Skip to content
Home » மண்ணின் மைந்தர்கள் #25 – இராமலிங்க அடிகளார்

மண்ணின் மைந்தர்கள் #25 – இராமலிங்க அடிகளார்

இராமலிங்க அடிகளார்

வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடிய மகான். இந்துக்களின் சாதிய அடுக்குமுறையைத் தன் நூல்களிலும், பணிகளிலும் சாடியவர். தமிழக ஆதீனங்கள் ஆறுமுக நாவலரை வைத்து அருட்பா – மருட்பா என வழக்கு தொடுக்க வைத்த போது எதிர் நின்று களமாடியவர். சாதி பார்க்காமல் மனிதர்களுக்கு உணவு படைத்தவர். சமூக ஏற்றத்தாழ்வுடன்தான் மானுடம் இருக்க வேண்டும் என்ற சைவ சமயத்தின் அடிப்படையை அடித்து நொறுக்கியவர். சிதம்பரம் சிற்றம்பலத்தில் வழிபாடு மறுக்கப்பட்டவர்கள், வடலூர் பேரம்பலம் வாருங்கள் என அறைகூவல் விடுத்தவர். தமிழக ஆதீனங்களின் கொள்கைகளையும், தில்லை வாழ் தீட்சிதர்களையும் எதிர்த்து இயக்கம் தொடங்கி இயங்கியவர். இப்படிப் பல்வேறு பெருமைகளுக்கு அணிகலனாக விளங்கும் இராமலிங்க அடிகளார் என்னும் வள்ளலார் பற்றிய வாழ்வியல் தொகுப்பை, ஆன்மீக உலகின், தமிழ் மண்ணின் மாபெரும் மைந்தரைப் பற்றிய வாழ்வியல் தொகுப்பை அறியலாம்.

கோயிலை நோக்கிய குடிகள், குடிகளை நோக்கிய கோயில்கள் என்னும் அமைப்பு முறை தமிழகத்தில் பலமாக இருந்த காலத்தில் 1823 அக்டோபர் ஐந்தாம் நாள் சிதம்பரம் அருகே மருதூர் என்னும் கிராமத்தில் இராமையா பிள்ளை – சின்னம்மையாருக்கு மகனாக அவதரித்தவர் இராமலிங்கம் என்னும் இயற்பெயர் கொண்ட வள்ளலார்.

இளம் வயதிலேயே அருளாற்றலும், தவ ஆற்றலும் நிரம்பிக் காண்போர் வணங்கும் வாழ்வை வாழ்ந்தவர் இராமலிங்க அடிகளார். தம் இளம் வயதிலேயே தந்தையை இழந்தமையால் அண்ணன் அரவணைப்பில் சென்னையில் வளரத் தொடங்கினார். தனது அண்ணனின் குருவிடம் கல்வி கற்கச் சென்றார். ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம், ஒருவரையும் பொல்லாங்குச் சொல்ல வேண்டாம் என எதிர்மறைப் பாடலை நான் சொல்ல விரும்பவில்லை என்று,

‘ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற உத்தமர் தம் உறவு வேண்டும்
உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும்
பெருமை பெறும் நினது புகழ் பேச வேண்டும்
பொய்மை பேசாதிருக்க வேண்டும்
பெருநெறி பிடித்தொழுக வேண்டும்
மதமான பேய் பிடியாதிருக்க வேண்டும்’

என்று பாடி குருவையே வியக்க வைத்தவர். தம் பத்து வயதிற்குள் அருள்நெறிச் சிந்தனைகளை மக்களுக்கு எடுத்துரைக்கும் மாண்புறு மைந்தராக மாறியவர்.

இராமலிங்க அடிகளாரின் அண்ணன் மிகப் புகழ்பெற்ற ஆன்மீகச் சொற்பொழிவாற்றும் தகைமையாளராக விளங்கினார். ஒரு கூட்டத்தில் உடல்நிலை சரியில்லாத நிலையில் அந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ள இயலாது என்பதைச் சொல்லிவிட்டு வா என தம்பி இராமலிங்க அடிகளாரை அண்ணன் அனுப்பி வைத்தார். ஆனால் அங்குச் சென்ற இராமலிங்க அடிகளார் மேடை ஏறி திருஞானசம்பந்தரின் அருட்பாடல்களை இசையுடன் பாடி, அந்தப் பாடல்களுக்கு அருள் விளக்கம் அளித்து அங்கிருந்த அனைவரின் பாராட்டையும் பெற்றார். சென்னை கந்தகோட்டத்தில் பல மணிநேரங்கள் இருந்து இறைச் சிந்தனையில் அருள் சிந்தனை மலர்களைப் படைத்து வந்தார். தம் குடும்பத்தாரின் வற்புறுத்தலால் திருமணம் செய்து கொண்டார் . தம் மனைவியின் சம்மதத்தின் பேரில் துறவு வாழ்க்கை மேற்கொண்டு வாழத்தொடங்கினார்.

சென்னையிலிருந்து சிதம்பரத்திற்குச் சென்ற இராமலிங்க அடிகளார் வடலூரில் சத்திய ஞான தர்ம சாலையை நிறுவினார். தாம் நிறுவிய சபையின் மூலம் மக்களின் வழிபாட்டிற்கு வழி ஏற்படுத்தினார்.

1858 முதல் ஒன்பது ஆண்டுகள் கருங்குழி கிராமத்தில் தங்கியிருந்தார். 1867 ஆம் ஆண்டு வடலூரில் கிராமத்து மக்களிடம் குறிப்பிட்ட அளவு நிலத்தைப் பெற்று ‘சத்திய சுத்த சன்மார்க்க சத்திய தருமச்சாலை’ என்னும் அமைப்பைத் தொடங்கினார். அந்த அமைப்பின் மூலம் சாதி, மத, இனம், உயர்ந்தோர், தாழ்ந்தோர் என பாகுபாடின்றி அனைவருக்கும் உணவு என்னும் உன்னத நோக்குடன் அறப்பணியைத் தொடர்ந்தார். இந்த அறப்பணி நிலையம் தொடங்கப்பட்ட மூன்று நாட்களில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் உணவு உண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இரவு பகல் பாராமல் பசிப்பிணியைப் போக்கியதால் இராமலிங்க அடிகளாரை மக்கள் ‘வள்ளலார்’ என அழைக்கத் தொடங்கினர். ‘சன்மார்க்க போதினி பாடசாலை’ என்னும் அமைப்பைத் தொடங்கி கல்வி உரிமை மறுக்கப்பட்ட மக்களுக்கும், ஏழைகளுக்கும் இலவசக் கல்வி என்னும் முறைமையைத் தொடங்கினார். குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அனைவரும் இங்குக் கல்வி பயிலலாம் என்பதை அக்கல்வி நிறுவனத்தின் குறிப்பில் பதிவு செய்துள்ளார்.

இந்து சமயத்தில் அடித்தட்டு மக்களாக இருந்தவர்களும், உயர் பிரிவினராக இருந்தவர்களும் வள்ளலாரின் கொள்கையின் பால் ஈர்ப்பு ஏற்பட்டு, அவர் உருவாக்கிய நெறியைப் பின்பற்றத் தொடங்கினர். சைவ சமயத்தின் சடங்கு முறைகளைக் கடுமையாக எதிர்த்தார். சைவ சமயத்தின் அமைப்புகளாகத் திகழ்ந்த ஆதீனங்களின் கொள்கைகளையும், தில்லை வாழ் அந்தணர்களின் கொள்கைகளையும் எதிர்த்தார். இதனைத் தம் பாடல்களின் வாயிலாக வெளிப்படுத்தினார்.

சிதம்பரம் சிற்றம்பல மேடையில் பலதரப்பட்ட மக்களையும் அங்கிருந்த தீட்சிதர்கள் வழிபாடு செய்ய அனுமதிக்காத போது, வள்ளலார் தம் பாடல்களாலும், சொற்பொழிவுகளின் மூலமும் வடலூர் பேரம்பலம் வாருங்கள் என அழைப்பு விடுத்து மக்களை வழிநடத்தினார். இதன்மூலம் சிதம்பரம் திருக்கோயிலில் வழிபாட்டு உரிமை கிடைக்கப்பெறாதவர்கள் வள்ளலாரின் பேரம்பல மேடைக்குச் சென்று உரிமையுடன் வழிபாடாற்றி மகிழ்ந்தனர்.

சைவ நெறிமுறைகளுக்கு மாறாக, ஒளி வழிபாட்டை வள்ளலார் உருவாக்கியதால் சைவ வழிபாட்டாளர்கள் வள்ளலாரை எதிர்க்கத் தொடங்கினார்கள். சைவ வழிபாட்டு முறையை மட்டுமே எதிர்த்த வள்ளலார் சைவ சமயத்தின் நால்வர் பெருமக்களைத் தன் நூல்களில் மிக உயர்வாகவே குறிப்பிட்டுள்ளார். அதனைத் தனது பாடல்களிலும் வழிபாட்டிலும் குறிப்பிட்டுள்ளார் .

வள்ளலார் பாடல்களை மக்கள் ‘அருட்பா’ எனப் போற்றி வந்ததை எதிர்த்து, அப்பாடல்கள் அருட்பா அல்ல மருட்பா என்று சைவசமயவாதிகள் பிரச்சாரம் செய்யத் தொடங்கினர். இலங்கையைச் சார்ந்த ஆறுமுக நாவலர் வள்ளலாரை மிகக் கடுமையாகச் சாடத் தொடங்கினார்.

இராமலிங்க அடிகளாரின் பாடல்களை மருட்பா என திருவாவடுதுறை ஆதீனம், தருமபுர ஆதீனம், திருவண்ணாமலை ஆதீனம் ஆகியோர் சார்பில் ஆறுமுக நாவலர் கடுமையான பிரச்சாரங்களை முன்வைத்தார்.

இராமலிங்க அடிகளாரின் பாடல்களை ஆதரித்தும் எதிர்த்தும் ஆங்காங்கே கூட்டங்கள் நடைபெறத் தொடங்கின. இலங்கையைச் சேர்ந்த ஆறுமுக நாவலர் சைவ சமயக் கோட்பாடுகளை ஆதரித்தும், இராமலிங்க அடிகளாரை எதிர்த்தும் கடுமையான சொற்களைக் கூறத்தொடங்கினார். சிதம்பரத்தில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் கலந்து கொண்ட இராமலிங்க அடிகளார் வாழ்வியல் உண்மைகளை உணர்த்தும் பல கருத்துகளை எடுத்துரைத்தார். சைவ சமயம் பின்பற்றும் தீண்டாமைக் கருத்துகளை எதிர்த்தும் பேசினார். இதனை எதிர்த்து ஆறுமுக நாவலர் இராமலிங்க அடிகளார் மீது வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கு மஞ்சக்குப்பம் நீதிமன்றத்தில் நீதிபதியின் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வழக்கில் தன் தரப்பு வாதத்தை முன்வைக்க இராமலிங்க அடிகளார் நீதிமன்றம் வருகை தந்தபோது, நீதிமன்றத்தில் இருந்த அனைவரும் எழுந்து நின்று மரியாதை செலுத்தினார்கள். இராமலிங்க அடிகளார் மீது வழக்குத் தொடுத்த ஆறுமுக நாவலரும் எழுந்து நின்றார். இதனைக் கவனித்த நீதிபதி, இராமலிங்க அடிகளாருக்கு மரியாதை தருவது போல அவரின் பாடல்களுக்கும் மரியாதை தருவதில் தவறில்லை என்றும் அவரின் பாடல்கள் அருட்பா பாடல்களே என்றும் தீர்ப்பு வழங்கினார்.

இராமலிங்க அடிகளாருக்குச் சார்பாகத் தீர்ப்புகள் வந்தாலும் சைவ சமயத்தைச் சார்ந்தோர் கடுமையான வாதங்களையும், அவதூறுகளையும் முன்வைத்தே வந்தனர். இதனைக் கண்டுகொள்ளாத வள்ளலார் தம் சமூகப் பணியையும், சமயப் பணியையும் செவ்வனே ஆற்றி வந்தார். தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் வள்ளலாருக்குச் சீடர்கள் பெருகினர். இந்து மதத்தின் ஒரு துணை அமைப்புப் போலவே சத்திய ஞான தரும சாலை செயல்படத்தொடங்கியது.

மக்களுக்கு உணவும், கல்வியும் அளித்துப் பண்பட்ட மக்களாக மாற்றும் நற்சேவையில் ஈடுபட்ட இராமலிங்க அடிகளார், 1874 ஆம் ஆண்டு தைப்பூச நாளன்று தன் சத்திய ஞான தரும சாலையில் சிறு குடிலில் ஓர் அறையில் உள் நுழைந்தார். அவரின் விருப்பப்படி அவரது சீடர்களால் கதவு தாழிடப்பட்டது. அந்த அறையில் இருந்த சிறு துவாரமும் அவரின் விருப்பத்தின்படி அடைக்கப்பட்டது. மீண்டும் சில நாட்கள் கழித்து அறையைத் திறந்த போது வள்ளலார் ஒளி வடிவில் கலந்திருந்தார். அவரின் உடலோ எலும்புகளோ எதுவும் அந்த அறையில் காணப்படவில்லை.. இதனையே அவரின் சீடரான தொழுவூர் வேலாயுத முதலியார் பதிவு செய்துள்ளார். இதனையே அரசினரின் ஆவணங்களும் பதிவு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இராமலிங்க அடிகளாரின் பாடல்களைத் தொகுத்து தொழுவூர் வேலாயுத முதலியார் ஆறு பகுதிகளாகப் பிரித்து நூலாக வெளியிட்டார். அவரின் பாடல் தொகுப்புகளுக்கு, ‘திருவருட்பா’ எனப் பெயரிட்டார்.அவரின் ‘மனுமுறை கண்ட வாசகம்’ நூலும் பின்னர் நூல் வடிவம் பெற்றது. வள்ளலார் பெரிதும் வலியுறுத்திய ‘ஜீவகாருண்ய விளக்கம்’ நூல் தமிழ் இலக்கிய உலகிலும், ஆன்மீக உலகிலும் இன்றுவரை பலரும் போற்றும் நூலாகப் போற்றப்பட்டு வருகின்றது. தமிழ் இலக்கிய உலகில் மிகப்பெரிய ஆசிரிய விருத்தம் படைத்தவராக, 192 சீர் ஆசிரிய விருத்தம் படைத்தவராக வள்ளலாரே திகழ்கிறார்.

அருட்பா மருட்பா விவாதத்தை மறைமலை அடிகள் பெரும் வாதத்திற்குப் பின்னர், அருட்பாதான் என்று நிறுவி சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். தமிழ் சமய உலகில் பெரும் சமஸ்தானங்களாகத் திகழ்ந்த ஆதீனங்கள் செய்யாத சமயப்பணியை, சமூகப்பணியைத் தனி ஓர் ஆளுமையாக நின்று நடத்திக் காட்டியவர் வள்ளலார். ஆதீனங்களிலும், அவர்களின் கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோயில்களிலும் அன்றைய நாள் முதல் கடைப்பிடிக்கப்பட்ட சாதிய வேறுபாடுகளை நீக்கி அனைவருக்கும் கல்வி, எல்லோரும் வழிபடும் இறைவன் என்னும் பொதுமை முறையை உருவாக்கிய இராமலிங்க அடிகளாரின் குருபூசை தைப்பூச நாளன்று உலகம் முழுவதும் அவரின் அடியார்கள் கடைப்பிடித்து வழிபட்டு வருகின்றனர். 1867 ஆம் ஆண்டு முதல் இன்று வரை தொடர்ச்சியாக அவர் பற்ற வைத்த அணையா நெருப்பும், அருட்சிந்தனைகளும் அணையா ஜோதியாக வழிபடப்படுகிறது.

வாடிய பயிர்களை மட்டுமல்ல, வாடிய மனிதர்களையும் அரவணைத்து அவர்களுக்கு உணவும் கல்வியும் அளித்து பெருங்கருணையின் இருப்பிடமாகத் திகழ்ந்த தமிழ் மண்ணின் மைந்தரான இராமலிங்க அடிகளாரின் சிந்தனைகள் சமுதாய மறுமலர்ச்சிக்கும் மானுட மேம்பாட்டிற்கும் என்றும் துணை நிற்கும் மந்திரங்கள். இராமலிங்க அடிகளாரின் அருட்சிந்தனைகளை அடியொற்றி வழிபாடாற்றி வணங்கி மகிழ்வோம்.

0

பகிர:
nv-author-image

பொ. சங்கர்

கட்டுரையாளர், எழுத்தாளர். தவத்திரு சச்சிதானந்த சுவாமிகள், வேதாத்திரி மகரிசி ஆகியோரின் வாழ்வியல் சிந்தனைகளை ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவர். தொல்லியல் சான்றுகள் தேடி விரிவான பயணங்கள் மேற்கொண்டவர். கோயமுத்தூர் யுவபாரதி மையப்பள்ளியில் தமிழாசிரியராகப் பணிபுரிகிறார். தொடர்புக்கு - tamilshanker@gmail.comView Author posts

1 thought on “மண்ணின் மைந்தர்கள் #25 – இராமலிங்க அடிகளார்”

  1. வள்ளலார் மறைவை மேலோட்டமாக செல்லிச் செல்கிக்றாய் சங்கர். அவர் மறைவு இன்றும் சர்சையாகவே உள்ளது. இன்னும் அது குறித்து விவரித்தால் நன்று

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *