Skip to content
Home » மண்ணின் மைந்தர்கள் #5 – அறம் எனும் ஆயுதம்

மண்ணின் மைந்தர்கள் #5 – அறம் எனும் ஆயுதம்

தோழர் நல்லகண்ணு

அரசியலில் இருப்பவர்கள் கடைபிடிக்கவேண்டிய அடிப்படைப் பண்புகளில் ஒன்று அறம். இந்தப் பண்பு அரிதாகவிட்ட சூழலில் தோழர் நல்லகண்ணு நமக்கெல்லாம் நம்பிக்கையூட்டுபவராகத் திகழ்கிறார்.

எங்கெல்லாம் உரிமைகள் மறுக்கப்படுகின்றனவோ அங்கெல்லாம் போராடி உரிமையைப் பெற்றுத் தர வேண்டும் என்ற சித்தாந்தின் சிங்கநாதமாக வாழும் நல்லகண்ணுவுக்குச் சொத்து என்று எதுவும் இல்லை. அவர்தான் தமிழ்நாட்டின் சொத்து.

0

1925ஆம் ஆண்டு வரலாறுகளில் மிக முக்கியமான ஆண்டு. தந்தை பெரியாரின் சுயமரியாதை இயக்கத்தின் தொடக்கம், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தொடக்கம் என்ற வரிசையில், திருவைகுண்டத்தில் பத்து பேர் கொண்ட வேளாண் குடும்பத்தில் மூன்றாவது ஆண் மகவாக 1925 டிசம்பர் 26இல் பிறந்தவர் நல்லகண்ணு.

தீவிரமான வைணவ சம்பிரதாயங்களைப் பின்பற்றும் குடும்பத்தில் பிறந்து போராளியாய் மாறிய நல்லகண்ணு, ஏழை, எளிய மக்களின் உரிமைக் காவலனாகத் திகழ்ந்தார். ஆரம்பத்தில் சைவ உணவு வகைகளை மட்டுமே விரும்பிய நல்லகண்ணு போராட்டம் மற்றும் தலைமறைவுக் காலத்தில் எல்லா வகையான உணவுகளையும் சாப்பிடத் தொடங்கினார்.

பள்ளியில் படிக்கும் காலத்திலேயே இவர் போராட்டம் தொடங்கிவிட்டது. ஆங்கிலேயர்களுக்கு எதிராக நாடு முழுவதும் பல இடங்களில் பல்வேறு போராட்டங்கள் நடந்த வண்ணம் இருந்தன. ஆனால் இவர் படித்த பள்ளியில் ஆங்கிலேயர்களுக்கு ஆதரவாக நாடகம் நடந்தபோது ‘நாடகத்தை நடத்தாதே’ என்று முழங்கி தம் 15ஆம் வயதிலேயே போலிசாரின் அடக்கு முறைக்கு ஆளானார்.

இந்தியா முழுவதும் இந்தியர்களை ஒன்றிணைக்கும் போராட்டமாக வெள்ளையனே வெளியேறு போராட்டம் திகழ்ந்தது. இப்போராட்டத்தில் கலந்து கொண்டதன் காரணமாக கல்லூரியில் இருந்து வெளியேற்றப்பட்டு முழு நேரப் போராளியாய் உருமாறினார்.

1943 ஆம் ஆண்டு கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மீது கொண்ட பற்றின் காரணமாகத் தம்மை அந்த இயக்கத்தன் கரங்களில் ஒப்படைத்துக்கொண்டார். விவசாயிகள், ஏழை எளிய மக்கள், ஒடுக்கப்பட்டோர் என அனைத்துத் தரப்பினருக்கும் எல்லாமும் கிடைக்க வேண்டும் எனப் போராடித் தம் வாழ்க்கை முழுவதும் பதவியைப் பற்றிக் கவலையுறாமல் மக்களின் உரிமைகள் மட்டுமே பிரதானம் என்பதை நோக்கமாகக் கொண்டு போராடியவர்.

ஆண் என்றாலே மீசை என்பது அடையாளமாகிப் போன அக்காலத்திலே அடக்குமுறைக்கு எதிராகப் போராடியதால், காவல்துறையின் கண்ணியமற்ற முறையால் தம் மீசையை இழக்க நேர்ந்ததைப் பின்னாளில் ஒரு கூட்டத்தில் நினைவுகூர்ந்திருக்கிறார். காவல்துறையின் உயர் அதிகாரி ஒருவர் நல்லகண்ணுவைச் சிறையில் தலைகீழாகத் தொங்க விட்டு சிகரெட்டால் அவரின் மீசையைப் பொசுக்கினார். வலியால் துடித்தேன் என்று அவர் மேடையில் கூறியபோது ஆயிரமாயிரம் கண்கள் கலங்கின.

சிறையில் இருந்த காலத்தில்தான் நூல் வாசிப்பைப் பழக்கமாக்கிக் கொண்டார். சில நேரங்களில் கவிதைகள் எழுதுவதையும் வழக்கமாகக் கொண்டுள்ளார். பெரும்பாலும் பொதுப்போக்குவரத்தைத்தான் பயன்படுத்துவார். பிற்காலங்களில் காரில் செல்லத் தொடங்கியபோது பட்டுக்கோட்டையார் பாடல்களை விரும்பிக் கேட்கும் வழக்கத்தைக் கொண்டார்.

ஹோசிமின் தனது முன்மாதிரி என்று ஒரு முறை பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். பயணங்களில் தோழர்கள் அளிக்கும் உணவு வகைகளைத்தான் சாப்பிடுவார். இவரின் குணங்களை அடுக்கிக்கொண்டே போகலாம். நற்குணங்கள் கொண்ட நல்லகண்ணுவின் மனைவி பெயர் இரஞ்சிதம். பொருளாதார இழப்புகளை ஈடுகட்டி 59 ஆண்டுகள் நல்லகண்ணு ஐயாவின் இணையராகத் திகழ்ந்தார்.

நல்லகண்ணு தம் மகளுக்குக் காது குத்தும் நிகழ்வை நடத்தும் போதும் , சங்கப் பணிகளில் இருந்து தங்கம் சேர்க்காமல் கவரிங் நகை வாங்கி நிகழ்வை நடத்தியதை நாம் அறியும் போது இவரின் அற வாழ்வு நமக்குப் புரியும்.

மனைவி இரஞ்சிதத்தின் பிரிவின் போது மனமுடைந்து, சோர்வடைந்து சில நாட்கள் இருந்தார். மீண்டும் இயக்கப் பணிகளில் தன்னை ஒப்படைத்துக் கொண்டார். இடதுசாரி இயக்கங்களின் பிரிவு இவரைப் பாதித்தது. பல ஆண்டுகள் போராடியும் இடதுசாரி இயக்கங்களை இணைக்க முடியவில்லை என்பதைத் தமது தீராத இன்னலாகப் பதிவு செய்கிறார்.

போராட்ட வாழ்வு

அரசியல் எல்லைகளைத் தாண்டி அனைவராலும் மதிக்கப்படும் தகைசால் தமிழராகத் திகழும் நல்லகண்ணுவின் வாழ்வு போராட்டங்கள் சூழ்ந்தாகவே இருந்தது. நிதானமான குரலில் பேசி உரிமைப் போராட்டங்களில் பெரும் நிலச்சுவான்தார்களையும், ஆதீனங்களையும், பன்னாட்டு நிறுவனங்களையும் நடுங்க வைக்கும் வல்லமை கொண்டவர்.

‘என்று தணியும் இந்த சுதந்திர தாகம், என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்…’ என்னும் பாரதியாரின் பாடலின் மீதி பெரும் விருப்பம் கொண்டவர். ஜவாஹர்லால் நேருவின் பேச்சுகளால் கவரப்பட்டவர். விடுதலைப் போராட்டம் தொடங்கி இன்றுவரை போராட்டங்களுடனே வாழ்ந்து வருபவர் நல்லகண்ணு.

1946 ஆம் ஆண்டு கம்யூனிஸ்ட் இயக்கத்தின் ஜனசக்தி இதழில் பணியாற்றிவிட்டு, மீண்டும் களப் போராட்டங்களுக்கு முன்னுரிமை அளித்து நாங்குனேரி வேளாண் மக்களின் போராட்டங்களை முன்னெடுத்து நடத்தினார்.

‘தங்கம் செய்யாததை சங்கம் செய்யும்’ என்னும் சொல்லாட்சியை மக்களின் மனங்களில் பதிய வைத்தவர். அன்றைய ஆங்கில அரசாங்கத்தை எதிர்த்தும், உரிமைகளுக்குக் குரல் கொடுத்தும் பல போராட்டங்களை நடத்தினார்.

போராடும் இடதுசாரி இயக்கத் தலைவர்களை ஒடுக்க ‘நெல்லை சதி வழக்கு’ போடப்பட்டு 1949 ஆம் ஆண்டு நல்லகண்ணு உள்ளிட்ட 67 பேர் கைது செய்யப்பட்டார்கள். அதில் 42 பேர் விடுதலை செய்யப்பட்டு மீதம் உள்ளவர்களுக்குத் தண்டனை வழங்கப்பட்டது. அப்போது 27 வயதான நல்லகண்ணுவும் சிறைக்குச் சென்றார்.

உரிமைக்குப் போராடி சிறைக்குச் சென்ற நல்லகண்ணு, சிறையின் உள்ளேயும் உரிமைகளுக்காகப் போராடத் தொடங்கினார். இன்று சிறையில் உள்ள கைதிகளும் கல்வி கற்கலாம் என்ற உரிமையைப் போராடிப் பெற்றுத் தந்தவர்களில் நல்லகண்ணு முதன்மையானவர்.

செல்வம், பதவி, ஆடம்பரம் என எதையும் விரும்பாத இந்தப் போராளி பொது மக்களின் உரிமைகளை மட்டுமே விரும்பியவர். அதற்காக மட்டுமே இயங்கிக்கொண்டிருப்பவர்.

வற்றாத ஜீவ நதி எனப் பெயரெடுத்த தாமிரபரணி ஆற்றை அந்நிய சக்திகளிடமிருந்து மீட்டு வேளாண் பூமியாய்த் திகழ்வதற்குச் சொந்தக்காரர் நல்லகண்ணு.

தாமிரபரணி ஆற்றில் மணல் அள்ளுவதையும், குளிர்பான நிறுவனங்கள் நீர் உறுஞ்சுவதையும் எதிர்த்துப் போராடி வெற்றிக் கொடி நாட்டியவர். முல்லைப் பெரியாறு அணைக்காக எவ்வாறு ஜான் பென்னிகுயிக் நினைவுகூரப்படுகிறாரோ, அதுபோல எதிர்காலத்தில் தாமிரபரணி ஆற்றைக் காப்பாற்றிய காவலனாக நாம் நல்லகண்ணுவைக் கொண்டாட வேண்டும். குறிப்பாக, தாமிரபரணி வேளாண்குடி மக்கள் நல்லகண்ணுவின் பணியை மறவாமல் தம் சந்ததியினருக்குச் சொல்லித் தர வேண்டும்.

தமிழக அரசின் வீட்டு வசதி வாரிய இல்லத்தில் நல்லகண்ணு 12 வருடங்கள் குடியிருந்தபோது எவ்வித முன்னேற்பாடும் செய்யாமல் அரசு வீட்டைக் காலி செய்யச் சொன்ன போது மறுப்புத் தெரிவிக்காமல் காலி செய்தார். அப்போதும் கூட தியாகி கக்கன் குடும்பத்திற்கு வசிக்க ஒரு வீடு கொடுக்க வேண்டும் என்று அரசுக்குக் கோரிக்கை வைத்த நல்ல உள்ளம் கொண்டவர் நல்லகண்ணு.

பலரின் கோரிக்கைகளுக்குப் பிறகு அரசு நல்லகண்ணுக்கு வீடு வழங்க முன்வந்தபோது, ‘எனக்காக எதையும் செய்யாமல் எல்லோருக்கும் எது சட்டமோ அதன்படி செய்யுங்கள்’ என்று கூறியவர்.

இன்று தமிழகத்தின் பெரிய திருமடங்கள் என்று கருதப்படும் ஆதீனங்களின் நிலத்தில் பணியாற்றும் ஏழை வேளாண் குடி மக்களுக்கு உரிமைகள் மறுக்கப்பட்ட போது பல மைல்கள் நடந்தே சென்று அம்மக்களின் உரிமைகளுக்குப் போராடி, மக்களையும் போராட வைத்தார்.

ஒரு சில ஆதீனங்கள் மக்களுக்கான உரிமைகளை வழங்காமல், உழைப்பை மட்டும் சுரண்டியபோது நல்லகண்ணுதான் களம் கண்ட நாயகனாய் மக்களின் சேவகனாய் முன்னின்று உரிமைகளைப் பெற்றுத் தந்தார். திருமடங்களின் ஆட்களால் கம்பத்தில் கட்டி வைக்கப்பட்டு அடித்தபோது எளிய, ஏழை மக்களால் காப்பாற்றப்பட்டு மீண்டும் உரிமைகளுக்காகப் போராடலானார்.

அம்பாசமுத்திரம் கடனா நதியில் அணை கட்ட வேண்டுமென்று 11 நாட்கள் உண்ணாவிரதம் மேற்கொண்டு போராடியபோது அரசு இணங்கிவந்து அணைக் கட்ட ஒப்புதல் தெரிவித்தது.

தன்னைப் பற்றி மாய பிம்பங்கள் தோன்றாதவாறு, எல்லோரும் அணுகக் கூடிய அன்பான போராளியாக இன்று வரை திகழ்பவர்.

எழுதிய நூல்கள்

களப்போராளி மட்டுமல்ல, நல்லகண்ணு எழுத்தாளரும்கூட. பல இதழ்களில் தொடர்ச்சியாக எழுதி வருபவர். விடுதலைப் போரின் விடிவெள்ளிகள், கிழக்கு ஜெர்மனியில் கண்டதும், கேட்டதும், நிலச்சீர்திருத்தம் – மடங்கள் – கோயில்கள் ஆகியவை இவருடைய முக்கியமான நூல்களாகும். இந்திய விவசாயிகளின் பேரெழுச்சி என்னும் நூலையும் மொழி பெயர்த்துள்ளார்.

ஒருவரின் எழுத்துப் பிடித்து விட்டால் வயதால் சிறியவராக இருப்பினும் அழைத்துத் தமது பாராட்டை வழங்குபவர். 5000க்கும் மேற்பட்ட நூல்களைக் கொண்ட ஒரு நூலகத்தைத் தமது இல்லத்தில் வைத்திருப்பவர். வாசிப்பதில் பெரும் விருப்பம் கொண்டவர்.

இவருடைய 80வது பிறந்த நாளில் கம்யூனிஸ்ட் கட்சி ஒரு கோடி ரூபாய் நிதி திரட்டித் தந்த போது அந்த மேடையிலேயே கட்சியின் வளர்ச்சிக்கு வழங்கிவிட்டார். தமிழக அரசு அம்பேத்கர் விருது வழங்கி ஒரு லட்சம் ரூபாய் வழங்கியபோது, பாதியைத் தனது கட்சிக்கும் மீதியை வேளாண் தொழிலாளர்களுக்கும் வழங்கியவர்.

தமிழக அரசு தகைசால் தமிழர் விருதுடன் பத்து லட்சம் ரூபாய் வழங்கியபோது அரசின் நிவாரணத்திற்கு வழங்கியவர்.

நல்லகண்ணுவின் போராட்டங்களை இன்றைய இளம் தலைமுறையினர் அறிந்து போற்றிட களமும் தளமும் அமைப்போம்.

0

பகிர:
பொ. சங்கர்

பொ. சங்கர்

கட்டுரையாளர், எழுத்தாளர். தவத்திரு சச்சிதானந்த சுவாமிகள், வேதாத்திரி மகரிசி ஆகியோரின் வாழ்வியல் சிந்தனைகளை ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவர். தொல்லியல் சான்றுகள் தேடி விரிவான பயணங்கள் மேற்கொண்டவர். கோயமுத்தூர் யுவபாரதி மையப்பள்ளியில் தமிழாசிரியராகப் பணிபுரிகிறார். தொடர்புக்கு - tamilshanker@gmail.comView Author posts

3 thoughts on “மண்ணின் மைந்தர்கள் #5 – அறம் எனும் ஆயுதம்”

  1. தங்களின் எழுத்துகளில் மாபெரும் தலைவர்களைப் பற்றி எறிவது மகிழ்ச்சியை தருகிறது தொடரட்டும் உங்கள் பணி சங்கர் ஐயாவுக்கு வாழ்த்துக்கள்.

  2. முனைவர் ப.இராஜேஸ்வரி

    மிக அருமை திரு.சங்கர் அவர்களே.. ஐயாவின் வாழ்க்கை வரலாற்றை அறிய ஒரு நல்ல கட்டுரை..

  3. இன்றைய தலைமுறைக்கு இப்படி ஒரு அரசியல் தலைவர் கிடைப்பாரா என நினைத்து ஏங்குகிறோம்.

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *