Skip to content
Home » மகாராஜாவின் பயணங்கள் #23 – வீடு திரும்புதல்

மகாராஜாவின் பயணங்கள் #23 – வீடு திரும்புதல்

Caledonien

ஜனவரி 13 அன்று நாங்கள் தாய் நாட்டை நோக்கி முகங்களைத் திருப்பினோம். அன்றிரவை மாவோஸில் கழித்த நாங்கள், அந்த இடத்திலிருந்து மறுநாள் மிகவும் அதிகாலை நேரத்தில், ஐந்து மணிக்கே புறப்பட்டோம். பேண்டோங்கை அடைந்ததும், நடைமேடையில் கூட்டம் அதிகமாக இருந்ததைக் கண்டு ஆச்சரியப்பட்டேன். அவர்களில் பலர் பஞ்சாபிகளாக இருந்தது கண்டு மகிழ்ச்சியடைந்தேன். எனக்கு அளிப்பதற்காகப் பழங்களும் பணமும் அவர்கள் கொண்டு வந்திருந்தனர். ஒரு பெரும் ‘வழியனுப்புதலை’ எனக்கு அளிக்க அவர்கள் முயல்வது வெளிப்படையாகத் தெரிந்தது.

அங்கிருந்த என் நாட்டுக்காரர்கள் சிலருடன் உரையாடினேன். அவர்களில் இருவர் பக்வாராவுக்கு அருகிலிருந்த கிராமத்தைச் சேர்ந்தவர்கள். எனில், அவர்கள் எனது குடிமக்கள் என்பதறிந்து மிகவும் வியப்படைந்தேன். எந்தச் சூழ்நிலை அவர்களை வீட்டிலிருந்து இவ்வளவு தூரம் அழைத்து வந்தது என்பதை விசாரித்தேன், வாழ்க்கையை மேம்படுத்திக் கொள்வதற்காக ஜாவாவுக்கு முதலில் வந்த அவர்கள், தம் நிலை மேம்பட்டதும் அங்கேயே தங்கிவிட்டதாகத் தெரிவித்தனர். ஒரு நீண்ட, சோர்வூட்டும் பயணத்திற்குப் பின் நாங்கள் படேவியாவுக்கு வந்து சேர்ந்தோம். அந்த ஹோட்டல் டெஸ் இண்டெஸில் முன்பு நாங்கள் தங்கியிருந்த பழைய அறையில் இரவைக் கழித்தோம்.

படேவியாவின் வணிகப் பகுதி ஐரோப்பியக் குடியிருப்புப் பகுதியிலிருந்து நான்கு மைல் தொலைவில் அமைந்திருக்கிறது. அந்தப் பகுதிக்குக் காலையில் சென்றேன். அந்த இடம் மிகவும் பரபரப்பாகத் தோன்றியது. பெருமளவில் அங்கு வியாபாரம் நடந்து கொண்டிருந்தது. ஜாவாவில் எங்களது பயணம் முடிவடைந்த நிலையில், நாங்கள் டேன்ஜங் பிரையோக் துறைமுகத்தில் M.M: La Seyne என்ற கப்பலில் புறப்பட்டோம்.

பிரெஞ்சு மெயில் சேவைக்கான கப்பல்களுடன் இணைந்து, மாதத்திற்கு இருமுறை, படேவியாவிற்கும் சிங்கப்பூருக்கும் இடையிலான போக்குவரத்தை அது கையாள்கிறது. கப்பல் ஊழியர்கள் எங்கள் தேவைகளைப் புரிந்து, உடனடியாகவும் திறமையாகவும் நடந்து கொண்டனர் என்பது உண்மையில் மகிழ்ச்சியாக இருந்தது.

சிங்கப்பூரில், புதியதான, ஆடம்பரமான அன்னம் என்ற பிரெஞ்சு ஸ்டீமரில் எங்களுக்கு இடம் கிடைத்தது ஒரு நல்வாய்ப்பு. நாங்கள் ஜனவரி 18 அன்று கப்பலேறினோம். பயணிகளில் எனக்குத் தெரிந்தவர்கள் பலர் இருந்தனர். அவர்களைச் சந்தித்ததும் மேலும் எனக்கு நல்வாய்ப்பாக அமைந்தது. கொழும்பு நோக்கிய அடுத்த நான்கு நாட்கள் பயணம் எந்தவித அசம்பாவிதமும் இல்லாமல் இருந்தது. வானிலை குளிர்ச்சியாகவும் இனிமையாகவும் இருந்தது, கடல் சீராக இருந்தது, எனவே, பயண நேரம் மகிழ்ச்சியுடன் கடந்துபோனது.

எனது இந்தப் பயண நூலை எழுதுவதிலும் வாசிப்பதிலும் நாட்களை நிரப்பினேன். மாலை நேரத்தைப் பொதுவாக கப்பலின் மேல் தளப் பகுதிக்குச் செல்வதற்கு ஒதுக்கி வைத்தேன்.

அன்னம், ஜனவரி 23 அன்று மதியம் ஒரு மணிக்கு கொழும்பை அடைந்தது. ஆனால், எட்டு மணி வரை எங்களால் கப்பலை விட்டு இறங்கமுடியவில்லை. மறுநாள் ‘காலி ஃபேஸ் ஹோட்டலில்’ மிகவும் வசதியாக பகல் பொழுதைக் கழித்தோம். பிற்பகலில், எனக்கு அறிமுகமான மேடம் மார்குரைட் இணையரை அவர்களது 500 டன் எடையுள்ள ‘ஓஃபேலி’ (Opheli) உல்லாசப் படகுக்குச் சென்று சந்தித்தேன். மர்செயில்ஸ் நகரிலிருந்து இந்தப் படகில் வந்திருந்தனர். இந்தியாவுக்குச் சென்றுவிட்டு, ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர்.

ஹோட்டலில் இளவரசர் விக்டர் துலிப் சிங்கைச் சந்தித்தேன். அவர் புலி வேட்டைக்காகச் சுமத்ராவுக்குச் சென்றுகொண்டு இருந்தார். அவர்களது ஸ்டீமர்களுக்காகக் காத்திருந்த மற்ற பயணிகள் மத்தியில் எஞ்சிய மாலை நேரத்தை மகிழ்ச்சியாகக் கழித்தோம். இறுதியாக நள்ளிரவில் நாங்கள் M.M.Caledonia கப்பலில் ஏறினோம். மீண்டும் ஒருமுறை பயணத்தைத் தொடர்ந்தோம்.

காலிடோனியன் ஏறக்குறைய 4,000 டன்கள் கொண்ட கப்பல்தான் என்றாலும் பயணத்திற்கு மிகவும் வசதியாக இருந்தது. அதில் குறைவான பயணிகளே இருந்தனர். அவர்களில் ஒருவர் பெரிக்னி கோமகன். கீழ்த்திசை நாடுகளில் விரிவான சுற்றுப்பயணம் முடித்துத் திரும்பிக் கொண்டிருந்தார். அவரை கபுர்தலாவுக்கு அழைத்தேன், என்னுடன் வர இசைந்தார். அங்கு சில நாட்கள் என்னுடைய விருந்தினராக இருந்தார். 26ஆம் தேதி மதியம் பம்பாய் துறைமுகத்தை அடைந்தோம்.

ஆனால், கரைக்குச் செல்வதற்குத் தேவையற்ற எரிச்சலூட்டும் தாமதத்தை எதிர்கொள்ள வேண்டியதாயிற்று. ‘கப்பல்துறையில்’ நிறுத்தப்படுவதற்கு முன்பே பயணிகளை இறக்கி அனுப்புவதற்கு ஏராளமான வாய்ப்புகள் இருந்தும், பயணிகளை அப்படி அனுப்பாமல் இருந்ததற்கு எந்தக் காரணமும் இருப்பதாகத் தெரியவில்லை.

எனினும், சுமார் நான்கு மணி நேரத்திற்குப் பின், நாங்கள் ‘பிரின்சஸ் டாக்கில்’ இறக்கப்பட்டு கரையை அடைந்தோம். அங்கிருந்து நேரடியாக புதிதாகத் திறக்கப்பட்டிருந்த தாஜ்மஹால் பேலஸ் ஹோட்டலுக்குச் சென்றோம். அங்கு என் வருகைக்காகக் காத்திருந்த அன்புக்குரிய நான்கு மகன்களைப் பார்த்து மகிழ்ச்சியடைந்தேன். நீண்ட நாட்களுக்குப் பிறகு அவர்களைப் பார்க்கிறேன். அவர்கள் நலமுடன் இருப்பதைக் கண்டு மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன்.

தாஜ்மஹால் ஹோட்டல் ஓர் அற்புதமான இடம். அனைத்து நவீன வசதிகளுடன் இன்றைய காலத்திற்கேற்ற அனைத்து அம்சங்களும் நிறைந்த ஒன்று. பார்சி இனத்தின் தொழிலதிபர் மறைந்த திரு. ஜாம்செட்ஜி டாடா அவர்களுக்கு இந்தியா நன்றிக்கடன் பட்டிருக்கிறது. இந்த நாட்டின் தேவைகள் பற்றி அவருக்கு இருந்த அறிவும் புரிதலும், அதன் பெயருக்கு ஏற்ற ஹோட்டல் ஒன்றை இங்கு கட்ட வைத்தது. உலகின் எந்தவொரு நகரமும் இத்தகைய ஒன்றைப் பெற்றிருப்பதில் நிச்சயம் பெருமைப்படக்கூடும். ஆனால், கட்டணம், கட்டடத்தின் விலைக்கு இணையாக, பிரம்மாண்டமாக இருக்கிறது!

பம்பாயில் சில நாட்கள் தங்கி, கவர்னர் லாமிங்டன் பிரபுவைச் சந்தித்தபின் நாங்கள் கபுர்தலாவுக்கு புறப்பட்டுச் சென்றோம். பிப்ரவரி 1ஆம் தேதி அங்கு சென்று சேர்ந்தோம். நான் இதுவரை ரசித்து அனுபவித்திராத, அதுவும் உலகின் சுவாரஸ்யமான சில நாடுகளின் வழியாக இருபத்தைந்தாயிரம் மைல்களுக்கு மேல் நீண்ட பயணத்திற்குப் பின் வீடு வந்து சேர்ந்தோம். ஆனால், எல்லாவற்றிற்கும் மேலாக, நிச்சயமாக வீட்டிற்கு இணையான ஓர் இடம் இல்லை, மீண்டும் எனது மக்களுடன் இணைந்ததில் மகிழ்ச்சியடைந்தேன்.

பயணம் தொடர்பாக எனக்கு ஒரே வருத்தம்தான் உள்ளது. தூர கிழக்கில் நான் செய்த இந்தப் பயணத்தின்போது அவர்களது சொந்த நாடுகளில் நான் பார்க்க முடிந்த மிகப் பழமைவாதிகளாகவும், மிகவும் நவீனமாகவும் தோன்றிய மனிதர்கள் பலரைச் சந்திக்கவும் ஆய்வு செய்யவும் என்னால் மிகக் குறைவான நாட்களை மட்டுமே செலவிட முடிந்தது என்பதே அது.

(முற்றும்)

___________
ஜகத்ஜித் சிங் எழுதிய “My Travels in China, Japan and Java, 1903” நூலின்  தமிழாக்கம்

பகிர:
அக்களூர் இரவி

அக்களூர் இரவி

சொந்த ஊர் மாயவரம். தொலைத் தொடர்புத் துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். 'இந்தியா என்கிற கருத்தாக்கம்', ‘காந்தியும் பகத் சிங்கும்’, ‘அரசியல் சிந்தனையாளர் புத்தர்’ உள்ளிட்ட நூல்களை மொழிபெயர்த்திருக்கிறார். திசையெட்டும் மொழியாக்க விருது பெற்றவர். தொடர்புக்கு : thendralaham@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *