உலகம் பஞ்சபூதங்களால் உருவான அழகிய படைப்பு. அந்த அழகிய படைப்பின் அணிகலன்கள் கலைஞர்கள். உலகியலை உயிரோட்டத்துடன் அடுத்தடுத்த தலைமுறைக்கு வழங்கும் நிபுணர்கள் கலைஞர்கள். அவ்வகையில் நிபுணராக, அறிஞராக, கவிஞராக, பொறியாளராக, அறிவியலாளராக, ஆசிரியராக எனப் பல்துறையின் படைப்பாளியாய் விளங்கிய வா.செ.குழந்தைசாமி (எ) குலோத்துங்கன் அவர்களை அறிமுகப்படுத்திக்கொள்வோம்.
பிறப்பு – படிப்பு
கொங்கு நாட்டின் சாளரம் என்று அழைக்கப்படும் கரூர் மாவட்டத்தில் வாங்கலாம்பாளையம் என்ற சிற்றூரில் 14 ஜூலை 1929 அன்று பிறந்தவர் வா.செ.குழந்தைசாமி. சிற்றூரில் தமிழ் வழிக் கல்வியில் தமது படிப்பைத் தொடங்கி இந்தியாவிலும், பின்னர் ஜெர்மனியிலும், அமெரிக்காவிலும் உயர்கல்வி பயின்றவர். கரக்பூரிலுள்ள இந்தியத் தொழில்நுட்பக் கழகத்தில் தொழில்நுட்பத்தில் முதுகலைப் பட்டம் பெற்ற இவர், நீர்வளத் துறையில் முனைவர் பட்டம் பெற்றார். நீர்வளத் துறையில் இவரின் கண்டுபிடிப்புகளை குழந்தைசாமி மாதிரியம் என்றே இன்றளவும் அழைத்தும், கற்றுக் கொடுத்தும் வருகின்றனர். இந்தியாவில் பல பொறியியல் நிறுவனங்கள் இவரது கண்டுபிடிப்பான குழந்தைசாமி மாதிரியம் என்பதை மாணவர்களுக்குக் கற்றுத் தந்து வருகின்றன.
பணியும் சிறப்பும்
பதவி என்பது ஒருவரின் படிப்பால், பண்பால், அறிவால் எனப் பல நிலைகளில் மனிதர்களை மேம்படுத்தும். அவ்வகையில் டாக்டர் வா.செ. குழந்தைசாமி அவர்கள் நீர்வளத் துறைப் பேராசிரியர், தமிழகத் தொழில் நுட்பத் கல்வி இயக்குநர், யுனெஸ்கோ வல்லுநர் போன்ற பொறுப்புகளை வகித்தவர்.
துணைவேந்தராக மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் சிறப்புற பணியாற்றினார். மூன்று முறை தொடர்ந்து சென்னை அண்ணா பல்கலையின் துணைவேந்தராக இருந்து உலகத்தரம் வாய்ந்த பல்கலைக்கழகம் என்று பெயர் பெறும் அளவுக்கு அண்ணா பல்கலைக்கழகத்தை உயர்த்தினார். இந்திரா காந்தி தேசியத் திறந்த நிலைப் பல்கலைக்கழகத்திலும் துணை வேந்தராக இருந்தவர். மூன்று முக்கியப் பல்கலைக்கழகங்களில் பொறுப்பு வகித்த பெருமைக்குரியவர்.
ஓலைச்சுவடிகளாக , கல்வெட்டுகளாக, செப்பேடுகளாக வரிவடிவங்களில் வளர்ந்த தமிழ், அச்சாக்கம் பெற்று நூல் வடிவில் திகழ்வதோடு நிறுத்தி விடாமல் அதனை அடுத்த நிலையிலும் வளர்த்த வேண்டும் என்னும் பலர் சிந்தித்த போது, வா.செ. குழந்தைசாமி முன்வந்து செயல்படலானார். உலகில் பல ஆயிரம் மொழிகள் காலத்திற்கு ஏற்றவாறு மேம்பாடு அடைந்து வருகின்றன. தமிழும் அவ்வகையில் மேம்பாடு அடைய வேண்டும் என நீண்ட காலத் திட்டத்தின் வழி செயல்வடிவம் கொடுத்து செயலாற்றியவர்.
அன்றைய நிலையிலும், இன்றைய நிலையிலும் பலர் பதவி என்பதை தமது வளர்ச்சிக்கு மட்டுமே பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் வா.செ. குழந்தைசாமி தனக்குக் கிடைத்த நிலையை தமிழின் வளர்ச்சிக்குப் பயன்படுத்தினார். தமிழக அரசின் சார்பில் தமிழ் இணையப் பல்கலைக் கழகம் தொடங்க முக்கியக் காரணமாகத் திகழ்ந்து அதற்கான செயல்திட்டம் அளித்து, இணையப் பல்கலைக்கழகம் தொடங்கிட நன்விதையாகத் திகழ்ந்து அதன் நிறுவனத் தலைவராகவும் இருந்தவர்.
தமிழ் மொழியை அயலாரும் எளிதாகக் கற்க வேண்டும் என்னும் நோக்கில் பல்வேறு செயல்திட்டங்களை நடைமுறைப்படுத்தினார். தமிழ் மொழிக்குப் புதுமை ஆக்கம் தேடுவதில் தன்முனைப்புடன் செயலாற்றி இன்று பல இளையோர்கள் அறிவியல் தமிழ், கணினித் தமிழ், இணையத் தமிழ் என்று இயங்கிட உந்து சக்தியாகத் திகழ்ந்தவர். பல்வேறு உயர்பதவிகளை திறம்பட வகித்து, அதனதன் துறைகளில் தனித்த முத்திரையும் பதித்தவர்.
கணினித் தமிழ் தமிழ்நாட்டில் வேரூன்றத் தொடங்கும்போது தமிழக அரசு நாடிய குறிப்பிட்ட சிலரில் வா.செ.குழந்தைசாமி முதன்மையானவர். இணையம் வழியாகத் தமிழைக் கற்பிக்க நிறுவிய தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் நிறுவனத் தலைவராக இருந்து வழிகாட்டி, தமிழில் உயர்மட்ட அறிவியலும் தொழில்நுட்பமும் கற்பிப்பதில் பெருமுனைப்பு கொண்டு பல முயற்சிகளைத் தொடங்கினார்.
பல துறைகளின் ஆங்கிலக் கலைச்சொற்களைத் தொகுத்து அவற்றைத் தமிழில் மொழிபெயர்த்த பெரும்பணியை இவர் தமிழ் இணையக் கல்விக்கழகம் மூலம் செயல்படுத்தினார். பல்வேறு துறைகளின் கலைச்சொற்களைத் தமிழ் மொழியில் உருவாக்கிட உறுதுணையாகத் திகழ்ந்தார். கனவை உழைப்பாக்கினார்.
பல்கலைக்கழக மானியக் குழுமம், அனைத்திந்தியத் தொழில் நுட்பக் குழுவின் பொதுக் குழ, செயற் குழு, அனைத்திந்தியத் தொழிற்பயிற்சிக் கல்விக் குழு ), தமிழகத் திட்டக் குழுமம், தேசிய கல்வி, ஆய்வு பயிற்சிக் குழு தேசிய கல்வி, திட்டமிடுதல் நிர்வாக நிறுவனம் போன்ற பல நிறுவனங்களில் உறுப்பினராக இருந்தவர். சர்வ தேசியத் தொலை நிலைக் கல்விக் குழுவில் ஆசியாவின் துணைத் தலைவராகவும் காமன்வெல்த் நாடுகளின் பல்கலைக்கழகங்கள் குழுவின் தலைவராகவும், இந்தியப் பல்கலைக்கழகங்கள் குழுவின் தலைவராகவும், இந்தியத் தொழிற்கல்விக் கழகத்தின் தலைவராகவும் பணியாற்றியவர். ‘துணைவேந்தர்களுக்கெல்லாம் துணைவேந்தர்’ என்று பலராலும் அழைக்கப்படும் மாண்பமை மாந்தர்.
இலக்கியம்
இவர் பொறியியல் துறையில் ஆசிரியராக, ஆராய்ச்சியாளராக, நிர்வாகியாகப் பணிபுரிந்து வந்தவர் எனினும், பொதுவாக இலக்கியத்தில், குறிப்பாகத் தமிழில் ஆர்வமும், ஈடுபாடும் உடையவர். ‘குலோத்துங்கன்’ என்ற புனை பெயரில் கவிதைகள் எழுதுபவர்.
இதுவரை இவரது தமிழ்ப் படைப்புகள் ஆறு கவிதைத் தொகுப்புகளாகவும், தமிழில் எட்டு உரைநடை நூல்களாகவும் ஆங்கிலத்தில் மூன்று உரைநடை நூல்களாகவும் ஒரு கவிதை நூலாகவும் வெளிவந்துள்ளன. மேலும் தமிழிலும் ஆங்கிலத்திலும் பொதுத் தலைப்புகளில் பல கட்டுரைகள் எழுதியுள்ளார். இவருடைய கவிதைகள் அனைத்தும் கொண்ட தொகுப்பு ‘குலோத்துங்கன் கவிதைகள்’ என்ற தலைப்பில் வெளிவந்துள்ளது.
‘வாழும் வள்ளுவம்’ என்ற தலைப்பில் வெளிவந்த இவருடைய நூலுக்கு 1988இன் தேசிய அங்கீகாரமான சாகித்ய அகாதமி விருது வழங்கப்பட்டது.
இவருடைய கவிதைகள் சிலவற்றின் மொழிபெயர்ப்பு ‘Earth is Paradise Enough’ என்ற தலைப்பில் வெளிவந்துள்ளது. இவர் எழுதிய ‘வாழும் வள்ளுவம்’ என்ற நூலின் மொழிபெயர்ப்பு ‘The Immortal Kural’ என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் சாகித்ய அகாதமியால் வெளியிடப்பட்டிருக்கிறது. இரண்டும் இவரது மொழியெர்ப்பே. ஆங்கிலம், தமிழ், இரண்டிலும் பேச்சாற்றலும், எழுத்தாற்றலும் பெற்றவர். இவரது கவிதைகளின் இரண்டாவது மொழி பெயர்ப்புத் தொகுப்பு An Unending Ascent என்ற தலைப்பில் ஆங்கிலத்தல் வெளிவர உள்ளது.
குலோத்துங்கன் கவிதைகள், மானுட யாத்திரை பாகம் 1-2, உள்ளத்தில் ஏணியுளர் உயர்வர், வளர்க தமிழ், விண் சமைப்போர் வருக, வாயில் திறக்கட்டும், கதவுகள் காப்பதில்லை, அணையாத் தீபம் போன்ற கவிதை நூல்களையும்; வாழும் வள்ளுவம், சமுதாயச் சிந்தனைகள், அறிவியல் தமிழ், மதி வளம் நமது செல்வம், இது கல்வி யுகம், தமிழ் எழுத்துச் சீரமைப்பு, உலகச் செவ்வியல் மொழிகளின் வரிசையில் தமிழ், ஆடு மேய்ப்பதில் தொடங்கி அண்ணா பல்கலையைத் தாண்டி என்று பல உரைநடை நூல்களையும் தமிழ் இலக்கியத்திற்குத் தந்து அணி சேர்த்தவர்.
கலைச் சொல்லாக்கம், புதிய சொற்களை உருவாக்கும் உத்திகள் குறித்து பல நூல்கள், கட்டுரைகள் எழுதியுள்ளார். தமிழ் எழுத்துச் சீரமைப்புப் பணியை லட்சியமாக கொண்டவர். வரிவடிவச் சீரமைப்புப் பணியை கடந்த 36 ஆண்டுகளாக ஓர் இயக்கமாகவே நடத்தி வருகிறார். 247 தமிழ் ஒலி எழுத்துகளைக் குறிப்பிட அதிகபட்சம் 39 குறியீடுகளுக்கு மேல் தேவை இல்லை என்பது வா.செ.குழந்தைசாமி அவர்களின் உறுதியான கருத்தாகும்.
அறிவியல் தமிழ்
இன்றைய நிலையில் அவரவர் மொழியை அறிவியல் துறையோடு இணைத்து தமது மொழியின் மேம்பாட்டிற்குப் பலர் அரும்பாடுபட்டு வருகின்றனர். அவ்வகையில் நமது தமிழ் மொழியை அறிவியல் துறை நோக்கிச் சிந்திக்க வைத்த முதல் ஆளுமை வா.செ.குழந்தைசாமி.
உலக மொழிகளுக்கெல்லாம் மூத்த மொழி, சிறந்த மொழி என்று பேசுவதோடு நின்றுவிடாமல் தமிழின் வளர்ச்சியை இன்றைய நிலையில் எவ்வாறு மேம்படுத்திட வேண்டும் என்று சிந்தித்து செயலாற்றி அதற்கான விதைகளையும் தமிழ் நிலத்திற்குத் தந்தவர். வளரும் உலகில் மலரும் அறிவுத் துறைகள் அனைத்தும் தமிழில் வளர வேண்டும் என்னும் நோக்கில் சிந்தித்து தமிழ் மொழியை அடுத்த நிலைக்குச் செயல்பட வைக்க இவரது அறிவியல் தமிழ் நூல் முக்கியப் பங்கு வகிக்கின்றது.
விருதுகள்
டாக்டர் வா.செ.குழந்தைசாமியின் மதிப்புமிகு பணிகளை அரசும் அமைப்புகளும் பட்டியலிட்டு பல்வேறு விருதுகளை அளித்து சிறப்பித்துள்ளது. ஆறு பல்கலைக்கழகங்களில் கெளரவ டாக்டர் பட்டம் பெற்ற சிறப்பு மிகு தமிழர் என்ற பெருமைக்குச் சொந்தக்காரர் டாக்டர் வா.செ.குழந்தைசாமி.
கல்வித் துறையில் இவர் ஆற்றிய தொண்டுக்காக, பல்கலைக்கழக மானியக் குழுமம் இவருக்கு 1990ஆம் ஆண்டுக்குரிய பிரணவானந்த அடிகளார் விருதை வழங்கிச் சிறப்பித்தது. ஐஐடி, கரக்பூர், 2003இல் எங்கள் நிறுவனத்தின் பெருமைமிகு முன்னாள் மாணவர் என்ற கௌரவத்தை அளித்துச் சிறப்பித்தது.
அறிவியலுக்கும், கல்விக்கும் இவர் ஆற்றிய தொண்டினைப் பாராட்டி, இந்திய அரசு 1992இல் தேசிய கௌரவமான ‘பத்மஸ்ரீ’ விருதும், அறிவியல் – தொழில் நுட்பம் ஆகிய இரண்டு துறைகளிலும் இவர் செய்த சாதனைகளுக்காக 2002இல் தேசிய கௌரவமான ‘பத்ம பூஷண்’ விருதும் அளித்துச் சிறப்பித்தது.
1996ஆம் ஆண்டு தமிழகப் புலவர் குழு ‘செந்தமிழ்ச் செம்மல்’ வழங்கிச் சிறப்பித்தது. அதே ஆண்டு மதுரை காமராசர் பல்கலைக்கழகம் ‘தமிழ்ச் செம்மல்’ விருதும், பொற்கிழியும் வழங்கி பெருமைபடுத்தியது.
வா.செ.குழந்தைசாமி எழுதிய ‘அறிவியல் தமிழ்’ என்ற நூலுக்குத் தமிழக அரசின் பரிசு 1987இல் வழங்கப்பட்டது. தமிழ் மொழியில் இவருக்குள்ள ஈடுபாடு, ஆற்றல், தமிழ் மொழி மேம்பாட்டுக்கு இவர் ஆற்றியுள்ள தொண்டு இவற்றைப் பாராட்டி ஆழ்வார்கள் ஆய்வு மையம் 1997இல் இவருக்கு பாராட்டுப்பத்திரம், பொற்கிழி கொண்ட அண்ணா விருது வழங்கியது. தமிழக அரசு இவருக்கு 1999இல் ஒரு லட்சம் ரூபாய் பொற்கிழியும், பாராட்டுப் பத்திரமும் நினைவுச் சின்னமும் கொண்ட திருவள்ளுவர் விருது வழங்கியதும் குறிப்பிடத்தக்கது.
புதிய இந்தியாவின் கல்விக் கொள்கைக்கு அடித்தளம் அமைத்து செயலாற்றியவர்களில் வா.செ. குழந்தைசாமி முக்கியமானவராகத் திகழ்கிறார். இந்தியாவின் பிரதம அமைச்சர்கள் பலரோடும் நெருங்கிய தொடர்பு கொண்டவர். அரசுகளும் அமைப்புகளும் மாறினாலும் வா.செ. குழந்தைசாமிக்கு உண்டான பொறுப்புகள் மட்டும் மாறாமல் இவர் இயங்கிட அனுமதியும் அரசாணையும் பிறப்பிக்கப்பட்டு வந்தன.
நிறைவாக…
தமிழும் கலையும் தனக்கான மைந்தர்களை உருவாக்கிக் கொண்டு பல படைப்புகளை உருவாக்க வைத்து அழகு பார்த்துக் கொள்ளும். அவ்வகையில் தமிழுக்கும், பொறியியல் துறைக்கும், நீரியல் துறைக்கும், கல்வித் துறைக்கும் தன்னால் இயன்ற பணிகள் பலபுரிந்து தம் வாழ்நாளின் இறுதிவரை மண்ணின் மைந்தராய் வாழ்ந்த மாண்பமை மாந்தர் வா.செ. குழந்தைசாமி ஆயிரம் பிறை கண்ட நாயகனாய் 2016இல் தமது 87வது வயதில் மறைந்தார்.
சிலர் மறைந்தாலும் அவர்களின் பணியும், பண்பும் என்றென்றும் பேசும் என்ற கூற்றுக்குச் சொந்தக்காரர். வரலாற்றின் கோடிட்ட இடங்களை மிகச் சரியாகப் பூர்த்தி செய்த ‘வா.செ. குழந்தைசாமி மாதிரியம்’ பொறியியல் துறைக்கு மட்டுமின்றி தமிழ் மொழிக்கும் எப்போதும் எல்லோருக்கும் முன்மாதிரியமே.
0
அருமையான பதிவு. இன்னும் பலரை எதிாப்பார்க்கிறேன்
அருமையான தொடர் வாழ்த்துகள்
தமிழ் கூறும் நல்லுலகிற்கு அடுத்த தலைமுறைகளுக்கு அறிவார்ந்த செய்திகளை பதிவு செய்திருக்கும் உங்கள் சேவை மென்மேலும் தொடர வாழ்த்துகள்….