Skip to content
Home » மகாராஜாவின் பயணங்கள் #21 – சோலோகர்த்தா சுல்தானுடன் ஒரு சந்திப்பு

மகாராஜாவின் பயணங்கள் #21 – சோலோகர்த்தா சுல்தானுடன் ஒரு சந்திப்பு

சோலோகர்த்தா அரண்மனை

உடல் முழுவதும் நனைந்தபடியான பயணம்; வழி முழுவதும் மழை கொட்டித் தீர்த்தது. மாலை ஆறு மணிக்கு எங்கள் ஹோட்டலை அடைந்தோம். ஜாகர்த்தா சுல்தான் என்னை அழைத்துச் செல்ல அனுப்பிய அரசு சாரட் எங்கள் இடத்திற்கு வருவதற்குமுன், விருந்து உடைக்கு மாறுவதற்கு எனக்குச் சிறிது நேரம் கிடைத்தது. வண்டியில் டச்சு ரெசிடென்சிக்குச் சென்றேன். பிரதிநிதியும், அவரது பணியாளர்களும் வாயிலில் என்னை வரவேற்றனர். ஆங்கிலத்தில் கொஞ்சம் உரையாடினோம். முன்னேற்பாட்டின்படி, அங்கு சென்றவுடன் சுல்தான் சார்பாக என்னை வரவேற்கத் தயாராக இருப்பதற்காக, எனக்கு முன்னதாக சுல்தானின் அரண்மனைக்குச் சென்றார். மகத்தான மதிள்களால் சூழப்பட்டிருந்த வளாகத்தில் அரண்மனை இருக்கிறது. அதில் சுமார் 15,000 பேர் வசித்தனர்.

அரண்மனையின் பிரதான வாயிலில் வண்டியிலிருந்து இறங்கிய என்னை டச்சுப் பிரதிநிதியும் அவரது பணியாளர்களும் சுல்தானின் அமைச்சர்களும் வரவேற்றனர். பிரதான முற்றத்தின் வாயிலில் இருந்து அரண்மனையை நோக்கி நாங்கள் சென்றபோது, சுல்தானின் மகன்கள் என்னைச் சந்தித்தனர். அவர்கள் டச்சு ராணுவச் சீருடைகளும் சிறிய தலைப்பாகையும் அணிந்திருந்தனர். அங்கு சுல்தானின் படைவீரர்கள் எனக்கு மரியாதை அளிக்கும் விதமாக அணிவகுப்பு ஒன்றை நடத்தினர். (டெல்லி தர்பாரின் போது எனது சகோதரனின் பிரதான மெய்க்காப்பாளர்களை இவர்கள் எனக்கு நினைவூட்டினார்). இசைக்குழுவினர் டச்சுத் தேசிய கீதத்தை இசைத்தபோது வீரர்கள் ஆயுதங்களை நீட்டி மரியாதை அளித்தனர்.

அரண்மனைக்குள் சற்று தூரம் சென்றதும், ஒருவித பெரிய திறந்தவெளி அரங்கை அல்லது தர்பார் மண்டபத்தை அடைந்தோம். அங்கு சுல்தான் அமர்ந்திருந்தார். டச்சுப் பிரதிநிதி மரியாதை நிமித்தம் தனது தலைத்தொப்பியை நீக்கி, என் பெயரைச் சொல்லி சுல்தானுக்கு என்னை அறிமுகம் செய்து வைத்ததும், அவர் என்னை வரவேற்றார்.

பின்னர் சுல்தான் டச்சுப் பிரதிநிதியிடம் கைகுலுக்கினார். இப்படியாக நாங்கள் அந்த மண்டபத்திற்குள் நுழைந்தோம். அங்கு மூன்று அரசு இருக்கைகள் இருந்தன. அவற்றில் அமரவைக்கப்பட்டோம். சுல்தானின் மகன்களுக்கும் பிரதிநிதியின் பணியாளர்களுக்கும் இருக்கைகள் வழங்கப்பட்டன. ஆனால், சுல்தானின் ஊழியர்கள் சற்று அருகில் தரையில்தான் அமர்ந்தனர்.

மதிப்பு மிக்க சுல்தானுக்கு, டச்சு ராணுவத்தில் முக்கியப் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது. ராணுவ ஜெனரலின் சீருடையில் வந்த அவர், மேலங்கியில் பல அரசுச் சின்னங்களை அணிந்திருந்தார். நடுத்தர வயதான அவர் இனிமையும் கண்ணியமான நடத்தையும் கொண்டவர். ஆனால் உணர்வுகளை வெளிக்காட்டாதவராக தோன்றினார். அவருக்கு எந்த ஐரோப்பிய மொழியும் தெரியவில்லை. எனவே, நான் அவரிடம் பேசியதையும் அல்லது அவர் எனக்குக் கூறிய பதிலையும் டச்சுப் பிரதிநிதிதான் மொழிபெயர்க்க வேண்டியதாயிற்று.

வழக்கமான மரியாதை நிமித்த, கண்ணியமான விசாரிப்புகளைப் பரிமாறிக் கொண்டோம். அதன்பின், சிற்றுண்டிகளும் குளிர்பானங்களும் கொடுத்து உபசரித்தார். களைப்பும் சோர்வும் அதிகமாக இருந்த எனக்கு அங்கிருந்து புறப்பட்டு, ஓய்விற்காக அறைக்குத் திரும்பியதில் பெரும் மகிழ்ச்சி.

சோலோகர்த்தா பயணம்

மறுநாள் ஜாகர்த்தாவிலிருந்து ஜாவாவின் மிக முக்கியமான சுல்தானின் தலைநகர் சோலோகர்த்தாவுக்கு (சுராகர்த்தா) புறப்பட்டுச் சென்றோம். ஒரு மணி நேர பயணத்திற்குப்பின் செல்ல வேண்டிய இடத்தை அடைந்தோம். அங்கு ஹோட்டல் ஸ்லீயரில் அறை எடுத்துத் தங்கினோம். சோலோகர்த்தா ஓர் உயர் முக்கியத்துவம் வாய்ந்த நகரம். அத்துடன் இந்நகரம் மற்றொரு டச்சுப் பிரதிநிதியின் இடமும் ஆகும்.

பிற்பகலில் நகரத்தைச் சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தபோது, பெரிய மாளிகை ஒன்றைப் பார்த்தோம். விசாரித்தபோது, அது சுல்தானுடைய மைத்துனரின் மாளிகை என்றனர். அவரது பெயர் மான்குண்டுகுரு அதிபதி. உரிய அனுமதி பெற்று, அந்த இடத்தைப் பார்க்க உள்ளே சென்றோம். அந்நாட்டு வழக்கத்தின்படி, கட்டடத்தினுள் அதிகம் சுவர்கள் இல்லை. அனைத்து அறைகளும் பெரியதாகவும் உயரமாகவும் இருந்தன. தரையில் பளிங்குக் கற்கள் பாவப்பட்டிருந்தன. கீழைத் தேசத்தின் பாணியில் அலங்கரிக்கப்பட்டு, அறைகலன்கள் போடப்பட்டிருந்தன.

மாளிகை பொதுவாக ஒரு பெரிய பெவிலியன் போலத்தான் தோன்றியது. பெரியதொரு நாற்கரமான இடத்தின் நடுவில் அமைந்திருந்தது. அதை உயர்ந்த சுவர்கள் சூழ்ந்திருந்தன. மன்குண்டுகுரு அதிபதி டச்சுக்காரர்களுக்கு கீழ்ப்படிந்து நடக்கும் மிகவும் வலிமையான, நன்கு படித்த இளவரசர் என்றார்கள். ஆனால், என்னால் குறைந்த நேரமே ஒதுக்க முடிந்தது என்பதால் அவரை அறிமுகப்படுத்திக் கொண்டு நட்பு ஏற்படுத்திக் கொள்ளும் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. அதை நான் மிகவும் விரும்பியிருப்பேன்.

என் கவனத்தை ஈர்த்த அடுத்த இடம் வெல்ல முடியாது என்பது போல் வலிமையான தோற்றம் கொண்ட கோட்டையாகும். சுல்தானின் அரண்மனைக்கு எதிரில் இருந்தது. கோட்டையின் உட்புறத்தில் துப்பாக்கி ஏந்திய டச்சுப் படையினர் நிறுத்தப்பட்டிருந்தனர். அதைப் பார்க்க ஆர்வமாக இருந்தேன். ஆனால், விதிமுறைகள் மீறப்படுவதாகக் கருதப்படும் என்று கூறி எனக்கு அனுமதி வழங்கப்படவில்லை.

ஜாவாவில் டச்சுக்காரர்களின் கீழிருக்கும் சுல்தான்களுக்கும், இந்தியாவில் ஆங்கிலேயர்களின் கீழிருக்கும் ராஜாக்களுக்கும் இடையில் அதிகாரம் மற்றும் சலுகைகள் விஷயங்களில் இருக்கும் பெரும் வித்தியாசத்தை இந்த இடத்தில் குறிப்பிடுவது சரியாக இருக்கும். ஜாவாவில் தங்கியிருந்த குறுகிய காலத்தில், தனிப்பட்ட முறையில் இது போன்ற விஷயத்தில் ஒரு முடிவுக்கும் வருவது நிச்சயம் கடினமான ஒன்றுதான். ஆனால், எனக்குச் சொல்லப்பட்டவற்றிலிருந்து, (நான் பார்த்தவையும் அதை உறுதிப்படுத்தின), அதிகாரத்திலும் தனிப்பட்ட சுதந்திரத்திலும், ஜாவாவின் சுல்தான்களைக் காட்டிலும் இந்தியாவில் நாங்கள் பெருமளவுக்குச் சிறப்பாக இருக்கிறோம் என்ற முடிவுக்கு வந்தேன்.

ஜாவாவில் இருக்கும் பெரிய சுல்தான்கள் எவரும் படேவியாவைப் பார்த்ததில்லை என்பது வியப்பு ஏற்படுத்தும் தகவல். இந்தத் தகவலிலிருந்தும் எனது புரிதலிலிருந்தும் வருத்தம் தரும் முடிவுக்கு வரவேண்டிய கட்டயத்திற்குத் தள்ளப்பட்டேன். அதாவது, டச்சுக்காரர்களால் வெளிப்படையாக எல்லாவிதமான மரியாதைகளுடனும் விநயத்துடனும் நடத்தப்படும் இந்த அதிருஷ்டம் கெட்ட மனிதர்கள் அரசியல் கைதிகளைக் காட்டிலும் கொஞ்சம் மேலானவர்கள், அவ்வளவுதான்.

கடந்த காலங்களில் இந்தச் சுல்தான்கள் டச்சுக்காரர்களை எதிர்த்துத் தொடர்ந்து விடாப்பிடியாகப் போரிட்டனர். இறுதியில் அவர்களது எதிர்ப்பு முறியடிக்கப்பட்டது. தற்காப்புக்காகவும், மேலும் இதுபோன்ற கிளர்ச்சிகள் வெடிப்பதைத் தடுக்கவும், அத்தகைய சாத்தியங்கள் எப்போதும் எழாமல் தடுக்கும் வகையிலும், சுல்தான்களின் தொடர்ந்த இருப்பிற்கு இதுபோன்ற நிபந்தனைகளை டச்சுக்காரர்கள் விதித்தனர்.

இந்தச் சுல்தான்களிடம் வெளிப்படும் கீழ்த்திசை மனிதர்களின் பொதுவான இயல்பும் ஆர்வமூட்டும் ஒன்று.

தனிப்பட்ட முறையில் அவர்களிடையே பொறாமை நிலவுகிறது. மரியாதை நிமித்தமான வருகைகளையே தடுக்கும் அளவுக்கு அது அதிகமாக இருக்கிறது. கீழ்த்திசைப் பண்பு என்று சொல்லப்படும் அதைப் பெற்றிருக்கும் அந்த மனிதர்கள், கூடி இருப்பதால் கிடைக்கக்கூடிய நன்மைகள் அனைத்தையும் இழக்கிறார்கள். அவர்களது எதிரிகளுக்குச் சமமான வலிமையை இந்தக் கீழ்த்திசை மன்னர்கள் சுயக்கட்டுப்பாட்டுடன் பெற்றிருப்பதை வெளிப்படுத்தும் இடங்களில் வெளிநாட்டவர் என்றும் வெற்றி பெற்றதில்லை என்பதை அவர்கள் உணரவில்லை.

ஜாவாவில் இருக்கும் டச்சுக்காரர்கள் அந்த நாட்டின் இரு பெரும் சக்திவாய்ந்த சுல்தான்களுக்கு இடையில் நிலவும் பொறாமையை விரைந்து கவனித்துவிட்டனர். சொந்த நலனை உத்தேசித்து அவர்கள் இயல்பாகவே எதுவும் செய்யாமலிருந்தனர். இப்போது சுல்தான்களுக்கும் அவர்களுக்கிடையில் நட்புச் சூழலைக் கொண்டுவருவது தவிர்த்து எதையும் செய்வதில்லை.

இதுபோன்ற விஷயங்களைக் கவனிப்பதிலும், டச்சு ஆட்சியின் கீழ் ஜாவாவின் நிலைமைகளையும் இங்கு ஆங்கில ஆட்சியின் கீழ் இந்தியாவில் நிலவும் நிலைமைகளையும் ஒப்பீடு செய்து மனத்தளவில் குறிப்புகளை உருவாக்குவதில் எனக்கு ஆர்வம் இருந்தது. இதைப் போன்ற ஒத்ததன்மை நிலவும் மிகச் சிலவற்றில் நான் குறிப்பிடும் இந்த இரண்டு நாடுகளும் அடங்கும்.

ஆர்வமுள்ளவன் என்ற அளவில் என் அவா நிச்சயமாக, கிளர்ந்து எழுந்தது. அதனால், சில விசாரணைகளை மேற்கொண்டேன். அதன் விளைவாக சில தகவல்கள் எனக்குக் கிடைத்தன. சோலோகர்த்தாவின் வருமானம் ஆண்டுக்கு சுமார் 4,000,000 ஃப்ளோரின்கள் – இந்திய ரூபாய்.6,000,000. இது தவிர்த்து, இந்தியாவை ஆளும் அமைப்பிலிருந்து பொருளாதார அளவில் முற்றிலும் வேறுபட்டிருக்கும் டச்சு அரசாங்கத்திடமிருந்தும் மாதந்தோறும் சுல்தான் 70,000 ஃப்ளோரின்கள் மானியமாகப் பெறுகிறார்.

சோலோகர்த்தா சுல்தானின் ராணுவத்தில் முறையாக சேர்க்கப்படாதவர்கள் சுமார் 1,500 இருக்கிறார்கள். இந்தச் சொல் அவர்களுக்கு முழுமையாகப் பொருந்தக்கூடிய ஒன்றுதான். ஏனெனில், மிகப் பழங்காலத்திற்குச் சொந்தமான ஆயுதங்களை அவர்கள் ஏந்தியிருக்கிறார்கள்; இவை ஒரு சிப்பாயின் கைகளில் இருப்பதைக் காட்டிலும் அருங்காட்சியகம் ஒன்றில் இருப்பது ஆர்வம் ஊட்டக்கூடியதாக இருக்கும். சுல்தானின் மெய்க்காவலர்களாக டச்சு வீரர்கள் இருக்கின்றனர்; வலிமையான வீரர்கள் அறுபது பேர்.

சுல்தானின் அரசவையுடன் இணைந்து ஓய்வுபெற்ற டச்சு கேப்டன் ஒருவரின் தலைமையின் கீழ் செயல்படுகிறார்கள். மெய்க்காவல் படையின் ஒரு பகுதி எப்போதும் சுல்தானுடனேயே இருக்கும்; அவர் போகுமிடமெல்லாம் உடன் செல்லும். மற்ற வீரர்களுடன், இவர்கள் மேலதிகமானவர்கள். எனினும் உயர் அதிகார அமைப்பால் வழங்கப்படும் மரியாதை என்று மேலோட்டமாக இந்த மெய்க்காவலை எடுத்துக் கொண்டாலும், டச்சு அதிகார அமைப்பு, சுல்தான் அதிக நேரம் கண்காணிப்பு இல்லாமல் இருக்கக்கூடாது என்பதை விரும்புகிறது என்பது சகித்துக் கொள்ள வேண்டிய நிலையில் தெளிவான ஒன்றே!

சுல்தானின் அரண்மனையில் மொத்தமுள்ள பெண்களின் எண்ணிக்கை சுமார் 6,000 இருக்கும். இந்தப் பெரும் எண்ணிக்கையில் சுமார் நூறு அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் சுல்தானின் நேரடியான ஒப்புதல் பெற்றவர்கள். மற்றவர்கள், உறவினர்கள், அதிகாரிகளின் மனைவிகள், பணியாளர்கள் போன்றோர்.

குடிமக்கள் மீது இந்தச் சுல்தான்களுக்கு இருக்கும் அதிகாரங்களின் அளவு மற்றும் செயல்படுவதற்கான வாய்ப்புகள் எப்படி என்பதை மிகக் குறுகியகாலத்தில் தெரிந்து உறுதிப்படுத்திக் கொள்வது கடினமானது. ஆனால், அவர்களது பிரதேசங்களில் வசிக்கும் மக்கள் மீது அவர்களுக்கு அதிகாரம் இருக்கிறதென எனக்குத் தெரிவிக்கப்பட்டது. ஆனால், அனைத்து முக்கியமான விஷயங்களிலும் அவர்கள் டச்சுப் பிரதிநிதியைக் கலந்தாலோசிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்தப் பிரதிநிதி ‘மூத்த சகோதரர்’ என்று குறிப்பிடப்படுகிறார்.

சோலோகர்த்தா சுல்தானின் வரவேற்பு நிகழ்ச்சி

என்னைக் கௌரவிக்கும் வகையில் அன்று மாலை சோலோகர்த்தா சுல்தான் (அவரது பதவியின் அதிகாரப்பூர்வ பெயர் சுசுஹ்னன்) பொழுதுபோக்கு நிகழ்வு ஒன்றை ஏற்பாடு செய்து அழைத்திருந்தார். கெடுவாய்ப்பாக அந்த நிகழ்வில் டச்சுப் பிரதிநிதி கலந்துகொள்ளவில்லை. ஆனால், அவரது மேலதிகாரியின் சார்பாக தலைமைச் செயலாளர் என்னை வரவேற்க வந்தார். சுல்தான் எனக்காக அனுப்பியிருந்த வண்டியில் அரண்மனைக்கு என்னுடன் வந்தார். டச்சுப் பிரதிநிதியின் அதிகாரிகள் பலரும், ரெஸிடென்ஸியைச் சேர்ந்த பெண்கள் சிலரும் அந்தப் பொழுதுபோக்கு நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.

சோலோகர்த்தா சுல்தான் எனக்கு அளித்த வரவேற்பு குறித்து சொல்லவேண்டும் என்றால், ஏற்கெனவே விவரித்தது போல், ஜாகர்த்தாவில் எனக்கு அளிக்கப்பட்டதுபோல் தான் இருந்தன. ஆனால், முக்கிய வித்தியாசம் ஒன்றைக் கூறவேண்டும். சோலோகர்த்தாவிற்கு இருக்கும் உயர் அந்தஸ்து காரணமாகவும், இங்கிருக்கும் அரசவை மேம்பட்ட கம்பீரத்துடன் இருப்பதன் காரணமாகவும் வரவேற்பு ஏற்பாடுகள் மிகவும் விரிவான அளவில் செய்யப்பட்டிருந்தன. எனினும், பின்பற்றப்பட்ட அரசமுறைச் சம்பிரதாயங்கள் இரண்டு நிகழ்வுகளிலும் ஒரே மாதிரியாகத்தான் இருந்தன.

அரண்மனையை அடைந்தவுடன் மதிப்பிற்குரிய சுல்தான் என்னை மிகவும் அன்புடன் வரவேற்றார். உடனடியாக என்னை மேடைக்கு வழிநடத்திச் சென்றார். மேடையில் அவரது மனைவி ஹெர் ஹைனஸ் ‘ராடோப்’ அல்லது சுல்தானா, இளவரசிகளுடனும் அரண்மனைப் பெண்களுடனும் நின்றுகொண்டு இருந்தார். என்னை அனைவரிடமும் முறையாக அறிமுகப்படுத்தினார். அறிமுகப்படலம் மிகவும் எளிமையாக நடந்தது. என்னை அன்பாக வரவேற்ற சுல்தான், தனது கையில் இன்னமும் என் கரத்தைப் பிடித்துக் கொண்டுதான் இருந்தார். அந்த நிலையிலேயே, அந்தப் பெண்மணிகளிடம் என்னைத் தனித்தனியாக அறிமுகப்படுத்தினார். அவர்களுக்கு, குனிந்து மரியாதை செலுத்தினேன்; பதிலுக்கு அவர்கள், என் கைகளை மெலிதாகப் பற்றிக் குலுக்கினர்.

பெண்கள் அணிந்திருந்த ஆடைகள் அவர்களது வர்க்கத்திற்கே உரியதாக புதுமையுடன் இருந்தன. இதைப்போன்ற ஒன்றை வேறு எந்த நாட்டிலும் பார்த்திருக்கவில்லை. பெண்களின் ஆடைகளை விவரிப்பதில் நான் அவ்வளவு திறமையானவன் அல்ல. ஜாவானிய இளவரசியின் தோற்றம் குறித்த யதார்த்தமான எண்ணத்தை இவை தருகின்றன. அவர்கள் சில நகைகள் மட்டுமே அணிந்திருந்தனர்; பெண்கள் (குறிப்பாக சுல்தானின் மகள்கள்) தனித்த கவர்ச்சியுடன், நேர்த்தியான தோற்றத்துடன் இருந்தனர்.

பெண்களின் இயக்கங்கள் ஓரளவுக்கு எந்திரத்தனமாகத்தான் இருந்தன. அவர்களது முகங்கள் பெருமளவு உணர்ச்சியை வெளிக்காட்டவில்லை. தோற்றத்திலும் நடந்து கொண்ட விதத்திலும் முற்றிலும் உற்சாகமற்றவர்களாய் காணப்பட்டனர். ஆனால், அவர்கள் கவர்ச்சிகரமான உடைகளை அணிந்திருந்தனர்; அழகான நேர்த்தியான கவுன்களில் மிகவும் வலுவற்றவர்களாகத் தோன்றினர். ஜாவானியப் பெண்கள் பல்வேறு வகையான வாசனைப் பொருட்களில் ஆர்வமுள்ளவர்கள். அத்துடன் ஒரேநேரத்தில் பல வகையான நறுமணப் பொருட்களைப் பயன்படுத்துவதும் அவர்களின் வழக்கம். இதனால், விவரிக்க முடியாத வாசனை சூழலில் உருவாகிறது.

கீழ்த்திசை நாட்டில் பல மலர்களின் வாசனைக்கு மத்தியில் சந்தனத்தின் ஆதிக்கம் வெளிப்படுவது போல் அது இருந்தது.

அறிமுகப் படலம் முடிந்தது. சுல்தான் மற்றும் சுல்தானாவுக்கு அருகில், மேடையின் முன் பகுதியில் போடப்பட்டிருந்த, விரிவான முறையில் தங்கமுலாம் பூசப்பட்ட நாற்காலிகளில் அமர்வதற்கு அழைக்கப்பட்டோம்.

எங்களுக்கு வலதுபுறத்தில் இளவரசிகளும், அவர்களுக்கு அடுத்து சுல்தான் குடும்பத்து ஆண்களும் அமர்ந்திருந்தனர். இடதுபுறத்தில் பிரதிநிதியின் அதிகாரிகளும் எனது பணியாளர்களும் அமர்ந்தனர். மேடைக்கு எதிரில் சற்றுத் தள்ளி சுல்தானின் அமைச்சர்களும் அரண்மனை அதிகாரிகள் பலரும் தரையில் அமர்ந்தனர். அனைவரும், பாரம்பரியமான விநோதமான தலைப்பாகை தரித்திருந்தனர். தனித்துவமான, கவர்ச்சிகரமான ஆடைகளையும் அணிந்திருந்தனர்.

நாங்கள் அமர்ந்திருந்த அரங்கு பெரிதாகவே இருந்தது. மிக அதிக எண்ணிக்கையில் மக்கள் அமரும் அளவுக்குப் பெரிதானது. அரங்கு பெரிதாக இருந்தாலும், முழுமையாக நிரம்பியிருந்தது. அதில் பெரும்பான்மை, அவரது குடும்பத்தைச் சேர்ந்த அரண்மனையைச் சேர்ந்த பெண்கள். இவர்கள் குறைவான, சுருக்கமான ஆடைகளை அணிந்திருந்தனர். இடுப்பில் சரோங், கைகளின் அடிப்பகுதி வரையிலும் மூடும் ஓர் இடுப்புப் பட்டை. இதனால் உடலின் மேற்பகுதி முழுவதும் திறந்தநிலையில் இருந்தது.

உடலை அதிகம் மூடிய ஆடையில் அவர்கள் தோன்றினால், அரசவை ஆசாரத்திற்கு எதிரானது என்று என்னிடம் கூறினார்கள். சுல்தான் குடும்பத்தைச் சேர்ந்த பெண்களுக்கு மட்டுமே மார்பையும் தோள்களையும் மறைத்து உடையணியும் சலுகை இருக்கிறது. இந்தியாவில் நமக்குப் பழக்கப்பட்ட பர்தா (அல்லது பெண்களைத் தனிமைப்படுத்தல்) முறை ஜாவாவில் இல்லை; ஆனால், அந்தச் சமூக அமைப்பின் குறைபாடுகளால் அப்பெண்கள் சிரமப்படவில்லை. என்றாலும், அவர்கள் ஆண்கள் சமூகத்துடன் சேராமல்தான் இருக்கிறார்கள். அத்துடன் சிறப்பான சந்தர்ப்பங்களில் மட்டுமே பொது வெளியில் அவர்கள் தோன்றுகிறார்கள். அனைத்துக் கீழ்த்திசை நாடுகளிலும் சமூகத்தில் நிலவும் பொதுவான பெண்களின் நிலையைப் போல்தான் இங்கும் இவர்களின் சமூக அந்தஸ்து உள்ளது.

சுல்தானுக்கும் சுல்தானாவுக்கும் பின்புறம், அருகில் சுல்தானின் தனிப்பட்ட பெண் உதவியாளர்கள் இருந்தனர். இந்தப் பெண்கள், பல்வேறு வயதுகளில் இருந்தனர். ஏறக்குறைய அறுபது வயதுள்ள ஒரு பெண்மணி என் கவனத்தை ஈர்த்தாள். தனது எஜமானன் மீது தொடர்ந்து அவள் ஆசிகளை முணுமுணுத்துக் கொண்டிருந்தாள். சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்த நான் அவள் கண்ணில் பட்டதும் அவள் புன்னகைத்தாள்.

என் தலைமீதும் ஆசீர்வாதங்களைப் பொழிந்தாள். என்னைப் போன்ற ஒரு புகழ்பெற்ற மனிதரை, மகிமை பொருந்திய தனது எஜமானனைப் பார்க்க அனுப்பியதற்காக எல்லாம் வல்ல இறைவனுக்கு நன்றி கூறுவதாக அவளது ஆசீர்வாதங்கள் இருந்தன என்று எனக்குத் தெரிவிக்கப்பட்டது! சுல்தானின் பணிப்பெண்களில் ஒருவர் அவ்வப்போது முன்புறம் வந்து அவரது கால்களுக்கு மசாஜ் செய்து கொண்டிருந்தார்.

சுல்தானை வணங்கும் முறை ஏறத்தாழ பஞ்சாபில் நடைமுறையில் இருப்பதைப் போலவே இருந்தது: இரு கைகளையும் குவித்து, நெற்றி அதனைத் தொடும்படி தலையைக் குனிந்து வணங்குவது. அவர் பெயர் சொல்லி விளித்தவுடன், சுல்தானின் மகன்களும் அவரது பிரதான மனைவியும் நான் மேலே விவரித்தபடி எதிர்வினையாற்றினர். இந்தப் பிரதேசத்தின் அரசவை சம்பிரதாயங்கள் மிகவும் கண்டிப்பாகப் பின்பற்றப்படுகின்றன.

ஓர் அம்சம் எனக்கு மிகவும் வேடிக்கையாக இருந்தது. அங்கு பணியாட்கள் சுல்தானை நிமிர்ந்த நிலையில் அணுக முடியாது; அது தடைசெய்யப்பட்டுள்ளது. ஆகவே, அவருக்கு ஏதாவது ஒரு பொருளைக் கொடுக்க வேண்டும் என்றால், அந்த வேலைக்காரன் ஜிம்னாஸ்டிக்ஸ் வேலை செய்வது போல் கிட்டத்தட்ட தரையில் உட்கார்ந்த நிலையில் முன்புறம் உடலை வளைத்து முன்னகர வேண்டும். அசௌகரியமான இந்த நிலையில் ஊர்ந்து செல்வதுபோல் தான், பணியை முடிக்கவேண்டிய கட்டாயம் அவர்களுக்கு.

ஹிஸ் ஹைனஸ் சுல்தானின் பட்டங்கள் இவை: ‘ஹிங்காங் சினோஹோன் காங் பகோ போமோனோ சேனோபதி இங்கலோகே ரச்மான் சஜிதின் பனோடோகோமோ. நெதர்லாந்து சிங்கத்தின் மாவீரம் பொருந்திய கமாண்டர். நாசாவின் (Nassau) ஆர்டர் ஆஃப் ஆரஞ்சு விருது பெற்ற மாபெரும் அதிகாரி. கம்போடியாவின் பிரெஞ்சு காலனிய அமைப்பின் கிராண்ட் கிராஸ் விருது பெற்ற மாவீரர். நைட் கிராண்ட் ஆர்டர் ஆஃப் தி கிரவுன் ஆஃப் சியாம், பெல்ஜியத்தின் ஆர்டர் ஆஃப் லியோபோல்டின் மாபெரும் அதிகாரி. நெதர்லாந்து ராணுவத்தில் மேஜர் ஜெனரல்.’

ஆனால், அனைத்திற்கும்மேல், ‘Nail of the Universe’ என்று அவர் பிரபலமாக அறியப்படுகிறார். நான் அவரை விவரிக்கும் அந்த நிகழ்வின்போது அழகாக எம்ப்ராய்டரி செய்யப்பட்ட சிவப்பு நிற ஜாக்கெட்டும் மிக அழகான சரோங்கும் அணிந்திருந்தார். மேலங்கியை அலங்கரிக்கும் வகையில் பளபளப்பான டச்சு, பெல்ஜியம், பிரெஞ்சு, சையாம், ஜெர்மன் அரசாங்கங்களின் விருதுகளை அணிந்து வியப்பு ஏற்படுத்தினார்.

சோலோகர்த்தா சுல்தான்

சோலோகர்த்தா சுல்தான்

எங்கள் உரையாடலின்போது, சுல்தான் தெரிவித்த விஷயம் எனக்கு மேலும் வியப்பை அளித்தது. ஒரே நேரத்தில் அவரது மேலங்கியில் தொங்கவிட்டுக் கொள்ள முடியாத அளவுக்கு அதிக எண்ணிக்கையிலான விருதுகளும், கௌரவப் பட்டங்களும் அவரிடம் இருக்கிறதாம். தங்களுக்குக் கீழிருக்கும் நிலப்பிரபுத்துவ இளவரசர்களை அடக்குமுறைத் தன்மையுடன் நடத்தும் டச்சு அரசாங்கம், வெளிநாட்டு அரசாங்கங்கள் அளிக்கும் அலங்கார விருதுகளை ஏற்றுக்கொள்ள அனுமதிக்கும் விஷயத்தில் மிகவும் வெளிப்படையாக, தாராள மனப்பான்மையுடன் நடந்துகொள்கின்றனர்.

அப்படி என்னிடம் எத்தனை அலங்காரப் பட்டங்கள் உள்ளன என்று சுல்தான் கேட்டார். இந்த விஷயத்தில் பிரிட்டிஷ் அரசாங்கம் அவ்வளவு பரந்த மனப்பான்மை கொண்டதாக இல்லை என்பதை ஒப்புக்கொள்ள நான் கடமைப்பட்டவன். எந்த இந்திய மன்னரும் வெளிநாட்டவர் அளிக்கும் விருதுகளைப் பெறுவதை அது அனுமதிப்பதில்லை. சுல்தானிடம் இருக்கும் விருதுகள் அனைத்தும், ஜாவாவிற்கு அவ்வப்போது வருகை தந்த வெளிநாட்டு அரசர்களும் இளவரசர்களும் அவருக்கு அளித்தவையாம். ஆனால், நிச்சயமாக, டச்சு அரசாங்கத்தின் ஒப்புதலுடன்.

சுல்தானுடன் நான் நடத்திய உரையாடல் டச்சு முதன்மைச் செயலரின் மொழிபெயர்ப்பு உதவியுடன் நடந்தது. பிரெஞ்சு மொழியை இதுபோன்ற மொழிபெயர்ப்பு நோக்கங்களுக்காகப் பயன்படுத்தினார். சுல்தான் என்னைப் பார்த்து சோலோகர்த்தா அரண்மனையின் பொழுதுபோக்கு நிகழ்வுகளும் சுற்றுப்புறங்களும் ஜாகர்த்தாவைக் காட்டிலும் உயர்தரத்துடன் இருந்ததா இல்லையா என்று என்னைக் கேட்டார். இதுபோன்ற கேள்விகளுக்குப் பதிலளிப்பது எனக்கு மிகவும் சிரமமானது. இருப்பினும், அதை எனக்கே உரிய ராஜதந்திரத்துடன் எதிர்கொண்டேன்.

எங்களது உரையாடலிலிருந்தும் எனக்கு விருந்தளித்தவர் நடந்துகொண்ட விதத்திலிருந்தும் கேள்விப்பட்ட விஷயங்களில் இருந்தும் அருகிலிருக்கும் ஜாகர்த்தா சுல்தான்மீது அன்பைப் பொழிந்து நேரத்தை வீணடிக்க அவர் விரும்பவில்லை

என்பதை அறிந்துகொண்டேன். அவர்களுக்கிடையில் நிலவும் போட்டியும் பொறாமையும் முற்றிலும் வெளிப்படையானது… ஒருவேளை, டச்சுக்காரர்கள் ஜாவாவிலிருந்து அவர்களாகவே வெளியேறினால், எதிரிகளான இந்தச் சுல்தான்கள் உடனடியாக ஒருவர் குரல்வளையை மற்றவர் பிடித்துக் கொள்வார்கள். கடந்தகாலத்தில் நிலவிய குழப்பத்தையும் ரத்தக்களரியான நிலையையும் நிச்சயம் திரும்பவும் கொண்டுவந்துவிடுவார்கள்.

நடந்த பொழுதுபோக்கு நிகழ்வுகளை விவரிப்பது மிகவும் சிரமம்; அதற்கு நியாயம் செய்ய வேண்டுமானால், எழுத்தாளர் பியர் லோட்டியின் திறமையும் பேனாவும் தேவைப்படும். கீழ்த்திசை நாடுகள் பலவற்றிற்கு சென்ற அனுபவம் எனக்கு இருக்கிறது. ஆனால், இன்று என் முன் தோன்றிய மயக்கும் அழகு நிச்சயம் இணையற்றது. முதலில் இசைக்கலைஞர்கள் அவர்களது பழமையான வினோதமான வாத்தியக் கருவிகளுடன் வந்தனர். ஒதுக்கப்பட்ட இடங்களில் அமர்ந்தனர். அதன்பின் தொடக்க நிகழ்வான ‘கார்ப்ஸ் டி பாலே’ ஆரம்பமானது. இதில் சுமார் ஐம்பது இளம் பெண்கள் இருந்தனர். அனைவரும் அழகான எம்ப்ராய்டரி செய்யப்பட்ட சரோங்கும், மிகத் தாழ்வான கழுத்துப்பகுதி கொண்ட மேலாடைகளும் அணிந்திருந்தனர். பெவிலியனின் பின்பகுதியில் இருந்து வசீகரமான நடையில் அணிவகுத்ததுபோல் வந்தவர்கள், இறுதியாக நாங்கள் அமர்ந்திருந்த மேடைக்கு எதிரே இரண்டு இணையான வரிசைகளாக நின்றனர்.

பெண்கள் அனைவரும் சுல்தானின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். ஒருவேளை அவருக்கு உறவினர்களாகவும் இருக்கலாம். அழகாகவும், மெலிந்த உடலுடனும், பதினான்கிலிருந்து பதினெட்டு வயதுக்குள்ளும் இருந்தனர். ஆலிவ் நிறத்தைக் கொண்டிருந்த அவர்களது உடல் தோற்றத்தில் ஓரளவு மங்கோலியன் இனத்தின் அம்சங்கள் காணப்பட்டன. மேடைக்கு வந்தவுடன், பெண்கள் முழந்தாள் படிய, கைகூப்பி வணங்கினர், பின்னர் நடனத்தை முறையாகத் தொடங்கினர்.

எண்ணற்ற உடல் தோரணைகளை, நடன நிலைகளைக் கொண்டதாக நடனம் இருந்தது. அவற்றிற்கு இசைவாகக் கரங்களை மெதுவாக அசைத்தனர். இணையாகத் தலையை அசைத்தனர். சில திசைகள் நோக்கி வசீகரமான நகர்வுகள், முன்னர் விவரித்தது போன்று மண்டிபோடுதல் ஆகியன நடனத்தின் படிமங்களை உருவாக்கின. அனைத்தும் புத்திசாலித்தனமான உடல் அசைவுகளால் நிகழ்த்தப்பட்டன. அதனால் நடனத்தில் பாதங்களுக்குக் குறைவான பங்குதான் இருந்தது.

நடனத்தின் படிமங்கள் சிக்கலானவை, ஏராளமானவை. வட்டங்கள், சதுரங்கள், பின்னோக்கிய மற்றும் முன்னோக்கிய நகர்வுகள் ஆகியன இருந்தன. இவையனைத்தும் சற்று நேரத்திற்குப்பின் அதிகரித்தபோது திகைப்பை ஏற்படுத்தின. எப்போதாவது பெண் உதவியாளர்களில் ஒருவர் நடனக் கலைஞர்களின் வசீகரமான வட்டத்தில் நுழைய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஒரு பெண்ணின் தரையில் ஊர்ந்த நீண்ட பாவாடையின் பின்பகுதியை இன்னொருவள் சரிசெய்தாள். அசௌகரியமான அளவுக்கு அது நீளமாக இருந்ததால், அணிந்து கொண்டிருப்பவர் தானாகவே அதைச் சரி செய்து கொள்ள முடியவில்லை.

இசைக்கலைஞர்கள் இசைக் கருவிகளை வாசிப்பதுடன் தங்களை முற்றிலும் நிறுத்திக் கொள்ளவில்லை. அவ்வப்போது, வெடிப்பது போன்ற உச்ச ஸ்தாயியில் வித்தியாசமான குரலில் பாடவும் செய்தனர். ஓரளவுக்கு இது நம் நாட்டின் இசையை எனக்கு நினைவூட்டியது. எனக்கு முன் நிகழ்த்தப்பட்ட காட்சியிலிருந்த புதுமை, மகாபாரதத்தில் விவரிக்கப்பட்டிருக்கும் சில காட்சிகளுக்கு என்னை மனத்தளவில் அழைத்துச்சென்றது.

கற்பனையில், இந்தியப் புராணங்களில் மிகப்பிரபலமான ராஜா இந்திரனின் அவைக்குச் சென்றேன். எனினும், ஐரோப்பிய விருந்தினர்கள் அணிந்திருந்த மாலை நேரத்திற்குரிய கருப்பு ஆடைகளையும், சீருடைகளையும் பார்த்த பின் இன்னமும் இருபதாம் நூற்றாண்டில்தான் நான் வாழ்கிறேன் என்பதை அவை நினைவூட்டின.

சுல்தான் எனக்காக ஏற்பாடு செய்திருந்த அற்புதமான பொழுதுபோக்கு நிகழ்வுகளுக்காக அவருக்கு நன்றியும் பாராட்டும் தெரிவித்தேன். பதிலுக்கு அவர் எனது வருகை முன்பே அவருக்குத் தெரிந்திருந்தால், முழுமையான எண்ணிக்கையில், சுமார் இருநூறு பெண்களுடன் கார்ப்ஸ் டி பாலேவை ஏற்பாடு செய்திருப்பேன் என்றார். அந்த நிகழ்வு (சுமார் ஒரு மணி நேரம் நீடித்தது) அதைப் பார்ப்பதற்காகவே ஒருவர் ஜாவாவுக்குச் செல்லும் அளவுக்குச் சிறந்தது.

சுல்தானின் அரண்மனை

சுல்தான் என்னைப் பல அடுக்குமாடிக் குடியிருப்புகள் வழியாக அழைத்துச் சென்றார். அவை ஜாவானிய பாணியில் அலங்கரிக்கப்பட்டிருந்தன; அறைகலன்களால் நிரம்பியிருந்தன. அவற்றில் ஒன்று சிறப்பாகப் பாதுகாக்கப்படுவதாகத் தோன்றியது. சற்றுப் பெரியதாக, அழகானதாக, நன்கு செதுக்கப்பட்டு, தங்க முலாம் பூசப்பட்டிருந்த ஒரு கட்டில். அரச குலத்துக்குரிய மணமகளின் மஞ்சமாக இருக்கலாம். திருமணப் படுக்கையாகப் பயன்படுத்தப்பட்டிருக்கலாம். அந்த வரவேற்பு மண்டபத்தின் பின்பகுதியில், உரிய மரியாதையுடன் அது பாதுகாப்புடன் வைக்கப்பட்டிருந்தது.

அரசவை அதிகாரிகள் பலரும், சாதாரண வேலை செய்பவர்களும், உதவியாளர்களும் பின்தொடர்ந்து வர, தோட்டம் ஒன்றிலிருந்த சுல்தானுக்கு மிகவும் பிரியமான கோடைக்கால ஓய்வில்லம் ஒன்றிற்குச் சென்றோம். அங்கு நாங்கள் பல சுவையான மற்றும் குளிர்ச்சியான பானங்களை அருந்தினோம். சிறிது நேரம் உரையாடிக் கொண்டிருந்தோம். நான் புறப்படுவதற்கு முன், சுல்தான் எனக்கு அழகான வாக்கிங் ஸ்டிக் ஒன்றைக் கொடுத்தார். அதன் கைப்பிடி தங்கத்தால் ஆனது. கைப்பிடியில் அவரது அரச முத்திரை வைரங்களால் பதிக்கப்பட்டிருந்தது. நள்ளிரவு நெருங்கியதும், நாங்கள் புறப்பட்டோம். அன்புடன் எங்களை உபசரித்தவரிடம் பிரியாவிடை பெற்றோம். தூரக் கிழக்கில் நான் கழித்த பல நாட்களில், இந்த நாள்தான் மிக அதிக அளவுக்கு சுவாரஸ்யமான நாளாக இருந்திருக்கக் கூடும்.

மறுநாள் காலை, சுல்தானின் மகன்களுடன் சேர்ந்து, அவர் வழிபடும் மசூதிக்குச் (அனைவரும் செல்லுமிடம்) சென்றேன். யானைகளையும் அவரது அரண்மனையின் ஒரு பகுதியையும் மகிழ்ச்சியுடன் சுற்றிப் பார்த்தேன். அரண்மனையில் மிகவும் சுவாரஸ்யமான பகுதியாக ‘தோஷகானா தோஷகானா’ அதாவது கருவூலம் இருந்தது. அதில் போதுமான அளவு தங்கமும் வெள்ளித் தட்டுகளும் இருந்தன.

அத்துடன், ஒரே நேரத்தில் இருநூறு விருந்தினர்களுக்கு விருந்து அளிக்கப் போதுமான அளவு பாத்திரங்களும், ‘சைனாவேர்’ போன்றவையும் இருந்தன. சுல்தான் குடும்பத்து நகைகளைப் பார்க்க விரும்புவதாக என் எண்ணத்தை வெளிப்படுத்தினேன் (அசாதாரண அழகும் மதிப்பும் மிக்கவை என்று என்னிடம் கூறியிருந்தார்கள்). ஆனால், அத்தகைய மதிப்புமிக்க பொருட்களை விருந்தினர்களுக்கு காண்பிப்பதால் தீய சகுனம் ஏதாவது ஏற்படும் என்ற மூடநம்பிக்கை நிலவுகிறது என்று பணிவுடன் தெரிவித்தனர்; அதனால், எனது ஆசை நிறைவேறவில்லை.

அடுத்து நாங்கள் படைக்கலங்கள் வைக்கப்பட்டிருக்கும் அறையைப் பார்க்கச் சென்றோம். பழமையான ஆயுதங்களின் சேகரிப்பு அங்கு இருந்தது. அவை ஆர்வமும் சுவாரஸ்யமும் தந்தன என்பதைத் தவிர்த்து அவற்றால் வேறு எந்தப் பயனும் இல்லை. முதல் நாள் இரவு, சுல்தான் எனது மகிழ்ச்சிக்காகத் தனது படைகளை ஆய்வு செய்யும் நிகழ்வு ஒன்றை ஏற்பாடு செய்ய முன்வந்தார்; படையில் 2,000 பேர் இருப்பதாக கூறினார். சரி மறுநாள் காலை அணிவகுப்பைப் பார்க்கலாம் என்று சொன்னேன். ஆனால், அந்தப் படை பரவலாகச் சிதறிக் கிடப்பதால், அவற்றை ஒன்று சேர்க்க ஒரு வாரம் ஆகும் என்று தெரிந்தது.

மேலும், எனக்குத் தகவல் அளித்தவர், அந்த அணிவகுப்பும் அவ்வளவு தகுதி மிக்கதாகவும் இருக்காது என்றொரு செய்தியைக் கூறினார். சில குதிரைகளுக்குச் சேணங்கள் இருக்காது. வீரர்கள் பலரிடம் துப்பாக்கிகள் இருந்ததாலும் சீருடைகள் இருக்காது. அதேநேரம் சீருடைகளை மகிழ்ச்சியுடன் அணிந்திருப்பவர்களிடம் துப்பாக்கிகள் இருக்காது என்று மேலும் பல விஷயங்களைக் கூறினார்.

எனவே, வெளிப்படையான காரணங்களுக்காக அந்த ஆய்வு யோசனை கைவிடப்பட்டது. எனது கேள்விக்குப் பதிலளித்த, தகவலறிந்த அந்த நபர், சூதற்றத் தன்மையுடன் மேலும் சில தகவல்களையும் கூறினார். இங்கு நிலவும் தற்போதைய குழப்பமான, சீர்குலைந்த நிலைமைக்குக் காரணம் டச்சு அரசாங்கத்தின் கொள்கையே என்றார். சுல்தானின் வீரர்களை, ஆயுதம் ஏந்திய வீரர்களைப் போல் திறமையானவர்களாக எவ்விதத்திலும் மதிப்பாக நினைப்பதில்லை என்றார்.

அடுத்ததாக நாங்கள் குதிரைக் கொட்டிலுக்குச் சென்றோம். அங்கு சுமார் நூறு குதிரைகளும், ஐம்பது வண்டிகளும் இருந்தன. சுல்தானின் சேவையிலிருக்கும், டச்சு குதிரைப் படையின் ஓய்வு பெற்ற சார்ஜென்ட் ஒருவரால் லாயம் நிர்வகிக்கப்பட்டது. நாங்கள் அதைப் பார்வையிடச் சென்றபோது அந்த நிறுவனம் செய்ய வேண்டிய மரியாதையை எங்களுக்கு அளித்தார். ஜாவானிய பாணியில் முழுமையாக சேணங்களும் அலங்காரமும் செய்யப்பட்டிருந்த குதிரைகள் சில, இந்தியாவில் நாம் பார்க்க முடிகிற குதிரைகளை மிகவும் ஒத்திருந்தன. நாங்கள் ஆய்வுசெய்யும் நோக்கத்திற்காக அவை வெளியில் கொண்டுவரப்பட்டன. குதிரைப் பராமரிப்பவர்கள் அவற்றின் மீது ஏறி வந்தனர். பூட்ஸ்களோ அல்லது குதிரை ஏற்றத்திற்கான கால்சட்டையோ (ப்ரீச்) அவர்கள் அணியவில்லை. எனினும், அதனால் அவர்கள் அதிகம் சிரமப்பட்டதாகத் தெரியவில்லை.

நாங்கள் குதிரைகளைப் பார்த்துக் கொண்டிருந்த போது, முதல் நாள் இரவு பாலேவின் போது மிகவும் அக்கறையுடன் நின்றிருந்த அந்த முதியச் செவிலி அந்த இடத்திற்கு வந்தார். அவரது எஜமானரின் பாராட்டுக்களுடன் வந்த அவரிடம் பாராட்டப்பட வேண்டிய விஷயம் இருந்தது. குளிர்ச்சியான புத்துணர்ச்சியூட்டும் பானங்களை அதிக எண்ணிக்கையில் அவர் எடுத்து வந்தார். அந்த முதிய பெண்மணி அந்தக் காலை நேரம் முழுவதும் எங்களைப் பின்தொடர்ந்து வந்தார்.

அடுத்து எங்களது கவனத்தை ஈர்த்தது சாரட் வண்டிகள் நிறுத்தப்பட்டிருந்த இடம். இதன் பொறுப்பாளராகவும் முதிய டச்சுக்காரர் ஒருவர்தான் இருந்தார். நாங்கள் பார்த்த சில வாகனங்கள் உண்மையில் விரிவாகவும் அழகாகவும் உருவாக்கப்பட்ட வண்டிகளாக இருந்தன. சுல்தான் அரிதான சந்தர்ப்பங்களில் பயன்படுத்திக் கொள்ளும் அரசு சாரட் வண்டிதான் மிகவும் வியந்து பாராட்ட வேண்டிய தோற்றத்துடன் இருந்தது. சுமார் அரை நூற்றாண்டுக்கு முன்பு ஐரோப்பாவில் செய்யப்பட்டது. அத்துடன் மிக விரிவான பயன்பாட்டிற்குரியதாக வண்டி இருந்தது; பழைய வெர்செயல்ஸ் கோச்சு வண்டியை இது எனக்கு நினைவூட்டியது, வாங்கிய நேரத்தில் இதன் விலை 40,000 ஃப்ளோரின்கள் என்று கூறினார்கள்.

மதியம் நாங்கள் ரயிலில் புறப்பட்டோம், சுல்தானின் மகன்களும் அமைச்சர்களும் ரயில் நிலையத்திற்கு எங்களை வழியனுப்ப வந்திருந்தனர். சுல்தானின் மகன்கள், அமைதியும் மென்மையான தோற்றமும் கொண்ட இளைஞர்கள். அவர்களில் இருவர் கல்வி கற்பதற்காக ஹாலந்துக்கு விரைவில் புறப்படவிருந்தனர். டச்சு மொழி தவிர வேறு எந்த ஐரோப்பிய மொழியும் அவர்களுக்குத் தெரியவில்லை.

(தொடரும்)

___________
ஜகத்ஜித் சிங் எழுதிய “My Travels in China, Japan and Java, 1903” நூலின்  தமிழாக்கம்

பகிர:
nv-author-image

அக்களூர் இரவி

சொந்த ஊர் மாயவரம். தொலைத் தொடர்புத் துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். 'இந்தியா என்கிற கருத்தாக்கம்', ‘காந்தியும் பகத் சிங்கும்’, ‘அரசியல் சிந்தனையாளர் புத்தர்’ உள்ளிட்ட நூல்களை மொழிபெயர்த்திருக்கிறார். திசையெட்டும் மொழியாக்க விருது பெற்றவர். தொடர்புக்கு : thendralaham@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *