Skip to content
Home » மண்ணின் மைந்தர்கள் #19 – காந்தியவாதி கிருஷ்ணம்மாள் ஜெகன்நாதன்

மண்ணின் மைந்தர்கள் #19 – காந்தியவாதி கிருஷ்ணம்மாள் ஜெகன்நாதன்

கிருஷ்ணம்மாள் ஜெகன்நாதன்

அகிம்சை என்பது வாழ்வியலாகவும், சில நேரங்களில் ஆயுதமாகவும் இருக்க வேண்டும் என்பதுடன், மக்கள், வாழும் நிலவியலில் உரிமைகள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்னும் கொள்கையைத் தம் வாழ்நாள் முழுவதும் கடைப்பிடித்தவர் கிருஷ்ணம்மாள் ஜெகன்நாதன். இவரது தியாக வாழ்வு எல்லோரும் அறிய வேண்டிய அற்புத வாழ்வு. தொடர் போராட்டங்களால் தன்னுடைய வாழ்க்கையைத் தமக்காக வாழ்ந்திடாமல் மக்கள் நலனுக்காக வாழ்ந்த கிருஷ்ணம்மாள் ஜெகன்நாதன் அரசின், அடக்குமுறையைக் கூட அகிம்சை வழியிலேயே எதிர்கொண்டார் என்பதைக் கொண்டு அவரின் அறத்தை அறிவோம்.

1926ஆம் ஆண்டு திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டி என்னும் சிறிய கிராமத்தில் ராமசாமி – நாகம்மாள் தம்பதியினருக்கு மகளாகப் பிறந்தவர் கிருஷ்ணம்மாள் ஜெகன்நாதன். குடும்பத்தின் பொருளாதாரச் சிரமங்களுக்கு மத்தியிலும் பள்ளி மற்றும் கல்லூரிப் படிப்பைத் தொடர்ந்து படித்தார். குடும்பத்தாரின் ஆதரவுடன் படிப்பைத் தொடர்ந்த கிருஷ்ணம்மாள் ஜெகன்நாதன் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் பட்டப்படிப்பை நிறைவு செய்தார். மதுரை மாவட்டத்தில் உயர்கல்வியை நிறைவு செய்த முதல் பெண் கிருஷ்ணம்மாள் ஜெகன்நாதன் என்பதும் இங்குக் குறிப்பிடவேண்டிய ஒன்றாகும்.

கல்லூரியில் படிக்கும் காலத்திலேயே மகாத்மா காந்தியின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு நாட்டு விடுதலைக்காகப் போராடத் தொடங்கிய கிருஷ்ணம்மாள், திருமதி செளந்திரம்மாள் அவர்களின் வழிகாட்டுதலில் மக்கள் நலனுக்காகப் போராடத் தொடங்கினார். மகாத்மா காந்தியடிகளின் சத்தியாகிரகம் போராட்டம் நாடு முழுவதும் பல இடங்களில் ஆங்கில அரசால் நடத்த விடாமல் தடை செய்யப்பட்டு வந்தது. அப்போது கிருஷ்ணம்மாள் ஜெகன்நாதன் முதல் நாள் இரவே சென்னை மெரினா கடற்கரையில் தேசியக்கொடியை மணலில் புதைத்து வைத்து விட்டு மறுநாள் இயல்பான நடையில் சென்று மாபெரும் கூட்டத்தை ஒருங்கிணைத்து மணலில் புதைத்துவைத்திருந்த தேசியக்கொடியை ஏந்திப் போராடினார். அப்போதுதான், யார் இந்தப் பெண்மணி என்னும் கேள்வி பலரையும் போல ஆங்கில அரசாங்கத்தையும் யோசிக்க வைத்தது. இதுபோலத் தமிழகம் முழுவதும் நாட்டு விடுதலைக்குப் பல கட்டங்களில் போராடினார்.

வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் தீவிரமாக ஈடுபட்டமையால் ஆங்கிலேய அரசு கிருஷ்ணம்மாள் ஜெகன்நாதனைக் கைது செய்து நான்கு ஆண்டுகள் கொடுஞ்சிறையில் அடைத்தது. தண்டனைக் காலம் முடிந்ததும் சிறையிலிருந்து வெளிவந்து மீண்டும் மக்கள் நலன் சார்ந்த போராட்டங்களில் ஈடுபட்டார். 1946ஆம் ஆண்டு மகாத்மா காந்தியடிகள் மதுரைக்கு வருகை தந்து மூன்று நாட்கள் தங்கி சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபடலானார். அப்போது மகாத்மா காந்திக்கு அருகிலிருந்து சேவைகள் செய்த போது, அவர் தம்மிடம் கூறிய, ‘ஏழைகளின் மீட்சிக்குப் போராடு’ என்னும் வார்த்தையைத் தம் வாழ்வின் லட்சியமாக எடுத்துக்கொண்டு களப்பணியைத் தொடர்ந்தார் கிருஷ்ணம்மாள் ஜெகன்நாதன். 1947 இந்தியா விடுதலை அடைந்த போதும் சமூகத்தின் அடித்தட்டு மக்களுக்கான விடுதலை என்பது அடைய இயலாத நிலையிலேயே இருந்தது. 1948ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட காந்தி கிராமத்தின் செயலராக இருந்து பலருக்கும் தன்னிறைவுப் பொருளாதாரத் திட்டங்களை நடைமுறைப்படுத்தினார்.

தமக்காக வாழாமல் நாட்டுக்காகவும், உரிமைகளுக்காகவும் வாழும் ஒருவரையே தமது இணையாக ஏற்றுக் கொள்வேன் என்பதில் உறுதியாக இருந்து திரு. ஜெகன்நாதன் என்னும் சுதந்திரப் போராட்ட வீரரை அன்பால் மணந்து இந்திய சுதந்திரத்திற்குப் பிறகே திருமணம் என்பதில் இருவரும் உறுதியாக இருந்தனர். போராளிகள் வாழ்க்கை, பொது வாழ்க்கை என எங்கும் தமக்காக வாழாமல் இருவரும் மக்கள் நலன் சார்ந்தே வாழ்ந்துள்ளனர்.

சுதந்திரத்திற்கு முன்பு ஆங்கிலேய அரசை எதிர்த்தவர், சுதந்திரத்திற்குப் பிறகு தம் சொந்த அரசையே மக்கள் நலனுக்காக எதிர்க்கத் தொடங்கினார். காப்பியக் காலத்தில் மணிமேகலை என்னும் பெண் அட்சயப் பாத்திரம் கொண்டு கிடைத்தவற்றை ஏழை மக்களுக்கு வழங்கியது போல, வாழும் காலத்தில் ஏழை மக்களின் அட்சய கதாபாத்திரமாக மாறி உரிமைகளைப் பகிர்ந்து அளிக்க, உடைமைகளை அனைவரும் பெறப் போராட்ட வாழ்வையே தம் அன்றாட வாழ்வாக மாற்றிக் கொண்டார். பாலைவனத்தின் பேரதிசயமே எங்கோ ஒரு நீரூற்றைத் தன்னுள் ஒளித்து வைத்திருப்பதுதான் என்னும் வரிகளுக்கு ஏற்ப நீரூற்றைத் தேடி தம் வாழ்நாளை அமைத்துக் கொண்டவர் கிருஷ்ணம்மாள் ஜெகன்நாதன்.

வினோபாவே நிலமற்ற ஏழைகளுக்கு நிலத்தைப் பெற்றுத் தர இந்தியா முழுவதும் நடைப்பயணம் மேற்கொண்டு பல மாநிலங்களிலும் பல ஆயிரக்கணக்கான மக்களுக்கும் நிலத்தைத் தானமாகப் பெற்றுத் தரும் போராட்டத்தைத் தொடங்கினார். அப்போராட்டத்தில் தன்முனைப்புடன் தம்மை ஈடுபடுத்திக் கொண்ட கிருஷ்ணம்மாள் ஜெகன்நாதன் தொடர் போராட்டங்களில் எந்தவிதச் சோர்வும் எந்தவிதமானப் பிரதிபலனும் இன்றிக் களப்பயணங்கள் வழியில் போராடினார்.

1968ஆம் ஆண்டு தமிழக வரலாற்றில் கருப்பு வருடம் என்று பதிவு செய்யும் அளவுக்கு, கீழ் வெண்மணி என்னும் கிராமத்தில் உழைப்புக்குக் கூலியாக அரைப்படி நெல்லை அதிகமாக மக்கள் கேட்க, நில உரிமையாளர்கள் மறுத்துவிடுகின்றனர். அங்கிருக்கும் கூலி ஆட்களுக்கு மிகக் கடுமையான தண்டனைகள் வழங்கப்பட்டன. மரத்தில் கட்டி வைத்து, வாயில் சாணியைக் கரைத்து ஊற்றிக் கொடுமைப்படுத்தப்பட்டனர். அந்தக் கலவரத்தில் கூலியாட்களுக்கும், நில உடைமையாளர்களுக்கும் பெரும் பகை உருவானது. நில உடைமையாளர்கள் அந்தப் பகுதியில் இருந்த கூலியாட்களை மிகக் கொடூரமாகத் தாக்கினர். அந்தத் தாக்குதலுக்குப் பயந்து பலரும் ஊரைக் காலி செய்து ஓட, சிலர் அங்கிருந்த ஒரு மண் குடிசை வீட்டில் ஒளிந்துகொண்டனர். சுமார் 44 பேர் அந்தக் குடிசையில் ஒளிந்திருந்தனர். நில உடமையாளர்கள் கொஞ்சமும் கருணையின்றி அந்தக் குடிசைக்குத் தீ வைத்தனர். உள்ளிருந்து ஒரு தாய் குழந்தையை வெளியில் தூக்கிப்போட, மறுபடியும் நில உரிமையாளர்கள் அந்தப் பிஞ்சுக் குழந்தையை மீண்டும் நெருப்பில் தூக்கிப் போட்டுப் படுகொலை செய்தனர். இந்த வழக்கை இந்திய நீதிமன்றங்கள் பல ஆண்டுகள் விசாரித்து படுகொலை செய்தவர்களுக்குச் சாதகமாகத் தீர்ப்பு வழங்கியதை எதிர்த்து கிருஷ்ணம்மாள் ஜெகன்நாதன் களமாடத் தொடங்கினார். அதாவது எந்தத் தவறும் செய்யாத ராமையா என்பவரின் குடிசையில்தான் இந்தப் படுகொலை நடந்தது. சில காரணங்களைக் கூறி அந்த ராமையா என்பவருக்கும் ஏழு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தபோது, ஆங்கிலேய ஆட்சியே பரவாயில்லை எனக் கூறி பெரும் போராட்டங்களை கிருஷ்ணம்மாள் ஜெகன்நாதன் முன்னெடுத்தார். சுமார் மூன்று ஆண்டுகள் அந்தக் கிராமத்திலேயே தங்கி அந்தக் கலவரத்தில் பாதிக்கப்பட்ட 74 பேருக்கும் தலா ஓர் ஏக்கர் விதம் 74 ஏக்கர் பெற்றுக் கொடுத்தார். உரிமைக்குப் போராடிய மக்களுக்கு இந்திய நீதிமன்றமே சிறைத் தண்டனை விதித்தது என்பது காலத்துக்கும் அழியாத களங்கம் என்பதைத் தம் போராட்டங்கள் மூலம் உணர்த்தினார்.

சர்வோதயா இயக்கத்தின் செயல்பாடுகள் காந்திய வழியில் இருந்து தவறுவதைக் கண்டித்து, தனியாக லாப்டி (Land for the Tillers’ Freedom) என்னும் என்னும் பெயரில் ஓர் இயக்கத்தைத் தொடங்கினார். அதன்மூலம் தமிழகத்தில் சுமார் பத்தாயிரம் ஏக்கர் நிலங்களைத் தானமாகப் பெற்று நிலமற்ற ஏழைகளுக்கு அந்த நிலங்களைப் பகிர்ந்தளித்தார். நிலத்தைப் பகிர்ந்து அளித்ததோடு நின்று விடாமல் தன்னிறைவுப் பொருளாதாரத்திற்கும் ஆலோசனைகள் கூறினார். லாப்டி அமைப்பின் மூலம் நில உரிமையாளர்களிடம் பேசி, குறைந்த விலைக்கு நிலங்களைப் பெற்று, நிலமற்ற உழைப்பாளிகளுக்குக் கொடுக்கும் இயக்கமாக இந்த அமைப்பு செயல்பட்டது. நிலத்தை வாங்கும் ஏழை உழைப்பாளி, குறைந்த வட்டியுடன் விலையை வங்கியில் செலுத்தி, நிலத்தைச் சொந்தமாக்கிக்கொள்வார்.

இந்தமுறையில், 1982 முதல் 1986 வரை சுமார் 175 நிலச்சுவான்தார்களிடம் இருந்து 5,000 ஏக்கர் நிலங்களை குறைந்த விலைக்கு வாங்கி 5,000 குடும்பங்களுக்கு அளித்தார் கிருஷ்ணம்மாள் ஜெகன்நாதன். 1981ல் நாகப்பட்டினம் மாவட்டத்தில், கிராம வளர்ச்சித் திட்டத்தின் கீழ், 19 கிராமங்களில், 1,112 ஏக்கர் நிலத்தை, வங்கிக் கடனில் பெற்று, 1,112 குடும்பங்களுக்குப் பிரித்துக்கொடுத்தார். வட்டியைச் செலுத்திய மக்கள் அனைவரும், முதல் தலைமுறையாகத் தங்களுக்கென ஓர் ஏக்கர் நிலம் சொந்தமாக இருப்பதை நன்றியோடு நினைவு கூர்ந்து அதற்குக் காரணமான கிருஷ்ணம்மாள் ஜெகன்நாதனை இன்றும் தங்களது முன்னோடியாக நினைத்துப் பெருமிதம் கொள்கின்றனர்.

கிருஷ்ணம்மாள் ஜெகன்நாதன் தமது கணவருடன் இணைந்து பீகார் மாநிலத்தில் பல மாதங்கள் தங்கியிருந்து நிலக்கிழார்களிடம் போராடி சுமார் 23 ஆயிரம் ஏக்கர் நிலங்களைப் பெற்று பீகார் மக்களுக்கு வழங்கினார். தமிழகம் மட்டுமின்றி நிலங்கள் வழிப் பயணம் செய்து களம் கண்ட போராளி கிருஷ்ணம்மாள் ஜெகன்நாதன். தம் வாழ்வின் பெரும்பாலான தருணங்களை எளிய மக்களின் வாழ்வியலுக்காகப் போராடிய கிருஷ்ணம்மாள் ஜெகன்நாதன், தம் வாழ்வில் காந்தி, வினோபாவே ஆகிய இருவரையும் தமது முன்னோடிகள் எனப் பலமுறைக் குறிப்பிட்டுள்ளார். தமது போராட்டங்கள் எல்லாவற்றையும் காந்திய வழியிலேயே கொண்டு சென்று வெற்றி பெற்றுள்ளார் என்பதும் இங்குக் குறிப்பிடத்தக்கது.

1990களில் இந்திய அரசு, பன்னாட்டு நிறுவனங்களுக்குத் தமிழக கடற்கரைப் பகுதிகளில் இறால் பண்ணை வைத்துக்கொள்ள அனுமதி வழங்கியது. இதனால் சுற்றுச்சூழல் பாதிப்புகள், நிலத்தின் தன்மை பாதிக்கப்படுவதை எதிர்த்து மக்கள் போராடத் தொடங்கினர். இறுதியில் கிருஷ்ணம்மாள் ஜெகன்நாதன் தலைமையில் இந்திய அரசையும், பன்னாட்டு நிறுவனங்களையும் எதிர்த்து மக்கள் போராடினார்கள். இந்தப் போராட்டம் மக்கள் இயக்கமாக மாறிட, இறுதியில் இந்திய அரசும், இந்திய நீதிமன்றங்களும் இறால் பண்ணைகள் செயல்படத் தடை விதித்தது. எந்த நேரத்தில் எங்கும் யாருக்காகவும் சமரசமின்றிப் போராட வேண்டும் என்னும் நோக்கில் ஆங்கில அரசு, இந்திய அரசு, நில உடைமையாளர்கள், பன்னாட்டுக் கம்பெனிகள், தமிழக அரசு, இந்திய நீதித்துறை நீதிமன்றங்கள், பன்னாட்டு நிறுவனங்கள் என அச்சமின்றித் துணிவுடன் எல்லோரையும் எதிர்த்தார். எல்லாக் கதவுகளையும் தட்டி எளிய மக்களுக்கான நீதி கிடைக்கும் வரை போராடினார் கிருஷ்ணம்மாள் ஜெகன்நாதன்.

இத்தாலியைச் சேர்ந்த லாரா கோப்பா என்பவர் கிருஷ்ணம்மாள் ஜெகன்நாதன் வாழ்வியலைப் பதிவு செய்து ‘The color of Freedom’ என்னும் பெயரில் நூலாக வெளியிட்டுள்ளார்.

கிருஷ்ணம்மாள் ஜெகன்நாதன் அவர்களின் சமூகப் பணியைப் போற்றும் வகையில் இந்திய அரசு மிகத் தாமதமாகவே பத்ம விருதுகள் அளித்தது என்பதும் இங்குப் பதிதல் அவசியம்.

இளம் வயதில் தொடங்கிய போராட்ட வாழ்வு வயது மூப்பு வரையிலும் தொடர்கிறது. தமது வாழ்வைச் செயலாக மாற்றி இயக்கமாக வாழ்ந்துவரும் கிருஷ்ணம்மாள் ஜெகன்நாதன் நம் நிலத்தின் நம்பிக்கை நட்சத்திரம். அம்மையாரின் போராட்ட வாழ்வை அனைவரும் அறிந்து அவரை வணங்கி மகிழ்வோம்.

0

பகிர:
பொ. சங்கர்

பொ. சங்கர்

கட்டுரையாளர், எழுத்தாளர். தவத்திரு சச்சிதானந்த சுவாமிகள், வேதாத்திரி மகரிசி ஆகியோரின் வாழ்வியல் சிந்தனைகளை ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவர். தொல்லியல் சான்றுகள் தேடி விரிவான பயணங்கள் மேற்கொண்டவர். கோயமுத்தூர் யுவபாரதி மையப்பள்ளியில் தமிழாசிரியராகப் பணிபுரிகிறார். தொடர்புக்கு - tamilshanker@gmail.comView Author posts

1 thought on “மண்ணின் மைந்தர்கள் #19 – காந்தியவாதி கிருஷ்ணம்மாள் ஜெகன்நாதன்”

  1. கிருஷ்ணம்மாள் ஜெகன்நாதனை எனக்கு அறிமுகம் செய்து வைத்த எழுத்தாளர் சங்கருக்கு நன்றிகள். இதை படிக்காமல் போயிருந்தால் வெண்மணி கிராமத்தில் நடந்த கொடூரம் அதன்நீதிக்காக போராடிய கிருஷ்ணம்மாள் ஜெகன்நாதன் அவரது தியாகங்கள், போராட்டங்கள் மற்றும் சாதனைகள் தெரியாமலே போயிருக்கும். நாட்டிற்கு போராடிய தியாக மகாத்மாக்களை எழுத்துக்கள் மூலம் மீண்டும் உயிர்ப்பித்த எழுத்தாளர் சங்கருக்கு நன்றிகள் பாராட்டுக்கள்.

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *