Skip to content
Home » மண்ணின் மைந்தர்கள் #23 – சேலம் நரசிம்மலு

மண்ணின் மைந்தர்கள் #23 – சேலம் நரசிம்மலு

சேலம் நரசிம்மலு

உலக வாழ்வின் மகத்தான சாதனைகளைச் சாதாரண மனிதர்களே செய்கிறார்கள். சாதனைகள் புரிந்த பின்னர் மகத்தான மனிதர்களாக மாறிப்போகிறார்கள். சேலம் நரசிம்மலு அவர்களும் குறிப்பிடத்தகுந்தவர். இன்றைய கோயமுத்தூர் தொழில் நகரமாக இருப்பதற்குக் காரணமாகத் திகழ்ந்தவர். ஆரம்ப நிலைக் கல்வித் திட்டத்தின் முன்னோடி ஆய்வாளர். தமிழக வரலாற்றை உருவாக்கிய சிற்பிகளில் ஒருவராகவும், தேச விடுதலை, சமூக விடுதலை என்று பன்முகத் தன்மையில் பாடுபட்டவராகவும் திகழ்ந்தவர் சேலம் நரசிம்மலு.

விடுதலைப் போராட்ட வீரராக, சமூக சேவையாளராக, தமிழறிஞராக, பயண இலக்கிய முன்னோடியாகத் திகழ்ந்த சேலம் நரசிம்மலு கடந்த வந்த பாதைகளை இங்குக் காண்போம்.

அரங்கசாமிக்கும், லட்சுமி அம்மையாருக்கும் மகனாக ஈரோட்டில் 1854ல் ஏப்ரல் 12 ஆம் நாள் பிறந்தவர் நரசிம்மலு என்னும் பாலகிருஷ்ணா. தாய்மொழி தெலுங்காக இருப்பினும் தமிழ் மொழியின் மீது இருந்த பற்றின் காரணமாகத் தமிழ் மொழியைத் திண்ணைப் பள்ளியில் விரும்பிக் கற்றார். தமது பதினான்காம் வயதில் எதிராஜி என்பவரைத் திருமணம் செய்தார். உடல்நலமின்றி எதிராஜி மரணமடைய பின் மீனாட்சி என்பவரைத் திருமணம் செய்து கொண்டார்.

1879 ஆம் ஆண்டு அலுவல் நிமித்தம் காரணமாக கோயமுத்தூரில் குடியேறினார் நரசிம்மலு. 1885 ஆம் ஆண்டு காங்கிரசு கட்சி உருவாக்கப்பட்டபோது தமிழகத்திலேயே முதன்முதலாக கோயமுத்தூரில் காங்கிரசு கட்சியின் அமைப்பை உருவாக்கினார். தமிழகத்தில் தமது தலைமையில் தொண்டர்களைத் திரட்டியவர், மும்பை சென்று ஆலன் ஆக்டோவியன் ஹியூமைச் சந்தித்து உரையாடி, சுதந்திரப் போராட்டத்திலும் ஈடுபட்டார்.

தமிழகத்தில் காங்கிரசு இயக்கத்தை ஆரம்ப நிலையில் வளர்த்தவர்களில் முக்கியமானவராகக் கருதப்படும் சேலம் நரசிம்மலு பல்வேறு சமூக நலப்பணிகளில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டார். கோயமுத்தூரில் வறுமை நிலையிலும், விதவையாகவும் இருக்கும் பெண்களின் மேம்பாட்டிற்காக அறக்கட்டளை ஒன்றை உருவாக்கிச் செயலாற்றினார்.

மக்கள் வாழ்வதற்கே தகுதி இல்லாத நகரமாக இருந்த கோயமுத்தூர் நகரைத் தொழில் நகராக மாற்ற வேண்டும் என்னும் முனைப்புடன் செயலாற்றினார். காங்கிரசு இயக்கத்தின் பணிகளுக்காக அடிக்கடி மும்பை மாநகரம் சென்று வந்த நரசிம்மலு, அதே சீதோஷ்ண நிலை கோவையிலும் உள்ளது என்பதை உணர்ந்து மும்பை போன்று தொழில்நகராகக் கோயமுத்தூரை மாற்றப் பெரும் முயற்சிகளை மேற்கொண்டார். மும்பை நகரில் அதிகமான பருத்தி ஆலைகள், மில்கள் இயங்குவது போல கோவையிலும் மில்களை உருவாக்க வேண்டும் என்ற முனைப்புடன் செயலாற்றினார்.

உதகையின் செல்வாக்குமிக்க, புகழ்பெற்ற தொழிலதிபராகத் திகழ்ந்த ராபர்ட் ஸ்டேன்ஸின் நிதியுதவியுடன் 1888 ஆம் ஆண்டு சி.எஸ். அண்டு டபிள்யூ என்னும் மில்லைத் தொடங்கினார். கோயமுத்தூரின் மில் வளர்ச்சிக்கு இந்த மில் தொழில்தான் அடிப்படை என்பதை வரலாறு சில இடங்களில் மட்டுமே பதிவு செய்துள்ளது. இன்று ஸ்டேன்ஸ் மில் என்றழைக்கப்படும் மில்தான் சேலம் நரசிம்மலு ஆரம்பித்த மில் என்பதும் இங்குக் குறிப்பிடத்தக்கது.

கோயமுத்தூரில் நரசிம்மலு அவர்கள் முதன்முதலாகச் சர்க்கரை ஆலையைப் போத்தனூரில் தொடங்கி ஆயிரக்கணக்கான மக்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கினார்.

கோயமுத்தூரின் புகழ்பெற்ற கட்டடமாக நூற்றாண்டுகளைக் கடந்து நிற்கும் டவுன்ஹால் கட்டடத்தை நிறுவியவர் சேலம் நரசிம்மலு என்பது பதியப்பட வேண்டிய தரவாகும். பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு கோவையின் மேற்கே முட்டம் என்னும் கிராமத்தில் புகழ்பெற்ற சிவாலயம் இருந்ததன் அடையாளமாகவும், டவுன்ஹால் கட்டடத்தின் முன்பு இன்றும் அந்தக் கோயிலின் பெரிய கல்லை நட்டு வைத்தார் நரசிம்மலு. கோயமுத்தூரில் வசித்த மக்களின் நலனுக்காக ஆங்கிலேயர்களிடம் பேசி புதிய புதிய திட்டங்களைக் கொண்டு வந்தவர் சேலம் நரசிம்மலு.

கோயமுத்தூரில் ஆங்கிலேயர்களுக்காக உருவாக்கப்பட்ட பள்ளிதான் இன்றைய கோயமுத்தூர் அரசுக் கல்லூரி. ஆரம்ப நிலையில் ஆங்கிலேயக் குடும்பத்தினர் மட்டுமே இங்குக் கல்வி பயில முடியும் என்ற நிலையில் பல தீவிர முன்னெடுப்புகள் காரணமாக 1868 ஆம் ஆண்டு கல்லூரியாகத் தரம் உயர்த்தப்பட்டு அனைவரும் கல்வி பயிலும் இடமாக மாற்றினார். கோயமுத்தூர் காலேஜ் கமிட்டி என்னும் அமைப்பை உருவாக்கி அதன் தலைவராகப் பணியாற்றி அனைத்துச் சமூக மக்களும் கல்வி பயிலும் உரிமையைப் பெற்றுத் தந்தவராகத் திகழ்ந்தார் சேலம் நரசிம்மலு.

பல்வேறு சமூகப்பணிகளில் பெரும் ஈடுபாட்டுடன் செயலாற்றிக் கோவை மாநகரத்தை மக்கள் வாழ்க்கை நிலைக்கு ஏற்ப மாற்றப் போராடினார். சமூகத்திலும் மக்கள் மத்தியிலும் சேலம் நரசிம்மலு அவர்களுக்குப் பெரும் மதிப்பும் மரியாதையும் இருந்தமையால் இவர் முன் வைத்த கோரிக்கைகளை ஆங்கிலேய அரசு எந்த விதமான மறுப்பும் இன்றிச் செயல்படுத்தியது.

ராஜா ராம் மோகன் ராய் உருவாக்கிய பிரம்ம சமாஜத்தின் தமிழகப் பிரதிநிதியாகச் செயலாற்றிய சேலம் நரசிம்மலு தமிழகம் முழுவதும் பிரம்ம சமாஜத்தின் கிளைகளைப் பரப்பினார். கோயமுத்தூரில் இதன் கிளையைத் தொடங்கி இந்தியாவின் புகழ்பெற்ற பேச்சாளர்களை அழைத்து வந்து பேச வைத்தார். பிரம்ம சமாஜத்தின் முதன்மைப் பணி அடித்தட்டு மக்களின் கல்வி மற்றும் வாழ்க்கை மேம்பாடு என்பதை அடிப்படையாகக் கொண்டு செயலாற்றினார். குழந்தைத் திருமணத்தைத் தடுத்து நிறுத்தி அவர்களுக்கு வேண்டிய கல்வியை வழங்குவதில் சேலம் நரசிம்மலு முக்கியப் பங்காற்றினார். தமிழகத்தில் உடன்கட்டை ஏறும் வழக்கம் இல்லாத அளவுக்குப் பெண்களின் மறுமலர்ச்சிக்காகப் போராடினார். விதவைப் பெண்களுக்குத் தனியாக அறக்கட்டளையைத் தொடங்கி அவர்களின் புனர் வாழ்வுக்காகப் பாடுபட்டார்.

கிராம அளவிலும், நகர அளவிலும் பிரம்ம சமாஜம் மூலம் சமூக மேம்பாட்டுப் பணிகளில் சேலம் நரசிம்மலு முழுமையாக ஈடுபட்டார்.

அச்சுத் தொழில் மீது கொண்ட ஆர்வம் காரணமாக சேலம் நரசிம்மலு கோவையில் கலாநிதி அச்சகம் ஒன்றைத் தொடங்கி மக்களிடையே விடுதலை உணர்வு மிக்க கருத்துகளைப் பரப்பினார். ஆங்கிலேய அரசு இவர் தொடங்கிய இதழ்களைத் தடை செய்தமையால் ஒவ்வொரு ஆண்டும் வேறு வேறு பெயர்களில் இதழ்களைத் தொடங்கி விடுதலைப் போராட்டம் மற்றும் இலக்கியப் பணிகளில் ஈடுபட்டார். சுதேசாபிமானி – 1877 ஆம் ஆண்டும்,, ஸ்ரீரங்க ஸ்தல பூஷணி – 1878,கோயம்புத்தூர் அபிமானி – 1879 ஆம் ஆண்டும், கோயம்புத்தூர் பத்ரிகா – 1879, கோயமுத்தூர் கலாநிதி – 1881 ஆகிய இதழ்கள் மூலம் தம் கருத்துகளைப் பரப்பினார். ஆங்கிலேயருக்கு எதிராகப் பல்வேறு கருத்துகளைப் பரப்பியமையால் ஆங்கிலேய அரசால் இவரின் கலாநிதி அச்சகத்திற்குத் தடை ஏற்படுத்தப்பட்டது. இருப்பினும் தொடர்ச்சியான விடுதலை மற்றும் இலக்கியப் பணிகளில் தம்மை ஈடுபடுத்திக்கொண்டார் நரசிம்மலு.

தமிழ், தெலுங்கு, ஆங்கிலம் எனப் பன்மொழி அறிந்தவராகத் திகழ்ந்த நரசிம்மலு அவர்கள் தொடர்ச்சியான இலக்கியப் பணிகளில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டார். இவர் எழுதிய சமூக சீர்த்திருத்தக் கட்டுரைகள் இந்திய அளவில் பேசு பொருளாக அன்றைய காலத்தில் பேசப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

பொள்ளாச்சியைச் சார்ந்த சிற்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் சேலம் நரசிம்மலு அவர்களின் வாழ்வியலைத் தொகுத்து வெளியிட்டுள்ளார். அதில் சுமார் 113 நூல்களைத் தமிழ் மொழிக்குத் தந்தவர் சேலம் நரசிம்மலு என்று குறிப்பிடுகிறார்.

இந்தியாவில் பொதுக் கல்வி உருவாகி வந்த நிலையில் நரசிம்மலு அவர்களின் நூல்களே அன்றைய நிலையில் பாட நூல்களாக இருந்தன என்பது வரலாறு குறிப்பிட மறந்த ஒன்று. தமிழில் பாட நூல்களை உருவாக்குவதில் முதன்மையான கல்வியாளராகவும் சேலம் நரசிம்மலு திகழ்ந்தார்.

தமிழில் அறிவியல் ரீதியாக வேளாண்மையை ஆய்வு செய்து விவசாய சாஸ்திரம் என்னும் நூலை உருவாக்கினார். தமிழில் விவசாயத்தை அறிவியல் நிலையில் ஆய்ந்து எழுதிய முன்னோடி நூலாக இந்நூலே திகழ்கின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது. இயற்கை எரு, பயிர் காக்கும் முறை, பயிர் விதைக்கும் முறைகள் ஆகியவற்றை நுட்பமான முறையில் எழுதியுள்ளார்.

திருவரங்கத்தின் வரலாற்றுத் தகவல்களை ஆராய்ந்து நரசிம்மலு எழுதிய நூலை வைத்துத்தான் பிந்தைய வரலாற்று ஆசிரியர்கள் ஆய்வு செய்கின்றனர் என்பதும் இங்குப் பதியப்பட வேண்டிய முக்கியத் தகவலாகும்.

தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுமைக்கும் பயணம் செய்து பயண இலக்கியத்தின் முன்னோடியாகவும் நரசிம்மலு திகழ்கிறார். தென்னிந்திய வரலாறு பேசும் நிலையிலேயே இருந்ததை மாற்றும் வகையில் 1889 ஆம் ஆண்டில் இவர் வெளியிட்ட ‘தென்னிந்திய சரிதம்’ என்ற நூலும், ‘தட்சண இந்திய சரிதம்’ என்ற நூலும் மிக முக்கியமான நூல்களாகத் திகழ்கின்றன.

பிறப்பால் பிராமணச் சமூகத்தவர்தான் இந்து மதத்தின் பெருமைகளை விளக்க வேண்டும் என்ற கொள்கை நிலவிய சூழலில் பெரும் முயற்சி எடுத்து இந்து மதம் பற்றி வேர் முதல் அதன் பல்வேறு தரவுகளை நுணுக்கமாக ஆராய்ந்து சீரிய முறையில் 1898 ஆம் ஆண்டு வெளியிட்டார். இந்தியா முழுமையும் இந்து மதம் பற்றிய பல்வேறு தரவுகளை ஆராய்ந்து வெளியிட்ட நூலாக இந்த நூல் போற்றப்படுகிறது.

சேலம் நரசிம்மலு அவர்களின் பொதுப்பணியைப் பாராட்டி ஆங்கிலேய அரசின் சார்பில் ராவ் பகதூர் பட்டம் அளிக்க முன்வந்த போது, இந்திய விடுதலையே எமக்குப் பட்டம் என்று கூறி மறுத்து மக்கள் பணிகளிலும், விடுதலைப் பணிகளிலும், இலக்கியப் பணிகளிலும் ஈடுபட்ட சேலம் நரசிம்மலு 1922 ஆம் ஆண்டு ஜனவரி 22 ஆம் நாள் தமது அறுபத்து எட்டாம் வயதில் மறைந்தார். தம் வாழ்க்கை முழுவதையும் சமூகப்பணி, நாட்டு விடுதலைப் பணி, கல்விப்பணி, இலக்கியப் பணி என்று வாழ்ந்த சேலம் நரசிம்மலு பற்றி நாம் அறிவது மிக அவசியம்.

வரலாற்றின் முக்கியமான பக்கங்களை உருவாக்கியவரின் வரலாற்றை இன்றைய தலைமுறையினர் வாசித்து, வரலாற்றை அறிவது இன்றியமையாத முக்கியக் கல்வி. கல்வித்திட்டத்தின் முன்னோடியாகத் திகழ்ந்த சேலம் நரசிம்மலு தமிழகத்தின் தலைசிறந்த சிற்பி என்பதும் பதியப் பட வேண்டிய முக்கியத் தகவலாகும்.

0

பகிர:
பொ. சங்கர்

பொ. சங்கர்

கட்டுரையாளர், எழுத்தாளர். தவத்திரு சச்சிதானந்த சுவாமிகள், வேதாத்திரி மகரிசி ஆகியோரின் வாழ்வியல் சிந்தனைகளை ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவர். தொல்லியல் சான்றுகள் தேடி விரிவான பயணங்கள் மேற்கொண்டவர். கோயமுத்தூர் யுவபாரதி மையப்பள்ளியில் தமிழாசிரியராகப் பணிபுரிகிறார். தொடர்புக்கு - tamilshanker@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *