Skip to content
Home » மண்ணின் மைந்தர்கள் #3 – ஜி.டி. நாயுடு : கண்டுபிடிப்புகளின் நாயகன்

மண்ணின் மைந்தர்கள் #3 – ஜி.டி. நாயுடு : கண்டுபிடிப்புகளின் நாயகன்

ஜி.டி. நாயுடு

காலந்தோறும் விஞ்ஞானிகள் தோன்றி விதவிதமான கண்டுபிடிப்புகளை அறிமுகப்படுத்திய வண்ணமே உள்ளனர். அவர்களில் ஒரு சிலர் மட்டுமே வரலாற்றில் அழுத்தமாக இடம்பெறுகின்றனர். மற்றவர்கள் புறக்கணிப்புக்கு உள்ளாகின்றனர். கோயமுத்தூர் நகரைச் சார்ந்த ஜி.டி.நாயுடு இரண்டாவது வகையைச் சேர்ந்தவர்.

பிறப்பும் சிறப்பும்

1893 ஆம் ஆண்டு கோயமுத்தூரில் கலங்கல் என்னும் ஊரில் பிறந்தவர் ஜி.டி.நாயுடு. பள்ளிப்பாடம் கற்காமல் இயற்கையைத் தனது பள்ளிக்கூடமாகவும் வகுப்பறையாகவும் மாற்றிக் கொண்டு பாடம் படித்தவர். செடிகளுடனும் மரங்களுடனும் விதைகளுடனும் ஆராய்ச்சிக் கல்வியை அவர் தொடர்ந்தார்.

இயற்கையிலேயே பொறியியல் அறிவு பெற்று பலவிதமான கண்டுபிடிப்புகளைத் தொடர்ந்த வண்ணம் இருந்தார். ஊராரும் உற்றாரும் இவரைப் பல விதங்களில் எள்ளி நகையாடினர். ஆனால் ஜி.டி.நாயுடு எந்த விதத்திலும் மனம் தளரவில்லை. சிறு வயதில் மண்ணில் எழுதிப் பாடம் படிக்கத் தொடங்கியபோது இவர் மண்ணின் மைந்தர் ஆவார் என்ற கனவுகளுடனேயே போராடிப் பல கண்டுபிடிப்புகளைத் தொடர்ந்தார்.
தமது தோட்டத்தில் சிறிய அளவு பப்பாளியைப் பெரிய பூசணிக்காய் அளவு விளைவித்துத் தமது திறமையை வெளிப்படுத்தினார். இன்று சாதாரண மளிகைக் கடை முதல் மிகப்பெரிய வணிக நிறுவனங்கள் வரை பயன்படுத்தும் கால்குலேட்டர் முதல் அன்றாட வாழ்வின் அங்கமாகப் மாறிப்போன ரேசர் கருவி வரை இவருடைய கண்டுபிடிப்புகள் கணக்கில் அடங்காதவை.

ஆங்கிலேயர் மூலமாகவே இந்தியர்கள் கல்வி அறிவு பெற்றனர் என்று ஒரு சிலர் இன்று வாதாடி வரும் சூழலில் நான்காம் வகுப்பு வரை மட்டுமே படித்த ஜி.டி.நாயுடு இந்தியாவிலேயே முதன்முதலில் எலக்ட்ரிக் வாகனத்தைத் தமது யு.எம்.எஸ் நிறுவனத்தின்மூலம் தயாரித்துக் காட்டினார் என்பது பொறியியல் மாணவர்களுக்குப் பாடமாக இருந்திருக்க வேண்டும்.

எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்க வேண்டும் என்னும் நோக்கில் 1950ஆம் ஆண்டு எளிய மக்களுக்கும் இல்லம் இருக்கவேண்டும் என்ற உயர் கனவில் வெறும் 722 ரூபாயில் இரண்டு அறைகள் மற்றும் இன்னும் பிற வசதிகளுடன் அந்த வீட்டை 24 மணி நேரத்தில் கட்டி முடித்து அரசுக்குத் தமது கண்டுபிடிப்பையும் அனுப்பி வைத்தார்.

இதுவரை இத்திட்டம் அங்கீகரிக்கப்படவில்லை. இந்தத் திட்டத்தை அரசுகள் நடைமுறைப்படுத்தி இருந்தால் இந்தியாவில் எல்லோருக்கும் நிச்சயம் வீடு இருந்திருக்கும். எளிய சிமெண்ட் கலவையை உருவாக்கி ஏழைகளும் பயன்படுத்தலாம் என்று நடைமுறைப்படுத்தத் தொடங்கிய போது பல நிறுவனங்கள் இதனைப் பயன்பாட்டு அளவிலேயே முடக்கின என்பது உண்மை வரலாறு. இன்றும் சிமெண்ட் என்பது ஏழைகளின் எட்டாக் கனியாகவே இருக்கின்றது.

இன்றைய காலங்களில் தமிழக அரசின் பேருந்துகளில் பயணச்சீட்டு இயந்திரங்களைப் பார்த்திருப்போம். ஆனால் 70 ஆண்டுகளுக்கு முன்னரே இதனை நடைமுறைப்படுத்தியவர் ஜி.டி.நாயுடு.

அன்றைய காலத்தில் இந்தியாவில் முதல் போக்குவரத்து பேருந்து நிறுவனம் தொடங்கி முதன்முதலில் கோவை பழனி இடையே பேருந்தை இயக்கினார். அந்தப் பேருந்து இன்னமும் அருங்காட்சியகத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. டாடாவும் பிர்லாவும் தொழிலில் கோலோச்சிய காலத்திலேயே முந்நூறுக்கும் மேற்பட்ட பேருந்துகளை இயக்கி மிகப்பெரிய நிறுவனமாக வளர்த்தார்.

2500 பணியாளர்களின் தலைவராகத் திகழ்ந்தவர். பேருந்து நிலையங்களில் இவரது கம்பெனியின் பேருந்துகள் வரும் நேரத்தைத் துல்லியமாகக் கணக்கிட்டு அதற்கென்று ஒரு கருவியை நிறுவினார். இன்று இந்தியாவின் மிகப்பெரிய நிறுவனமாக டாடா நிறுவனத்தை நாம் போற்றுகின்றோம். அந்த அளவிற்கு வளர்ந்திருக்க வேண்டிய யு.எம்.எஸ் நிறுவனம் அரசு அங்கிகாரமின்மை உள்ளிட்ட காரணங்களால் அவர் பெயரோடு சுருங்கிவிட்டது.

தொழில் துறை, வேளாண்துறை, ஆட்டோமொபைல் துறை, இயந்திரவியல் துறை எனப் பல துறைகளின் வேந்தராகத் திகழ்ந்த ஜி.டி.நாயுடு ஒரு கட்டத்தில் மனமுடைந்து தான் கண்டுபிடித்த அனைத்துப் பொருட்களையும் மக்கள் முன்னிலையில் உடைத்தார் என்பதை நாம் உணர்ந்து இவரின் வேதனையை நாம் புரிந்துகொள்ள வேண்டும். இவர் கண்டுபிடிப்புகளை ஐரோப்பிய உலகம் போற்றிய அளவுக்குக்கூட இந்திய அரசு கொண்டாடவில்லை என்பது மறுக்க முடியாத உண்மை.

தமது நிறுவனத்தின் பணியாளர்களிடம் மிகுந்த கண்டிப்பும் மாறாத அன்பும் கொண்டவர். அதுமட்டுமின்றி இரவு நேரங்களில் பணியிடத்திற்குச் சென்று தமக்குக் கீழ் பணிபுரியும் அதிகாரியின் மேசையில் காகிதங்கள் ஒழுங்காக இல்லாமல் இருந்தால், அதனை முறையாக அடுக்கி வைத்து பக்கத்திலேயே ஒரு தாளில், ‘நாளை உங்கள் முதலாளிக்கு வேலை இருக்கிறது அதனால் உங்கள் மேசையை அலங்கரிக்க இயலாது’ என்று எழுதி வைத்துவிட்டு வருவார்.

பணியில் சுறுசுறுப்பு, வேலையில் தெளிவு என்பதைத் தம் தாரக மந்திரமாக கொண்டிருந்தார் ஜிடி நாயுடு. தான் செய்யும் தவறுகளை ‘My Own Blunders’ என்று தலைப்பிட்டு ஒரு கோப்பில் எழுதி வைத்திருப்பது இவருடைய வழக்கம். அதனை மறுமுறை செய்யாமல் இருக்கவே இவ்வாறு செய்கிறேன் என்பார்.

ஜி.டி. நாயுடு தொழிலாளியாக இருந்து முதலாளியாக மாறினாலும் பல நேரங்களில் தொழிலாளர்களுடன் இணைந்து இவரும் தொழிலாளி போலவே வேலை செய்து கொண்டிருப்பார்.

ஒருமுறை சிட்டிசன் வாட்ச் கம்பெனிக்குப் போயிருந்தார். உள்ளே போகிறவர்களை எல்லாம் பெயர், படிப்புத் தகுதி என்ன என்றெல்லாம் கேட்டு சிற்சில இடங்களைப் பார்க்க அனுமதி மறுத்து விடுவது அந்தக் கம்பெனியின் வழக்கமாக இருந்தது.நாயுடுவுக்கு எந்தத் தடையும் சொல்லாமல் எங்கே வேண்டுமானாலும் போகலாம் என்று சொல்லிவிட்டார்களாம். ஏன் என்று கேட்டதற்கு எங்கள் தொழில்நுட்பம் காப்பி அடிக்கப்பட்டு விடக் கூடாது என்பதற்காகத்தான் இத்தனைக் கட்டுப்பாடுகள். உங்கள் படிப்புத் தகுதிக்கு நீங்கள் அப்படி எதுவும் செய்துவிட மாட்டீர்கள் என்கிற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. ஆகவே எங்கே வேண்டுமானாலும் போகலாம் என்றார்களாம்.

ஜி.டி.நாயுடு எதுவும் பேசவில்லை. அமைதியாகச் சுற்றிப் பார்த்துவிட்டு வந்து விட்டார். இந்தியா வந்த பிறகு, சில நாட்களில் சிட்டிசன் வாட்ச் போலவே இருக்கும் ஒரு வாட்சை தயாரித்து சிட்டிசன் கம்பெனி நிர்வாகத்துக்கு அனுப்பினார். அத்துடன் அவர் அனுப்பியிருந்த கடிதத்தில்,‘என் நாணயத்தைக் குறித்து நீங்கள் வைத்திருந்த நம்பிக்கை மிகச் சரியானது. ஆனால் என் திறமை குறித்து நீங்கள் வைத்திருந்த நம்பிக்கை தவறானது என்பதைச் சுட்டிக் காட்ட உங்கள் முதல் நம்பிக்கையை உடைக்க வேண்டிய கட்டாயம் எனக்கு ஏற்பட்டதற்கு வருந்துகிறேன்’ என்றார்.

640 பூட்டுகளைத் திறக்கக்கூடிய ‘மாஸ்டர் கீ’ ஒன்றை ஜி.டி நாயுடு தயாரித்து வைத்திருந்தார். தனது அலுவலகம், வீடு, தொழிற்சாலை எனப் பல இடங்களுக்கும் ஒரே சாவியைப் பயன்படுத்தினார்.

இரண்டு சக்கர வாகனங்களில் பக்கத்தில் ஒரு பெட்டியை அமைத்து ஒருவர் அமர்ந்து செல்வதை நாம் திரைப்படங்களில் பார்த்திருப்போம். அதற்கான மூலகர்த்தா ஜி.டி.நாயுடு. ஆம், உணவகத்தில் வேலை செய்து அதில் வந்த தொகையில் ஆங்கிலேயரிடம் ஒரு பைக்கை வாங்கி அதை அக்குவேறு ஆணிவேறாகப் பிரித்து மீண்டும் பொருத்திக் காட்டி ஒரு பெட்டியையும் இணைத்தார் இந்த மண்ணின் மைந்தர்.

ஆங்கிலேயர்கள் வியந்து பார்த்த இந்த மைந்தரை நம் மண் உற்று நோக்கத் தவறியதால் இவருடைய பல கண்டுபிடிப்புகளின் காப்புரிமை ஐரோப்பிய நாடுகளிடம் சென்றுவிட்டன என்பதையும் இங்கு அழுத்தமாகப் பதிவு செய்தே ஆகவேண்டும்.

இரண்டாம் உலகப் போர் காலத்தில் ஐரோப்பிய நாடுகளில் பிளேடு கருவிக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டது. பயன்படுத்திய பிளேடை மீண்டும் மீண்டும் பயன்படுத்தும்போது வெட்டுக்காயம் ஏற்பட்டது. அப்போது ஐரோப்பிய நாட்டில் சுற்றுப்பயணத்தில் இருந்த ஜி.டி.நாயுடு அங்கேயே வெட்டுக்காயம் ஏற்படாத பிளேடு ரேசர் கருவியைக் கண்டுபிடித்துப் பலரின் பாராட்டுகளையும் பெற்றார்.

ஜெர்மனியில் நடந்த பொருட்காட்சியில் இவருடைய சவரக்கத்தி, பிளேடுக்கு முதல் பரிசு கிடைத்தது. பல நாடுகளும் ஜி.டி.நாயுடுவை அணுகி, தயாரிக்கும் உரிமையைக் கோரின. இந்தியாவிலேயே தயாரிக்க வேண்டும் என்ற தனது கனவால் உரிமையை வழங்க அவர் மறுத்துவிட்டார். ஆங்கிலேயே அரசிடம் இதற்கான தொழில் நிறுவனம் தொடங்க அனுமதி கேட்க, அரசு மறுத்துவிட்டது. அந்தக் கண்டுபிடிப்பை ஓர் அமெரிக்க நிறுவனத்துக்கு இலவசமாகவே வழங்கினார் என்பது வரலாறு பேசும் உண்மை. அன்றைய காலத்தில் இந்தியாவிலேயே மிக அதிகமாக வரி செலுத்தியவர்களில் ஜி.டி நாயுடு குறிப்பிடத்தகுந்தவர்.

யாரையும் எளிதில் சந்திக்காத ஹிட்லர் ஜிடி நாயுடுவை நேரில் சந்திக்க ஒப்புக்கொண்டார் என்பது இங்கு பதியப்பட வேண்டிய தகவல். இந்தியாவின் கலாச்சாரம் குறித்தும் பண்பாடு குறித்தும் அரை மணி நேரத்திற்கு மேலாக ஹிட்லருடன் பேசியதையும் , அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டதையும் ஜி.டி . நாயுடு தம் குறிப்புகளில் தெரிவித்துள்ளார். ஜெர்மனியில் இருந்து கிளம்பும்போது தனக்கு மிகவும் பிடித்தமான ஒரு மகிழுந்தை வாங்கி இந்தியா கொண்டு வந்துள்ளார். அந்த மகிழுந்து இன்னமும் இவரின் அருங்காட்சியகத்தில் பராமரிக்கப்படுகிறது.

தாம் கண்டிபிடித்த பல பொருட்களை முறையாகப் பதிவு செய்யாத காரணம் என்னவென்றால் அதனை எல்லோரும் பயன்படுத்தட்டும் என்ற பொது நோக்கம்தான். ஆங்கில அரசு இவர் மேல் அதிகபட்ச வரியைத் திணித்த காரணத்தினாலும் இந்தியாவின் விடுதலைக்குப் பிறகும் மத்திய அரசு இவரை ஊக்குவிக்காததன் காரணமாகவும் இவருடைய பல கண்டுபிடிப்புகள் உலகம் காணாமலேயே மறைந்துவிட்டது என்பது வருந்தத்தக்கது.

2,500 ரூபாய்க்குத் தயாரிக்கக் கூடிய கார் ஒன்றின் ப்ளூ பிரிண்டை மத்திய அரசுக்கு அனுப்பி வைத்து அதன் அனுமதிக்காகக் காத்திருந்தார். ஆனால் வழக்கம் போல அனுமதி மறுக்கப்பட்டது. இவருடைய மிக எளிய விலையிலான மகிழுந்துக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தால் இந்தியா மகிழுந்து உற்பத்தியில் மிகச் சிறப்பான இடத்தைப் பெற்றிருக்கும்.

இந்திய அரசு இவரைப் போற்றி ஊக்கப்படுத்தி இருந்தால் அறிவியல் துறையில் இன்னும் பல கருவிகளைக் கண்டுபிடித்து இந்தியாவிற்கு நிச்சயம் பெருமை தேடித் தந்திருப்பார் ஜி.டி.நாயுடு.

கோயமுத்தூர் நகரம் பருத்தி விளைச்சலுக்குப் புகழ்பெற்ற நகரம். ஜி.டி.நாயுடு பருத்தி ஆலை ஒன்றைத் துவக்கி அதிலும் தமது திறமையை வெளிப்படுத்தினார். இவர் உருவாக்கிய பருத்திச் செடிக்கு நாயுடு காட்டன் என்றே ஜெர்மனி பெயரிட்டது.

கோயமுத்தூர் நகரம் இன்று தொழிற்துறையிலும் ஆட்டோ மொபைல் துறையிலும் சிறந்து விளங்க இந்த மண்ணின் மைந்தர் விதைத்த விதைகள்தான் காரணம். கோயமுத்தூர் நகரில் முதன்முதலில் தொழிற்கல்விக்கு வித்திட்டு அதற்கான பாலிடெக்னிக் கல்லூரியைத் தொடங்கிய வித்தகர் ஜி.டி.நாயுடு.

ஜி.டி. நாயுடு

ஐரோப்பிய நாடுகள் முழுமையும் சுற்றுப்பயணம் செய்து பல தொழில்நுட்பங்களைக் கற்றுத் தேர்ந்த இந்த மைந்தர் பண்பிலும் மரியாதையிலும் என்றும் சிறந்தவராகவே இருந்துள்ளார். வெளிநாடு பயணங்களில் இவரின் சட்டைப் பையில் ‘மது, மாது, போதை தொடாதே’ என்ற வாசகத்தை எப்போதும் உடன் வைத்திருப்பார். பல தலைவர்களுடனும் நெருங்கிப் பழகிய இவரின் இல்லத்திற்கு எல்லாத் தலைவர்களும் வந்து சென்றுள்ளனர். விருந்தோம்பலுக்கு இலக்கணமாக , ஜி.டி.நாயுடு இல்லத்திற்கு யார் வந்தாலும் உணவு அருந்தியே செல்லவேண்டும் என்பதைத் தம் கடைசிக் காலம்வரை பின்பற்றினார்.

தோல்விக்கும் வெற்றிக்கும் ஒரே மரியாதையை அளித்து நடைபோட்ட இந்த மண்ணின் மைந்தர் உத்வேகம் ஒன்றை மட்டும் மந்திரமாகக் கொண்டு வாழ்ந்தார். எத்தனை முறை வென்றார் என்பதைவிட எத்தனை முறை தோற்றார் என்பதே இவரின் முயற்சிகளுக்கு எடுத்துக்காட்டு.

இன்று பலரின் இல்லங்களை அலங்கரித்து எல்லோரையும் விரைந்து ஓடுங்கள் எனத் துரத்தும் சுவர்க் கடிகாரங்களின் பார்முலா நாயகனும் ஜி.டி.நாயுடுதான். அறிவியல் யுகத்திலேயே இப்போதுதான் இணையத்தில் தமிழ் மொழி நடைபோடத் தொடங்கியிருக்கிறது. ஆனால் இவர் கண்டுபிடித்த தமிழ் டயல் ரேடியோ அறிவியல் தமிழுக்கு முன்னோடி என்பதையும் நாம் உணர வேண்டும்.

ஒவ்வொரு நாளையும் கண்டுபிடிப்போடு விடியவைத்து வெற்றி நடை போட்டிருக்க வேண்டிய இந்த மண்ணின் மைந்தரின் நிகழ்கால வாழ்வு பலரின் ஏச்சுக்கும் பேச்சுக்கும் இடையே நிகழ்ந்தது துயரம்தான். கோயமுத்தூர் நகருக்கும் இந்திய நாட்டுக்கும் மிகப்பெரிய அடையாளமாகத் திகழ்ந்திருக்க வேண்டிய கதாநாயகனை இன்று அவினாசி சாலை அருங்காட்சியகத்தில் அடைத்து அடையாளப்படுத்துகிறோம். எத்தனையோ அறிஞர்களின் பாடங்களைப் பாடப்புத்தகத்தில் வைத்து படிப்புச் சொல்லித் தரும் கல்வி நிறுவனங்கள் இவரை எங்கேயாவது குறிப்பிட்டிருக்கிறதா என்று தேடித்தான் பார்க்க வேண்டி இருக்கிறது.

இந்தியாவின் தொழில் வளர்ச்சியில் கோயமுத்தூரின் பங்களிப்பு மிகப் பெரியது. அதற்கு விதையாக, ஆணி வேராகத் திகழ்ந்த ஜி.டி.நாயுடுவை நாம் எளிய மக்களுக்கும் எடுத்துச் செல்லவேண்டும். இந்தியாவின் பெருமைமிகு அடையாளமாக உயர்த்திப் பிடிக்கவும் வேண்டும்.

0

பகிர:
பொ. சங்கர்

பொ. சங்கர்

கட்டுரையாளர், எழுத்தாளர். தவத்திரு சச்சிதானந்த சுவாமிகள், வேதாத்திரி மகரிசி ஆகியோரின் வாழ்வியல் சிந்தனைகளை ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவர். தொல்லியல் சான்றுகள் தேடி விரிவான பயணங்கள் மேற்கொண்டவர். கோயமுத்தூர் யுவபாரதி மையப்பள்ளியில் தமிழாசிரியராகப் பணிபுரிகிறார். தொடர்புக்கு - tamilshanker@gmail.comView Author posts

4 thoughts on “மண்ணின் மைந்தர்கள் #3 – ஜி.டி. நாயுடு : கண்டுபிடிப்புகளின் நாயகன்”

  1. ஜிடி. நாயுடு – ‘நாளை உங்கள் முதலாளிக்கு வேலை இருக்கிறது அதனால் உங்கள் மேசையை அலங்கரிக்க இயலாது’ என்று எழுதி வைத்துவிட்டு வருவார்’. மிகவும் ரசித்துப் படித்தோம். நன்றி

  2. இந்தியாவின் ஆகச் சிறந்த விஞ்ஞானியாக இருந்திருக்க வேண்டியவர்..படித்தோம்… மகிழ்ந்தோம்

  3. Pingback: மண்ணின் மைந்தர்கள்- கடிதம் | எழுத்தாளர் ஜெயமோகன்

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *