இந்தியாவின் சுதந்திரப் போராட்ட வீரர் என்று மட்டும் இலட்சுமண ஐயரை அடையாளப்படுத்த இயலாது. இந்தியாவிலேயே முதன்முறையாக மனிதக் கழிவுகளை மனிதனே அள்ளுவதைக் கோபி நகராட்சியில் முதன் முதலாகத் தடை செய்து, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு விடியலை உருவாக்கியவர் இவர். கோபி நகருக்குப் பவானி நதி நீரைக் கொண்டு வந்தவர். பொதுக் கிணறுகளில் அனைவரும் நீர் எடுக்கும் போராட்டத்தை உருவாக்கி வெற்றி பெற்றவர். சமூகச் சேவையாளர், சாதியப் பாகுபாடு எதிர்ப்பாளர் என்று பல்வேறு தளங்களில் இயங்கிய செயல்வழி வீரர், கோபி நகரின் தந்தை இலட்சுமண ஐயர். மகாத்மா காந்தியடிகளின் சத்தியாகிரக வழியைச் சுதந்திரப் போராட்டம் மட்டுமின்றி வாழ்வின் ஒவ்வொரு நிலையிலும் காந்தியத்தை மனதார வழிபட்டவர். தன் வழிகாட்டி மகான் காந்தி சொன்ன வார்த்தைகளுக்காகத் தன் வாழ்நாள் முழுவதும் வாழ்ந்த இலட்சுமண ஐயரின் வாழ்வியலை இங்குக் காண்போம்.
மண் மணம் மாறாத கோபிச்செட்டிபாளையத்தில் 1918 ல் பிப்ரவரி 22 ல் மிகப்பெரும் நிலக்கிழாராக வாழ்ந்த சீனிவாச ஐயருக்கு மகனாகப் பிறந்தவர் இலட்சுமண ஐயர். கோபி வைரவிழா பள்ளியில் கல்வியைக் கற்ற இவர் பள்ளிக்காலத்திலேயே சுதந்திரப் போராட்டத்திலும் ஈடுபடலானார். இவரின் தந்தை சீனிவாச ஐயர் இரட்டை மெம்பர் தொகுதி என்று அழைக்கப்படும் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர். தனது தந்தையாரின் வழிகாட்டுதல் படி தமது வாழ்வியலை இந்தச் சமூகத்தின் மேம்பாட்டிற்குப் பயன்படுத்திக் கொண்டவர். தந்தை சீனிவாச ஐயரை வாழ்வின் முன்மாதிரியாகவும், மகாத்மா காந்தியடிகளை வழிகாட்டியாகவும் அமைத்துக்கொண்டவர்.
இலட்சுமண ஐயருக்கு 11 வயதில் திருமணம் ஆனது. தனது பள்ளிப்படிப்பை நிறைவு செய்து நேரடியாகச் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபடலானார். பல்வேறு சுதந்திரப் போராட்டங்களில் ஈடுபட்டு தமிழகத்தின் பல சிறைகளிலும் பாதுகாப்புக் கைதியாக அடைக்கப்பட்ட இலட்சுமண ஐயர் கிட்டத்தட்ட ஐந்து வருடங்களுக்கு மேல் சிறையில் இருந்துள்ளார். வேலூர் சிறையில் காமராசரோடு இலட்சுமண ஐயரும் பாதுகாப்புக் கைதியாக அடைக்கப்பட்டார். பின்னர் பரோலில் வெளிவந்து வார்தா சென்று மகாத்மா காந்தியடிகளைச் சந்தித்தார். தீவிரமுடன் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட வேண்டும் என்றும், அடித்தட்டு மக்களின், தாழ்த்தப்பட்ட மக்களின் நலனுக்கும் பாடுபட வேண்டும் என்று மகாத்மா சொன்ன அந்த வார்த்தையைத் தமது வாழ்வின் வேதவாக்காக வாழ்வின் இறுதிவரை கோபி நகரத்திற்கும், தாழ்த்தப்பட்ட மக்களின் நல மேம்பாட்டிற்காகவும் உழைத்தவர்.
நாமக்கல் கவிஞருடன் இணைந்து தேச விடுதலைத் தொடர்பான நூல்களை எல்லா இடத்திலும் எல்லா மக்களுக்கும் அளிக்க வேண்டும் என்னும் நோக்கில் பல நூல்களை வெளியிட்டு கதராடையுடன் நூல்களையும் கிராமம், கிராமமாகச் சுமந்து சென்று அளித்தவர். கி.வா.ஜ உடன் இணைந்து அமுத நிலையம் என்னும் பெயரில் நூல் பதிப்பகம் ஒன்றைத் தொடங்கி அதன்மூலம் சுமார் 130 நூல்களை வெளியிட்டவர் இலட்சுமண ஐயர். பாரதியாரின் பாடல்களைச் சத்தமாகப் பாடி மக்களிடையே சுதந்திரப் பற்றை ஊக்குவித்தவர். ஓயாமல் பாடுவதால் ‘ஓயாமாரி’ என்று கொண்டாடப்பட்டவர்.
கோபி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் 26 பொதுக் கிணறுகள் இருந்தது. அந்தக் கிணறுகளில் தாழ்த்தப்பட்ட மக்கள் பொது இடங்களிலும், பொதுக் கிணறுகளிலும் நீர் எடுக்கப் பல்வேறு தடைகள் இருந்து வந்தது. இதனால் அடித்தட்டு மக்களின் அன்றாடத் தேவையான நீர் எல்லோருக்கும் கிடைப்பதில் சிக்கல் நிலவி வந்தது. அப்போது இலட்சுமண ஐயர், தாழ்த்தப்பட்ட மக்களை ஊர்வலமாக அழைத்துச் சென்று பொதுக் கிணறுகளில் நீர் எடுக்கும் போராட்டத்தைத் தொடங்கினார். பல இடங்களில் பலவிதமான எதிர்ப்புகள். பிராமண மக்கள் வசிக்கும் பகுதிகளிலும் ஊர்வலமாகச் சென்று போராட்டங்கள் நடத்தியதால் இலட்சுண ஐயரை அவர் சார்ந்த பிராமணச் சமூகம் சாதி விலக்கம் செய்தது. சாதி விலக்கம் காரணமாக அவரின் தங்கை திருமணம் ஆன நிலையிலும் புகுந்த வீட்டை விட்டுத் துரத்தப்பட்டார். சுமார் 18 வருடங்கள் சாதி விலக்கம் காரணமாக இலட்சுமண ஐயரின் தங்கை இவரின் இல்லத்திலேயே வசித்தார். பின்னர் இராமேசுவரம் சென்று தீட்டு கழித்துப் பின்னரே தங்கையை அழைத்துச் சென்றனர் என்பது இங்குப் பதிதல் அவசியம்.
இலட்சுமண ஐயரின் நீர் எடுப்புப் போராட்டத்தில் அவரின் வேண்டுகோளுக்குச் சிலர் இணங்கி தாழ்த்தப்பட்ட மக்களுக்கு நீர் வழங்க முன்வந்தார்கள். பல இடங்களில் போராடித்தான் பெற வேண்டி இருந்தது. இலட்சுமண ஐயரின் போராட்டம் காரணமாக ஆங்கிலேய அரசாங்கம் கோபி பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பித்தது. ஆனாலும் தமது போராட்டங்களில் தீவிரமுடன் பங்கேற்று மக்களுக்கு நீர் கிடைக்கச் செய்தவர் இலட்சுமண ஐயர்.
இலட்சுமண ஐயரின் தந்தை சீனிவாச ஐயர் கோபி பகுதியில் ஒரு தனியார் வங்கியை நடத்தி வந்தார். இலட்சுமண ஐயரின் போராட்டங்கள் காரணமாக உயர்சாதி மக்களைச் சில நேரங்களில் எதிர்க்க வேண்டி வந்ததால் அவர்கள் அனைவரும் இவரை எதிர்ப்பதற்காக, வங்கியில் தாங்கள் முதலீடு செய்திருந்த பணத்தைப் பலரும் ஒன்றிணைந்து ஒரே நேரத்தில் அவரவர் பணத்தைக் கேட்டு இடைஞ்சல் தரத் தொடங்கினர். மனம் தளராத சீனிவாச ஐயர், ‘எந்தக் காரணத்திலும் மக்கள் பணியை விட்டுவிடாதே… நமது சொத்துகளை விற்று அவர்களுக்கு உரிய பணத்தைக் கொடுத்து விடு’ என்றார். இதனால் தமது சொத்தில் சரிபாதிக்கும் மேலே இழக்க வேண்டிய நிலையிலும் தந்தையின் ஊக்குவிப்பால் சமூகப் பணிகளில் முன்னை விட முனைப்புடன் ஈடுபட்டார்.
இலட்சுமண ஐயர் கோபி நகர்மன்றத் தலைவராகப் பதவி வகித்த போது, பொதுக் கிணறுகளில் அனைவரும் நீர் எடுக்கும் தீர்மானம் கொண்டு வந்தார். அந்தத் தீர்மானத்திற்குப் பலரும் எதிர்ப்புத் தெரிவித்தனர். அவை பொதுக்கிணறுகள் அல்ல என்று நீதிமன்றம் வரை சென்று போராடினார்கள். இலட்சுமண ஐயரும் நீதிமன்றத்தில், பொதுக்கிணறுகளுக்கு நகராட்சி பணம் வழங்கிய ரசீதுகளைச் சமர்ப்பித்தார். தீர்ப்பில் எல்லோரும் நீரைப் பயன்படுத்தலாம் என்று இலட்சுமண ஐயருக்கு சாதகமாகத் தீர்ப்பு வந்தது. அதன்பிறகு அனைவரும் நீர் எடுக்கலாம் என்னும் உரிமையைப் பெற்றுத் தந்தார். பூனாவைச் நேர்ந்த ஜாதவ் என்பவர் அனைவருக்கும் நீர் எடுக்கும் இயக்கத்தைத் தொடங்கி நடத்தி வந்தார். அதன்படி தாழ்த்தப்பட்ட பகுதிகளில் வசிப்பவர்களுக்காக, பலரின் எதிர்ப்புகளையும் மீறி தமது சொந்த நிதியில் பல்வேறு பொதுக்கிணறுகளை உருவாக்கித் தந்தார் இலட்சுமண ஐயர். இதனால் தமது சொத்துகளைப் பெருமளவில் இழக்க வேண்டியும் வந்தது.
1952 ல் கோபி நகர சபைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற இலட்சுமண ஐயர், கோபி நகரத்திற்காகப் பல்வேறு திட்டங்களைக் கொண்டு வந்தார். கோபி நகருக்குப் பவானி நதி நீரைக் கொண்டு வரும் திட்டத்தை முன்னெடுத்து அதை நிறைவேற்றியும் காட்டினார். இதற்காகத் தமது சொந்த நிலங்கள் பலவற்றை இந்தத் திட்டத்திற்கு அளித்தார். கோபி கூட்டுறவுச் சங்கம் போன்றவற்றை உருவாக்கித் தந்தார். அன்றைய காலங்களில் பள்ளிக்கூடங்களில் பிராமணர்களே ஆசிரியர்களாக இருந்தனர். பிராமணச் சமூக ஆசிரியர்கள் தாழ்த்தப்பட்ட சமூக மாணவர்களை வகுப்பறைக்கு வெளியே, அல்லது ஓரத்தில் அமரவைத்து பாடம் நடத்தினர். இதனை இலட்சுமண ஐயர் கடுமையாக எதிர்த்து அனைவரையும் ஒரே நிலையில் அமரவைத்தார். பெரும் தலைவராகத் திகழ்ந்த இலட்சுமண ஐயர் அவ்வாறு அமர வைக்கப்பட்ட பள்ளிகளில் தாமும் கீழேயே அமர்ந்து போராடினார். இதனால் வேறு வழியின்றித் தாழ்த்தப்பட்ட மக்களுக்குக் கல்வியும், அமர சம உரிமையும் கிடைக்கக் காரணமாகத் திகழ்ந்தவரின் வரலாறு இன்றைய இளைய தலைமுறையினர் மத்தியில் அறியப்படவில்லை. எனவே திருவாளர் இலட்சுமண ஐயர் அவர்களைப் பற்றி எல்லோரும் அறிய வேண்டியது அவசியம்.
இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலும் அன்றைய காலத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள், அனைவரின் இல்லங்களுக்கும் சென்று மனித மலத்தை அள்ளித் தூய்மை செய்யும் பணியில் குறைந்த ஊதியத்தில் வேறு வழியின்றி ஈடுபட்டு வந்தனர். இந்த அக்கிரமத்தை ஒழிக்க வேண்டும் என்று முனைப்புடன், நகராட்சித் தலைவராக இருந்த இலட்சுமண ஐயர் கோபி பகுதியில் இருக்கும் வீடுகளில் கழிவறைகளைக் கட்டிக் கொள்ள ஆறு மாதம் கெடு விதித்தார். அந்தப் பணிகளில் ஈடுபட்ட தோட்டிகளுக்குப் பிற பணிகளில் ஈடுபட ஆணையும் பிறப்பித்தார். இதற்குப் பலத்த எதிர்ப்புகள் இருந்தன. இருப்பினும் வேறு வழியின்றி நகரத்தில் பல வீடுகளில் கழிப்பறை கட்டுமானம் தொடங்கியது. பல ஆண்டுகள் நீடித்து வந்த மனித மலத்தை மனிதனே அள்ளும் அவலத்தை ஆறு மாதங்களில் இந்தியாவிலேயே முதன் முறையாகக் கோபி நகராட்சியில் மனித மலத்தை மனிதர் அள்ளுவதைத் தடை செய்தார். இதற்காக இந்திய அளவில் கொண்டாடப்பட்டார்.
கொங்கர்பாளையம் கிராமத்தில் சுமார் 250 ஏக்கர் அளவில் அனைத்து மக்களையும் ஒன்றிணைத்துக் கூட்டுப் பண்ணையம் திட்டத்தை வெற்றியுடன் செயல்படுத்திக் காட்டினார். அப்பகுதியை இன்றும் வினோபா நகர் என்றே அழைத்து வருகின்றனர். தமது இறுதிக்காலத்தில் இந்தப் பண்ணையம் சரியாக இயங்காமைக்கு அவர் மிகவும் மனம் வருந்தினார் என்பதும் இங்குப் பதிதல் வேண்டும். கோபி பகுதியில் நகராட்சி உயர்நிலைப் பள்ளி வருவதற்குக் காரணமானவர் இலட்சுமண ஐயர். 1986 ஆம் ஆண்டு இலட்சுமண ஐயர் மீண்டும் கோபி நகராட்சித் தலைவராகப் பதவி வகித்த போது உலர் கழிப்பிடங்களை நீரடிக் கழிப்பிடங்களாக மாற்றிப் பெரும் திட்டத்தைச் செயலாக்கினார். இதற்காக 1991 ஆம் ஆண்டு அவருக்கு இந்தியாவின் குடியரசுத் தலைவர் பதக்கம் வழங்கிக் கெளரவிக்கப்பட்டது.
அன்றைய காலம் முதல் இன்று வரை குடும்ப பாரம் என்பது பெண்களைச் சார்ந்தே இருக்கின்றது. அவர்களுக்கு உதவும் வகையில் கோபியில் முதன்முறையாகக் குழந்தைகள் காப்பகம் ஒன்றைத் தொடங்கி அதன் வாயிலாகக் குழந்தைகளைக் கவனித்துப் பெண்களை வேலைக்குச் செல்ல ஊக்குவித்தார். அந்தக் காப்பகத்தில் இருக்கும் குழந்தைகளுக்கு உணவு மற்றும் இன்னும் பிற தேவைகளைத் தாமே முன்னின்று கவனித்து உதவினார். தக்கர் பாபா கல்வி நிலையம், பால்வாடிகள் பலவற்றை உருவாக்கிக் கோபி நகரத்தைச் சுற்றி மக்களின் கல்விக்கு உதவினார்.
அவினாசிலிங்கச் செட்டியாருடன் கோபியைச் சுற்றியுள்ள கிராமங்களில் அனைத்து மக்களும் வேலை வாய்ப்புப் பெற வேண்டும் என்னும் நோக்கில் ரீவைண்டிங், வெல்டிங் போன்ற பணிகளை இளைஞர்களுக்குக் கற்றுத் தந்தார். கோபி பகுதிகளில் அனைவரும் கல்வியைக் கற்றிருக்க வேண்டும் என்னும் நோக்கில் கல்வி நிலையங்களைத் தொடங்கி நடத்தினார். தமிழ்நாட்டிலேயே பெரிய நகரங்களில் கூட ஐ.டி.ஐ வராமல் இருந்த காலத்தில் தமிழகத்திலேயே மூன்றாவது ஐ.டி.ஐ கோபியில் அமைவதற்குக் காரணமாகத் திகழ்ந்தவர் இலட்சுமண ஐயர்.
கோபி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் சாதி, இன பாகுபாடு பார்க்காமல் அனைவரும் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும் என்னும் முனைப்பில் ‘தற்குறி ஒழிப்பு இயக்கம்’ தொடங்கி, கிராமம், மலைவாழ் பதி என அனைத்து இடங்களிலும் நடத்தியவர். மாலை நேரங்களில் கிராமங்களுக்குச் சென்று அடிப்படைக் கற்றலைக் கற்பிக்கத் திட்டமும், செயல் ஊக்கமும் அளித்தார். இவரின் பணிகளைப் பின்பற்றியே பிற்காலங்களில் அரசாங்கம் ‘அறிவொளி இயக்கம்’ என்னும் பெயரில் நடத்தியது என்பதை அவசியம் இங்குப் பதிதல் வேண்டும்.
இலட்சுமண ஐயரின் வாழ்வு என்பது, தமது தந்தையார் சேகரித்து வைத்த 650 ஏக்கர் நிலங்களையும் இந்தச் சமூகச் செயல்பாடுகளுக்காக இழந்தவர். தமது பாரம்பரிய வீட்டையும் ஏலத்துக்கு வந்தபோது நண்பர்களின் உதவியால் பிறகு மீட்டெடுத்தவர். தம் வாழ்வின் கடைசிக் காலம் வரை மக்கள் நலனுக்காக வாழ்ந்தவர். காந்தியத்தை வாழ்வின் கடைசி நொடி வரை வாழ்வில் பின்பற்றியவர். பல்வேறு சிறப்புகள் பெற்ற பெரும் நிலக்கிழாராக வாழ்ந்திருக்க வேண்டியவர் தமது சமூகச் செயல்பாடுகளால் சொந்தச் சாதியினரால் சாதி விலக்கம் செய்யப்பட்டு, பெரும் சொத்துகளை இழந்தார். தாழ்த்தப்பட்ட மக்கள் பலர் பெற்ற கடன்களைத் தமது சொந்தப் பணத்தைக் கொண்டு கட்டி அந்த மக்களின் வாழ்வு தலைநிமிர உழைத்தவரை ஏன் ஓயாமாரி என்று அழைக்கிறோம் என்றால், மழை ஓயாமல் பெய்வது போல ஓயாமல் இந்த மக்களுக்கு உழைத்த இலட்சுமண ஐயரைப் போற்றும் வகையில் எழுத்தாளர், வழக்குரைஞர் ச. பாலமுருகன் எடுத்த ஓயாமாரி ஆவணப்படம் அனைவரும் பார்க்க வேண்டிய ஒன்று. முக்கியமாகக் கோபி நகர மக்கள் பார்க்க வேண்டிய ஆவணப்படம். இந்த ஆவணப்படத்தை எந்த எதிர்பார்ப்பும் இன்றி மக்களுக்குக் கொண்டு செல்ல முன்னின்ற எழுத்தாளர் ச. பாலமுருகன் போற்றப்படவேண்டியவர்.
இன்று கோபி நகரின் பெரும்பாலான இடங்கள் இலட்சுமண ஐயரால் நகராட்சிக்குத் தானமாக வழங்கப்பட்டதுதான். பொதுப்பணித்துறை, அரசுக் கட்டிடங்கள் எல்லாம் அமைந்திருக்கும் அந்த நிலங்கள் எல்லாம் ஒரு காலத்தில் இலட்சுமண ஐயரால் அளிக்கப்பட்டது என்பதைப் புதிய தலைமுறை அறிய வேண்டியது அவசியம்.
கோபி நகரப் பகுதிகளில் அதிகமான பொதுக் கிணறுகளை உருவாக்கி அனைத்து மக்களுக்கும் நீர் எடுக்கும் உரிமையைப் பெற்றுத் தந்த, பவானி நதி நீர் கோபி நகரத்திற்கு வருவதற்குக் காரணமான, மனித மலத்தை அள்ளுவதைத் தடை செய்து மனிதர்களைக் காத்த, பள்ளிகளில் சம கல்வியும், சம உரிமையும் கிடைக்கப் போராடிய, பொதுச் சேவைக்காகத் தமது சொத்துகளை எல்லாம் இழந்த கோபி இலட்சுமண ஐயர் கோபி நகரில் 2011 ஆம் ஆண்டில் மறைந்தபோது கோபி நகர மற்றும் கிராம மக்கள் திரண்டு மரியாதை செலுத்தினர்.
கோபி நகரின் தந்தை திருமிகு.இலட்சுமண ஐயரின் நூற்றாண்டு விழாவை எப்படிக் கொண்டாடி இருக்க வேண்டும். 2018 ஆம் ஆண்டு அவரின் நூற்றாண்டில் அவரைப் போற்றினோமா என்றால் இல்லை என்பதே பதில். கோபி நகர மக்கள் ஆண்டுதோறும் அவரின் செயல்களை இன்றைய தலைமுறைக்கு எடுத்துச் சொல்லுதல் வேண்டும். அவரால் தொடங்கப்பட்ட கல்வி நிலையங்களின் செயல்பாட்டுக்கு மக்கள் உதவ வேண்டும். கோபி நகரில் புகழ்பெற்று விளங்கும் கல்வி நிலையங்கள் பாடத்திட்டத்திற்கு அப்பாற்பட்டு அவரின் வாழ்வியலைக் கற்பிக்க வேண்டும். கோபியில் அனைத்து அரசியல் இயக்கங்களும் இந்தப் பொது மனிதரின் பிறந்தநாளில் ஒன்றிணைந்து ஊருக்கு உழைத்திட வேண்டும். அரசியல் கட்சிகளும், பொது மக்களும், கல்வி நிலையங்களும் திட்டமிடுதல் வேண்டும். கோபி நகரின் தந்தையை மண்ணின் மைந்தரைக் கொண்டாடுதல் வேண்டும். மண்ணின் மகத்தான மனிதர்களை மறக்காமல் போற்றுவோம்.
0
மிக அருமையான பதிவு,
முனைவர் சங்கர் அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்,
மிக நன்று
காந்தியடிகள் ஏற்படுத்திய தாக்கத்தால் ஒரு நகரத்து மக்களின் வாழ்வின் மேம்பாட்டை முன்னெடுத்துச் சென்ற இவர் போன்றோரின் செயல்பாடுகள் என்றென்றும் பின்பற்றப்பட வேண்டிய அவசியம் இன்றைய தலை முறைக்கு உள்ளது. உருவாகி வருவார்கள் என்பது நிச்சயம்