Skip to content
Home » மண்ணின் மைந்தர்கள் #10 – அரசியல் +அறம்+ நேர்மை = கக்கன்

மண்ணின் மைந்தர்கள் #10 – அரசியல் +அறம்+ நேர்மை = கக்கன்

ப. கக்கன்

‘எளிமையாகவும், நேர்மையாகவும் பொதுவாழ்வில் இருப்பவர் இருக்க இயலுமா?’ என்ற கேள்வியை உடைத்தெறிந்து அதன் பதிலாக வாழ்ந்து காட்டியவர் திரு. கக்கன் அவர்கள். அரசியலில் அறம் என்ற சொல்லாட்சியை ஆராயவேண்டுமெனில் தவறாது இருவர் பெயர் இடம்பெறும். அதில் ஒருவர் காமராசர், மற்றொருவர் கக்கன். இன்றைய இளைய சமுதாயம் அறிய வேண்டிய ஆளுமைகளில் முக்கியமானவர் கக்கன். அவரின் வாழ்வியல் கூறுகளை அடையாளப்படுத்தவே இந்தப் பதிவு.

பயணங்களின்போது இரயில் நிலைய மேடையில் ஓய்வெடுத்து மக்கள் பணி ஆற்றியவர். காமராசர் முதலமைச்சர் பதவி விலகிக் கட்சிப்பணி ஏற்க வேண்டிய சூழலில் முதலமைச்சராக முன்மொழியப்பட்டு பின், தனக்கு அந்தப் பதவி வேண்டாம் என மறுத்த பண்பாளர். தன் வாழ்நாளின் இறுதியில் அரசு மருத்துவமனையில் தரையில் படுத்து சிகிச்சை பெற்ற எளிமையாளரான இந்தத் தீவிரக் காந்தியவாதியை இளைய சமுதாயம் அறிந்துகொள்ளவே இந்தப் பதிவு.

வார்டு கவுன்சிலர் பதவி வகிப்பவர் அந்தப் பகுதியே தன்னுடையது எனக் கருதி சொத்து சேர்க்கும் இக்காலத்தில், தமிழகத்தில் 12 துறைகளுக்கும் அமைச்சராக இருந்த கக்கன் அவர்கள் செலவுக்குப் பணமின்றி, கடைசிநாள்வரை ஏழ்மை நிலையிலேயே தனது வாழ்க்கையைக் கழித்தார். அத்தகைய தனது நேர்மையான வாழ்வை இன்றைய தலைமுறைக்குப் பாடமாக மட்டும் வைத்துச்சென்றவரை தமிழக அரசோ, பல்கலைக்கழகங்களோ பாடத்திட்டத்தில் கூட வைக்கவில்லை என்பதும், கக்கன் பிறந்தநாள் வரும்போது மட்டும் அவர் சார்ந்திருந்த காங்கிரசு கட்சியினர் யாரேனும் ஒருவர் அறிக்கை வெளியிடுவதை மட்டும் வாடிக்கையாகக் கொண்ட இந்தத் தருணத்தில் தமிழகம் இவரின் பங்களிப்புக் குறித்து அவசியம் அறிய வேண்டும்.

1909ஆம் ஆண்டு ஜூன் மாதம் மதுரை மாவட்டம் தும்பைப்பட்டியில் பிறந்தவர் கக்கன். தந்தைக்கும் மகனுக்கும் கக்கன் என்பதே பெயர். ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த கக்கன் மிகவும் சிரமங்களுக்கு இடையே பள்ளிப் படிப்பைத் தொடர்ந்தார். நாடெங்கும் விடுதலைப் போராட்டம் நடைபெற்று வந்த நிலையில் பள்ளிப் பருவத்திலேயே நாட்டின் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டார். மகாத்மா காந்தியும், காமராசரும், மதுரை வைத்தியநாத ஐயரும் இவரின் முன்மாதிரிகள். தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைகளுக்கு விடுதலை கிடைக்க உறுதுணையாக இருந்த மதுரை வைத்தியநாத ஐயருடன் பல போராட்டங்களில் முன் நின்றார். மதுரை திருக்கோயிலுக்குள் ஆலய நுழைவுரிமைப் போராட்டம் நடத்தியபோது கக்கனும் அந்தப் போராட்டத்தில் முன் நின்றார்.

மகாத்மா காந்தி மதுரை நகரம் வந்தபோது முதன்முதலாகக் கக்கன் அவர்கள் காந்தியைச் சந்தித்து, பின்னர் மகாத்மா தமிழகம் வரும்போதெல்லாம் தமிழகம் முழுவதும் பயணிக்கும் வாய்ப்பினால் அவரின் தனிப்பட்ட வாழ்வு எளிமையாகியது.

வெள்ளையனே வெளியேறு, ஆகஸ்ட் புரட்சி போன்ற சுதந்திரப் போராட்டங்களில் ஈடுபட்டமைக்காக 1942 முதல் 1944 வரை சிறையில் அடைக்கப்பட்டார். தமிழகத்தின் பல சிறைகளிலும் அடைக்கப்பட்டு, பின்னர் நிர்வாகக் காரணங்களுக்காக அலிப்பூர் சிறையில் ஓராண்டு அடைக்கப்பட்டார் கக்கன். நாட்டு விடுதலை, மக்கள் முன்னேற்றம் என்பதை மட்டுமே இலக்காக வைத்துச் செயலாற்றிய இவரைப் போன்ற தியாகிகளுக்கு நாம் செய்யும் உயர் பட்ச மரியாதை என்பது அஞ்சல் தலை வெளியிடுவது என்றே நினைக்கின்றோம். இந்த நிலையை மாற்றி நமக்காகப் பாடுபட்டவர்களை எப்போது கொண்டாடத் தொடங்குவோம்?

பகலில் நாட்டு விடுதலைக்கும், இரவில் தன் மக்களின் கல்வி மேம்பாட்டிற்கும் பாடுபட்டுவந்த கக்கன் தன் ஊரில் பொதுக்குளத்தில் தன் சமூகம் சார்ந்த மக்களும் நீரைப் பயன்படுத்தலாம் என்ற உரிமையைப் பெற்றுத் தந்தார். ஆனாலும் இன்றும் தமிழகத்தில் சாதிக்கொரு தண்ணீர்த் தொட்டியும், சாதிக்கோயில்களும், தெருவில் நடமாட முடியாத மக்களும் இருக்கவே செய்கின்றனர் என்பதைச் சமூக நீதி பேசும் அரசியல்வாதிகள் கவனிக்கவே இல்லை என்பதை இங்கு பதிதல் அவசியம்.

மகாத்மா காந்தி, காமராசர், வைத்தியநாத ஐயர் என்ற மூவருக்காகவே காங்கிரசு கட்சியில் பயணித்தார். அந்தக் காலத்தில் காங்கிரசு கட்சியுமே சாதி வர்ண அடுக்குகள் அடிப்படையிலேயே இயங்கியது என்பதை மேலூர் தாலுக்கா காங்கிரசு தலைவராக இருந்த போது நன்கு புரிந்துகொண்டார். தீண்டாமையை எதிர்த்து இவர் போராடியபோது மதுரை வைத்தியநாத ஐயரைத் தவிர யாரும் உதவவில்லை என்பது வரலாறு அறிந்த உண்மையும்கூட.

1955ஆம் ஆண்டு வைத்தியநாத ஐயர் இறந்தபோது சென்னையில் இருந்து பேருந்தில் சென்று அவரின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டார். அவரின் உடலுக்குத் தீ வைக்கத் தயாரானபோது, கக்கனும் மொட்டை அடித்து மகன் போலத் தயாரானார். அதற்கு அங்கிருந்த வைத்தியநாதரின் உறவினர்கள் எதிர்ப்புத் தெரிவிக்க, அப்போது வைத்தியநாதரின் மகன்கள் நாங்கள் பிறப்பால் மகன்கள். கக்கன் வளர்ப்பால் மகன். ஆகவே அவரே கொள்ளி வைக்கட்டும் என்றார்கள். கக்கனிடம் வைத்தியநாதரின் உறவினர்கள் பேச்சு நடத்த, அதற்கு கக்கன், ‘இன்று நான் வகிக்கும் பதவி, அணிந்திருக்கும் கதராடை, எனது நேர்மை எல்லாமே ஐயர் தந்தது. அவருக்கு நான் கொள்ளி வைக்காவிடில் வாழ்வதற்கே தகுதியில்லை’ என்றார்.

உயர் குடியில் பிறந்த வைத்தியநாதருக்கு திரு. கக்கன் கொள்ளி வைத்து மகன் போல அழுததை இங்கு பதிதல் அவசியம். அந்த நிகழ்வுக்கு எதிர்ப்புத் தெரிவித்து அந்தண சமூக மக்கள் ஒட்டுமொத்தமாக அங்கிருந்து சென்றனர். தன் வாழ்நாளின் ஆகச்சிறந்த முன்னோடியாக அருகில் இருந்த வைத்தியநாதரை இழந்த கக்கன் மிகவும் மனமுடைந்தார். காமராசர் அருகிருந்து அடுத்தடுத்த பணிகளில் நாம் இயங்க வேண்டும் என்பதை வலியுறுத்த, தேர்தல் செயல்பாடுகளில் காங்கிரசு கட்சி ஈடுபடலானது. அப்போது தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் வளர்ந்து வந்தது. அந்த இயக்கம் மிகக் கடுமையாகக் காங்கிரசு கட்சியை எதிர்த்துப் பணியாற்றியது. காங்கிரசை எதிர்த்தபோதிலும், மேலூர் சட்டமன்றத் தொகுதியில் கக்கன் போட்டியிட்டபோது அவரை எதிர்த்து வேட்பாளரைத் திராவிட முன்னேற்ற கழகம் நிறுத்தவில்லை என்பதும், அதற்கு கக்கன் மீது வைத்திருந்த தனிப்பட்ட மதிப்பே காரணம் என்பதைத் திமுகவினர் கூறியதும் வரலாறு.

1968ல் நாடாளுமன்றத் தேர்தலில் நாகர்கோவில் தொகுதியில் காமராசர் போட்டியிட்டார். தேர்தல் பொறுப்பாளராக கக்கன் நியமிக்கப்பட்டார். தேர்தல் முடிந்து கணக்குப் பார்த்தபோது 400 ரூபாய் பற்றாக்குறை . எவ்வாறு செலவானது என்பது அறியாமல் கக்கன் தவித்தார். தன் மனைவியின் வளையல்களை விற்று அந்தப் பணத்தை எடுத்துக் கொண்டு சென்னை சென்று கட்சிப் பொருளாளரிடம் கணக்குகளை ஒப்படைத்தார். பின்னர் சென்று காமராசரைப் பார்த்து நடந்த விபரங்களைக் கூறினார். காமராசர் கோபம் கொண்டு மனைவியின் நகைகளை எதற்காக விற்றாய் எனக் கேட்டபோது அதுதானே முறை. அதுதானே அரசியல் அறம் என்று காமராசரிடம் கூறினார். அந்த நடைமுறையை இன்றைய இ(எ)டைத்தேர்தல்களில் அல்லது எங்கேனும் கேள்விப்பட இயலுமா என்பது 100 சதவிகிதம் ஐயமே.

1957ஆம் ஆண்டு முதல் 1967 வரை கக்கன் தமிழ்நாட்டின் பொதுப்பணித்துறை, அறநிலையத்துறை, ஆதிதிராவிடர் நல்வாழ்வு, பழங்குடியினர் நலத்துறை, உள்துறை, விவசாயம், அரசின் நலம் என 12 துறைகளுக்கும் ‘பொறுப்பான’ அமைச்சராகத் திகழ்ந்தார். எந்த நிலையிலும் தன் மீதும், தான் சார்ந்திருந்த துறைகளின் மீதும் களங்கம் வராமல் பணியாற்றினார். தமிழகத்தில் இவ்வளவு அணைகளை காமராசர் கட்டினார் என்பதைக் கூறும்போது, அப்போதைய பொதுப்பணித் துறை அமைச்சராக இருந்த கக்கனின் பங்களிப்பும் அதிகமாகவே இருந்தது என்பது மறுக்க முடியாத உண்மை. தமிழகத்தில் வேளாண் பல்கலைக்கழகங்களைத் தொடங்கி வேளாண்மை சிறக்க உழைத்தார் கக்கன். விவசாயிகளுக்குத் தேவைக்கேற்ப உரம் கிடைக்கவேண்டும் என்பதற்காக வழிவகை செய்து, கூட்டுறவு விற்பனைக் கூடங்களைத் திறந்தார் என்பதும் அதன் வாயிலாகவே இன்றளவும் உரம் அனைவருக்கும் கிடைக்கின்றது என்பதை இன்றைய தலைமுறை அறிதல் அவசியம்.

அன்றைய காலத்தில் அரசியல் மற்றும் அரசுப் பணிகளில் எங்கும் லஞ்சம் என்பதே இருக்கக்கூடாது என்பதற்காக லஞ்ச ஒழிப்புத்துறையை உருவாக்கினார் கக்கன். ஆனால் இன்றைய காலங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையில் சேர்வதற்கே லஞ்சம் தர வேண்டிய சூழலை நினைக்கும்போது மனம் வெதும்பாமல் இருக்க முடியவில்லை.

தமிழக காவல்துறையை மேம்படுத்தி காவல்துறையினருக்கும், அவரின் குடும்பத்தினருக்கும் பல்வேறு சலுகைகளை கக்கன் உருவாக்கினார். அவர் காலத்தில் உருவாக்கப்பட்டவையே இன்றளவும் தொடர்கின்றது என்பதும், பல ஆண்டுகளாகக் காவல் துறையினர் பிறரைப் போலப் போராட இயலாமல் தமக்கான சலுகைகளைப் பெற இயலாமல் இருப்பது இன்றும் தொடர்வது என்பது மறுக்க இயலாத உண்மை. நாள்தோறும் எட்டு மணிநேரங்கள் பணி ஆற்றும் அரசு ஊழியர்கள் மேலான சலுகைகளைப் பெறுகின்றனர். ஆனால் நேரம் காலமின்றிப் போராடும் காவல்துறையினர் சலுகைகள் எதுவும் இல்லாமல் பணி செய்வதை நாம் போற்ற வேண்டும். காமராசர், கக்கன் போன்றவர்களுக்கு சல்யூட் அடித்த காவல்துறை இன்று யார் யாருக்கோ சல்யூட் அடிக்க வேண்டிய சூழலை நினைத்தால் வேதனையாகத்தான் உள்ளது.

ஒருநாள் கக்கன் அலுவலகப் பணிகள் முடிந்து இல்லம் திரும்பியபோது பணியாளர் ஒருவர் மண்ணெண்ணெய் கேனுடன் சென்று கொண்டிருப்பதைப் பார்த்து அவரிடம் விபரம் கேட்டார். அதற்கு அந்தப் பணியாளர் அம்மா வாங்கிவரச் சொன்னார்கள் என்று கூற தன் மனைவியை அழைத்து மிகக் கடுமையாகச் சத்தம் போட்டு, இவர் எனது உதவிக்காக அரசால் நியமிக்கப்பட்டவர் என்று கூற மனைவி அழுதுகொண்டு இல்லம் உள்ளே செல்ல, கக்கனோ அந்தப் பணியாளரிடம் மன்னிப்புக் கேட்டார் . இதனை நினைக்கும்போது தனக்குக் காலணி துடைக்காத பணியாளரை இடமாற்றம் செய்த அமைச்சர்களையும், தோசை வாங்கித் தராத அலுவலரைக் கன்னத்தில் அறைந்த அமைச்சரையும், தனது உறவினருக்கு அரசுப் பணியை ஒதுக்கித் தராத அலுவலரை ஓய்வு பெறும் நாளில் பணி இடைநீக்கம் செய்த அமைச்சரையும் நினைக்காமல் இருக்க முடியவில்லை.

ஒரு முறை அரசுப் பயணமாக கக்கன் அவர்கள் சென்னையில் இருந்து திருச்சி சென்று நிகழ்வில் பங்கேற்று மீண்டும் திரும்புவதற்குத் தயாரானபோது சென்னை இரயில் கிளம்பி விட்டது. திரும்பி திருச்சி நகரத்திற்குச் செல்லாமல் இரயில் நிலைய பிளாட்பாரத்தில் அமைச்சர் கக்கன் படுத்து உறங்கினார் என்பதை நாம் நம்பித்தான் ஆக வேண்டும். இரவு இரயில் நிலையக் காவல்துறையினர் ரோந்து வரும்போது அமைச்சர் கக்கனைத் தட்டி எழுப்புகின்றனர். எழுந்த கக்கன், ஐயா நான் இந்த மாநில அமைச்சர் என்றும், இரயிலைத் தவற விட்டுவிட்டேன், காலையில் சென்று விடுவேன் என்றதும் ஆடிப்போயினர் காவல்துறையினர். பத்து கார்களில் அரசுப்பணத்தில் வலம் வரும் அரசியல்வாதிகளுக்கு மத்தியில் இப்படியும் கக்கன் வாழ்ந்தார் என்பதை இன்றைய செல்பி தலைமுறையினர் உணர்வார்களா?

பொதுவாழ்வில் தூய்மை, அரசியலில் அறம் என்பதை மட்டுமே தனது சொத்தாக வைத்து இயங்கிய கக்கன், 1967ல் வீசிய அரசியல் அலையில் தோற்கடிக்கப்பட்டார். அதுவரை தனக்காக எந்தச் சொத்துகளையும், மனைகளையும் சேர்த்து வைக்காத கக்கன் அரசிடம் எந்தப் பலனையும் எதிர்பாராமல் இயங்கினார். விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டமைக்காக இந்திய அரசால் தரப்பட்ட சிறிதளவு நிலத்தையும் வினோபா அவர்களின் பூமிதான இயக்கத்திற்கு அளித்து வாடகை இல்லத்தில் வசித்த கக்கனின் நேர்மையை இன்றைய தலைமுறையினர் நம்பித்தான் ஆகவேண்டும்.

நாடாளுமன்ற உறுப்பினராக, சட்டமன்ற உறுப்பினராக, அமைச்சராக இருந்தும் சொத்து இல்லாமல் தமிழகத்தின் சொத்தாக மாறிப்போன திரு . கக்கன் அவர்களின் வாழ்வியலை நினைக்கும்போது பெருமை மட்டுமே கொள்ள முடிகிறது. இன்றைய காலத்தில் நாடாளுமன்ற உறுப்பினராக ஒரு வருடம் மட்டுமே பதவி வகித்தாலும் புதுதில்லியில் அரசு இல்லத்தைத் தன் சொந்த இல்லமாகவே நினைத்துப் பல வருடங்கள் குடியிருக்கும் அரசியல்வாதிகளை இவருடன் நினைத்துப்பார்த்தால் அரசியலில் அறம் என்ற சொல்லாட்சியே கேள்விக்குறி என்றுதான் சொல்ல வேண்டும்.

திரு. கக்கன் அவர்கள் தமது இறுதிக்காலத்தில் அரசு மருத்துவமனையில் தரையில் படுத்துச் சிகிச்சை பெற்று வரும் தகவலை அறிந்து திடுக்கிட்டுப் போனார் அன்றைய தமிழ்நாடு முதலமைச்சர் எம்.ஜி.ஆர். பின் அவர் கக்கனைச் சந்தித்து அரசு சார்பாக உதவ விரும்பினார். கக்கன் அவர்களோ அன்போடு மறுத்துவிட்டார். அதன் பின்னர் பல மருத்துவச் சிகிச்சைகள் அளித்தும் எந்த முன்னேற்றமும் இன்றி நினைவிழந்த நிலையில் 1981ஆம் ஆண்டு டிசம்பர் 3ம் நாள் உலக வாழ்வைத் துறந்தார்.

கக்கன் நமக்குச் சேர்த்து வைத்த சொத்து என்பது அறம், நேர்மை, அரசியலில் தூய்மை. குறை ஒன்றும் இல்லாத மனிதர் என்று தமிழ்நாடு அரசியல் வரலாற்றில் கக்கன் பெயருடன், அரசியல்வாதி என்ற பெயருக்கே தகுதி இல்லாதவர்கள் எல்லாம் வரலாறாய் உடனிருக்கிறார்கள் என்பதுதான் வருத்தமாக உள்ளது. எந்த நிலையிலும் அறம் வழுவாத் தன்மையுடன் தான் வந்த நிலையிலேயே திரும்பிய கக்கன் அவர்கள் வரலாறாய் மட்டுமல்ல, நமது வாழ்வியலாகவும், இளைய தலைமுறையினரின் பாடமாகவும் திகழ்கிறார்.

0

பகிர:
பொ. சங்கர்

பொ. சங்கர்

கட்டுரையாளர், எழுத்தாளர். தவத்திரு சச்சிதானந்த சுவாமிகள், வேதாத்திரி மகரிசி ஆகியோரின் வாழ்வியல் சிந்தனைகளை ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவர். தொல்லியல் சான்றுகள் தேடி விரிவான பயணங்கள் மேற்கொண்டவர். கோயமுத்தூர் யுவபாரதி மையப்பள்ளியில் தமிழாசிரியராகப் பணிபுரிகிறார். தொடர்புக்கு - tamilshanker@gmail.comView Author posts

1 thought on “மண்ணின் மைந்தர்கள் #10 – அரசியல் +அறம்+ நேர்மை = கக்கன்”

  1. கக்கன் நமக்குச் சேர்த்து வைத்த சொத்து என்பது அறம், நேர்மை, அரசியலில் தூய்மை.
    Sir even current generation people also forgot his honesty & simplicity.
    Great news sir, i have learned new information about Mr Kakkan from your article.
    Thanks a lot sir

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *