Skip to content
Home » மண்ணின் மைந்தர்கள் #8 – வளமான தமிழ் மரபின் தெளிவான போராளி நம்மாழ்வார்

மண்ணின் மைந்தர்கள் #8 – வளமான தமிழ் மரபின் தெளிவான போராளி நம்மாழ்வார்

நம்மாழ்வார்

விண்ணுக்குத் தரும் முக்கியத்துவத்தை அரசுகள் மண்ணுக்குக் கொடுக்கத் தவறிய நேரத்தில் விதையாய் எழுந்த விருட்சம் நம்மாழ்வார். நாம் உண்ணும் உணவுகள் மண்ணை மட்டும் அல்ல மனிதர்களையும் மலடாக்குகிறது என்பதை அழுத்தம் திருத்தமாகச் சொன்னவர். விடுதலைக்காக மதுரையில் விவசாயிகளைப் பார்த்து சட்டையைக் கழட்டிய காந்தியைப் போல மண் காக்க சட்டையை உதறி பன்னாட்டு நிறுவனங்களின் சட்டையை உரித்த விவசாயிகளின் தோழன் இந்த நம்மாழ்வார்.

பொட்டாசியம், பாஸ்பரஸ், யூரியா ஆகியவற்றை யாரெல்லாம் உணவுகளோடு சாப்பிடுவோம் எனில் எல்லோரும் என்பது பதிலாக இருந்தது. ஆனால் இன்று சந்தைகளிலும், வியாபாரத் தளங்களிலும் ஆர்கானிக் என்ற இயற்கை மூலப்பொருள்களால் மட்டுமே தயாரிக்கப்பட்ட காய்கள், பொருள்கள் விற்பனைக்கு வந்துள்ளமைக்கு இவரின் தொடர் முயற்சியே காரணம். எல்லாவற்றிலும் சந்தேகப்படுங்கள், பின்பு இயற்கைக்கும், நமது உடலுக்கும் ஏற்ற பொருள்களை மட்டும் வாங்கிப் பயன்படுத்துங்கள் என்ற விழிப்புணர்வின் விதை நம்மாழ்வார். உயிர்க்கொல்லிகளை உங்கள் குழந்தைகளுக்கும், மண்ணுக்கும் கொடுக்காதீர்கள் என்று இயற்கை வேளாண்மையை உரக்கச் சொல்லிச் சொல்லி ஊக்கப்படுத்தியவரைப் பற்றி அடுத்த தலைமுறைக்கு அவசியம் தெரியப்படுத்தும் அவசர நோக்கமே இந்தப் பதிவு.

பண்டைய காலம் முதலே நமக்குத் தேவையான பாரம்பரிய விதைகளை பாதுகாத்துப் பயிரிட்டு அதனைக் காத்து வந்தனர் நம் உழவர்கள். பன்னாட்டுக் கம்பெனிகளின் முதல் இலக்கு நமது பாரம்பரிய விதைகளை அழிப்பது என்பதை இலக்காக வைத்துச் செயலாற்றிய தருணத்தில் அதன் அழிவைத் தடுத்து நிறுத்தி இயற்கை வேளாண்மையை விருட்சமாக வளர வைக்க அரும்பாடுபட்டவர் நம்மாழ்வார்.

வான் மண்டலத்தை ஆராயும் நபரை நாம் விஞ்ஞானி என்று அழைத்த காலம் போய் மண் மண்டலத்தை அகழ்ந்து எடுத்து ஆராய்ந்த இவரே ‘வேளாண் விஞ்ஞானி’ என ஏன் அழைக்கத் தொடங்கினோம் என்பதே இந்தப் பதிவின் நோக்கம்.

தமிழர்களின் திணை நிலப் பயிர்களை நாம் பொதுப் பயிர்களாக மாற்றி பயிரிடத் தொடங்கிய காலத்தில் வேளாண்மையில் வேதி உரங்களையும் தூவுதல் வேண்டும் என்னும் பொதுப் புத்தியைப் பன்னாட்டு நிறுவனங்கள் நமக்குள் விதைத்தன. வேதி உரங்களின் வேகமான வளர்ச்சியையும் அதிக மகசூலையும் கண்டு மதி மயங்கிய நமது வேளாண் குடிமக்கள் நமது பாரம்பரிய விதைகளை மறந்து அன்னிய நாட்டு விதைகளை விதைக்கத் தொடங்கினர். காலம் செல்லச் செல்ல மண் மலடாவதைக் கண்டு மீள வழி தெரியாமல் தவித்த நேரத்தில் தமிழகம் முழுவதும் அடி அடியாய் எடுத்து வைத்து வேளாண் மக்களையும் இயற்கை வேளாண்மையையும் மீட்டெடுத்தவர் நம்மாழ்வார். 1938ல் தஞ்சாவூரில் பிறந்து, அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் வேளாண்மைப் பட்டம் பயின்று இயற்கை விவசாயத்தைக் காக்க தாம் செய்து வந்த மத்திய அரசின் பணியையும் உதறி, கணிப்பொறி இயக்கியவர்களையும் கடப்பாரையையும் வேளாண் கருவிகளையும் இயக்க வைத்து, இயற்கை வேளாண்மையை மீட்டெடுப்பதைத் தம் இலக்காக வைத்து இயங்கியவர்.

மூலதனத்தை மட்டுமே கொள்கையாகக் கொண்ட பன்னாட்டு நிறுவனங்கள் நமது பாரம்பரிய விதைகள், மரங்கள், வேர்களைக் காப்புரிமை என்னும் பெயரில் களவாடத் தொடங்கின. தமிழகம் முழுவதும் நாட்டு மரங்களை அழித்து அதன் மூலம் விதைகள் பரவாமல் தடுத்து செயற்கை விதை இல்லா மரங்களை மரக்கன்றுகள் இலவசம் என்ற பெயரில் நமது குளங்களிலும் சாலைகளிலும் நடத் தொடங்கினர். செயற்கை மரங்களில் பழங்களைச் சாப்பிடும் பறவைகள் எச்சங்களைப் பரப்பினாலும் விதைகள் மரமாகாது. இதன் மூலம் நமது பாரம்பரிய நாட்டு விதை பழ மரங்களைக் காப்புரிமை என்னும் பெயரில் கைப்பற்றத் தொடங்கினர். அதனை ஓரளவு தடுத்து நிறுத்தி நமது வேப்ப மரத்தின் காப்புரிமையை ஜெர்மன் வரை சென்று மீட்டுக் கொண்டு வந்தவர் நம்மாழ்வார்.

2000 ஆம் ஆண்டு ஐரோப்பிய காப்புரிமை அலுவலகத்தில் இந்தியாவின் சார்பில் நம்மாழ்வார், வந்தனா சிவா ஆகியோர் இணைந்து டபிள்யூ. ஆர். கிரேஸ் என்ற பன்னாட்டு நிறுவனத்தின் காப்புரிமையை எதிர்த்து வழக்குத் தொடுத்து பல்வேறு வாதங்களை எடுத்து வைத்து, இந்தியா, பாகிஸ்தான் நிலவியலில் மட்டுமே வளரக்கூடிய வேப்ப மரத்தை ஐரோப்பிய நிறுவனம் எவ்வாறு உரிமை கொண்டாட இயலும் என்று வாதாடிட, வேப்பமரம் இந்தியாவின் சொத்து என்பது 2000 ஆம் ஆண்டு மே மாதம் 10 ஆம் நாள் உறுதியானது. டபிள்யூ. ஆர். கிரேஸ் நிறுவனத்திற்குக் காப்புரிமை அலுவலகம் கண்டனத்தையும், அபராதமும் விதித்து நம்மாழ்வாருக்குப் பாராட்டுச் சான்றிதழ் வழங்கியது. இந்திய சுதந்திரப் போருக்காக இங்கிலாந்தில் நடைபெற்ற வட்டமேசை மாநாட்டில் மகாத்மா காந்தியடிகள் மேலாடை அணியாமல் பெரும் சாம்ராஜ்ஜியத்தை எதிர்த்துப் போராடினார். அதுபோல மேலாடை அணியாமல் ஐரோப்பிய நிறுவனங்களை அவர்களது மண்ணிலேயே ஆட்டம் காட்ட வைத்த தாடி வைத்த ‘வேளாண்மை வேந்தன்’ இந்த நம்மாழ்வார். வேப்ப மரத்தைப் பார்க்கும் போதெல்லாம் இந்தத் தாடி வைத்த வேந்தன் நினைவு கூறப்பட வேண்டும்.

‘நமது விதைகளே நமது ஆயுதங்கள்’ என்பதில் மிகத் தெளிவான பார்வையும், தொலைநோக்குச் சிந்தனைகளையும் கொண்டிருந்தவர் நம்மாழ்வார். பாரம்பரிய விதைகளைப் பாதுகாப்பவர்களை வணங்கி மகிழ்வதை வாடிக்கையாகக் கொண்டவர். பாரம்பரிய விதைகள் பற்றிய பேச்சு வரும்போதெல்லாம், மத்திய நெல் ஆராய்ச்சி நிலையத்தின் இயக்குநராக இருந்த ராதேலால் ஹெர்லால் ரிச்சார்யாவைக் குறிப்பிட்டு மகிழ்வார். ரிச்சார்யா, இந்தியாவின் 22,972 பாரம்பரிய விதை ரகங்களை வெளிநாடுகள் கைக்குச் செல்லாமல் பாதுகாத்தவர். அதனாலேயே தனது பணியையும் இழந்தவர் என்று பலமுறை எடுத்துரைத்துள்ளார். ரிச்சார்யா மற்றும் இயற்கை விஞ்ஞானிகளின் கோரிக்கைகளைப் புறந்தள்ளி, அத்தனை பாரம்பரிய விதை ரகங்களையும் பன்னாட்டு நிறுவனமான ஸின்ஜெண்டாவிடம் 2003-ல் நமது அரசு ஒப்படைத்தபோது, கண்ணீர்விட்டு அழுது கண்டனத்தைத் தெரிவித்தார். 2000 ஆம் ஆண்டில் வேப்பமரத்தை மீட்டெடுத்தபோது ஆனந்தக் கண்ணீர் வந்தது. 2003 ஆம் ஆண்டு நமது செல்வங்களை நமது அரசே பன்னாட்டு நிறுவனத்திற்குத் தாரை வார்த்துத் தந்த போது கண்ணீர் இல்லாமல் கலங்கினேன் என்று கூறியதை யார் உணர்வாரோ?

எந்தப் பயிர் விளைவித்தாலும் பயிருக்கும், மண்ணுக்கும் நைட்ரஜன் சத்துக்காக யூரியா வேண்டும் என்ற பொய்யான மாயையைத் தவறு என்று உறுதிபட மறுத்து, நமது மண்ணிலேயே இயற்கையாக நைட்ரஜன் உள்ளது என்பதை நிரூபித்தவர் இந்த விஞ்ஞானி. நமது அரசுகளே உரங்களை ஊக்குவித்துக் கொண்டிருந்த காலத்தில் தமிழகம் முழுவதும் பயணம் செய்து உரங்களினால் மண்ணில் காரத்தன்மை கூடி, நீர் அதிகம் உறிஞ்சப்படும். மண் மலடாகும். அதனால் மனித இனமும் மலடாகும். ஆதலால் தயவு செய்து இயற்கை வேளாண்மைக்குத் திரும்புங்கள் என்று திருப்புமுனையை ஏற்படுத்தியமையால் பன்னாட்டு நிறுவனங்களின் பகையாளி ஆனார் இந்தப் போராளி.

மரபணு மாற்றப்பட்டு வீரிய விதைகளை உற்பத்தி செய்யும் நிறுவனங்களைப் பாரம்பரியம் – இயற்கை வேளாண்மை என்ற ஒரே சொத்துக்காக துணிச்சலுடன் எதிர்கொண்டார். ஒற்றை நெல் நடவுமுறை நமது மண்ணின் பூர்வ வரலாற்றுத் தொன்மை உடையது. அதைக் காலப்போக்கில் மறைய வைத்த நிலையை மாற்றி மீண்டும் நடைமுறைக்குக் கொண்டு வந்தவர் நம்மாழ்வார். ஒரு ஏக்கருக்கு 25 க்கும் மேற்பட்ட மூட்டை நெல்களை அறுவடை செய்ய இயலும் என்பதைச் செயல் வழியாக்கியவர். நம்முடைய பாரம்பரிய விதைநெல் ரகங்களான மாப்பிள்ளை சம்பா, குடவாழை, குழியடிச்சான், கவுனி எனப் பல விதைகளை மீட்டு நடைமுறைக்குக் கொண்டு வந்தவர்.

கீரைகள் வாங்கும் போது பூச்சி ஓட்டை இட்ட கட்டுகளை வாங்குவதை நாம் தவிர்ப்போம். ஆனால் இனிமேல், பூச்சிக்கொல்லிகள் ஓட்டை இடாத கீரைகளையும், காய்களையும் வாங்குவோம். ஏனெனில் பூச்சிக்கொல்லிகள் என்பது பூச்சிக்கு மட்டும் கொல்லி அல்ல, அது உயிர்க்கொல்லி என்று உரக்கச் சொல்லியவர் நம்மாழ்வார்.

தமிழர்களின் வேளாண் முறையை மாற்றி நம் பண்பாட்டை மாற்ற வேண்டும் என்பதை மட்டுமே இலக்காக வைத்துச் செயலாற்றும் நிறுவனங்களுக்கு எதிரான கலந்தாய்வில் தவறாமல் அவர் கூறுவது ‘நுனி வீட்டுக்கு, நடு மாட்டுக்கு, அடி காட்டுக்கு’ என்று கூறி நெல்லின் நுனிப் பகுதி அரிசியாக நமது வீட்டுக்கு வருகின்றது, நடுப்பகுதி வைக்கோலாக மாட்டுக்கு உணவாகின்றது, அடிப்பகுதி மண்ணுக்கு உரமாகின்றது என்பதை விதையாக விதைத்த போராளி. அதுபோல கரும்பிலும் பயன்படுகிறது என்பதை நுனியும், நடுவும் மனிதனுக்கும் மாட்டுக்கும் உணவாக, அடிப்பகுதி காட்டுக்கு உரமாக நமது வேளாண் முறையை உருவாக்கியவர்கள் தமிழர்கள் என்பதை எடுத்துரைப்பார்.

ஊரூர் தோறும் நடைப்பயணம் செல்லும் போதெல்லாம் நமது வேளாண்குடி மக்களிடம் பறவைகளுக்கும், மண்ணுக்கும் ஆதாரமாகத் திகழும் கொய்யா, பப்பாளி, வாழை, நாவல் போன்றவற்றை லாப நோக்கமின்றித் தோட்டத்தின் ஓரங்களில் பயிரிடுங்கள். நமக்குப் பூமியைப் பரிசளித்த பறவைகளுக்கு நம்மால் இயன்ற அளவு நாட்டு மரங்களை நட்டு உணவளிப்போம். நம்மால் காட்டை உருவாக்க இயலாது. பறவையால் மட்டுமே இயலும் என்று வலியுறுத்துவார்.

பி.டி. கத்திரிக்காயை இந்தியாவில் அறிமுகப்படுத்த முயன்றபோது பல முன்னெடுப்புகளை எடுத்து தமிழகத்தில் பி.டி. கத்திரிக்காய் ரகம் வராமல் தடை உத்தரவு பிறப்பிக்கக் காரணமாக விளங்கியவர் நம்மாழ்வார்.

கரூர் அருகே வானகம் என்னும் அமைப்பை உருவாக்கி ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கும், விவசாயிகளுக்கும் இயற்கை வேளாண்மையில் பல பயிற்சிகள் அளித்து, பல்கலைக்கழகமாகத் திகழ்ந்தார். கூட்டுப்பண்ணைகள் எவ்வாறு அமைக்க வேண்டும், இயற்கை வேளாண் காரணிகள் எனப் பலவற்றையும் கற்றுக் கொடுத்து அந்த விதைகளைத் தமிழ்நாடு முழுவதும் தூவ வைத்துள்ளார்.

1990க்குப் பிறகு, தாராளமயமாக்கல் மூலம் பன்னாட்டு நிறுவனங்கள் பல்வேறு விளம்பரங்கள் வாயிலாக நமது ‘படித்த’ மக்களை மூளைச் சலவை செய்து, பாட்டிலில் அடைக்கப்பட்ட, குப்பியில் திணிக்கப்பட்ட, மூடி சீல்வைக்கப்பட்ட உணவுகளே தரமானவை என்னும் மாயையை உருவாக்கினார்கள். நமது மக்களும் சாம்பலைத் துறந்து பற்பசைக்கும், கேழ்வரகுக் கஞ்சியை மறந்து திரைப்பட நடிகர்கள் வலியுறுத்தும் பவுடர் பானங்களில் புரோட்டின் இருப்பதாக நமது படித்த மக்களும் நம்பினார்கள். நம்மாழ்வார் சிறு விதையாக நமது தானியங்களின் பயன்களை ஒவ்வொரு கூட்டத்திலும் வலியுறுத்தினார். ‘மாற்றம் மெதுவானது, ஆனால் நிலையானது’ என்பதை வலியுறுத்தி, துரித உணவுக்கு மாற்றான நமது தானிய உணவுகளின் பயன்களை எடுத்துரைத்தார். இன்று பல்பொருள் அங்காடிகளில் நமது தானியங்களான ராகி, கம்பு, சோளம், கேழ்வரகு, குதிரைவாலி ஆகியவற்றுக்குத் தனித்த விற்பனைப் பிரிவாகத் திகழ இவர் காரணமாகத் திகழ்ந்தார்.

வயல் வெளியைப் பாடசாலை ஆக்கி விவசாயிகளை ஆசிரியர்களாக்கிய பேராசான் இந்த நம்மாழ்வார். பூமிக்கு அழகு என்பது பச்சை. அதுவே எனக்கும் ஆடையாக இருக்கட்டும் என்று பச்சை ஆடை உடுத்தும் பாட்டாளிக்குப் பிடித்த பாட்டு ‘எத்தனைக் கோடி இன்பம் வைத்தாய்’ என்னும் முண்டாசுக் கவிஞனின் வரிகள்தான். இயற்கை இப்போது மட்டுமல்ல எப்போதும் காக்க வேண்டும் என்பதற்காக இவரின் எண்ணத்துளிகளாக – களை எடு, உழவுக்கும் உண்டு வரலாறு, விதைகளே பேராயுதம், எந்நாடுடைய இயற்கையே போற்றி, வயிற்றுக்குச் சோறிடல் வேண்டும், நெல்லைக் காப்போம், நோயினைக் கொண்டாடுவோம் என்பன போன்ற 15க்கும் மேற்பட்ட நூல்களையும் எழுதியுள்ளார். பன்னாட்டு வேதி உர நிறுவனங்களின் பணியாளர்களாகப் பணியாற்றும் விஞ்ஞானிகள் எழுதிய நூல்களையே நமது வேளாண் கல்லூரிகளில் நமது மாணவர்கள் பாடமாகப் படித்து வருகின்றனர். நமது மண்ணின் மைந்தர்களின் செயல்வழிக் கற்றல் நூல்களை நமது வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் பாடமாக வைத்திட நாம் ஒவ்வொருவரும் வலியுறுத்திட வேண்டும். அரசும் செயல்வழித் திட்டத்தை உருவாக்கிட வேண்டும்.

நம்மாழ்வார் உருவாக்கிய மாற்றம் நிலையானது. ஏனெனில் படித்தவர்கள் தங்களது இல்லங்களின் முன் பெயரோடு படிப்பைச் சேர்த்து பதாகை வைப்பதை எவ்வாறு பெருமையாகக் கருதினார்களோ அது போல விவசாயிகளும் தங்களின் தோட்டம் முன் ‘இயற்கை வேளாண் பண்ணை’ என்னும் பதாகை அமைத்துத் தங்களுக்கான பெருமையை நிலைநாட்டச் செய்தார் நம்மாழ்வார். தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் இயற்கை வேளாண் பயிற்சி மையங்கள் உருவாவதற்கு விதையாகத் திகழ்ந்தார். இந்தோனேசியா அரசின் சிறப்பு அழைப்பை ஏற்று, அந்நாட்டிற்குச் சென்று சுனாமி பாதித்த பகுதிகளில் மாதிரிப் பண்ணைகள் அமைத்துத் தந்தார். அயல் நாடுகள் கண்டு உணர்ந்த இந்த விஞ்ஞானியை நமது அரசுகள் ஏனோ கண்டுகொள்ளவில்லை.

எது இயற்கை வேளாண்மை என்பதற்கு அவர் அளித்த விளக்கத்தை இன்று பல ஊர்களில் வேளாண்மக்கள் பின்பற்றி ஒருங்கிணைந்த வயல்வெளியை உருவாக்கி வருகின்றனர். அதாவது ‘இயற்கை விவசாயம்ங்குறது ரசாயனம் கலக்காம பண்றது மட்டும் இல்லை. நிலம் முழுக்க ஒற்றை பணப்பயிர் நடுறது இயற்கை விவசாயம் இல்லை. நிலத்தில் ஒரு பயிர் மட்டும் நடாமல், பல்வேறு காலக்கட்டங்களில் அறுவடைக்கு வரும் மரங்களை நடணும். அஞ்சு அடுக்கு முறை, ஏழு அடுக்கு முறையில் விவசாயம் செய்யுங்க. தேக்கு, தென்னை, வாழை, பாக்குன்னு கலவையா மரங்களை நடணும். ஊடுபயிரா காய்கறிகளையோ, கடலை மாதிரியான பயிர்களையோ விவசாயம் செய்யணும். இப்படிச் செய்தால் காற்றடிக்கும்போது ஒரு மரம் மற்றதற்கு அரணா இருக்கும். சுழற்சியில அறுவடைக்கு வரும்போதே, பொருளாதார ரீதியாவும் பலன் கொடுக்கும்’ என்று பாமர மொழியில் பாடம் நடத்தி ஆயிரக்கணக்கான கூட்டுப்பண்ணைகள் உருவாக்கத்திற்கு அடி உரமாகத் திகழ்ந்தார். பசுஞ் சாணத்தையும், இழைகளையும் கொண்டே இயற்கையைக் காக்கவும், விளைவிக்கவும் முடியும் என்பதை வலியுறுத்தினார்.

‘உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம் தொழுதுண்டு பின்செல்பவர்’ என்ற வள்ளுவனின் குறளுக்கு அர்த்தம் அளித்தவர் நம்மாழ்வார். உணவுச் சங்கிலியை உடைக்காதீர்கள், கால்நடைகளின் வீழ்ச்சி விவசாயத்தின் அழிவு என்பதையும் எடுத்துரைத்தார்.

தஞ்சாவூர் இன்று வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டு நிலம் காத்த சாமியாகத் திகழ்வதற்கு இவரின் போராட்டம் மூல காரணம். மீத்தேன் பணிகளுக்காக அரசே வேளாண் நிலங்களைக் கையகப்படுத்தத் தொடங்கிய போது பல்வேறு ஊர்களுக்கும் சென்று மீத்தேன் எதிர்ப்பைப் பதிவு செய்து வேளாண் குடி மக்களை ஓரணியில் திரளவைத்துப் போராடினார். இயற்கை வேளாண்மையை ஓரளவு மீட்ட நேரத்தில் நிலம் பறிபோவதை எதிர்த்துப் போராடிய ஒரு போராட்டக் களத்தில் நம்மாழ்வார் உறங்கா விதையாக 2013 ஆம் ஆண்டு திசம்பர் 30 ஆம் நாள் உறங்கிப்போனார்.

நாம் சிறுதானிய ஆண்டை இப்போது கொண்டாடுகிறோம். சிறுதானியங்கள் மனிதனுக்கு மட்டுமல்ல, பல்லுயிரிகளின் உணவு என்பதை ஆதாரத்தோடு நிறுவி அறவழியில் ஆக்கப்படுத்தியவர் நம்மாழ்வார். மானாவாரி உழவர்கள் இந்த நாட்டின் உணவுத் தேவையை 50 சதவிகிதம் போக்குபவர்கள். ஆனால் மானாவாரி உழவர்களுக்கும் மனிதநேயமே இல்லாமல் வரி விதிப்பதால் பலர் வேளாண்மையை விட்டு மில் தொழிலாளிகள் ஆகிவிடும் நிலைமை உருவாகி வருகின்றது. அறம் என்பது அரசாக, அரசு என்பது அறமாகத் திகழ்ந்து இந்த மண்ணையும், வேளாண்மையும் மீட்டெடுக்க வேண்டும். சிறப்புப் பொருளாதாரத் திட்டங்களுக்குப் பதிலாக வேளாண் திட்டங்களை வகுக்க வேண்டும். விதைத்தவன் உறங்கினாலும், விதைகள் உறங்காது. ஆம், நம்மாழ்வார் விதை.

நம்மாழ்வார் என்னும் விதை நம்மை ஆண்டது. மண்ணாழ்வாராக மண்ணை ஆண்டது. இனி மீள்வதும், வாழ்வதும் நமது கைகளில்தான். மீட்டெடுப்போம் இயற்கையை…. களை எடுப்போம் பூச்சிக் கொல்லிகளை.

நஞ்சு இல்லாத உணவு நமக்கு வேண்டும், அதற்கு இயற்கை வேளாண்மை வேண்டும். இயற்கை வேளாண்மைக்குப் பாரம்பரிய விதைகளும், கால்நடைகளும், பறவைகளும், மரங்களும் வேண்டும். கரையைத் தொலைத்துவிட்டு படகில் பயணிக்காமல் நம்மாழ்வார் உருவாக்கிய களத்தை ஊரூர்தோறும் உருவாக்கிப் பயணிப்போம்.

0

பகிர:
பொ. சங்கர்

பொ. சங்கர்

கட்டுரையாளர், எழுத்தாளர். தவத்திரு சச்சிதானந்த சுவாமிகள், வேதாத்திரி மகரிசி ஆகியோரின் வாழ்வியல் சிந்தனைகளை ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவர். தொல்லியல் சான்றுகள் தேடி விரிவான பயணங்கள் மேற்கொண்டவர். கோயமுத்தூர் யுவபாரதி மையப்பள்ளியில் தமிழாசிரியராகப் பணிபுரிகிறார். தொடர்புக்கு - tamilshanker@gmail.comView Author posts

1 thought on “மண்ணின் மைந்தர்கள் #8 – வளமான தமிழ் மரபின் தெளிவான போராளி நம்மாழ்வார்”

  1. பூச்சிக்கொல்லிகள் என்பது பூச்சிக்கு மட்டும் கொல்லி அல்ல, அது உயிர்க்கொல்லி என்று உரக்கச் சொல்லியவர் நம்மாழ்வார்.

    ஆம் உண்மை. விழிப்புணர்வு பதிவு.. நன்றி

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *