Skip to content
Home » மண்ணின் மைந்தர்கள் #9 – சமுதாய முன்னேற்றமே சமயப் பணியின் நோக்கம்

மண்ணின் மைந்தர்கள் #9 – சமுதாய முன்னேற்றமே சமயப் பணியின் நோக்கம்

குன்றக்குடி அடிகளார்

தன்மானத்திற்கும் இனமானத்திற்கும் இழிவு வந்தபோது மரபுகளைத் தூக்கி எறிந்து மண்ணில் இறங்கி மக்களுடன் நின்று களப்பணி ஆற்றியவர்கள் சிலர். அந்த சிலரில் சீர்திருத்த மடாதிபதி தவத்திரு குன்றக்குடி அடிகளார் முக்கியமானவர்.

தமிழக வரலாறு தொன்மையும் காலச்சிறப்பும் உடையது. தமிழக வரலாற்றில் தமிழகத் திருமடங்களின் பங்களிப்பு இன்றியமையாதது. தமிழகத்தின் மிகத் தொன்மையான பதினெட்டுத் திருமடங்கள் என்றழைக்கப்படும் ஆதீனங்களில் மக்கள் பணி ஆற்றிய ஆதீனங்கள் ஒரு சிலவே. அவற்றுள் குன்றக்குடி ஆதீனத்தின் 45வது மடாதிபதியாகத் திகழ்ந்த தவத்திரு குன்றக்குடி அடிகளார் எவ்வாறு மக்களின் சொத்தாகத் திகழ்ந்தார் என்பதே இப்பதிவின் நோக்கம்.

பண்டைய காலத்தில் சைவம், வைவணம், கெளமாரம், காணாபத்தியம், சாக்தம், செளரம் எனத் திகழ்ந்த பிரிவுகளின் ஒன்றுகூடலே காலப்போக்கில் இந்து சமயம் என அழைக்கப்பட்டது. சமயத்தையும் , மக்களையும் காக்க உருவாக்கப்பட்ட ஆதீனங்கள் காலமாற்றத்தில் திருமடத்தின் சொத்துகளைக் காக்கும் பிரிவாகவே செயல்பட்டமையால் சமயமும், மக்களும் நெறி மாறும் சூழல் உருவானது. மாறும் மக்களை மாற்றத்திற்கு மட்டுமல்லாமல் சமுதாய மேம்பாடு நோக்கிச் செலுத்துவதும் சமயப்பணி என்பதைத் திறமுடன் ஆற்றிய அரங்கநாதன் என்னும் தவத்திரு குன்றக்குடி அடிகளார் 1925ஆம் ஆண்டு மயிலாடுதுறை அருகே நடுத்திட்டு என்னும் கிராமத்தில் பிறந்து வளர்ந்து வந்து காலத்தில் , சிறுவயதாக இருக்கும் போது ரா.பி.சேதுப்பிள்ளை அவர்களிடம் தினம் ஒரு திருக்குறள் ஒப்புவித்து காலணா பரிசு பெற்ற நிகழ்வு பின்னாட்களில் திருக்குறள் நெறியைப் பரப்பிட உதவியாக இருந்தது.

தருமபுர ஆதீனத்தில் மரபுப்படி தீக்கை பெற்று அங்கே தம்பிரானாக இருந்த போது , இவரின் செயல்களைக் கண்டு வியந்த குன்றக்குடி ஆதீன 44 ஆம் பட்டத்தின் தலைவர், தருமை ஆதீன அனுமதியுடன் குன்றக்குடியின் இளவரசாக நியமித்தார். கிட்டத்தட்ட அரச பாரம்பரியம் கொண்ட திருமடத்தலைவர் பதவியை இவர் மக்களுக்கான, சமுதாயத்திற்கான முன்னெடுப்புப் பதவியாக மாற்றி செயலாற்றத் தொடங்கினார்.

தவத்திரு குன்றக்குடி அடிகளாரின் இளமைக்காலம் திருக்குறள் நெறியாலும், தவத்திரு விபுலானந்த அடிகளின் இணக்கத்தாலும் இவரை ‘மாற்றி யோசி’ என்னும் முறையில் சிந்திக்கவைத்ததை அவரே குறிப்பிட்டுள்ளார்.

தமிழகத்தில் 1950களுக்குப் பிறகு, சமய மறுப்புப் பிரசாரம் மிகத்தீவிரமாக வேகமுற்று, சமயத்தைப் பழிக்கும் அளவுக்குச் சென்றது. இளைய சமுதாயம் அரசியல் காரணங்களால் சமயத்தைவிட்டு விலகும் சூழல் வேகமெடுத்த காலத்தில் 1952ல் குன்றக்குடி ஆதீனத்தின் தலைவராகப் பொறுப்பேற்றார். குருமகாசந்நிதானமாகப் பொறுப்பேற்றவர் தமது பணிகளின் மூலமும் செயல்களின் மூலமும் மக்களாலும் , சமய உலகிலும் அடிகளார் என அழைக்கப்பட்டார். பின்னர் ஊர்ப்பெயருடன் இணைத்து குன்றக்குடி அடிகளார் என அழைக்கப்பட்டார்.

சமய உலகம் சந்தித்து வரும் சிரமங்களைப் போக்கும் வகையில் , சமய அமைப்பாகவும், மக்கள் பங்களிப்பு இயக்கமாகவும் ‘அருள்நெறித் திருக்கட்டம்’ என்னும் அமைப்பைத் தொடங்கி ஊரூர் தோறும் மிகப்பெரிய கூட்டங்களை நடத்தி சமய உண்மைகளையும், நமது சமயத்திற்குள் இருக்கும் ஏற்றத்தாழ்வுகளையும் போக்கும் வகையில் இந்த அமைப்பு இயங்கும் என செயல்திட்டங்களையும் குன்றக்குடி அடிகளார் வகுத்தார். தமிழகத் திருமடங்கள் ஒருங்கே ஓர் குடையில் மக்கள் பணி ஆற்ற வேண்டும் என்னும் நோக்கில் பேரூரடிகளாருடன் இணைந்து தமிழகத் தெய்வீகப் பேரவை என்னும் அமைப்பும் உருவாக்கி , மக்கள் பணிகளில் மற்ற ஆதீனங்களையும் ஒன்று சேர்த்து இயங்கிட வலிவகுத்தார்.

அருள்நெறித் திருக்கூட்டம் சார்பில் தமிழகம் மட்டுமின்றி, தமிழர்கள் வசிக்கும் அனைத்து நாடுகளிலும் சமயப்பணிகள் ஆற்றி வந்தன. சமயப்பணியில் புரட்சியாக ‘வழிபடுவதற்கே வழிபாடு’ என்னும் நோக்கத்தில் ஏற்றத்தாழ்வுகளை நீக்கி தமிழ் மந்திரங்களைத் தொகுத்து தமிழகம் முழுமைக்கும் பரவலான வழிபாட்டு மன்றங்களை ஏற்படுத்தினார். சமய மறுப்புப் பிரசாரம் நடைபெற்ற ஊர்களில் அருள்நெறித்திருக்கூட்டம் சார்பில் பொதுக்கூட்டங்கள் ஏற்படுத்தி மக்கள் பணிகளில் அருள்நெறித் திருக்கூட்டத்தின் பணிகளை முன்வைத்தார். அரசியல் இயக்கங்களுக்கு நிகராக அருள்நெறித் திருக்கூட்டமும் வளர்ந்தது.

அருள்நெறித் திருக்கூட்டத்தின் சார்பில் பள்ளிகளும் கல்லூரிகளும் இயக்கங்களும் மன்றங்களும் தமிழகம் முழுவதும் தொடங்கப்பட்டு மிகச் சிறப்பாக இயங்கி வந்தது. பல்வேறு ஆதீனத் தலைவர்கள் பொறுப்புக்கு வந்தாலும் பணிகளை முன்னின்று செய்தவர்களில் குன்றக்குடி அடிகளாரும், பேரூரடிகளாரும் முதன்மையானவர்களாகத் திகழ்ந்தார்கள்.

அனைத்துச் சாதியினரும் பூசகர், ஆகம முறையில் தமிழில் வழிபாடு , ஆதீனங்கள் அனைத்து மக்களுக்குமானவர்கள் என்னும் நோக்கில் இந்த அமைப்பை எடுத்துச் சென்றனர். இதனால் சமய உலகிலேயே பல்வேறு சிக்கல்களைச் சந்திக்கலானார். அருள்நெறித் திருக்கூட்டத்தின் தலைமை மாறினாலும் இவர்கள் இன்றி , இவர்களது எண்ணங்களின்றி இயங்காது என்பதை மற்ற ஆதீனத் தலைவர்கள் உணரத்தொடங்கினர்.

சமய உலகில் மிகப்பெரிய பீடமாகத் திகழும் ஒரு காஞ்சிப் பீடம் , தமது பீடத்தின் சார்பில் நடத்தப்படும் போட்டிகளுக்கு அருள்நெறித் திருக்கூட்டத்திலிருந்து நிதி தருதல் வேண்டும் என்று முறையிட்டது. தவத்திரு குன்றக்குடி அடிகளார் துணிந்து முன்நின்று, இந்த அமைப்பு தமிழகம் முழுமைக்குமானது. தனிப்பட்ட மடங்களுக்கோ, பீடங்களுக்கோ செயல்படக்கூடியது இல்லை. ஆதலால் நிதி தர இயலாது என மறுத்தார். காலப்போக்கில் அந்தப் பீடம் குழுவில் இருந்து விலகி மத்திய அரசின் மூலம் பல்வேறு நெடிக்கடிகளை அளித்து , நெடிக்கடி காலத்தில் இந்திய அரசு அருள்நெறித் திருக்கூட்டம் அமைப்புக்கு செயல்பட தடை விதித்தது. சமய வளர்ச்சிக்கு சமய அமைப்புகளே எதிராக நிற்கிறார்களே என்று தமது நூலில் தொகுதி 16 ல் பக்கம் எண் 30 ல் வருத்தமுடன் எழுதியிருப்பது சான்றாகும்.

தமிழும் சமயமும் ஒன்று என்னும் நோக்கில் மீண்டும் தமது பணிகளை முன்னெடுத்தார். தந்தை பெரியார் அவர்களை நேரில் சந்தித்து இருவரின் நோக்கமும் சமுதாய மேம்பாடுதான் என்பதை எடுத்துரைத்தார். அதன்மூலமே சமய உலகில் ஏற்றத்தாழ்வுகளை நீக்க குன்றக்குடி அடிகளார் சமயப் புரட்சிக்குப் போராட, சமுதாய ஏற்றத்தாழ்வுகளை நீக்க தந்தை பெரியார் சமுதாயப் புரட்சிக்குப் போராடலானார். சமயங்களுக்கு எதிரான கருப்புக்கொடிகள் பறக்கா வண்ணம் குன்றக்குடி அடிகளார் தமது பணிகளை முன்னெடுத்தார். தவத்திரு குன்றக்குடி அடிகளாரின் பணிகளைப் போற்றி தந்தை பெரியார் அவர்கள் குன்றக்குடி ஆதீனத்திற்குச் சென்று திருநீறு வாங்கி மகிழ்ந்தார் என்பது பதியப்பட வேண்டிய செய்தியாகும்.

தவத்திரு குன்றக்குடி அடிகளாரும், தந்தை பெரியாரும் சாதி ஒழிப்பு, இன விடுதலை , மொழி விடுதலை ஆகியவற்றில் இருவரும் ஒரே நோக்கில் இரு பாதைகளில் போராடினர். தந்தை பெரியாருடன் நட்பு இருந்தாலும் பெரியார் சமயத்தை இழிவுபடுத்தும்போதெல்லாம் அவரைக் கண்டித்துப் போராட்டங்களையும் நடத்தினார்.

ஒருமுறை தந்தை பெரியாரின் தொண்டர்கள் குன்றக்குடி அடிகளாருக்கும், பேரூரடிகளாருக்கும், கிருபானந்த வாரியாருக்கும் கருப்புக் கொடி காட்டி எதிர்ப்புக் காட்ட முயற்சித்தபோது தந்தை பெரியார் தலையிட்டுப் போராட்டம் நடத்த வேண்டாம் என்றார். இந்தத் துறவிகள் பல்லக்கில் பயணிக்காமல், சமுதாயத்தையும், தமிழையும் பல்லக்கில் ஏற்றுபவர்கள் என்று கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது. தந்தை பெரியார் , தவத்திரு குன்றக்குடி அடிகளாரைக் காணும் போதெல்லாம் மகாசந்நிதானம் என்று அழைப்பதையே வழக்கமாக வைத்திருந்தார் என்பதும் இங்குச் சுட்டத்தக்கது.

தமிழகத்தில் இன்றும் சில ஆதீனங்களில் தாழ்த்தப்பட்ட மக்களையும், மாற்றுச் சமய மக்களையும் ஆதீனத்தின் பின்வாசலில் மட்டுமே சந்திக்கும் வழக்கம் நடைமுறையில் உள்ளது. ஆனால் அந்த நடைமுறைகளைப் பின்பற்றாமல் அனைவருக்கும் பொதுவான நடைமுறையை உருவாக்கி அதன்வழி செயல்படலானார். புரட்சியை சமய உலகில் விதைத்த விதையாக , மக்களைத் தேடி ஆதீனங்கள் செல்லும் நடைமுறையை உருவாக்கினார். தமிழக வரலாற்றில் தமது செயல்களால் தடம் பதித்தவர்களில் தவத்திரு குன்றக்குடி அடிகளார் முதன்மையானவராகத் திகழ்ந்தார்.

தமது திருமடம் அமைந்த ஊரான குன்றக்குடியை இந்திய அளவில் வளர்ச்சி அடைந்த கிராமமாக மாற்றுவதற்குப் பல்வேறு பணிகளைச் செய்து இந்திய அரசால் ‘Kunrakudi Pattern’ என்னும் முறைமையை உருவாக்கி அந்த ஊரின் மேம்பாட்டிற்கு அரும்பாடுபட்டார். குன்றக்குடி கிராம நலச்சங்கம் என்னும் சங்கத்தை ஏற்படுத்தி அந்த ஊரின் மேம்பாட்டிற்குப் பல்வேறு நலத்திட்டங்களை வகுத்தார். இந்தியாவில் முதன்முறையாக குன்றக்குடி கிராமத்தை தன்னிறைவு பெற்ற கிராமமாக மாற்றி அமைத்து மக்களின் வாழ்வியல் திட்டங்களை வகுத்தார்.

தவத்திரு குன்றக்கடி அடிகளார் ஆதீனத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்றபோது குன்றக்குடி கிராமம் வறுமை நிலையில் இருந்தது. மக்களுக்கான திட்டங்களை முன்னெடுத்து ஒரு கிராமத்தை மிகச் சிறந்த முறையில் மாற்றலாம் என்னும் அமைப்பில் கிராமக் கூட்டுறவு அமைப்பை ஏற்படுத்தினார். அதன்மூலம் அரசை நாடி நிதி உதவிகள் பெற்று தொழிற்சாலைகளைத் தொடங்கினார்.

தமிழகத்தில் மக்களுக்காக , மக்களின் வேலைவாய்ப்புக்காக ஒரு ஆதீனம் தொழிற்சாலை தொடங்கினார் என்னும் வரலாறு இவரைத் தவிர யாருக்குமில்லை. முந்திரிக் கொட்டையிலிருந்து பெயிண்டு தயாரித்தல் , அலுமினியத் தொழிற்சாலை போன்ற பல நிறுவனங்களை ஒரு கிராமத்திற்குக் கொண்டு வந்து தன்னிறைவு கிராமமாக உருவாக்கினார். குன்றக்குடி ஆதீனத்தின் தலைவராக மட்டுமின்றி அந்தக் கிராமத்தின் பஞ்சாயத்து தலைவராக 1984 ல் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டார். பல ஆண்டுகள் பதவி வகித்தார். குன்றக்குடியில் அனைவருக்கும் வேலைவாய்ப்பு என்னும் முறையில் பல்வேறு தொழிற்சாலைகள் மூலம் மக்கள் அனைவருக்கும் வேலை என்னும் செயல்முறையை வெற்றியுடன் நடத்திக் காட்டினார். கூட்டுடைமைச் சமுதாயம் என்ற உயர்நோக்கத்தை செயலாக்கினார்.

மக்களுக்காக மக்களைக் கொண்டே மக்கள் சேவை என்னும் திட்டத்தை தவத்திரு குன்றக்குடி அடிகளார் செயல்படுத்திய போது மத்திய, மாநில அரசுகளே வியந்து பார்த்தன. இந்தியாவின் பிரதமராக இருந்த திருமதி இந்திராகாந்தி அவர்கள், இந்தியாவின் திட்டக்குழு கூட்டத்தில் பேசும்போது இந்தியாவின் அனைத்துக் கிராமங்களும் குன்றக்குடி போல தன்னிறைவு கிராமமாகத் திகழ நாம் திட்டங்கள் வகுத்துச் செயல்படுத்தவேண்டும் என்றார். குன்றக்குடி கிராமத்தில் 100 சதவீதம் அனைவரும் வாக்களிக்க வேண்டும். அதுவே முதன்மையான சமூகப்பணி என்பதையும் வலியுறுத்தினார். வாக்களிக்கும் நாளில் அனைவரும் ஊரிலேயே இருக்க வேண்டும் என்ற ஆணையும் பிறப்பித்தார்.

தமிழ்நாடு அரசின் சார்பில் மலிவுவிலையில் மதுத்திட்டம் மூலம் கடையைத் திறக்க முனைப்புடன் ஈடுபட்ட போது , அரசை எதிர்த்து கிராமப் பஞ்சாயத்து மூலம் தீர்மானம் நிறைவேற்றி குன்றக்குடி கிராமத்திற்குள் இன்றுவரை மதுபானக்கடை வராமல் தீர்மானம் நிறைவேற்றினார். தமது ஊரில் மதுக்கடை, பரிசுச்சீட்டு, திரையரங்கம் ஆகியவற்றை வராமல் தடுத்து நிறுத்தி மக்களின் மேம்பட்ட வாழ்விற்கு வழிவகுத்தார்.

சமய வளர்ச்சி என்பது சமுதாயத்தின் வளர்ச்சியாகவும் இருக்க வேண்டும் என்னும் உயர்நோக்கில் பல்வேறு சீர்திருத்தங்களை முன்னெடுத்தார். பல்வேறு சமயத் தலைவர்களுடன் நட்பாக இணக்கம் கொண்டு சமயத்தொண்டும், சமுதாயத் தொண்டும் புரிந்து வந்தார். கன்னியாகுமரி மாவட்டத்தில் 1982 ஆம் ஆண்டு மண்டைக்காடு என்னும் ஊரில் இந்து கிறித்தவ மக்களுக்குள் சமயச் சண்டை தொடங்கி பல்வேறு இழப்புகளை இருதரப்பிலும் சந்தித்தனர்.

அந்தச் சிக்கலைத் தீர்த்து வைக்க அரசு பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டாலும் பிரச்சினை முடிவுக்கு வரவில்லை. தவத்திரு குன்றக்குடி அடிகளாரும், தவத்திரு பேரூரடிகளாரும் மண்டைக்காடு கிராமத்திற்குச் சென்று அங்கிருந்த கிறித்தவ தேவாலயத்தில் அமர்ந்தனர். இருதரப்பினரையும் பல மணிநேரங்கள் பேசி அங்கேயே முகாமிட்டு மேலும் மதச்சண்டை வராமல் தடுத்தி நிறுத்தினர். அதன்பின்னர் முதலமைச்சர் எம்.ஜி.ஆர் அவர்கள் நேரடியாக மண்டைக்காடு வந்து மக்களைச் சந்தித்தார். தவத்திரு குன்றக்குடி அடிகளாரையும் , பேரூரடிகளாரையும் அங்கேயே பாராட்டினார். சமயவாதிகள் என்பவர்கள் சமுதாய நோக்கமுடையவர்களாகத் திகழ வேண்டும். அதற்குச் சான்று இவர்கள் என்று பாராட்டினார்.

பாங்கறிந்து பட்டிமண்டபம் ஏறுமின் என்னும் இலக்கியக் கூற்றுக்கு உதாரணமாகத் திகழ்ந்து தமிழகத்தில் பட்டிமன்றம் என்னும் அமைப்பு முறையை உருவாக்கியவர் தவத்திரு குன்றக்குடி அடிகளார். எளிய மக்களுக்கு எளிய முறையில் கூறுதல் வேண்டும் என்பதை உருவாக்கிக் கிராமங்கள் தோறும் சென்று மொழிக்கும், சமயத்திற்கும், சமுதாயத்திற்கும் பட்டிமன்றங்கள் மூலம் அரும்பணி ஆற்றியவர்.

தமிழ்நாடு அரசு தவத்திரு குன்றக்குடி அடிகளாருக்கு சட்ட மேலவை பதவி வழங்கி கெளரவப்படுத்தியது. தவத்திரு குன்றக்குடி அடிகளார் சட்ட மேலவை உறுப்பினராகத் திகழ்ந்த போது தமிழ்நாடு அரசு அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்னும் சட்டத்தைக் கொண்டு வந்து தீர்மானம் நிறைவேற்ற இருந்தது. தமிழகத்தின் முக்கிய ஆதீனங்கள், பீடங்கள் எல்லாம் தவத்திரு குன்றக்குடி அடிகளாரைத் தொடர்பு கொண்டு மன்றத்தில் இந்தச் சட்டத்திற்கு எதிர் வாக்களிக்க வேண்டும் என்றும் , எதிர்த்துப் பேச வேண்டும் என்றும் வலியுறுத்தின. ஆனால் தவத்திரு குன்றக்குடி அடிகளாருக்கு செயல்களில் எப்போதும் உடனிருக்கும் பேரூராதீனம் அடிகளாரும் , சிரவை ஆதீனம் தவத்திரு சுந்தரம் அடிகளும் இந்த சட்டத்திற்கு ஆதரவாகப் பேச வேண்டும் என்றனர். மக்கள் பணியே சமயப்பணி என்பதை உணர்ந்த தவத்திரு குன்றக்குடி அடிகளார் தீர்மானத்தை ஆதரித்துப் பேசி ஓட்டளித்தார்.

நமது நாட்டிற்குத் தேசியக்கொடி, தேசியகீதம், தேசிய மலர் இருப்பது போல தேசிய நூலும் இருக்க வேண்டும் என்றும் அதற்குத் திருக்குறள் மட்டுமே தகுதி உடையது என்றும் வலியுறுத்தினார் . சமயத்தையும், மொழியையும், இனத்தையும் காக்க பல்வேறு காரணிகளில் உழைத்தார். தமது ஆதீனத்தின் சார்பில் பேரூரடிகளாருடன் இணைந்து எங்கும் தமிழ் – எதிலும் தமிழ் என்னும் நோக்கில் சிந்தித்துத் தமிழ் முறையில் வழிபாடுகளை உருவாக்கினர்.

சிறந்த பேச்சாற்றல் மூலம் தமது கருத்துகளை எதிர்வைத்து சமுதாயப்பணியையும், சமயப்பணியையும் ஆற்றிய தவத்திரு குன்றக்குடி அடிகளார் சிறந்த எழுத்து நடையும் கைவரப்பெற்றவர். தமிழகம், அருளோசை, அறிக அறிவியல் போன்ற இதழ்களையும் தொடங்கி நடத்தியவர். இலங்கை நாட்டில் யாழ்ப்பாணத்தில் திருக்கோவிலுக்குள் குறிப்பிட்ட பிரிவினர் செல்ல தடை இருந்தது. தவத்திரு குன்றக்குடி அடிகளார் இலங்கை சென்று உண்ணாவிரதம் மேற்கொண்டு அப்போராட்டத்தில் வெற்றிபெற்று அனைத்து மக்களையும் திருக்கோயிலுக்குள் அழைத்துச் சென்ற புரட்சியாளர்.

தமிழகத் திருமடங்களில் காலம் காலமாக இருந்த வந்த பல்லக்கு பவனி முறை குன்றக்குடி ஆதீனத்திலும் நடைமுறையில் இருந்தது. தவத்திரு குன்றக்குடி அடிகளார் ஆதீனத்தலைவராகப் பொறுப்பேற்ற பின் தம்முடைய ஆதீனத்தில் பல்லக்கில் பவனி வரும் முறையை நிறுத்தி மக்களுடன் நடந்து செல்லும் முறையை உருவாக்கினார். தமிழகத்தில் இன்றளவும் பல்லக்குப் பிரச்சினை இருந்துவரும் நிலையில் அன்றே அதற்கு செயல்வடிவம் அளித்தவர் தவத்திரு குன்றக்குடி அடிகளார்.

குன்றக்குடி ஆதீனத் தலைவராகப் பொறுப்பேற்ற போது தமது ஆதீனத்தில் நிலவி வந்த சாதிக்கொரு பந்தி முறையை ஒழித்து அனைவருக்கும் சமபந்தி என்னும் சீர்திருத்தத்தை ஏற்படுத்தியவர். 1952 ல் குன்றக்குடி கிராமத்தில் ஒரு பள்ளிக்கூடம் கூட இல்லாத நிலையை மாற்றி , ஆதீனத்தின் வருவாயில் 40 சதவீதத்தை அந்த ஊரின் கல்விக்காகவே செலவு செய்து ஆதீனத்தின் சார்பில் 15க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்களைத் தொடங்கி நடத்தி வந்தார். எல்லோருக்கும் கல்வி, எல்லோருக்கும் வேலை, எல்லோருக்கும் வழிபாடு என்பதில் உறுதுயாயத் திகழ்ந்தார். அதன்வழி செயல்படவும் செய்தார்.

ஒருமுறை வினோபாவே அவர்கள் வட இந்தியாவில் கயா என்னுமிடத்தில் மிகப்பெரிய கூட்டம் ஒன்றை நடத்தினார். அந்தக் கூட்டத்தில் தமிழகத்தின் சார்பில் தவத்திரு குன்றக்குடி அடிகளாரும், தவத்திரு பேரூரடிகளாரும் கலந்து கொண்டனர். கூட்டம் முழுவதும் இந்தி மொழியிலேயே நடைபெற்றது. தவத்திரு குன்றக்குடி அடிகளார் பேசத் தொடங்கிய போது ,

‘ வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி
ஊனாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய்
கோனாகி யானெனதென் றவரவரைக் கூத்தாட்டு
வானாகி நின்றாயை என்சொல்லி வாழ்த்துவனே’

என்னும் திருவாசகப் பாடலுடன் தொடங்கி பேசலானார். கூட்டத்தினர் இந்தியில் பேசுமாறு கூச்சலிட்டபோது , நீங்கள் இந்தியில் பேசியபோது எங்களுக்கும் புரியவில்லை. ஆனால் பண்பாடு காத்தோம் என்று பதில் அளித்தார். மொழியைக் காப்பதிலும், பண்பாட்டை மேம்படுத்துவதிலும் அடிகளார் ஆணிவேராகத் திகழ்ந்தார்.

மரபுவழியிலான பாரம்பரிய திருமடத்தில் நிலவிவந்த சமூகச் சீர்கேடுகளை தன்னளவில் தமது திருமடத்தில் நிறுத்தி சமூக ஒற்றுமைக்கு வழிவகுத்தவர். அழகான, அழுத்தமான, திருத்தமான செயல்களால் தவத்திரு குன்றக்குடி அடிகளார் எல்லோரும் மதிக்கும் நபராகத் திகழ்ந்தார். குன்றக்குடி எவ்வாறு இந்தியாவின் முன்மாதிரி கிராமமாக இருந்ததோ அதுபோல தவத்திரு குன்றக்குடி அடிகளாரும் இந்தியாவின் முன்மாதிரித் தலைவர். ஆம் , மடாதிபதியாக, பஞ்சாயத்துத் தலைவராக, தொழிற்சாலை நிர்வாகியாக, வேளாண் நிபுணராக, சமயக் காவலராக, மொழிக் காவலராக, இன விடுதலையின் வேராக திகழ்ந்து தான் வாழ்ந்த குன்றக்குடியை தன்னிறைவுத் திட்டங்களால் உயர்ந்திய முன்மாதிரித் தகைமையாளர் தவத்திரு குன்றக்குடி அடிகளார்.

தவத்திரு குன்றக்குடி அடிகளார் அவர்கள் சமய மறுமலர்ச்சி, அமுதமொழிகள், மண்ணும் விண்ணும், குறட்செல்வம், நமது நிலையில் சமயம், சமுதாயம் , ஆலயங்கள் சமுதாய மையங்கள், வாக்காளர்களுக்கு வள்ளுவர், கடவுளைப் போற்று மனிதனை நினை, சிலம்பு நெறி, மண்ணும் மனிதர்களும் என்று ஐம்பதுக்கும் மேற்பட்ட நூல்களை அருளியவர். தமிழ்நாடு அரசின் முதல் திருவள்ளுவர் விருது பெற்றவர்.

தவத்திரு குன்றக்குடி அடிகளார் இறைவனிடம் வேண்டியது ஒன்றே. அது என்னவெனில் , தாம் அடுத்த தலைமுறைக்குக் குருபூசைத் திதியாக மட்டும் மாறிவிடக்கூடாது என்றும், சமய, சமுதாயத்திற்கு விதியை மாற்றும் விதையாக இருந்திட வேண்டும் என்று வேண்டுவதாகக் கூறினார். 1995 ஆம் ஏப்ரல் 15 ஆம் நாள் இறைவனின் திருவடி நிழலில் கலந்த தவத்திரு குன்றக்குடி அடிகளார் விதைத்த விதையை சமுதாய மக்களாகிய நாம் பெற்றிட போராட மட்டுமல்ல, போரிடவும் முனைவோம்.

மது, பரிசுச்சீட்டு, சூதாட்டம் இல்லாத தன்னிறைவுப் பெற்ற கிராமங்களை உருவாக்குவோம். தன்னிறைவுத் திட்டங்கள் மூலம் இந்தியாவின் திட்டக்குழுவிற்கு ஆலோசனைகள் வழங்கிய அடிகளாருக்கு இந்தியாவின் உயரிய பாரத விருதை இவ்வளவு ஆண்டுகள் வழங்காமல் இருக்கலாமா? உயர்ந்தவர்களின் உள்ளம் விருதுகளுக்குப் பணியாற்றுவது இல்லை. அந்தப்பணியை விருதால் நாம் கௌரவிக்க வேண்டும் என்பதே விருதின் நோக்கம். ‘மண்ணில் நல்லவண்ணம் வாழலாம்’ என்னும் திருமுறை வரியின் படி மக்களை வாழவைத்தவரை வணங்கி செயலாற்றுவோம்.

0

பகிர:
பொ. சங்கர்

பொ. சங்கர்

கட்டுரையாளர், எழுத்தாளர். தவத்திரு சச்சிதானந்த சுவாமிகள், வேதாத்திரி மகரிசி ஆகியோரின் வாழ்வியல் சிந்தனைகளை ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவர். தொல்லியல் சான்றுகள் தேடி விரிவான பயணங்கள் மேற்கொண்டவர். கோயமுத்தூர் யுவபாரதி மையப்பள்ளியில் தமிழாசிரியராகப் பணிபுரிகிறார். தொடர்புக்கு - tamilshanker@gmail.comView Author posts

4 thoughts on “மண்ணின் மைந்தர்கள் #9 – சமுதாய முன்னேற்றமே சமயப் பணியின் நோக்கம்”

  1. குன்றக்குடி அடிகளார் சமயப் புரட்சிக்குப் போராட, சமுதாய ஏற்றத்தாழ்வுகளை நீக்க தந்தை பெரியார் சமுதாயப் புரட்சிக்குப் போராடலானார்.

    வியக்கத்தக்க செய்தி..

    மிக அருமையான பதிவு. காலத்தின் தேவை கருதி இளைய சமுதாயம் வாசிக்க வேண்டிய பதிவு. மண்ணின் மைந்தர்கள் – மணம் வீசட்டும்.

  2. வீ. பா. கணேசன்

    வாழும் காலத்திற்கொப்ப இறையையும் மொழியையும் முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்பதில் முனைப்பாகச் செயல்பட்ட ஒரே மடாதிபதி இவர்தான். துரதிர்ஷ்டவசமாக, தமிழகத்தில் ஆஸ்தியை காப்பதிலேயே குறியாக இருந்த சைவ மடங்கள், இவரது மனிதம் சார்ந்த இயக்கத்தை ஒன்றுமில்லாமல் செய்வதில் முனைப்பாக இருந்த வைதீக மரபுக்குத் துணை போனதின் விளைவே, இறைவழிபாடு என்பதன் மரபார்ந்த அம்சங்களைப் புறக்கணித்து விட்டு, சடங்குகளை மட்டுமே விதியாகக் கொண்டு, சாதிச் சழக்கில் உழலும் ஒரு சமூகத்தை வளர்த்தெடுத்திருக்கிறது. இவரது உரைகள் புதிய மனிதன் மீதான நம்பிக்கையை ஊட்டுவதாக இருந்தன. திரைகடலோடியும் அத்தகைய நம்பிக்கையை விதைத்தவர். செறிவான, தெளிவான வார்த்தைகளுக்குச் சொந்தக்காரர். என்றும் அவர் நினைவு அழியாது நிலைக்கும் வகையில் அவரது செயல்கள் நீடிக்கின்றன என்பதே மகிழ்ச்சிக்குரியதொரு விஷயமாக உள்ளது. நினைவூட்டியமைக்கு நன்றி!

  3. ஆம். அடிகளாரின் எழுத்து வாசித்திருக்கிறேன். மிக ஆழ்ந்த கருத்துக்கள் கொண்டவை. அடிகளாரைக் குறித்த முழு விபரங்களும் இந்தப் பதிவின் மூலமே அறிந்து கொண்டேன். என் நண்பர்களுக்கும் அனுப்பியிருக்கிறேன். நன்றி சங்கர். தங்கள் பணி சிறக்கட்டும்💐💐💐

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *