கிழக்குலகின் மிகப்பெரிய பிரிட்டிஷ் அல்லாத காலனி என்பதால் ’நெதர்லாண்ட்ஸ் இந்தியா’1 எப்போதும் எனது ஆர்வத்தைக் கிளறும் பிரதேசம்.
ஜனவரி 3ஆம் தேதி நாங்கள் படேவியாவை2 நெருங்கினோம். ஒப்பிட்டுப் பார்க்கவும் வேறுபாடுகள் என்னென்ன என்று அறிந்துகொள்ளவும் இறுதியில் வாய்ப்பு கிடைத்ததை நினைத்து மகிழ்ச்சியடைந்தேன். ஒரு காலனியச் சக்தியாக ஹாலந்து மூன்றாம் இடத்தில்தான் இருக்கிறது. அத்துடன் ஜாவாவைக் காட்டிலும் வேறு எங்கும் அவர்களது ஆட்சிக்குச் சாதகமாக நிலை இல்லை; அத்துடன் அங்கு போன்று கடுமையாக விமர்சிக்கப்படுவதையும் எங்கும் பார்க்க முடியாது.
சுமத்ரா, போர்னியோ, செலிபெஸ் மூன்றும் முற்றிலும் டச்சு ஆட்சியின் கீழ் உள்ளன. அருகிலுள்ள பல சிறிய தீவுகளும் அதில் அடக்கம். அனைத்தையும் சேர்த்து மொத்த மக்கள் தொகை, நாற்பது மில்லியனுக்கும் அதிகமாக இருக்கும். எல்லாவற்றிலும் ஜாவா மிக முக்கியமானது. அத்துடன் உலகில் வேறு எந்த நாட்டிலும் இல்லாத அடர்த்தியான மக்கட்தொகையைப் பெற்றுள்ளது. இங்கு குறிப்பிடும் நாற்பது மில்லியன் மக்களில், ஜாவா இருபத்தைந்து மில்லியனுக்குக் குறையாத மக்கள் தொகை கொண்டது; அல்லது மொத்தத்தில் பாதிக்கு மேல் இருக்கும்.
தற்போது அதன் வசமிருக்கும் காலனிகளைப் பல நூற்றாண்டுகளாக ஹாலந்து ஆட்சி செய்து வருகிறது. எனினும், பூர்வீக இனங்களுடன் தொடர்ந்து யுத்தம் செய்துகொண்டிருக்க வேண்டிய சூழல்; அத்துடன் அவை ரத்தம் சிந்தப்படும் போர்களாகவே இருக்கின்றன. தற்சமயம், சுமத்ராவில் உள்ள ஆச்சினீஸ் இனத்தவர்கள் டச்சு ஆட்சியாளர்களுக்கு எப்போதாவதுதான் தொந்தரவு தருகின்றனர். இந்த மக்கள், ஜாவாவில் வசிப்பவர்களைக் காட்டிலும் மோதல் மனநிலையும் ஆக்ரோஷமான குணமும் கொண்டவர்கள். இப்போது அங்கு அமைதியும் சாந்தியும் ஆட்சி செய்கின்றன.
நெப்போலியன் ஹாலந்தை ஆக்கிரமித்த நேரத்தில், டச்சுக்காரர்களின் உடைமைகள் எடுத்துக் கொள்ளப்பட்டன அல்லது முன்னேற்பாட்டின்படி ஆங்கிலேயர்களின் வசம் ஒப்படைக்கப்பட்டன. இந்த விஷயம் பொதுவாக வெளியில் தெரியாமல் இருக்கலாம் அல்லது பெரும்பாலான மக்கள் அதை மறந்திருக்கலாம். ஐந்து ஆண்டுகளுக்குப்பின் ஹாலந்து மீண்டும் சுதந்திரம் பெற்றவுடன் அந்த நாட்டிடம் திரும்பவும் ஒப்படைக்கப்பட்டன.
இப்போது பிரிட்டிஷ் இந்தியா என்று அழைக்கப்படுவதன் பகுதியாகத்தான் ஜாவா இருந்தது என்று எடுத்துரைக்க அதிகச் சான்றுகள் உள்ளன. ஒரு காலத்தில் அதன் மக்கள் இந்து மதத்தைப் பின்பற்றினர். முகமதியப் படையெடுப்பின் விளைவாக, அவர்கள் நபியைப் பின்பற்றும் மனிதர்களாக மாறினர்.
இன்றுவரை அப்படித்தான் இருக்கிறார்கள். இருப்பினும், அந்த மதத்தைப் பின்பற்றினாலும், அவர்கள் பழமைவாதிகளாக எவ்வகையிலும் இல்லை என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும். மக்கள் தங்கள் வீடுகளில் தனிப்பட்ட முறையில் இன்றுவரை இறை உருவங்களை வழிபடுவதில் ஈடுபட்டுள்ளனர், ஒரு தலைமுறையிலிருந்து மற்றொரு தலைமுறைக்கு, மரபாக ஸ்வீகரிக்கப்பட்ட வழக்கத்தின் தாக்கத்தை இது வெளிப்படுத்துகிறது. முகமதிய மதத்தால் முற்றிலும் அதை ஒழிக்க முடியவில்லை.
எங்கள் ஸ்டீமர் காலை ஏழு மணிக்கு டேன்ஜங் பிரையோக் துறைமுகத்தை அடைந்தது, அதன் பின்னர், அங்கிருந்து இருபது நிமிடங்கள் ரயில் பயணத்திற்குப் பின் படேவியாவை அடைந்தோம். நாங்கள் ஹோட்டல் டெஸ் இண்டீஸில் தங்கினோம். நான் தங்குவதற்கு ஹோட்டலின் அனெக்ஸ் முழுவதும் ஒதுக்கப்பட்டிருந்தது. அது ஒரு பெரிய கட்டடம். உயர்தரமான அறைகள், நல்ல வசதிகளுடன் இருந்தன. அறைகலன்கள் முதலியன உண்மையில் வசதியான பயன்பாட்டிற்கு தக்கனவாக இருந்தன. தரையில் பளிங்குக் கற்கள் பரவப்பட்டிருந்தன. அத்துடன் ஜாவாவில் எல்லா இடங்களிலும் பார்க்க முடிவது போல், படுக்கைகள் மிகப்பெரிய அளவில் இருந்தன. எனக்கு அளிக்கப்பட்டிருந்த படுக்கை 8க்கு 6 அடி அளவு இருந்தது.
ஹோட்டலுக்குள் நாங்கள் வந்த சிறிது நேரத்திலேயே எங்களுக்கு முதல் உணவு பரிமாறப்பட்டது. இதுவரையிலும் பெற்ற அனுபவங்களில் இது மிகவும் சுவாரஸ்யமான ஒன்றாக இருந்தது. அந்த உணவை ‘ரைஸ் டேஃப்ள்’ (Riz-tafel) என்று சொல்கிறார்கள். அதாவது ‘உணவு மேஜை’. மதியம் ஒரு மணிக்கு அது பரிமாறப்படுகிறது.
அனைத்தும் ஒரேநேரத்தில் ஒருவருக்கு முன்னால் வைக்கப்படுகின்றன. கறியாகச் சமைக்கப்பட்ட இறைச்சி, கோழி, மீன், முதலியன. அத்துடன் ஒரு பெரிய சூப் பிளேட்டில் தாராளமாக சோறும் வைக்கப்பட்டிருந்தது. முன்னால் வைக்கப்படும் மேஜையிலிருந்து உணவுகளையும் பதார்த்தங்களையும் ஒருவர் தனக்குத் தானே எடுத்துப் போட்டுக்கொண்டு சாப்பிட வேண்டியதுதான்.
அந்த மதிய உணவுக்குப்பின் பெரும்பாலான மக்கள் மறைந்துவிடுகிறார்கள்; அதாவது வெளியில் வருவதில்லை.
கடைகளும் வணிக வளாகங்களும் மூடப்படுகின்றன. தாற்காலிகமாக அந்த இடம் முழுவதும், எல்லாவற்றிலும் எல்லோரிடத்திலும் ஓர் இனிமையான சோம்பேறித்தனம் பரவுகிறது. பெரும் வெப்பமான வானிலை போனதும், ஆறு மணிக்கு ஒருவகை உயிர்த்தெழுதல் நடைபெறுகிறது. மீண்டும் வாழ்வின் அறிகுறிகள் தென்படத் தொடங்குகின்றன.
இந்தப் புதிய இடம் எப்படி இருக்கிறது என்று பொதுவாக தெரிந்துகொள்ள மாலையில் சுற்றிப் பார்க்கப் புறப்பட்டேன். அப்போது டச்சு துருப்புக்களின் முகாம்களை எட்டிப் பார்க்க முடிந்தது. அவர்களுடைய வாழ்க்கை முறையை அவதானிக்க மிகவும் ஆர்வமாக இருந்தேன். டச்சுக்காரர்கள், ஐரோப்பியர்கள், அந்த நாட்டைச் சேர்ந்த துருப்புக்கள் என்று அனைவரும் ஒரேயிடத்தில்தான் வசிக்கின்றனர்; ஒன்றாகவே உண்கின்றனர். அந்த நாட்டைச் சேர்ந்தவர்களும் டச்சுக்காரர்கள் அணியும் சீருடையில் தலைக்கவசங்களில். இருந்தனர். அனைத்து இனத்தையும் சேர்ந்த துருப்புக்களின் மொத்த எண்ணிக்கை சுமார் நாற்பதாயிரம் இருக்கும்.
நகரம் நன்கு திட்டமிட்டு வடிவமைக்கப்பட்டு அமைந்திருந்தது. பெரும்பாலும் தாக்கம் ஏற்படுத்தாத ஒரு மாடிக் கட்டடங்கள். எனினும், அவை பிரமாண்டமானவை, நல்ல முறையில் கட்டப்பட்டிருந்தன. அத்துடன் அனைத்தும் விசாலமான வராந்தாக்களுடன் அமைந்திருந்தன. நன்கு அமைந்திருந்த தெருக்கள், அவற்றின் இருபுறமும் பாதசாரிகளின் வசதிக்காக நடைபாதைகளுடன் காணப்பட்டன. வாட்டர்லூ ப்ளீன் என்று அழைக்கப்படும் பெரிய சதுக்கம் ஒன்றில் ராணுவத்தின் இசைக்குழுவினர் நல்ல, தேர்ந்தெடுத்த இசையை வாசித்துக் கொண்டிருந்தனர். ஏராளமான, இசைப்பிரியர்கள் அங்கு கூடி அதை ரசித்துபடி நின்றிருந்தனர்.
மாலை 7 மணிக்கு. (இது மற்றவரைப் பார்க்கச் செல்லும் வழக்கமான நேரமாம்) பிரிட்டிஷ் தூதர் திரு. ஃப்ரேசர் என்னைப் பார்க்க வந்தார். திரு. ஃப்ரேசர் பெரிய வியாபாரம் ஒன்றில் ஈடுபட்டிருக்கும் வணிகரும்கூட. என்னை அவர் ‘ஹார்மோனி’ என்ற சிவிலியன் கிளப்புக்கு அழைத்துச் சென்றார், கம்பி இசைக்கருவிகள் கொண்டு இசை வழங்கும் பேண்டு குழுவினர் வாசித்துக் கொண்டிருந்தனர். திறந்த வெளியில் அமைக்கப்பட்டிருந்த சிறிய மேசைகளில் இருந்த குளிர்பானங்களை அருந்தி மகிழ்ச்சியில் திளைத்துக் கொண்டிருந்த பலருக்கும் செவியுணவாக அது இருந்தது. ஒருவர் ஏங்கும் ஒருவிதமான ஓய்வு. ஆனால் இதைப்போன்ற மாறுப்பட்ட விஷயங்களுக்கான வாய்ப்புகள் வரம்பற்றதாக இருக்கும் இந்தியாவில் இவை அரிதாகவே கிடைக்கக்கூடும்.
கூட்டத்தினர் தேர்ந்தெடுக்கப்பட்ட மனிதர்களாக இருந்தனர்; அவர்களில் நன்கு உடையணிந்த சில பெண்களும் சீருடை அணிந்த டச்சு அதிகாரிகளும் இருந்தனர். கிளப் ஒரு வசதியான, விசாலமான, ஒழுங்குடன் அமைந்த இடம். பொருத்தமான பளிங்கு தரைகளுடன் இருந்தது. இது மிகவும் பிரபலமான உல்லாசத்திற்கான இடமாக இருக்கும்போல் தோன்றியது. ஒன்பது மணிக்கு வழக்கமான முறையில் ஹோட்டலில் இரவு உணவு வழங்கப்பட்டது. அது ஜாவாவின் பொதுவான இரவு உணவு நேரமாம்.
மறுநாள் காலை அருங்காட்சியகம் பார்க்கச் சென்றேன். அற்புதமான பொருட்களின் சேகரிப்பு அங்கு இருந்தது. சில பழங்காலத்தவை. மற்றவை நவீன காலத்தைச் சேர்ந்தவை. டச்சு கிழக்கு இந்தியக் கம்பெனியின் காலத்தில் நடைமுறையிலிருந்த கலை மற்றும் அறிவியல் தொடர்பான விஷயங்களை விளக்கும் பொருட்களும் இருந்தன.
சேகரிப்புகளில் நான் பார்த்த சில பொருட்கள் எனக்கு மிகவும் ஆர்வமூட்டின. தீவின் பல்வேறு பகுதிகளில் அவ்வப்போது தோண்டி எடுக்கப்பட்ட கல் உருவங்கள் அவை. சிறந்த முறையில் வகைப்படுத்திக் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. இந்த உருவங்கள் எல்லா அம்சங்களிலும் இன்று இந்தியக் கோவில்களில் நாம் பார்க்கமுடிகிற உருவங்களை ஒத்திருந்தன. எடுத்துக்காட்டாக விநாயகர், சிவன், கிருஷ்ணரின் உருவங்களை என்னால் அடையாளம் காண முடிந்தது. உண்மையில், இந்து புராணங்களில் உலவும் அனைத்து கடவுள்களும் அங்கு இருப்பதாகத் தோன்றியது.
இத்தகைய உருவங்கள் அங்கு இருந்ததும், அவற்றின் பெரும் தொன்மையும், பிற சூழ்நிலைகளையும் மனத்தில் கொண்டு பார்க்கையில் கடந்த காலத்தில் இந்து மதம்தான் இங்கே வழக்கத்தில் இருந்தது என்பதை ஊகிப்பது கடினமாக இல்லை. பழங்காலத்தில் அந்த மக்களோடு இந்து மதம் தன்னை இணைத்துக்கொண்டது என்பதை அங்கு காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த பந்தன்கள் (வெற்றிலை செல்லங்கள்), தங்கத்திலும் வெள்ளியிலும் செய்யப்பட்ட பலவகையான பாத்திரங்கள் போன்ற ஏராளமான வீட்டு உபயோகப் பொருட்கள் மூலமும், நம் தேசத்தில் இப்போதும் புழக்கத்தில் இருக்கும் பலவகையான, பல வடிவங்களில் ஆன பொருட்கள் மூலமும் சான்றுகளாகக் கொண்டு அறிந்துகொள்ள முடிந்தது. தோற்றம், பயன்பாடு இரண்டிலும் ஒத்திருந்ததால் அவற்றை உடனடியாக அடையாளம் கண்டுகொண்டேன். இவை பல விதத்திலும் ஆர்வமூட்டின என்றாலும் அந்த உணர்வையும் தாண்டி அடிப்படையில் அவை மிகவும் அரிதானவை, மதிப்புமிக்கவை.
அடுத்ததாக கவர்னர் ஜெனரலின் மாளிகைக்குச் சென்றேன். அது ஒரு கம்பீரமான கட்டடம். ஆனால், எளிமையாகவும் போதுமான அளவுக்கும் மட்டும் அறைகலன்கள் கொண்டதாகவும் இருந்தது. அந்தப் பகுதிக்கே பொதுவான பளிங்குத் தளங்கள் அங்கும் இருந்தன. குறிப்பாக விசாலமான வரவேற்பு அறைகள் உயர்ந்த முறையில் பராமரிக்கப்பட்டிருந்தன. எனினும் இந்த அரண்மனை, அடிக்கடி பயன்படுத்தப்படுவதில்லை. பெரும் வரவேற்பு நிகழ்விற்கோ அல்லது வேறு நிகழ்ச்சிகளுக்காக கவர்னர் பைட்டென்ஸார்கிலிருந்து3 (Buitenzorg) இங்கு வரும்போதோ மட்டுமே உபயோகப்படுகிறது.
இந்தத் தேசத்தில் வசிக்கும் ஐரோப்பியர்கள் தம் வாழ்வின் அம்சமாக இப்பகுதியின் பூர்வீக உடையை, ஆடை அணியும் முறையைப் பாதியளவுக்கு ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். நாளின் கணிசமான பகுதியை அந்த ஆடையை அணிந்துதான் கழிக்கிறார்கள். பெண்களைப் பொறுத்தவரை, ஒரு சரோங், அது இல்லையெனில் ஒருவிதமான துணியை இடுப்பில் கட்டிக் கொள்கிறார்கள். உடலில் தளர்வாக பொருந்தும் ஒருவகை ரவிக்கையை அணிகிறார்கள்.
முதலில் கூறப்பட்டது, சில நேரங்களில் உள்ளூர் கலைத் திறனை வெளிப்படுத்தும் சிறந்த மாதிரியாக, விலை மதிப்பில் பெரிதும் வேறுபடுவதாக இருக்கும். இப்படி அரைகுறையான, அலட்சியமாக அணிந்த உடையுடன் காலணியும், காலுறைகளும், தொப்பியும் இல்லாமல் நாள் முழுவதும் சுற்றுகின்றனர். மதிய உணவிற்கும், விவரிக்கப்படும் இந்த மெலிதான ஆடைகளை அணிந்துதான் அமர்கிறார்கள். மதியத்திற்குமேல் வெளியில் செல்லும் போது மட்டுமே ஐரோப்பிய ஆடைகளை மாற்றிக்கொள்கிறார்கள்.
காலநிலையின் தேவைகளை எதிர்கொள்வதற்காக, இந்தியாவில் வசிக்கும் பெண்கள் இத்தகைய ஆடைகளை ஏற்று அணியவேண்டும் என்று யோசனை தெரிவிக்கப்பட்டால், ஓர் ஆங்கிலோ-இந்தியப் பெண்ணின் உடலில் வெளிப்படும் அதிர்ச்சியைக் கற்பனை செய்து பாருங்கள்!
அங்கு சென்றவுடன் இவற்றைப் பார்த்த எனக்கு முதலில் ஏற்பட்ட வியப்பு மிகவும் பெரியது. அந்தத் தேசத்தின் உடையில், சிவப்பு தலைமுடியும், நீல நிறக் கண்களும் கொண்ட பெண்கள் ஐரோப்பிய தேசத்தைச் சேர்ந்தவர்கள்தானா என்பது சிறிது நேரம் எனக்குப் புரியவில்லை. அவர்களின் வாழ்க்கை முறையை வைத்து ஒப்பிடுகையில், அவர்களைக் காட்டிலும் பலவிதத்திலும் தாழ்ந்தவர்களென அவர்கள் கருதும் மக்களை வென்ற பிறகும் ஓரளவிற்கு அந்த மக்களின் பழக்கவழக்கங்களை ஏற்றுக்கொண்டு பின்பற்றும் ஒரே ஐரோப்பிய இனம் டச்சுக்காரர்கள் மட்டுமே என்பது கவனிக்கத்தக்கது.
அத்துடன், டச்சுக்காரர்கள் அந்த நாட்டவரின் பொதுவான ஆடைகளை அணிகிறார்கள்; அவர்களைப் போன்றே குளிக்கவும் செய்கிறார்கள். அத்துடன் பெருமளவிற்கு அந்த மக்கள் சாப்பிடும் உணவையே சாப்பிடுவதையும் ஒருவர் பார்க்க முடியும்.
இந்த நாட்டில் கடவுச்சீட்டு முறை கடுமையாகக் கடைப்பிடிக்கப்படுகிறது; ஒருவர் தனது சீட்டை வந்த மூன்று நாட்களுக்குள் அதிகாரிகளின் பார்வைக்கு அளிக்கவேண்டும் என்பது கட்டாயம்.
கடைகள் கவனத்தை ஈர்க்கும் தோற்றத்துடன் காணப்பட்டன. அனைத்து ஐரோப்பிய நாடுகளின் பல்வேறு வகைப் பொருட்களும் அவற்றில் நிறைந்திருந்தன. பம்பாயிலோ அல்லது கல்கத்தாவிலோ இருக்கும் பெரும்பாலான பெரு நிறுவனங்களின் பின்பற்றும் நடைமுறைகளைக் காட்டிலும் இவை சிறந்த ஏற்பாடாக உள்ளதைக் கண்டேன். அங்கு ஒருவர் பெரும்பாலும் இங்கிலாந்தில் தயாரிக்கப்பட்ட பொருட்களைத்தான் வாங்க வேண்டும் அல்லது வாங்காமல் போக வேண்டும்.
பிற்பகலில் நான் சுற்றிப் பார்க்கச் சென்றபோது, வெவ்வேறு இனங்களைச் சேர்ந்தவர்கள் வாழும் பகுதிகளைப் பிரிப்பதற்கு டச்சுக்காரர்கள் செய்த ஏற்பாடுகள் எனக்குள் தாக்கத்தை ஏற்படுத்தின. ஒரு பகுதி, ஐரோப்பியச் சமூகத்தின் பிரத்தியேகப் பயன்பாட்டிற்காக ஒதுக்கப்பட்டிருந்தது; மற்றொரு பகுதி மலாய்க்காரர்களுக்கு; மற்றொரு பகுதி சீனர்களுக்கு.
மிகக் குறைவான எண்ணிக்கையில் இருக்கும் ஜப்பானியர்கள் ஆசியர்கள் என்ற பிரிவின் கீழ் எடுத்துக் கொள்ளப்படவில்லை என்பது ஆர்வமூட்டும் ஒன்று. விரும்பிய இடத்தில் வசிக்க அவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நிலையாக அங்கு தங்கப் போவதில்லை என்பதாலும், சுற்றிப்பார்க்க வந்திருக்கிறோம் என்பதாலும், நாங்கள் இந்தியாவைச் சார்ந்தவர்கள் என்பதும் ஐரோப்பியர்கள் வசிக்கும் இடத்தில் தங்குவதைத் தடுக்கவில்லை!
அடுத்துச் சென்ற இடம் ‘கான்கார்டியா’. அது ராணுவத்தினருக்கான கிளப். நான் பார்த்திருந்த ‘ஹார்மோனி’ கிளப்பைக் காட்டிலும் உயர்ந்ததாக இருந்தது. டவுன் ஹாலையும் பார்க்க முடிந்தது. அதில் முன்னாள் கவர்னர்களின் சிறந்த ஓவியங்கள் பல இருந்தன.
நாங்கள் ஜனவரி 5ஆம் தேதி பைட்டென்ஸார்க்கிற்குப் புறப்பட்டபோது பலத்த மழை பெய்தது.
ரயிலில் பெட்டி ஒன்றை முன்பதிவு செய்திருந்தேன். போதுமான அளவுக்கு வசதியாக இருந்தது. பெரும்பாலானவை தோலால் மூடப்பட்ட இருக்கைகள், அல்லது சாதாரண பிரம்புகளால் அமைக்கப்பட்டிருந்தன. இந்தியாவில் இருக்கும் பிராட் கேஜ் மற்றும் மீட்டர் கேஜ் ரயில் பாதைகளுக்கு இடைப்பட்டதாக இந்த ரயில் பாதை இருந்தது. நிலையங்களின் பெயர்கள் ரோமன் மற்றும் ஜாவானிய எழுத்துகளில் எழுதப்பட்டிருந்தன. எழுத்துமுறை நிச்சயமாக டச்சு மொழியில்தான் இருந்தது.
சுமார் இரண்டரை மணிநேரப் பயணத்திற்குப் பிறகு பைட்டென்ஸார்க் சென்றடைந்தோம். மழை, பயணம் முழுவதும் தொடர்ந்தது, ஆனால், பயண வழியின் இயற்கைக்காட்சியின் அழகைப் பார்க்க முடியாமல் போகும் அளவிற்கு இல்லை. ரயில் பாதையின் இருபுறமும், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை, கற்பனையில் பார்க்கமுடிகிற, மிக அதிக அளவு அடர்த்தியான வெப்பமண்டல தாவரங்களைப் பார்த்தோம்.
பைட்டென்ஸார்க் கடல் மட்டத்திலிருந்து சுமார் இரண்டாயிரம் அடி உயரத்தில் உள்ளது, ஆனால், உயர்ந்து செல்லும் பாதை மிகவும் எளிதாகவும் படிப்படியாகவும் இருந்தது. எங்கள் இடத்தை அடைந்தபின் ஹோட்டல் பெல்வியூக்குச் சென்றோம். ஒருவிதத்தில் ஹோட்டலுக்கு மிகவும் பொருத்தமான பெயரிடப்பட்டதாகத் தோன்றியது. ஹோட்டலின் வராந்தாவிலிருந்து பார்த்த இயற்கைக் காட்சிகளைக் குறிப்பிட்டுச் சொல்லவேண்டும். அவ்வளவு நன்றாக இருந்தன. அழகான மரங்கள் நிறைந்த காடும், வளமான, பள்ளத்தாக்குமாக விரிந்து பரந்திருந்தது. அங்கு எங்களது வருகை ’ரைஸ் டேஃப்ள்’ நேரத்துடன் ஒத்துப்போனது; நான் படேவியாவில் எங்களது அனுபவத்தை விவரித்ததைப் போலவே இந்த இடத்திலும் நடந்தது.
பைட்டென்ஸார்க் வானிலை படேவியாவில் நிலவியதைக் காட்டிலும் பெருமளவிற்கு மேம்பட்டதாக இருந்தது. அனைத்துவிதத்திலும் படேவியாவைக் காட்டிலும் மிகவும் இனிமையானதாகவும் குளிர்ச்சியாகவும் இருந்தது. இந்த அட்சரேகையில், இந்த இடம் பூமத்திய ரேகைக்கு அருகாமையில் இருப்பதால், ஆண்டின் எல்லாக் காலங்களிலும் வானிலை ஒரே சீராகவே இருக்குமாம். அத்துடன் பகலும் இரவும் சமமான நேரம் கொண்டவை. இது மழைக்காலம் என்பதால், தினமும் மழை பெய்கிறது.
பைட்டென்ஸார்க்கின் வானிலை உடல் நலத்தின் மேம்பாட்டிற்கு உகந்ததாக இருக்கிறது. அதனால் படேவியாவைச் சேர்ந்த பலரையும் இங்கு வசிப்பதற்கு ஈர்க்கிறது, இதன் மூலம் அவர்கள் வெப்பத்தையும் அந்தப் பிரதேசத்தின் அசௌகரியங்கள் பலவற்றையும் தவிர்க்கிறார்கள். இந்தக் காரணங்களுக்காக கவர்னர் ஜெனரலின் பிரதான மாளிகை செழுமையான வெப்பமண்டலத் தாவரங்கள் நிறைந்த ஓரிடத்தில் அமைந்துள்ளது. கனாரி மரம் ஓர் அற்புதமான மரம். அதிக உயரத்திற்கு வளரக்கூடியதும்கூட. மற்ற நாடுகளில் இந்த மரம் பற்றி நான் கேள்விப்பட்டதே இல்லை. இந்தத் தீவின் பூர்வீக மரமாக இருக்கலாம் என்று நம்புகிறேன்.
சிறந்த வானிலையும் உற்சாகமூட்டும் சுற்றுப்புறங்களையும் பெற்றிருந்தபோதிலும் பைட்டென்ஸார்க் உயிர்ப்புடன் இல்லாததுபோல் தோன்றியது. இங்கு வசிக்கும் டச்சுக்காரர்களிடம் இதைக் கவனிக்க முடிகிறது. மனத்தளவில் சோர்வூட்டும் இந்த வெப்பமண்டல பிரதேசத்தில் நீண்ட காலமாக வசிப்பதால் அவர்களிடம் உள்ளார்ந்திருக்கும் பழமைவாதம் மேலும் அதிகரித்திருக்கிறது.
ஜனவரி 6ஆம் தேதி புகழ்பெற்ற தாவரவியல் பூங்காக்களைப் பார்த்து பயனுள்ளதாகவும் மகிழ்ச்சியானதாகவும் இருந்தது. நிச்சயமாக அவை உலகின் மிகச்சிறந்த பூங்காக்கள். பல சதுர மைல் பரப்பளவு கொண்டவை. இந்தப் பகுதியில் மரங்கள் வளர்ப்பு மிக உயர்ந்த நிலையில் பின்பற்றப்படுகிறது. மண்ணும் தட்பவெப்பநிலையும், ஈரப்பதமும் அனைத்து வகையான தாவரங்களும் மிகச் சிறந்த நிலையில் வளர்வதற்குத் தம் உதவியை தளராமல் வழங்கும்போது, நிச்சயமாக இது சிரமமில்லாத விஷயமே.
குறிப்பாக இந்த அழகான தோட்டம், பல்வேறு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு அமைந்திருந்த விதத்தைப் பார்த்து வியந்து போனேன். ஒரு சிறிய ஆற்றின் இருபுறமும் சரிவுகளும் அடுக்கடுக்கான அமைப்புகளும் இருந்தன. இந்தப் பூங்கா ஏற்படுத்திய தாக்கங்கள் அவர்களது மிக உயர்ந்த திறன்களுக்கான எடுத்துக்காட்டாக இருந்தன.
ஐரோப்பாவில் மிகவும் புத்திசாலித்தனமான தோட்டக்காரர்கள் என்ற நற்பெயர் டச்சுக்காரர்களுக்கு உண்டு. ஜாவாவில் வசிக்கும் அவர்களது சந்ததியினர் அவர்களது பரம்பரைத் திறனை இழக்கவில்லை என்று சொல்லலாம். இந்தத் தாவரவியல் பூங்காவை ஒத்திருக்கும். இணையான தரத்துடன் மற்றுமொரு இடத்தைச் சொல்ல வேண்டும் என்றால் இலங்கையில் கண்டிக்கு அருகிலிருக்கும் பாரதின்யா பூங்காவைக் கூறலாம். ஆனால், அந்தத் தோட்டம் மிகவும் நன்றாக இருந்தாலும் பைட்டென்ஸார்கில் இப்போது நான் விவரிக்கும் பூங்காவிற்கு அடுத்த இரண்டாவது இடத்தைத்தான் அது பிடிக்க முடியும்.
நான் பைட்டன்ஸார்கில் பார்த்த மற்றொரு இடம் மன நோயாளிகளின் புகலிடம்/நல மையம். ஆர்வமூட்டிய இடம். யதார்த்தத்தில் தாவரவியல் பூங்காவைப் போல் அவ்வளவு இனிமையானதாக அந்த இடம் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால், கவர்னர் ஜெனரல் அந்த இடத்தை நான் கட்டாயம் பார்க்க வேண்டும் என்று எனக்கு ஆலோசனை கூறியிருந்தார். கீழைப்பிரதேசத்தின் சிறந்த நிறுவனம் என்றும் கூறினார்.
இங்கு அந்த மையத்தைப் பார்த்த பின், அவரது விவரிப்பைக் குறைத்து மதிப்பிட முடியாது என்று தோன்றியது. நிறுவனத்தின் இயக்குநரும் மருத்துவரும் என்னுடன் வந்து, பார்க்க வேண்டிய அனைத்தையும் சுற்றிக் காண்பித்தார்கள். வளாகத்தில் ஐரோப்பிய நோயாளிகள் தங்கு தனிப்பகுதியும், மற்றொரு பகுதி ஆசியாவைச் சேர்ந்தவர்களுக்கு என்று அமைந்திருந்தன. அதற்குள், ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனி இடங்கள்.
அந்த மையம் முதல்தரமாக பராமரிக்கப்படுகிறது. கெடுவாய்ப்பாக அங்கு வசிக்கும் நோயாளிகளுக்குத் தேவையான அனைத்தும் கிடைக்கிறது; ஏன் சில வசதிகளும் அளிக்கப்படுகின்றன. ஆபத்தான மனநோயாளிகள் என்று தனிப்பகுதிகளில் வைத்திருக்கப்படுவோரின் இடத்திற்கு என்னை அழைத்துச் சென்றனர். மிகவும் பதட்டமாக உணர்ந்தேன், ஆனால், எனக்கு எதுவும் நடக்காது என்று சமாதானப்படுத்துவதுபோல், மருத்துவர் எனக்கு முன்னால் நடந்து சென்றார். சில நோயாளிகள் ஏதோ விளையாடிக் கொண்டிருந்தனர்.
ஸ்கோர் எதுவும் வைத்துக் கொள்வதாகத் தெரியவில்லை. மற்றவர்கள், பல்வேறு விதமான வழிகளில் தம்மைத் தாமே மகிழ்வித்துக் கொண்டிருந்தனர். சிலர் அவர்களால் முடிந்த அளவு மகிழ்ச்சியாக இருந்தனர்; மற்றவர்கள் நீண்ட நாட்களாக மனச்சோர்வில் ஆட்பட்டவர்களாக இருந்தனர்; சிலர் தம்மைத் தாமே அடித்துக் கொண்டனர். ஒருவர் தன்னை இங்கிலாந்தின் அரசர் என்று கூறிக்கொண்டார்; மற்றொருவரோ மிகவும் தீவிரமாக தன்னை ஸ்பெயினின் மன்னர் என்று சொல்லிக் கொண்டார். அவர்களது நடத்தைக்கும் செயல்களுக்கும் அவர்கள் பொறுப்பானவர்கள் என்று சொல்லமுடியாத. இவர்கள் போன்ற மனிதர்களைப் பார்ப்பது மிகவும் பரிதாபமாக இருந்தது.
அடுத்த நாள், அதிகாலையிலேயே ரயிலில் அங்கிருந்து புறப்பட்டோம்.
___________
1. நெதர்லாண்ட்ஸ் இந்தியா: டச்சு கிழக்கிந்திய கம்பெனியின் காலனியாக இருந்த இன்றைய இந்தோனேசியாவை உள்ளடக்கிய பிரதேசம்.↩
2. படேவியா : இன்றைய ஜாகர்த்தா, இந்தோனேசியாவின் தலை நகர்↩
3. Buitenzorg : இன்றைய போகோர், இந்தோனேசியா↩
(தொடரும்)
___________
ஜகத்ஜித் சிங் எழுதிய “My Travels in China, Japan and Java, 1903” நூலின் தமிழாக்கம்