Skip to content
Home » மறக்கப்பட்ட வரலாறு #2 – பழிக்குப் பழி

மறக்கப்பட்ட வரலாறு #2 – பழிக்குப் பழி

லலித் மேக்கன் கொலை - பழிக்குப் பழி

ஜூலை 31, 1985. டெல்லியின் கீர்த்தி நகர். காலை பத்தரை மணி. இரண்டடுக்கு கொண்ட தன்னுடைய சொந்த அபார்ட்மெண்ட்டிலிருந்து வெளியேறி, மனைவியோடு பேசியபடியே சிவப்பு நிற மாருதி காரை நோக்கி வந்து கொண்டிருந்தார், லலித் மேக்கன். தெற்கு டில்லியின் இளம் எம்.பி. பிரதமர் ராஜிவ் காந்திக்கு மிகவும் நெருக்கமானவர். அடுத்து வரும் அமைச்சரவை மாற்றத்தில் அமைச்சராவதற்குத் தயாராக இருந்தவர்.

ஆறு வயது மகளான அவந்திகா மேக்கனை பள்ளியில் விட்டுவிட்டு தம்பதியர் இருவரும் அலுவலக வேலை விஷயமாக கீர்த்தி நகருக்கு வந்திருந்தார்கள். அங்கே நெருக்கமான நண்பர்கள், உறவினர்களையெல்லாம் சந்தித்துவிட்டு காலை பத்தரை மணிக்குக் கிளம்பி வெளியே வந்தார்கள். அதே நேரத்தில் வெளியே ஒரு பஜாஜ் ஸ்கூட்டரில் முகத்தில் தாடியும், தலையில் தலைப்பாகையுடன் இரண்டு பேர் கையில் ஆயுதத்தோடு காத்திருந்தார்கள்.

அந்த ஆயுதம், ஒரு வித்தியாசமான துப்பாக்கி! லலித் தம்பதியினர் காரை நெருங்கி கதவைத் திறந்ததும், கேட்டுக்கு வெளியே நின்று கொண்டிருந்தவர்கள் முன்னேறி வந்து நிதானமாகச் சுடத் தொடங்கினார்கள். ஒரே குண்டுமழை. ரத்த வெள்ளத்தில் குளித்த லலித்தும் அவரது மனைவியும் வந்த வழியே வீட்டுக்குள் ஓட முயற்சி செய்வதற்குள் அனைத்தும் முடிந்துவிட்டது.

இருவரும் சரிந்து விழுவதை எட்டிப் பார்த்துவிட்டு, கொலையாளிகள் இருவரும் நிதானமாக நடந்துபோய் ஸ்கூட்டரை உதைத்துக் கிளப்பிப் புறப்பட்டுப் போனார்கள். ஜனநடமாட்டம் நிறைந்த பகுதி அது. ஆனாலும் யாரும் திரளவில்லை. அனைத்தும் மூன்றே நிமிடங்களில் நடந்து முடிந்துவிட்டன. காருக்குள் இருந்த டிரைவர் உறைந்துபோய் உட்கார்ந்திருந்தார். மாடி ஜன்னலில் இருந்து எட்டிப்பார்த்த வேலைக்காரர் அலறியபடியே ஓடிவந்தார்.

ரத்த வெள்ளத்தில் சுய நினைவின்றிக் கிடந்த தம்பதியினரைத் தூக்கி, அதே சிவப்பு மாருதியில் வைத்து ராம் மனோகர் லோகியா ஹாஸ்பிடலுக்கு எடுத்துச் சென்றார்கள். எடுத்துச் செல்லும் வழியிலேயே லலித் இறந்து விட்டார். அவரது மனைவி சில மணி நேரங்கள் உயிருடன் இருந்தார். பின்னர் சிகிச்சை பலனளிக்காமல் இறந்துவிட்டார்.

லலித் மேக்கன் படுகொலை, மறுநாள் தலைப்புச் செய்தியானது. டெல்லியின் சட்டம் ஒழுங்கு நிலைமையைக் கேள்வி கேட்டுத் தலையங்கங்கள் எழுதப்பட்டன. தன்னுடைய நெருங்கிய நண்பரின் உடலுக்கு அஞ்சலி செலுத்த பிரதமர் ராஜிவ் காந்தி வந்திருந்தார். அவர் அணிந்திருந்த கூலிங் கிளாஸ், அவரது கோபத்தை மறைத்துக் கொண்டிருந்தது. பெற்றோரை இழந்து பரிதாபமாய் நின்றுகொண்டிருந்த அந்தச் சிறுமியிடம் குனிந்து பிரதமர் துக்கம் விசாரித்தபோது, வெளியே தொண்டர்கள் கோபத்துடன் கோஷமிட்டார்கள்.

பட்டப்பகலில் ஆளுங்கட்சியின் எம்பி சுட்டுக் கொல்லப்பட்டது நாடெங்கும் தலைப்புச் செய்தியானது. 1984 டெல்லி கலவர சர்ச்சைகளுக்குப் பின்னர் உள்துறை அமைச்சகம், பிரதமரின் நேரடிக் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டது. உள்துறை அமைச்சராக இருந்த நரசிம்மராவின் இடத்திற்கு எஸ்.பி. சவான் வந்திருந்தார்.

நாட்டின் தலைநகரத்தில் பட்டப்பகலில் நடந்த இரட்டைக் கொலை வழக்கை விசாரணை செய்து, குற்றவாளிகளைக் கண்டுபிடிப்பதில் பிரதமர் அலுவலகம் தீவிரம் காட்டியது. ஆரம்ப கட்ட விசாரணையில் லலித் மேக்கன் வீட்டில் இருந்தவர்களின் உதவியோடு குற்றவாளிகளின் தோற்றம் பற்றி ஒரு முடிவுக்கு வரமுடிந்தது. அதன் படி 6 பேர் அடையாளம் காணப்பட்டு, தேடுவதற்கான தனிப்படைகள் அமைக்கப்பட்டன. அவர்களைப் பற்றி மேலதிகத் தகவல் தருபவர்களுக்கு ஒரு லட்ச ரூபாய் பரிசு வழங்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டது.

கொலையாளிகள் எந்த ஆயுதத்தால் சுட்டார்கள் என்பதில் ஆரம்பத்தில் தெளிவில்லை. ஆனால், நிச்சயமாக இருவரும் ஏதோ ஒரு கூலிப்படையைச் சார்ந்தவர்கள். அவர்களது பின்னணியில் நிறைய ஆயுதங்களைக் கையாளுவதில் பயிற்சி பெற்றவர்கள் என்பது மட்டும் நன்றாகவே தெரிந்தது. ஏற்கெனவே சீக்கியர்களுக்கும் காங்கிரஸ் தொண்டர்களுக்குமான உறவு மோசமாக இருந்த நிலையில், என்ன காரணத்திற்காக நடைபெற்ற படுகொலை இது என்பதை உறுதியாகத் தெரிந்து கொள்ளாமல் அடுத்த கட்டத்தை நோக்கி நகரமுடியாது என்பதை உணர்ந்திருந்தார்கள்.

லலித் மேக்கன், ராஜிவ் காந்திக்கு நெருக்கமானவர். இவரைப் போன்று துடிப்பான இளம் எம்பிக்கள் காங்கிரஸ் கட்சியில் பொறுப்புக்கு வரவேண்டும் என்று பிரதமரால் வெளிப்படையாகப் புகழப்பட்டவர். லலித் மேக்கன், ராஜிவ் காந்தி தவிர கட்சியில் வேறு யாருக்கும் கட்டுப்படாதவர். அரசியலில் தடாலடியாக நடந்துகொண்டவர். டெல்லி காங்கிரஸ் கட்சியில் ஏகப்பட்ட அதிகாரப் போட்டி உண்டு. உள்கட்சி கோஷ்டி மோதல் காரணமாக நடந்த படுகொலையாகக்கூட இருக்கலாம் என்கிற கோணத்திலும் விசாரணை நடைபெற்றது.

லலித், வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர். இந்தியப் பிரிவினையின்போது பாகிஸ்தான் பஞ்சாபிலிருந்து இந்தியாவில் வந்து செட்டிலானவர்கள். பஞ்சாபி இந்துவாக தன்னை வளர்த்துக் கொண்டவர். 1980 தேர்தலில் பஞ்சாபில் மாணவர் காங்கிரஸின் எழுச்சிக்குப் பெரிதும் காரணமாக இருந்தவர். மாணவர் காங்கிரஸ் போட்டியிட்ட 7 இடங்களில் 6 இடங்களில் வெற்றி பெற்றிருந்தார்கள். ஆனால், தேர்தலில் லலித் தோற்றுப் போயிருந்தார்.

தேர்தலில் தோற்றாலும் சஞ்சய் காந்தியின் நெருக்கமான வட்டாரத்தில் இருந்தவர். சஞ்சய் மறைவுக்குப் பின்னர் கட்சிக்குள் லலித் மேக்கனின் கிடுகிடு வளர்ச்சி, தேசிய அளவில் இளைஞர் காங்கிரஸ் தலைவராக முன்னிறுத்தியது. இன்னொரு பக்கம் தொழிலாளர் அமைப்புகளிலும் பல்வேறு பொறுப்புகளில் இருந்தார். டெல்லியில் ஸ்டிரைக் நடந்தால் நிர்வாகத்தோடு பேச்சுவார்த்தை நடத்துவதற்கு லலித் மேக்கனைத் தேடுவார்கள். ஆளுங்கட்சிக்காரர் என்பதால் அவரது குரலுக்கு மரியாதை உண்டு.

தொழிற்சங்கப் பின்னணியில் வளர்ந்தவர் என்பதால் அவருக்குக் கூடுதல் தைரியமுண்டு. சம்பவத்திற்கு முதல் நாள்கூட டெக்ஸ்டைல் கொள்கை குறித்த மத்திய அரசின் அறிவிப்பைக் கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். தொழிலாளர்களின் ஆதரவைப் பெறுவதில் கட்சித் தலைவர்களுக்கிடையே கடுமையான போட்டி இருந்து வந்தது. டெல்லி காங்கிரஸின் முகமாக இருந்த ஹெச்.கே.எல். பகத்தை எதிர்த்து ஏராளமான கோஷ்டிகள் முளைத்திருந்தன. இது சம்பந்தமாக தலைமை அலுவலகத்தில் மூப்பனார் முன்னிலையில் பேச்சுவார்த்தையும் நடந்துகொண்டிருந்தது.

முதற்கட்ட விசாரணையில் ஒரு திருப்பம் வந்தது. மூன்றாண்டுகளுக்கு முன்னர் நடந்த ஏர் இந்தியா விமானம் கடத்திச் செல்லப்பட்டு விபத்துக்குள்ளான விஷயத்தில் சம்பந்தப்பட்ட, அமெரிக்காவைச் சேர்ந்த சீக்கியத் தீவிரவாதி லால் சிங் பிரதான குற்றவாளியாக இருக்கலாம் என்று அறிவிப்பு வந்தது. லால் சிங், சர்வதேச அளவில் இந்திய அரசால் தேடப்படும் குற்றவாளியாக இருந்தார். காலிஸ்தான் கோரிக்கையை முன்வைத்து பஞ்சாபில் பல்வேறு குண்டுவெடிப்புகள், தொடர் தாக்குதல்களுக்கும் காரணமாக இருந்தவர். ஆனால், லலித் படுகொலையோடு அவரைத் தொடர்புப்படுத்த வலுவான காரணமில்லை.

லலித் சிங் இந்தியாவுக்கு அதிகமாக வந்ததில்லை. அதுவும் ஒரு எம்.பியை சுடுவதற்காக டெல்லிக்கு வருவாரா? ஜனநடமாட்டமுள்ள பகுதியில் ஒரு படுகொலையை நிகழ்த்திவிட்டு தப்பிப் போயிருக்க முடியுமா? சாத்தியமே இல்லாத விஷயம். ஆனால், லால் சிங் போன்ற காலிஸ்தான் தீவிரவாதிகளின் தொடர்பு இருக்கக்கூடும் என்கிற முடிவுக்கு போலீஸார் வந்தார்கள். அடுத்தடுத்துக் கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் ஒரு பெரிய நெட்வொர்க் பழிக்குப் பழி வாங்குவதற்காகச் சுறுசுறுப்பாகச் செயல்படுவது தெரிய வந்தது. வேட்டை, துரிதப்படுத்தப்பட்டது.

இந்திரா மறைவுக்குப் பின்னர் டெல்லியில் நடந்த கலவரங்களில் ஹெச். கே. எல் பஹத், ஜகதீஷ் டைட்லர், சஜன் குமார், தரம்தாஸ் சாஸ்திரி போன்ற காங்கிரஸ் நிர்வாகிகளின் பெயர்கள் அடிபட்டன. தார்குண்டே கமிஷன் தொடங்கி சிக்ரி கமிஷன் வரை ஏராளமான கமிஷன்கள் அமைக்கப்பட்டிருந்தாலும், அனைத்தும் மறைமுகமாக சில காங்கிரஸ் தலைவர்களின் பெயர்களைக் குறிப்பிட்டாலும் பட்டியலில் லலித் மேக்கனின் பெயர் இல்லை.

ஆனால், PUCL என்னும் அமைப்பு, இந்திரா காந்தி படுகொலைக்குப் பின்னர் மூன்று நாட்கள் நடந்த கலவரங்களிலும் சீக்கியர்கள் மீதான தாக்குதலிலும் 17 ஆயிரம் பேர் படுகொலை செய்யப்பட்டதாகவும் அதற்குக் காரணமாக இருந்தவர்களாக 227 பேர் கொண்ட காங்கிரஸ் நிர்வாகிகளின் பட்டியலை வெளியிட்டது. அதில் மூன்றாவது இடத்தில் இருந்தவர், லலித் மேக்கன்.

இரண்டு ஆண்டுகள் தொடர்ந்து நடந்த விசாரணை, தேடுதல் வேட்டையில் மூன்று சீக்கியர்கள் கைது செய்யப்பட்டார்கள். அவர்களில் இருவர், காலிஸ்தான் தீவிரவாதப் படையில் பணியாற்றியவர்கள் என்பது தெரிய வந்தது. ப்ளூ ஸ்டார் நடவடிக்கையின்போது இந்திய ராணுவப்படையின் தளபதியாக இருந்த அருண் வைத்யாவின் மரணத்திற்கும் இந்த இருவரும் காரணமாக இருந்திருக்கிறார்கள். இதுதவிர பஞ்சாப் நேஷனல் வங்கி கொள்ளையிலும் இவர்கள் சம்பந்தப்பட்டிருந்தார்கள்.

லலித் மேக்கன் தம்பதிகளைப் படுகொலை செய்த வழக்கில் ஹர்ஜிந்தர் சிங் ஜிந்தா & சுக்தேவ் சிங் சுக்கா இருவரும் பிரதான குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டார்கள். முன்னதாக வேறொரு வழக்கிற்காகவும் இவர்களைக் கைது செய்திருந்தார்கள். ஓய்விற்குப் பின்னர் புனேவில் வசித்து வந்த இந்திய ராணுவப் படையின் முன்னாள் தளபதி அருண் வைத்யாவை 1986ல் இவர்கள் இருவரும் சுட்டுக் கொன்றார்கள். வழக்கு விசாரணையின் முடிவில்தான் இருவருக்கும் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது.

லலித் மேக்கன் வழக்கில் மூன்றாவதாக ஒரு குற்றவாளியும் பிடிப்பட்டார். குக்கி என்னும் ரஞ்சித் சிங் கில். 1987ல் இண்டர்போல் அதிகாரிகளால் நியூ ஜெர்ஸியில் கைது செய்யப்பட்டார். அங்கிருந்து 2000ஆம் ஆண்டு இந்தியாவுக்குக் கொண்டு வரப்பட்டார். 18 ஆண்டுகள் வழக்கு விசாரணை தொடர்ந்தது. வழக்கின் முடிவில் ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டார். சிறையில் இருந்துபோது அவரது நல்லெண்ண நடவடிக்கைகள், சிறையிலேயே படித்துப் பட்டம் பெற்றது முதல் அவரது ஒவ்வாரு நடவடிக்கைகளும் செய்தியாக வெளிவந்து, சீக்கியர் மத்தியில் அவரை ஹீரோவாக்கியிருந்தார்கள்.

அவந்திகா வளர்ந்து, இளைஞர் காங்கிரஸ் தலைவராக இருக்கிறார். அவரது கணவரும் இளைஞர் காங்கிரஸில் இருக்கிறார்கள். அவந்திகாவும் பரோலில் வெளிவந்த குக்கியும் ஒருமுறை சந்தித்துக்கொண்டார்கள். என்னுடைய அப்பாவையும், அம்மாவையும் ஏன் கொன்றீர்கள் என்று அவந்திகா கேட்டதற்கு குக்கி விரிவாக விளக்கம் தந்திருக்கிறார். பின்னாளில் இருவரும் நண்பர்களாகி, குக்கியின் வீட்டிற்கு விருந்து உண்ணவும் சென்றிருக்கிறார் அவந்திகா. ஆறு வயதில் பெற்றோரை இழந்தது, என்னுடைய வாழ்க்கையை மாற்றிவிட்டது. பேரிழப்பு. மறக்க முடியாத காயம் அது. ஆனாலும், மனிதாபிமானத்தின் அடிப்படையில் குக்கியை மன்னித்துவிட்டேன் என்கிறார்.

டெல்லியில் சீக்கியர்களுக்கு எதிரான தாக்குதலைத் தூண்டிவிட்டவர் என்கிற அடிப்படையில் சீக்கியத் தீவிரவாதிகளின் முக்கியமான இலக்காக லலித் மேக்கன் இருந்திருக்கலாம். ஆனால், ஏன் அவரது மனைவி கீதாஞ்சலியும் சுடப்பட்டார் என்கிற கேள்விக்கு விடை தெரியவில்லை.

கீதாஞ்சலியும் இளைஞர் காங்கிரஸ் கட்சியில் இருந்தவர்தான். 70களின் இறுதியில் கட்சிப் பணியில் சேர்ந்து பணியாற்றும்போது லலித் மேக்கன், கீதாஞ்சலி இருவரும் காதலித்துத் திருமணம் செய்துகொண்டார்கள். கீதாஞ்சலியின் தந்தைதான், ஷங்கர் தயாள் சர்மா! கீதாஞ்சலி சுட்டுக் கொல்லப்பட்டபோது ஷங்கர் தயாள் சர்மா ஆந்திராவின் ஆளுநராக இருந்தார். 1992ல் அவர் குடியரசுத் தலைவராகப் பதவியேற்ற மூன்று மாதங்களுக்குள் சம்பந்தப்பட்ட இரண்டு தீவிரவாதிகளுக்கும் புனே எரவாடா சிறையில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.

(தொடரும்)

 

பகிர:
nv-author-image

ஜெ. ராம்கி

எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், ஊடகவியலாளர். ஜெயலலிதா, கருணாநிதி, ரஜினிகாந்த் உள்ளிட்ட தமிழகத்தின் முக்கியமான ஆளுமைகளின் வாழ்வைப் பதிவு செய்திருக்கிறார். நரசிம்ம ராவ், ஐரோம் ஷர்மிளா, ஜெயப்பிரகாஷ் நாராயண் குறித்த நூல்களை மொழிபெயர்த்திருக்கிறார். தொடர்புக்கு : ramkij@gmail.comView Author posts

2 thoughts on “மறக்கப்பட்ட வரலாறு #2 – பழிக்குப் பழி”

    1. நன்றி. தொடர்ந்து படியுங்கள். தங்களின் கருத்துக்களை அவசியம் தெரிவியுங்கள்.

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *