Skip to content
Home » மண்ணின் மைந்தர்கள் #17 – சமூக மாற்றத்தின் சாதனைச் சிற்பி: மருத்துவர் முத்துலட்சுமி அம்மையார்

மண்ணின் மைந்தர்கள் #17 – சமூக மாற்றத்தின் சாதனைச் சிற்பி: மருத்துவர் முத்துலட்சுமி அம்மையார்

பெண்களின் முன்னேற்றமே சமூக முன்னேற்றம் என்பதற்கு அடையாளமாகி இந்தியாவின் முதல் பெண் மருத்துவராக, இந்தியாவின் முதல் சட்டமன்ற பெண் உறுப்பினராக, சமூக சேவகராக, விடுதலைப் போராட்ட வீராங்கனையாக, பெண்களின் உரிமைகளை ஓரளவு மீட்டவராகப் பல தளங்களில் பயணித்தவர் மண்ணின் மைந்தர் மருத்துவர் முத்துலட்சுமி அம்மையார்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் திருகோகர்ணம் என்னும் ஊரில் 1886ஆம் ஆண்டு நாராயணசாமி – சந்திரம்மாள் தம்பதியினருக்கு மகளாகப் பிறந்தவர் முத்துலட்சுமி. திண்ணைப் பள்ளிக்கூடத்தில் ஆரம்பக் கல்வியைத் தொடங்கிய முத்துலட்சுமி தனது தந்தையாரின் ஊக்கத்தால் பள்ளிக் கல்வியை நிறைவு செய்தார். அடுப்பூதும் பெண்களுக்குப் படிப்பு எதற்கு? என்னும் சித்தாந்தம் ஆழமாக மக்கள் மனதில் இருந்த காலத்தில் மேல் படிப்பை மேலும் தொடர தமது பெற்றோர் முழு ஒத்துழைப்பு நல்கிய வேளையில், 1904ஆம் ஆண்டு புதுக்கோட்டை மன்னர் கல்லூரியில் சேர விண்ணப்பித்தார். அந்த விண்ணப்பமே மிகப்பெரிய பேசுபொருளாக மாறி, பலரும் பெண் கல்வியை எதிர்த்தனர். புதுக்கோட்டை அரசர் மார்த்தாண்ட பைரவத் தொண்டைமான் பலரின் எதிர்ப்புகளையும் மீறி தமது கல்லூரியில் முத்துலட்சுமி கல்வி பயில அனுமதி வழங்கினார். அன்றைய காலத்தில் கல்விச் சாலையில் கல்வி பயின்ற முதல் பெண் முத்துலட்சுமி என்பது இங்குப் பதியப்படவேண்டியதாகும்.

முத்துலட்சுமியின் தாயார் சந்திரம்மாள் தேவதாசி குலத்தைச் சார்ந்தவர். தனது மகளுக்கு உரிய முறையில் கல்வியை அளித்துவிட்டால் தனக்குப் பிறகு தனது மகள் தேவதாசி ஆகாமல் காப்பாற்றலாம் என்னும் நோக்கில் பலரின் எதிர்ப்புகளையும் மீறி மகளைப் பல நிலைகளில் கல்வி பயில ஊக்கமளித்தார்.

புதுக்கோட்டை அரசர் கல்லூரியில் முதன்முதலாக வகுப்பறையில் பெண் கல்வி கற்பிக்க அனுமதிக்கப்பட்டார். ஒரு வகுப்பறையை இரு பாதியாகப் பிரித்து மாணவர்கள் முத்துலட்சுமியைப் பார்க்காத வண்ணம் வகுப்பறை மாற்றி அமைக்கப்பட்டது. கல்லூரியில் கல்வி பயிலும் காலத்தில் பலரின் ஏச்சுக்கும், பேச்சுக்கும் ஆளானாலும் எந்தவித மனக்கவலையும் அடையாமல் கல்வி பயின்ற முத்துலட்சுமி கல்லூரி இறுதிநிலைத் தேர்வில் முதல் மாணவியாகத் தேர்ச்சி பெற்றபோது கல்வியால் தலைநிமிர்ந்து மறைத்து வைக்கப்பட்ட வகுப்பறையின் அடையாளமாகப் போற்றப்பட்டார்.

தனது தாயார் சந்திரம்மாள் உடல் நலமின்றி இருந்தபோது அருகில் இருந்து கவனித்துக் கொண்டார் முத்துலட்சுமி . மருத்துவச் சிகிச்சைக்குப் பலனில்லாமல் நோயால் தாக்கப்பட்டு அவதியுற்று வந்தார் அவரின் தாயார். இறுதியாக வான் ஆலன் என்னும் அமெரிக்க மருத்துவர் அளித்த மருந்தால் சந்திரம்மாள் உயிர் பிழைத்தார். தான் மருத்துவராக இருந்தால் இன்னும் கூடுதலாக அம்மாவுக்குச் சிகிச்சை அளிக்கலாமே என்று எண்ணிய முத்துலட்சுமி, வான் ஆலன் ஆலோசனையின் வண்ணம் சென்னை மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் படிக்க முனைந்தார். சென்னை மருத்துவக் கல்லூரி வரலாற்றிலேயே மருத்துவம் படிக்கச் சேர்த்துக் கொள்ளப்பட்ட முதல் பெண்மணி முத்துலட்சுமி அம்மையார் என்பதும் இங்குக் குறிப்பிட வேண்டியதாகும்.

சென்னை மருத்துவக் கல்லூரியிலும் பிரிவினை மற்றும் பேத அடிப்படையிலேயே கல்வி வழங்கப்பட்டது. அதிலும் சென்னை மருத்துவக் கல்லூரியில் கர்னல் ஜிப்போர்டு என்ற பேராசிரியர், முத்துலட்சுமியை வகுப்பறையில் அமர வைக்காமலேயே பாடம் நடத்தினார் என்பதும், பின்னர் நடந்த தேர்வுகளில் தமது திறமையால் முதல் மதிப்பெண் பெற்று அந்தப் பேராசிரியருக்குத் தமது திறமையால் முத்துலட்சுமி பதில் அளித்தார். அதன் பின்னர் வகுப்பறைகளில் அமர்ந்து பாடம் கேட்க அனுமதியும் பெற்றார். சென்னை மருத்துவக்கல்லூரியில் முத்துலட்சுமி இந்தியாவின் முதல் மருத்துவராகப் பட்டம் பெற்றபோது கர்னல் ஜிப்போர்டு எழுந்து நின்று முத்துலட்சுமியைப் பாராட்டினார் என்பதும் இங்குப் பதியப்படவேண்டியதாகும்.

பெண் என்ற பிறப்பாலேயே பல்வேறு தடைகளையும் தாண்டி பெரும் உயரங்களை அடைந்த முத்துலட்சுமி, சென்னை எழும்பூர் மருத்துவமனையில் முதல் பெண் மருத்துவராகப் பணியில் சேர்ந்தார். அடித்தட்டு மக்களுக்கு அவர்களின் இருப்பிடத்திற்கே சென்று மருத்துவம் பார்த்தார். பலரின் நோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து உரிய முறையில் காப்பாற்றினார். மக்கள் பலரும் அவரைப் போற்றினர்.

1925ஆம் ஆண்டு சென்னை மாகாண சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு பின்னர் போட்டியின்றிச் சட்டசபையின் துணைத்தலைவராகப் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தியாவில் முதன்முதலாகச் சட்டமன்றத்தில் ஒரு பெண் தேர்ந்தெடுக்கப்பட்டது தமிழ்நாட்டில்தான். அந்தப் பதவியை வகித்த முதல் பெண் மருத்துவர் முத்துலட்சுமி அம்மையார்தான். இவரின் பதவிக்காலத்தில் பலரது எதிர்ப்புகளையும் மீறி தேவதாசி முறை ஒழிப்பு, இருதாரத் தடைச்சட்டம், பெண்களுக்கும் சொத்துரிமை, சிறுமியர் திருமணத் தடைச்சட்டம் ஆகியவற்றைக் கொண்டு வரப் பாடுபட்டார். முத்துலட்சுமி அம்மையாரின் பெரும் முயற்சியால் குழந்தைகளுக்குத் தனி மருத்துவமனையும், மகப்பேறு மருத்துவமனையும் தொடங்கப்பட்டன. பள்ளிகளில் மருத்துவக் கண்காணிப்புக்கும் ஏற்பாடுகள் செய்தார். இவரது பதவிக் காலத்தில் குழந்தை மணத் தடுப்பும், திருக்கோயில்களில் தேவதாசி முறை ஒழிப்புக்கும் மிகச் சீரிய முயற்சிகள் எடுத்தார்.

1927ஆம் சென்னை மாகாண சட்ட மேலவையில் தேவதாசி ஒழிப்புமுறை சட்டத்திருத்தம் கொண்டு வந்து பல சான்றுகளுடன் உரை நிகழ்த்தி, பெண்கள் படும் துயர் குறித்து எடுத்துரைத்தார். இருப்பினும் சட்ட மேலவையில் இருந்த பழமை விரும்பிகள் இந்தச் சட்டத்திருத்தத்தை எதிர்த்தனர். பலரின் எதிர்ப்புகளுக்கும் மத்தியில், முத்துலட்சுமி அம்மையார் கொண்டு வந்த இந்தச் சட்டம் வெற்றி பெற்றது. இதனால் பல திருக்கோயில்களில் தேவதாசிகளாக இருந்த பல ஆயிரக்கணக்கான பெண்கள் மீட்கப்பட்டனர். அவர்களுக்கு அடைக்கலம் கொடுக்கும் பொருட்டு அவ்வை இல்லம் என்னும் பெயரில் ஓர் இல்லத்தைத் தொடங்கினார். இதனால் பல ஆயிரக்கணக்கான பெண்களின் வாழ்வில் மறுமலர்ச்சியை உருவாக்கினார் மருத்துவர் முத்துலட்சுமி.

பல நூற்றாண்டுகளாக நிலவி வந்த பெண்ணடிமை முறையை ஒழித்துச் சட்டமாக்கிய மருத்துவர் முத்துலட்சுமி அன்றைய சென்னை மாகாணத்தில் பலரும் வியந்த மிகப்பெரிய பெண் ஆளுமையாகத் திகழ்ந்தார்.

1926 மற்றும், 1933ஆம் ஆண்டுகளில் அமெரிக்காவில் நடைபெற்ற சர்வதேசப் பெண்கள் மாநாட்டில் இந்தியாவின் சார்பாகக் கலந்து கொண்டு மிகச் சிறந்த உரையை நிகழ்த்தினார். மேலை நாட்டுப் பெண்கள் போல கீழை நாட்டுப் பெண்களும் கல்வி, சுகாதாரம் போன்றவற்றில் சிறந்து விளங்க தாம் பாடுபடப் போவதாகவும் அறிவித்தார். அதனையொட்டி ஆங்கிலேய அரசினரின் ஆதரவைப் பெற்று பல்வேறு நலத்திட்டங்களைச் செயல்படுத்தலானார்.

தமது தங்கை சுந்தராம்பாள் புற்றுநோய் காரணமாகச் சிகிச்சைப் பலனின்றி இறந்துவிட, பலரும் இதே நிலையில் இருப்பதை எண்ணி புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சை அளிக்க வேண்டும் என முடிவு செய்து, அரசினரின் உதவியால் வெளிநாடு சென்று மேற்சிகிச்சைகள் குறித்துக் கற்றார்.

சுதந்திரப் போராட்டத்திற்காகச் சென்னை வந்த மகாத்மா காந்தியடிகளை வரவேற்று பெரும் தொகையையும் திரட்டிக் கொடுத்தார். அண்ணல் காந்தியடிகள் வேண்டுகோளுக்கிணங்க சுதந்திரப் போராட்டத்திலும் ஈடுபட்டு மக்களை ஒன்று திரட்டிப் போராடலானார்.

இதனால் ஆங்கிலேய அரசின் கடுமையான அடக்குமுறைக்கு ஆளானாலும் தொடர்ந்து நாட்டு விடுதலைக்கும் பெண் உரிமைக்கும் குரல் கொடுத்தார்.

1952ஆம் ஆண்டு மருத்துவர் முத்துலட்சுமி அம்மையாரின் பெரும் முயற்சியாலும், புண்ணியக்கோடி முதலியார் கொடுத்த இடத்தின் உதவியாலும் மிகப்பெரிய அளவில் புற்றுநோய் ஆராய்ச்சி மற்றும் மருத்துவமனையைச் சுதந்திர இந்தியாவின் முதல் பிரதம அமைச்சர் ஜவஹர்லால்நேரு அவர்கள் தொடங்கி வைத்தார். முத்துலட்சுமி அம்மையாரால் தொடங்கப்பட்ட புற்றுநோய் மருத்துவமனையின் மூலம் இதுவரை சுமார் ஒரு லட்சம் பேர் குணமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமது வாழ்நாள் முழுதும் சமூக, சமுதாய, பெண் விடுதலைக்குக் குரல் கொடுத்து மிகச் சிறந்த பண்பாளராகப் போற்றப்பட்ட மருத்துவர் முத்துலட்சுமி அம்மையாரின் பணிகளைச் சிறப்பிக்கும் வண்ணம் இந்திய அரசு 1956ஆம் ஆண்டு பத்மபூஷன் விருது வழங்கிச் சிறப்பித்தது.

ஆயிரக்கணக்கான பெண்களின் அடையாளமாகவும், பலராலும் அம்மா என்றும் அழைக்கப்பட்டுக் கொண்டாடப்பட்ட மருத்துவர் முத்துலட்சுமி அம்மையார் 1968ஆம் ஆண்டு ஜூலை மாதம் 22ஆம் நாள் இயற்கை எய்தினார்.

இந்தியாவின் முதல் பெண் மருத்துவராக, இந்தியாவின் முதல் சட்டமன்றப் பெண் உறுப்பினராகப் பல்வேறு சிறப்புகளைப் பெற்ற மருத்துவர் முத்துலட்சுமி அம்மையாரின் பெயரில் பல்வேறு நலத்திட்டங்கள் அரசுகளால் கொண்டுவரப்பட்டு மக்களுக்கு அளிக்கப்பட்டும் வருகின்றது.

நூற்றாண்டுகள் கடந்தாலும் முத்துலட்சுமி அம்மையாரின் பெரும் பணி, காலத்திற்கும் நிலைத்து நிற்கும். பெண் கல்விக்கான விதையாகத் திகழ்ந்த பெண் ஆளுமை மருத்துவர் முத்துலட்சுமி அம்மையாரையும், அவரின் சிறப்புகளையும் அறிந்து வணங்குவோம்.

பகிர:
பொ. சங்கர்

பொ. சங்கர்

கட்டுரையாளர், எழுத்தாளர். தவத்திரு சச்சிதானந்த சுவாமிகள், வேதாத்திரி மகரிசி ஆகியோரின் வாழ்வியல் சிந்தனைகளை ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவர். தொல்லியல் சான்றுகள் தேடி விரிவான பயணங்கள் மேற்கொண்டவர். கோயமுத்தூர் யுவபாரதி மையப்பள்ளியில் தமிழாசிரியராகப் பணிபுரிகிறார். தொடர்புக்கு - tamilshanker@gmail.comView Author posts

3 thoughts on “மண்ணின் மைந்தர்கள் #17 – சமூக மாற்றத்தின் சாதனைச் சிற்பி: மருத்துவர் முத்துலட்சுமி அம்மையார்”

  1. 👏👏👏வாழ்த்த வார்த்தை இல்லை அருமையான பதிவுங்க ஐயா வாழ்த்துகள்💐💐
    Dr. முத்துலட்சுமி அம்மையார் பற்றி முழுவதும் தெரிந்து கொண்டேன் 🙏💐💐

  2. Sir, i knew few about Dr Muthlakshmi but once i read your article about Dr. Muthlakshmi i have got many information about Dr. Muthlakshmi.
    Thanks for sharing this.
    Please continue the same about other leading personalities…
    All the best sir.

  3. Sivakumari Avudaiappan

    அன்பு மகனே ! மிகவும் அருமை. தொய்வில்லாமல் தொடரட்டும் தங்களின் அரும்பணி.
    உங்கள் மாணவச் செல்வங்கள் இடமும் முடிந்த போதெல்லாம் அரும்பணி ஆற்றிய நமது முன்னோர்கள் பற்றி எடுத்துச் சொல்லுங்கள்.
    தடம் மாறாமல் தடம் பதிக்க நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துக்கள் அன்பு மகனே!

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *