Skip to content
Home » மகாராஜாவின் பயணங்கள் #22 – பிரம்பனம் கோவில்கள்

மகாராஜாவின் பயணங்கள் #22 – பிரம்பனம் கோவில்கள்

பிரம்பனம் கோவில்கள்

ஜாகர்த்தா செல்லும் வழியில் சாலை அருகிலிருந்த நிலையம் ஒன்றில் இறங்கி, பிரம்பனம் கோவில்களைப் பார்க்க விரைந்தோம். இந்தக் கோவில்கள் பார்க்க வேண்டியவை, தீவிரமாக ஆய்வு செய்ய வேண்டிய அளவுக்கு மதிப்புடையவை. ஹிந்து வம்சாவளியைச் சேர்ந்தவன் என்பதாலும் இவற்றைப் பார்க்க வேண்டும் என்ற விநோதமான ஆசை ஏற்பட்டது.

ஆனால், இந்த விஜயம் மிகவும் விரைவான ஒன்றாகிவிட்டதே என்பது வருத்தமாக இருந்தது. ஆனால், அன்று மாலையே ஜாகர்த்தாவை அடைய வேண்டிய கட்டாயத்தில் இருந்தோம். அதனால், எளிதாகவும் பயனுள்ள வழியிலும் நீண்டிருக்க வேண்டிய கோவில் விஜயத்தைக் குறுக்கிக் கொள்வதைத் தவிர வேறு வழி தெரியவில்லை.

மூன்று பெரிய கோவில்கள் வட்ட வடிவில் நிற்கின்றன. அந்த வட்டத்தில் மேலும் நூறு சிறிய கோவில்கள். நாங்கள் இரண்டு பெரிய கோவில்களுக்குள் நுழைந்து பார்த்தோம். உடனடிப் பார்வையில் ஹிந்துயிசத்தின் பிரபலமான தெய்வங்களின் பெரிய உருவங்களைப் பார்த்தோம். விஷ்ணு, சிவன், கணேஷ். அனைத்தும் சிறந்த முறையில் பேணிப் பாதுகாக்கப்பட்ட நிலையில் இருந்தன.

கோவில்கள் அழிந்துபோகும் நிலையில் உள்ளன. ஆனால், அவற்றின் பிரம்மாண்டமான அளவும் கோவில் வளாகத்தின் பரப்பளவும் இறைவழிபாட்டிற்கு அந்தக் கோவில்களைக் கட்டுவதற்கும் அழகுடைய சிற்பங்களால் அலங்கரிப்பதற்கும் ஆகியிருக்கக்கூடிய அதிக அளவிலான செலவையும் எண்ணும்-போது ஒருகாலத்தில் அந்த மண்ணின் மக்கள் ஹிந்து மதத்தின் மீது கொண்டிருந்த பிடிப்பை உணர்ந்து கொள்ள வைத்தன.

அருகாமையில் உள்ள சில தீவுகளில் வசிக்கும் சிலரையும், ஹிந்து பாணியில் வழிபடுபவர்களாக இன்னமும் இருக்கும் சிலரையும் தவிர்த்து, அந்த மதம் ஜாவாவில் இல்லை என்றுதான் சொல்லவேண்டும். ஆனால், ஹிந்துத்துவ செல்வாக்கு இன்னமும் இருக்கிறது என்பதற்கும் டச்சு அரசாங்கத்தின் பலவீனத்திற்கும் ஒரு எடுத்துக்காட்டைக் கூறலாம். உதாரணமாக, டச்சுக்காரர்களின் ஆளுகையின் கீழ் இருந்த இளவரசர்களில் ஒருவர் சமீபத்தில் இறந்ததும், அவரது விதவை மனைவிகளை அந்த இளவரசனின் வாரிசு பலவந்தமாக சதித்தீயில் இறங்கச் சொன்னார் அல்லது தாமாகவே தீக்குளிக்கச் செய்தார் என்பது ஆர்வமூட்டும் செய்தியாக இருந்தது.

இதை அறிந்த டச்சு அரசாங்கம் எதிர்காலத்தில் இதுபோன்ற ஒரு நிகழ்வு நடக்காது என்று உறுதியளிக்கும்வரை அந்த வாரிசை அங்கீகரிக்க மறுத்தது. அதிக முக்கியத்துவம் வாய்ந்த அழிந்து கொண்டிருக்கும் பல நினைவுச் சின்னங்கள் ஜாவாவில் இருக்கின்றன. ஆனால், நேரம் மிகவும் குறைவாக இருந்ததால், அவற்றைப் பார்க்க முடியாமல் போனது வருத்தமாக இருந்தது.

கோவில்களைச் சுற்றிப்பார்த்துவிட்டு வந்த எங்களுக்கு ரயில் எதுவும் கிடைக்கவில்லை; அதனால், (சுமார் இருபது மைல் தொலைவிலிருந்த) ஜாகர்த்தாவிற்கு வண்டியில் செல்லவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இரவு உணவு நேரத்திற்குச் சரியாக அங்கு சென்று சேர்ந்தோம். அன்றிரவே ஜாகர்த்தா சுல்தான் என்னைக் கௌரவிக்க பொழுதுபோக்கு நிகழ்வு ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார். டச்சுப் பிரதிநிதியும், டச்சு அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.

சிவிலியன்கள் சிலரும் அதில் இருந்தனர். அரண்மனை முழுவதும் கொண்டாட்ட மனநிலையில் இருந்தது. அதனால், பொது மக்களும் அப்போது அனுமதிக்கப்பட்டிருந்தனர். பிரம்மாண்டமான மதில் சுவர்களால் சூழப்பட்டிருந்த அந்த வளாகம் முழுவதும் மனிதர்கள் நிரம்பியிருந்தனர்; சில ஆயிரம் பேர் இருந்திருக்கலாம்.

சோலோகர்த்தாவைப் போல், இங்கும் பொழுதுபோக்கு நிகழ்வு முக்கியமாக பாலே வடிவத்தில்தான் இருந்தது. அத்துடன் அதே வகையைச் சேர்ந்ததாகவும் இருந்தது.

இங்கு சுமார் இருபது பெண்கள் கலந்து கொண்டனர். ஆடைகள் மட்டும் சோலோகர்த்தாவில் பார்த்தவற்றில் இருந்து வேறு-பட்டிருந்தன. முகத்தில் ஒருவித வெள்ளை நிறமியையும், புருவங்களுக்குக் கருப்பு நிறச் சாயமும் இவர்கள் பூசியிருந்தனர். அவை செயற்கையாக மூக்கின் மேல் பகுதி வரை நீண்டு, நெற்றிப்பொட்டுகள் மீது அசாதாரணமான முறையில் சுருட்டப்பட்டிருந்தன.

இந்த இளம் பெண்களுக்குச் சிறுவயதிலிருந்தே நடனம் கற்பிக்கப்படுகிறது. குறிப்பிட்ட காலம் வரை, ஒவ்வொரு நாளும் நடனத்தின் ஏதாவது ஒரு வடிவத்தைப் பயிற்சி செய்கிறார்கள். இவர்கள் அனைவரும் சுல்தானின் குடும்பத்துடன் உறவில் இருப்பவர்கள். இவர்களை சுல்தான், தனது விருப்பப்படி, நல்ல பதவியிலும் அந்தஸ்திலும் உள்ள ஆண்களுக்குத் திருமணம் செய்து வைக்கிறார். பாலேவின் முடிவில் குத்து வாள் நடனம் ஒன்றும் அளித்தனர். அதில் பங்கேற்றவர்கள் ஆபத்தான ஆயுதமான குத்துவாளைச் சுழற்றுவதில் மிகுந்த திறமையை வெளிப்படுத்தினர்.

அதன்பின் ஒரு வகையான நாடகம் நடத்தப்பட்டது. மகாபாரதத்தில், ஜனகனுக்கும் ஸ்ரீசொஹெல்லாவுக்கும் இடையில் சண்டை நடந்த அத்தியாயம் நடிக்கப்பட்டது. வீரர்களாக நடித்தவர்கள் பழங்காலத்து ஹிந்து உடைகளை அணிந்திருந்தனர். வில்லும் அம்பும் கொண்டு கடுமையாகப் போராடிய அவர்கள், சுல்தானின் மகன்களும் உறவினர்களும்.

இன்றுவரை அவர்கள் மகாபாரதத்தைக் குறிப்பிட்டுப் பேசுவதிலிருந்தும் பயபக்தியுடன் வாசிப்பதிலிருந்தும் ஹிந்து மதத்தின் வலிமையும், ஜாவானியர்கள் மீது அது ஏற்படுத்திய ஆழமான தாக்கமும், வேறொரு சந்தர்ப்பத்தில் வியக்கத்தக்க வகையில் வெளிப்பட்டது.

அந்தப் பொழுதுபோக்கு நிகழ்வின்போது என் பக்கத்தில் அமர்ந்திருந்தவர் ஒரு முதிய டச்சு ஜென்டில்மேன். அரசாங்கத்தில் தொல்லியலாளர் பதவி வகித்தவர். நடந்துகொண்டிருந்த நாடகம் குறித்த விவரங்கள் அனைத்தும் அவருக்குத் தெரிந்திருந்தது. எனக்கும் மற்றவர்களுக்கும் அவர் அளித்த விவரங்களும் தகவல்களும் மிகவும் உயர்வான ஆர்வத்தை ஏற்படுத்தின. ஜாவாவில் தனது வாழ்நாளின் நாற்பது ஆண்டுகளை கழித்துவிட்டார், நிச்சயமாக, தீவின் தொல்பொருள் விஷயங்களையும் வரலாறு தொடர்பான அனைத்தையும் நன்கு அறிந்தவராக இருந்தார்.

ஹிந்துத் தன்மையுடன் நாடகம் இருந்தது. சுற்றியிருந்த பொதுவான சூழலும் என்னை வெகுவாகக் கவர்ந்தன. என்னை உபசரித்துக் கொண்டிருப்பவரும் அவரது குடிமக்களும் முகமதிய மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தபோதிலும், அவர்கள் நடந்து கொண்ட முறையிலும் பழக்க வழக்கத்திலும் ஒரு முகமதிய நாட்டில் நான் தங்கியிருக்கிறேன் என்ற எண்ணமே எனக்கு எழவில்லை. மாறாக, எல்லா விஷயங்களும், மக்களும், அவர்களின் வணக்க முறையும், அவர்களின் பழக்கவழக்கங்களும் இந்தியாவில் வாழ்ந்திருந்த ஒருவருக்கு, தென்னிந்தியாவில் நடைமுறையில் இருக்கும் ஹிந்து மதத்தின் தோற்றத்தை வெளிப்படுத்தின.

இந்தியாவின் அந்த பகுதியில் மட்டுமே, அந்த மதம் அதன் அசல் பழக்கவழக்கங்களில் மத்திய மற்றும் வட இந்தியாவில் நாம் உணர முடிவது போன்று வலுவான முகமதியச் செல்வாக்கின் தாக்கத்தால் இன்னமும் மாசுபடாமல் இருக்கிறது. அங்கிருந்து புறப்படும்போது, சுல்தான் எனக்கு ‘சலாமத்’ சொன்னார்; அதாவது எனது பாதுகாப்பான பயணத்திற்கு வாழ்த்துக் கூறினார்.

(தொடரும்)

___________
ஜகத்ஜித் சிங் எழுதிய “My Travels in China, Japan and Java, 1903” நூலின்  தமிழாக்கம்

பகிர:
அக்களூர் இரவி

அக்களூர் இரவி

சொந்த ஊர் மாயவரம். தொலைத் தொடர்புத் துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். 'இந்தியா என்கிற கருத்தாக்கம்', ‘காந்தியும் பகத் சிங்கும்’, ‘அரசியல் சிந்தனையாளர் புத்தர்’ உள்ளிட்ட நூல்களை மொழிபெயர்த்திருக்கிறார். திசையெட்டும் மொழியாக்க விருது பெற்றவர். தொடர்புக்கு : thendralaham@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *