வரலாறு சில மனிதர்களை உருவாக்கும். சில மனிதர்கள் வரலாற்றை உருவாக்குவார்கள். அவ்வகையில் கோயமுத்தூர் மண் இன்று உலகம் போற்றும் மண்ணாகத் திகழ்வதற்கு உரிய மாண்புறு மைந்தராகத் திகழ்பவர் திரு. ரத்னசபாபதி.
கோவையின் வரலாற்றை உருவாக்கியவர் இவர். ஆம், வாழவே தகுதியற்ற நகராகப் பட்டியலிடப்பட்ட கோயமுத்தூர் நகரை தனது பணிகளால், செயல்களால் தேற்றம் கொண்டு மிகச்சிறந்த நகரமாக உருவாக்கிட உறுதுணையாக நின்றவர் இந்த மண்ணின் மைந்தர்.
காடுகளையும் மேடுகளையும் கடந்து பல சோதனைகளை வென்று கடும் போராட்டங்களுக்கு மத்தியில் சிறுவாணி நதியின் நீரை நகருக்குக் கொண்டு வந்து அளித்து, வளரும் நகரின் மின் தேவைகளை கருத்தில் கொண்டு பைக்காரா நீர்மின் திட்டத்தையும் நடைமுறைப்படுத்தி, கோவை நகருக்கு ஒளி விளக்கேற்றியவர்.
0
1886 ஆம் ஆண்டு மார்ச் 9 ஆம் நாள் கோவை நகரில் மரபு சார்ந்த குடும்பத்தில் பிறந்த ரத்ன சபாபதி இளமைக் காலம் முதலே மண்ணுக்காகவும் மக்களுக்காகவும் சேவையாற்றத் தொடங்கிவிட்டார். 1921 முதல் 1936 வரை கோவை மாநகர சபையின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு மக்கள் பணியாற்றத் தொடங்கினார்.
தமது பணிக் காலத்தில் ஆங்கில அரசால் கோவை மாநகரம் பல விதங்களில் புறக்கணிக்கப்படுவதை அறிந்து மனம் வருந்தினார். அதற்கான மூல காரணம் நகரில் முறையான குடிநீர் வசதிகள் இல்லாதது. கடும் பஞ்சம். தொழில் வளம் இல்லாத நகரமாக கோவை மாநகரம் அப்போதைய காலத்தில் திகழ்ந்தது. இதை எப்படியாவது மாற்றி மக்கள் வசிக்கக்கூடிய நகராக மாற்றிட வேண்டும் என்ற நோக்கில் கடும் போராட்டங்களுக்கு மத்தியில் சில திட்டங்களை முன்னெடுத்தார்.
சிறுவாணி அணை
உலகின் சுவையான குடிநீராகக் கருதப்படும் சிறுவாணி நீரை எப்படியாவது கோவை மக்களுக்குத் தந்துவிட வேண்டும் என்பதில் ரத்ன சபாபதி உறுதியாக இருந்தார். அதற்கான திட்டத்தையும் முன்னெடுத்து ஆங்கில அரசாங்கத்தின் அனுமதியும் பெற்றார். அதன் வாயிலாக தென்னிந்திய ரயில்வே நிறுவனத்திடம் இந்தத் திட்டம் ஒப்படைக்கப்பட்டது. ஆனால் கடுமையான சவால்கள் இருக்கும் என்பதால் தென்னிந்திய ரயில்வே நிறுவனம் இந்தத் திட்டத்தில் இருந்து பின்வாங்கியது.
மனம் தளராத ரத்ன சபாபதி மீண்டும் முயன்று ஆங்கில அரசாங்கத்தின் அரசாணையைப் பெற்று கோவை நகரை வளம் மிகுந்த நகராக மாற்ற வேண்டும் என்பதற்கான விதையைத் தூவிக்கொண்டே இருந்தார். பல காலம் முயன்று 1926ஆம் ஆண்டு கோவை மக்களுக்கு சுவை மிகுந்த சிறுவாணி நீரை குழாய் வழியாக கொண்டு வந்து சேர்த்தார். குழாய்களின் வழி நீர் வந்து சேர்ந்த போது கோவை மக்கள் கண்களில் ஆனந்த நீரும் வந்தது. தமது வாழ்வின் மிகப்பெரிய பணியாக இதை அவர் கருதினார்.
மின்தேவை
கிராமம், சிறு நகரம், பெரு நகரம் என வளர்ந்த கோவைக்கு அடுத்தடுத்த தேவைகள் பெருகிக்கொண்டே இருந்தன. அதனைக் கருத்தில் கொண்டு கோவை மாநகருக்கான மின் தேவைகளை உருவாக்கும் பொருட்டு சில திட்டங்களை முன்னெடுத்தார் ரத்ன சபாபதி. பைக்காரா நீர்மின் திட்டத்தை உருவாக்கிக் கோவை நகருக்கு மின்சாரம் வழங்கினார்.
பிற பணிகள்
மக்கள் தலைவர் என்பவர் மக்களுக்கான திட்டங்களை முன்னறிந்து செயல்படுத்துபவராக இருத்தல் வேண்டும். எதிர்கால நோக்குடன் சில திட்டங்களையும் செயல்படுத்த வேண்டும். அவ்வாறு மக்களின் மன ஓட்டம் அறிந்து பல திட்டங்களை நிறைவேற்றுவதில் சிறந்த தலைவராக திகழ்ந்தவர் ரத்ன சபாபதி.
வறுமை என்னும் நிலைமை நகரில் இருக்கக்கூடாது என்பதற்காகப் பல செல்வந்தர்களின் துணையுடன் நகரின் பல இடங்களில் மக்கள் உணவருந்த சத்திரங்களை உருவாக்கினார்.
கோவை போத்தனூர் பகுதியில் 15 ஏக்கர் அளவில் இலவச மருத்துவமனையும் விடுதியும் அமைத்தார். அந்தப் பகுதி இன்றளவும் சத்திரம் வீதி என்றே அழைக்கப்பட்டு வருகின்றது.
1924ஆம் ஆண்டு தென்னிந்திய ரயில்வே நிறுவனத்தின் ஆலோசனைக் குழு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட ரத்ன சபாபதி பல திட்டங்களை முன்னெடுத்தார். தொடர்வண்டிகளில் பார்ப்பனர், பார்ப்பனர் அல்லாதவர் என்ற பிரிவு இருந்ததைத் தீர்மானம் கொண்டு வந்து நீக்கச் செய்து எல்லோருக்கும் சம உரிமை கிடைக்கச் செய்தார்.
தமிழ்ப் பணி
கோவை மாநகரில் தமிழ்ச் சங்கம் தோற்றுவித்து தமிழ் வளர்ச்சிப் பணிகளில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார். 12ஆம் நூற்றாண்டில் சைவ சமயத்தின் பெருமையைப் போற்றும் பெரிய புராண நூலினை சேக்கிழார் இயற்றி முடித்தபோது சோழ மன்னன், சேக்கிழாரை யானைமீது அமர வைத்து நகர்வலம் வரச் செய்து மிகப் பெரும் சிறப்புகள் செய்தான் என்பது வரலாறு.
அதுபோல பெரிய புராணத்திற்குச் சிறந்த உரை எழுதிய திரு சி.கே.சுப்பிரமணிய முதலியாரை ஆர்.எஸ். புரம் பகுதியில் யானைமீது அமர வைத்து பெரிய புராண உரைச் சிறப்பு நூல்களை மற்றொரு யானைன்மீது பெட்டகம் போல் வைத்து மரியாதை செய்து நகர்வலம் வரச் செய்தார் ரத்ன சபாபதி.
ரத்ன சபாபதியின் பெயரால்தான் கோவையின் மையப்பகுதி ஆர்.எஸ். புரம் என்று இன்றும் அழைக்கப்படுகிறது. மக்கள் அவருக்குச் செலுத்திவரும் காணிக்கை என்று இதனை அழைக்கலாம்தான். ஆனால் ஆர்.எஸ். புரத்துக்கான விளக்கம்கூட இன்று பலருக்கும் தெரிய வாய்ப்பில்லை என்பதுதான் வேதனை. ஆங்கில அரசால் அவருக்கு வழங்கப்பட்ட திவான் பகதூர் என்ற சிறப்புப் பெயரில்கூட ஒரு சாலையும் ஆர்.எஸ். புரம் நகரில் உள்ளது.
ஆங்கில அரசால் ரத்ன சபாபதிக்கு ஆணை அதிகாரி என்ற பட்டமும் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அந்த அதிகாரத்தை அவர் தான் வாழ்ந்த மண்ணுக்காக மட்டுமே பயன்படுத்தினார்.
முல்லைப் பெரியாறு அணைக்காக தேனி மாவட்ட மக்கள் எவ்வாறு பென்னி குயிக்கை இன்றளவும் நினைந்து போற்றுகிறார்களோ அதுபோல கோயம்புத்தூர் மாவட்ட மக்களும் சிறுவாணி நீரினைக் குழாய் வழியாக கொண்டு வந்து வளமான ஊராக மாற்றிய ரத்ன சபாபதியின் பணியை நினைந்து போற்றிக் கொண்டாட வேண்டும்.
இவரின் சமாதி உக்கடம் அருகே நரசிம்ம பெருமாள் கோவில் பின்புறம் அமைந்திருக்கிறது. தமிழக அரசோ கோவை மாநகராட்சியோ அல்லது தன்னார்வ அமைப்புகளோ நினைவாலயம் எழுப்பி ரத்ன சபாபதியின் சாதனைகளை நினைவுகூரவும் கொண்டாடவும் வேண்டும்.
0
கோவை நகரின் தந்தை ஐயா இரத்னசபாபதி அவர்கள் பற்றி அறிந்து மகிழ்ந்தோம்… நன்றி…பருகும் சிறுவாணி நீரில் அவரின் உழைப்பை நினைத்தே அருந்துகிறோம்..
திவான் பகதூர் சி.எஸ். ரத்தினசபாபதி முதலியார் பற்றிய தங்கள் கட்டுரை மிக அருமை. கட்டுரையில் குறிப்பிடப்படும் பெரியபுராணப் பேருரையாசிரியர் சிவக்கவிமணி சி.கே. சுப்பிரமணிய முதலியாரின் பெயரன் நான்.
கட்டுரையில் சிறு திருத்தங்களும் தகவல்களும் தங்கள் பார்வைக்காக.
பெரியபுராண உரையை என் தாத்தா சிவக்கவிமணி சி.கே. சுப்பிரமணிய முதலியார் நிறைவு செய்தபோது உரையை யானைமேல் வைத்து நகர்வலம் வந்தது சிதம்பரத்தில். ஒரு யானைமேல் உரைநூல்கள் ஏழு பகுதிகளும் மட்டுமே வலம் வந்தன. உரையாசிரியர் யானைமேல் அமர மறுத்து நடந்தே உடன் வந்தார். தமிழ்நாடு அளவில் அன்பர்கள் சிதம்பரத்தில் கூடி நடத்திய அந்த விழா சர்.பி.டி. ராஜன் அவர்கள் தலைமையிலான குழுவால் நடத்தப்பட்டது.
அதேபோல் கோவையில் தமிழ்ச் சங்கத்தைத் துவக்கி நடத்தியவர் சிவக்கவிமணி சி.கே. சுப்பிரமணிய முதலியார்தான். ரத்தினசபாபதி முதலியார் அல்லர்.
இருவரும் மிக நெருங்கிய நண்பர்கள். என் தாத்தா வயதில் மூத்தவர் என்பதால் இருவருக்கும் தந்தை மகன் போன்ற பாசம் இருந்தது. ரத்தினசபாபதி முதலியார் கோவையின் நகர மன்றத் தலைவராக இருந்தகாலத்தின் ஒரு பகுதியில் சிவக்கவிமணி சி.கே. சுப்பிரமணிய முதலியார் துணைத்தலைவராக இருந்தார். இவர்கள் காலத்தில் சாக்கடைத் திட்டம், அரசு பெரிய மருத்துவமனை, ஆர்.எஸ்.புரம், ராம்நகர் பகுதிகள் உருவாக்கப்பட்டன.
அன்புடன்
க.சிவசுப்பிரமணியன்.
99652 50480