Skip to content
Home » மகாராஜாவின் பயணங்கள் #20 – நெதர்லாண்ட்ஸ் இந்தியா- டச்சு இந்திய காலனி 2

மகாராஜாவின் பயணங்கள் #20 – நெதர்லாண்ட்ஸ் இந்தியா- டச்சு இந்திய காலனி 2

அடுத்த நாள் காலை, சீக்கிரமாகவே ரயிலில் புறப்பட்டோம். கீழிறங்கும் பாதையில் பயணம் மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது. ரயில் பாதையின் இருபுறமும் ஜாவாவின் மிக அழகான இயற்கைக் காட்சிகள் பரந்த ஓவியமாய் விரிந்தன. மிகப் பெரிய தேயிலை, காபி தோட்டங்கள் பலவற்றைக் கடந்து ரயில் சென்றது. அந்தத் தோட்டங்களின் உரிமையாளர்களான செல்வவளம் மிக்க மனிதர்கள் வாழ்கின்ற மகத்தான முறையைப் பார்க்கமுடிந்தது. அவர்கள் இல்லங்கள் மிகவும் நன்றாக இருந்தன. தோட்டத்தின் உரிமையாளர்கள் அனைவரும் ‘அவர்களின் கீழிருந்த அனைத்திற்கும் மன்னர் போல்’ தோன்றினர்.

மற்றொரு வகையிலும் அந்த ரயில் பயணம் சுவாரஸ்யமாக இருந்தது. ரயிலில் இருந்தபடியே ஜாவாவின் மிக உயரமான சிகரங்களில் சிலவற்றைப் பார்த்தோம். அநேகமாக, அவை 8,000 முதல் 9,000 அடி உயரம் இருக்கலாம். உண்மையில் அவை எரிமலைகள். நாங்கள் பயணித்த ரயில் நிஜத்தில் 5,000 அடி உயரம் வரை சென்றது. சரிந்து செல்லும் கோணம் குறைவாக இருக்கும் வகையில் ரயில் பாதை சில இடங்களில் வட்ட வடிவில் அமைந்திருந்தது.

ரயிலில், சிற்றுண்டிகளுக்கான பெட்டிகள் எதுவும் இணைக்கப்படவில்லை. ஆனால் தீவிர அசௌகரியம் ஏதும் ஏற்படவில்லை. ஏனெனில், பெரிய ரயில் நிலையங்களில் கூடைகளில் ‘ரைஸ் டேஃபிள்’ கிடைக்கும். ரயிலிலும் அதை எடுத்துச் செல்ல முடியும். மதியம் பேண்டோங் (இன்று பேண்டங்) என்ற இடத்தை அடைந்தோம். அங்கிருந்து ஹோட்டல் ஹோமனுக்கு காரில் சென்றோம்.

சுற்றுப்பயணத்தில் இருக்கும் ஒருவர் ஒப்பிட்டுப் பார்ப்பதைத் தவிர்க்க முடியாது. இந்த டச்சு இண்டீஸில் ஏதோவொரு ஹோட்டலில் நுழையும் போதெல்லாம் இதை நான் செய்வதை உணர்ந்தேன். இதே அளவிலிருக்கும், இதே அளவு முக்கியத்துவமும் பெற்றிருக்கும் இந்திய நகரங்களில் நமக்குப் பழக்கமான எவற்றைக் காட்டிலும் தங்குமிடம், பணிபுரிபவர்கள், தூய்மை போன்றவற்றில் இவை உயர்ந்தவையாக உள்ளன. சாதாரண அறை ஒன்றிற்கு, அனைத்தும் உட்பட, கட்டணம் ஒரு நாளைக்கு ஐந்து முதல் பத்து குல்டன் (Gulden) ஆகும். (இந்திய ரூபாய் 1/8/0, ஒரு குல்டன்).

பொதுவாக இங்கு ஹோட்டல்கள் ஒரு மாடிக் கட்டடங்களாக இருக்கின்றன. ஹோட்டல் அளவுக்கு நீண்டு செல்லும் ஒரு வராந்தாவும் இருக்கிறது. பெரும் அசௌகரியமான அம்சம் ஒன்றைச் சுட்டிக்காட்ட வேண்டும். தங்கும் அறையிலிருந்து குளியல் அறைகள் பொதுவாக மிகவும் தள்ளி இருக்கின்றன. சில இடங்களில் அவற்றை இணைக்கும் பாதை, மேலே கூரையுடன் இருக்கும். ஆனால், பெரும்பாலும் வெயில் மற்றும் மழையிலிருந்து எவ்விதப் பாதுகாப்பும் இன்றி திறந்த வெளியாகவே இருக்கின்றன. அதுபோல் சுகாதார வசதிகள், நவீன காலத்தவையாக இல்லை என்பதைச் சொல்லத்தான் வேண்டும். இப்பகுதி மக்களைப் போல் ஐரோப்பியர்களும் குளியல் தொட்டியைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கின்றனர்; நீரை மொண்டு உடலில் ஊற்றிக் கொண்டுதான் குளிக்கின்றனர்.

ஓரிடத்தை அடைந்தவுடன் வழக்கமாக நான் மேற்கொள்ளும் மாறாத நடைமுறையை இங்கும் தொடர்ந்தேன்; பேண்டோங்கை அடைந்தவுடன் நகரத்தைச் சுற்றிப்பார்க்க புறப்பட்டுவிட்டேன். இந்த இடம், அந்தப் பகுதியின் தலைமையகம் மட்டுமின்றி, டச்சுப் பிரதிநிதியின் இருப்பிடம் என்ற பெருமையும் கொண்டிருக்கிறது. ஆகவே, ஒருவிதத்தில் முக்கியமான இடங்களில் ஒன்று. மலைகளால் சூழப்பட்ட ஒரு பீடபூமியில் இந்த நகரம் வியக்கத்தக்க வகையில் அமைந்துள்ளது. இதனால், ஜாவாவின் பெரும்பாலான இடங்களின் வானிலையைக் காட்டிலும் உயர்வான தட்பவெப்பநிலையை ஒருவர் இங்கு அனுபவிக்க முடியும்.

ஒதுங்கி, உள்நாட்டில் அமைந்திருக்கும் இந்த நகரத்தில் சில நல்ல கடைகள் இருப்பதைக் கண்டு ஆச்சரியப்பட்டேன். ஆனால், பேண்ட்டோங்கில் உல்லாசப் பயணிகளை ஈர்க்கும் வகையில் எதுவும் இல்லை என்றுதான் சொல்லவேண்டும். சிறப்பான அரசாங்க பிரதிநிதியின் கட்டடம், சில ஐரோப்பியர்களின் இல்லங்கள் தவிர்த்துப் பார்ப்பதற்கு எதுவும் இல்லை.

எனினும், ஆர்வமூட்டும் காட்சியாக, அந்த நாட்டின் பூர்விக மக்கள் வசிக்கும் வித்தியாசமான வீடுகள் இருக்கின்றன; மூங்கில் பிளாச்சுகள் மற்றும் பிரம்புகள் கொண்டு அமைக்கப்பட்டு கீற்றோலைகள் வேயப்பட்டவை. தொலைவிலிருந்து பார்க்கையில் பெரிய கூடைகள் போல் தோன்றுகின்றன.

0

ஜனவரி 8 அன்று காலை ’இந்தியன் சீஃப்’ என்ற பள்ளிக்குச் சென்றேன், பள்ளி குறித்துக் கிடைத்தத் தகவல் இயல்பை மீறிய ஆர்வத்தை எனக்கு ஏற்படுத்தியது. அந்த நாட்டின் பிரபுக்கள் மற்றும் மேற்தட்டு மனிதர்களின் மகன்கள் படிப்பதற்கான ஒரே பள்ளி இதுதான். கல்வியும் பயிற்சியும் மட்டுமின்றி, அவர்களுக்கு டச்சு மொழி அறிவும் கிடைக்கிறது. குறைந்த எண்ணிக்கையில் மிக உயர்ந்த வர்க்கத்தினரின் மகன்கள் மட்டுமே இங்கு கல்விகற்க முடியுமாம்.

டச்சுக்காரர்களின் உள்ளார்ந்த பழமைவாதம் இந்த விஷயத்தில் உடனடியாக வெளிப்படுகிறது. அதிகமான மக்கள் டச்சு மொழியைக் கற்றுக்கொள்வதை அவர்கள் கடுமையாக எதிர்க்கிறார்கள் என்று கூறப்படுகிறது. மக்கள், டச்சுக்காரர்களைக் காட்டிலும் அதிகம் கற்றவர்களாக மாறிவிடுவார்களாம். ஐரோப்பிய மொழிகளில் டச்சு மட்டுமே இங்கு கற்றுத்தரப்படுகிறது.

பள்ளியின் இயக்குநர் என்னை ஹோட்டலுக்கு வந்து சந்தித்து, பள்ளிக்கு அழைத்துச் சென்றார், அங்கு தலைமையாசிரியர் என்னை வரவேற்றார். அனைத்து வகுப்புகளையும் எனக்குச் சுற்றிக் காட்டினார். சிறுவர்கள் பல்வேறு பாடங்களைப் படித்துக் கொண்டிருந்தனர். மாணவர்களின் வாசித்தல் வகுப்பு ஒன்றைப் பார்க்க வாய்ப்புக் கிடைத்தது; குரல்வளையிலிருந்து எழும் டச்சு மொழியின் ஒலிப்புகளை அவர்கள் முயன்றது எனக்கு வேடிக்கையாக இருந்தது. அவர்களது நாட்டின் மொழி மிகவும் மென்மையாக, இசையைப் போன்றதல்லவா? எனவே, அம்மாணவர்களுக்கு டச்சு உச்சரிப்பு மிகக் கடினமாக இருந்திருக்க வேண்டும்.

சிறுவர்கள் பலரும் சுல்தான்களின் மற்றும் அந்நாட்டுப் பிரபு வம்சத்தைச் சேர்ந்த உயர் பொறுப்பில் இருப்பவர்களின் மகன்கள். மாணவர்கள் அனைவரும் அவர்களது வழக்கமான உடையான சரோங் மற்றும் குறுஞ்சட்டை (ஜாக்கெட்) அணிந்திருந்தனர். ஹூக்களும், காலுறைகளும் அணிந்திருக்கவில்லை. இந்த இளம் பிரபுக்களும், நாட்டின் பொதுமக்களும், ஐரோப்பியத் தேசத்தின் சிவில் ஆடைகள் அணிவது தடைசெய்யப்பட்டிருப்பதும் வேடிக்கையாக இருந்தது.

எனினும், ஐரோப்பியர்களுக்கும் இந்நாட்டவர்க்கும் பிறந்த கலப்பினத்தவர்களுக்கு, உடையணிவதைப் பொறுத்தவரை ஐரோப்பிய அந்தஸ்து வெளிப்படையாக அளிக்கப்படுகிறது. ஆண்களின் தலைமுடி எப்போதும் வெட்டப்படுவதில்லை என்பது கவனிக்கவேண்டிய ஒன்று. ஒன்றுதிரட்டப்பட்டு தலையின் பின்புறம் கொண்டைபோல் முடியப்படுகிறது. தலைமுடி ஏன் வெட்டப்படுவதில்லை என்று கேட்டதற்கு, ’அடாத்’ அதாவது பழக்கம் என்று பதில் வந்தது.

சிறுவர்களது கையெழுத்து எப்படி இருக்கும் என்று கேட்டேன். எழுத்துகள் சுத்தமான மற்றும் எளிமையான அரபு மொழியில் இருந்தன. மலாய் மொழியின் எழுத்தை இது குறிக்கிறது. ஆனால், ஜாவானிய மொழியின் எழுத்துகள் முற்றிலும் வேறுபட்டவை. என்னால் அவற்றை அடையாளம் காண முடியவில்லை. மாணவர்கள் படித்துக் கொண்டிருந்த மற்ற பாடங்கள் பற்றி குறிப்பாகச் சொல்வதற்கு எதுவும் இல்லை. எண் கணிதம், வாசித்தல், எழுதுதல், புவியியல், போன்ற வழக்கமான பாடங்கள்தாம். இந்தப் புவியியல் ஆய்வுப் பாடம் முக்கியமாக ஹாலந்து மற்றும் ஜாவாவில் மட்டுமே சொல்லித் தரப்படுகிறது.
பள்ளி வளாகத்தைச் சுற்றிப் பார்த்தபின், மாணவர்களின் ‘டார்மிட்டரிகளைப்’ பார்த்தேன். சந்தேகத்திற்கு இடமின்றி நல்ல வசதியுடன், ஐரோப்பியப் பாணியிலான அறைகலன்களுடன் இருந்தன. ஓர் அறையில் இரண்டு சிறுவர்கள் தங்குகின்றனர். அங்கேயே அவர்கள் உணவும் சாப்பிடுகின்றனர். அவர்களுக்குப் பழக்கமான முறையில் பிரத்தியேகமாக தயார் செய்யப்பட்ட உணவு. பள்ளி முதல்வர் அருகில் வந்ததும், சிறுவர்கள் அவர் முன் முழந்தாளிட்டு வணங்கினர்; உயர்ந்தவருக்கு அவர்கள் மரியாதை செலுத்தும் முறை அது.

0

ஒரு மணிக்கு அங்கிருந்து புறப்பட்டோம். அசம்பாவிதம் ஏதுமற்ற பயணத்திற்குப் பின் மாலை ஏழு மணிக்கு மாவோஸை அடைந்தோம். தங்குவதற்கு வசதியான பங்களா கிடைத்தது. மாவோஸ் அரசாங்கத்தின் தங்கும் விடுதி; அல்லது, ஜாவாவில் அழைக்கப்படுவதுபோல், ‘பாஸக்ரஹன்’ (passagrahn). ஜாவாவில் ரயில்கள் பகலில் மட்டுமே இயக்கப்படுகின்றன என்பதால், இத்தகைய பயணியர் பங்களாக்கள் அவசியம்.

ஜாகர்த்தாவுக்கு பிற்பகலில் போய்ச் சேர்ந்தோம்; இந்தப் பெயர் அநேகமாக யோக்கியகர்த்தா என்ற சம்ஸ்கிருதச் சொல்லிலிருந்து பெறப்பட்டிருக்கலாம். ஹோட்டல் மதாரம் என்ற இடத்தில் தங்கினோம். நகரம் மிகவும் தாழ்வான இடத்தில் இருந்தது. அத்துடன் சில நாட்களாக மழையும் பெய்யவில்லை. அதனால் கடும் வெப்பமாக இருந்தது.

‘பங்கா’ (விசிறி) இல்லாமல் போனது வருத்தமான விஷயம்தான். ஆனால், மின் விசிறி வசதி இருக்கும் படேவியா நகரத்தைத் தவிர்த்து, அந்த நாட்டில் எந்த இடத்திலும் நான் பங்காவைப் பார்க்கவில்லை. ஹோட்டலில் மொழிப் பிரச்சனை மிகவும் தீவிரமாக இருந்தது; ஏனெனில் பணிபுரிபவர் எவருக்கும் ஆங்கிலம், பிரெஞ்சு அல்லது ஜெர்மன் என்று எந்த மொழியும் தெரியவில்லை.

ஹோட்டலின் ஐரோப்பிய மேலாளரால் எங்களது தேவைகளைச் சரியாக விளக்க முடியவில்லை. இரவு உணவுக்கு ஆட்டிறைச்சி கேட்டோம். யாருக்கும் புரியவில்லை. இறுதியில் எங்களில் ஒருவர் செம்மறி ஆடு கத்துவதைப் போல் சப்தம் எழுப்பி எங்கள் தேவையைத் தெரிவித்தோம். அதைக் கேட்ட புத்திசாலித்தனம் மிகுந்த மேலாளர், தாமதம் செய்யாமல் ஆட்டிறைச்சியைக் கொண்டு வரச் செய்தார்.

அங்குப் பேசப்படும் பல சொற்கள் நாம் இங்கு பயன்படுத்துபவை என்பது விந்தையானது: எடுத்துக்காட்டாக, ‘ரொட்டி’, ‘மிர்ச்சா’ (மிளகு), ஆகியன இரு மொழிகளிலும் உள்ளன. சந்தேகமின்றி மேலும் பல ஒற்றுமைகளும் காணப்படுகின்றன. அதுமட்டுமின்றி ஜாவானிய மொழியின் பல சொற்கள் சம்ஸ்கிருதத்திலிருந்தும் அரேபிய மொழியிலிருந்தும் பெறப்பட்டவையாம். ஆகவே, துல்லியமாக அவை ஹிந்துஸ்தானி சொற்கள் போலவே உள்ளன.

ஹிந்துஸ்தானியில் ராஜஸ்தான் அல்லது இளவரசர்களின் நிலம் என்று அழைக்கப்படும் ’வர்ஸ்டன்லேண்ட்’ என்று அழைக்கப்படுகிற நிலத்தில் நாங்கள் நின்றிருந்தோம். காரணம், அந்த இடம் ஜாகர்ட்டா என்ற சுல்தானின் வசிப்பிடமாக இருந்ததாம். அருகில் சோலோகர்த்தா மாநிலமும் இருக்கிறது. ஜாகர்த்தாவின் சுல்தான் அந்தப் பகுதியை டச்சு அரசாங்கத்திற்கு குத்தகைக்கு கொடுத்துள்ளார். டச்சுப் பிரதிநிதியின் தலைமையகமாகவும், டச்சு காலனியாகவும் இந்த இடம் இருக்கிறது. அந்த ‘ரெசிடென்சி’ நகரத்தின் சிறந்ததொரு இடத்தில், கிராட்டோன் என்று அழைக்கப்படும் சுல்தான் அரண்மனையின் அகழிக்கு எதிரே அமைந்துள்ளது.

டச்சுக்காரர்களின் வீடுகள் மிகவும் சொகுசாகத் தோன்றின; அடர்த்தியான, அகலமான மரங்கள் அடர்ந்த அவென்யூக்களின் எதிரில் அமைந்திருந்தன. உலகின் அந்தப் பகுதியின் வணிகர்கள் நிச்சயம் துணிவும் சுறுசுறுப்பும் மிக்கவர்கள். ஜாகர்த்தா போன்ற ஒதுங்கி உள்நாட்டில் இருக்கும் நகரத்திலும் சிறந்த கடைகள் இருந்தன, வளமாகத் தெரிந்தன. முடிதிருத்தும் கடை நடத்தும் ஒரு பிரெஞ்சுக்காரர் அனைத்து நவீன உபகரணங்களுடன் தொழில் நடத்துகிறார். ஏனைய கடைகளும் உயர் தரமானதாகவே இருந்தன.

ஜாவாவின் பிற பகுதிகளைக் காட்டிலும் அதிக அளவு இங்கே பூர்வீக மனிதர்களின் நடமாட்டம் காணப்படுகிறது. ஒருவேளை, பூர்வீக இனத்தைச் சேர்ந்த ஆட்சியாளரின் அரண்மனை இங்கு இருப்பது ஒரு காரணமாக இருக்கலாம். மக்கள் பயன்படுத்தும் குடையின் அளவு, நிறம் அல்லது அதன் வகை ஆகியவற்றின் அடிப்படையில் மனிதர்களின் அந்தஸ்தில் இருக்கும் வேறுபாட்டை ஒருவர் கவனிக்க முடியும். வண்டிகளை ஓட்டும் நபர்களின் நிலையும், அவர்கள் வைத்திருக்கும் குடையின் அளவு அல்லது வகையின் அடிப்படையில் குறிக்கப்படுகிறது. குடை ஒவ்வொன்றும் வெவ்வேறு முக்கியத்துவம் கொண்டிருக்கிறது.

0

உலகப் புகழ்பெற்ற போரோபோடோயர் (இன்றைய போரோபுடூர்) கோயிலுக்குச் செல்ல 10 ஆம் தேதி சீக்கிரமாகவே புறப்பட்டோம். ஒவ்வொரு ஏழு மைல் தொலைவிலும் நாங்கள் குதிரைகள் மாற்றிக்கொண்டோம். எங்களுடையது ஒரே நேரத்தில் நான்கு குதிரைகள் இழுக்கும் வண்டி; எனினும் அந்த இடத்தை அடைய எங்களுக்குப் பயணம் மூன்றரை மணிநேரம் ஆனது. சாலை நன்றாகவும் அகலமாகவும் இருந்தது; சாலையின் ஒருபுறம் நீராவியால் ஓடும் டிராம்வே இருந்தது. அந்த டிராம் வண்டியுடன் கணிசமான தூரம் இணையாகப் பயணித்தது மகிழ்ச்சியான நல்லதொரு அனுபவம்.

நீராவி டிராம்வே அந்த நாட்டில் பிரபலமாக உள்ளது. வெவ்வேறு இடங்களில் அடிக்கடி பார்க்க முடிகிற ஒன்று. முக்கியமான நகரங்கள் மற்றும் கிராமங்களில் ஊடாக செல்லும் இந்த டிராம்வேகள், அப்பகுதிகளில் வசிப்போருக்கு பெரும் வசதியாக இருக்கின்றன. பயண வழியில் ஓர் ஓய்விடத்திற்கு, திறந்த சந்தைக்கு வந்துசேர்ந்தோம். பார்க்கத் தகுந்த இடமாகத் தோன்றியதால் அந்த இடத்தில் இறங்கினோம்.

சுற்றியுள்ள கிராமங்களிலிருந்து கிராமவாசிகள் விளைபொருட்களைச் சந்தைக்குக் கொண்டு வருகின்றனர். பல்வேறு பொருட்களை விற்பனைக்கு வைக்கின்றனர். ஆடைகள், பழங்கள், காய்கறிகள், அனைத்து வகையான வீட்டு உபயோகப் பொருட்கள், வீட்டுக்குத் தேவையான பொருட்கள் என்று பலதரப்பட்ட பொருட்கள் விற்பனைக்கு இருந்தன. சிறந்த தரமான பழங்கள் ஏராளமாக சந்தையில் விற்பனைக்கு இருந்தன.

ஜாவாவுக்கு நான் செல்லும் வரையிலும், இவ்வளவு கச்சிதமான சுவையுடன் மங்குஸ்தான் பழத்தை ருசித்ததில்லை. அதற்கான வாய்ப்புகள் அங்கு எனக்கு அதிகம் கிடைத்தன. அவற்றை நான் விட்டுவிடவில்லை. ஆர்வமூட்டிய மற்றொன்று துரியன் பழம். அதை முயன்று பார்க்க தீவிரமாக ஆசைப்பட்டேன். ஆனால், பழத்தின் வாசனை மிகவும் வெறுக்கத்தக்கதாக இருந்தது. போதுமான தைரியம் எனக்கு வரவில்லை. பழத்தின் வாசனை மிகவும் சக்தி வாய்ந்தது. எந்த அளவுக்கு என்றால், ஒரு சில நிமிடங்கள் ஓர் அறையில் அதை வைத்திருந்தால், சிறிது நேரத்தில் அந்த இடம் கிட்டத்தட்ட வசிக்க முடியாத இடமாகிவிடும். அந்த வாசனையின் வெறுப்பை வென்றவர்கள், சுவைத்துவிட்டு மிகுந்த சுவையான பழம் என்கிறார்கள்.

நான்கு மணி நேர அலுப்பூட்டும் பயணத்தின் முடிவில், எங்கள் கண்முன்னால், திடீரென்று தோன்றிய அந்த அற்புதமான கோவிலின் வடிவம் வியப்பைத் தந்தது. கோவிலின் அளவும் பிரமாண்டமும் எங்களைத் திகைப்பில் ஆழ்த்தின. ஆனால், அந்தக் கட்டடம் இப்போது அழிந்து கொண்டிருக்கும் நிலையில் இருப்பது பரிதாபமானது. ஒரு காலத்தில் அந்த இடம் ஓர் அற்புதமான கோவில் வளாகமாக இருந்திருக்க வேண்டும் என்று உணர்வதற்குத் தெளிவான பார்வை தேவை.

அருகில் சென்றதும் அந்த வளாகம் ஓர் ஐந்நூறு கெஜம் சதுர பரப்பளவைக் கொண்டிருக்கும் என்று என்னால் யூகிக்க முடிந்தது; கட்டடக்கலை பாணியை ஓரளவுக்கு, மேலோட்டமாகப் பார்த்ததுமே, எவ்விதச் சந்தேகமுமின்றி அற்புதமான இந்த இடம் எவ்வாறு உருவாகியிருக்கும் என்பதும், அதில் தெரிந்த இந்து கட்டடக்கலை பள்ளியின் தாக்கமும் மனத்தில் எழுந்தன. கெடுவாய்ப்பாக கோவில் எப்போது கட்டப்பட்டிருக்கும் என்பதை வெளிப்படுத்தும் பதிவுகள் எதுவும் இல்லை. ஆனால், பழங்காலத்துப் புத்த மன்னர் ஒருவர் சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் கட்டியிருக்கலாம் என்று பாரம்பரியச் செய்திகள் கூறுகின்றன.

கோவிலுக்குள்ளிருந்தோ அல்லது அதைச் சுற்றியிருக்கும் இடத்திலிருந்தோ தோண்டி எடுக்கப்பட்ட கல்வெட்டு ஒன்றில் ‘ஸ்ரீ மகாராஜா மாதரம்’ என்று சம்ஸ்கிருத எழுத்துகள் பொறிக்கப்பட்டிருப்பது பாரம்பரியச் செய்திகளுக்கு சான்றளிக்கின்றன. ‘மகாராஜா மாதரம்’ இதைக் கட்டியிருக்கலாம் அல்லது அவரது ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டிருக்கலாம் என்பதை அது சுட்டிக் காட்டுகிறது.

நூற்றாண்டுகளாக இந்தக் கோவில் உலகத்திற்கு முற்றிலும் தெரியாமலே இருந்திருக்கிறது. கடந்த ஐம்பது ஆண்டுகளில்தான் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள், கடந்தகாலத்துடன் தொடர்பை ஏற்படுத்தும் இந்தக் கோவிலின் மதிப்பைக் கண்டறிந்தனர். மதிப்புமிக்க இந்த நினைவுச்சின்னத்தை அகழ்ந்தெடுக்கும் செயலில் இறங்குவதற்கு டச்சு அரசாங்கத்திற்குத் தூண்டுதல் அளித்து, வலியுறுத்தியுள்ளனர். விழித்துக் கொண்ட டச்சு அரசாங்கம் இந்த விஷயத்தில் கடமையை அறிந்து செயலில் இறங்கியது. அதன் எதிர்காலத்தைக் கணக்கில் கொண்டு இந்த இடத்தின் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பில் முனைந்துள்ளது; இதுபோன்ற மற்ற நினைவு சின்னங்களுக்கும் அது உறுதியளித்துள்ளது.

இந்தக் கோவில் ஒரு சிறு குன்றின் மீது அமைந்துள்ளது. அதன் உச்சியை அடைவதற்குப் படிகள் அமைக்கப்பட்டுள்ளன. முதல் தளத்தில் நடந்தபடி சுற்றிப் பார்க்கையில் கோவிலின் பரப்பளவு எவ்வளவு என்பது குறித்த அறிவு நமக்குக் கிடைக்கும். எங்களுக்குச் சுற்றிப்பார்க்க ஏறத்தாழ ஒரு மணிநேரம் ஆயிற்று. வேறு எங்கும் காணப்படும் கற்சிற்பங்களைக் காட்டிலும் சிறந்த சிற்பங்களை இங்கு நாங்கள் பார்த்தோம். அழகான இந்தச் சிற்பங்கள், இந்து இதிகாசமான மகாபாரதத்தின் கவிதைகளின் சம்பவங்களை விரிவாக விளக்குகின்றன என்று அசாதாரண நம்பகத்தன்மையுடன் கூறமுடியும்.

போரோபோடோயர் (இன்றைய போரோபுடூர்) கோயில்
போரோபோடோயர் (இன்றைய போரோபுடூர்) கோயில்

அந்த இதிகாச விவரங்கள் வியக்கத்தக்க வகையில் வடிக்கப்பட்டுள்ளன. நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக இயற்கையின் பாதிப்புகள் மற்றும் புறக்கணிப்புக்கும் பிறகும், கோவிலின் பெரும்பான்மை கற்சிற்பங்கள் சேதமடையாமல் மிகச் சிறந்த நிலையில் பாதுகாப்புடன் இருப்பது எங்களை வியப்பிலாழ்த்தியது. ஒருவர் மகாபாரதத்தைப் படித்திருந்தால், சிற்பங்களில் காணப்படும் கதையைப் பின்பற்றுவது கடினம் அல்ல. அந்த இதிகாசத்தின் முக்கியமான வரலாற்றுப் பகுதிகள் பலவும் இங்கு சித்தரிக்கப்பட்டிருந்தன. குறிப்பாக போர்க்காட்சிகள் மிகச் சிறப்பாக செதுக்கப்பட்டுள்ளன.

படையின் முன்வரிசையில் அரசன் ஒருவன் தனது கம்பீரமான யானையின் மீது பகட்டாக சென்று கொண்டிருக்கிறான்; அவனைப் பின்தொடர்ந்து வீரர்கள் சிலர் நடந்தும், சிலர் ரதங்களிலும் சென்றனர். அனைவரும் ஈட்டிகள், வாட்கள், வில்லும் அம்புகளும், வேறு பல ஆயுதங்களும் ஏந்தியிருந்தனர். சிற்பங்கள், நம் கற்பனையை நிச்சயம் கவர்ந்தன. உடைகள், ஆயுதங்கள், விலங்குகள், தேர்கள் போன்ற அனைத்தும் நுணுக்கமான விவரங்களுடன் அசாதாரண ஆற்றலுடன் வடிக்கப்பட்டு நிஜத்தில் பார்ப்பது போன்ற உணர்வை நமக்கு ஏற்படுத்தின.

அவர்களது நுண்கலைகளின் நிலையையும் தரத்தையும் வைத்து ஒரு தேசத்தின் அல்லது மக்களின் நாகரிகம் எந்த அளவில் இருந்தது என்பதை மதிப்பிட முடியும் என்றால் கோவில் கட்டப்பட்டிருக்கக்கூடிய அந்தக் காலகட்டத்தில் இந்திய மக்கள் நாகரிகத்தில் மிகவும் முன்னேறியவர்களாக இருந்திருக்க வேண்டும்.

நான் விவரித்துக் கொண்டிருக்கும் இந்தப் படைப்பை மனத்தில் கருக்கொள்வதற்குத் தேவையான கலைப்பார்வையை எதுவும் விஞ்சமுடியாது. அந்தக் காலகட்டத்தில் இருந்திருக்கக்கூடிய வேலைத்திறமையை, செய்துமுடிக்கத் தேவையான திறனைக் காட்டிலும் சிறந்த அல்லது இணையான ஒன்றை நினைத்துப் பார்ப்பது கடினம். கோயில் கட்டுமானப் பாணியும், அதன் தொடர்பான வேறு விஷயங்களும் சந்தேகத்திற்கு இடமின்றி ஒன்றைச் சுட்டிக்காட்டுகின்றன: அதற்குத் தேவையான மனிதர்கள் நிச்சயமாக இந்தியாவிலிருந்து இங்கு வரவழைக்கப்பட்டு வேலையில் அமர்த்தப்பட்டிருக்க வேண்டும்.

அன்றைய காலகட்டத்தின் சாதனைகளையும், வேலையைச் செய்து முடிப்பதற்கான திறன் மக்களிடம் உள்ளார்ந்து இருந்தது என்பதையும் இப்போது நினைத்துப் பார்க்கையில், கலைத்தன்மை சிறிதும் இல்லாத இன்றைய உருவாக்கங்களுடன் ஒப்பிடும்போது வருத்தமாக இருக்கிறது. இத்தகைய மதிப்புமிக்க கலை நம்மிடமிருந்து தொலைந்து போனது புதிராகவும் மிகவும் வருத்தமாகவும் இருக்கிறது.

கோவிலின் முதல் அடுக்கில் அல்லது முதல் தளத்தில் நான் பார்க்க முடிந்த அற்புதங்களை மட்டுமே இங்கு விவரித்துள்ளேன். ஆனால், மற்றவற்றிற்க்கும் இவை பொருந்தும். (இது போல் மொத்தம் நான்கு தளங்கள் உள்ளன). ஓர் அடுக்கின் மேல் மற்றொன்று என்பதாக அமைந்துள்ளன; ஆனால், ஏறுவதற்குக் கடினமான படிகள் மூலம்தான் அங்கு செல்லமுடியும். நான் விவரித்த முதல் அடுக்கைப் போல், மற்ற அடுக்குகளும், பாணியிலும் சிறப்பியல்பிலும் ஒரே மாதிரியானவை. அனைத்திற்கும் அப்பால், ஒரு காலத்தில், கோபுரம் போன்ற அமைப்பு ஒன்று இருந்திருக்க வேண்டும். ஏனெனில், கட்டுமானத்தில் அந்தக் கோபுரத்தின் அடித்தளம் இருந்திருக்கக் கூடிய இடத்தை எளிதில் அறியமுடிந்தது.

கோவிலின் உச்சியிலிருந்து, சுற்றியிருந்த மலைகளின், பிரதேசத்தின் மனத்தை மயக்கும் காட்சிகளைப் பார்க்கமுடிந்தது. பறவைகளின் ‘ட்வீட்’ சத்தங்களும், காற்றின் பெருமூச்சு மட்டுமே உடைத்த அந்த நிசப்தமான சூழலின் நடுவில் அங்கே நின்றபடி அந்த மகத்தான கடந்தகாலத்தைக் கற்பனை செய்து பார்த்தேன். அதுபோன்ற காலகட்டம் அதன் மகிமைகளுடன் நிச்சயம் திரும்பி வராது.
கோவிலுக்கு அருகில் இருந்த சிறிய ஓய்வு விடுதியில் மதிய உணவு சாப்பிட்டோம். அதன்பின் திரும்பும் பயணத்தைத் தொடங்கினோம்.

(தொடரும்)

___________
ஜகத்ஜித் சிங் எழுதிய “My Travels in China, Japan and Java, 1903” நூலின்  தமிழாக்கம்

பகிர:
அக்களூர் இரவி

அக்களூர் இரவி

சொந்த ஊர் மாயவரம். தொலைத் தொடர்புத் துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். 'இந்தியா என்கிற கருத்தாக்கம்', ‘காந்தியும் பகத் சிங்கும்’, ‘அரசியல் சிந்தனையாளர் புத்தர்’ உள்ளிட்ட நூல்களை மொழிபெயர்த்திருக்கிறார். திசையெட்டும் மொழியாக்க விருது பெற்றவர். தொடர்புக்கு : thendralaham@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *