தமிழகத்தின் வரைபடத்தில் கன்னியாகுமரி இருப்பதற்குக் காரணமானவர் மார்ஷல் நேசமணி என்னும் மக்கள் தலைவர். இராணுவத்தில் உயர்பதவி வகிப்பவருக்கு அளிக்கப்படும் மரியாதையை, போர்க் காலங்களில் முக்கிய முடிவுகள் எடுப்பதற்கு வழங்கப்படும் அங்கீகாரத்தை இராணுவத்தில் ‘மார்ஷல்’ என்னும் பெயரில் அழைப்பர். அவ்வாறிருக்க இராணுவத்தில் பணியாற்றாத தனியொரு மனிதனுக்கு மக்கள் ஏன் மார்ஷல் என்னும் பட்டம் வழங்கினார்கள்? நேசமணி என்னும் பெயருக்கு ஏன் இவ்வளவு நேசம் என்றும், தனியொரு மனிதனைச் சாதி, இன, அரசியல் வேறுபாடுகளின்றி ஏன் அனைவரும் கொண்டாடினர் என்பதையும் இப்பதிவில் காணலாம்.
1895 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 12 ஆம் நாள் கன்னியாகுமரி மாவட்டம் நேசபுரத்தில் அப்பாவு – ஞானம்மாள் தம்பதிக்கு இரண்டாவது நன்மகவாகப் பிறந்தவர் நேசமணி. திருநெல்வேலியில் தொடக்க நிலைக் கல்வியைத் தொடங்கி, திருவனந்தபுரத்தில் சட்டக் கல்லூரியில் பி.எல். பட்டம் பெற்ற 1921 ஆம் ஆண்டு வழக்கறிஞராகப் பணியாற்றத் தொடங்கினார். அன்றைய காலத்தில் இந்தியா ஆங்கிலேயரின் கீழ் இருந்தாலும் கன்னியாகுமரி மாவட்டம் மக்களில் பலர் திருவாங்கூர் சமஸ்தானத்தின் கீழ் அடிப்படை உரிமைகள் கூட இல்லாமல் வாழ்ந்து வந்தனர். நாட்டின் எந்தப் பகுதியிலும் இல்லாத பல்வேறு இன்னல்களை இப்பகுதி மக்கள் சாதிய அடுக்குமுறையாலும் அதிகார வர்க்கத்தின் அராஜகத்தாலும் வேறு வழியின்றி வலியுடன் வாழ்ந்து வந்தனர். கன்னியாகுமரி மாவட்ட மக்களின் வலியைப் போக்கி வழி ஏற்படுத்தித் தந்து, மக்களின் அடிப்படை உரிமைகளுக்கும், கடமைகளுக்கும் குரல் கொடுத்தமையால் இவரை ‘குமரியின் தந்தை’ என்று அழைக்கப்பட்ட வரலாற்றை இனி காண்போம்.
சுதந்திர இந்தியாவின் முதல் தேசப் பிரிவினை மதம் என்றும், அடுத்த பிரிவினை மொழி என்னும் அடுக்கு நிலையிலும் இந்தியாவின் தென் மாநிலங்கள் உருவானது. இப்பிரிவினைகளில் அதிகாரத்தின் நாற்காலிகள் முடிவு செய்தே பல பகுதிகளை மக்களின் விருப்பம் இல்லாமல், மண்ணியல் தன்மைக்கு மாற்றாக, வாழும் மக்களின் வரலாற்றை மாற்றி எழுதியது மொழிவாரி மாகாணம். மொழிவாரி மாகாணப் பிரிவில் தமிழ்நாடு இழந்த பகுதிகளே அதிகம். கடும் போராட்டங்களின் காரணமாகவே சில பகுதிகள் தமிழ் மொழி பேசும் மக்களுக்குக் கிடைத்தது. தமிழகத்தின் வளமான பகுதிகள் பிற மாநிலங்களின் வரைபடத்தில் இருக்க, அந்த வரிசையில் கன்னியாகுமரி மாவட்டமும் திருவாங்கூர், கேரள அரசுகளின் கீழ் இருக்க ஆதிக்க சக்திகள் அதிகார நாற்காலிகளின் மூலம் திட்டத்தை வரையறுத்தனர். இதனை எதிர்த்து எழுந்த நேசமணி பல்வேறு படிநிலைகளில் போராடினார்.
பிரிட்டிஷ் இந்தியாவில் கன்னியாகுமரி மாவட்டத்தின் பல பகுதிகளில் மக்கள் அடிமைகளாகவே வாழ்ந்தனர். காரணம் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் உயர்பிரிவு மக்களுக்கு உயரிய சலுகைகளும் பல அடித்தட்டு மக்களுக்குத் தெருவில் நடமாட இயலாத கொடுமைகளும் நடந்தேறி வந்தன. சுதந்திர இந்தியாவிலும் இந்த நிலைமை தொடர்ந்தது. இதனை எதிர்த்துக் களமாடி, அனைத்து மக்களின் காவலனாகவும், கன்னியாகுமரியினை மீட்ட நில வேந்தனாகவும் திகழ்ந்த மாபெரும் மக்கள் தலைவர் மார்ஷல் நேசமணி.
1921 ஆம் ஆண்டு வழக்கறிஞராகப் பதிவு செய்து நீதியை அடித்தட்டு மக்களுக்குத் தரும் நீதிமன்றத்தில் முதல் வழக்கறிஞர் பணியைத் தொடங்கச் சென்றார். எளிய மக்களுக்கு நீதி வழங்கும் நீதிமன்றத்திலேயே உரிய நீதி இன்றி இரு பிரிவாக இருக்கைகள் இருப்பதைக் கண்டு வருந்தினார். உயர் சாதி வழக்கறிஞர்கள் அமர்வதற்கு கை வைத்த இருக்கைகளும், பிற பிரிவினர் அமர்வதற்குக் கீழே முக்காலிகளும் இருப்பதைக் கண்டு நீதிபதி முன்னிலையிலேயே ஏற்றத்தாழ்வு இருக்கைகளைத் தன் கால்களால் எட்டி உதைத்தார். ‘நீதி வழங்கும் இடத்திலேயே அநீதி இருந்தால் மக்களுக்கு எவ்வாறு நீதி கிடைக்கும்? உயர்வு, தாழ்வைப் போக்கவே கல்வி, அவ்வாறு கல்வி கற்றும் பிரிவினைகள் ஏன்?’ என்று தன் வாதங்களை எடுத்து வைத்தார். நீதிமன்றம் முழுவதும் உள்ள முக்காலிகளை எடுத்துச் சென்று நீதிமன்ற வாசலில் உடைத்து நீதியைப் பெற்றார். அணுகுமுறை என்னும் ஆயுதம் மூலம் வாய்தா இல்லாமல் சமநீதியைப் பெற்றார். கடுமையான எதிர்ப்புகளின் இடையில் கடும் வாதங்களுக்கு மத்தியில் பிரிவினை நாற்காலிகள் அகற்றப்பட்டன. நேசமணியின் முதல் போராட்டம் வெற்றியுடன் தொடங்கியது. அதனால் அவருக்குக் கடும் எதிர்ப்புகளும் தொடங்கியது.
நாகர்கோயில் வழக்கறிஞர் சங்கத்திலும் அதுபோலவே சாதிப் பிரிவினைக் கொண்டே தண்ணீரும் அறைகளும் வழங்கப்பட்டன. உயர்பிரிவினர் அருந்துவதற்குத் தனிப் பானையில் நீரும், பிற பிரிவினர் அருந்துவதற்கு இன்னொரு தனிப் பானையும் வைக்கப்பட்டு இருந்தன. இரண்டு பானைகளையும் உடைத்து, பொது இடத்தில் ஒரே பானையை வைத்தார் நேசமணி. நாகர்கோயில் வழக்கறிஞர் சங்கத்தின் தலைவராக இருந்து எளிய மக்களும் நீதிமன்றப் படி ஏறும் வாய்ப்புகளை உருவாக்கினார்.
‘வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறும் நல்லுலகம்’ என்பது தொல்காப்பியர் காலந்தொட்டு தமிழகத்தின் எல்லையாக இருந்த நிலையில் 1766 ஆம் ஆண்டு கன்னியாகுமரி பகுதிகள் திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் கீழ் வந்தது. அன்றிலிருந்து 1956 வரை இந்தப் பகுதிகளின் மக்களுக்குப் பல்வேறு இன்னல்கள் வழங்கப்பட்டு வந்தது.
பல்வேறு காலகட்டங்களில் பல போராட்டங்கள் நடந்தாலும் வலுவான தலைமை இல்லாத காரணத்தால் அதிகார வர்க்கம் நிம்மதியாக இருந்தது. வழக்கறிஞர் நேசமணியின் தொடர் போராட்டங்களால் அதிகார வர்க்கம் அமைதியை இழந்து ஆட்டம் காணத் தொடங்கியது. 1947 ஆம் ஆண்டு இந்தியா விடுதலை பெற்ற பிறகு, மொழிவாரி மாகாணப் பிரிவினை அவசியம் என்னும் கோரிக்கை வலுப்பெற்று வந்தது. மக்களை ஒன்று திரட்டி அரசை நிலைகுலைய வைக்கும் வலுவான போராட்டங்களை நேசமணி முன்னெடுத்தார். கிட்டத்தட்ட போர்க்களம் போலவே பல்வேறு முடிவுகளை எடுக்கும் தலைவராகத் திகழ்ந்த காரணத்தால் மக்கள், நேசமணி அவர்களுக்கு ‘மார்ஷல்’ என்னும் என்னும் பட்டத்தை வழங்கினர்.
மண்ணைக் காக்க, கன்னியாகுமரி தமிழ் மண்ணோடு இணைய, வீட்டிற்கு ஒருவர் வீதிக்கு வந்து விடுதலைக்குப் போராட வேண்டும் என்ற மாயக்குரலுக்கு மயங்கி அணி அணியாக மக்கள் நேசமணி தலைமையில் திரண்டனர்.
கன்னியாகுமரி, இடுக்கி, தேவிகுளம், பீர்மேடு, செங்கோட்டையின் சில பகுதிகள் தமிழக சென்னை மாகாணத்தோடு இணைக்கப்பட்டே ஆக வேண்டும் என்னும் கோரிக்கைகளை முன்வைத்து அதிகார வர்க்கத்தை மக்கள் ஒற்றுமை என்னும் ஆயுதம் கொண்டு எதிர்க்கத் தொடங்கினார். போராட்டத்தின் பயனாக 1956 ஆம் ஆண்டு சென்னை மாகாணத்தோடு கன்னியாகுமரி இணைக்கப்பட்டது. கன்னியாகுமரி, நாகர்கோவில், விளவங்கோடு, அகத்தீஸ்வரம் இன்னும் பிற பகுதிகள் தமிழகத்தின் சென்னை மாகாணத்தோடு இணைந்திருக்க மார்ஷல் நேசமணி முக்கியமான காரணமாகத் திகழ்ந்தார். வெற்றிக் கொண்டாட்டம் இருந்தாலும் தேவிகுளம், பீர்மேடு, இடுக்கி போன்ற பகுதிகள் கேரள மாநிலத்தோடு இணைக்கப்பட்டன.
ம.பொ.சி அவர்களும் தென் எல்லைக்கு வருகை புரிந்து மார்ஷல் நேசமணியுடன் இணைந்து போராடலானார். ஆனாலும் சொந்தக் கட்சியினரின் ஒத்துழைப்பு இன்மை காரணமாகவும், அரசியல் அழுத்தம் காரணமாகவும் சில வளமான பகுதிகளைக் கேரளப் பகுதிகளில் இருந்து மீட்க முடியாமல் போனது. சொந்தக் கட்சியின் அதிகார வர்க்கம் இவர்களின் போராட்டத்தைக் கண்டு, ‘குளமாவது, மேடாவது’ என்று தேவிகுளம், பீர்மேடு பகுதி இணைப்பை எள்ளி நகையாடியது. மார்ஷல் நேசமணியின் போராட்டம் காரணமாகவே தமிழகத்தின் வரைபடம் வரலாற்றுப் பதிவாக இருக்கின்றது என்பதும் பதிய வேண்டிய அவசியமாகின்றது.
எல்லைகளை மீட்கும் போராட்டம் ஒரு பக்கம் நடைபெற்று வந்தாலும் இவரின் சாதிய எதிர்ப்புப் போராட்டங்களும் அடித்தட்டு மக்களின் அடிப்படை உரிமைகளுக்கான போராட்டமும் தொடர்ந்தது. நேசமணி வேளாண் தொழிலில் அடித்தட்டு மக்களின் உரிமைகளுக்காக விடாமல் போராடினார். தனி மனிதனாக இருப்பின் அதிகாரத்தை எதிர்க்க இயலாது, மக்களின் வாழ்வுரிமைக்குப் போராடினாலும் பலன் இருக்காது என்பதால் அவர் அரசியலில் ஈடுபடலானார். லட்சக்கணக்கான மக்களின் தார்மீக ஆதரவால் நாகர்கோயில் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார் மார்ஷல் நேசமணி.
நாடாளுமன்றத்தில் மார்ஷல் நேசமணி சிறப்பான செயல்பாடுகளை முன்வைத்து மக்களின் அடிப்படை உரிமைகளுக்காகப் போராடினார். இவரின் சிறப்பான உரைகளைக் கேட்டு இந்தியாவின் பிரதம அமைச்சர் நேரு அவர்கள், தென் பகுதி மக்களின் ‘அசையாச் சொத்து மார்ஷல் நேசமணி’ என்று பாராட்டினார்.
நாகர்கோயில் நகராட்சித் தலைவராக 1943 ஆம் ஆண்டு நேசமணி தேர்ந்தெடுக்கப்பட்டார். நகராட்சியின் பல நிலை வளர்ச்சிக்கும் தனிப்பெரும் பங்கு வகித்தார். திருவாங்கூர் சட்டமன்ற உறுப்பினராகவும், தமிழ்நாடு கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினராகவும் பதவி வகித்து சிறப்பான, முன் மாதிரியான மக்கள் தலைவராகத் திகழ்ந்தார். நாகர்கோயில் தொகுதியில் தனிப்பெரும் தலைவராகத் திகழ்ந்த மார்ஷல் நேசமணி 1968 வரை தொடர்ச்சியாக அனைத்துத் தேர்தல்களிலும் வெற்றி பெற்றே வந்தார். 1968 ஜூன் 1 ஆம் நாள் தன் சமூகக் கடமைகளை நிறுத்தி இவ்வுலக வாழ்வை விட்டு மறைந்தார்.
சாதிய அடுக்குகளே இருக்கக் கூடாது எனப் போராடிய மார்ஷல் நேசமணியை இன்று சாதியவாத அமைப்புகள் சொந்தம் கொண்டாடுவது அவரின் செயலைக் காயப்படுத்துவது போன்றது. தமிழகத்தின் வரைபடம் வெட்டுண்டு போகாமல், தமிழக நிலவளம் மொழியால், உணர்வால் காக்கப்பட உணர்வாய் போராடி, உறுதியாய் வென்றவர் மார்ஷல் நேசமணி என்னும் மக்கள் தலைவர். இவரின் போராட்டத்திற்குச் சிறப்புச் சேர்க்கும் விதமாக இவரைப் பற்றி வளரிளம் தலைமுறையினர் அறிந்து கொள்ளப் பாடநூல்களில் இவரின் வரலாற்றைச் சேர்க்க வேண்டும் எனப் பலரும் தொடர்ந்து போராடிக் கொண்டிருக்க இதுவரை அதற்கான செயல்திட்டங்கள் பேச்சு அளவிலேயே தொடர்வது அரசியல் இயக்கங்களின் ஆர்வமின்மையைக் காட்டுகின்றது. கன்னியாகுமரி, நாகர்கோவில் பகுதிகளில் காங்கிரசு என்னும் இயக்கம் இன்றும் உயிர்ப்புடன் இருப்பதற்குக் காரணம் மார்ஷல் நேசமணி. இதனைக் காங்கிரஸ் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் உணர்வார்களா என்பது ஐயமே.
மார்ஷல் நேசமணியின் சிறப்பைப் போற்றும் வகையில் அவர் மறைந்து கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்குப் பிறகே, வழக்கம்போல அரசியல் கட்சிகளின் சண்டைகளின் மூலம் மார்ஷல் நேசமணி மணிமண்டபம் அமைக்கப்பட்டது. குமரி மாவட்டப் பள்ளிகள் இவரின் மணிமண்டபத்துக்கு மாணவர்களைக் கல்விச் சுற்றுலா அழைத்துச் சென்று வரலாற்றை அறிய அரசு ஆணை பிறப்பிக்க வேண்டும் என்பதும் அவர் வழிவந்தவர்களின் விருப்பமாகும்.
மார்ஷல் நேசமணியை அறம் என்னும் உண்மைக் கதையின் மூலம் ‘வணங்கான்’ என்னும் தலைப்பில் இன்றைய இளைய தலைமுறைக்கும் எடுத்துச் சொன்னவர் எழுத்தாளர் திரு.ஜெயமோகன். தனி மனிதனாகப் பெரும் சமஸ்தானத்தையும், ஜமீன்தாரையும் எதிர்த்து நின்று களமாடிய மனிதராக மார்ஷல் நேசமணியை அடையாளப்படுத்திய எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களின் பணியையும் இங்குக் குறிப்பிட்டே ஆகவேண்டும்.
ஜூன் மாதம் மார்ஷல் நேசமணியின் பிறந்த தினம் வருகின்ற போது அன்றைய ஒருநாள் மட்டும் அவரைப் போற்றிப் புகழும் அரசியல் தலைவர்கள் மத்தியில் எந்தவிதமான எதிர்பார்ப்புகளும் இன்றி மக்கள் விடுதலை, மண் விடுதலை எனப் போராடிய மார்ஷல் நேசமணியைக் கன்னியாகுமரி மாவட்ட மக்கள் போற்றி வணங்க வேண்டும். பெற்றோர்கள் தம் குழந்தைகளுக்குச் சொல்லித் தரவேண்டிய வரலாற்றுப் பாடங்களில் மார்ஷல் நேசமணியின் வரலாறும் இடம்பெறுதல் வேண்டும்.
0
வரைபடத்தில் ஒரு மாநிலம் இருக்க காரணமாக இருந்தவரை எங்களுக்கு அறிமுகப்படுத்திய எழுத்தாளர் சங்கருக்கு நன்றி. ஒவ்வொரு உங்கள் பதிவை படிக்கும் பொழுதும் என் மூளை புதிதாக சலவை செய்யப்படுகிறது புதிய கருத்துக்களை உள்வாங்கிக் கொள்கிறது. எந்த ஒரு வரிகளிலும் சலிப்புத் தட்டாமல் இறுதி வரிகளின் கடைசி வார்த்தை வரை சுவாரசியத்தை ஏற்படுத்தும் உங்கள் எழுத்துக்களுக்கு நன்றிகள்.
மார்ஷல் நேசமணி குறித்த வரலாற்று ரீதியான பதிவை வாசித்து மகிழ்ந்தோம். தனி நபர் இராணுவம் என்பதற்கு இவரே உதாரணம். மிகச் சிறந்த👍💯 பதிவு.