தவத்திரு சாந்தலிங்க இராமசாமி அடிகளார்.
தமிழகத்தில் உள்ள ஆதீனத்தலைவர்கள் தங்களின் திருமடத்தின் நிலங்களை மீட்க அரியணையில் இருந்து போராடிக் கொண்டிருக்கும்போது, இவர் அரியணையில் இருந்து இறங்கி தமிழை அரியணை ஏற்றப் போராடி அதில் வெற்றியும் பெற்றார். தேவாரமும், திருவாசகமும் மக்களின் வாழ்வியல் நிகழ்வுகளில் பாடப்பட வேண்டும் என்றும், தமிழ் மொழியை வழிபாட்டு மொழியாக்கிட வேண்டும் என்பதிலும் உறுதியாய் நின்று ஊக்கமாகச் செயல்படுத்தியவர். தமிழுக்காக, சுற்றுச்சூழலுக்காக, ஈழத் தமிழர் நலனுக்காக, மக்கள் பிரச்னைகளுக்காக வீதியில் இறங்கிப் போராடிய ஒரே ஆதீனத் தலைவர் தவத்திரு சாந்தலிங்க இராமசாமி அடிகளார். ஆதீனங்கள் எல்லாம் நிலவுடைமைச் சமூகத்தின் பிரதிநிதிகளாகவும் நிலச்சுவான்தாரர்களாகவும் திகழ, இவரோ ஆதீனத் தலைவராக இருந்து தமிழ் மொழியை வழிபாட்டு மொழியாக்கப் போராடி அதனைச் செயல்படுத்தி, தமிழ் மொழி வழிபாட்டை இயக்கமாக மாற்றிய ஆதீனத் தலைவராகத் திகழ்ந்தார்.
1926 ஆம் ஆண்டு கோயமுத்தூரின் முதலிப்பாளையம் கிராமத்தில் எளிய வேளாண் குடும்பத்தில் பிறந்து, ஆரம்பக் கல்வியைக் கற்று விழுப்புரம் மாவட்டம் மயிலம் சென்று அங்கிருக்கும் தமிழ்க் கல்லூரியில் தமிழ் வித்வான் பட்டம் படித்தார். சங்க இலக்கியங்களையும், தமிழ் இலக்கிய இலக்கணங்களையும் குறைவின்றிக் கற்றவர்.
15 ஆம் நூற்றாண்டில் தோற்றுவிக்கப்பட்ட பழமையான பேரூராதீனத்தில், 1948 ஆம் ஆண்டு பேரூராதீனத்தின் இளைய ஆதீனமாகப் பதவி ஏற்றார். இவர் பதவி ஏற்று ஆதீனத்தின் சார்பில் பல்வேறு செயல்திட்டங்களை நடைமுறைப்படுத்தினார். அதில் முக்கியமானது தமிழ் மொழியில் வழிபாடு. அன்றைய காலத்தில் தந்தை பெரியார் போன்ற தலைவர்கள் ஆலய நுழைவு உரிமைப் போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது தவத்திரு சாந்தலிங்க இராமசாமி அடிகளார் ஆலயத்தில் தமிழ் மொழியில் தேவாரம், திருவாசகம் பாடி வழிபாடுகள் நடத்திட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். அதற்கானப் போராட்டங்களையும் முன்னெடுத்தார். ஆலய நுழைவு உரிமைக்கு எவ்வாறு எதிர்ப்புகள் இருந்தனவோ, அதே அளவு ஆலயங்களில் தமிழ் நுழைவுக்கும் கடுமையான எதிர்ப்புகள் சமய உலகிலேயே இருந்தன. தமிழகத்தின் எந்த ஆதீனமும் முன்னெடுக்காத தமிழ் வழிபாட்டு முறையை பேரூராதீனம் தவத்திரு சாந்தலிங்க இராமசாமி அடிகளார் முன்னெடுத்தார்.
1953 ஆம் ஆண்டு கோயமுத்தூர் பட்டிசுவரர் கோயிலில் பலரின் எதிர்ப்புகளையும் மீறி தமிழகத்தில் முதன்முறையாக ஆலய வழிபாட்டில் தமிழ் என்பதைச் செயல்படுத்திக் காட்டினார். தந்தை பெரியார் அவர்கள் மாற்றுக் கொள்கை உடையோராக இருப்பினும் தவத்திரு சாந்தலிங்க இராமசாமி அடிகளாரின் போராட்டத்திற்கு முழு ஆதரவு அளித்தார்.
மாமன்னர் இராஜராஜன் காலத்தில் மீட்கப்பட்ட திருமுறைகள் பின்னர் வந்த நிலையற்ற அரசுகளால் மீண்டும் புறக்கணிக்கப்பட்டது. தவத்திரு சாந்தலிங்க இராமசாமி அடிகளார் பல நூறு ஆண்டுகளுக்குப் பின்னர் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் பிற அருளாளர்கள் பாடிய தமிழ் மந்திரங்களைத் தொகுத்து ஆலய வழிபாடுகளில் எந்தெந்தப் பாடல்கள் இசைத்தல் வேண்டும், இல்ல நிகழ்வுகள், திருமணம் போன்ற அனைத்து நிகழ்வுகளிலும் தமிழ் மொழியிலேயே வழிபாடாற்றுதல் வேண்டும் என்பதற்காகப் பல்வேறு செயல்திட்டங்களை வகுத்தார்.
1954 ஆம் ஆண்டு தமிழகத்தில் முதன்முறையாக கோயமுத்தூர் கணபதி கிராமத்தில் அருள்மிகு விநாயகப் பெருமான் திருக்கோயிலில் தமிழ் மந்திரங்கள் ஒலிக்க முறையான ஆகம முறையில் தமிழ் முறையில் திருக்குட நன்னீராட்டு நிகழ்வை நடத்திக் காட்டினார். கும்பாபிஷேகம் என்னும் வடமொழிச் சொல்லுக்கு நிகராக இன்று தமிழகத்தில் திருக்குட நன்னீராட்டு விழா என்னும் சொல்லாட்சியை நடைமுறைக்குக் கொண்டு வந்து செயல்படுத்திக் காட்டியவர் தவத்திரு சாந்தலிங்க இராமசாமி அடிகளார். 1967 ஆம் ஆண்டு பேரூராதீனத்தின் ஆதீனத் தலைவராக முறைப்படி பதவி ஏற்று சமயப் பணியிலும், தமிழ்ப்பணியிலும் தம்மை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார்.
அன்றைய காலம் முதல் இன்றைய காலம் வரை ஆதீனத்தலைவர்கள் திருமடத்தில் கொலு மண்டபத்தில் காட்சி அளிப்பவர்களாகவே உள்ளனர். அந்த நடைமுறையை மாற்றி வீதிகளில் வலம் வந்து மொழிக்காகவும், இனத்திற்காகவும், வாழ்வியலுக்காகவும் போராடியவர்களில் தவத்திரு சாந்தலிங்க இராமசாமி அடிகளார், தவத்திரு குன்றக்குடி அடிகளார், தவத்திரு சுந்தர அடிகள் முக்கியமானவர்கள். நிலத்தின் காவலர்களாகத் திகழும் ஆதீனத் தலைவர்களுக்கு மத்தியில், இவர்கள் இனத்தின், மொழியின் காவலர்களாகத் திகழ்ந்தனர்.
தீவிர இடதுசாரி இயக்கத் தலைவர் தோழர் வி.பி. பாலதண்டாயுதம் அவர்கள் கோயமுத்தூர் சிறையில் யாரையும் சந்திக்காதவாறு தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். தமிழகத்தில் உள்ள சிறைச்சாலைகளுக்குத் தவத்திரு சாந்தலிங்க இராமசாமி அடிகளார் சென்று அறநெறி வகுப்புகள் எடுத்து வந்தார். அப்போது சிறைக் கைதிகள் அடிகளார் பற்றிப் பேசிச் செல்வதைத் தோழர் வி.பி. பாலதண்டாயுதம் கேட்டு, சிறை அதிகாரிகளின் அனுமதியுடன் தவத்திரு சாந்தலிங்க இராமசாமி அடிகளார் அவர்களிடம் தமிழ் கற்றார். இடதுசாரி இயக்கங்களின் தலைமை அலுவலகத்திற்குத் தோழர் வி.பி. பாலதண்டாயுதம் அவர்களின் பெயரே சூட்டப்பட்டுள்ளது என்பதையும், தோழர் வி.பி. பாலதண்டாயுதம் சிறையில் இருந்து வெளியில் வந்தவுடன் முதன்முதலில் சந்தித்த நபர் பேரூராதீனம் தவத்திரு சாந்தலிங்க இராமசாமி அடிகளார் என்பதும் இங்குப் பதிதல் அவசியம்.
கோவை சிறையில் தவத்திரு சாந்தலிங்க இராமசாமி அடிகளார் வகுப்புகள் எடுக்கச் செல்லும் காலங்களில் அச்சிறைச்சாலையின் முட்புதருக்குள், விடுதலைப் போராட்ட வீரர் வ.உ.சி. அவர்கள் இழுத்த செக்கு இருப்பதை அறிந்தார். மாபெரும் தலைவரின் போராட்டங்களை மக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும் என்னும் நோக்கில் மா.பொ.சி. அவர்களிடம் இச்செய்தியைக் கூறினார். மா.பொ.சி. அவர்கள் பெரிதின் முயன்று அந்தச் செக்கினை எல்லோரும் அறியும் பொருட்டு பொது இடத்தில் வைக்க முயற்சிகள் எடுத்தார். தவத்திரு சாந்தலிங்க இராமசாமி அடிகளார், திரு. மா.பொ.சி. இருவரும் இணைந்து அந்தச் செக்கினை சிறையில் வைத்து முறையான மரியாதை செலுத்துவதை நடைமுறைப்படுத்தினர். இச்செய்தியை 1972 ஆம் ஆண்டு மா.பொ.சி. அவர்கள் தமிழரசுக் கழக ஆண்டு விழாவில் கலைஞர் கருணாநிதி முன்னிலையில் கூறினார். அந்த மேடையிலேயே கலைஞர் கருணாநிதி அவர்கள் தவத்திரு சாந்தலிங்க இராமசாமி அடிகளாரையும், திரு. மா.பொ.சி. அவர்களையும் பாராட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.
கோயமுத்தூரில் வசிக்கும் மாணவர்கள் முறையான வழியில் தமிழ்க்கல்வியைக் கற்க வேண்டுமெனில் சென்னை, சிதம்பரம், மதுரை போன்ற நகரங்களுக்குச் சென்றுதான் கல்வி கற்க வேண்டிய நிலை இருந்தது. இதனைப் போக்கும் வகையில் முறையாக சென்னைப் பல்கலைக்கழகத்தில் தவத்திரு சாந்தலிங்க அடிகளார் தமிழ்க்கல்லூரி என்னும் பெயரில் பதிவு செய்து 1954 ஆம் ஆண்டு முதல் செயல்படச் செயலாற்றினார். புலவர் புலமைப்பித்தன், இருமுறை சாகித்திய அகாதெமி விருதுகள் பெற்ற கவிஞர் புவியரசு போன்றோர் இக்கல்லூரியின் மாணவர்களே. சென்னைப் பல்கலைக்கழகத்தின் சார்பில் 1954 ஆம் ஆண்டு மு.வரதராசனார் வந்து இக்கல்லூரியின் செயல்பாட்டை அங்கீகரித்தார்.
தமிழகத்தில்.மொழி.வாரிப் போராட்டங்கள், ஈழத் தமிழர் போராட்டங்களில் இந்தக் கல்லூரி மாணவர்கள் பெரும் போராட்டங்களை அன்றைய காலங்களில் முன்னெடுத்தனர். அப்போராட்டங்களுக்கு ஆதீனத் தலைவராக இருந்து கொண்டு விதிகளையும், ஆன்மீக மரபுகளையும் மீறி வீதியில் அமர்ந்து போராடினார் அடிகளார். ஈழத் தலைவர் பிரபாகரன் சென்னையில் புலமைப்பித்தன் இல்லத்தில் தங்கியிருந்தபோது, தவத்திரு சாந்தலிங்க இராமசாமி அடிகளார் நேரில் சென்று சந்தித்தார். தமிழர் நலனுக்குப் போராடியவர்களில் வெளிப்படையான ஆதரவுடன் போராடிய ஆதீனத் தலைவர் இவர் மட்டுமே.
தமிழகத்தில் அன்றைய காலத்தில் சென்னைப் பல்கலைக் கழகத்தின் கீழேயே கல்லூரிகள் இயங்கின. அதன்பின்னரே மற்ற பல்கலைக்கழகங்கள் தோன்றின. தமிழ்ப் பாடத்தை முதல் வருடம் மொழிப் பாடமாகப் படிக்க வேண்டும் என்னும் நடைமுறையைப் போராடிக் கொண்டு வந்தவர்களில் தவத்திரு சாந்தலிங்க இராமசாமி அடிகளார் முக்கியமானவர். அதன் நீட்சியாக அடுத்த வருடம் முதல் தமிழகத்தின் கல்லூரிகளில் நான்கு பருவங்கள் மொழிப்பாடமாகத் தமிழைக் கற்க வேண்டும் என்னும் நடைமுறையை அரசு செயல்படுத்த உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
அன்றைய சென்னைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்த மால்கம் ஆதிசேஷன் அவர்கள் தலைமையில் இந்தத் தீர்மானத்தைக் கொண்டு வந்தபோது பலரின் எதிர்ப்புகளையும் மீறி மொழிப்பாடமாகத் தமிழைத் தமிழகத்தின் கல்லூரிகளில் கற்க வைத்தவர் தவத்திரு சாந்தலிங்க இராமசாமி அடிகளார். இதனை அன்றைய துணைவேந்தர் மால்கம் ஆதிசேஷன் பல கூட்டங்களில் பதிவு செய்துள்ளார். அதுமட்டுமின்றி அன்றைய காலங்களில் கல்லூரிகளில் பணிபுரியும் தமிழாசிரியர்கள் கலைப்பிரிவு ஆசிரியர்களாகவே கருதப்பட்டு ஊதியம் வழங்கப்பட்டு வந்தது. இதனைத் தவத்திரு சாந்தலிங்க இராமசாமி அடிகளார் மாற்றும் போராட்டங்களில் ஈடுபட்டு வெற்றியும் கண்டார். மற்ற பாடங்களுக்கு நிகராக இன்று தமிழாசிரியர்கள் ஊதியம் பெறுவதற்குக் காரணமானவர் தவத்திரு சாந்தலிங்க இராமசாமி அடிகளார். இவரின் சிறப்பினைப் போற்றும் வகையில் சென்னைப் பல்கலைக்கழகம் 2007 ஆம் இவருக்கு முதுமுனைவர் பட்டம் வழங்கிச் சிறப்பித்தது.
பூமி தான இயக்கத் தலைவர் வினோபாவே அவர்கள் தமிழகம் வந்து பல ஆதீனங்களையும் சந்தித்து, நிலம் இல்லாதவர்களுக்கு நிலம் வழங்குங்கள் எனக் கேட்ட நிலையில், தமிழகத்தில் பூமி தான இயக்கத்தின் மூலம் நிலம் இல்லாதவர்களுக்கு நிலம் வழங்கிய ஒரே ஆதீனத் தலைவர் தவத்திரு சாந்தலிங்க இராமசாமி அடிகளார். தமிழகத்தில் உள்ள ஆதீனத்தின் தலைவர்கள் பெரும் நிலங்களை வைத்து ஆதீனத்தின் நிலங்களுக்கு வாடகை வசூலித்து வந்தமையே சமயப்பணி என்று எண்ணி வந்த நிலையில், மக்களின் பிரச்னைகளில் தம்மை ஒப்படைத்துச் செயலாற்றியவர் தவத்திரு சாந்தலிங்க இராமசாமி அடிகளார்.
தமிழகத்தின் முதலமைச்சர்களாகத் திகழ்ந்த பக்தவச்சலம், காமராசர், கருணாநிதி, எம்.ஜி.ஆர், செல்வி ஜெயலலிதா எனப் பலரும் மதிக்கும் ஆதீனத் தலைவராக அடிகளார் திகழ்ந்தார். எம்.ஜி.ஆர் ஆட்சிக் காலத்தில் குமரி மாவட்டத்தில் மண்டைக்காடு என்னும் ஊரில் மதச் சண்டை நிகழ்ந்த போது தவத்திரு சாந்தலிங்க இராமசாமி அடிகளாரும், தவத்திரு குன்றக்குடி அடிகளாரும் அந்த ஊருக்கே சென்று எல்லோரையும் ஒருங்கிணைத்து மதச்சண்டையை நிறுத்தினர். இதனை அன்றைய முதலமைச்சர் எம்.ஜி.ஆர் சட்டமன்றத்திலேயே பதிவு செய்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
திராவிட இயக்கத் தலைவர்கள், இடது சாரி இயக்கத் தலைவர்களும் மதிக்கும் ஆதீனத் தலைவராகத் திகழ்ந்த தவத்திரு சாந்தலிங்க இராமசாமி அடிகளார் மீது தந்தை பெரியார் அவர்கள் தனிமதிப்பு வைத்திருந்தார் என்பதும், தந்தை பெரியாருக்கு உடல்நிலை சரியில்லாத போது ஈரோடு இல்லத்திற்குச் சென்று நலம் விசாரித்தவர்களில் ஆதீனத் தலைவர்கள் தவத்திரு சாந்தலிங்க இராமசாமி அடிகளார், தவத்திரு குன்றக்குடி அடிகளார் என இரண்டு பேர் மட்டுமே. தந்தை பெரியார் இல்லத்திற்கு இவர்கள் செல்லும் போது ஆன்மீக அமைப்பினர் இவர்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்த போதும், கொள்கை வேறு, நட்பு வேறு என்னும் முறைமையில் சந்தித்தனர். இதனால் சமய உலகம் இவர்களைப் பல விதங்களில் எள்ளி நகையாடிய போதும் இவரின் சமூகப் பணியும், சமயப் பணியும் நிற்கவே இல்லை.
தமிழக அமைச்சராக இருந்த தமிழ்க்குடிமகன் தவத்திரு சாந்தலிங்க இராமசாமி அடிகளாரைச் சந்திக்க பேரூராதீனம் வந்த போது ஆதீனத் தோட்டத்தில் ஏர் பூட்டி மாடுகளின் உதவியுடன் வேளாண் பணிகளில் ஈடுபட்டதைக் கண்டு வியந்தார். தவத்திரு சாந்தலிங்க இராமசாமி அடிகளார் அவர்களின் தலைமையில் தமிழ் அருச்சனை மந்திரங்கள் அறநிலையத்துறை சார்பில் வெளியிடவும் தமிழ்க்குடிமகன் உறுதுணையாக இருந்தார்.
தவத்திரு சாந்தலிங்க இராமசாமி அடிகளாருக்குக் கலைஞர் கருணாநிதி தலைமையிலான அரசு சட்ட மேலவை உறுப்பினர் பதவி தர முன்வந்தபோது, எம்மை விட மக்கள் பணிகளில் சிறந்து விளங்கும் தவத்திரு குன்றக்குடி அடிகளாருக்கு வழங்குவதே சிறப்பு என்று அந்தப் பதவியைக் குன்றக்குடி அடிகளாருக்கு வழங்கிட வைத்தார்.
தமிழகத்தில் எந்த ஆட்சி அமைந்தாலும் அறநிலையத் துறையின் உயர்மட்டக் குழு பொறுப்பாளராக தவத்திரு சாந்தலிங்க இராமசாமி அடிகளார் திகழ்ந்தார். தமிழகம் முழுதும் விளக்கேற்றுவதற்குக் கூட ஆள் இன்றி இருக்கும் கோயில்களில் ஒரு காலப் பூசைத் திட்டம் செயல்படவும், பல கோயில்களில் திருத்தேர் பணி நடைபெறவும் முதன்மைக் காரணமாகத் திகழ்ந்தவர். எந்தவிதச் சமரசமும் இன்றி பல நேரங்களில் அரசையே எதிர்த்த ஆதீனத் தலைவர் இவர்.
தமிழகத்தில் அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்னும் அரசின் திட்டத்தை நடைமுறைப்படுத்தப் பல்லாண்டு காலம் பல போராட்டங்களை நடத்தியவர். தமிழகத்தில் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக, ஈழ மக்களுக்கு ஆதரவாகப் போராட்டம் நடந்தபோது அடிகளார் கோயமுத்தூரில் தலைமையேற்று நடத்தினார். தமிழகத்தின் ஆதீனத் தலைவர்கள் தங்களின் திருமடத்தின் பிரச்னைகளுக்காக மட்டுமே போராடுவார்கள் என்னும் சொல்லுக்கு மத்தியில் இவர் மட்டும் இனத்தின், சமயத்தின், மொழியின் முக்கியத்துவத்திற்காகப் போராடினார்.
2010 ஆம் ஆண்டு கோயமுத்தூரில் கலைஞர் கருணாநிதி தலைமையிலான தமிழக அரசு உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டை நடத்தியது. அதில் சமயத் தமிழ் புறக்கணிக்கப்பட்ட போது தவத்திரு சாந்தலிங்க இராமசாமி அடிகளார் கலைஞர் கருணாநிதியை நேரில் சந்தித்தார். தமிழ் வளர்ச்சியில் சமயங்களின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது. ஆகவே மாநாட்டில் அனைத்துச் சமயங்களின் தமிழ் வளர்ச்சிக் குறித்தும் விவாதிக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தினார். தவத்திரு சாந்தலிங்க இராமசாமி அடிகளாரின் கோரிக்கையை ஏற்று அதன் வாயிலாகத் தமிழக அரசு அடிகளார் தலைமையில் சமயத் தமிழ் என்னும் பொது அரங்கிற்கு அனுமதி அளித்தது குறிப்பிடத்தக்கது.
கரூர் திருக்கோயிலில் தமிழ் முறையில் குடமுழுக்கு நடத்தியே ஆக வேண்டும் என்பதில் உறுதியாக இருந்து செயல்படுத்தியும் காட்டியவர். தமிழகம் முழுவதும் 25000 க்கும் மேற்பட்ட திருக்கோயில்களில் தமிழ் முறையில் ஆலய வழிபாட்டை நடைமுறையாக்கியவர். தமிழகத்தின் இல்ல விழாக்கள் அனைத்தும் தமிழ் முறையில் செயல்படுத்தியவர். தமிழகம் மட்டுமின்றி வெளிநாடு வாழ் தமிழர்கள் பலரும் பேரூராதீனத்தைத் தொடர்பு கொண்டு தங்களின் இல்ல நிகழ்வுகளைத் தமிழ் மொழியில் நிகழ்த்துவதைப் பெருமையாகக் கருதுகின்றனர். இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், மொரிசியசு போன்ற நாடுகளில் தமிழ் மொழி வழிபாட்டு இயக்கம் இன்று சிறப்புடன் திகழ தவத்திரு சாந்தலிங்க இராமசாமி அடிகளார் விதையாகத் திகழ்ந்தார்.
கோயமுத்தூர் சிறுவாணி ஆற்றின் கரையில் 20 வருடங்களுக்கு முன்னர் பெப்சி கம்பெனி செயல்படத் தொடங்கிய போது, அந்த ஆற்றின் வளம் குறையத் தொடங்கியது. மக்கள் போராட்டம் தொடங்கியது. தவத்திரு சாந்தலிங்க இராமசாமி அடிகளார் தலைமையில் மக்கள் போராடத் தொடங்கினர். அரசு இயந்திரம் அடிகளாரிடம் பேச்சு நடத்திட அந்தப் பன்னாட்டு நிறுவனம் இழுத்து மூடப்பட்டது. இவ்வாறு சமயப்பணியில் தமிழை வழிபாட்டு மொழியாகவும், சமுதாயப் பணியில் தம்மை ஒரு கருவியாகவும் இணைத்துக் கொண்டவர். சமஸ்கிருத எதிர்ப்பு என்று இல்லாமல் தமிழ் வழிபாடு என்பதைத் தம் கொள்கையாகக் கொண்டவர்.
தமிழ் மொழி வழிபாட்டைத் தமிழகம் முழுவதும் இயக்கமாக மாற்றி பலருக்கும் முறையான தீட்சைகள் வழங்கி உரிய முறையில் வழிபாடுகளை நடத்திட தம் இறுதிக்காலம் வரை உறுதியாகத் திகழ்ந்தார். தமிழகத்தின் அனைத்து மதத்தாலும், அனைத்து இயக்கத்தினராலும் மதிக்கப்படும் ஒரே ஆதீனத் தலைவராக விளங்கிய தவத்திரு சாந்தலிங்க இராமசாமி அடிகளார் 2018 ஆம் ஆண்டு இறைவனின் திருவடி நிழலை அடைந்தார்.
தேவாரமும், திருவாசகமும் அனைத்து மக்களின் வழிபாட்டு மொழியாகத் திகழ விதையாகத் திகழ்ந்த இவரின் செயல் விருட்சமாக வளர வேண்டும். தமிழக மக்கள் தமது தாய் மொழியில் இல்ல நிகழ்வுகளை நடத்திட வேண்டும். இளைய தலைமுறைக்குத் தமிழ் மந்திரங்களை அறிமுகப்படுத்திட வேண்டும்.
தமிழ் மந்திரங்கள் தமிழர்களின் இல்லங்களில் இசைத்திட வேண்டும். தவத்திரு சாந்தலிங்க இராமசாமி அடிகளாரின் கனவை நிறைவேற்றுவோம்.
0
வரலாற்றின் வேர்களாக இருந்த ஆழத் தரவுகளை வெளியே தெரியும் விழுதுகளாக வழங்கிய திரு. சங்கரன் அவர்களுக்குப் பாராட்டு. பேரூர்த் தமிழ்க்கல்லூரியின் மாணக்கர் என்ற விவரம் அவர்தம் பெருமை. இது போன்ற பதிவுகள் பலவற்றை வெளியிட்டுச் சிறப்பிக்கும் கிழக்கு டுடே அமைப்பிற்கு வாழ்த்து. நன்றி.
Super
என்னென்று உரைப்பேன் நின் கருணை இருந்தவாறே….
இக்கட்டுரை அடிகளாரின் நினைவுகளைச் சிந்தையில் நிறுத்தி கண்களைப் பனியாக்குக்கின்றன.. வாழ்த்துக்கள் திரு. சங்கர் அவர்களே..
தவத்திரு.சாந்தலிங்க அடிகளாரின் வாழ்வியலை அழகாக படம் பிடித்துக் காட்டியுள்ளீர்கள். வாழ்த்துகள் சங்கர் ஐயா .
நீண்ட, அருமையான பதிவு. ‘ஒரே ஆதீனம்’ என்று பல இடங்களில் அழுத்தமாகச் சொல்லும் பாங்கு தங்களின் மன தைரியத்தையும், கடமை உணர்வையும், நெறி வழி நிற்கும் பண்பையும் உணர்த்துகின்றன. தங்களின் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் சங்கர்💐💐💐👏👏👏