான் வந்தது. ஆனால் ஜனவரி 1ஆம் தேதி வரை கப்பல் எதுவும் புறப்படவில்லை. இதனால் ஆறு நாட்கள் தாமதம் உண்டானது. வேறு வழியின்றி, புறப்படும் நேரம் வரை நாங்கள் பூங்காக்களையும் அருகிலிருந்த இடங்களையும் சுற்றிப் பார்த்து திருப்தி அடைய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

29ஆம் தேதி காலை ரயிலில் ஜோஹோரைப் பார்க்கப் புறப்பட்டேன். ஒரு மணி நேரம் பயணம் மட்டும். இறங்கியபின், ஃபெர்ரி ஒன்றில் ஏறினோம். சுமார் பத்து நிமிடங்களில் எங்கள் இலக்கை அடைந்துவிட்டோம். மலாய் தீபகற்பத்தின் தூரத்தில் ஒரு மூலையில் அமைந்திருந்த ஒரு சுதந்திர பிரதேசம், ஜோஹோர். இதுவரை தனது சுயாட்சியைப் பாதுகாப்பதில் வெற்றி பெற்றுள்ளது. அந்தந்த சுல்தான்களின் கீழ் ஒரு கூட்டமைப்பாக மாற்றியுள்ள மலாய் மாநிலங்கள் ஜோஹோரின் அருகில் இருக்கின்றன.

கூட்டமைப்பாக மாறியுள்ள மாநிலங்களுடன் மலாய் தீபகற்பம் முழுவதும் நடைமுறையில் பிரிட்டானியர்களின் ஆட்சியின் கீழ் உள்ளது. கிழக்கின் மான்டே கார்லோ என்ற பெயரை ஜோஹோர் பெற்றுள்ளது. மேலும் இங்கு சூதாட்டம் கட்டுப்பாடின்றி அனுமதிக்கப்படுகிறது. ஆனால் சுல்தானின் குடிமக்களுக்கு மட்டுமே அதற்கு அனுமதி உள்ளது. வெளியில் தெரியாத காரணங்களுக்காக வெளிநாட்டினர் அதில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஜெட்டியில் இறங்கியதும், சுல்தானின் தனி உதவியாளர்களில் ஒருவரான கேப்டன் தாவூத் என்னைச் சந்தித்தார். ஆஸ்திரேலியாவில் அவர் இருந்த காலத்தில் ஆங்கிலிகன் மரபிலான பல விஷயங்களுடன் ஓர் அழகான ஆஸ்திரேலிய மனைவியையும் தன்னுடன் கொண்டு வந்துவிட்டார். விருந்தினர்களும் நாட்டிற்கு வருகை தருவோரும் தங்குவதற்கு அரசால் பராமரிக்கப்படும் ஜோஹோர் ஹோட்டலுக்கு உதவியாளர் எங்களை அழைத்துச் சென்றார்.

சீன வேலையாட்களின் முட்டாள்தனம் நாடறிந்த ஒன்று. முட்டாள்தனத்தின் உச்சத்தை வேலையாட்களில் ஒருவன் வெளிப்படுத்தியதைப் பார்த்தேன். மினரல் வாட்டர் பாட்டில் ஒன்றைக் குளிர்விக்கும்படி அவனிடம் சொல்லப்பட்டது. அந்தப் பாட்டிலை பனிக்கட்டிகளுக்குள் புதைத்து வைக்கும் வழக்கமான முறையை அவன் பின்பற்றவில்லை. அதற்குப் பதிலாக, எல்லையற்ற சிரத்தையுடன் அந்தக் கட்டிகளை மிகச்சிறிய துண்டுகளாக பொடியாக்கி, பின்னர் அவற்றைப் பாட்டிலில் நிரப்ப முயன்றான். இத்தகைய முட்டாள்தனத்தை எந்த நாட்டிலும் எவரும் விஞ்ச முடியாது. நல்லதொரு காலை உணவுக்குப் பின், சுற்றியிருந்த இடங்களைக் காட்டுவதற்கு உதவியாளர் எங்களுடன் வந்தார்.

முதலில் சென்ற இடம், சுல்தானின் அரண்மனை. இது சாதாரண வசதியான வசிப்பிடமாக இருக்கிறது என்பதைத் தவிர்த்து சிறப்பானது என்று சொல்வதை நியாயப்படுத்த எதுவும் இல்லை என்று கூறலாம். அதே நேரத்தில், விரைவில் இங்கிலாந்துக்குக் கல்வி கற்கச் செல்லவிருக்கும் சுல்தானின் மூன்று இளம் வயது மகன்களைப் பார்த்தேன்.

அரண்மனையை விட்டு வெளியேறும்முன், அந்த சிற்றரசின் அரசவைச் சின்னங்களைப் பார்வையிட்டேன். அரண்மனையின் ஏனைய நகைகளுடன், அழகான தங்கத்திலும் வெள்ளியிலும் செய்யப்பட்ட தட்டுகள், அரசுச் சின்னம் மற்றும் சில வெளிநாட்டு அலங்காரப் பொருட்கள் இருந்தன. அதன்பின் அந்த இடத்தைப் பார்த்துவிட்டு, அரசின் மசூதியையும் சிறை வளாகத்தையும் பார்த்தேன்.

0

அடுத்து, சீன மற்றும் மலாய் நகரங்கள். அந்தப் பகுதிகள் திறமையாக மேற்பார்வை செய்யப்படுகின்றன என்பது என்னுள் தாக்கத்தை ஏற்படுத்தியது. இயற்கையான வெப்பமண்டலக் காட்சிகள் ஏராளமான பசுமையான மரங்களுடன் சேர்ந்து சுற்றுப்புறத்திற்கு ஒருவிதமான அழகிய தோற்றத்தைக் கொடுத்தன. ரப்பர் மரங்களின் பூர்வீகம் ஜோஹோர். அரசு வருவாயின் பெரும்பகுதியின் மூலாதாரம் இவை. ஐரோப்பிய அதிகாரிகள் பலர் சுல்தானின் சேவையில் உள்ளனர்.

ஒரு பொறியாளர், ஒரு மருத்துவர், துருப்புக்களின் கமாண்டண்ட் என்று அவர்கள் சுமார் 300 பேர் உள்ளனர். ஏறத்தாழ அவர்கள் அனைவரும் பதான்கள். அந்த அதிகாரிகளில் ஒரு பஞ்சாபியும் உண்டு. அவர் என்னைப் பார்க்க வந்திருந்தார். நான் புறப்படுவதற்கு சற்று முன்பு, சுல்தான் இப்ராஹிம் அலி கான் (அவரது நாட்டுப்புற முகாமிடத்திலிருந்து இதற்காகச் சிறப்பாக வந்திருந்தார்) என்னைச் சந்திக்க வருகை தந்தார்.

ஜோஹோர் சுல்தான் இப்ராஹிம் அலி கான்
ஜோஹோர் சுல்தான் இப்ராஹிம் அலி கான்

அந்த இளவரசர் ஆங்கிலப் பழக்கவழக்கங்களுக்குப் பெரிதும் மாறியிருந்தார். வெள்ளை நிற ’டக் சூட்’ அணிந்து வந்திருந்தார். சற்றே முரட்டுத்தனமான பாணி. அவருக்கு விருப்பமான விலங்கான குதிரைகளுடன் அவர் செய்த பல சாகசங்களும் விபத்துகளும் அவரை ஒரு ஹீரோ ஆக்கியுள்ளன. ஒரு சந்தர்ப்பத்தில் குதிரை ஒன்று வாயில் உதைத்ததால் பெரும்பாலான பற்களை இழந்துவிட்டார். பல் செட் ஒன்றை இப்போது வைத்துக் கொண்டுள்ளார். மேல் வரிசையிலும் கீழ் வரிசையிலும் இரண்டு முன் பற்களில் வைரங்கள் பதிந்துள்ளன. சிரிக்கவோ பேசவோ அவர் வாயைத் திறக்கும்போதெல்லாம் அற்புதமாகப் பிரகாசிக்கின்றன.

சுல்தான் அடிக்கடி ஐரோப்பாவிற்குப் பயணம் செய்துள்ளார். இந்த விஷயத்தில் மற்றவர்கள் போலவே எங்களிடையே பேச பொது விஷயம் இருந்தது; அதனால் விரைவில் நாங்கள் சிறந்த நண்பர்கள் ஆகிவிட்டோம். விவாதிக்க பல விஷயங்களும் மனிதர்களும் இருந்ததை அறிந்தோம். அத்துடன் பரஸ்பரம் சுவாரஸ்யமான கதைகளையும் பரிமாறிக் கொண்டோம். ஐரோப்பாவிற்கு மீண்டும் ஒரு பயணம் மேற்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் இருப்பதாக சுல்தான் கூறினார். அங்கேயே இரண்டு ஆண்டுகள் தங்கியிருப்பாராம். இவ்வளவு காலம் நாட்டிலிருந்து விலகி இருக்க அனுமதி பெறுவதில் எப்படி அவர் வெற்றி பெற்றார் என்று அவரிடம் கேட்டேன். அவருக்கு ஒரே வியப்பு. அப்படி யாரிடமாவது அனுமதி கேட்கும் எண்ணமே தனக்குத் தோன்றவில்லை என்று கூறினார்.

ஜோஹோரில் மிகவும் அனுபவித்த சுவாரஸ்யமான பயணத்தை முடித்துவிட்டு, மாலையில் சிங்கப்பூர் திரும்பினோம். இரவு உணவுக்குப் பின் மலாய் தியேட்டர் ஒன்றுக்குச் சென்றோம். டச்சு நாடகம் ஒன்றை நிகழ்த்த கலைஞர்கள் முயற்சி செய்தனர். ஆனால், அதை முற்றிலுமாகக் கொலை செய்வதில் அவர்கள் வெற்றி பெற்றனர். மேலும் ஐரோப்பிய இசையை மலாய் சொற்களில் மாற்றியமைத்து அவர்கள் பாட முயன்றது மிக மிக நகைச்சுவையாக இருந்தது. ஆடைகள், அவற்றின் அசல்களின் மோசமான பிரதிகளாக இருந்தன. தீவிர நாடகம் என்று முனைந்து நகைச்சுவை ஆபரா நடத்தும் நோக்கத்தில் வடிவமைக்கப்பட்டதாக அது இருந்தது.

டிசம்பர் 30 அன்று காலையில் பெய்த மழை, என்னை அறைக்குள்ளேயே அடைத்துவிட்டது. மதியம், ஜோஹோர் சுல்தானின் அழைப்பின் பேரில், சிங்கப்பூரிலிருந்த அவரது அரண்மனையில் அவருடன் தேநீர். அவருக்குச் சிங்கப்பூரில் இரண்டு அரண்மனைகள் உள்ளன. ஒன்று பெரியது மற்றொன்று சிறியது. இரண்டும் அழகான அறைகலன்களுடன் சிறப்பாக அலங்கரிக்கப்பட்டிருந்தன. இரண்டும் அலங்காரமான இயற்கைப் பூங்காக்களுக்கு மத்தியில் அமைந்துள்ளன.

தனது பிரம்மச்சரிய ஆண்டுகளின் இல்லம் என்று அவர் அழைத்த அரண்மனைக்குள் என்னை வரவேற்றார். அதிகமான நேரத்தை இங்கு செலவிடுகிறார். அவரது மதிப்புமிக்க பந்தயக் கோப்பைகள் பலவற்றை அங்கு பார்த்தேன். அவரது குதிரைகள் சிலவற்றையும் பார்க்க முடிந்தது. அற்புதமான சிறந்த குதிரைகள். அவரிடம் கார்களும் இருந்தன. அவை எப்படி இயங்குகின்றன என்பதையும் அவர் நன்கு அறிந்திருக்கிறார்.

0

டிசம்பர் 31 அன்று ஜாவாவிற்கு நான் ஏறிய ஸ்டீமரை எழுநூறு டன் எடையுள்ள ஒரு மோசமான தொட்டி என்றுதான் சொல்ல வேண்டும். ஸ்டீமர் உலர்ந்த மீன்களையும் ஏற்றிச் சென்றது அன்று எனது கெடுவாய்ப்பாக அமைந்தது. அதனால் அந்தச் சிறு கலம் மோசமான வாசனையால் நிறைந்திருந்தது. படகு முழுவதும் மொய்த்திருந்த, தளத்திலேயே சாப்பிட்டு, தூங்கி, குளித்த சீன மற்றும் மலாய்க்காரர்களின் பெருந்திரள் வேறு.

கேப்டன் ஆழ்ந்த அனுபவசாலியாக இருந்தார். அவரும் இரண்டு அதிகாரிகளும் ஆங்கிலேயர்கள். குறிப்பாக கேப்டன் மிகக் கண்ணியமானவராக இருந்தார். முன்பக்கத் தளத்திலிருந்த அவரது கேபினைப் பயன்படுத்திக் கொள்ள என்னை அனுமதித்தார். அங்கு மீன் வாசனை குறைவாகவே ஊடுருவியிருந்தது.

எங்களைச் சூழ்ந்திருந்த மோசமான, அசௌகரியமான நிலையை நாங்கள் பொறுத்துக்கொண்டோம். அந்தப் பயணம் அனுமதித்த சூழலில் கிடைத்த சுகத்தைப் பெற்றுக் கொண்டோம். நல்லவேளை அந்தப் பயணம் இரண்டு நாட்களுக்கு மேல் நீடிக்கவில்லை. என் வாழ்வில் முதன்முறையாக நிலநடுக்கோட்டைக் கடந்தேன். ஆனால், ஐரோப்பியப் பயணிகள் குறைவாக இருந்ததால், உலகைச் சுற்றி கற்பனையாக வரையப்பட்டிருக்கும் அந்தக் கோட்டை கப்பல் கடக்கும்போது பலரும் பின்பற்றுவதாக கூறப்படும் வழக்கமான நடவடிக்கைகள் இல்லை. அத்துடன் மீனின் வாசனையை எதிர்த்துப் போராடுவதிலேயே நாங்கள் மிகவும் மும்முரமாக இருந்தோம் என்பதால் அதற்குக் கொடுக்கப்பட வேண்டிய கவனத்தை நில நடுக்கோடு ஒருவேளை குறைவாகப் பெற்றிருக்கலாம்.

அவ்வப்போது வீசிய கடுமையான காற்றும் மழையும் பெரும் வெப்பத்தைத் தணித்தன. ஆனால், அவை குறுகிய காலத்திற்கு மட்டுமே நீடித்தன. அதனால், அசௌகரியம் ஓரளவுதான் குறைந்தது. இரண்டாவது நாள் முழுவதும் நிலப்பரப்பை பார்த்தபடியே பயணித்தோம்; அவை ஹாலந்துக்குச் சொந்தமான சிறிய தீவுக் கூட்டம்.

(தொடரும்)

படம்: ஒரு பிரெஞ்சு அதிகாரியும் அவரது மனைவியும், ஷாங்காய் வூசாங் துறைமுகத்தில் (புகைப்படம் – ஜேம்ஸ் கிரிஃபித்)

___________
ஜகத்ஜித் சிங் எழுதிய “My Travels in China, Japan and Java, 1903” நூலின்  தமிழாக்கம்

பகிர:
அக்களூர் இரவி

அக்களூர் இரவி

சொந்த ஊர் மாயவரம். தொலைத் தொடர்புத் துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். 'இந்தியா என்கிற கருத்தாக்கம்', ‘காந்தியும் பகத் சிங்கும்’, ‘அரசியல் சிந்தனையாளர் புத்தர்’ உள்ளிட்ட நூல்களை மொழிபெயர்த்திருக்கிறார். திசையெட்டும் மொழியாக்க விருது பெற்றவர். தொடர்புக்கு : thendralaham@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *