Skip to content
Home » மண்ணின் மைந்தர்கள் #22 – கண்ணியமிக்க காயிதே மில்லத்

மண்ணின் மைந்தர்கள் #22 – கண்ணியமிக்க காயிதே மில்லத்

காயிதே மில்லத்

‘அல்லா என்று அழைப்பதற்கு முன்பே அம்மா என்று அழைத்தவன்; ஆதலால் மதத்தை விடத் தமிழ் எனக்கு முக்கியம்’ என்று முழங்கியவர் காயிதே மில்லத். ‘காயிதே மில்லத்’ என்ற அரபிச் சொல்லுக்கு வழி காட்டும் தலைவர் என்று பொருள்.

‘காயிதே மில்லத் தமிழகம் கண்டெடுத்த முத்து. முஸ்லிம்களின் சொத்து’ என்று தலைவர்களால் போற்றப்பட்டவர். ‘இஸ்லாம் எங்கள் வழிபாடு, இந்தியாதான் எங்கள் தாய்நாடு’ என்று பாகிஸ்தான் பிரிவினையின்போது உரக்கக்கூறி நாட்டுப்பற்றை வெளிப்படுத்திய முகமது இஸ்மாயில் என்ற இயற்பெயரைக் கொண்ட காயிதே மில்லத், சுதந்திரத்துக்காகப் போராடிய முக்கியத் தலைவர்களில் ஒருவரும் ஆவார்.

திருநெல்வேலி அருகே பேட்டை என்னும் கிராமத்தில் 1896 ஆம் ஆண்டு ஜூன் 5 ஆம் நாள் மியாகாத் ராவுத்தர் என்பாருக்கு மகனாகப் பிறந்தவர் முகமது இஸ்மாயில் என்னும் காயிதே மில்லத். திருவிதாங்கூர் அரச குடும்பத்தினருக்கு ஆடைகள் விற்பனை செய்து வந்த மியாகாத் ராவுத்தர் தம் மகனை நன்முறையில் படிக்க வைத்தார். ஆயினும் அவர் காயிதே மில்லத்தின் இளவயதிலேயே காலமானார். இளமைக்காலத்தில் தமது தந்தையை இழந்து தாயின் அரவணைப்பில் வளரத் தொடங்கினார் காயிதே மில்லத். இவரின் இளமைக்காலம் கடும் சிரமங்களுக்கு மத்தியில் நகரத் தொடங்கிய போது நாடு முழுவதும் விடுதலைப் போராட்டங்கள் தீவிரமாக நடைபெற்று வந்தன. மகாத்மா காந்தியின் சொல்லுக்குக் கட்டுப்பட்டு நாடு முழுவதும் இளைஞர்கள் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். மகாத்மா காந்தியடிகள் மீதும் நாட்டின் மீதும் பெரும் விருப்பம் கொண்டிருந்த காயிதே மில்லத் தமது பி.ஏ தேர்வை எழுதாமல் ஒத்துழையாமை போராட்டத்தில் பங்கெடுத்தார். நாட்டுக்காகப் பல போராட்டங்களில் பங்கெடுத்துச் சிறைக்குச் சென்றார்.

நவாப் சலீப் முல்லாகான் என்பவர் அகில இந்திய முஸ்லீம் கட்சியைத் தொடங்கியபோது அதில் முகமது அலி ஜின்னா மற்றும் காயிதே மில்லத் போன்றோர் முக்கியத் தலைவர்களாகத் திகழ்ந்தனர். நவாப் மறைவுக்குப் பின்னர் முகமது அலி ஜின்னா தலைமையில் கட்சி செயல்படத் தொடங்கியது.

இந்தியா பாகிஸ்தான் பிரிவினைக்குப் பின்னர் காயிதே மில்லத் அகில இந்திய முஸ்லீம் லீக் கட்சியின் தலைவராகப் பணியாற்றிய போது, இந்திய நாடு முழுவதும் உள்ள முஸ்லிம் மக்களின் காவலராகவும் இந்திய அரசியல் நிர்ணய சபையின் உறுப்பினராகவும் பணியாற்றினார். நாட்டுப் பிரிவினையின் போது முகமது அலி ஜின்னா காயிதே மில்லத்திடம், உங்களுக்கு எந்த உதவி வேண்டுமானாலும் கேளுங்கள் என்று கூற, ‘ஜின்னா அவர்களே எங்கள் பிரச்னைகளை நாங்கள் தீர்த்துக் கொள்கிறோம். எங்களின் பாதுகாவலுக்கு இந்தியா என்ற நாடு உண்டு’ என்று ஜவஹர்லால் நேரு முன்னிலையிலேயே கூறினார். இந்த நிகழ்வுக்குப் பின்னர் நாடு முழுவதும் காயிதே மில்லத் என்னும் வழிகாட்டியின் புகழ் பரவத் தொடங்கியது.

காயிதே மில்லத் இந்திய அரசியல் நிர்ணய மன்றத்தின் உறுப்பினராகச் செயல்பட்ட போது, எந்த மொழி தேசிய மொழியாக ஏற்கப்பட வேண்டும் என்கிற வாதம் எழுந்தது. பழமையான மொழியே தேசிய மொழியாக வேண்டும் என்கிற வாதம் வைக்கப்பட்ட பொழுது அமைதியாக எழுந்த காயிதே மில்லத், ‘ஓர் உண்மையை இச்சபை முன்பு துணிவோடு கூற விரும்புகிறேன். இந்த நாட்டு மண்ணில் பேசப்பட்ட மொழிகளில் மிகவும் பழமையானதும், ஆரம்பக் காலத்தில் இருந்து பேசப்பட்டு வரும் மொழியாக இருப்பதும் தமிழ்தான். எனது கூற்றை எந்த வரலாற்று ஆசிரியராலும் மறுக்க முடியாது. எந்தத் தொல்லியல் ஆராய்ச்சியாளராலும் இதை மறுக்க முடியாது. உயர்தரமான இலக்கிய வளங்களும், நயங்களும் நிறைந்த மொழி தமிழ். பழமையான மொழியைத்தான் இந்நாட்டின் தேசிய மொழியாக்க வேண்டுமென்றால் இந்தியாவின் தேசிய மொழியாகத் தமிழைத்தான் ஏற்றுக் கொள்ள வேண்டும்’ ( Part XIV A Languages – Page : 1471 to 1474 – Date 14th September 1949 – Vol : IX) என்ற வாதத்தைக் காயிதே மில்லத் எடுத்துரைத்தார். இவ்வாறு தமிழ் மொழி மீது அளப்பில்லாத அன்பைச் செலுத்தினார் காயிதே மில்லத்.

இந்தியாவில் மொழிவாரி பகுதிகள் பிரிக்கப்பட்டு வந்த நிலையில் கேரளா மாநிலத்தின் தேவிகுளம், பீர்மேடு பகுதிகள் தமிழகத்தோடு இணைக்கப்பட வேண்டும் என்பதில் ஆழமான வாதங்களையும் எடுத்துரைத்தார். இந்தப் பிரச்னையில் காமராசர் பெரும் ஆர்வம் காட்டாமல் இருந்த நிலையில் அவருடன் நாடாளுமன்றத்தில் எதிர் வாதம் புரிந்தார். அகில இந்திய முஸ்லீம் கட்சிக்குக் கேரளா மாநிலத்தில் பெரும் செல்வாக்கு இருந்தும் உண்மையின் பக்கமே நின்று மொழிவாரி பகுதிகளில் தமிழ் மக்களுக்கு ஆதரவாகத் தமது வாதத்தைப் பதிவு செய்தார்.

நாட்டின் முதல் பொதுத் தேர்தல் நடைபெற்றபோது ஜவஹர்லால் நேரு அவர்கள் காங்கிரசு கட்சியின் சின்னத்திலேயே நிற்கலாமே என்று கூறிய போது, தமது கட்சியை, தனித்த கட்சியாகப் பதிவு செய்து தேர்தலில் போட்டியிட்டார். 1962, 1967, 1971 ஆகிய ஆண்டுகளில் தேர்தல் களத்துக்கே செல்லாமல் மக்களால் நாடாளுமன்றம் அனுப்பப்பட்ட தலைவர் காயிதே மில்லத்.

1971 ஆம் ஆண்டு இந்தியா மீது பாகிஸ்தான் போர் தொடுத்தபோது, இந்திய நாட்டில் வசிக்கும் முஸ்லீம் மக்களின் குரலாக நாடாளுமன்றத்தில் பாகிஸ்தானுக்குக் கண்டனத்தைத் தெரிவித்தார். பாகிஸ்தானுக்கு எதிராக, இந்திய நாட்டுக்கு ஆதரவாக எமது மகனையும் போர்க்களம் அனுப்பி வைக்கிறேன் என்று கூறி இந்திய நாட்டின் மீதும், மக்கள் மீதும் இருந்த தமது பற்றை வெளிப்படுத்தினார்.

ஒருமுறை காயிதே மில்லத் தமது கட்சி சார்பில் மிலாதுநபி விழாவை நடத்தினார். அவ்விழாவில் திராவிட இயக்கப் பிரமுகர் ஒருவர் இந்து மத வழிபாட்டு நம்பிக்கையை விமர்சித்துப் பேசிக்கொண்டு இருந்தார். அவரின் பேச்சை உடனே முடிக்கச் செய்த கண்ணியமிகு காயிதே மில்லத் இப்படி ஒரு விளக்கம் தந்தார். ‘இது புனிதம் மிகுந்த மிலாது விழா மேடை. இதில் நபிகள் நாயகத்தின் சிறப்பு, இஸ்லாத்தின் மேன்மை பற்றி மட்டுமே பேசவேண்டும். பிற மதத்துக் கடவுள்களைப் பற்றிக் கேலி செய்து பேசக் கூடாது. இஸ்லாமிய மார்க்கம் ‘பிற மதத்துக் கடவுள்களைப் பற்றி கேவலம் செய்து பேசாதீர்கள்’ என்று அறிவுறுத்தியிருக்கிறது’ என்று அறிவித்தார். இசுலாமியராக இருந்தபோதிலும் காயிதே மில்லத் இந்து மக்கள் மீதும் பிற சமூக மக்கள் மீதும் அளவுகடந்த அன்பைச் செலுத்தினார் என்பதற்கு இந்நிகழ்வு ஒரு சான்றாகும்.

ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆளத் தொடங்கிய போது தமிழகத்தின் பெரும்பாலான பள்ளி வாசல்கள் ஆங்கிலக் கல்வியை கற்க மாட்டோம் என்று தீர்மானம் நிறைவேற்றியது. இதனால் பிற்காலங்களில் இஸ்லாமியர்களின் அடிப்படைக் கல்வி பாதிக்கப்பட்டது. அப்போது தமிழக அமைச்சராக இருந்த சுப்பராயன் அவர்களின் ஆலோசனையின் பேரில் தமிழகம் முழுவதும் பள்ளி வாசல்கள் மூலமாகக் கல்வி நிலையங்களைத் தொடங்கினார் காயிதே மில்லத். அப்படித் தொடங்கப்பட்ட கல்வி நிலையங்கள் இன்று தமிழகம் முழுவதும் செயல்பட்டு வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது. சென்னையில் புதுக் கல்லூரி, திருச்சியில் ஜமால் முகமது கல்லூரி, அதிராம்பட்டினத்தில் காதர் மொய்தீன் கல்லூரி உள்ளிட்ட ஏராளமான முஸ்லிம் கல்லூரிகள் தொடங்கப்பட்டன. தமிழகத்திலிருந்து சென்று சிங்கப்பூர், மலேசியா, பர்மா போன்ற வெளிநாடுகளில் தொழில் செய்து வந்த முஸ்லிம் தனவந்தர்களிடம், கல்லூரிகளின் கட்டட வசதிக்காக நிதி கோரினார். அவரது வேண்டுகோளை உத்தரவாக மதித்து எல்லோரும் தாராளமாக நிதி வழங்கினர். ஒட்டுமொத்த நிதியையும் வெளிப்படையான நிர்வாகத்தின் மூலம் கல்லூரிகளின் கட்டடங்களுக்காகச் செலவிட்டார் காயிதே மில்லத். இன்றும் புதுக் கல்லூரி, ஜமால் முகமது கல்லூரிகளில் பர்மா – மலாய் வாழ் முஸ்லிம் பெயர்கள் கட்டடங்களுக்குச் சூட்டப்பட்டிருப்பதே இதற்குச் சாட்சி. முஸ்லீம் மக்களுக்காக மட்டுமின்றி, பிற சமூக மக்களுக்கும் கல்வி, வேலைவாய்ப்பில் உதவி செய்து வழிகாட்டும் தலைவராக வாழ்ந்து காட்டினார் காயிதே மில்லத்.

மக்களவை, மாநிலங்களைவை, சட்டசபை எனப் பல்வேறு அவைகளில் சிறப்பான பதவியை வகித்தாலும் தமக்காக எந்தச் சொத்துகளையும் சேர்த்துக் கொள்ளாமல் நாட்டின் நலனுக்காக வாழ்ந்த கண்ணியத் தலைவர் காயிதே மில்லத்.

அரசியல் மட்டுமின்றி தொழில் துறையிலும் காயிதே மில்லத் சிறந்து விளங்கியதால், சென்னை துறைமுகம் பொறுப்புக் கழகம், தொழில் வளர்ச்சித்துறை, தென்னக இரயில்வே ஆலோசனைக்குழு, சுங்கவரிக் கழகம் ஆகியவற்றில் தமிழ்நாடு அரசு இவரை ஆலோசனைக் குழு உறுப்பினராக நியமனம் செய்தது.

நாட்டில் எங்கெல்லாம் மதப்பதற்றம் ஏற்படுகிறதோ அப்போதெல்லாம் நேரடியாக அந்த இடத்திற்கே சென்று உரியவர்களிடம் பேசி மதச்சண்டை வராமல் தடுத்து நிறுத்தி மத நல்லிணக்க நாயகராகத் திகழ்ந்துள்ளார். மகாத்மா காந்தி சுட்டுக்கொல்லப்பட்ட போது பல இடங்களில் இந்து மக்கள் தாக்கப்படலாம் என்ற அச்சம் நிலவியபோது, நாடு முழுவதும் பயணம் செய்து இந்து முஸ்லீம் கலவரம் வராமல் தடுத்து நிறுத்தினார். இந்து சமூக மக்களின் உயிருக்கும் உடைமைக்கும் பாதுகாவலராகத் திகழ்ந்தார். இதனை இந்தியாவின் முதல் பிரதம அமைச்சராகத் திகழ்ந்த ஜவஹர்லால் நேரு பதிவு செய்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

1972 ல் காயிதே மில்லத் மறைந்தபோது, அவரால் உருவாக்கப்பட்ட புதுக் கல்லூரியிலேயே அவரது உடல் வைக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது. அப்போது எம்ஜிஆர் முதல்வராக இருந்தார். அவருக்கு அஞ்சலி செலுத்திய எம்ஜிஆர் அங்கிருந்து மூன்று கிலோ மீட்டர் தொலைவு வரை அவரது இறுதி ஊர்வலத்தில் பங்கேற்று நடந்தே வந்து மரியாதை செலுத்தினார்.

காயிதே மில்லத்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்தப் புதுக் கல்லூரிக்குப் பெரியார் வந்தார். அப்போது அங்கே கடுமையான கூட்டம். பெரியாரின் நெருங்கிய நண்பரான ஈரோடு கே.ஏ.எஸ். அலாவுதீன் சாஹிப், கூட்டத்தினரை விலக்கிவிட்டு பெரியாரை காயிதே மில்லத் உடல் அருகே அழைத்துச் சென்றார். அப்போது தேம்பிய பெரியார், ‘இப்படிப்பட்ட தலைவர் கிடைப்பது அரிது. உத்தமமான மனிதர். முஸ்லிம் சமுதாயத்துக்கு இவரைப் போன்ற தலைவர் கிடைப்பது கஷ்டம்’ என்று அனைவரின் காதுகளிலும் விழும்படிக் கூறினார். இதை அலாவுதீன் சாஹிபே பதிவுசெய்திருக்கிறார். பெரியார் சாதாரணமாக யாரையும் புகழ மாட்டார். அப்படிப்பட்ட பெரியாரிடம் இருந்து காயிதே மில்லத் பற்றி வெளியான இந்த வார்த்தைகள் இன்னும் உயிரோடு இருக்கின்றன.

தமிழ்நாட்டின் மண்ணின் மைந்தராக, இந்திய நாட்டின் கண்ணியமிகு தலைவராக வாழ்ந்த காயிதே மில்லத் பணிகளை அறிந்து போற்றுவோம்.

0

பகிர:
பொ. சங்கர்

பொ. சங்கர்

கட்டுரையாளர், எழுத்தாளர். தவத்திரு சச்சிதானந்த சுவாமிகள், வேதாத்திரி மகரிசி ஆகியோரின் வாழ்வியல் சிந்தனைகளை ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவர். தொல்லியல் சான்றுகள் தேடி விரிவான பயணங்கள் மேற்கொண்டவர். கோயமுத்தூர் யுவபாரதி மையப்பள்ளியில் தமிழாசிரியராகப் பணிபுரிகிறார். தொடர்புக்கு - tamilshanker@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *