Skip to content
Home » மறக்கப்பட்ட வரலாறு #4 – தளபதியின் துரோகம்

மறக்கப்பட்ட வரலாறு #4 – தளபதியின் துரோகம்

தளபதியின் துரோகம்

18 லட்சம் வாக்குகள் அதிகமாகப் பெற்று அதிபராகிறார் மகிந்த ராஜபக்சே. 2010 பிப்ரவரி இறுதியில் வெளியான பத்திரிக்கை தலைப்புச் செய்தி இதுதான். அதிபர் தேர்தலில் அவரை எதிர்த்து போட்டியிட்ட முன்னாள் ராணுவத் தளபதி பொன்சேகாவைவிட மிக அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெறுகிறார். 62 ஆண்டுகால இலங்கை அதிபர் தேர்தலில் எந்தவொரு அதிபரும் இப்படியொரு வரவேற்பைப் பெற்றதில்லை.

வரலாறு காணாத வெற்றிதான். இலங்கையில் உள்நாட்டுப் போர் முடிந்து ஆறு மாதங்கள்கூட ஆகவில்லை. சிங்களர்கள் மத்தியில் ராஜபக்சேவின் செல்வாக்கு உச்சத்தில் இருந்தது. இந்நிலையில் தேர்தல் நடந்தால் வெற்றி நிச்சயம் என்கிற நிலையில் இரண்டு ஆண்டுகள் ஆட்சிக்காலம் இருந்தபோதும் முன்கூட்டியே அதிபர் தேர்தல் அறிவிக்கப்பட்டது.

இலங்கை ராணுவம் தனக்கெதிராகச் சதி வேலைகளில் ஈடுபடுவதாகச் சந்தேகித்த அதிபர் ராஜபக்சே, சதியை முறியடிக்க இந்திய ராணுவத்தை அனுப்புமாறு கேட்டுக்கொண்டிருக்கிறார். இது இலங்கை ராணுவத்தை அவமதிக்கும் செயல். போராடிப் பெற்ற வெற்றியைச் சரியான விதத்தில் பயன்படுத்த ராஜபக்சே தவறிவிட்டார். பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் மறுவாழ்வுக்கு எவ்வித வழியும் ஏற்படுத்தித் தராமல், அவர்களை அடைத்து வைத்திருப்பதன் மூலமாக பல புதிய போராளிகளை உருவாக்க நினைக்கிறார், என்றார் பொன்சேகா. இலங்கை ராணுவத்தின் மூத்தத் தளபதி.

ராஜபக்சேவுக்கு எதிராக பொன்சேகா முன்வைத்த 17 குற்றச்சாட்டுகளும் அதிர்வலைகளைக் கிளப்பின. ராணுவத் தளபதி பதவியை ராஜினாமா செய்து, கடிதத்தை அதிபருக்கு அனுப்பி வைத்த கையோடு அரசியலில் குதித்துவிட்டார் பொன்சேகா. புது அரசியல்வாதி போல் பளீரென்று வெள்ளை ஆடை உடுத்தி, பௌத்த விகாரைக்குச் சென்று ஆசி பெற்றுக்கொண்டார். அதிபர் தேர்தலில் பொது வேட்பாளராகக் களமிறங்கப் போவதாகவும் வெளிப்படையாக அறிவித்தார்.

கண்ணுக்கு எட்டிய தூரம் வரை எதிரிகளே இல்லாத நிலையில் ராஜபக்சே இருந்தபோது, அவரை எதிர்த்து பொன்சேகா களமாடினார். யார் இந்த பொன்சேகா? 2009ல் விடுதலைப் புலிகளை வீழ்த்திய இலங்கையின் மும்மூர்த்திகளில் ஒருவர்.

கார்டிஹேவா சரத் சந்திரலால் பொன்சேகா, ஒரு ராணுவத் தளபதி. இலங்கையின் அம்பலங்கொடையிலும் பின்னர் கொழும்பு ஆனந்தா கல்லூரியிலும் படித்தவர். இலங்கை ராணுவத்தில் சேர்ந்தவர், குறுகிய காலத்தில் முக்கியமான தளபதியாக உருவெடுத்தார்.

90களில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான பல கட்டப் போர்களில் மனித உரிமைகளுக்கு எதிராக நடந்துகொண்டதாகப் பலமுறை குற்றம் சாட்டப்பட்டவர். 1995ல் புலிகளுக்கு எதிரான சண்டையின்போது சரணடைந்தவர்களையும் காயப்பட்டவர்களையும் உயிரோடு புதைத்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. பெரிய அளவில் பள்ளம் தோண்டி, அதில் நூற்றுக்கணக்கானவர்களை உயிரோடு தள்ளிப் புதைத்த பொன்சேகாவின் கொடூரச் செயல்கள் ஐ.நா மன்றம் வரை விவாதிக்கப்பட்டன.

விடுதலைப் புலிகளும் பொன்சேகாவை எப்படியாவது ஒழித்துக் கட்ட முயன்றார்கள். ஒருமுறை அவர்மீது மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. அதிலிருந்து தப்பி, ஓய்வெடுத்துக் கொண்டிருந்தவரை ராஜபக்சேதான் அழைத்து வந்தார். விடுலைப் புலிகளை ஒழிப்பதுதான் லட்சியம் என்று பிரசாரம் செய்து அதிபரான ராஜபக்சே, முதல் வேலையாக பொன்சேகாவை மீண்டும் ராணுவத் தளபதியாக்கினார்.

முல்லைத் தீவில் விடுதலைப் புலிகளை வீழ்த்தியதில் பொன்சேகாவுக்குப் பெரும் பங்கு இருக்கிறது. போர் முடிந்த பின்னர், முல்லைத் தீவு, முள்ளி வாய்க்கால், புதுக்குடியிருப்பு பகுதிகளில் இருந்து டன் கணக்கில் புலிகளின் ஆயுதங்கள் மீட்கப்பட்டன. மீட்கப்பட்ட ஆயுதங்கள், இலங்கை ராணுவத்தின் கணக்கில் சேர்க்கப்படவில்லை என்று செய்திகள் வெளியாகின. மீட்கப்பட்ட 4000 கிலோ தங்கமும் காணாமல் போய்விட்டதாகச் சொல்லப்பட்டது.

இவையெல்லாம் ராஜபக்சேவுக்கும் பொன்சேகாவுக்கும் இடையேயான நெருக்கமான உறவில் விரிசலை ஏற்படுத்தின. உள்நாட்டுப் போரில் கிடைத்த வெற்றியைப் பங்கு பிரிப்பதிலும் சிக்கல். இது முழுக்க, முழுக்க இலங்கை ராணுவத்திற்குக் கிடைத்த வெற்றி என்பது பொன்சேகாவின் வாதம். இது அரசியல் ராஜதந்திரத்திற்குக் கிடைத்த வெற்றி என்று ராஜபக்சே நினைத்தார்.

ராணுவத்தின் முகமாக இருந்த பொன்சேகா, ராஜபக்சேவை வீட்டுக்கு அனுப்பி விட்டு அதிபராகப் போவதாகவும், இலங்கையில் ராணுவ ஆட்சி வரப்போவதாகவும் வதந்திகள் இறக்கை கட்டிப் பறந்தன. ஆறு முறை அதிபர் அழைத்தும் நேரில் சந்திக்கப் பொன்சேகா தயாராக இல்லை. இருதரப்புச் சமாதானப் படலங்கள் முறிந்த நிலையில்தான் பொன்சேகா அரசியலில் குதித்தார்.

அதிபர் தேர்தலை அவசர அவசரமாக நடத்தி முடித்து வெற்றி பெற்றுவிடலாம் என்று நினைத்த ராஜபக்சேவுக்கு பெரிய ஏமாற்றம். தன்னை எதிர்த்து பொன்சேகா களமிறங்குவார் என்பதையும் எதிர்பார்க்கவில்லை. இலங்கை அரசியலில் 40 ஆண்டுகால அனுபவமுள்ள ராஜபக்சேவை, அரசியலுக்கு வந்து 4 மாதங்கள் அனுபவமே உள்ள பொன்சேகா எதிர்த்து நின்றார். ஓடமும் வண்டியில் ஏறும். அரசியலில் எதுவும் நடக்கும்!

உள்நாட்டுப்போரில் கிடைத்த வெற்றிக்கு யார் காரணம் என்பதுதான் அதிபர் தேர்தல் பிரசாரத்தில் முக்கியமான டாபிக். சிங்களர்களைப் பொறுத்தவரை அதிபராக இருந்த ராஜபக்சே, ராணுவத்துறைச் செயலாளராக இருந்த அவரது தம்பி கோத்தபய ராஜபக்சே, ராணுவத் தளபதி சரத் பொன்சேகா என மூவரையுமே நாயகர்களாக நினைத்திருந்தார்கள். மூவருக்கும் இடையேயான அதிகாரப் போட்டி வெளிச்சத்துக்கு வந்ததை சிங்களவர்கள் ரசிக்கவில்லை.

அதிபர் தேர்தல், புதிய அரசியலுக்கான பிள்ளையார் சுழி என்று நினைத்திருந்தார்கள். இனி உள்நாட்டுப் போருக்கான வாய்ப்புகள் இல்லை. வடக்கு கிழக்கு மாகாணங்களில் உள்ள தமிழர்கள், சிறுபான்மையினரின் மனதை வெற்றி கொள்வதெப்படி என்பதுதான் சவால். ஆகவே, பிரசாரத்தில் போர் பற்றிய நினைவூட்டல்கள் எதுவும் இருக்காது. புதிய ஆக்கப்பூர்வ திட்டங்களை முன்வைத்து ராஜபக்சே பேசுவார் என்று நினைத்தபோது பொன்சேகாவின் வருகை அனைத்தையும் கலைத்துப் போட்டுவிட்டது.

உள்நாட்டுப் போரில் நடந்த விஷயங்களைத்தான் பிரசாரத்தில் ஹைலைட் செய்தார்கள். 34 மாதங்கள் நடந்த போரில் ராணுவத்திற்கு முழு சுதந்தரம் அளித்ததாகவும், போர்ச் செலவுகளுக்காக எவ்வளவு வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளுங்கள் என்று காசோலை தந்தாகவும் ராஜபக்சே குறிப்பிட்டார்.

சிங்களவர்களின் ஆதரவு தனக்கு முழுமையாகக் கிடைத்தால் போதுமென்று ராஜபக்சே நினைத்தார். 75 சதவிகித வாக்காளர்கள், சிங்களவர்கள். வெற்றியை அவர்கள்தான் தீர்மானிப்பார்கள். சர்வநிச்சயமாக அதிபர் பதவி தன்னிடம் திரும்பிவரும். இலங்கையின் உச்சபட்ச அதிகாரம் கொண்ட அதிபர் பதவியில் உட்கார்ந்துவிட்டால் பின்னர் நாடாளுமன்றத்தில் யார் பெரும்பான்மை பெற்றாலும் கவலையில்லை. யார் ஆட்சிக்கு வந்தாலும் லகான் நம்முடைய கையில்.

ராஜபக்சே குடும்பத்தின் ஆதிக்கம், ஊழல் போன்றவற்றால் அதிருப்தி இருந்தாலும், நகர்ப்புற வாக்காளர்கள் ராஜபக்சே பக்கமே நின்றார்கள். 30 ஆண்டுகளாகத் தொடர்ந்த போர்ச்சூழல், வன்முறை, தீவிரவாதம் அனைத்தையும் தாண்டி, ஒரு புதிய நாட்டைக் கட்டமைக்கவேண்டும். அதற்கான சமூக, பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்களை முன்னெடுக்க ராஜபக்சேவால் மட்டும்தான் முடியும் என்று நினைத்தார்கள்.

பொன்சேகாவும் தன்னால் முடிந்தளவு ராஜபக்சேவுக்கு எதிரான விமர்சனங்களைப் பிரசாரத்தில் முன்வைத்தார். ஆனால், தமிழ் தேசியக் கூட்டணியோடு அவர் நெருக்கம் காட்டியது பெரும்பான்மை சிங்களவர்களை யோசிக்க வைத்தது. ஆக, தேர்தல் களத்தில் பழைய இனவாத பேதங்கள் உயிர்ப்போடு இருந்தது தெரிந்தது. முதல் முறையாக இலங்கை ராணுவமும் அரசியலில் அடிபட்டதைப் பார்க்க முடிந்தது.

கருத்துக்கணிப்புகள் இரண்டு தரப்பும் சமபலத்துடன் இருப்பதை வெளிக்காட்டின. யார் வெற்றி பெற்றாலும் மிகக்குறைவான வாக்கு வித்தியாசத்தில் மட்டுமே வெல்ல முடியும் என்றார்கள்.

சிங்கள, தமிழ் எதிர்க் கட்சிகளுக்கிடையே பெரும்பாலான விஷயங்களில் முரண்பாடுகள் இருந்தாலும், ராஜபக்சேவைத் தோற்கடிக்க வேண்டும் என்பதில் ஒற்றுமை இருந்தது. அந்த நேரத்தில் தமிழ் மக்களின் நல்வாழ்வு பற்றி பொன்சேகா தொடர்ந்து பேசினார். விடுதலைப் புலிகள் ஆதரவு அமைப்பாக இருந்த தமிழ் தேசியக் கூட்டணி பொன்சேகாவுக்கு ஆதரவாக இருந்தது. தமிழ் அமைப்புகளுக்கும் பொன்சேகாவுக்கும் இடையே ரகசிய ஒப்பந்தம் இருப்பதாகச் செய்திகள் அடிபட்டன.

தேர்தல் முடிவுகள் யாரும் எதிர்பாராத அளவில் இருந்தன. பொன்சேகாவை விட 18 லட்சம் வாக்குகள் அதிகம் பெற்று ராஜபக்சே வெற்றி பெற்றிருந்தார். வடக்கு கிழக்கு உள்ளிட்ட தமிழர்கள் வாழும் பகுதிகளில் பொன்சேகாவுக்குப் பெரிய ஆதரவு இருந்தது. மற்ற இடங்களிலெல்லாம் ராஜபக்சே முன்னணியில் இருந்தார். வடக்கு, கிழக்கு, யாழ்ப்பாணம் போன்ற தமிழர்கள் வாழும் பகுதிகளில் வாக்குப்பதிவு மிகக் குறைவாகவே இருந்தது. பல இடங்களில் 50 சதவிகித வாக்குகள்கூட பதிவாகவில்லை. ஆனால், பதிவான வாக்குகளில் பெரும்பாலானவை பொன்சேகாவுக்குக் கிடைத்தன.

ராஜபக்சேவின் வேண்டுகோள்படி, இலங்கை ராணுவ அதிகாரிகளின் சதியை முறியடிக்க இந்திய ராணுவம் தயார் நிலையில் வைக்கப்பட்டிருக்கிறது என்று பொன்சேகா வெளியிட்ட கடிதம்தான் ராணுவத்தின் மீது பல சந்தேகங்களைக் கிளப்பியது. தன்னுடைய அரசியல் பிரவேசத்திற்காக பொன்சேகா அதை நன்றாகப் பயன்படுத்திக்கொண்டார். ராணுவச் சதி பற்றி இலங்கையிலிருந்து வெளியான செய்திகளை இந்தியா மறுத்தாலும் இலங்கை ஊடகங்கள் அதை விடுவதாக இல்லை.

தேர்தல் முடிவுகள் வரத் தொடங்கியதும், தன்னுடைய ஆதரவாளர்களோடு கொழும்பு நகரத்தின் ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலில் பொன்சேகா பதுங்கிவிட்டார். பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமென்று சொல்லப்பட்டாலும் அரசின் கைது நடவடிக்கைகளிலிருந்து தப்பிப்பதற்காகச் செய்யப்பட்டவை என்பது தெரிந்தது.

உளவுத்துறையினரின் கண்காணிப்பையும் மீறி, பொன்சேகா ஹோட்டலில் திடீரென்று பதுங்குவதற்கான நிஜமான காரணம் எதுவென்று தெரியவில்லை. அதிபர் தேர்தலில் தோல்வி பற்றிக் கருத்து கேட்க, ஊடகங்கள் திரண்டு வந்தன. தனக்குக் கிடைக்க வேண்டிய வெற்றியை ராஜபக்சே திருடிக்கொண்டு விட்டார் என்றார் பொன்சேகா. ராணுவக் கலகம் பற்றிய தன்னுடைய குற்றச்சாட்டுகள் பற்றி எந்தவொரு கேள்விக்கும் அவர் விளக்கம் தர தயாராக இல்லை.

அடுத்த சில மணி நேரங்களில் ஹோட்டலைச் சுற்றி, ஏராளமான ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டார்கள். உள்ளே என்ன நடக்கிறது என்பது தெரியாமல் வெளியே ஊடகங்கள் காத்துக்கொண்டிருந்தன. 2 நாட்கள் கழித்து வெளியே வந்த பொன்சேகா, ஊடகங்களைச் சந்தித்தார்.

‘என்னைக் கொல்வதற்கு சதி நடக்கிறது. என்னுடைய பாஸ்போர்ட் முடக்கப்பட்டிருக்கிறது. என்னுடைய நண்பர்கள், குடும்பத்தினர்களின் பாஸ்போர்ட்டையும் முடக்குவதற்கு முயற்சிகள் நடக்கின்றன. அரசு சம்பந்தப்பட்ட ரகசியங்களை பாதுகாப்பான இடத்தில் வைத்திருக்கிறேன். ஒருவேளை நான் கொல்லப்பட்டால், உடனடியாக அவையெல்லாம் பொதுவெளிக்கு வந்துவிடும்’ என்றார் பொன்சேகா.

தேர்தல் முடிவுகளுக்குப் பின்னர் பொன்சேகாவின் அரசியல் வீழ்ச்சி ஆரம்பித்தது. அதிபர் ராஜபக்சேவுக்கு எதிராகச் சதி செய்ததாக 15 முன்னாள் ராணுவ அதிகாரிகள் விசாரணை வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டார்கள். பொன்சேகாவோடு தொடர்பில் இருந்த ராணுவத்தினர்மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

தேர்தல் வெற்றி பற்றியும், பொன்சேகாவின் குற்றச்சாட்டுகள் பற்றியும் அதிபர் ராஜபக்சேவிடம் கேட்டபோது, ‘பொன்சேகாவுக்கு என்னதான் பிரச்னை? ஏதாவது உதவி தேவைப்பட்டிருந்தால் என்னை நேரடியாகக் கேட்டிருக்கலாம். அவருக்கு உதவி செய்ய நான் என்றும் கடமைப்பட்டிருக்கிறேன். எது எப்படியிருந்தாலும் அவர் என்னுடைய தளபதி’ என்றார்.

(தொடரும்)

 

பகிர:
nv-author-image

ஜெ. ராம்கி

எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், ஊடகவியலாளர். ஜெயலலிதா, கருணாநிதி, ரஜினிகாந்த் உள்ளிட்ட தமிழகத்தின் முக்கியமான ஆளுமைகளின் வாழ்வைப் பதிவு செய்திருக்கிறார். நரசிம்ம ராவ், ஐரோம் ஷர்மிளா, ஜெயப்பிரகாஷ் நாராயண் குறித்த நூல்களை மொழிபெயர்த்திருக்கிறார். தொடர்புக்கு : ramkij@gmail.comView Author posts

1 thought on “மறக்கப்பட்ட வரலாறு #4 – தளபதியின் துரோகம்”

  1. இதற்கு தளபதியின் துராேகம் என்று ஏன் பெயர் சூட்டினீர்கள். தளபதியின் நிலைப்பாடு – தமிழர்களை வீழ்த்தியதில் ராணுவத்திற்குத்தான் அதிக பங்கு.

    இதை ராஜபக்சே வெளிப்படுத்தாததால் கோபம் கொண்டிருக்கிறார். இதை எப்படி துராேகம் என்கிறீர்கள்?

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *