Skip to content
Home » மண்ணின் மைந்தர்கள் #12 – வெள்ளுடை வேந்தர் பிட்டி தியாகராயர்: சென்னை மாநகரத் தந்தை

மண்ணின் மைந்தர்கள் #12 – வெள்ளுடை வேந்தர் பிட்டி தியாகராயர்: சென்னை மாநகரத் தந்தை

பிட்டி தியாகராயர்

சென்னை நகரின் உருவாக்கத்திற்குத் திட்டம் வகுத்தவர்களில் முதன்மையானவர் பிட்டி தியாகராயர். சத்துணவுத் திட்டத்தைத் தொடங்கியது நீங்களா? நாங்களா? என அரசியல் கட்சிகள் சண்டையிட்டுக் கொண்டிருக்கும் வேளையில் முதன்முதலில் 1892லேயே மதிய உணவுத் திட்டத்தைத் தொடங்கியவர். பிரிட்டிஷ் அரசரை ஆங்கிலேய உடையில் வரவேற்க வேண்டும் என்ற மரபை மீறி வெள்ளை ஆடையில்தான் வரவேற்பேன் என்றதால் ‘வெள்ளுடை வேந்தர்’ என்றழைக்கப்பட்டவர். சென்னை மாநகர் முழுமைக்கும் விளக்கு ஒளியையும், குடிநீர்க் குழாயையும் கொண்டு வந்தவர். நூற்றுக்கும் மேற்பட்ட சிறு கப்பல்களுக்குச் சொந்தக்காரர். இப்படிப் பல சிறப்புகளுக்கு உரிய சென்னை நகரத்தின் தந்தையாகத் திகழ்ந்த பிட்டி தியாகராயர் குறித்த பதிவு காலத்தின் அவசியம்.

சென்னை நகர வீதி அமைப்புகள், நகர உருவாக்கம் ஆகியவற்றிற்காகப் பல்வேறு செயல் திட்டங்களை உருவாக்கி அதனைக் கருவாக்கி, சென்னை என்ற சொல்லாட்சியின் வேர் இன்று உலகளவில் நிலைத்து நிற்க அடித்தளமிட்டவர் பிட்டி தியாகராயர். பெரும் செல்வந்தர் குடும்பத்தில் 1852ல் பிறந்தவர். 1876ல் சென்னை மாநிலக் கல்லூரியில் பி.ஏ. பட்டம் பெற்றதோடு மட்டுமின்றி, ஆங்கிலம், பிரெஞ்ச், தெலுங்கு, கன்னடம், உருது, இந்தி, இலத்தீன் எனப் பல மொழிகளையும் கற்றுத் தேர்ந்தார். காங்கிரசு கட்சியின் உறுப்பினரானார். கட்சியின் சார்பில் மக்களுக்குப் பல்வேறு நலத்திட்டங்களை வழங்கினார். ஆனால் காங்கிரசு கட்சியில் சாதி பேத முறையில் அந்தணர்கள் – அந்தணர் அல்லாதவர்கள் எனக் கட்சி இயங்கியதை எதிர்த்துக் கட்சியை விட்டு வெளியேறினார்.

1916 ஆம் ஆண்டு தென்னிந்திய மக்களின் நலனுக்காகப் பலரையும் ஒன்றிணைத்து ‘தென்னிந்திய நலவுரிமைச் சங்கம்’ என்னும் பெயரில் அந்தணர்கள் இல்லாத இயக்கத்தைத் தொடங்கினார். பிற்படுத்தப்பட்டோர், பழங்குடியினர் என அனைவருக்கும் சம உரிமையும், வேலைவாய்ப்புகளில் பிரதிநிதித்துவமும் வேண்டும் எனக் கோரிக்கை வைத்து செயல்வடிவம் அளித்தவர் பிட்டி தியாகராயர். இன்று தமிழகத்தில் நடைமுறையில் இருக்கும் 69 சதவிகித இட ஒதுக்கீட்டிற்கு விதையாகத் திகழ்ந்தவர்.

தென்னிந்திய நல உரிமைச் சங்கம் பின்னர் வந்த நாட்களில் ‘நீதிக்கட்சி’ என மாற்றம் பெற்று தமிழகத்தின் முதல் தேர்தலில் போட்டியிட்டது. பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. தமிழகத்தின் முதல் முதலமைச்சராகும் வாய்ப்பு பிட்டி தியாகராயருக்குத் தேடி வந்தது. ஆங்கில அரசின் கவர்னர், நீதிக்கட்சியின் தலைவராக விளங்கிய பிட்டி தியாகராயரை முதலமைச்சர் பதவி ஏற்க வருமாறு அழைப்பு விடுத்தார். ஆனால் பிட்டி தியாகராயர் அந்தப் பதவியை மறுத்து சுப்பராயலு என்பவரை முதலமைச்சராகப் பதவி ஏற்க வைத்தார். பதவி தேடி வந்த போதும் ஏற்க மறுத்து மக்கள் பணிகளில் எப்போதும் போல முன் நின்றார்.

அதன் பின்னர் பலரின் வற்புறுத்தலுக்குப் பின்னர் இந்தியாவின் பழம்பெருமை வாய்ந்த சென்னை மாநகராட்சியின் முதல் மேயராக பிட்டி தியாகராயர் பதவி ஏற்றார். பதவி ஏற்று சில மாதங்களில் பிரிட்டிஷ் அரசர் சென்னை வருவதாக இருந்தது. ஆங்கிலேய ஆளுநர் பிட்டி தியாகராயரிடம், ‘சென்னை மாநகர மேயர் என்னும் முறையில் ஆங்கிலேய பாணி உடை அணிந்துதான் நீங்கள் வரவேற்க வேண்டும்’ என்று கூற, தியாகராயரோ, ‘என் நாட்டின் கதராடை அணிந்துதான் வரவேற்பேன். ஆங்கிலேய உடை அணிந்துதான் வரவேற்க வேண்டுமெனில், நான் நிகழ்வுக்கே வரவில்லை’ என உறுதியாகக் கூறினார். வேறு வழியின்றி ஆங்கிலேய அரசு அவரை வெள்ளை ஆடை அணிந்து வரவேற்கச் சொன்னது. அதுபோல மக்கள் பிரதிநிதிகளுக்கு ஆடைக்கட்டுப்பாடு விதித்து ஆங்கில அரசாங்கம் பிறப்பித்த உத்தரவுகளை தியாகராயர் போராடித் திரும்பப் பெற வைத்தார். இந்தியர்கள் அவர்கள் விரும்பிய ஆடையில் நிகழ்வுகளில் கலந்து கொள்ளலாம் என ஆளுநர் உத்தரவு பிறப்பித்தார்.

சென்னை மாநகராட்சியின் மேயராக தியாகராயர் திகழ்ந்த போது ஒரு சில குறிப்பிட்ட பிரிவினரே கல்வி கற்க இயலும் என்ற நிலை இருந்தது. அந்த நிலையை மாற்றி சென்னையின் பல இடங்களில் பள்ளிக்கூடங்களைத் திறந்தார். அனைவருக்கும் கல்வி உரிமையைக் கட்டணமின்றி வழங்கி அனைத்துத் தரப்பு மக்களும் கல்வி கற்கலாம் என்ற நிலையை உருவாக்கினார். சில இடங்களில் மாணவர் எண்ணிக்கையை அதிகரிக்க 1892 ல் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு மதிய உணவுத்திட்டத்தை அறிமுகப்படுத்தினார். இந்தியாவிலேயே முதன் முறையாக அனைவருக்கும் கல்வி உரிமை, பள்ளிகளில் மதிய உணவு என்று பல திட்டங்களை நடைமுறைப்படுத்தினார். அவர் தொடங்கிய பள்ளி பின்னாளில் தியாகராயர் கல்லூரி என வளர்ச்சி பெற்றது. இன்றைய அரசியல் கட்சிகள் சட்டமன்றத்தில் சத்துணவு, மதிய உணவு எனச் சண்டையிட்டுக் கொண்டிருக்கும் நிலையில், இந்தத் திட்டங்களின் முன்னோடி தியாகராயர்தான் என்பதை வரலாறு பதிவு செய்யவில்லை என்பதும் வருந்தத்தக்கது.

அந்தணர்கள் இல்லாத இயக்கத்தை ஆரம்பித்து வழிநடத்தினாலும் தம் வீட்டில் ஏழை எளிய அந்தணர்களுக்குப் பல உதவிகள் செய்து அவர்கள் வேதம் படிக்கவும் உதவினார் என்பதும் இங்குக் குறிப்பிடவேண்டியதாகும். அந்தணர்களை எதிர்த்த காரணத்தினால் பல தரப்பிலும் பல இடையூறுகளைத் தியாகராயர் சந்திக்க வேண்டியிருந்தது. ஒரு கூட்டத்தில் தியாகராயர், அந்தணர்களைப் போல அனைவருக்கும் கல்வி உரிமையும், அரசியல் உரிமையும், சமூக உரிமையும் கிடைக்க வேண்டும் என்றுதான் போராடுகிறேன். இதில் எந்த சமரசமும் செய்து கொள்ள மாட்டேன். மற்றபடி நான் அந்தணர்களை எதிர்க்கவில்லை என்று விளக்கினார். பல திருக்கோயில்களுக்குத் திருப்பணிகள் பல செய்து உதவினார். அன்றைய காலத்தில் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலுக்குச் சுமார் பத்தாயிரம் ரூபாய்க்கு மேல் செலவு செய்து திருப்பணிகளுக்கு முன்னின்றார். ஆனால் அந்தக் கோயிலின் திருக்குட நன்னீராட்டு விழா நடந்த போது அரசியல் அழுத்தம் காரணமாகத் தியாகராயரைக் கோயிலின் உள்ளேயே அனுமதிக்கவில்லை என்பது வரலாறு சொல்லும் உண்மை. எந்தக் கோயிலின் திருப்பணிக்கு உதவினாரோ அந்தக் கோயிலின் நிகழ்வில் அனுமதி மறுக்கப்பட்டு வெளியேற்றப்பட்ட நிகழ்வு கண்டு வருத்தம் கொள்ளாமல் மக்கள் பணி ஆற்றினார். எப்போதும் நெற்றியில் திருநீறு அணிந்து மலர்ந்த முகத்தோடு மக்கள் பணியோடு, இறைப் பணியையும் ஆற்றிய தியாகராயரைப் பின்னர் வந்த அரசியல் இயக்கங்கள் அவரை நாத்திகர் போன்ற தோற்றத்தை உருவாக்கிவிட்டதையும் இங்குப் பதிதல் அவசியம்.

அன்றைய காலங்களில் கோயில்களுக்கும், குளங்களுக்கும் மாநகராட்சி சார்பில் வரி விதிக்கப்பட்டு வந்தது. வரியை உயர்த்த வேண்டும் என்ற தீர்மானம் நீதிக்கட்சி எதிர்க்கட்சியாக இருந்தபோது கொண்டு வரப்பட்ட போது கடுமையான வாதங்களை எடுத்து வைத்து கோயில் குளங்களுக்கு வரி செலுத்துவதில் இருந்து விலக்கு பெற வைத்தவர் தியாகராயர். அதுபோல சென்னை பார்த்தசாரதி திருக்கோயிலின் தெப்பக் குளம் பாசி படர்ந்து கொசுக்கள் பெருகி மக்களின் சுகாதாரத்திற்குப் பெரிதும் சிக்கலாக இருந்து வந்தது. அப்போது மாநகராட்சியின் உறுப்பினராக இருந்த டாக்டர் டி.எம். நாயர் என்பவர், பார்த்தசாரதி கோயிலின் குளத்தை மண் கொண்டு மூடிப் பூங்கா அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தித் தீர்மானம் கொண்டு வந்தார். அதனைத் தியாகராயர் கடுமையாக எதிர்த்து, குளங்களை மூடுவதற்காகவா நம் மன்னர்களும், முன்னோர்களும் உருவாக்கினார்கள். குளத்தைத் தூய்மை செய்தாலே போதும் என்று தன் வாதத்தை வைத்து, தன் சொந்தச் செலவில் கோயிலின் குளத்தைச் சீரமைக்கிறேன் என்று கூறி தீர்மானத்தைத் தோற்கடித்து, குளம் தொட்டு வளம் பெருக்கினார். அதன்படியே குளத்தைச் சீரமைத்தும் தந்தார். டி.எம். நாயர் தியாகராயரின் நெருங்கிய நண்பரில் ஒருவர் என்பதும், பொதுச்சேவையில் நண்பரையும் எதிர்த்து நின்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. தியாகராயரின் முயற்சி மட்டும் இல்லையெனில் இன்று சிறப்புடன் விளங்கும் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலின் குளம் ஏதேனும் ஓர் அரசியல் தலைவரின் பெயரில் பூங்காவாக அமைக்கப்பட்டிருக்கும்.

அக்காலங்களில் மருத்துவம் படிக்கும் மாணவர்கள் கட்டாயம் சமஸ்கிருதம் படித்தாக வேண்டும் என்ற விதி நடைமுறையில் இருந்தது. இதனால் அந்தணர்கள் அல்லாத மற்றவர்கள் மருத்துவம் படிக்க இயலாத நிலை நீடித்து வந்தது. சட்டமன்றத்திலும் ஆங்கில அரசிடமும் போராடி அந்த விதியை மாற்றி அனைவரும் மருத்துவம் படிக்கலாம் என்ற நடைமுறையை உருவாக்கிய செயல்வழி வேந்தர் தியாகராயர் என்பது குறிப்பிட வேண்டிய உண்மை.

அன்றைய காலத்தில் நாட்டு மருத்துவம் மூலம் சரியான விழிப்புணர்வு இன்றி அதிகமான சிசு மரணங்கள் நிகழ்ந்து வந்தன. அதனை மாற்ற ஆங்கிலேய மருத்துவமுறையைப் பலத்த எதிர்ப்புகளுக்கு மத்தியில் கொண்டு வந்து செயலாக்கினார்.

தமிழகத்தின் முக்கியமான அரசியல் கட்சியின் தலைவராகத் திகழ்ந்த போதிலும், அரசுக்கு இணையாகத் தன்னுடைய சொந்தச் செல்வங்களைக் கொண்டு சென்னை முழுவதும் பல கல்வி நிறுவனங்கள் தொடங்குவதற்குக் காரணமாகத் திகழ்ந்தார். சென்னையில் தென் சென்னை மக்கள் மட்டுமே டிராம் என்று அழைக்கப்படும் பொதுப் போக்குவரத்து வசதியைப் பெற்று வந்தனர். சென்னையின் பிற பகுதி மக்களுக்கு அந்த வசதிகள் கிடைக்கப்பெறாமல் இருந்தது. பல போராட்டங்களுக்குப் பின்னர் சென்னையின் அனைத்துப் பகுதிகளுக்கும் பொதுப் போக்குவரத்து வசதி கிடைக்கக் காரணமாகத் திகழ்ந்தவர் தியாகராயர்.

அதுபோல சென்னையின் ஒரு சில இடங்களில் மட்டுமே மண்ணெண்ணெய் விளக்கு எரியும் திட்டம் நடைமுறையில் இருந்தது. அதிலும் ஏற்றத்தாழ்வுகள் இருந்தது. தனது சொந்த நிதியைப் பாதி வழங்கி சுமார் சில லட்சம் மதிப்பில் ஏற்றத்தாழ்வின்றி சென்னையின் அனைத்து வீதிகளிலும் மண்ணெண்ணெய் விளக்குகள் அமைத்து வெளிச்சம் ஏற்படுத்தினார்.

சென்னை மாநகராட்சியின் மேயராகத் தியாகராயர் இருந்தபோது சென்னையில் கடுமையான குடிநீர் பஞ்சம் நிலவியது. சில குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும் குடிநீர்க் குழாய் இணைப்புகள் அப்போது நடைமுறையில் இருந்தது. ஆங்கிலேய அரசிடம் வலியுறுத்திச் சிறப்புத் திட்டங்கள் உருவாக்கி சென்னையின் பல பகுதிகளுக்கும் குடிநீர்க் குழாய் இணைப்புகள் வழங்கும் பணியைப் பல மாதங்கள் முன்னின்று தொடங்கி வைத்தார்.

அன்றைய காலத்தில் சென்னை மாநகராட்சிக்குச் சொந்தமான தென்னை மரங்களின் மூலம் கள் இறக்கப்பட்டு வந்தது. அதன்மூலம் வருவாயும் மாநகராட்சிக்கு வந்து கொண்டிருந்தது. ஆனால் மது அருந்துவதால் பலரும் பாதிக்கப்படுவதை உணர்ந்த தியாகராயர், மாநகராட்சிக்குச் சொந்தமான தென்னை மரங்களில் இருந்து கள் இறக்குவதைத் தடுத்து 9.5.1922ல் தீர்மானம் கொண்டு வந்தார். மகாத்மா காந்தியும், தந்தை பெரியாரும் வலியுறுத்திய மது ஒழிப்புக்குச் செயல்வழி சட்டம் இயக்கி முன்னோடியாகத் திகழ்ந்தார் தியாகராயர். தியாகராயரின் நீதிக்கட்சி வழிவந்த திராவிடக்கட்சிகள் அது போல தமிழகத்தில் மதுக்கடைகளை மூடுவதை எப்போது நடைமுறைப்படுத்துவார்கள் என்னும் கேள்வியும் இங்குத் தோன்றாமல் இல்லை. நீதிக்கட்சி வழிவந்தவர்கள் என்று மேடை தோறும் முழங்கும் திராவிடக் கட்சிகள், நீதிக்கட்சி வழங்கிய ஆட்சியைத் தமிழகத்திற்கு வழங்கினார்களா எனில் வரலாறு மெளனத்தை மட்டுமே பதிலாகத் தருகின்றது.

மக்கள் பணிகளுக்கு இடையில் மிகச்சிறந்த தொழில் உத்திகளையும் கையாண்டு பிட்டி என்னும் பெயரில் மிகப்பெரிய நெசவு ஆலையை உருவாக்கிப் பலருக்கும் வேலை வாய்ப்பு வழங்கினார். தியாகராயரின் நெசவு ஆலைக்கு மகாத்மா காந்தியடிகள் வருகை புரிந்து நெசவு முறைகளைக் கண்டு வியந்தார். தனது ஆசிரமம் சென்று மதன்லாலையும், மணிலாலையும் சென்னை அனுப்பி தியாகராயரின் பிட்டி ஆலையில் பயிற்சி பெற்று வருமாறு கூற, பின்னர் தனது ஆசிரமத்தில் நெசவுப்பயிற்சியைத் தொடங்கினார். மகாத்மா காந்தியடிகளின் நெசவுப்பயிற்சிக்கு முன்னோடியாகவும், காரணமாகவும் திகழ்ந்தவர் தியாகராயர் என்பது வரலாறு சொல்ல மறந்த கதை.

தென்னிந்திய வர்த்தகக் கழகம் என்ற ஒன்றை உருவாக்கி, தென்னிந்திய தொழில்களின் மேம்பாட்டிற்கும் தியாகராயர் பல செயல்களை உருவாக்கினார். தமிழகத்தில் நெசவு மூலம் பல புதுமைகளைக் கொண்டு வந்தார். தமிழகத்தில் விசைத்தறியைத் தனது பிட்டி நிறுவனம் மூலம் கொண்டு வந்தவர் தியாகராயர் என்பது அறியாத வரலாறு. தியாகராயர் நினைத்துச் செயல்படுத்த இயலாத திட்டம் ஒன்றே ஒன்றுதான். அது கூவம் நதி சீரமைப்புத் திட்டம். ஆங்கிலேய அரசு நிதியைக் காரணம் காட்டி கைவிரித்தமையால் அவர் காலத்திலேயே இந்தத் திட்டம் நிறைவேறாமல் போனது. அவர் மறைந்து 100 ஆண்டுகள் ஆகப்போகின்றது. இன்னும் இந்த நதி சீரமைக்கப்படவில்லை என்பது நாம் வருந்தத்தக்க ஒன்று.

பிட்டி என்னும் நெசவுத் தொழிற்சாலை மூலம் உருவாக்கப்பட்ட நெசவுத் துணிகள் நாட்டின் பல பகுதிகளுக்கும் எடுத்துச் செல்லப்பட 100 க்கும் மேற்பட்ட சிறு கப்பல்கள் மூலம் வணிகம் நடத்தி அதன் மூலம் வந்த வருவாயை மக்களுக்கு வழங்கிய பிட்டி தியாகராயர், 23.10.1923 ல் மாநகராட்சி மன்றத் தலைவர் பதவியில் இருந்து விலகினார். நிறைவாழ்வு வாழ்ந்த பிட்டி தியாகராயர் ஏப்ரல் 28 1925 ல் இயற்கை எய்தினார். பிறப்பால் பெரும் செல்வந்தர் குடும்பத்தில் பிறந்தாலும் இவர் கடுமையான, துயர் தரும் பாதைகளில் சென்று அனைவருக்கும் கல்வி, அனைவரும் மருத்துவர் ஆகலாம், வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் என்னும் பலனை அனைவரும் பெற வேண்டும் என்று போராடி அதனைச் செயல்வழியிலும் நிறைவேற்றிய சென்னை மண்ணின் மைந்தர் ஆவார், சென்னை மாநகரத் தந்தை பிட்டி தியாகராயரின் சிறப்பைப் போற்றும் வகையில் சென்னையில் தியாகராய நகர் என்னும் நகர் உருவாக்கப்பட்டது. ஆனால் காலப்போக்கில் நாமும், வளரிளம் தலைமுறையினரும் தி.நகர் என்று சுருக்கி அந்த மண்ணின் மைந்தரின் சிறப்புகளையும் சுருக்கி விட்டோமோ என்று எண்ணத் தோன்றுகிறது. தியாகராய நகரில் இருக்கும் கடைகளில் விளம்பரப் பகைகளில் ‘தி நகர் – T NAGAR’ என்று இருப்பதையும், பேருந்துகளிலும், மாநகராட்சி மன்றத்திலும், சட்டமன்றத்திலும் தி நகர் வார்டு உறுப்பினர், தி நகர் சட்டமன்ற உறுப்பினர் என்று வழங்குவதை நீதிக்கட்சி வழிவந்த திராவிடக் கட்சிகள் மாற்ற வேண்டும். தியாகராய நகர் என்று முழுமையாகப் பேருந்துகளில் எழுதிட வழிமுறை செய்தல் வேண்டும்.

சென்னை ரிப்பன் கட்டடத்தின் முன்னே சிலையாக எழுந்து நிற்கும் தியாகராயரின் சிலைக்குக் கீழே சிறுவர்கள் பாட நூல்களுடன் செல்லும் காட்சி வடிக்கப்பட்டிருக்கும். தமிழகத்தின் கல்வி உரிமைகளையும், அரசியல் உரிமைகளையும் பெற்றுத்தந்த பிட்டி தியாகராயரின் பிறந்தநாள் ஏப்ரல் மாதம் 27 ஆம் வருகின்றது. சமூக நல அமைப்புகளும், தமிழக அரசும் தியாகராயரின் சிறப்பைப் பல வடிவங்களில் இளைய சமுதாயத்திற்குக் கொண்டு செல்ல வேண்டும் என்பது மிக அவசியம். நீதிக்கட்சி தொடங்கிய அரசியல் உரிமைகளில் பலவற்றைக் காலமாற்றத்தில் நாம் சமரசம் என்னும் பெயரில் விட்டுக்கொடுத்து வருகின்றோம். அதனால் நமக்குக் கிடைக்க வேண்டிய பலன்களை நாம் பெறாமலேயே போய்விடுவோம் என்பதையும் நினைவில் நிறுத்தி, வெள்ளுடை வேந்தர், சென்னை மாநகரின் மண்ணின் மைந்தர் பிட்டி தியாகராயரை வணங்குவோம்.

0

பகிர:
பொ. சங்கர்

பொ. சங்கர்

கட்டுரையாளர், எழுத்தாளர். தவத்திரு சச்சிதானந்த சுவாமிகள், வேதாத்திரி மகரிசி ஆகியோரின் வாழ்வியல் சிந்தனைகளை ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவர். தொல்லியல் சான்றுகள் தேடி விரிவான பயணங்கள் மேற்கொண்டவர். கோயமுத்தூர் யுவபாரதி மையப்பள்ளியில் தமிழாசிரியராகப் பணிபுரிகிறார். தொடர்புக்கு - tamilshanker@gmail.comView Author posts

1 thought on “மண்ணின் மைந்தர்கள் #12 – வெள்ளுடை வேந்தர் பிட்டி தியாகராயர்: சென்னை மாநகரத் தந்தை”

  1. பிட்டி தியாகராயரின் சாதனைகளையும் நாட்டுப்பற்றையும் இதுவரை நான் படித்ததே இல்லை. இந்தப் பதிவு வரலாற்று சாதனையாளரை தமிழகத்தின் தன்னிகரற்றவர்களை எனக்கு அறிமுகப்படுத்தியது . படிக்க தூண்டும் எழுத்து நடையும் மனதில் பதிய வைக்கும் கருத்து நடையும் கொண்ட தம்பி சங்கருக்கு வாழ்த்துக்கள் நன்றிகள்.

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *