Skip to content
Home » மண்ணின் மைந்தர்கள் #7 – சாந்தி கியர்ஸ் சுப்பிரமணியம்

மண்ணின் மைந்தர்கள் #7 – சாந்தி கியர்ஸ் சுப்பிரமணியம்

சாந்தி கியர்ஸ் சுப்பிரமணியம்

முகம் காட்டாமல் ஒருவரால் வள்ளல் தன்மையுடன் இக்காலத்தில் இருக்க இயலுமா? சாதாரண உதவிகள் செய்தாலே சரித்திர உதவிகள் செய்தது போலப் பதிவு செய்யும் மாந்தர்களுக்கு மத்தியில், தான் யாரென்பதே தெரியப்படுத்தாமல் வாழ்ந்தவர்தான் இந்த மண்ணின் மைந்தர் ‘சாந்தி கியர்ஸ் சுப்பிரமணியம்’.

பேராசிரியராகப் பணியைத் துவங்கி, உலகின் சிறந்த கியர் தயாரிப்புகளைக் கொணர்ந்தவராகத் திகழும் கோயமுத்தூர் மண்ணின் மைந்தர் சாந்தி கியர்ஸ் சுப்பிரமணியன் அவர்களின் பணிகளைப் பட்டியலிட்டால் பருவமழை அளவு நீளும். அவர் வாழ்ந்த காலத்தில் நாம் வாழ்கின்றோம் என்பதும், இக்காலக் குழந்தைகளுக்கு நாம் கற்றுத் தர வேண்டிய முக்கியப் பண்புகளை இவரிடம் இருந்தும் அவசியம் கற்க வேண்டும் என்பதே இப்பதிவின் நோக்கம்.

கியர் மேன் என்னும் அடைமொழி இவருக்கு ஏன் வந்தது என்பதற்குப் பின்னால் இவரின் உண்மையான உழைப்பு மட்டுமே பதிலாக இருந்தது. இயந்திரங்களுக்குத் தேவையான கியர் தயாரிப்பில் 1972ல் இறங்கி, தரம் என்ற ஒன்றை மட்டும் மூலதனமாக வைத்து இயங்கலானார் சுப்பிரமணியம். தொடங்கிய குறுகிய காலத்தில் இவரின் நிறுவனம் முன்னணி நிறுவனமாக வளரத்தொடங்கியது. கியர் உதிரிபாக உற்பத்தியில் இந்தியாவில் முதன்மை நிறுவனமாக இவரது நிறுவனம் வளர்ந்தது. மிகச் சிறந்த பொறியாளராகக் கருதப்படும் சுப்பிரமணியம், நிறுவனத்தின் அனைத்து இயந்திரங்களின் தொழில் நுட்பம் குறித்தும் அறிந்து வைத்திருந்தார்.

அன்றைய காலங்களில் பல நிறுவனங்கள் இயந்திரங்களை இறக்குமதி செய்து உற்பத்திப் பணிகளை ஆற்றி வந்தன. இறக்குமதி செய்யப்பட்ட இயந்திரங்கள் பழுதானால், வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட அந்த இயந்திரத்தை வெளிநாட்டுப் பொறியாளர்களால் மட்டுமே சரி செய்ய இயலும் என்ற நிலையை மாற்றி, உள்நாட்டிலேயே தரமான இயந்திரங்களையும் அதன் உதிரிபாகங்களையும் தயாரிக்க இயலும் என்பதை உருவாக்கி, கோயமுத்தூரில் இன்று இயந்திரவியல் சார்ந்த பல நூறு நிறுவனங்கள் இயங்க இவரது பணிகளே மூலகாரணம்.

உலகின் சிறந்த நிறுவனமாக சாந்தி கியர்ஸ் நிறுவனத்தை உருவாக்கி உயர்ந்த தரத்தைச் செயலாக மாற்றிய சாந்தி கியர்ஸ் நிறுவனப் பங்குகளைக் காலச் சூழ்நிலையால் முருகப்பா குழுமத்திடம் விற்றார் சுப்பிரமணியம். அதன்பிறகு இவர் யார் என்பதே இந்தப் பதிவின் விடையாக இருக்கப் போகின்றது.

திரு. சுப்பிரமணியம் இயந்திரங்களின் கியர் உற்பத்தித் தரத்திற்குக் கூடுதல் முக்கியத்துவம் அளித்தார். கை அளவுள்ள பற்சக்கரம் முதல் வண்டி அளவுள்ள பற்சக்கரம் வரை இவரின் நிறுவனத்தில் தயாரித்தார். இவரின் ‘பி யுனிட்’ தொழிற்சாலைக்கு எதிரே கோயமுத்தூரின் புகழ்பெற்ற பொறியியல் நிறுவனம் இயங்கி வந்தது. அந்த நிறுவனம் சுவிட்சர்லாந்து நாட்டில் இருந்து வாங்கிய இயந்திரம் பழுதானது. பழுதான இயந்திரத்திற்குக் கியர் வீல் ஒன்று தேவைப்பட்டது. அந்தப் புகழ்பெற்ற நிறுவனத்தினர் சுவிட்சர்லாந்து நாட்டு நிறுவனத்துக்கு எழுதி அந்தக் கியர் வீலுக்காகக் காத்திருந்தனர். இயந்திரம் ஒரு மாதம் இயங்காமல் இருந்தது. ஒரு மாதம் கழித்து சுவிட்சர்லாந்து நாட்டில் இருந்து கியர் வீல் வந்தது. அந்த நிறுவனத்தின் உரிமையாளர் முன்னிருக்க, கியர் வீல் பெட்டியைத் திறந்துப் பார்த்தார்கள். அதில் தங்கள் நிறுவனத்தின் எதிரில் இருக்கும் நிறுவனத்தின் பெயரான Shanthi gears, Made in India எனப் பொறிக்கப்பட்டிருந்தது. சுவிட்சர்லாந்து கம்பெனிக்கு அழைத்துக் கேட்டபோது, அந்த வெளிநாட்டுக் கம்பெனியார், ‘உலகத்திலேயே தரமான கியர் வீல் செய்யக்கூடியவர்கள் இவர்கள்தான்!’ என்று பதில் சொன்னார்கள். புகழ்பெற்ற நிறுவனத்தின் எதிரில் இருக்கும் நிறுவனத்தின் கியர் அயல்நாடு சென்று மீண்டும் தங்களுக்கு வழங்குகிறார்கள் என்றால் இந்த நிறுவனத்தின் தயாரிப்பையும், நம்பிக்கையையும் நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.

உழைத்தார்கள் உயர்ந்தார்கள் என்பது ஊக்கம் உடையவர்களின் செயல்தானே, இதில் இவரைப் போற்ற என்ன உள்ளது என்பதற்கு மத்தியில் இவரது மறுபக்கமே நாம் காண வேண்டிய, அறிய வேண்டியவையாக உள்ளன.

1996ஆம் ஆண்டு சுப்பிரமணியம் தமது நீண்ட காலக் கனவாக இருந்த சாந்தி சோஷியல் சர்வீஸ் என்ற நிறுவனத்தைத் தொடங்கி அதன் எதிர்காலச் செயல்பாடுகளை அழகாகத் திட்டமிட்டு வடிவமைத்தார். இதன் பயன் எல்லோருக்கும் சென்று சேர வேண்டும் என்பதே இவரின் குறிக்கோளாக இருந்தது.

மாறி வரும் உலகில் அறம் என்ற சொல்லாட்சிக்குக் கட்டுப்பட்டு ஒரு சிலரே வணிகம் செய்வர். அந்த வகையில் தமது வணிகத்தில் லாப நோக்கமற்ற சேவையை மட்டுமே இவரது நிறுவனம் இன்று வரை பின்பற்றி வருகின்றது.

இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை நாளுக்கு நாள் உயரும். அப்படி உயரும் நிலையில் உதாரணமாக ஒரு பெட்ரோல் பங்க் 102 ரூபாய்க்கு 10 ஆயிரம் லிட்டர் பெட்ரோலை வாங்குகிறது எனில், அடுத்த நாள் விலை 50 பைசா உயர்கின்றது எனில் நிச்சயம் எல்லா பெட்ரோல் நிலையங்களும் விலையை 102.50 அளவில் உயர்த்தி விடும் என்பது உலக நடைமுறை. ஆனால் சாந்தி சோஷியல் சர்வீஸ் நிறுவனத்தின் பெட்ரோல் நிலையத்தில் அந்த பத்தாயிரம் லிட்டரும் தீர்ந்த பிறகே விலை ஏற்றுவார்கள் என்பதை வைத்து இந்த நிறுவனத்தின் அறத்தை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

சாந்தி சோஷியல் சர்வீஸ்

சாந்தி சோஷியல் சர்வீஸ் பெட்ரோல் நிலையத்தில் எரிபொருள் நிரப்ப வாகனங்கள் அணி வகுத்து நிற்கும். வெளி மாவட்டங்களில் இருந்து கோயமுத்தூருக்கு வருகை புரியும் வாகனங்கள் சிங்காநல்லூர் சென்று எரிபொருளை நிரப்பிச் செல்வார்கள் என்பது நிதர்சனமான உண்மை. முகம் சுழிக்காத சேவையை இன்றளவும் தொடர்கின்றனர். அவரின் நிறுவனத்தில் பணி புரியும் நிறுவனப் பணியாளர்களில் பலருக்கும் இவரின் முகம் தெரியாது. சாதாரணமாக, எளிய உடையில் அங்கிருக்கும் செடிகளுக்கு நீர் ஊற்றவும், பெட்ரோல் நிலையத்தில் சாதாரண ஊழியர்போல வேலை செய்து கொண்டும் இருப்பார். இவரது பெட்ரோல் நிலையத்தில் வாடிக்கையாளர்களுக்கு ஆயில் மீதான சேவை வரியை வசூலிக்காமல் பெட்ரோலுக்கு மட்டும் கட்டணம் வாங்கியவர். பொது மக்களின் நலன் கருதி, வாடிக்கையாளர்களின் வாகனங்களுக்கு இலவசமாகவே விளக்கு Head light ஸ்டிக்கர்ஸ் ஒட்டி விழிப்புணர்வுப் பணியிலும் தம்மை ஈடுபடுத்திக் கொண்டார். ஒரு நாளைக்கு 20000 வாகனங்களுக்கு மேல் எரிபொருள் வழங்குகிறார்கள் என்றால் இந்தப் பெட்ரோல் நிலையத்தின் தரத்தை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

எல்லாச் சேவைகளும் எல்லா மக்களுக்கும் கிடைக்க வேண்டும் என்னும் நோக்கில் சாந்தி சோஷியல் சர்வீஸ் என்னும் அமைப்பின் கீழ் ஏராளமான சேவை நிலையங்களைத் தொடங்கி நடத்தினார்.

மருத்துவச் சுற்றுலா அளவுக்குப் புகழ் பெற்று விளங்கக் கூடிய கோயமுத்தூர் மாநகரில், சாந்தி மெடிக்கல் சென்டர் மூலம் வெறும் 30 ரூபாய்க்கு மருத்துவச் சேவை வழங்கினார். இந்த மருத்துவமனையில் 65 மருத்துவர்கள் பணியாற்றுகின்றனர். ஒருமுறை 30 ரூபாய் செலுத்தினால் அதனைக் கொண்டு அடுத்த 5 முறை இலவசமாகவே மருத்துவரைச் சந்தித்து அதன் வாயிலாக மருத்துவம் பார்க்கலாம் என்னும் அமைப்பு முறையை உருவாக்கினார். இவரை நன்கு அறிந்தவர்களுக்கு மட்டுமே இவர் யார் என்பது தெரியும். மற்றபடி இவரின் நிறுவனப் பணியாளர்களுக்கே இவர் யார் என்பது தெரியாது. சாதாரணமாகக் கோயில்களுக்கு ஒரு மின்விசிறியைத் தானம் அளித்தால்கூட 3 இறக்கைகளிலும் பெயரை எழுதி வழங்கும் நபர்களுக்கு மத்தியில் எங்குமே தமது பெயரையும், முகவரியையும், முகத்தையும் வெளிப்படுத்தாமல் வாழ்ந்தார்.

இவரது நிறுவனத்தின் மருந்தகத்தில் மிக முக்கிய நிறுவனங்களின் தரம் வாய்ந்த மருந்துகள் 20 சதவிகிதம் தள்ளுபடியுடன் வழங்கப்பட்டு வருகின்றது. வாடிக்கையாளர்களின் 5 சதவிகித விற்பனை வரியை இவரது நிறுவனமே அரசுக்குச் செலுத்தி வருகின்றது. 20 கி.மீ. சுற்றளவில் இல்லத்திற்கே சென்று மருந்துகளையும் வழங்கி வருகின்றனர்.

இன்றைய நிலையில் சாதாரண மருத்துவமனைகளில் டயாலிசஸ் எனும் சிகிச்சைக்கு 3 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரை வாங்கும் நிலையில், திரு. சுப்பிரமணியம் தமது மருத்துவமனையில் வெறும் 500 ரூபாய்க்கு இந்தச் சேவையை வழங்கினார்.

திரு. சுப்பிரமணியம் அவர்களின் சாந்தி சோஷியல் சர்வீஸ் நிறுவனத்தின் பரிசோதனை நிலையத்தில் உடல் பரிசோதனை, இசிஜி, எக்ஸ்ரே ஆகியன நகரில் பிற இடங்களிலும் செலுத்தப்படும் தொகையை விட மிகக் குறைவான, அதாவது 50 சதவிகிதம் விலை குறைவாக இன்றளவும் வழங்கி வருகின்றது.

சாந்தி உணவகம்

வயிற்றுக்குச் சோறிட வேண்டும் இங்கு வாழும் மனிதருக்கெல்லாம் என்னும் முதுமொழிக்கு உரியவராகத் திகழும் திரு. சுப்பிரமணியம், தொழிலில் தாம் சேர்த்த செல்வங்களைக் கொண்டு முறையான, தூய்மையான, சுவையான முறையில் எளிய விலையில் உணவுகளை உரிய நேரத்தில் அனைத்து மக்களுக்கும் வழங்கிட முன்வந்தார். கோயமுத்தூர் மாநகரில் புகழ்பெற்ற அல்லது சாதாரண உணவகங்களில் ஒரு மனிதன் ஒரு வேளை சாப்பிட வேண்டுமெனில் குறைந்தது 75 ரூபாய் ஆகும். இது எல்லா நிலை மக்களுக்கும் இயலாத காரியம் என்பதனால் மிக எளிய விலையில் நல்ல தரமான உணவை வழங்க வேண்டும் என்னும் கனவை நனவாக்கினார். ஆம், இரண்டு இட்லிகளின் விலை 5 ரூபாய். 2 பூரிகளின் விலை 10 ரூபாய். மதியம் வயிறு நிறைய உணவு 15 ரூபாய். இவை அனைத்தும் தூய்மையான இடத்தில், தூய்மையான தட்டில், தூய்மையான பணியாளர்களால் வழங்கப்படும் என்ற நடைமுறையைச் செயல்படுத்தினார். இந்த உணவகத்தில் தினசரி உணவு உண்பவர்களின் எண்ணிக்கை 15000க்கும் மேல். இவ்வளவு நபர்களையும் வரிசையாக, முகம் கோணாமல், குறைந்த காத்திருப்பு நேரத்தில் வழங்குகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தத் தொகையையும் செலுத்த இயலாதவர்களுக்கு இலவசமாகவே உணவுகளை வழங்கினார் திரு. சுப்பிரமணியம்.

மத்திய அரசு ஜி.எஸ்.டி வரியை அறிமுகப்படுத்தியபோது மற்ற உணவகங்கள் எல்லாம் இந்த வரியை வாடிக்கையாளர்களின் மீது திணித்தது. ஆனால் திரு. சுப்பிரமணியம் வாடிக்கையாளர்களின் ஜி.எஸ்.டி வரியைத் தாங்களே செலுத்தி அதே சேவையை எந்தவித மாறுபாடும் இன்றி தொடரச் செய்தார்.

உயர்தர உணவகங்களில் காபி சாப்பிடும் விலையில் இங்கு இரண்டு பேரின் காலை உணவு பூர்த்தியாகின்றது என்றால் அதன் சேவையை நாம் புரிந்து கொள்ள வேண்டும். மூத்த குடிமக்களுக்கும், சீருடையுடன் வரும் குழந்தைகளுக்கும் இலவசமாகவே காலை உணவையும், மதிய உணவையும் வழங்கினார். நமது இல்லத்தில் காகத்திற்கு வைக்கும் அளவுள்ள உணவுக்குக் கோயமுத்தூரின் புகழ் வாய்ந்த உணவகங்கள் 70 ரூபாய் தொகை வசூலித்த போது, திரு.சுப்பிரமணியம் 70 ரூபாய்க்குக் குடும்பத்திற்கே ஒரு வேளை உணவு அளித்தார் என்பதை நாம் நம்பித்தான் ஆக வேண்டும்.

திரு. சுப்பிரமணியம் அவர்கள் தாம் வாழ்ந்த காலத்தில் எங்கேயும் தம்மை அடையாளப்படுத்திக் கொள்ளாமல் சேவையை வழங்கினார். தமிழகத்தின் புகழ்பெற்ற ஊடகங்கள் இவரை நேர்காணல் செய்திட எவ்வளவோ முயன்றும் மறுத்துவிட்டார். கோயில்களில் பிறந்த நாளுக்கும், திருமண நாளுக்கும் உணவு தானம் செய்பவர்கள் தங்களின் பெயர், ஊர், படிப்பு என எல்லாவற்றையும் அச்சிட்டு அடையாளப்படுத்தி உதவினோம் என்பதைச் சமூக ஊடகங்களில் விளம்பரப்படுத்தும் இக்காலத்தில் தாம் யாரென்பதே, யாருக்கும் தெரியாமல் வாழ்ந்தார் என்றால் நம்பித்தான் ஆக வேண்டும். இந்த சாந்தி உணவகத்தில் நீங்கள் உணவருந்தும் போது அவரேகூட உங்களுக்கு உணவு வழங்கியிருக்கலாம். பெட்ரோல் நிலையத்தில் உங்கள் வாகனங்களுக்கு அவரே எரிபொருள் நிரப்பி இருக்கலாம். இந்த மனிதரைப் பற்றி நாம், நம் குழந்தைகளுக்குக் கற்றுத் தர வேண்டும். சாலையில் குப்பையை எடுத்துப் போட்டாலே, சமூக வலைத்தளத்தில் பதிவேற்றும் நிலையை மாற்றி, உதவுவதை உள்ளன்புடன் செய்ய வேண்டும் என்பதைக் குழந்தைகளுக்குச் சொல்லித் தர வேண்டும்.

அரசுப் பணத்தில் திட்டங்களைச் செயல்படுத்தியவர்களைப் பற்றி பாடம் படிக்கும் நாம், இவரைப் பற்றியும் படிக்க வேண்டும். அரசாங்கம் செய்ய வேண்டிய பணிகளைத் தனியொரு மனிதராக அடையாளம் தெரியாமல் செய்யும் இவரைப் பற்றி தமிழக கல்வி நிறுவனங்கள் அல்லது கோயமுத்தூர் கல்வி நிறுவனங்கள் அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் சொல்ல வேண்டும்.

தமிழகத்தின் ஏழைகளுக்கு எளிய விலையில் அரசாங்கம் உணவு வழங்குவதற்கு முன்பே திரு. சுப்பிரமணியம் தமது சேவையால் தொடர்ந்தார் என்பது இங்கு நினைவுபடுத்தப்பட வேண்டும். காய்கள், பருப்புகள், அரிசி விலை, ஜி.எஸ்.டி, பணியாளர்களின் ஊதியம் என எது உயர்ந்தாலும் இந்த அறநிலையத்தில் உணவுப் பொருளின் விலை மட்டும் உயராது. உடலுக்குக் கேடு விளைவிக்கும் பரோட்டா இங்கு விற்பனை செய்வது இல்லை. உணவு அருந்தும்போது உணவின் ருசியை உணர்ந்து சாப்பிட வேண்டும் என்பதற்காக, உணவகத்தில் ஜாமர் கருவியைப் பொருத்தி அலைபேசிகள் இயங்காமல், மனம் மட்டும் இயங்கும் வகையில் வடிவமைத்தார். காரில் வருபவர்களுக்கும், கால்நடை மேய்ப்பவர்க்கும் ஒரே மரியாதையை வழங்கினார்.

எதிர்காலக் குழந்தைகளுக்கு எல்லா நிலையிலும் கல்வி கிடைக்க வேண்டும் என்னும் நோக்கில் அரசுப் பள்ளிகளுக்குப் புதிய கட்டடங்கள் கட்டித் தந்தார். ஆசிரியர்கள் இல்லாத பள்ளிக்கூடங்களுக்கு ஆசிரியர்களை நியமித்து அவர்களின் ஊதியத்தையும் திரு. சுப்பிரமணியம் வழங்கினார். தமது அற நிலையத்திற்கு வரும் அனைவரும் மன நிறைவுடன் செல்ல வேண்டும், வயிறும் நிறைய வேண்டும் என்பதைத் தமது குறிக்கோளாகக் கொண்டார்.

பெரியவர்கள் தொடங்கி குழந்தைகள் வரை மகிழ்ச்சியாகச் செல்ல வேண்டும் என்பதற்காக விலை உயர்ந்த பொழுதுபோக்குச் சாதனங்களை வாங்கி அதனைப் பொதுமக்கள் பயன்படுத்த அனுமதித்தார். இந்த அறநிலையத்திற்கு வருகை புரிபவர்கள் எல்லோரும் மனம் இன்பமுற்றே சென்றார்கள் என்பது வரலாறு.

ஆயிரம் பிறை கண்ட மைந்தர் தமது 78 வது வயதில் உடல்நிலை பாதிக்கப்பட்டு மறைந்தார் என்ற செய்தி அறிந்த போது இவரால் பலன் பெற்றவர்கள் கலங்கினார்கள். இந்திய அரசு இவரின் சேவைகளைப் பாராட்டி 2021 ஆம் ஆண்டு பத்ம விருது வழங்கிக் கெளரவப்படுத்தியது.

அரசுப் பணத்தில் அரசுக் கட்டடங்களையும், அரசுத் திட்டங்களையும் பிரதிநிதியாகச் செயல்படுத்தும் அரசியல்வாதிகள் தங்களது சொந்த நிதியில் திறந்து வைப்பது போல புகைப்படத்திற்குக் காட்சி கொடுக்கும் நிலையில், தாம் யாரென்பதை யாருக்கும் தெரிவிக்காமல் இறுதிவரை வாழ்ந்த இந்த மண்ணின் மைந்தருக்கு நாம் செய்யும் நன்றிக்கடன் என்பது நல்ல உள்ளத்தோடும், உதவும் உள்ளத்தோடும் வாழ்ந்திட வேண்டும் என்பதே.

0

பகிர:
பொ. சங்கர்

பொ. சங்கர்

கட்டுரையாளர், எழுத்தாளர். தவத்திரு சச்சிதானந்த சுவாமிகள், வேதாத்திரி மகரிசி ஆகியோரின் வாழ்வியல் சிந்தனைகளை ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவர். தொல்லியல் சான்றுகள் தேடி விரிவான பயணங்கள் மேற்கொண்டவர். கோயமுத்தூர் யுவபாரதி மையப்பள்ளியில் தமிழாசிரியராகப் பணிபுரிகிறார். தொடர்புக்கு - tamilshanker@gmail.comView Author posts

3 thoughts on “மண்ணின் மைந்தர்கள் #7 – சாந்தி கியர்ஸ் சுப்பிரமணியம்”

  1. இவர் போன்ற நல்லவர்களை இந்த உலகில் விரல் விட்டுத் தான் எண்ணி சொல்ல வேண்டி இருக்கும். காலமறிந்த விழிப்புணர்வு பதிவு சங்கர் வாழ்த்துகள்….

  2. அருமையான பதிவு. திரு சங்கர் அவர்கள் வார்த்தைகளை கையாண்டிருக்கும் விதம் அற்புதம்.”காரில் வருபவர்களுக்கும், கால்நடை மேய்ப்பவர்க்கும் ஒரே மரியாதையை வழங்கினார்.” மாமனிதனின் மகத்துவத்தை எடுத்துரைத்ததற்கு நன்றி.

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *