சுதந்திரம் பெற்ற இந்தியாவில் தமிழருக்கென்று ஓர் அரசு அமைந்தாக வேண்டும். தமிழ் மொழி வளர, தமிழர்கள் வாழ, தமிழ்நாடு செழிக்கத் தமிழரசு வேண்டும். தமிழர்களுக்கான உரிமைகளைத் தமிழர்களே நிர்ணயிக்க, தமிழ்நாட்டை தமிழரே ஆள வேண்டும் என்னும் வேட்கையுடன் தனி முழக்கமாக, தமிழ் முழக்கமிட்டவர் ம.பொ. சிவஞானம்.
மொழி வாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது தமிழ்நாட்டின் பல பகுதிகள் பிற மொழி பேசும் மாநில எல்லைக்குள் செல்ல இருந்தது. அதற்கான முயற்சிகளைத் தடுத்து நிறுத்தி சென்னை, திருத்தணி கன்னியாகுமரி, நாகர்கோயில் போன்ற பகுதிகள் இன்றைய தமிழ்நாடு வரைபடத்தில் இருப்பதற்குக் காரணமாகத் திகழும் ம.பொ. சிவஞானம் பற்றிய வரலாற்றுப் பதிவுகளை வரலாற்று ஆசிரியர்கள் கூட சொல்ல மறந்த நிலையில் இளைய தலைமுறையினர் அறிய வேண்டிய பதிவாக இப்பதிவு அமைகின்றது.
சென்னை மாகாணத்தில் 1906 ஆம் ஆண்டு ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர் மயிலாப்பூர் பொன்னுசாமி சிவஞானம். ஏட்டுக் கல்வி என்பது இவருக்குக் கனவாகவே இருந்தது. மூன்றாம் வகுப்பு வரை மட்டுமே கல்வி பயின்ற ம.பொ. சிவஞானம் குடும்பத்தின் வறுமை நிலை காரணமாக நெசவுத்தொழிலும், அச்சகப் பணியிலும் வேலை செய்து வந்தார். நாட்டில் பல பகுதிகளில் நடைபெற்ற விடுதலைப் போராட்டத்தில் கலந்து பல போராட்டங்களை முன்னெடுத்த நிலையில் ஆங்கிலேய அரசு இவரைக் கைது செய்து எழுநூற்று ஐம்பது நாட்கள் கடுங்காவல் தண்டனை விதித்தது. அமராவதி, வேலூர், தஞ்சை எனப் பல சிறைச்சாலைகளுக்கும் ஆங்கிலேய அரசு இவரை மாற்றி மாற்றித் துன்புறுத்தியது. சிறை வாழ்க்கை இவரை இலக்கியவாதியாக மாற்றியது. சிறையில் பல நாட்கள் இருந்த நிலையில் சிலப்பதிகாரத்தை முழுமையாகக் கற்கும் வாய்ப்பை நன்கு பயன்படுத்திக் கொண்டார். சிறை வாழ்க்கையில் இவருக்குக் கிடைத்த இன்னொரு பரிசு வயிற்றுவலி. தன்னுடைய வாழ்நாள் முழுவதும் இந்த வயிற்றுவலியுடனேயே வாழ்ந்து வந்தார்.
சிறையில் இருந்து வெளிவந்து காங்கிரசு இயக்கத்தில் தம்மை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார். காங்கிரசு இயக்கத்தின் சிறந்த பேச்சாளராகத் திகழ்ந்தார். இடதுசாரி இயக்கத்தில் இலக்கியம் பேசியவராக தோழர் ஜீவானந்தம் எவ்வாறு அறியப்பட்டாரோ அதுபோல காங்கிரசு இயக்கத்தில் இலக்கியம் பேசும் பேச்சாளராக மக்களால் அறிந்து போற்றப்பட்ட தலைவர்களில் ம.பொ.சி அவர்கள் முக்கியமானவராக அறியப்பட்டார். மேடையில் ஒரு மாவீரனைப் போல நின்று இவர் பேசுவது கண்டு பலரும் மெய்மறந்து கேட்பர். இவரின் வார்த்தைகள் எவ்விதமான தவறும் இன்றி மிகத் திருத்தமாக, அழகாக, கோர்வையாக, நிறைவாகப் பார்வையாளர்களைக் கவரும் வண்ணம் பேசும் வல்லமை பெற்றவர்.
1945 ஆம் ஆண்டு தமிழ் முரசு என்னும் இதழைத் தொடங்கி அந்த இதழின் மூலம் பல்வேறு கருத்துகளை மக்களிடையே கொண்டு சேர்த்தார். 1946 நவம்பர் 21 ல் ‘தமிழரசுக் கழகம்’ என்னும் இயக்கத்தை 70 இளைஞர்களைக் கொண்டு தொடங்கினார். இந்திய நாட்டிலும், இந்திய நாட்டின் வெளியிலும் தமிழர்கள் படும் இன்னலைத் தீர்க்கும் முகமாக இவ்வமைப்பின் செயல்பாடுகள் இருக்கும் எனவும், தமிழ்மொழி பேசும் மக்களுக்குத் தனி மாகாணம் என்ற கோரிக்கையுடனும் தமிழரசுக் கழகம் ம.பொ. சிவஞானம் போராடலானார். அவர் சார்ந்திருந்த காங்கிரசு இயக்கத்தில் அவரின் கருத்துக்கு ஆதரவு இல்லாத காரணத்தால் 1954 ஆம் ஆண்டு காங்கிரசு இயக்கத்தில் இருந்து வெளியேறினார்.
1955 ல் தமிழகத்தில் ம.பொ.சி தான் முதன்முதலாகத் தமிழ்நாடு மாகாணம் அமைக்கப்பட வேண்டும் என்று பல போராட்டங்களை முன்னெடுத்தார். மொழி வாரி மாகாணங்கள் பிரிக்கப்பட்ட போது காங்கிரசு இயக்கத்தில் சென்னை மாகாண உரிமைக்காக யாரும் போராடாத நிலையில், தெலுங்கு மொழி பேசுபவர்கள் ‘மதராஸ் மனதே’ என்னும் கோரிக்கையுடன் போராடலானார்கள். வெகுண்டெழுந்த ம.பொ.சி தமிழகம் முழுவதும் களப் பயணம் செய்து சென்னை நம் தலைநகராக இருக்க வேண்டிய அவசியத்தை எடுத்துரைத்தார். இவரின் பின்னால் பல ஆயிரம் இளைஞர்கள் அணி திரண்டு போராடினர். தெலுங்கு மொழி பேசும் நிலப்பகுதிக்கே சென்று தமிழரின் நில உரிமையை மீட்கும் பணியை மேற்கொண்டார்.
ஆந்திர மாநிலம் பிரிக்கப்பட வேண்டும் என்பதற்காகப் பொட்டி ஸ்ரீராமுலு என்பவர் பல நாட்கள் உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்தார். இதனால் பல பகுதிகளில் கலவரம் ஏற்பட மொழி வாரி மாகாணங்கள் கட்டாயம் பிரிக்கப்பட்டே ஆக வேண்டிய நிலைக்கு இந்திய அரசு தள்ளப்பட்டது. பிற மொழி பேசும் பகுதிகளின் கோரிக்கைகளையும் ஏற்று 1956 ஆம் ஆண்டு நவம்பர் 1 ஆம் நாள் சென்னை மாகாணம் என்று பிரிக்கப்பட்டது.
சென்னை நகரத்தை அடைந்தே தீர வேண்டும் என்னும் நோக்கில் அரசியல் அழுத்தங்களின் மூலமும் ஆந்திர மக்கள் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தனர். பல பகுதிகளில் மதராஸ் மனதே என்னும் கோரிக்கையுடன் போராடிய வேளையில், ம.பொ.சி அவர்கள் ‘தலையைக் கொடுத்தேனும் தலைநகரை மீட்போம்’ என்னும் முழக்கத்தை முன்வைத்துப் போராடலானார். திருப்பதி, காளஹஸ்தி போன்ற திருக்கோயில்கள் தமிழ் மன்னர்களால் உருவாக்கப்பட்டவை என்றும், அதற்கான சான்றுகள் அக்கோயில்களின் பட்டயங்களும், செப்பேடுகளுமே என்று உறுதிபட எடுத்துரைத்தார்.
இவரது போராட்டத்தின் தீரத்தை எதிர்க்க இயலாமல் பல்வேறு பேச்சுவார்த்தைகளை இந்திய அரசு நடத்தியது. சென்னை நகரத்தை ஆந்திரம், தமிழகம் என இரு பகுதிகளுக்கும் பொதுத் தலைநகராக அமைத்திட நேரு அவர்கள் முடிவெடுத்தபோது ம.பொ.சி அவர்கள் இந்திய அரசுக்குப் பல்வேறு அழுத்தங்களைக் கொடுத்து சென்னையை மீட்கப் போராடினார். அப்போது முதலமைச்சராகத் திகழ்ந்த இராஜாஜி அவர்களும், ம.பொ.சி போராட்டத்திற்கு ஆதரவு அளித்தார். இந்தியாவின் முதல் நிதி அமைச்சரான ஆர்.கே.சண்முகம் அவர்களும் ம.பொ.சியை நேரில் சந்தித்து ஆதரவு அளித்தார். செட்டி நாட்டு அரசர் எம்.ஏ. முத்தையா அவர்களும் உடனிருந்து போராடினர். அதன் காரணமாக முதன் மொழி வாரி மாநிலம் ஆந்திரம் பிரிக்கப்பட்ட போது, ஆந்திராவின் தலைநகரம் ஆந்திர மாநிலத்தின் உள்ளேயே இருக்கும் என்று அரசு அறிவித்தது. சென்னை மாநகரம் சென்னை மாகாணத்தின் தலைநகரமாக இருந்திட இந்திய அரசு ஒப்புதல் அளித்தது.
வட பெண்ணாறு, ஆரணியாறு, தென் பெண்ணாறு என்ற வளமான பல பகுதிகள் ஆந்திர எல்லைகளுக்குப் பிரித்துக் கொடுக்கப்பட்ட நிலையில் தமிழகத்தின் திருத்தணியையும் தமிழகம் இழக்கும் நிலையில் இருந்தது.
வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ் கூறும் நல் உலகம் என்ற வரிகளைத் தொல்காப்பியத்தில் இருந்து ஆதாரங்காட்டி இமயம் முதல் குமரி வரை தமிழ் நிலமாக அறிவிக்கக் கோரி போராடிய ம.பொ.சி வடக்கு எல்லையான திருத்தணியை மீட்டே தீருவேன் என்று போராடினார். இராஜாஜி, காமராசர் ஆகியோர் போராட்டத்தைக் கைவிடுமாறு வலியுறுத்தினார். ஆனாலும் திருத்தணியை மீட்டே தீருவேன் என்றும்
‘திருத்தமிழ்க்கு உயர்திசைச் சிறப்புடைத் திருத்தணிகை’ என்னும் திருப்புகழ் வரிகளைப் பல கூட்டங்களில் உதாரணம் காட்டினார். ‘தணிகை தமிழருக்கே’ என்னும் முழக்கத்தை எழுப்பி ஒற்றைக் குரலாகவே அங்குள்ள மங்கலங்கிழார் போன்றோரின் துணையுடன் திருத்தணியைத் தமிழகத்துடன் மட்டுமே இணைக்க வேண்டும் என்றும், சித்தூருடன் இணைக்க விடாமல் இறுதி வரை போராடிய ம.பொ.சி அவர்களை இந்திய அரசு கைது செய்தது. இதனால் போராட்டம் மேலும் தீவிரமானது. வேறுவழியின்றி இந்திய அரசு, சித்தூர் மாவட்டம் குழுவின் அறிக்கைக்குப் பிறகே அமைக்கப்படும் என்றும், திருத்தணியும் அதனைச் சார்ந்த 286 கிராமங்களும் சென்னை மாகாணத்தின் ஆட்சிக்கு உட்பட்ட பகுதியாகவே அமையும் என்று அரசாணை பிறப்பித்தது.
ம.பொ.சி தமிழகத்தின் தெற்கெல்லைப் போராட்டத்திலும் தமது பங்களிப்பை ஆற்றி தமிழகத்தின் பல பகுதிகள் இன்று தமிழக வரைபடத்தில் இருப்பதற்குக் காரணமாகத் திகழ்கிறார்.
வ.உ.சிதம்பரம் பற்றி, ம.பொ.சி எழுதிய நூலான கப்பலோட்டிய தமிழன் என்னும் நூலை மையமாக வைத்தே கப்பலோட்டிய தமிழன் திரைப்படம் எடுக்கப்பட்டது. வீரபாண்டிய கட்டபொம்மன் நூலினைச் சிறப்புற எழுதி தமிழ் மக்களிடம் கொண்டு சேர்த்தார். வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படமும் இவரின் நூலினை மையமாக வைத்தே எடுக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. சிறையில் இருந்த நாட்களில் சிலப்பதிகாரத்தை முழுமையாகக் கற்ற ம.பொ.சி பின் வந்த நாட்களில் சிலப்பதிகார மாநாட்டை ஆண்டுதோறும் நடத்தலானார். சிலப்பதிகாரத்தை அனைவரும் அறியும் வண்ணம் பல கூட்டங்களைத் தமிழகம் முழுதும் நடத்தி சிலப்பதிகாரக் கதையை, இதிகாசங்கள் போல அனைவரும் அறியச் செய்தார். இதனால் ரா.பி.சேதுப்பிள்ளை, ம.பொ.சி அவர்களுக்கு ‘சிலம்புச் செல்வர்’ என்னும் பட்டத்தை அளித்தார்.
சிலப்பதிகாரம் நூலினைப் பல நிலைகளில் ஆய்ந்து, சிலப்பதிகாரம் சார்ந்து பல நூல்களை எழுதியுள்ளார். மகாகவி பாரதியாரையும், தோழர் ஜீவானந்தம் உடன் இணைந்து பல நிலைகளில் மக்களிடத்தில் கொண்டு சேர்த்தார்.
சென்னை மாகாணம் என்னும் பெயரைத் தமிழ்நாடு என்று மாற்ற வேண்டும் என்று தமது அடுத்த போராட்டத்தைத் தொடர்ந்தார். அவர் சார்ந்திருந்த காங்கிரசு, ஆட்சியில் இருந்தாலும் ம.பொ.சியின் கோரிக்கையைச் செவிமடுத்துக் கேட்காமல் புறம் தள்ளியது. இருப்பினும் பல நிலைகளில் ம.பொ.சி போராடியே வந்தார். 1967 ல் ஆட்சிக்கு வந்த திராவிட முன்னேற்றக் கழகம் ம.பொ.சியின் கோரிக்கையை அடுத்து தமிழ்நாடு எனப் பெயர் மாற்றம் செய்தது. தீர்மானம் கொண்டு வந்து பேசிய அறிஞர் அண்ணா, தமிழ்நாடு பெயர் மாற்றத்திற்காக உயிர் நீத்த சங்கரலிங்கனாரும், ம.பொ. சிவஞானம் ஆகிய இருவருமே இதற்குக் காரணமானவர்கள் என்றும், இந்தச் சபை அவர்களை என்றும் கொண்டாட வேண்டும் என்றும் பேசினார்.
தமிழக சட்டமன்ற மேலவை உறுப்பினராகவும், மேலவையின் தலைவராகவும் திகழ்ந்த ம.பொ. சிவஞானம் பல நூல்களைப் படைத்த படைப்பாளியாகவும் திகழ்ந்தார். ‘வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு’ என்னும் நூலுக்காக 1966 ஆம் ஆண்டு சாகித்திய அகாதமி விருதும் பெற்றார். போராளியாகவும் இலக்கியவாதியாகவும் அரசியல்வாதியாகவும் திகழ்ந்த ம.பொ.சி அவர்களின் சிறப்பு மிகு பணிகளைப் பாராட்டி 1971 ஆம் ஆண்டு இந்திய அரசு பத்ம விருது அளித்தது.
கோயமுத்தூர் சிறையில் வ.உ.சி அடைக்கப்பட்ட காலத்தில் ஆங்கிலேய அரசு அவரை செக்கிழுக்க வைத்துக் கொடுமைப்படுத்தியது. வ.உ.சி இழுத்த மிக அதிக எடை கொண்ட செக்கு சிறையில் கவனிப்பாரின்றிக் கிடந்தது. பேரூராதீனம் தவத்திரு சாந்தலிங்க இராமசாமி அடிகளார் அவர்கள் முறையே ம.பொ.சி அவர்களுக்குத் தெரியப்படுத்திட, இருவரும் இணைந்து அதனைப் பொது மக்களின் பார்வைக்குக் காட்சிப்படுத்தினர் என்பதும் பதியப்பட வேண்டிய வரலாற்றுத் தரவாகும்.
1978 முதல் மேலவை கலைக்கப்பட்ட 1986 வரை அதன் தலைவராகத் திகழ்ந்த ம.பொ. சிவஞானம், அவையின் மாண்புகளை உரிய முறையில் காத்து, அந்தப் பதவிக்குப் பெருமை சேர்த்தார்.
அரசியல்வாதியாகத் திகழ்பவர்கள் கட்டாயம் தமிழரின் வரலாற்றையும், தத்துவத்தையும் அறிந்திருக்க வேண்டும் என்றும், தத்துவம் அறிந்த அரசியல்வாதிகளே மக்கள் தலைவர்களாக நீடிக்க முடியும் என்றும் கூறினார். தன் வாழ்நாள் முழுதும் அவ்வாறே வாழ்ந்தும் வந்தார்.
தமிழருக்காகவும் தமிழுக்காகவும் தமிழ்நாட்டிற்காகவும் தன் வாழ்வை அர்ப்பணித்துக் கொண்ட ம.பொ. சிவஞானம் அவர்களின் நினைவையும் சிறப்பினையும் தமிழக அரசு இன்றைய தலைமுறைக்குக் கொண்டு சேர்த்ததா? எனில் கோடிட்ட இடங்களை நிரப்பவில்லை என்பதே பதில். தமிழகத்தின் அநேகப் பல்கலைக்கழகங்கள் பலரின் பெயரில் சிறப்புடன் இயங்கி வருகின்றது. தமிழ் – தமிழர் – தமிழ்நாடு என்று வாழ்ந்த ம.பொ. சிவஞானம் அவர்களின் புகழைப் போற்றும் வண்ணம் ஏதேனும் ஒரு பல்கலைக்கழகத்திற்கு அவரின் பெயரைச் சூட்ட வேண்டும். சிலப்பதிகாரத்தையும், பாரதியார் கவிதைகளையும் இன்னும் பிற இலக்கிய வகைமைகளையும் போராளியாக இருந்து பொதுமக்களிடம் கொண்டு சேர்த்த இவருக்குப் பல்கலைக்கழகங்கள் சிறப்பும், பெருமையும் செய்ய வேண்டும். தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்திற்கு இவரின் பெயரைச் சூட்டுதல் வேண்டும்.
தத்துவம் அறிந்த அரசியல்வாதி, இலக்கியம் கற்ற போராளி, எல்லைகளை மீட்ட மீசைக்காரர் எனப் பல நிலைகளில் சிறப்புப் பெற்று விளங்கிய ம.பொ. சிவஞானம் நினைவையும், சிறப்பையும் போற்றுவோம். தமிழகத்தில் யார் யாருக்கோ சிலைகள் இருக்க, தலைநகரை மீட்ட தமிழனுக்கு, வடக்கு எல்லையை மீட்ட வேந்தனுக்கு என்ன சிறப்பை நாம் கொடுக்கப் போகிறோம். வளரிளந் தலைமுறைக்காவது தமிழர் வரலாற்றைக் கற்பிப்போம்.
0
We are happy to know that Ma.Po.Si reclaimed Chennai, the capital of Tamil Nadu when the states were divided linguistically. Well narrated Dr.Shanker. keep it up
சென்னை மட்டுமல்ல தமிழகமே கொண்டாட வேண்டிய மாபெரும் தலைவர் ம.பொ.சி அவர்களின் வாழ்வியல் வரலாற்றை அறிந்து மகிழ்ந்தோம். தமிழக நலனுக்காக எண்ணற்ற தலைவர்கள் அரும்பாடு பட்டுள்ளனர். அவர்களை ஒவ்வொரு வாரமும் நினைவூட்டும் மண்ணின் மைந்தர்கள் தொடர் மேலும் சிறக்கட்டும். கிழக்கு டுடே இணைய இதழுக்கும், எழுத்தாளர் திரு சங்கர் அவர்களுக்கும் வாழ்த்துகள்.
தமிழ், தமிழினம் , தமிழ்நாடு இவை போற்றி பாதுகாக்கப்பட வேண்டிய ஒன்று இவற்றிற்காக போராடிய, உயிர்நீத்த பழம் பெரும் தலைவர்களைப் பற்றிய அரிய பல தகவல்களை பற்றோடு பதிவிடும் இந்த இணைய இதழுக்கும், இவ்வாசிரியருக்கும் பாராட்டுதலையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.