‘வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ் கூறும் நல்லுலகம்’ என்று தொல்காப்பியம் தமிழ் கூறும் நல்லுலகத்தின் எல்லையைத் தொல்காப்பியம் சுட்டிக் காட்டியது. ஆனால் கால மாற்றத்தில் வட வேங்கடம் ஆந்திர மாநில அடையாளம் ஆகியமையால் தமிழ் நிலங்கள் பலவற்றையும் இழந்தோம். இதன்பின்னர் வடதணிகைத் தென்குமரி எனத் தமிழ் எல்லை சுருங்கி ஒரு கட்டத்தில் திருத்தணியையும் தமிழ் நிலம் இழக்க வேண்டிய நிலையில் இருந்த போது, இருப்பதைக் காப்போம் இழந்ததை மீட்போம் என்னும் முழக்கத்துடன் வீறுகொண்டு போராடி எல்லையை மீட்க விதையாக வாழ்ந்தவர் மங்கலங்கிழார். எல்லைகளை மீட்க விதையாகத் தொடங்கி விருட்சமாக மாறிய மங்கலங்கிழார் வாழ்வியல் வரலாற்றுப் பயணம் தமிழக வரலாற்றோடும், தமிழ் மண்ணோடும் இணைத்தே கற்பிக்க வேண்டிய நிலையில் இந்தப் பதிவு அவசியமாகின்றது. அதுமட்டுமின்றி தமிழ்நாடு நாளில் ஏன் இவர் புறக்கணிக்கப்படுகிறார் என்ற கேள்வியோடு இவரை அறிவோம்.
உடையில் எளிமை, உள்ளத்தில் வலிமை, நாக்கில் தமிழ்ப் புலமை, வாக்கில் உண்மை, வாழ்வில் சீர்மை என வாழ்ந்த மங்கலங்கிழார் வேலூர் மாவட்டம் புளியமங்கலம் என்னும் கிராமத்தில் ஐயாசாமி – பொன்னுரங்கம் தம்பதியினருக்கு நன்மகவாக 1895 ஆம் பிறந்தார். பெற்றோர் இவருக்கு குப்புசாமி எனப் பெயர் சூட்டினர். புளியமங்கலத்தில் தொடக்கக் கல்வியும், சென்னை பச்சையப்பன் உயர்நிலைக் கல்வியும் கற்றார். குடும்பச் சூழ்நிலை காரணமாகக் கல்வியைக் கைவிடவேண்டிய நிலை ஏற்பட்டது. தச்சுத்தொழில் செய்து கொண்டே சேஷாசலம் ஐயர் என்பவரிடம் இரவுப் பள்ளியில் தமிழை ஆழ்ந்து கற்கத் தொடங்கினார் மங்கலங்கிழார். தமிழ் மொழி மேம்பாட்டிற்காக ஐயர் நடத்தி வந்த கலா நிலையம் என்னும் இலக்கிய ஏட்டின் பொறுப்பையும் ஏற்று நடத்தி வந்தார். கலா நிலையம் இலக்கிய ஏடு தொடர்ந்து வெளிவரப் பொருளாதார உதவிகள் தேவைப்பட்டமையால் தமிழ்நாடு முழுவதும் பயணம் செய்து கலா நிலையம் பெயரிலேயே விழிப்புணர்வு நாடகங்களை நடத்தினார். மிகச்சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி பலரின் பாராட்டையும் பெற்றார். தமது இருபத்தைந்தாம் வயதில் கமலாம்மாள் என்பவரைத் திருமணம் செய்து மீண்டும் தம்மைச் சமூகப் பணி மற்றும் தமிழ்ப்பணிகளில் ஒப்படைத்துக்கொண்டார். ‘இலக்கணப்புலி’ என்று அழைக்கப்பட்ட கா.ரா. கோவிந்தசாமி முதலியாரிடம் சேர்ந்து தொல்காப்பியம், நன்னூல் மற்றும் இன்னும் பிற தமிழ் நூல்களையும் கற்றுத் தேர்ந்தார்.
மங்கலங்கிழாரின் புலமையைக் கண்டு கலவல கண்ணன் உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியர் பணிவாய்ப்புக் கிடைத்தது. தமது தந்தையாரின் ஊர்மணியம் பதவியையும் ஏற்று நடத்தி வந்தார். புளிய மங்கலம் கிராமத்திற்குத் தலைவர் பொறுப்பை ஏற்றுத் திறம்பட நடத்தியமையால் ஊர் மக்கள் இவரை ‘மங்கலங்கிழார்’ என்று அன்புடன் அழைக்க நாளடைவில் அப்பெயரே இவரது பொதுப்பெயராக நிலைத்துப் பின்னர் வரலாற்றிலும் நிலைத்தது.
மக்களுக்குக் கல்வி புகட்டுவதே நல்லறம் என்று கருதினார் மங்கலங்கிழார். அதன்பொருட்டு அறநெறித் தமிழ்ச் சங்கம் என்னும் அமைப்பை உருவாக்கி அதன்வாயிலாக எந்தவிதமானப் பலனும் எதிர்பாராமல் நற்கல்வி வழங்கினார். 1939 ல் ஆரம்பிக்கப்பட்ட அறநெறிக்கழகம் மக்களிடத்தில் பெரும் மாற்றத்தைக் கொண்டு வந்து சுற்றியிருக்கும் பல கிராமங்களிலும் அதன் கிளையைப் பரப்பித் தமிழ்ப் பணியை ஆற்றி வந்துது. மங்கலங்கிழார் முயற்சியால் நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு ஆரம்ப வகுப்பு, ஒளவை வகுப்பு, சிற்றிலக்கிய வகுப்பு, பேரிலக்கிய வகுப்பு என வகுப்புகள் நடத்தப்பட்டு பலருக்கும் கல்வி அளிக்கும் அரும் பணியை மங்கலங்கிழார் ஆற்றி வந்தார். தமது சொந்த நிதியில் இருந்து ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்கித் தமிழ்ப்பணி தடையில்லாமல் நடந்தேற உறுதுணையாக இருந்தார். அறநெறிக் கழகம் மூலம் கல்வி பெற்ற மாணவர்கள் தமது ஊர்களில் மாணவர் மாநாடு நடத்தித் தமிழ்க்கல்வியின் பெருமையை மக்களுக்குக் கொண்டு சேர்க்கச் செய்தார்.
தமிழ்மொழி சிறக்கக் காலந்தோறும் பாடுபட்ட சமயச் சான்றோர்களான மாணிக்கவாசகர், திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சேக்கிழார் ஆகியோருக்குத் திருநாள் என்னும் பெயரில் விழாக்கள் எடுத்து மக்களிடையே தமிழ் மொழியின் சிறப்பைக் கொண்டு சேர்த்தார். தெலுங்கு பேசும் மாவட்டமாக மாற்றப்பட்ட சித்தூர் திருத்தணிகை முதலான ஊர்களில் மங்கலங்கிழாரின் தொடர் முயற்சியால் தமிழுணர்வு மேலோங்கி வந்தது. மங்கலங்கிழாரின் அரும்பணிகள் காரணமாகப் பல நூறு தமிழ் ஆசிரியர்கள் உருவாகினர். மங்கலங்கிழாரின் முயற்சியால் திருத்தணிகையில் தமிழ் வளர்ச்சிக் கழகம், தமிழாசிரியர் பயிற்சிப்பள்ளி ஆகியன உருவாக்கப்பட்டன. தமிழ் மொழியைக் கற்பிப்பதைத் தம் பெரும் பணியாகக் கருதி கற்றுத் தந்த மங்கலங்கிழார், தமிழ் மண்ணையும் மீட்கத் தமது அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டார்.
திருத்தணி முருகன் கோயிலில் அமைந்துள்ள 365 படிகளையும் வணங்குதல் என்னும் மரபை உருவாக்கி இன்றும் திருத்தணி திருக்கோயிலில் படி பூசைத் திருவிழா சிறப்புடன் கொண்டாடும் மரபு இடையில் நின்று போனபோது, மங்கலங்கிழார் அதனை மீண்டும் மக்கள் வெகு சிறப்பாகக் கொண்டாடும் திருவிழாவாக மாற்றி தமிழ் மக்களின் மரபு சார்ந்த நிகழ்வுகளை மக்களை ஒன்றுதிரட்டிக் கொண்டாட வைத்தார். 1917ல் தொடங்கி இடையில் நின்று போன படி பூசை நிகழ்வைத் தொடர்ந்து நடத்திட உறுதுணையாக நின்று களம் நின்ற போராளியாக வாழ்ந்தவர் மங்கலங்கிழார்.
ஆங்கிலேய அரசாங்கம் நிர்வாக வசதிக்காக 1911 ஆம் ஆண்டு தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வசிக்கும் திருத்தணிகை, காளத்தி, பலமனேரி ஆகிய ஊர்களைப் பிரித்து சித்தூர் மாவட்டத்தை உருவாக்கியது. காலப்போக்கில் தமிழ் மக்களும் தெலுங்கு பேசும் மக்களாக மாறி வந்தனர். தமிழ் நிலமும், கலாச்சாரமும் மாறி வருவதைக் கண்டு குமுறிய மங்கலங்கிழார் இந்நிலங்களைத் தமிழ் நிலத்தோடு இணைக்க முயற்சிகள் மேற்கொண்டார். சித்தூர், திருத்தணிகை ஊர்களில் வசித்த மக்களிடையே சென்று முன்னோர்களின் பெருமையை எடுத்துக்கூறி, அவர்களின் தாய்மொழி தமிழ் என்பதை எடுத்துரைத்தார். பெரும்பான்மையாக வசித்த தமிழ்மக்கள் கால மாற்றத்தில் சிறுபான்மை மக்களாக மாற்றப்பட்டதை மாற்றி தமிழர் விழாக்களையும், தமிழ் மரபு சார்ந்த நிகழ்வுகளையும் நடத்தி மக்களிடம் தமிழ் உணர்வை மங்கலங்கிழார் உருவாக்கினார்.
சித்தூர் மாவட்டத்தின் தோற்றத்திற்கு முன்பு, தமிழ் மக்கள் வசித்த மற்றும் இலக்கணச் சான்றுகளைத் திரட்டி தமிழ்மண் எல்லை மீட்புப் போராட்டத்தைத் தொடங்கினார். 1947 ல் வடக்கெல்லை உரிமைப் போராட்டத்தை முன்னின்று நடத்திப் பல ஆயிரக்கணக்கான மக்களைப் போராட்டத்தில் ஈடுபட வைத்தார். மங்கலங்கிழாரின் தொடர் முயற்சியால் ஒரு தலைமுறையாக மாறிப்போன தமிழ் மக்கள் மீண்டும் தமிழ் மண்ணோடு இணைய ஆர்வமுடன் போராட்டத்தில் பங்கெடுத்தனர். ஆந்திர மாநில அடையாளமாகக் கருதப்பட்ட பிரகாசம் என்பவர் ‘சென்னை ஆந்திரத்திற்கே’ என்னும் முழக்கத்தை முன்வைத்தார். 1949 ல் சென்னையில் தமிழர் மாநாடு நடத்தப்பட்டபோது அம்மாநாட்டில் மங்கலங்கிழார் கலந்துகொண்டு ‘சென்னை நம் அன்னை’ என்னும் முழக்கத்தை உருவாக்கினார். மங்கலங்கிழார் உருவாக்கிய போராட்டம் வடக்கெல்லைப் போராட்டமாக மாறியது.
தமிழ்நாட்டின் வடக்கு என்னும் பெயரில் ஒரு நூலை உருவாக்கித் தமிழ்நாட்டின் எல்லைகளை விரிவாகக் குறிப்பிட்டு தமிழ் இலக்கண இலக்கியங்களில் தமிழ்கூறும் எல்லைகளை எடுத்துரைத்து மக்களிடம் தமிழ் மண் உரிமையை எடுத்துரைத்தார். திருப்பதி வரை தமிழ் எல்லை என்று பல்வேறு ஆதாரங்களுடன் மங்கலங்கிழார் வெளியிட்ட நூல் வடக்கெல்லைப் போராட்டத்திற்கு மேலும் வலு சேர்த்தது.
தமிழகத்தின் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தெலுங்கு பேசும் மாணவர்களுக்குத் தனி விடுதி வசதியும், தனி உணவுக்கூட வசதியும் செய்துதரப்பட்டதை எதிர்த்தார். ஆந்திரப் பல்கலைக்கழகத்தில் அதுபோல தமிழ் மொழி பேசும் மாணவர்களுக்கும் இவ்வாறு வசதிகள் செய்துதரப்பட வேண்டும் என்னும் கோரிக்கையுடன் முழக்கத்தை ஏற்படுத்தினார். மங்கலங்கிழாரின் கோரிக்கையை ஏற்ற அண்ணாமலைப் பல்கலைக்கழகம் பொதுவான உணவுக்கூடம் மட்டுமே செயல்படும் என்று விதியை மாற்றி மங்கலங்கிழாரின் கோரிக்கைக்கு மரியாதை அளித்தது.
தமிழ்மண்ணை மீட்க வேண்டும் என்னும் முயற்சியில் தளராது போராடி வந்த மங்கலங்கிழாருக்கு ஜவஹர்லால் நேருவின் அறிக்கை பெரும் துயரத்தை ஏற்படுத்தியது. 1952 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இறுதியில் இந்திய அரசு சார்பில் ஜவஹர்லால் நேரு, ஆந்திர மாநிலம் தனி மாநிலமாகப் பிரிக்கப்படும் என்றும் சித்தூர் ஆந்திரத்தின் ஒரு பகுதி என்றும் அறிவித்தார். இதை எதிர்த்து வடக்கெல்லைப் பாதுகாப்புக் குழு ஒன்று மங்கலங்கிழார், ம.பொ.சி. ஆகியோரின் தலைமையில் அறிவிக்கப்பட்டது.
தமிழகத்தின் வடக்கெல்லைப் போராட்டம் தீவிரமாக மக்கள் இயக்கமாக மாறி வந்தது. இந்தப் போராட்டத்திற்குத் தமிழகத்தின் தந்தை பெரியார் உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் கூட ஆதரவு தெரிவிக்கவில்லை என்பதைத் தமது நண்பர்களிடம் வருத்தத்துடன் கூறி உள்ளார் என்பதும் இங்குப் பதிதல் அவசியம்.
தடையை மீறி மண் காக்கும் போராட்டத்தில் மங்கலங்கிழார் தீவிரமாக ஈடுபட்டதால் அரசு அவரைக் கைது செய்து திருப்பதி சிறையில் அடைத்தது. சிறையில் இருந்து வெளியில் வந்து மீண்டும் மண் காக்கும் போராட்டத்தில் அதி முனைப்புடன் ஈடுபட்டார். பல்வேறு தலைவர்களை ஒன்றிணைத்து இந்திய அரசின் பிரதம அமைச்சரைச் சந்திப்பது என முடிவாகியது. இந்திய அரசு எந்தவிதமான உத்தரவாதமும் அளிக்காததால் மீண்டும் போராட்டம் தீவிரமாகிய வேளையில் உடல்நலம் குன்றி 1953 ஆகஸ்ட் 31 ஆம் நாள் மரணமடைய நேரிட்டது. தமிழ் மண் காக்கும் போராட்டம் மங்கலங்கிழாரின் இறப்பால் மேலும் தீவிரமாகியது. ம.பொ.சி வடக்கெல்லைப் போராட்டத்தை மேலும் தீவிரமாக்கி 1960 களில் திருத்தணியை சித்தூர் மாவட்டத்தில் இருந்து பிரித்து தமிழ்மண்ணோடு இணைத்தார். ‘திருத்தணியை மீட்பதற்கு எங்களுக்கு உறுதுணையாகவும் வழிகாட்டியாகவும் திகழ்ந்தவர் மங்கலங்கிழாரே’ என ம.பொ.சி வெற்றிக்கூட்டத்தில் உறுதிபடக் கூறினார்.
பொதட்டூரில் தமிழாசிரியர் பயிற்சிக் கட்டடம் உருவாக்கி தமிழுக்காகவும் தமிழ் மண்ணுக்காகவும் போராடிய இறுதி நாட்களில் தமது வாழ்வை முடித்துக்கொண்ட மங்கலங்கிழாரின் வாழ்க்கைப் பயணம் தமிழ் மொழி, தமிழ் மண், தமிழ் முழக்கம் என்னும் அடிப்படையிலேயே அமைத்துக் கொண்டார்.
‘தமிழ்நாடும் வடவெல்லையும்’, ‘வடக்கெல்லை’, ‘தவளமலைச் சுரங்கம்’, ‘சகலகலாவல்லிமாலை விளக்க உரை’, ‘இலக்கண வினா விடை’ என்று பல நூல்களையும், தனிக்கட்டுரைகளையும் எழுதித் தமிழ் மொழிக்கும் பல்வேறு சிறப்புகளை ஆற்றிய மங்கலங்கிழார் பணிகளை அவரது வாரிசுகள் இன்றளவும் தொடர்வது சிறப்புக்குரியது.
தமிழ்நாட்டின் எல்லைகள் பறிபோவதைத் தடுத்து தமிழகம் முழுவதும் விழிப்புணர்வை ஏற்படுத்திய மங்கலங்கிழாருக்கு தனியார் அமைப்புகளும், திருத்தணிகை மக்களும் அவ்வப்போது விழா எடுத்து வருகின்றனர். தம் வாழ்வின் இறுதி வரை மண்ணுக்கும், மொழிக்கும் போராடிய மங்கலங்கிழாருக்கு அரசு சார்பில் உரிய மரியாதைகள் அளிக்கப்பட்டனவா? என்னும் கேள்விக்குப் பதில் இதுவரை மெளனமாகவே இருக்கின்றது.
தமிழ் மண் மீட்கப்பட்டு அறுபது ஆண்டுகளுக்கு மேலாக ஆன போதிலும் எல்லைப் போராட்டம் பற்றி இன்றைய தலைமுறைக்கு எந்தவிதமான தரவுகளும் தெரியாதவாறு நமது பாடத்திட்டங்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. அக்பர், குப்தர் பற்றியெல்லாம் தமிழகப்பாடத்திட்டங்களில் சேர்க்கப்பட்டுள்ள நிலையில் தமிழக விடுதலைப் போராட்ட வீரர்கள் பற்றியும், எல்லைப் போராட்டத்தில் தம் வாழ்வையே அர்ப்பணித்த மாமனிதர்கள் பற்றிய வரலாறும் தவிர்க்கப்படும் நோக்கம் எதிர்காலத் தலைமுறைக்கு இழைக்கப்படும் துரோகம் என்பதை இங்குப் பதிதல் அவசியம்.
திருத்தணி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள் இன்று தமிழகப் பகுதிகளில் இருப்பதற்குக் காரணமாக வாழ்ந்த மண்ணின் மைந்தர் திருமிகு மங்கலங்கிழார் வாழ்வியலை இன்றைய தலைமுறையும், எதிர்காலத் தலைமுறையும் அவசியம் அறிதல் வேண்டும்.
தலையைக் கொடுத்தேனும் தலைநகரையும், தமிழக எல்லைகளையும் மீட்போம் என்பதில் தம் வாழ்வின் இறுதி வரை உறுதியாய் வாழ்ந்த மங்கலங்கிழார் தமிழ்நாடு நாள் கொண்டாட்டத்தில் காலம் காலமாகப் புறக்கணிக்கப்பட்டே வருகிறார் என்ற வருத்தமும் நிச்சயம் இன்றைய தலைமுறை அறிய வேண்டும்.
தமிழ்நாடு நாள் கொண்டாடும் தினத்தில் தந்தை பெரியார், காமராசர், அறிஞர் அண்ணா ஆகியோரை முதன்மைப்படுத்துவது தவறானதாகும். ஏனெனில் மங்கலங்கிழார், ம,பொ.சி, மார்சல் நேசமணி போன்ற தலைவர்களே தமிழ்நாடு நாள் கொண்டாடுவதற்குக் காரணமாகவும், விதையாகவும் திகழ்ந்தவர்கள். தந்தை பெரியார், காமராசர் ஆகியோர் தமிழ் மண் மீட்புக்கு எந்தவிதத்திலும் எங்கும் குரல் கொடுக்கவில்லை என்பதும் வரலாறு அறிந்த உண்மை.
தச்சுத் தொழிலாளியாக வாழ்வைத் தொடங்கிய மங்கலங்கிழார் தமிழ் மொழிப்புலவராக, எல்லைக் காப்பாளராக, வடக்கெல்லையின் போர்ப்படை வேந்தராக வாழ்ந்து வரலாறாக மாறியவர். இந்த மங்கலங்கிழார் என்னும் மண்ணின் மைந்தரை திருத்தணி மக்கள் மட்டுமின்றி தமிழக மக்களும் கொண்டாடுவதோடு மட்டுமின்றி, தம் குழந்தைகளுக்கும் அவரின் பெரும் பணியை நினைவூட்டுதல் வேண்டும்.
முருகனின் அறுபடைத் தலங்களில் திருத்தணி முருகன் கோயில் தமிழ் எல்லையில் இருப்பதற்குக் காரணமாக, விதையாக, விருட்சமாக வாழ்ந்து மறைந்த மண்ணின் மைந்தர் மங்கலங்கிழார் வரலாறு தமிழ் கூறும் நல்லுலகில் என்றும் போற்றப்பட வேண்டிய வரலாறாகும்.
0
மங்கலங்கிழார் போன்ற அறியப்படாத ஆளுமைகள் குறித்து அறிந்து மகிழ்ச்சி அடைந்தோம்.