18 ஜூலை 1993. சென்னையின் மெரினா கடற்கரை பரபரப்பானது. எம்ஜிஆர் சமாதி அருகே ஒரு சின்ன மேடை அமைக்கும் பணி ஆரம்பமானது. பெரிய அளவில் ஷாமியானா பந்தல் போடப்பட்டு, நாற்காலிகள் அடுக்கப்பட்டன. இன்னொரு பக்கம் டேபிள் ஃபேன்களும் ஏராளமான கூலர் ஃபேன்களும். பெரிய வேனில் பழுப்பு நிற சோபா செட்டை ஆட்கள் இறக்கிக் கொண்டிருந்தார்கள். முதல்வர் ஜெயலலிதாவுக்கு பிடித்தமான சோபா செட்.
எதற்காக மேடை? எதற்காக சோபா செட், படுக்கை? யாருக்கும் புரியவில்லை. பத்திரிக்கையாளர்களும் போட்டோகிராபர்களும் விபரம் தெரியாமல் பீச் ரோட்டில் எதிர்பட்ட அதிகாரிகளையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்தார்கள். அவசர அவசரமாகக் கிளம்பி வந்துகொண்டிருந்த அமைச்சர்களுக்கும் தெரியவில்லை. அண்ணாசாலை பத்திரிகை அலுவலகங்களின் தொலைபேசிகள் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்தன. என்ன நடக்கப்போகிறது என்பது யாருக்கும் தெரியவில்லை.
கருப்பு நிறச் சீருடை அணிந்த ஆயுதமேந்திய பாதுகாப்பு வீரர்கள் புடை சூழ ஜெயலலிதாவின் கார், எம்ஜிஆர் சமாதிக்கு அருகே ஊர்ந்து வந்தது. கூடியிருந்த பத்திரிகையாளர்களைப் பார்த்து கையசைத்த ஜெயலலிதா, எதுவும் பேசாமல் மேடையேறினார். பழுப்பு நிற சோபாவில் அமர்ந்ததும் உதவியாளர் ஓடி வந்து மூக்குக் கண்ணாடியையும் ஓர் ஆங்கிலப் புத்தகத்தையும் தந்துவிட்டுச் சென்றார்.
மேடையையும் சுற்றி நிற்பவர்களையும் ஒருமுறை பார்த்த ஜெயலலிதா, ஒரு பெரிய கண்ணாடியை அணிந்து கொண்டார். பின்னர் நிதானமாகப் புத்தகத்தைக் கையிலெடுத்துப் படிக்க ஆரம்பித்துவிட்டார்.
1991, ஜூன் 25ல் வெளியான காவிரி நதி நீர் ஆணையத்தின் இடைக்காலத் தீர்ப்பை அமல்படுத்தாத கர்நாடக அரசைக் கண்டித்து அதன்மீது நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசை கேட்டுக்கொள்வதாகவும், தன்னுடைய கோரிக்கை நிறைவேறும்வரை காலவரையற்ற உண்ணாவிரதத்தை மேற்கொள்ளப் போவதாகவும் முதல்வர் ஜெயலலிதா முடிவெடுத்திருப்பதாக தலைமைச் செயலகச் செய்திக்குறிப்பு வெளியானது.
உண்ணாவிரதமிருக்கும் ஜெயலலிதாவைப் பார்ப்பதற்கு மக்கள் கூட்டம், மெரினாவை நோக்கிக் குவிய ஆரம்பித்தது. அமைச்சர்கள் வரிசையில் நின்று வாழ்த்து சொல்லி, வணங்கினார்கள். திரையுலகத்திலிருந்து முதல் ஆளாக ரஜினிகாந்த் வந்திருந்தார். முதல்வருக்குப் பூங்கொத்துத் தந்து, வாழ்த்துச் சொல்லிவிட்டுக் கிளம்பினார். அடுத்தடுத்துப் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள் வர ஆரம்பித்தார்கள். தலைமைச்செயலக அதிகாரிகள் முதல் காவல்துறையின் உயரதிகாரிகள் வரை மேடைக்கு முன்னால் குழுமியிருந்தார்கள்.
கூட்டத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் காவல்துறையினரோடு, அதிமுக தொண்டர்களும் இணைந்து கொண்டார்கள். ஜெயலலிதா மட்டுமே அங்கு உண்ணாவிரதம் இருந்தார். கூடியிருந்தவர்களுக்கு பிரியாணி, தயிர் சாதம், ஐஸ்கிரீம் தாராளமாக வழங்கப்பட்டது. சென்னை மெட்ரோ வாட்டர் லாரிகள், மக்களுக்குக் குடிநீர் வழங்கிக் கொண்டிருந்தன. உயர்தர மினரல் வாட்டர் பாட்டில் அமைச்சர்களுக்கும் காவல்துறை உயரதிகாரிகளுக்கும் கிடைத்தன. முதல்வர் உண்ணாவிரதம் இருந்த மேடையிலிருந்து சில மீட்டர் தொலைவில் படமெடுத்துக் கொள்ள தொண்டர்கள் அனுமதிக்கப்பட்டார்கள். தமிழகமெங்கும் வந்திருந்த அதிமுக தொண்டர்கள் ஜெயலலிதா சோபாவில் உட்கார்ந்தபடி தலைமைச் செயலாளரிடம் பேசிக்கொண்டிருக்கும் பின்னணியில் நின்று புகைப்படமெடுத்துப் புன்னகையோடு ஊருக்குக் கிளம்பினார்கள்.
இரவும் பகலுமாக மூன்று நாட்கள் நீடித்த உண்ணாவிரதத்தில் ஏராளமான அரசியல் தலைவர்கள் வந்தபடி இருந்தார்கள். பொறுமையாக வரிசையில் நின்று மெட்டல் டிடெக்டர் சோதனையைத் தாண்டி, ஜெயலலிதாவைச் சந்தித்து சால்வை தந்து, சிரித்தபடியே புகைப்படத்திற்கு போஸ் தந்து திரும்பிச் சென்றார்கள். தொண்டர்களும் குடும்பம் குடும்பமாக வந்து முதல்வரைப் பார்த்தபடியே சென்றார்கள். ஆண்களைவிடப் பெண்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. ஒரு சிலர் அங்கேயே தங்கிவிட்டார்கள். கடற்கரையோரமாகப் படுத்துத் தூங்கி, மெட்ரோ லாரி தண்ணீரில் குளித்து, நிறுத்தப்பட்டிருந்த மொபைல் டாய்லெட்டுகளைப் பயன்படுத்திக் கொண்டார்கள்.
உண்ணாவிரதத்தின் இரண்டாவது நாள், நிலைமை பதட்டமாக இருந்தது. கூட்டத்தைத் தடுக்க முடியவில்லை. காவிரித் தண்ணீரைத் தமிழகத்திற்குத் தராத கர்நாடக அரசை எதிர்த்துத் தொண்டர்கள் கோஷமிட்டுக் கொண்டிருந்தார்கள். 24 வயது நிரம்பிய ஒரு தொண்டர், கூட்டத்திற்குள் புகுந்து தன்னுடைய உடல்மீது பெட்ரோல் ஊற்றிக்கொண்டு தீக்குளித்தார். பதறிப்போன காவல்துறையினர் அவரைக் காப்பாற்றி, ஆம்புலன்ஸில் ஏற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள்.
இந்நிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் வாழப்பாடி ராமமூர்த்தி தலைமையில் காங்கிரஸ் கட்சியின் எம்.பிக்கள் டெல்லிக்குப்போய் பிரதமரைச் சந்தித்துப் பேசினார்கள். அ.தி.மு.க எம்.பிக்களும் அவரோடு இணைந்து செல்வதா என்பதில் குழப்பம் இருந்தது. ஜெயலலிதா தன்னுடைய உண்ணாவிரதத்தைக் கைவிட்டால் மட்டுமே காவிரிப் பிரச்னையைச் சுமூகமாகத் தீர்க்க முடியும். சட்டம் ஒழுங்கு கெட்டுப்போனாலோ அல்லது அரசியல் சாசனத்தை மீறினாலோ மட்டுமே மாநில அரசுகளின்மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்க முடியும். காவிரி நீர் பிரச்னையில் அப்படியொன்று நிகழாதபோது மத்திய அரசை நிர்பந்திக்கக் கூடாது என்று வெளிப்படையாகவே பேசினார், மத்திய நீர்வளத்துறை அமைச்சரான சுக்லா.
இன்னொரு புறம் டெல்லியில் அரசியல் நடவடிக்கைகள் ஆரம்பமாகின. வி.சி. சுக்லா, பிரதமர் நரசிம்மராவைச் சந்தித்தார். காவிரி நதி நீர் பிரச்னைபற்றி விவாதிக்கப்பட்டது. பிரதமர் என்ன சொன்னார் என்பது யாருக்கும் தெரியாது. உடனே டெல்லியிலிருந்து கிளம்பிய சுக்லா, பெங்களூருக்கு வந்து கர்நாடக முதல்வர் வீரப்ப மொய்லியைச் சந்தித்தார். தமிழ்நாட்டின் கோரிக்கை பற்றியும், உண்ணாவிரதமிருக்கும் ஜெயலலிதாவின் உடல்நிலை பற்றியும் பேசப்பட்டது. பின்னர், கர்நாடக முதல்வரின் ஒப்புதலோடு ‘சுக்லா பார்முலா’ தயாரானது.
காவிரி நீர் இருப்பு பற்றிய சரியான விபரங்கள், குறிப்பாக அறிவியல் பூர்வமான முறையில் நடத்தப்பட்ட அளவீடுகளின் அடிப்படையில் பெறப்பட்ட தகவல்களை மத்திய அரசுடன் பகிர்ந்துகொள்ள கண்காணிப்புக் குழு அமைப்பதும் தலைக்காவிரி தொடங்கி கடைமடை பகுதி வரை காவிரி நீர் எப்படிப் பகிர்ந்துகொள்ளப்படுகிறது என்று ஆண்டு முழுவதும் கள ஆய்வு மேற்கொள்வதும் கண்காணிப்புக் குழுவின் பணியாக இருக்கும். இக்குழுவில் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, பாண்டிச்சேரி உள்ளிட்ட நான்கு மாநிலங்களின் தலைமைப் பொறியாளர்கள் இடம் பெறுவார்கள்.
அடுத்ததாக காவிரி நிதி நீர் விஷயமாக உயர்மட்டக் குழு ஒன்று அமைக்கப்படும். இதில் நான்கு மாநிலங்களின் தலைமைச் செயலாளர்கள், மாநில நீர்வளத்துறை அமைச்சர் அல்லது துறைச் செயலாளர், காபினட் செயலாளர் உள்ளிட்டவர்கள் இடம்பெறுவார்கள். கண்காணிப்புக் குழு அனுப்பும் பிரச்னைகளைப்பற்றிப் பேசி, அதற்கான சிக்கல்களைத் தீர்ப்பது இதன் பொறுப்பாகும். உயர்மட்டக் குழுவின் பரிந்துரையின்படி மத்திய அரசு, தேவையான நடவடிக்கைகளை எடுக்கும். இதுதான் சுக்லாவின் பார்முலா.
பெங்களூரில் வீரப்ப மொய்லி சந்திப்பு முடிந்ததும், சென்னைக்குக் கிளம்பினார் சுக்லா. கர்நாடக அரசு, சுக்லாவின் பார்முலாவுக்கு ஒப்புதல் தரவில்லை. குறிப்பாக, கண்காணிப்புக் குழு அமைப்பதில் உடன்படவில்லை. ஆனாலும் சென்னைக்கு வந்த சுக்லா, கண்காணிப்புக் குழு அமைக்க கர்நாடக அரசு ஒப்புக்கொண்டுவிட்டது என்றார். உடனே பெங்களூரில் பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தைக் கூட்டிய வீரப்ப மொய்லி, கண்காணிப்புக் குழு அமைக்கும் விஷயத்தில் கர்நாடகா அரசுக்கு ஒப்புதல் இல்லையென்பதால் மேல்மட்டக் குழு பற்றிய பேச்சுக்கே இடமில்லை என்றார். ஆனால், சென்னையில் உற்சாக மழை உச்சத்தில் இருந்தது. நான்கு நாட்கள் தொடர்ந்த ஜெயலலிதாவின் உண்ணாவிரதம் ஒருவழியாக முடிவுக்கு வரும் நேரம் நெருங்கியது.
ஜெயலிதாவின் மெரினா உண்ணாவிரதம், தடாலடி அரசியல் நடவடிக்கையாகவே பார்க்கப்பட்டது. 22 ஆண்டுகள் இழுபறிக்குப் பின்னர் 1990ல் நடுவர் மன்றம் அமைக்கப்பட்டு, காவிரி நதி நீர் பிரச்னை பற்றிய பேச்சுவார்த்தைகள் நடந்தன. பலகட்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னரே இடைக்காலத் தீர்வு அறிவிக்கப்பட்டது. தீர்ப்பு வெளியானதும், கர்நாடகாவில் தமிழர்கள் வாழும் பகுதிகளில் தாக்குதல்கள் ஆரம்பமாயின. அதைத் தொடர்ந்து ஏராளமானவர்கள் அங்கிருந்து தமிழகத்தில் தஞ்சம் புகுந்தார்கள். காவிரி நதி நீர் பிரச்னை, இரு மாநிலங்களுக்கிடையேயான பூதாகரமான பிரச்னையாக உருவெடுத்திருந்தது.
நடுவர் மன்றம் ஆரம்பிக்கப்படுவதையே கர்நாடகா விரும்பவில்லை. காவிரிக் கரையோர விவசாய நிலங்களை மேம்படுத்தும் பணியில் கர்நாடக அரசு தீவிரமாக இருந்தது. காவிரியிலிருந்து தமிழ்நாட்டுக்கு உபரி நீர் கூட வெளியேறிவிடக்கூடாது என்பதில் அக்கறையோடு இருந்தார்கள். நடுவர் மன்றம் அமைக்கப்பட்டபோது நடந்த பேச்சுவார்த்தைகளில்கூட ஒத்துழைப்பு தரவில்லை. இடைக்காலத் தீர்வு வெளியிட நடுவர் மன்றத்திற்கு அதிகாரம் இல்லையென்று நீதிமன்றக் கதவுகளையும் தட்டினார்கள்.
கர்நாடகாவின் இரு அவைகளும் கூடி, நடுவர் மன்றத்தின் இடைக்காலத் தீர்ப்பை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என்று தீர்மானம் நிறைவேற்றினார்கள். தீர்ப்பின் விபரங்கள் கெஜட்டில் வெளியானபோதுதான் பெங்களூரில் தமிழர்களுக்கு எதிரான கலவரங்கள் அரங்கேறின. அதைத் தொடர்ந்து தமிழகத்தின் பங்கான 205 டிஎம்சி தண்ணீரை விடுவிக்க வேண்டும் என்று கர்நாடக அரசை நடுவர் மன்றம் கேட்டுக்கொண்டபோது அதையும் மறுத்தார்கள். 1993 ஆரம்பத்தில் தொடர்ந்து பெய்த மழையின் காரணமாக தமிழகத்திற்கு வரவேண்டிய காவிரி நீர் வரப்பு அதிகரித்து 205 டிஎம்சிக்கும் அதிகமாக 243 டிஎம்சி தண்ணீர் கிடைத்துவிட்டது.
குறுவை சாகுபடிக்குக் குறித்த நேரத்தில் தண்ணீர் வரவில்லை என்று காவிரி டெல்டா விவசாயிகள் தரப்பு கோரிக்கை விடுத்ததும் வழக்கமான ரெஸ்பான்ஸ் என்றுதான் நினைத்தார்கள். ஆனால், ஜெயலலிதாவோ சட்டென்று கையில் எடுத்துவிட்டார். நடுவர் மன்றத் தீர்ப்பை நிராகரிக்கும் கர்நாடகா அரசோடு பேச்சுவார்த்தை நடத்துவதற்கு ஜெயலலிதா அரசு தயாராகவில்லை. அதற்குப் பதிலாக மத்திய அரசை நிர்பந்திப்பது என்கிற முடிவில் இறங்கினார்.
கர்நாடகா அரசு தனது முடிவில் உறுதியாக இருக்கும் நிலையில் மத்தியில் எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும் தலையிடுவதற்கு யோசிப்பார்கள். அப்படியே மத்திய அரசின் தலையீட்டின் பேரில் கர்நாடகத்தில் மாநில அரசு கலைக்கப்பட்டு, குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டால்கூட தமிழ்நாடு அரசு எதிர்பார்த்தது நடைபெறுவதற்கு வாய்ப்பில்லை. குடியரசுத் தலைவர் ஆட்சி விலக்கிக்கொள்ளப்பட்டு தேர்தல் நடத்தப்பட்டால் மத்திய அரசுக்கு எதிரான உணர்வுகள் கர்நாடகாவில் கிளர்ந்தெழும் என்பதையும் காங்கிரஸ் கட்சி உணர்ந்திருந்தது.
ஜூலை 21 மாலை, உண்ணாவிரதம் கிளைமாக்ஸ் காட்சியை எட்டியது. மத்திய அமைச்சர் சுக்லாவும், தமிழக ஆளுநர் சென்னா ரெட்டியும் மெரினா கடற்கரைக்கு வந்து ஜெயலலிதாவை நேரில் சந்தித்து உண்ணாவிரதத்தைக் கைவிடுமாறு கேட்டுக்கொண்டார்கள். நான்கு நாட்கள் தொடர் உண்ணாவிரதத்தின் காரணமாக உடல் பலவீனத்தோடு படுத்த படுக்கையாக இருந்த ஜெயலலிதாவிடம் சுக்லாவின் பார்முலா குறித்து விளக்கிக் கூறப்பட்டது.
எஸ்.டி.எஸ், முத்துசாமி, கண்ணப்பன் உள்ளிட்ட அமைச்சர்களும், தங்கபாலு உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்களும் உடனிருக்க தலைமைச் செயலாளர் வெங்கட்ராமன் மத்திய அரசின் புதிய திட்டத்தை வாசித்துக் காட்டினார். அதில் திருப்தியடைந்த ஜெயலலிதா, படுக்கையிலிருந்து எழுந்து உட்கார்ந்தார். பின்னர் சுக்லா தந்த பழரசத்தை அருந்தி, உண்ணாவிரதத்தை முடித்துவைத்தார். சுற்றியிருந்த அதிமுக தொண்டர்கள் கரவொலி எழுப்பி உற்சாகத்தை வெளிப்படுத்தினார்கள்.
காவிரி நதி நீர் விஷயத்தில் மத்திய அரசை தலையிடக்கோரி வலியுறுத்தி, தான் இருந்த உண்ணாவிரதத்தை, பிரம்மாஸ்திரம் என்று பெருமையோடு குறிப்பிட்டார், ஜெயலலிதா. பிரம்மாஸ்திரத்தால் என்ன பலன் என்பதை அவரால் விளக்க முடியவில்லை. தி.மு.க தலைவர் கருணாநிதியோ இதுவொரு கண்துடைப்பு என்றார். நடுவர் மன்றத்தின் இடைக்காலத் தீர்ப்பையே மதிக்காத கர்நாடக அரசு, கண்காணிப்புக் குழுவுக்கு ஒப்புக்கொள்ளும் என்று நம்புவது நகைப்புக்குரியது என்றார்.
ஜெயலலிதாவின் உண்ணாவிரதம், பெரும் ஏமாற்றத்தைத் தந்திருக்கிறது என்றார் வாழப்பாடி ராமமூர்த்தி. காங்கிரஸ் கமிட்டித் தலைவராக இருந்தாலும், காவிரி நீர் தொடர்பான ஜெயலலிதாவின் கோரிக்கைளை மனப்பூர்வமாக வரவேற்பதாக ஏற்கெனவே அறிக்கை வெளியிட்டிருந்தார். காவிரிப் பிரச்னையில் மத்திய அரசு பாரபட்சம் காட்டுகிறது என்று அதிரடியாகவும் பேசியிருந்தார். காவிரிப் பிரச்னைக்காக ஏற்கெனவே தன்னுடைய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்திருந்தார்.
கர்நாடகா அரசு, மத்திய அரசு முன்வைக்கும் திட்டத்தை ஏற்காதது பற்றி ஜெயலலிதாவிடம் கேட்டதற்கு அதைப்பற்றி எங்களுக்குக் கவலையில்லை. காவிரிப் பிரச்னையில் மத்திய அரசு தலையிட வேண்டும் என்பதுதான் எங்களுடைய கோரிக்கை. அதை மத்திய அரசும் ஏற்றுக்கொண்டு ஒரு புதிய ஃபார்முலாவை முன்வைத்திருக்கிறது. இது எங்களுக்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றி என்றார்.
கிட்டத்தட்ட அதே நேரத்தில் ஜெயா பப்ளிகேஷன் சம்பந்தப்பட்ட விஷயத்தில் முதல்வர் பதவியில் இருப்பதற்கான தகுதியை ஜெயலலிதா இழந்துவிட்டதாக சுப்ரமணியம் சாமி தன்னிடம் கொடுத்த புகாரை விசாரிக்குமாறு மத்திய தேர்தல் ஆணையத்திற்குக் கடிதம் எழுதிக்கொண்டிருந்தார், தமிழ்நாட்டின் ஆளுநர் சென்னா ரெட்டி!
(தொடரும்)
உண்ணாவிரதத்தின் கதை சிறப்பு.
வாழ்த்துகள்.
ஜெ.மீது ஊழல் வழக்குத் தொடர சு.சாமிக்கு ஆளுநர் அனுமதி வழங்கியது. தொடர்ந்து, ஆளுநர் சென்னாரெட்டி, ஜனதா கட்சி தலைவர் சு.சாமி ஆகியோருக்கு அதிமுகவினர் வழங்கிய வரவேற்பு விவரங்கள் அடுத்தப் பதிவில் வரும் என எதிர்பார்க்கிறேன்.
நன்றி!
கோ.செங்குட்டுவன்,
விழுப்புரம்.
அனைவருக்கும் நன்றி. தொடர்ந்து படியுங்கள். தங்களின் கருத்துக்களை அவசியம் தெரிவியுங்கள். வாரம்தோறும் புதன்கிழமை தோறும் வெளியாகும். ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு அத்தியாயம். ஆனால், வேறு வேறு சம்பங்கள். சம்பவங்களின் முன்கதையும் பின்கதையும் உங்களுக்கு தெரிந்தவைதான். நடுவுல சில பக்கங்களை மட்டுமே நான் எழுதப்போகிறேன்.
செம… அடுத்த பகுதியைப் படிக்க ஆர்வமா இருக்கு… இது வீக்லியா…?
Great start, any reason to start this here? I think the Cauvery pre dates jayalalitha’s antics
பாலகுமார் ஜெ வை பார்த்து விட்டு வீடு வந்து கத்திரிக்காய் கறி சாப்பிட முடியவில்லை என்றார்.
உண்ணாவிரதத்திற்கு முக்கிய காரணமாக இருந்தது ஆர் வி யின் ஆலோசனை தான் என்றார்கள்
ஊழல் விசயத்தில் இருந்து திசை திருப்ப…
நான் செங்கோட்டையில் 3 நாள் மாட்டி கொண்டேன் பஸ் வசதி இல்லாத காரணமாக