அரசின் திட்டங்களும், நடைமுறைகளும் அரசியல்வாதிகளால் மட்டுமே உருவாக்கப்படுகிறது என்பதை பொய்யாக்கி, இன்று தமிழகம் முழுவதும் அனைத்துக் கிராமங்களிலும் பள்ளிக்கூடங்கள் இருப்பதற்குக் காரணமானவர் நெ.து. சுந்தரவடிவேலு. அரசின் பல திட்டங்களைக் கிராமங்களுக்கும் கொண்டு சேர்த்தவர். தமிழகம் முழுவதும் பள்ளிக் கூடங்கள் இருப்பது போல, பல ஊர்களிலும் நூலகங்களை அமைத்தவர். தமிழ்நாடு கல்வியறிவு பெற்ற மாநிலமாகத் திகழ்வதற்குச் சிற்பியாக, சிலையாக, உளியாகத் திகழ்ந்து நல்ல திட்டங்களை உருவாக்கிக் கருவாக்கியவர் நெ.து. சுந்தரவடிவேலு.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் நெய்யாடுபாக்கம் கிராமத்தில் 1912 ஆம் ஆண்டு அக்டோபர் 12 ஆம் நாள் துரைசாமி – சாரதாம்பாள் தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தவர் நெ.து.சுந்தரவடிவேலு. பள்ளிக்கூடமே இல்லாத கிராமத்தில் பிறந்த இவர் அருகில் உள்ள ஊரில் திண்ணைப் பள்ளியில் கல்வியை முடித்தார்.
ஆரம்பக் கல்வியையும், உயர்கல்வியையும் நிறைவுறக் கற்ற நெ.து. சுந்தரவடிவேலு பெரியாரின் நண்பர் வரதராசு என்பவர் நடத்தி வந்த தமிழ்நாடு பத்திரிக்கையில் ஆசிரியராகப் பணியாற்றி வந்தார். பின்னர் அரசு ஊழியராகப் பணியில் சேர்ந்து தன் பணியைத் தொடங்கினார். ஆரம்ப கால கட்டத்தில் பல நிலைகளில் பணியாற்றினார். 1934 ல் பஞ்சாயத்து உதவி அலுவலர் என்னும் அரசுப்பணியில் சேர்ந்த சுந்தர வடிவேலு, கிராமங்களில் காலியாக இருந்த பஞ்சாயத்துத் தலைவர், உறுப்பினர் பணியிடங்களுக்குப் பலரையும் நியமித்தார். அரசின் சார்பில் பஞ்சாயத்துகளுக்கு வழங்கப்பட்ட நிதியை ஒழுங்குபடுத்திப் பஞ்சாயத்து அமைப்புகள் சரிவர இயங்கத் துணை நின்றார். 1938 ஆம் ஆண்டு துணைக் கல்வி அலுவலராகப் பதவி உயர்வு பெற்ற நெ.து. சுந்தரவடிவேலு, இடைநிற்றல் மற்றும் பள்ளிக்கு வராத குழந்தைகளைக் கணக்கெடுத்துப் பள்ளிக்கு வருகை புரிய வைத்தார்.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற காமராசரைத் தந்தை பெரியார் சந்தித்தபோது நெ.து. சுந்தரவடிவேலு பற்றிக் காமராசரிடம் பாராட்டிப் பேசினார். அப்போது சென்னை மாநகராட்சிப் பள்ளிகளின் நிதி ஒதுக்கீட்டுப் பிரிவில் பணியாற்றி வந்த நிலையில், ஒரு விழாவில் அன்றைய தமிழகத்தின் முதலமைச்சருடன் கலந்து கொண்டார் சுந்தரவடிவேலு. விழா மேடையில் காமராசர் அருகில் அமர்ந்து உரையாடிய போது நெ.து. சுந்தரவடிவேலுவின் திறனையும் அவர் அறிந்து கொள்ள வாய்ப்பாக அமைந்தது. சுதந்திர இந்தியாவில் தமிழகம் வளர்ந்து வரும் மாநிலங்களில் ஒன்றாகத் திகழ்ந்தது. ஆனாலும் கல்வியறிவில் தமிழக விழுக்காடு மிகக் குறைந்தே காணப்பட்டது. இதனை மாற்றப் பல நடவடிக்கைகளை எடுக்க காமராசர் முனைந்தார். ஆனாலும் அவரது திட்டங்கள் நடைமுறைக்கே வராமல் முடங்கிப் போனது. அதற்குக் காரணம் திட்டங்களைச் சரிவர உருவாக்கத் தெரியாத அதிகாரிகள் என்பதை அவரே பல மேடைகளில் கூறியும் உள்ளார்.
தமிழகத்தின் கல்வியறிவை உயர்த்த தமிழகம் முழுவதும் கல்விச்சாலைகளை நிறுவ அரசு சார்பில் திட்டம் தயாரிக்கப்பட்டு காமராசர் வசம் ஒப்படைக்கப்பட்டது. அத்திட்டத்தின் நடைமுறைகளை விளக்கிய அதிகாரிகள் கிட்டத்தட்ட இத்திட்டத்தைச் செயல்படுத்தவே இயலாது என்னும் நோக்கில் கூறினர். இதனால் மனம் வெதும்பி இருந்த நேரத்தில் ஒரு நிகழ்வின் பொருட்டு நெ.து.சுந்தரவடிவேலு காமராசரைச் சந்தித்தார். அப்போது காமராசர் இந்தத் திட்டம் பற்றி நெ.து. சுந்தரவடிவேலுவிடம் விசாரித்தார். திட்ட அறிக்கையை வாங்கிப் படித்த சுந்தரவடிவேலு இதே திட்டத்தை இதை விடக் குறைந்த செலவிலேயே நடைமுறைப்படுத்த இயலும் என்பதை விளக்கினார்.
நெ.து. சுந்தரவடிவேலுவின் திட்டத்தைக் கேட்ட காமராசர் மனம் மகிழ்ந்து அதனைச் செயல்படுத்த அவரையே பொதுக்கல்வி இயக்குநராக நியமித்தார். பதவி முறையில் கீழ் நிலையில் இருக்கும் ஒருவரை எவ்வாறு உயர் பதவியில் அமர்த்தலாம் என்று பெரும் சச்சரவுகள் வலுத்த நிலையில் காமராசர் பலரின் எதிர்ப்பையும் மீறி நெ.து. சுந்தரவடிவேலை பதவியில் நீடிக்கச் செய்தார். ராஜாஜி அரசால் அரசாணைப் பிறப்பிக்கப்பட்டு நடைமுறையில் இருந்த குலக்கல்வித் திட்டத்தின் மூலம் அரை நாள் மட்டுமே பள்ளிகள் செயல்படும்; மீதமுள்ள நேரங்களில் குலக்கல்வி எனப்படும் குலத் தொழிலைக் கற்க வேண்டும் என்ற ஆணையை ரத்து செய்தார்.
பல கிராமங்களுக்கும் பயணம் செய்த சுந்தர வடிவேலு அனைத்துக் கிராமங்களிலும் துவக்கப்பள்ளி என்னும் முன்னோக்குத் திட்டத்துடன் மிகக் குறைந்த செலவில் பள்ளிகளைத் தொடங்கினார். இவருக்கு முன்பு பதவியில் இருந்தவர்கள் கூறிய தேவையில்லாத செலவினங்களைக் குறைத்து அடிப்படைக் கல்விக்குத் தேவையான அளவில் பள்ளிக்கூடங்களைத் திறக்க காமராசர் ஒப்புதலுடன் செயல்படுத்தினார். ஆனாலும் பல பள்ளிக்கூடங்களில் மாணவர் சேர்க்கை குறைந்த அளவிலேயே இருந்தது. வட மாவட்டங்களில் பள்ளிக்கூடங்களுக்கு ஆய்வுக்குப் போன போது பல பள்ளிகளில் மாணவர்கள் உணவு உண்ணாமல் பள்ளிக்கு வருவதையும், மதிய உணவு இன்றிச் சிரமப்படுவதையும் காமராசரிடம் எடுத்துரைத்தார்.
நெ.து. சுந்தரவடிவேலு சென்னை மாநகராட்சியில் பணியாற்றியபோது மாநகராட்சிப் பள்ளிகளில் நடைமுறையில் இருக்கும் மதிய உணவுத் திட்டம் பற்றியும், அதன் செலவினங்கள் குறித்தும் காமராசரிடம் எடுத்துக் கூறினார். இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்தினால் தமிழகம் முழுவதும் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்தலாம் என்பதையும் விளக்கினார். ஆண்டு முழுவதும் 210 நாட்களுக்கு நாம் மாணவர்களுக்கு உணவு வழங்க வேண்டும் என்பதையும் அதன் செலவுத் திட்டங்கள், அதனால் ஏற்படும் பலன்கள் ஆகியவற்றையும் விளக்கினார். அந்தத் திட்டத்தின் நடைமுறைகளைக் கேட்டறிந்த காமராசர் உடனே தமிழகம் முழுவதும் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த உத்தரவிட்டார். நெ.து. சுந்தரவடிவேலுவின் முயற்சியால், காமராசரின் ஆணையால் தமிழகம் முழுவதும் ஐந்து லட்சம் மாணவர்களுக்கு உணவு வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் மூலம் தமிழகத்தில் படிப்பறிவு விழுக்காடு மிகுதியாக அதிகரிக்கத் தொடங்கியது.
கிராமங்களில் நெல் அறுவடையின் போது முதல் படியை இறைவனுக்கும், இரண்டாவது படி நெல்லைத் தொழிலாளர்களுக்கும் வழங்குவது நடைமுறையில் இருந்தது. கிராமங்கள் தோறும் பயணித்த நெ.து. சுந்தரவடிவேலு விவசாயிகளிடம் மூன்றாவது படி நெல்லை அந்தந்த ஊர்களில் இருக்கும் பள்ளிக்குழந்தைகளுக்குத் தாருங்கள் எனக் கூறி அதன் மூலம் அனைத்துக் கிராமங்களிலும் மூன்றாவது படி நெல் அரிசியை அந்தந்த ஊரின் பள்ளிக்கூடங்களுக்கு உணவு வழங்குதல் என்னும் நடைமுறையை உருவாக்கினார்.
நெ.து. சுந்தரவடிவேலு, காமராசரிடம் ஆசிரியர்களுக்கு ஓய்வூதியம் வழங்கும் திட்டத்தைப் பற்றி எடுத்துரைத்தார். சுந்தரவடிவேலுவின் திட்டத்தின் மூலம் காமராஜரின் வழிகாட்டுதலில் தொடக்க, நடுநிலை, உயர்நிலைப் பள்ளிகள், கலைக் கல்லூரிகள் ஆகியவற்றில் பணிபுரியும் அனைத்து நிலை ஆசிரியர்களுக்கும் ஓய்வூதியம் வழங்கப்பட்டது. 1955-56 தமிழக அரசின் ஆண்டு வரவு – செலவுத் திட்டத்தில் முதலாவதாகத் தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கு ஓய்வூதியம் அறிமுகப்படுத்தப்பட்டது. தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் 60,000 பேர் அத்திட்டத்தால் நன்மை அடைந்தனர். வேறெந்த மாநிலத்திலும் அப்போது நடைமுறையில் இல்லாத முன்னோடித் திட்டமாக இந்தத் திட்டம் போற்றப்பட்டது. ஆசிரியர்களுக்கு ஓய்வூதியம் என்னும் நடைமுறையை இந்தியாவிலேயே முதன் முறையாகத் தமிழகத்தில் நெ.து. சுந்தரவடிவேலு நடைமுறைப்படுத்தினார்.
1955-ல் உயர்நிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கும் 1961-ல் கல்லூரி ஆசிரியர்களுக்கும் அது விரிவுபடுத்தப்பட்டது.
அன்றைய நிலையில் இந்திய அரசு சார்பில் ஜவஹர்லால் நேரு படித்த, வேலை இல்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புத் திட்டம் ஒன்றை அறிவித்தார். அத்திட்டத்தைப் பயன்படுத்தி, பள்ளியிறுதித் தேர்ச்சி பெற்றவர்களை வைத்துத் தொடக்கப்பள்ளி தொடங்கவும் கூடுதல் ஆசிரியர்கள் தேவைப்படும் இடங்களில் புதியவர்களை நியமிக்கவும் நெ.து. சுந்தரவடிவேலு திட்டங்களை வகுத்தார். காமராசரிடம் அந்தத் திட்டங்கள் பற்றி எடுத்துரைத்தார். மத்திய அரசு தமிழகத்துக்கு ஒதுக்கிய நிதியின்படி, ஆறாயிரம் பேரை ஆசிரியர்களாக நியமித்தார். ஒரு மைல் தொலைவுக்குள் பள்ளி இல்லாத 500 பேர் வசிக்கும் சிற்றூர்களில் எல்லாம் தொடக்கப் பள்ளிகள் தொடங்கப்பட்டன. இதன் படி தமிழகத்தில் கிட்டத்தட்ட அனைத்துக் கிராமங்களிலும் ஓராசிரியர் பள்ளிக்கூடங்கள் தொடங்கப்பட்டன.
நெ.து. சுந்தரவடிவேலுவின் அடுத்த திட்டம் பள்ளிகளைச் சீரமைத்து உரிய கல்விச் சாலையாக மாற்ற வேண்டும் என்பதுதான். அரசின் பெரு முயற்சியால் தமிழகம் முழுவதும் கல்விச் சாலைகள் திறக்கப்பட்டாலும், பாடத் துணைக்கருவிகள், கட்டடங்கள், நாற்காலிகள் இல்லாமலேயே பல பள்ளிகள் இயங்கி வந்தன. இதனை காமராசரின் பார்வைக்கு எடுத்துச் சென்ற சுந்தரவடிவேலு, ஆண்டுதோறும் ஒவ்வொரு ஊரிலும் பள்ளிச் சீரமைப்பு மாநாடு நடத்தி உரியவர்களிடம் நிதி பெற்று தமிழகம் முழுவதும் பள்ளிகளைச் சீரமைக்கலாம் என்பதை எடுத்துரைத்தார். காமராசரின் உத்தரவால் தமிழகம் முழுவதும் சுந்தரவடிவேலு இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்தினார். இந்தத் திட்டத்தால் தமிழகம் முழுவதும் பள்ளிக்கூடங்களின் சுவர்கள் வெள்ளையடிக்கப்பட்டு, பாடத் துணைக்கருவிகளுடன் பள்ளிகள் செம்மையாக இயங்கத் தொடங்கின. இவ்வாறு தமிழகத்தின் கல்வியை அனைத்துக் கிராமங்களுக்கும், அனைத்து மக்களுக்கும் கொண்டு சேர்த்தார் சுந்தரவடிவேலு.
தமிழகத்தின் பொதுக்கல்வி இயக்குநராகப் பதவி வகித்தபோது, நூலகத்துறையின் பொறுப்பையும் நெ.து. சுந்தரவடிவேலுவிடம் காமராசர் ஒப்படைத்தார். அதன் வாயிலாகக் கல்வித்துறையுடன் இணைந்து நூலகத்துறையை வளர்க்கும் பணிகளிலும் ஈடுபட்டார். இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அவினாசிலிங்கம் செட்டியாரால் பொது நூலகச் சட்டம் இயற்றப்பட்டது. அந்தத் துறையின் இயக்குநராகப் பதவி ஏற்ற சுந்தரவடிவேலு தமிழகத்தின் அனைத்து வட்டங்களிலும் சுமார் ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட நூலகங்களைத் தொடங்கினார். மாணவர்கள் மட்டுமின்றி பொது மக்களும் அனைத்துத் தரவுகளையும் அறிந்து கொள்ள முன்னெடுக்கப்பட்ட இந்தத் திட்டம் இந்தியாவுக்கே முன்மாதிரியானது என்பது இங்குப் பதியப்படவேண்டிய தரவாகும்.
கல்வித்துறையில் நெ.து. சுந்தரவடிவேலு ஆற்றிய பணிகளுக்காக இந்திய அரசின் சார்பில் பத்ம விருது வழங்கிக் கெளரவிக்கப்பட்டது. சுந்தரவடிவேலு அவர்களின் பணி உயர்கல்வித்துறையிலும் முதன்மை பெற வேண்டும் என்னும் நோக்கில் காமராசருக்குப் பிறகு பதவிக்கு வந்த திராவிட முன்னேற்றக் கழகம் சென்னைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக சுந்தரவடிவேலுவை நியமனம் செய்தது. அன்றைய காலத்தில் தமிழ்நாடு முழுமையும் உள்ள கல்லூரிகள் சென்னைப் பல்கலைக்கழகத்தின் கீழேயே இயங்கி வந்தன. ஆண்டுதோறும் பட்டமளிப்பு விழா சென்னையிலேயே நடைபெறுவதால் மற்ற ஊர்களில் இருக்கும் மாணவர்களின் சிரமத்தைப் போக்கும் வகையில் அந்தந்தக் கல்லூரிகளிலேயே பட்டமளிப்பு விழா நடத்தி பட்டம் கொடுக்க பல்கலைக்கழக விதிகளில் மாற்றம் கொண்டு வந்தார்.
சென்னைப் பல்கலைக்கழகம் மூலமாக தமிழ் அல்லாத பிற துறைப் படிப்புகளைப் படிக்கும் மாணவர்கள் தமிழைப் பயிற்று மொழியாகப் பயில வேண்டும் என்னும் நடைமுறையைக் கொண்டு, தமிழ்மொழியைப் பள்ளிக் கல்வி முடித்தும், உயர் கல்வியிலும் படிக்கும் நிலையைக் கொண்டு வந்தார் நெ.து. சுந்தரவடிவேலு. இதன் மூலம் பல ஆயிரம் தமிழ்ப் பேராசிரியப் பணியிடங்களும் தோற்றுவிக்கக் காரணமாக இருந்தார். தமிழக வரலாற்றின் கரும்பலகைகளில் முதன் முதலாக எழுத்துகளை அனைத்துக் கிராமங்களுக்கும் கொண்டு சேர்த்த தமிழ் மண்ணின் மைந்தரை அரசியல் கட்சிகள் மக்களிடம் கொண்டு சேர்க்காமல் இந்தத் திட்டங்களைத் தாங்கள் கொண்டு வந்தது போலத் தேர்தலுக்குத் தேர்தல் பிரச்சாரம் செய்து வருவது காலத்தின் கோலம்.
குழந்தைகளுக்குப் பதின்மூன்று நூல்களும் பெரியவர்கள் படிப்பதற்காக 30க்கும் மேற்பட்ட நூல்களையும் நெ.து. சுந்தர வடிவேலு எழுதியுள்ளார். தம் வாழ்க்கை வரலாற்றுத் தொகுப்பை மூன்று தொகுதிகளாக வெளியிட்ட சுந்தர வடிவேலு 1950 களுக்குப் பிறகு தமிழகத்தில் நடைபெற்ற பல்வேறு தரவுகளைத் தம் நூலில் குறிப்பிட்டுள்ளார். காமராசர் மற்றும் சி.சுப்பிரமணியம் தலைமையின் கீழ் கிட்டத்தட்ட எட்டு ஆண்டுகள் பணி புரிய நேர்ந்த போது எவ்விதக் குறுக்கீடுகளையும் இவர்கள் செய்தது இல்லை என்பதையும் தம் நூலில் குறிப்பிட்டுள்ளார். திராவிடக் கட்சிகள் ஆட்சிக்கு வந்தபோது தம் பதவியின் மூலம் உழவர் எழுத்தறிவுத் திட்டத்தைக் கடும் போராட்டத்திற்குப் பிறகு கொண்டு வந்தமையையும் அந்தத் திட்டத்தை அரசு சரிவரச் செயல்படுத்தவில்லை என்பதையும் குறிப்பிட்டுள்ளார். ஐந்து வயதுக் குழந்தை தொடங்கி முதியோர் கல்வித் திட்டம் வரை பல திட்டங்களைச் செயல்படுத்திய சுந்தரவடிவேலு பற்றி எந்த அரசியல் கட்சிகளும் மக்களிடம் எடுத்துச் சொல்லவில்லை என்பது வரலாறு தந்த உண்மை.
தம் வாழ்நாள் முழுவதும் தமிழகத்தின் கல்வி நலனுக்காக, அறிவு மேம்பாட்டுக்காகப் பல்வேறு திட்டங்களை உருவாக்கிய தமிழ் மண்ணின் மைந்தர் நெ.து.சுந்தரவடிவேலு 1993 ஆம் இயற்கை எய்தினார்.
தமிழகத்தில் பெரும்பாலான மக்களுக்குக் கல்வி அறிவு அளித்தவராகவும், லட்சக்கணக்கான ஆசிரியர் பணியிடங்களை உருவாக்கியவராகவும், தமிழகம் முழுவதும் பொது நூலகங்களை உருவாக்கியவராகவும் இன்னும் பல்வேறு திட்டங்களை நன்முறையில் செம்மைப்படுத்தி தமிழகத்தின் மேம்பாட்டிற்கு அடித்தளமிட்ட நெ.து. சுந்தரவடிவேலு போல அரசு அதிகாரிகள் மக்களுக்காக இயங்க வேண்டும். தமிழகப் பள்ளிக் கல்வித்திட்டத்தின் தந்தை சுந்தரவடிவேலு அவர்களின் நற்பணிகளை இளைய தலைமுறையினர் அறிந்து அவரைப் போல மானுடச் சமூகத்திற்குப் பாடுபடும் தலைவராக உருவாக உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும்.
0
அருமைப்பதிவு. சங்கரனுக்கு வாழ்த்துக்கள்
நெ.து. சுந்தரவடிவேலு அவர்களின் வழிகாட்டலில் கோவை பேரூராதீனக் கல்விச் சாலையில் கருமவீரர் காமராசு ஐயா சத்துணவுக் திட்டத்து சர்க்கரைப் பொங்கலோடு தொடங்கியதை நினைத்து மகிழ்கிறேன்
நன்றி