Skip to content
Home » மறக்கப்பட்ட வரலாறு #3 – தட்சிணப் பிரதேசம்

மறக்கப்பட்ட வரலாறு #3 – தட்சிணப் பிரதேசம்

தட்சிணப் பிரதேசம்

இந்திய மாநிலங்களை எவ்வாறு பிரிப்பது? அவற்றின் எல்லைகளை எவ்வாறு தீர்மானிப்பது? எவ்வாறு நிர்வாகம் செய்வது? சுதந்தரத்துக்குப் பிறகான பத்தாண்டுகளை ஆக்கிரமித்துக்கொண்ட கேள்விகள் இவை. சாம, பேத, தான தண்டம் சகலத்தையும் பயன்படுத்தி சமஸ்தானங்கள் இந்தியாவுடன் இணைக்கப்பட்டு ஒன்றுபட்ட இந்தியாவை உருவாக்கிவிட்டார்கள். இனி நிர்வாக வசதிக்காக மாநிலங்கள் பிரித்தாக வேண்டும். எப்படிச் செய்வது?

இந்திய அரசியலமைப்புச் சட்டம் அமலுக்கு வந்த நாளே மாநிலங்களைப் பிரிக்கும் பணிகள் வேகமெடுக்க ஆரம்பித்துவிட்டன. மாநிலங்களை எதன் அடிப்படையில் பிரிப்பது, எல்லைக்கோடு எதுவாக இருக்கவேண்டும் என்பதைப் பற்றி ஆராய்வதற்கு ஏகப்பட்ட கமிஷன்கள் அமைக்கப்பட்டன. தார் கமிஷன், ஜே.வி.பி கமிட்டி, பஸல் அலி கமிஷன் என்று ஒவ்வொரு கட்டமாக ஏகப்பட்ட கமிஷன்கள் அமைக்கப்பட்டன. கமிஷன் உறுப்பினர்களும் கள ஆய்வுகளை மேற்கொண்டு, பிரச்னையை ஆராய்ந்து, பக்கம் பக்கமாக அறிக்கைகளை எழுதி நேருவிடம் கொடுத்தார்கள்.

வெவ்வேறு காலகட்டங்களில் அமைக்கப்பட்ட அத்தனை கமிஷன்களும் கிளிப்பிள்ளைபோல் சொல்லி வைத்தது ஒரே விஷயத்தைத்தான். மொழிவாரி மாநிலங்கள் இந்தியாவுக்கு ஒத்து வரவே வராது!

பிரிட்டிஷ் இந்தியாவிலும் இதைத்தான் சொல்லியிருந்தார்கள். பன்மொழி வித்தகர்களும் இதையே தொடர்ந்து சொல்லிக்கொண்டிருந்தார்கள். பண்டைய இந்தியாவில் பல்லாயிரம் மொழிகள் பேசப்பட்டு வந்திருக்கின்றன. இன்றும் ஏகப்பட்ட மொழிகள் வழக்கில் இருக்கின்றன. பேச்சு வழக்கில், எழுத்து வழக்கில் ஏன் அலுவல் மொழியாகக்கூட ஒரு டஜன் இந்திய மொழிகள் இருந்திருக்கின்றன. எழுத்து வடிவமில்லாமல் வெறும் பேச்சு மொழியாக வழக்கில் இருக்கும் மொழிகளின் எண்ணிக்கை நூற்றுக்கணக்கில் இருக்கும்.

மொழிவாரி மாநிலங்கள் அமைப்பது என்று முடிவெடுத்தால் எத்தனை மாநிலங்கள் அமைப்பது என்பதை முடிவு செய்வதற்கே பல கட்டப் பேச்சு வார்த்தைகள் தேவைப்படும். எந்தெந்த மொழி என்பதைத் தேர்ந்தெடுக்க இன்னொரு பத்தாண்டுகள் ஆகிவிடும். ஒவ்வொரு மொழிக்கும் பிரத்யேகமாக ஒரு மாநிலம் அமைக்க முடியுமா? எல்லைகளை முடிவு செய்ய முடியுமா?

குட்டி, குட்டிச் சமஸ்தானங்களாகப் பிரிந்து கிடந்த ஒரு நாட்டை இணைத்து ஒன்றுபட்ட நாடாக உருவாக்கியிருக்கிறோம். மொழிக்கொரு மாநிலம் என்பதை அமல்படுத்தினால் அவையெல்லாம் சமஸ்தானத்தின் எண்ணிக்கையைவிடப் பல மடங்கு அதிகமாகிவிடும் என்றார்கள். இதெல்லாம் பொருளாதார வளர்ச்சிக்கு மட்டுமல்ல தேசப் பாதுகாப்பிற்கும் பெரிய அச்சுறுத்தலாகிவிடும் என்று எச்சரித்தார்கள். மத்திய அரசும் அதை ஏற்றுக்கொண்டது.

ஏற்கெனவே இருக்கும் மாகாணங்களை அப்படியே மாநிலங்களாக மாற்றியமைப்பதில் சவால்கள் குறைவு. சென்னை, பம்பாய், கல்கத்தா, திருவாங்கூர் என்றிருக்கும் மாகாணங்களை அப்படியே மாநிலங்களாக அறிவித்துவிடலாம் என்கிற முடிவுக்கு நேரு வந்திருந்தார்.

1956, ஜனவரி. நிர்வாக வசதிக்காக தட்சிண, உத்தர, கிழக்கு, மேற்கு, மத்திய ராஜ்ஜியங்கள் என ஐந்து பெரும் மாநிலங்கள் அமையவிருப்பதாக பிரதமர் நேரு அறிவித்தார். இனம், மொழி, மதத்தின் அடிப்படையில் பிரிக்கப்படாமல் பிரிட்டிஷார் காலம் தொடங்கி இருந்து வந்த அதே மாகாண முறையைத் தொடரலாம் என்பதுதான் செய்தி.

மகாத்மா காந்தியின் பிரதான சிஷ்யனான நேரு, மதத்தின் அடிப்படையில் மாநிலங்களைப் பிரிக்க ஒப்புக்கொள்ள மாட்டார் என்பது தெரிந்த விஷயம். மொழிவாரி மாநிலங்களுக்கும் நேரு எதிராக இருந்தார். வட இந்தியர்களில் பெரும்பாலானவர்களுக்கு அது நிம்மதியாக இருந்தது. ஆனால், தென்னகத்தின் எதிர்பார்ப்போ வேறு விதமாக இருந்தது.

சென்னை மாகாணம், திருவாங்கூர், கொச்சின் சமஸ்தானம் பகுதிகள் அடங்கியதுதான் தட்சிணப் பிரதேசம். கர்நாடகா, கேரளப் பகுதிகளோடு ஒன்றிணயவும் வாய்ப்பிருந்தது. தட்சிணப் பிரதேசம் உருவானால் தென்னகத்தின் பொருளாதார வளர்ச்சி நன்றாக இருக்கும். அதே சமயத்தில் மாநிலங்களுக்கிடையே மொழி ரீதியாக பிரச்னை வராது. இந்தியாவின் உள்நாட்டு பாதுகாப்பிற்கும் எந்த சிக்கலும் நேராது என்றெல்லாம் ஆளுங்கட்சியினர் விளக்கம் தந்தார்கள்.

சென்னை மாகாணத்திலிருந்து விடுபட்டு ஆந்திரா தனியாகச் சென்ற பின்னர்தான் சென்னையைச் சேர்ந்த காங்கிரஸ்காரர்களுக்கு நம்பிக்கை வந்தது. சென்னையை ஆள வேண்டியது தமிழர்களா, தெலுங்கர்களா என்கிற போட்டி 20 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்தது வந்தது. அதில் தமிழர்கள் எப்போதும் பதட்டத்திலேயே இருந்தார்கள். ஆந்திரா உருவானதும் ஒரு வழியாக நிம்மதி பிறந்தது. ஆனால் சென்னையை ஆள வேண்டியது தமிழர்களா, மலையாளிகளா என அடுத்த கட்ட போட்டி ஆரம்பித்திருப்பதை அவர்கள் உணரவில்லை.

நேருவின் தட்சிணப் பிரதேச அறிவிப்பு, பெரியாரை சந்தோஷப்படுத்தியிருக்க வேண்டும். பெரியார்தான் ஒன்றுபட்ட தென்னிந்தியா உருவாக வேண்டும் என்று நினைத்திருந்தார். பாகிஸ்தான் கோரிக்கையை ஜின்னா முன்வைத்தபோது, பெரியார் திராவிடஸ்தான் கேட்டார். பெரியாரின் குரல் எடுபடவில்லை. ஆனாலும், என்றாவது ஒருநாள் திராவிட நாட்டை அடைந்துவிடுவது என்று நம்பிக்கையோடு இருந்தார்.

1802ல் தொடங்கி சென்னையை தலைமையிடமாகக் கொண்டிருந்த மதராஸ் மாகாணத்தைத்தான் திராவிட நாடு என்று பெரியார் சொல்லிக்கொண்டிருந்தார். திராவிடஸ்தான், திராவிட நாடு, தமிழ் நாடு… எல்லாம் ஒன்றுதான் என்று ஆரம்பத்தில் நினைத்த பெரியார், மொழிவாரி மாநிலங்கள் அமைவதற்கு எதிராகவே இருந்தார்.

காங்கிரஸ் கட்சியில் நிறைய பேருக்கு பதவியை அள்ளித் தரவேண்டும் என்பதற்காகவே டெல்லி சர்க்கார் மொழி அடிப்படையில் பிரித்துவிட நினைப்பதாகவும் பேசிக்கொண்டிருந்தார். ஆனால், காங்கிரஸ் கட்சியின் கணக்கோ வேறுவிதமாக இருந்தது. அந்நேரத்தில் நேருவின் அறிவிப்பு, பெரியாரை வாயடைக்க வைத்தது. காரணம், ராஜாஜி!

பெரியாரின் திராவிட நாடு ஐடியாவுக்கு பதிலடியாக ராஜாஜி முன்வைத்த விஷயம்தான், தட்சிணப் பிரதேசம். தமிழ்நாடு, கேரளாவை உள்ளடக்கி ஒரு பெரும் மாநிலத்தை உருவாக்குவது என்பது ராஜாஜியின் கனவு. நாடு சுதந்தரமடைவதற்கு முன்னரே அவர் அதுபற்றிப் பேசிக்கொண்டிருந்தார். ராஜாஜியின் சிஷ்யர்களான சி. சுப்ரமணியன், பக்தவச்சலம் போன்றோரும் அதற்காகத் தீவிரமாகப் பணியாற்றினார்கள்.

நாட்டின் முதல் பொதுத் தேர்தல் முடிந்து, புதிதாகக் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்ததும் அமிர்தசரஸ் நகரில் நடந்த காங்கிரஸ் மாநாட்டிலும் இதுபற்றிப் பேசினார்கள். தட்சிணப் பிரதேசம் என்பதை ஒட்டுமொத்த தென்னிந்தியர்களின் கனவாக முன்வைத்தார்கள். நேருவுக்கும் இதுவொரு நல்ல யோசனையாகத் தெரிந்தது.

காங்கிரஸ் தவிர்த்த அனைத்து எதிர்க்கட்சிகளும் ராஜாஜியின் தட்சிணப் பிரதேச ஐடியாவுக்கு எதிராக இருந்தார்கள். முன்னர் சென்னை மாகாண முதல்வராக வரவேண்டியது யார் என்பதில் ஒரு பெரும் போட்டி எழுந்தது. தமிழரான காமராஜரா அல்லது தெலுங்கரான சஞ்சீவ ரெட்டியா என்பதில் போட்டி. இருபக்கமும் சம பலத்தோடு மோதிக்கொண்டதால் டெல்லியின் தலையீட்டுக்குக் கொண்டு செல்லப்பட்டது. இருதரப்புக்கும் உகந்தவரான ராஜாஜி, முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அதே காட்சி திரும்பவும் அரங்கேறியது. தட்சிணப் பிரதேசம் அமைந்தால் அனைவருக்கும் உகந்த ஒரே தலைவராக ராஜாஜி மட்டுமே இருக்க முடியும் என்பது தெள்ளத் தெளிவாகத் தெரிந்தது. ராஜாஜி எதிர்ப்பாளர்கள் களத்தில் சுறுசுறுப்பாக இறங்கினார்கள். அவர்களோடு தானும் சேர்ந்து இயங்க வேண்டும் என்று பெரியாருக்கு எண்ணம் இருந்தாலும் அதுவரை பேசி வந்த திராவிட நாடு கனவு தடுத்தது. தட்சிணப் பிரதேசம் என்பது திராவிட நாடுதானே!

சென்னையில் மட்டுமல்ல ராஜாஜிக்கு எதிராகத் தென்னிந்தியாவில் ஒரு பெரும் எதிர்ப்பு அலையே எழுந்தது. தமிழ்நாட்டில் ஜீவா, ம.பொ.சி உள்ளிட்ட இடதுசாரிகளும் தமிழ் தேசிய உணர்வாளர்களும் கேரளத்தின் அச்சுதமேனன், ஏ.கே கோபாலன் உள்ளிட்ட இடதுசாரிகளும் எதிராக இருந்தார்கள்.

ஏன், காங்கிரஸ் கட்சிக்குள்ளேயேகூட ராஜாஜிக்குக் கணிசமான எதிர்ப்பு இருந்தது. அது காமராஜர் வடிவில் இருந்தது. நேருவையோ ராஜாஜியையோ வெளிப்படையாக எதிர்த்துக்கொள்ளாமல் அதே நேரத்தில் மறைமுகமாக ராஜாஜி எதிர்ப்பு யுத்தத்தை காமராஜர் நடத்திக் கொண்டிருந்தார்.

சென்னை மாகாணத்திலிருந்து ஆந்திரா தனியாகப் பிரிக்கப்பட்டதிலிருந்து பெரியாரும் நிறையவே மாறியிருந்தார். திராவிட நாடு என்பது இனி சாத்தியமில்லை. திராவிட நாடு என்பதிலிருந்து தமிழ் நாடு என்கிற நிலைக்கு மெல்ல தள்ளப்பட்டுக்கொண்டிருந்தார். ஆந்திரர், கர்நாடகத்தவர், கேரளத்தவர் இன உணர்ச்சியில்லாதவர்கள். நாம் அப்படி இருக்கக்கூடாது என்றார்.

தமிழ் தேசிய உணர்வாளர்களுக்கு பெரியாரின் கருத்தில் உடன்பாடில்லை என்றாலும் சென்னை மாகாணத்திற்குத் தமிழ்நாடு என்றே பெயர் சூட்டிவிடலாம் என்று பெரியார் பேசியதால் நம் பக்கம்தான் நிற்கிறார் என்கிற முடிவுக்கு வந்தார்கள்.

ராஜாஜியோ உற்சாகத்தின் உச்சத்தில் இருந்தார். தட்சிணப் பிரதேசம் தயாராகிவிட்டது. இனியும் மொழிவழி அரசு பற்றிப் பேசுபவர்கள், காட்டுமிராண்டிகள் என்றார். அதுவரை பெரியார் மட்டுமே அப்படியெல்லாம் பேசிக்கொண்டிருந்தார். இப்போதோ, பெரியாரால் பேச முடியாத நிலை.

எதிர்க்கட்சிகளை ஒன்றுபடுத்த யாருமில்லாத நிலையில்தான் ம.பொ.சி களத்தில் இறங்கினார். குறுகிய காலத்திற்குள் பல கட்சித்தலைவர்களைத் தொடர்பு கொண்டார். அதே நேரத்தில் தட்சிணப் பிரதேசத்திற்கு ஆதரவு தேடி ராஜாஜியின் சிஷ்யர்கள் பெங்களூரில் முகாமிட்டார்கள். தட்சிணப் பிரதேச அமைப்பு, எல்லை பற்றியெல்லாம் முடிவு செய்வதற்காக காங்கிரஸ் தலைவர்கள் கூடினார்கள். அதில் காமராஜரும் கலந்து கொண்டார்.

ஜனவரி 27, 1956. ஜீவா, பாரதிதாசன், சி.பா. ஆதித்தனார், மா.பொ.சி, டி.கே சண்முகம், பி.டி. ராஜன், அண்ணாதுரை, நெடுஞ்செழியன் என ஏகப்பட்ட பேர் சென்னையில் கூடினார்கள். ஆனந்த் தியேட்டர் உரிமையாளரும் பின்னாளில் அக்னி நட்சத்திரப் படப் புகழ் வில்லனுமான ஜி. உமாபதியின் வீட்டில்தான் கூட்டம் நடந்தது.

தட்சிணப் பிரதேசத்தை நிராகரித்து மொழிவழி மாநிலம் அமைப்பது, மதராஸ் மாகாணத்திற்குத் தமிழ்நாடு என்று பெயரிடுவது என்று காமராஜர் அரசை வலியுறுத்துவது என்று முடிவு செய்தார்கள். இதை முன் வைத்து தமிழகம் முழுவதும் பொது வேலை நிறுத்தம், கடையடைப்பு செய்வதென்றும், சென்னையில் ஒரு மெகா பொதுக்கூட்டம் நடத்துவதென்றும் முடிவு செய்யப்பட்டது.

பெரியார் கலந்துகொள்ள வேண்டும் என்றார்கள். ஆனால், பெரியார் மறுத்துவிட்டார். அவசரப்படாமல் இருந்தால் காமராஜரே எல்லாவற்றையும் பார்த்துக்கொள்வார் என்பது பெரியாரின் நம்பிக்கை. சென்னை மாகாணத்தை தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் செய்துவிட்டாலே போதும். அதை காமராஜர் செய்துவிடுவார். முதல்வராக காமராஜர் இருக்கும்போது எதற்கு கவலைப்படவேண்டும் என்றார் பெரியார்.

பிப்ரவரி 19, மாலை 4 மணி. திருவல்லிக்கேணி. தீவுத்திடலில் ஆரம்பித்த ஊர்வலம் புறப்பட்டு திருவல்லிக்கேணி வழியாக மவுண்ட்ரோடை நோக்கி வந்து கொண்டிருந்த நேரத்தில் கூட்டத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டு, தடியடிப் பிரயோகத்தில் இறங்கியது காவல்துறை. காமராஜர் அரசைக் கண்டித்துக் கோஷமிட்ட கம்யூனிஸ்ட் கட்சித்தலைவர்களை அடித்து விரட்டுவதில் காவல்துறை மும்முரமானது.

மூத்த தலைவர் ஜீவா மயங்கி விழுந்தார். மற்றொரு தலைவரான எம்.ஆர் வெங்கட்ராமன் மீது தடியடி நடத்தப்பட்டதில் அவரது கண்ணாடி உடைந்து, நெற்றியில் பெரிய காயம். தொண்டர்கள் யாரும் கலைந்து செல்ல வேண்டாம். அமைதி வழியில் நின்று, ஊர்வலத்தைத் தொடர்ந்து நடத்துமாறு சொல்லிவிட்டு இருவரும் காவல்துறை வாகனத்தில் ஏறிக்கொண்டார்கள்.

கம்யூனிஸ்ட் தலைவர்கள் மட்டுமே தடியடிக்கு பாதிப்புக்குள்ளானார்கள். மற்ற கட்சியினரோ நேரடியாக பொதுக்கூட்டத்திற்கு வந்துவிட்டார்கள். அங்கே கம்யூனிஸ்ட் தலைவர்கள் மீது தடியடி நடத்தப்பட்டதுபற்றி கூட்டத்தில் யாரும் பேசவில்லை. தட்சிணப் பிரதேசத் தீர்வை எதிர்ப்பதென்றும் மொழிவாரி மாநிலங்கள் அடிப்படையில் தமிழ்நாடு அமைய வேண்டியதன் அவசியம் பற்றியும் பேசினார்கள். பின்னர் கலைந்து சென்றார்கள்.

மறுநாள் சென்னை நகரமெங்கும் போஸ்டர்கள். ஒட்டுமொத்தத் தமிழர்களின் உணர்வுக்கெதிராக தட்சிணப் பிரதேசத்திற்குத் துணை நிற்கும் காமராஜரின் ஆட்சியை எதிர்த்து தி.மு.கவினர் மேற்கொண்ட போராட்டம் வெற்றி பெற்றதாக போஸ்டர்களில் சொல்லப்பட்டிருந்தது. ம.பொ.சி மற்றும் கம்யூனிஸ்ட் தலைவர்களின் முயற்சியில் நடந்த போராட்டத்தில் கலந்து கொண்ட ‘கண்ணீர்த்துளி இயக்கத்தினர்’ (பெரியார் திமுகவுக்கு வைத்த பெயர்), போராட்டத்தைத் தங்களுடைய வெற்றியாக காட்டிக்கொண்டது பெரியாருக்கு பெரிய அதிர்ச்சியைத் தந்தது.

அடுத்து வந்த ஒரே வாரத்தில் தட்சிணப் பிரதேச ஐடியாவை நேரு அரசு வாபஸ் வாங்கிக் கொண்டது. அரசியலில் இருந்த ஒதுங்கிய ராஜாஜி, சக்கரவர்த்தித் திருமகன் என்னும் பெயரில் ராமாயணத்தைத் தமிழில் எழுத ஆரம்பித்தார். பெரியாரே சொன்னாலும் தமிழ்நாடு என்னும் பெயர் வைக்க முடியாது என்பதில் காமராஜர் உறுதியாக இருந்தார். அத்தனை பேரையும் பின்னுக்குத் தள்ளிவிட்டு காங்கிரஸ் கட்சியை எதிர்க்கும் பிரதான எதிர்க்கட்சியாக தி.மு.க தன்னை அடையாளப்படுத்திக் கொண்டது!

(தொடரும்)

 

பகிர:
ஜெ. ராம்கி

ஜெ. ராம்கி

எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், ஊடகவியலாளர். ஜெயலலிதா, கருணாநிதி, ரஜினிகாந்த் உள்ளிட்ட தமிழகத்தின் முக்கியமான ஆளுமைகளின் வாழ்வைப் பதிவு செய்திருக்கிறார். நரசிம்ம ராவ், ஐரோம் ஷர்மிளா, ஜெயப்பிரகாஷ் நாராயண் குறித்த நூல்களை மொழிபெயர்த்திருக்கிறார். தொடர்புக்கு : ramkij@gmail.comView Author posts

2 thoughts on “மறக்கப்பட்ட வரலாறு #3 – தட்சிணப் பிரதேசம்”

  1. ரங்கராஜன்

    பயனுள்ள தொடர், அடுத்த பாகத்திற்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்…

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *